Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்து குறும்திரைப்படம் "அறமுற்றுகை"

Featured Replies

 

எமது இந்த "அறமுற்றுகை" குறும்திரைப்படம் எமது நான்காவது குறும்படம்.  இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறள்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஓர் nonlinear வகை குறும்படமாகும்.  
பலநாட்கள் பலபேரின் உழைப்பில் உருவான இக்குறும்படத்தை உங்களுக்காய் இன்று இணையத்தில் தரவேற்றுகின்றோம். எமது முதல் குறும்படமான "சீட்டு" குறும்படம் வெளியிட்ட அதே தினத்தில் எமது இன்னுமோர் படைப்பை வெளியீடு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எமது சினிமா கனவுகள் பரந்துபட்டது. அதிலும் எமக்கான சினிமா என்பதே எமது நோக்கம். அதனையே எமது முந்தைய படங்களிலும் பின்பற்றியுள்ளோம். அவ்வாறே இப்படத்திலும். எமது சினிமா முயற்சிக்கு உறுதுணையாக இருந்த எமது இப் படத்தின் தயாரிப்பாளர் (N.G.MAKESH JEWELERY LONDON) திரு.N.G..மகேஸ் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள். 
குறும்படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிருங்கள். நன்றி.

Written & Directed by - Mayan Kanthan

Cinematography - Sivaraj

Editing : Mayan Kanthan

Lyric - Josinthan

Music - Sutharsan

SFX - Pathmayan

VFX - Srithusikaran

Makeup - Kanna

Artist - Josinthan / Mathisutha / Theepan / Saseenthar

Production - N.G.Mahesh Jewellers London

Co-production - Master screen Jaffna.

அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்

Aramutrukai

 

மயன் காந்தன் எழுதி இயக்கிய அறமுற்றுகை என்கிற குறும்படத்தினை சென்ற டிசம்பர் மத்தியில், அந்தக் குறும்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களான Master screen Jaffna தமது உத்தியோக பூர்வமான யூ ட்யூப் தளத்தில் பதிவேற்றியபோதே பார்த்திருந்தேன்.  ஈழத்துத் திரைக்கலைஞர்களில் எனது விருப்பத்துக்குரியவரான மதி சுதா நடித்திருந்த குறும்படம் என்பதனை முகநூல் ஊடாகத் தெரிந்துகொண்டதால் இந்தக் குறும்படத்தினை ஆவலுடன் பார்த்தேன் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக மதி சுதா, ஈழத்துத் திரைப்படங்கள் என்பதை பிரக்ஞையுடன் அணுகி அதில் தொடர்ந்து ஈடுபடுபவர்.  தான் இயக்கிய, நடித்த படங்களுக்கு அப்பால், பிறரது படங்களிலும் தொடர்ந்து பங்களித்திருப்பதுடன் ஈழத்துத் திரைப்படம் பற்றித் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தும் இருக்கின்றார்.  அவரது திரைப்படங்களில் ஈழத்தில் இருக்கின்ற சமகாலப் பிரச்சனைகளைப் பேசுபொருளாக்கியதும் அவற்றைக் கலைத்துவத்துடன் வெளிப்படுத்தியது முக்கியமான அம்சங்கள் என்று குறிப்பாகச் சொல்லமுடியும்.  மதி சுதா இயக்கிய தழும்பு, மிச்சக்காசு போன்றவற்றினை இதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.  இவரது படங்களில் மண் சார்ந்த அடையாளங்களையும் மக்களின் பண்பாட்டு வாழ்வியலையும் சரியான முறையில் வெளிக்காட்டியிருப்பதை அவரது சிறப்பம்சங்களில் ஒன்றென்றே சொல்லவேண்டும்.  அதேநேரத்தில் ஒரு நடிகராகவும் தனது பங்களிப்பினை  தழும்பு, கொண்டோடி, கருவறைத் தோழன் போன்ற படங்களில் வெளிப்படுத்தி இருக்கின்றார் மதி சுதா.  இந்தப் பின்புலத்துடன் அறமுற்றுகை குறும்படத்தினைப் பார்த்தபோது ஏமாற்றமும், ஈழத்துத் திரைப்படங்களின் செல்நெறி குறித்த கவலையுமே ஏற்பட்டது.

