Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . !

why-you-should-not-see-moon-on-vinayagar

கணபதி அல்ல பிள்ளையார் வழிபாடு என்பது இன்றைக்குப் பரவலாக இந்து வெறியூட்டும் விதமாக முன்னெடுக்கப்படும் வடிவமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகரே முதன் முதலாக, எளிமையான மக்களின் வழிபாடாக இருந்த இந்தக் கணபதி வழிபாட்டை, விநாயகரை விஜர்சனம் அதாவது அழிப்பது என்கிற சடங்கை நிறைவேற்ற ஆங்காங்கே மக்கள் இயல்பான முறையில் முன்னெடுத்த விழாவை, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாற்றினார்.

விநாயக வழிபாடு என்பது இந்திய நிலப்பரப்பில் நிலவிய கணசமூகங்கள், பின்னால் எழுந்த தந்தைவழி ஆதிக்க அரசமைப்பால் உள் விழுங்கப்பட்ட ஆதிவரலாற்றின் அடையாளமே.

சூரிய, பார்வதி, சிவன், கணபதி, முருகன், விஷ்ணு, வழிபாடுகள் பண்டைய கால இந்திய நிலப்பரப்பின் மக்கள் வெவ்வேறு காலங்களில் துவங்கி, வழிவழியாக வந்த வழிபாட்டு முறைகளாகும். இன்று காணக்கின்ற இந்துமதம் என்பது அப்போது இல்லை. அரசு மற்றும் அமைப்பு முறைகளின் கலப்பால், வழிபாட்டு முறைகளின் கலப்பும் உருவாகின்றன.

சூரிய வழிபாடு சௌவீர வழிபாடு எனப்படும். ஆனால் சூரியக்கடவுள் பண்டையகால இயற்கை வழிச்சமூகத்தின் குறியீடாகும். நாக மரபும் கூட அவ்வாறு தோற்றங்கண்டதே. பின்னால் மேய்ச்சல் சமூகமாக மாறிய காலத்தின் குறியீடாக ஆண்வழிச் சமூகத்தின் தொடக்க்காலத் தெய்வமாக இந்திரன் வருகிறான். அவன் மழைத்தெய்வமாகவும் வணங்கப்படுகிறான். தந்தை வழிச் சமூகத்தின் வலுமிக்க குறியீடுகளாகப் பின்னர் எழுந்தவை, சிவன், விஷ்ணு வழிபாடுகளாகும்.

சமூகத்தில் தந்தைவழிச் சமூகத்தை அடியொற்றிய அரச மரபுகள் எழுந்த காலத்தின் குறியீடாகவும் தெய்வமாகவும் வளர்ந்தவை இத்தகைய சிவன், விஷ்ணு மரபுகளாகும். அதிலும், விஷ்ணு வழிபாடு, தாய்வழிச் சமூகக் கூறுகளை மிகுதியும் உள்ளடக்கியதாகும். நாமம் அல்லது ஸ்ரீபாதம் என்கிற அவர்களது அடையாளக்குறிகள் தாய்வழிக் குறியீட்டின் வடிவங்களே. பழம் நாக மரபு எனப்படும் பூர்வத் திராவிட ஆதிசேடக் கணசமூகங்களை வீழ்த்தி எழுந்த கருப்புத் தலைவனின் வடிவமாகவே விஷ்ணு வடிவம் உள்ளது. பசுக்கள், பெண்கள், ஆயர்கள் என்று முழுக்க முழுக்க மேய்ச்சல் சமூகத்தின் தந்தைவழிக் குறியீடாகவே கிருஷ்ணன் திகழ்கிறான். அவனும் தன் வாழ்நாள் முழுக்க நாகமரபினரை ஒடுக்கியபடியே உள்ளான். காளிங்கன் கதை, காண்டவ வன எரிப்புக்கதை, ஆதிசேடன் அவனுக்கான வாழ்நாள் சேவகனாக அமைந்திருப்பது என அனைத்தும் அதனையே குறியீடாக உணர்த்துகின்றன. நாகமரபினரின் எதிர்ப்போராட்டங்களும் நிரம்பியதாகவே நமது புராண இதிகாசக் கதைகள் பலவும் உள்ளன.

