Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படித்தோம் சொல்கின்றோம்: நீடித்த போரின் வலி சுமந்த மக்களின் கதைகளைப்பேசும் "வன்னியாச்சி"! வன்னிபெருநிலப்பரப்பின் ஓலங்களை படைப்பிலக்கியத்தில் ஒலிக்கச்செய்த தாமரைச்செல்வி!

முருகபூபதி

நீடித்த போரினால் வலிசுமந்த மக்களின் கதைகளைச்சொல்லும் தாமரைச்செல்வியின் " வன்னியாச்சி" பெரும் கதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 37 கதைகளையும், ஜீவநதியில் இம்மாதம் வெளியான அவனும் அவளும் என்ற சிறுகதையையும் சேர்த்து மொத்தம் 38 கதைகளையும் படித்து முடித்த தருணத்தில், தமிழ் ஊடகங்களில் " அரசின் மகா வலி - தமிழருக்கு மன வலி " என்ற தலைப்பிலும் தொனியிலும் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வலிசுமந்த மேனியராகவே கடந்த மூன்றரை தசாப்த காலமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை, தனது கதைகளின் ஊடாக பதிவுசெய்துவருபவர் தாமரைச்செல்வி.  இவரது எழுத்துக்களை இலங்கையில் நான் இருந்த காலப்பகுதியில் படித்திருந்தாலும், நேரில் சந்தித்துப்பேசியது வெளிநாடான தற்போது நான் வாழும் அவுஸ்திரேலியாவில்தான்.


சில வருடங்களுக்கு முன்னர் எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் விழாவில் அவரது சமுகம் இன்றியே அவரது பச்சை வயல் கனவு என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருந்தோம். அதனை இங்கு வதியும் கிளிநொச்சி பிரதேசத்தில் முன்னர் ஆசிரியராக பணியாற்றிய மரியதாசன் மாஸ்டர் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இவர் பெண் போராளி தமிழினிக்கும் முன்னர் ஆசிரியராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

நான் முன்னர் எழுதிய இலக்கியத்துறையில் பெண்ணிய ஆளுமைகள் தொடரில் தாமரைச்செல்வி பற்றியும் ஒரு பதிகை எழுதியிருக்கின்றேன். இலங்கையில் சந்திப்பதற்கு வாய்ப்புக்கிட்டாது போனாலும், அதற்கான சந்தர்ப்பம் காலம் கடந்து, 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்த 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் கிடைத்தது. அன்று இவர்தான் விழாவை மங்கல விளக்கேற்றி தொடக்கிவைத்தார். அன்று அந்த புதிய மேடையில் அவர் உரையாற்றவில்லை என்பது எனக்கு ஆச்சரியமானது! எனினும் இவரது நேர்காணலை அவுஸ்திரேலியா எஸ்.பி. எஸ். வானொலியில் கேட்டபோது, இவரால் தாம் வாழ்ந்த பிரதேசத்து மக்களின் வலி நிரம்பிய கதைகளை யதார்த்தம் குன்றாமல் பேசவும் தெரிந்தவர் என்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

ஈழத்தின் போர்க்கால இலக்கியம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தற்போது சிங்களம், ஆங்கில மொழிகளுக்கும் பரவியிருக்கிறது. தாமரைச்செல்வியின் கதைகள் இலங்கையிலும் தமிழகத்திலும் பாட நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு ஓவியராகவும் அறியப்பட்டுள்ள தாமரைச்செல்வியின் கதைகள் அவர் வரைந்த ஓவியங்களுடனும் வெளியாகியுள்ளன.  சில கதைகள் குறும்படங்களாக தயாரிக்கப்பட்டு வெளியாகி விருதுகளும் பெற்றுள்ளன. இந்தப்பின்னணிகளைக்கொண்டிருக்கும் - மேடைகளைத் தவிர்க்கும் - தாமரைச்செல்வியின் தன்னடக்கம், ஆழ்ந்த பெருமூச்சுக்களாக வலி சுமந்த மக்களின் ஓலங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