அறமுற்றுகை படமானது ஈழத்தில் போருக்குப் பின்னர் அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள், திட்டமிட்டுச் செய்யப்படும் விபத்துகள், சாதாரண மக்கள் எதிர்கொள்ளுகின்ற பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றினை பின்னணியாகக் கொண்டிருக்கின்றது. திரைப்படத்தில் திட்டமிட்டு திருட்டுக் குற்றங்களை அடியாட்களை வைத்துச் செய்யும் ஒரு சிறுகும்பலின் தலைவனாக கனகு என்கிற பாத்திரம் காட்டப்படுகின்றது.  கனகுவின் மூலமாக ரஞ்சன் என்பவன் மூளைச் சலவை செய்யப்பட்டு, அவனது நண்பனான ரவி என்பவன் சிறு தெரு ஒன்றில் பயணிக்கின்றபோது தாக்கப்பட்டு அவனது நகைகள் வைத்திருந்த பணம் என்பன களவாடப்படுகின்றன.  இதே ரவிக்கு பாடசாலைக்காலம் முதலாக நண்பனாக ரஞ்சன் இருக்கின்றான், அத்துடன் ரஞ்சனுக்கு சிறு பண உதவிகளையும் ரவி செய்கின்றான்.  அதேநேரம் கைமாற்றாக வாகன திருத்தகத்தில் இருந்து வாகனத்தை எடுத்துவருவது போன்ற சிறுவேலைகளையும் ரஞ்சன் ரவிக்குக் கைமாற்றாகச் செய்கின்றான்.  அதேநேரம், முதலில் ரவி கொடுத்த பணத்தினைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதனால், ரஞ்சன் மீண்டும் வாகனக் கடன் கட்டுவதற்காகப் பணம் கேட்கின்றபோது ரவி பணம் கொடுக்க மறுத்துவிடுகின்றான்.  இது ஒரு வடுவாக ரஞ்சன் மனதில் படிந்துவிடுகின்றது.  ரவியைத் தாக்கிக் கொள்ளையடித்தபின்னர் தனக்கான பங்குபிரிப்பினைப் பற்றி கனகுவிடம் கேட்கின்றபோது ரஞ்சன் இதை மதுபோதையில் சொல்லிவிடுகின்றான்.  ரஞ்சன் போதையேறி நிலைதடுமாறும்போது ரஞ்சனின் தொலைபேசியில் இருந்து ரவிக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டு ரவியைப்பற்றிப் பேசுமாறு ரஞ்சனைத் தூண்டிவிடுகின்றான் கனகு.  ஆற்றாமையுடன் அதைக்கேட்கின்றான் ரவி.