மேய்ச்சல் நிலத்தின் இன்னொரு வடிவமான காளை வாகனான சிவ வழிபாடும் தந்தைவழியின அமைப்பின் எழுச்சிகர வடிவமாகவே உள்ளது. சிவபுராணக்கதைகள் பலவற்றிலும் தந்தைவழிச் சமூகக் கருத்தியல் உருவாக்கங்களின் பல வடிவங்களைக் காணலாம்.

அதற்கும் முந்திய சக்தி வழிபாடு, தேவி பாகவதக் கதைகள் போன்றவை தாய்வழிச்சமூகப் படிமங்கள் பலவற்றை உள்ளடக்கியவையாகும். சிவனுக்கும் பார்வதிக்குமான போராட்டக் கதைகள் பலவும், தாய்வழிச்சமூக மரபு, தந்தைவழிச்சமூக மரபுக்கிடையிலான போராட்ட வடிவங்களாகவே காணக்கிடைக்கின்றன. தாய்வழி மரபினரின் ஆவடை (பெண்குறி) வழிபாடும், தந்தை வழி மரபினரின் லிங்க (ஆண்குறி) வழிபாடும் கடும் போராட்டத்தின் பின்னான, சமசர மற்றும் ஆண் ஆதிக்கத்துள் ஒன்றிணைந்த வரலாற்றின் புராணப்படிமங்களே, சிவலிங்க வழிபாடாகும்.

தாய் வழிச் சமூகத்தின் அடியாகப் பிறந்த கணசமூகம் அதன் பாதுகாவலனாக இருந்தது. பார்வதி உடலிலிருந்து திரண்ட அழுக்கில் கணபதி பிறந்தகதை அதையே குறியீடாக உணர்த்துகிறது. அவள் நீராடும் போது, கணபதி காவலாக இருக்கிறான். அப்போது பார்வதியை ஆட்கொள்ள சிவன் வருகிறான். அதாவது தாய்வழிச் சமூகத்தை ஆட்கொள்ளத் தந்தைவழிச் சமூகம் வருகிறது. அதனை வலுவாக எதிர்க்கிறான் கணபதி. இருவருக்குமான கடும் போராட்டத்தில், கணபதி வீழ்த்தப்படுகிறான். அதாவது தலை வெட்டப்படுகிறான். அதாவது கண சமூகத்தின் தலைமை அழிக்கப்படுகிறது. பார்வதியின் வேண்டுகோளின் படி, அது மீண்டும் யானைத் தலையோடு உயிர்ப்பிக்கப்பட்டு, அது தலைமைத் தெய்வமாகவும் அங்கீகரிக்கப்படுகிறது. கணசமூகங்களின் தலைவர்கள் பின்னால் அரசுமுறைகளில் படையணித் தலைவர்களாக மாறிய வரலாறுகள் பலவும் வரலாறெங்கும் காணக்கிடைக்கின்றன. இல்லாதவர்கள் அழிக்கப்பட்டனர்.

இத்தகைய கணசமூக அழிவுக்காலத்தையே புத்தரின் கதையும் குறிப்பிடுகிறது. பிம்பிசாரன் முதலானவர்களின் மூலமாகத் தந்தைவழிச் சமூக அரசுகள் இந்திய நிலப்பரப்பில் எழுந்து வருகின்ற காலத்தில், புத்தரது போன்ற கண சமூகங்கள் அழிவுறுகின்றன. அத்தகைய கண சமூகங்களின் விழுமியத்தையே புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று மூன்று முழக்கங்களாகப் புத்தர் வடிவமைக்கிறார். தலைமை, ஒழுக்கம், பொதுச்சபை என்கிற பழஞ்சமூகத்தின் விழுமியங்கள் புத்தரால் முன்னெடுக்கப்பட்டதன் விளைவே புத்தரின் பின்னால், பழைய குல சமூகங்களின் அழிவினால் அலைப்புண்ட சமூக உளவியல் மனிதர்கள் அவர் பின்னால் பேரளவில் திரண்டதற்கான காரணம்.