" சொந்த மண்ணிலேயே இருப்பிடம் இழந்து அகதிகளாகிக் குண்டுகளின் அதிர்வும் கந்தக நெடியும் ஒரு புறம் துரத்த உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் பதற்றத்தோடும் பசி பட்டினியோடும் பதுங்கு குழிகளின் பக்கத்துணையோடும் வாழ்ந்திருந்தவர்கள். இந்த மக்களின் நடுவே நானும் ஒருத்தியாக வாழ்ந்துகொண்டேதான் இச்சிறுகதைகளை எழுதினேன். என்னைச் சுற்றிய நிகழ்வுகள் தந்த அதிர்வுகள், பாதிப்புகள், நெருடல்கள், இவைதான் இப்படைப்புகள். இம்மக்களின் துயரங்களை வார்த்தைகளில் பதியும்போது எனக்கும் வலித்திருக்கிறது. கண்களின் ஓரம் நீர் கசிந்திருக்கிறது. இந்த மக்கள் அனுபவித்த கடலளவு துயரங்களில் ஒரு சில துளிகளையே என்னால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது. " என்று வன்னியாச்சி தொகுப்பில் தனதுரையில் குறிப்பிட்டிருக்கும் தாமரைச்செல்வியும், குறிப்பிட்ட வன்னியாச்சி கதையில் வரும் வன்னியாச்சியைப்போன்றே அந்த மண்ணின் ஆத்மாவை நன்கு அறிந்திருப்பவர். காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள வன்னியாச்சி தொகுப்புக்கு " வீடற்றவர்களின் கதைகள்" என்ற தலைப்பில் தமிழகப்பேராசிரியர் அ. ராமசாமி முன்னுரையும், இலங்கை படைப்பாளி கருணாகரன் " அறத்தின் வழித்தடம்" என்ற தலைப்பில் அறிமுக உரையும் வழங்கியிருக்கிறார்கள். இந்தத் தலைப்புகளே, கதைகளின் உள்ளடக்கத்தை சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. வாசகரை உள்ளீர்க்கின்றன.

book_vanniyachi.jpg
கிளிநொச்சி, பரந்தன், மாங்குளம், ஆனையிறவு, முறிகண்டி, பளை, இயக்கச்சி, வட்டக்கச்சி, தருமபுரம், குமாரபுரம், ஸ்கந்தபுரம், ஐந்தாம் வாய்க்கால், ஏழாம் வாய்க்கால், ஓராங்கட்டை, திருவையாறு, கனகபுரம், குஞ்சுப்பரந்தன், இரணைமடுக்குளம், சுண்டிக்குளம், மணியங்குளம், வன்னி விளாங்குளம், கனகராயன் குளம், பாண்டியன் குளம், அம்பாள் குளம், கூழாவடி, அக்கராயன், புதுக்குடியிருப்பு, மல்லாவி, துணுக்காய், தாழையடி, மருதங்கேணி, முள்ளியவளை என்று வாசகரை இங்கெல்லாம் அழைத்துச்செல்கிறார். அங்கெல்லாம் வாழ்ந்த மக்களையும் அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.


அத்துடன் ஒரு சில கதைகளில் எம்மை வியட்நாமுக்கும், ஒஸ்லோவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் ஜெர்மனிக்கும் கொண்டு செல்கிறார். அனைத்துக்கதைகளின் சித்திரிப்பின் ஊடாக தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த பிரதேசம் கடந்து, தாயகம் கடந்து சர்வதேசப்பார்வையுடன் (முக்கியமாக கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஐ.நா. சபையில் ஒலிக்கவேண்டிய கதைகளாக ) மக்களின் துயரத்தையும் இயலாமையையும் ஏமாற்றங்களையும் ஒரு கதை சொல்லியாக பதிவுசெய்துள்ளார்.
பதச்சோறாக சில கதைகளை சொல்லமுடியும். எனினும் விரிவஞ்சி ஒரு கதையின் பின்னணியை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன்.  