இன்னொரு புறத்தில் கடனுக்கு வாங்கிய வாகனத்தினை ஓட்டிக் கடுமையாக உழைத்து வாகனக் கடனைக் கட்டிவருகின்றான் சுதா.  ஒரு முறை அவன் வீடு திரும்பும்போது அவனது வீட்டில் இருந்து திருடிக்கொண்டு இரண்டு திருடர்கள் ஓடுகின்றார்கள். அவர்களில் ஒருவனின் முகமூடியைக் கிழித்து அவன் ரஞ்சன் என்று அடையாளம் காணுகின்றான் சுதா.  இந்தச் சந்தர்ப்பத்தில் சுதாவின் தாய் கடுமையாகக் காயமுற்று அவருக்கு ரத்தம் தேவைப்படுகின்றபோது முகநூலில் அதனைப் பார்த்துவிட்டு வந்து தானாக ரத்ததானம் செய்கின்றான் ரவி.  இன்னொரு புறத்தில் கனகுவின் குற்றச்செயல்கள் தெரியாமல் கனகுவிடம் பழகுகின்றான் சுதா.  தனது வீட்டுல் திருடியதுடன் தாயாரையும் காயப்படுத்திய ஆத்திரத்தில் சுதா, ரஞ்சனைப் பழிவாங்க திட்டமிட்டு, ரஞ்சனைப் பின் தொடர்ந்து தன் வாகனத்தால் இடித்துக் கொன்றுவிடுகின்றான்.  ரஞ்சன் கொல்லப்பட்டு சில நிமிடங்களில் அதே இடத்தில் சுதா நிற்கின்றபோது ரஞ்சனின் செல்பேசிக்கு கனகு அழைக்க அதனை எடுத்து அழைப்பை ஏற்றுக்கொள்ளுகின்றான் சுதா; அப்போது சுதாவீட்டில் ரஞ்சன் களவாடியபோது ரஞ்சனின் முகத்தினை சுதா பார்த்துவிட்டது குறித்துக் கடிந்து கொள்வதுடன் தனக்கும் (கனகுவிற்கும்) ரஞ்சனிற்கும் தொடர்பிருப்பதை சுதா அறியக்கூடாது என்றும் கனகு சொல்வதையும் சுதா கேட்டு கனகுவையும் கொன்றுவிடுகின்றான்.  இறுதியில், தெருவில் நின்றபடி தொலைபேசி அழைப்பொன்று வருகின்றது.  அதனை எடுக்கின்றபோடு இன்னொரு வாகனத்தால் தாக்கப்பட்டு சுதாவும் கொல்லப்படுகின்றான்.  அத்துடன் படத்தின் கருத்தினை வலியுறுத்தும் பாடலுடன்

”மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு”

என்று திருக்குறளுடன் படம் முடிகின்றது.

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்திலிருந்து குறும்பட முயற்சிகள் ஆரோக்கியமான திசையில் மேலெழுந்துவந்தன.  அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் வருகையை எதிர்பார்க்கவைக்கும்படியான நிலைமையே அப்போது நிலவியது.  புதிய கதைகளுக்கான பல்வேறு கருக்களையும் பல்வேறு குறும்படங்களில் காணமுடிந்ததுவும் ஆரோக்கியமான ஒரு சமிக்ஞையாக இருந்தது.  ஆனாலும் அவற்றைத் திரைக்கதையாக்குவதில் இருந்த பலவீனம் பொதுவான ஓர் அம்சமாகவும் இருந்தது.  பெரியளவு வரவேற்போ அங்கீகாரமோ கிடைக்காதபோதும், விமர்சகர்கள், ஆர்வலர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இந்தக் குறும்படங்களின் வருகை இருந்தது.

அதேநேரத்தில் ஈழத்துத் திரைப்படங்கள் தனியான அடையாளத்துடன் வளரவேண்டுமானால், வெகுசன ரசனைக்கேற்ற வகையில், பரபரப்பான “அக்சன் படங்கள்” என்று அழைக்கப்படுகின்ற வகைமையைச் சேர்ந்த படங்களும் ஈழத்திலிருந்து வரவேண்டும் என்ற வாதமும் பலராலும் முன்வைக்கப்பட்டது.  எமது பேச்சுமொழியுடனும், எமக்கான கதைக்களங்களுடனும், எமது பண்பாட்டை, சமூக வாழ்வைப் பிரதிபலிப்பனவாக இந்தப் படங்கள் அமையவேண்டும் என்ற இந்த வாதம் ஒரு விதத்தில் ஏற்கத்தக்கதே.  இந்தப் பிரக்ஞைகள் ஏதும் இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து வணிக்கப்படங்கள் என்று வெளிவருவனவற்றின் மோசமான முன்மாதிரிகளை தமது அளவீடுகளாக வைத்து குத்துப்பாடல், நாயகத்துவம், சாகசம் என்று ஈழத்துப் படங்களும் வரும்போது அப்படி வருகின்ற படங்களுக்கு மாற்றீடான படங்களை ஆரம்பநிலையிலேயே ஆதரிப்பதும் அக்கறையுடன் உரையாடுவதும் முக்கியம்.