ஆண்வழிச் சமூகப் படிமங்களில் கணபதிக்குத் தலைமையிடம் கொடுத்த வரலாறுகூட, பௌத்த எழுச்சியின் பின்னணியில் ஆராயத் தக்கதே. விநாயகர் எப்போதும் யாகங்களை அழிக்கிற கணசமூகப் பண்புடனேயே இருந்துள்ளார். அதானால் அவர் விக்கின விநாயகர் எனப்படுகிறார். அத்தகைய அடித்தட்டுச் சமூக வரலாற்று உளவியலில் நிலைத்திருப்பதானால், அவர்களைத் தன்வயப்படுத்த வேதமதம் முன்வைத்த உத்தியே அவருக்குத் தலைமையிடம் தந்தது. பிள்ளையார், எந்தவித ஆகம உருவப் பண்புகளுக்குள்ளும் அடங்காத ஒரு நெகிழ் வடிவமாக இருக்க அனுமதிப்பதும் அதனால்தான். பிள்ளையார் திருமணம் செய்ய வேண்டுமென்றால் தன் தாய்போலப் பெண் வேண்டும் என்று வேண்டியதாகச் சொல்லப்படும் கதையும் பழைய தாய்வழிச்சமூக மரபில் உதித்த கடவுள் அவர் என்பதன் குறியீடே.

அதுபோலவே இன்னொரு தாய்வழிச் சமூகத் தோன்றலான முருக வழிபாடும், தந்தைவழிச் சமூகப் படிமத்தில் இணைக்கப்பட்டது.

இவ்வாறாக சிவமரபோடு, சாக்தம்(சக்தி வழி), காணாபத்தியம் (கணபதி வழி), கௌமாரம் (முருக வழி) எல்லாம் சிவன் தலைமையிலான குடும்ப உறவாகக் கட்டமைக்கப்பட்டது. பின்னர் அதேனோடு வைணவ மரபு மாமன் முறையில் இணைக்கப்பட்டது. சூரிய வழிபாட்டு மரபான சௌவீரம் இவற்றின் பேரிணைவில் உப மரபாக இணைக்கப்பட்டது. இவர்களுக்கு அடங்கிய தெய்வமாக்கப்ட்டது சூரிய வழிபாடு. பழம் படைப்புக் கடவுளான பிரம்ம வழிபாடும் இத்தகைய தந்தைவழிப்பட்ட இரு கடவுளர்களின் பேரெழுச்சியில் அடங்கி ஒடுங்கிப் போனது.

இத்தகைய கணசமூகத் தலைவனான கணபதியைத் தலைமைத் தெய்வமாக ஆகவிட்டாலும், அதன் வரலாற்றை நினைவூட்டும் சடங்குகள் வழி அதனை வேதமதம் என்கிற ஆண் ஆதிக்கப் பார்ப்பனியம் கேவலப்படுத்தவே செய்கிறது. விநாயகர் சதுர்த்தி என்கிற விழாவின் நடைமுறைச் செயல்பாடுகள் அதன் சான்றாக உள்ளன. விநாயகர் பிறந்த நாள் என்பது, அவர்களைப் பொருத்தவரை அது குலசமூக கணபதியின் இறப்பே. பார்வதி தேவியின் உடல் அழுக்கிலிருந்து உருவானவர் என்கிற கதையின் உருவகமாகவே பிள்ளையார் உருவம் களிமண்ணால் உருவாக்கப்படுகிறது. அதற்க சுடுகாட்டுச் செடியான எருக்கமாலை போடுவது, பின்னர் அடுத்தநாள் அந்தப் பிள்ளையார் உருவத்தை அடித்து உடைத்து நொறுக்குவது என்பதைக் காலகாலமாக சடங்குகளாக இன்றுவரை செய்துவருகின்றனர். ஆணாதிக்க அரசுமுறையில், பழைய கணபதி அழிக்கப்பட்டு, அவர் புதிய தந்தைவழிச்சமூக்க் கடவுளாக உயிர்தெழுந்த வரலாறே விநாயகர் சதுர்த்தி விழா என்பது.