அந்தக்காலங்களில் அவன் கிளிநொச்சியில் நல்லதொரு உழைப்பாளி. எந்தக்காலத்தில்? சுமார் எட்டுவருடங்களுக்கு முன்னர்! வயல்வேலைகள் எல்லாம் அனாயசமாகச்செய்வான். ஆவணி, புரட்டாதி வரம்புசெதுக்குவதோடு வயல்வேலை தொடங்கும். விதைப்பு, புல்பிடுங்கு, நாற்று நடுகை, மருந்தடிப்பு, அரிவுவெட்டு, சூடடி என்று தொடர்ந்து வேலை இருக்கும். பச்சரிசிச்சோறும் பாரை மீன் குழம்பும் மணக்க மணக்க அவனும் அவனது குடும்பமும் சாப்பிட்ட காலம் ஒன்றிருந்தது.

கலப்பை பிடித்து மண்ணை உழுது உழைத்த அந்தக்குடும்பத்தலைவன், செருப்புத்தைக்கும் தொழிலாளியாகின்றான். அன்றாடம் அவன் செருப்புத்தைத்து பெறும் சொற்ப வருமானத்துடன் குடும்ப வண்டியை சிரமப்பட்டு நகர்த்துகின்றான். குடும்பம் கால் வயிறும் அரைவயிறுமாக காலத்தை கடத்துகிறது. அவனுக்குத் தெரிந்த விவசாயத் தொழிலிருந்து ஏன் இந்த திடீர் மாற்றம் வந்தது? கதையின் முடிவில் தெரிகிறது!

அவன் கையூன்றி எழுந்து மரத்தில் சாத்திவைத்திருந்த ஊன்றுகோலைக்கையில் எடுத்துக்கொண்டான். எட்டுவருடங்களுக்கு முன் மிதிவெடியில் கால்களை இழந்த அவன், கைகளால் மட்டுமே செருப்புகளை உணரும் அவன்! பாதணி என்ற இக்கதை அமெரிக்காவின் வடகரோலினாவைச்சேர்ந்த ஓ ஹென்றி எழுதிய கதைகளை நினைவுக்குக்கொண்டுவருகிறது. தனது கதைகளில் எதிர்பாராத திருப்பங்களை தந்தவர் ஓ ஹென்றி.  

வன்னி பெருநிலப்பரப்பு மக்களின் வாழ்விலும் எதிர்பாராத திருப்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அன்று போரின் வலியைச் சுமந்தவர்கள், இன்று "மகாவலி" யின் வலியையும் சுமக்கத் தயாராகின்றனர்!  

அம்மக்களுக்கு புரட்டாதியில் மழை பொழியும், ஐப்பசியில் விதை நெல் எறிந்து, கார்த்திகையில் களை பிடுங்கி, மாசியில் அரிவு வெட்டிச்சூடடித்து, பங்குனியில் மூடைகளில் நெல்வந்து சேரும். அத்தகைய பொன்விளையும் பூமியில் போர் விளைந்தது. நெற்போரா? ஆயுதப்போர்! வயலுக்குள் நெல்லுக்குப்பதில் விதைக்கப்பட்டது மிதிவெடிகள். மண்ணை நம்பி வாழ்ந்திருக்கும் அம்மக்களை எறிகணையும், குண்டும், துப்பாக்கி வேட்டுக்களும் மாத்திரம் தாக்கவில்லை. மலேரியாவும், மூளை மலேரியாவும், நெருப்புக்காய்ச்சலும், சளிக்காய்ச்சலும், குளிர் காய்ச்சலும் வந்து அலைந்துழலச்செய்கின்றன. போதாக்குறைக்கு சுனாமி கடற்கோளும் வந்து தனது சீற்றத்தை காண்பித்துச்செல்கிறது. அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆயுதப்படையினரும் சத்ஜய, ஜெயசிக்குரு என்று புதிய புதியபெயர்களுடன் நெருங்கிவருகின்றனர். தமதுயிரையும் குழந்தைகளையும் மாத்திரம் காப்பாற்ற அம்மக்கள் வலிசுமக்கவில்லை. தாம் வளர்க்கும் செங்காரிப்பசுவுக்கும் அம்பாலிக்குட்டிக்காகவும் ஓடுகிறார்கள்.