அறமுற்றுகை, ஈழத்து வாழ்வியலை, பேச்சுமொழியை வெளிப்படுத்தி வெகுசன ரசனையைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்ட ஒரு படம் என்றே சொல்லவேண்டும்.  ஆயினும் தெளிவில்லாத திரைக்கதையினால் பார்வையாளர்களை ஒன்றுபடுத்த அறமுற்றுகையினால் முடியவில்லை.  இப்படத்தினைத் தயாரித்த Masterscreen Jaffna குழுவினர் தமது யூ ட்யூப் பக்கத்தில் இப்படம் குறித்து “இன்றைய சூழலில் எமது சமூகத்தில் நடக்கும் சில சமூகப்பிறழ்வுகளை ஒன்றிணைத்து படமாக்கியுள்ளோம். மேலும் இக்குறும்படம் ஒரு nonlinear வகை குறும்படமாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர். ”நொன் லீனியர்” வகைப் படங்களை ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகக் கருதி படம் எடுத்திருக்கின்றார்களே அன்றி அதனைச் சரியாக உள்வாங்க முயலவோ அல்லது அதற்கான திரைக்கதையினை அமைக்கவோ உழைக்கவில்லை என்பதையே படம் வெளிப்படுத்துகின்றது.

தெரியாமல் கூட பிறருக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்வதற்கு நினைத்துவிடக்கூடாது; அப்படி நினைத்தாலே நினைத்தவருக்குக் கேடுவருமாறு அறம்வந்து சூழும் என்பதே இந்தத் திரைப்படத்தின் மூலம் தாம் சொல்லவந்து கருத்து என்பதைத் திட்டவட்டமாக படத்தின் இறுதியில் சொல்லிவிடுகின்றார்கள்.  படத்தில் சுதா, ரவி என்ற இரண்டு பாத்திரங்கள் குற்றச்செயல்களால் பாதிக்கப்படுகின்றார்கள். தான் பாதிக்கப்பட்டபோது சுதா கோபம் கொள்கின்றான், பழிவாங்குகின்றான், இறுதியில் அவனும் அதேவிதமாகக் கொல்லப்பட்டு விடுகின்றான்.  ஆனால் ரவியோ ஆற்றாமை கொள்கின்றான், ரஞ்சன் இழைத்த துரோகம் குறித்து கறுவுகின்றான்.  ஆனால் ரஞ்சனுக்கு எதிராக அவன் ஏதும் செய்ய முனைந்ததாகவோ, பழிவாங்க நினைத்ததாகவோ படத்தில் காட்டப்படவில்லை.  குறைந்தபட்சம் காவல்துறையிடம் ஒரு சிறு முறைப்பாடு செய்யக் கூட ரவி முனையவில்லை.  சமூகத்தில் வசதியான நிலையில் இருக்கின்ற ரவிக்குக் காவல்துறையினை அணுகி ஒரு முறைப்பாட்டைச் செய்வதன் மூலம் சிறு திருட்டுக்களைச் செய்கின்ற ரஞ்சனைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது அவ்வளவு கடினமானதாக இருக்காது, ஆனால் அது கூட நடக்கவில்லை.  ரஞ்சன் கொல்லப்பட்ட பின்னரும் தேவாலயத்திற்குச் சென்று மண்டியிடுகின்றான்.  படத்தில் காட்டப்படும் பிரதான பாத்திரங்களில் கடைசியில் உயிரோடு இருப்பவன் ரவி மட்டுமே.  இங்கே இந்தப் படம் சொல்லமுனைகின்ற அறம் எதுவென்று நாம் கேள்வி கேட்பதும் முக்கியம்.  நல்லது எதிர் கெட்டது, நல்லவர் எதிர் கெட்டவர் என்கிற இருமைகளில் “நல்ல தனம்” என்பது எதற்கும் எதிர்ப்பைக் காட்டாத தனம் என்பதைத்தான் அறமுற்றுகை முன்வைக்கின்ற அறமா என்பதையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

ஈழத்தில் அதிகரித்து வருகின்ற குற்றச்செயல்கள், வன்முறைச்சம்பவங்கள் என்பன ஆழமான நோக்கில் ஆராயப்படவேண்டியன. இந்தப் படத்தின் நோக்கம் அதுவல்ல என்றபோதும் திருட்டு போன்ற குற்றங்களுக்கு எதிரான பழிவாங்கலாக கொலைகளே காட்டப்படுவது, இன்றைய சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்துகின்ற அக்கறையின் பாற்பட்டதாக அல்லாமல் பரபரப்பை ஏற்படுத்தும் மனநிலையின் பாற்பட்டதாகவே இருக்கின்றது.  இந்தப் படம் எடுத்துக்கொண்ட கதைக்குப் பெண்பாத்திரம் ஒன்று தேவை இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் படத்தில் இரண்டு தடவைகளில் காண்பிக்கப்படும் காட்சியில் “மச்சி ஹீரோயின் யாரு மச்சி என்ற கேள்வியும், ஹீரோயின் எல்லாம் வேண்டாம் மச்சி, ஹீரோயின் என்றாலே பிரச்சனை” என்ற வசனம் வருகின்றது.  இதன்மூலம் சொல்லமுனைவது என்ன? அல்லது இந்த வசனம் ஏன் இந்தப் படத்தில் வந்தது என்ற கேள்வியும் ஆராயப்படவேண்டியதே!  அதிர்ஸ்ட லாபச் சீட்டுகளைத் தொடர்ந்து வாங்கும் ரஞ்சன் மூலமாக உழைப்பை நம்பியிருக்காமல் குறுக்குவழியில் பணம் உழைக்கும் அவனது சுபாவம், வாகனக் கடன் கட்டுவதற்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றன காட்டப்பட்டாலும் அவை போகிறபோக்கிலேயே காண்பிக்கப்படுகின்றன. இதனால் துரோகம், பழிவாங்கல், வன்முறை என்று இழைந்துசெல்லும் இந்தப்படம் சமூகப்பிறழ்வுகளை அக்கறையுடன் காட்டாமல் தமிழ்நாட்டில் நடிகர் சசிக்குமார் நடித்து வெளிவந்த படங்களின் பாதிப்பில் உருவான படம் போன்ற பிரமையையே ஏற்படுத்துகின்றது.

இப்படத்தில் தொழினுட்ப ரீதியில் ஒளிப்பதிவு காட்சித் தொகுப்பு என்பன நன்றாக இருக்கின்றன.  ஆயினும் திரைக்கதை, கதை ஆகியன தேவையான அளவுக்குக் கவனம் எடுக்கப்படாதது படத்தின் பலவீனத்துக்குக் காரணமாகிவிடுகின்றது.  சுதா என்கிற பாத்திரத்தில் நடித்த மதி சுதா மற்றும் கனகு, ரஞ்சன் ஆகிய பாத்திரங்களில் நடித்தவர்கள் சிறப்பாக தமது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.  ஆனால், ஈழத்துத் திரைப்படம் குறித்த கனவுகளுடன் செயற்படுபவர்கள் தமது தெரிவுகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பதுடன் எமக்கான திரைமொழி பிரதித் தேர்வு என்பவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்பதையும் அபாய சமிக்ஞையுடன் வெளிப்படுத்துவதாக இப்படம் அமைந்துள்ளது.

https://arunmozhivarman.com/2018/08/19/aramutrukai/#more-2793

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.