அனைத்துக்கதைகளையும் படித்து முடிப்பதற்கு சுமார் ஒரு மாதகாலம் எடுத்துக்கொண்டேன். சராசரி ஒரு நாளைக்கு ஒரு கதை அல்லது இரண்டு கதைகள் என்ற ரீதியில் பகலிலும் இரவிலும் பயணங்களிலும் படித்து முடித்தேன். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்தபின்னர் படிப்பதற்கு எடுத்த நேரத்தைவிட அதனைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்த நேரம்தான் அதிகம் என்பது புலனாகியது.

தாமரைச்செல்வி 1983 முதல் 2005 வரையில் எழுதிய கதைகள் வன்னியாச்சியில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இந்த ஆண்டுகளுக்கு முன்னரும் கதைகள் எழுதியிருப்பவர் அவர். 96 - 97 - 98 - 99 ஆம் ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை வரவாக்கியிருப்பதும் தெரிகிறது. சில கதைகள் வன்னியில் போர் நெருக்கடிக்கு மத்தியில் வெளிவந்த வெளிச்சம் இதழில் வரவாகியிருக்கிறது. வெளிச்சத்தை தேடிய அம்மக்களின் பாடுகள் வெளிச்சத்தில்தான் எமக்கு இலக்கியவடிவத்தில் தெரியவந்துள்ளன.  

பாத்திர வார்ப்பிலும், காட்சி சித்திரிப்பிலும், கதை சொல்லும் பாங்கிலும் அவரது படைப்பூக்க அனுபவம் நன்கு பேசியிருக்கிறது. அனைத்துக்கதைகளும் பிரசார வாடையின்றி எத்தகைய "இஸங்களின் முலாமும்" பூசப்படாத யதார்த்த சித்திரிப்பாக அமைந்திருப்பது தாமரைச்செல்வியின் படைப்பாற்றலின் வெளிப்பாடு. அதனை எழுதத்தொடங்கிய நாள் முதலாக தக்கவைதுள்ளார்.  

"இப்படித்தான் இருக்கும் சமூகம்! ஆனால், எப்படி இருக்கவேண்டும்?" என்று தாங்கள் நினைப்பதை பதிவுசெய்பவர்களாக பெரும்பாலான படைப்பாளிகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.  

தாமரைச்செல்வி அவர்களிலிருந்து முற்றாக வேறுபட்டு, வேறு ஒரு தளத்தில் நின்று கதை சொல்கிறார். மக்களின் வாழ்வுக்கோலத்தை வாசகரிடத்தில் தனது மொழியில் முன்வைப்பதில் மாத்திரம் தனது கவனத்தை வைத்துள்ளார். அதன்மூலம் வாசகரின் சிந்தனையில் ஊடுறுவுகின்றார்.

வான்னியாச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கதைகளும் நீடித்த போர்க்காலத்தின் சித்திரிப்புத்தான்.

போரில் கந்தக நெடியை சுவாசித்து, பதுங்கு குழிகளுக்குள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்து இழப்புகளின் வலிகளையும் சுமந்த மக்களின் அவலக்குரலை செய்திகளில் பார்த்திருக்கின்றோம். படைப்பு இலக்கியத்திலும் அதனை சரியாக ஆவணப்படுத்த முடியும் என்று கேள்வி ஞானத்துடன் அல்ல, அம்மக்களுடன் வாழ்ந்தே பதிவுசெய்திருப்பவர் தாமரைச்செல்வி.

நீடித்த போர் முடிந்து ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன! போருக்குப்பிந்திய சமூகம் தற்போது அங்கு வாழ்கின்றது. இச்சமூகம் எதிர்நோக்கும் வலிகளும் தொடருகின்றன.

அதனையும் இம்மாத ( ஆவணி ) ஜீவநதி இதழில் அவனும் அவளும் கதையில் சொல்லித்தொடருகின்றார் இந்த அயர்ச்சியற்ற படைப்பாளி. ( இக்கதைக்கும் இவர்தான் ஓவியர்) அதனால் தாமரைச்செல்வியிடமிருந்து இன்றைய "மகாவலி " சுமக்கும் மக்களின் கதைகளும் எதிர்காலத்தில் வெளிவரலாம் என நம்புகின்றோம்.

தாமரைச்செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4697:-qq-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.