தாய்வழிச் சமூகத்தின் உடலிலிருந்து உதித்த கணசமூகத்தின் குறியீடே கணபதி. அதன் தலைமையைச் சிவன் வீழ்த்தியதே பிள்ளையார் தலைவெட்டப்பட்ட கதை. பின்னர், அது தன்வயப்படுத்திய கதையே பிள்ளையாருக்கு யானைத்தலை வந்தது.

இவ்வாறாக, நீண்ட நெடிய வரலாற்றுப் போக்கில் இந்திய நிலம் சார் சமூக அமைப்பின் குறியீட்டுப் படிமங்கள் திரண்டெழுந்தன. தொகுத்துப் பார்த்தால், தந்தைவழிச் சமூகச் சிவனோடு தாய்வழிச் சமூகப் பார்வதி மனைவியாக்கப்பட்டதும், கணபதி மூத்த மகனாக்கப்பட்டான். அதே போன்று தாய் கொற்றவையிடமிருந்து உதித்த குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் இளைய மகனாக்கப்பட்டான்.

சிவமரபோடு, சாக்தம்(சக்தி வழி), காணாபத்தியம் (கணபதி வழி), கௌமாரம் (முருக வழி) எல்லாம் சிவன் தலைமையிலான குடும்ப உறவாகக் கட்டமைக்கப்பட்டது. பின்னர் அதேனோடு வைணவ மரபு மாமன் முறையில் இணைக்கப்பட்டது. சூரிய வழிபாட்டு மரபான சௌவீரம் இவற்றின் பேரிணைவில் உப மரபாக இணைக்கப்பட்டது. இவர்களுக்கு அடங்கிய தெய்வமாக்கப்ட்டது சூரிய வழிபாடு.

சைவ, வைணவ மரபு இணைப்புகள் என்பதோடு மட்டும் இல்லாமல், அவற்றிற் கிடையிலான உறவையும் முரணையும் சிவ புராணக் கதைகள், விஷ்ணு புராணக்கதைகள், சக்தி புராணக் கதைகள், விநாயக புராணம், கந்த புராணம் போன்றவை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றன. அவற்றை இன்னும் நுணுக்கமாக அணுகி ஆராய்ந்தால் நாம் பயில்கிற சமூக வரலாற்றின் படிமங்கள் பலவும் உள்ளுறை பொருளாகவும், உருவகப் பொருளாகவும் நிறைந்து கிடக்கின்றன.

மேலும் இந்துமதம் என்று கூறப்படுகின்ற மதம் இத்தனை விதமான பழம் வழிபாட்டு மரபுகளின் உறவும் முரணுமாக சித்திரங்களாகவே உள்ளன. வெளிப்பார்வைக்கு அவை ஒரு மதம் போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும், இத்தகைய அறுவகைப்பட்ட மரபுகளின் வலுவான சுய அடிப்படைகள், அவற்றை இணையவிடாதவாறும் தடுக்கின்றன. புராணக்கதைகள் அத்தகைய இணைப்பைச் செய்ய ஒருவகையில் முயல்கின்றன. அதேநேரம் அந்தந்தக் கடவுள்களுக்கான புராணங்கள் அவற்றின் தனி இயல்புகளை உயர்த்தும் வகையில் மற்றவற்றைத் தாழ்த்தும் புனைவுகள் மூலம், இணையமுடியாத சமூக உளவியல்களையும் முன்னிறுத்துகின்றன.

வைணவம் சைவத்தை ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. சைவணம் வைணவத்தோடு எப்போதும் உடன்படுவதில்லை. அதிலும் பார்ப்பனிய அடிப்படையான மனு அதர்ம்த்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சாதியச் சட்டங்களும், உளவியல்களும், நடைமுறைகளும், சடங்குகளும், வலுவான அகமண முறையின் இருத்தல்களும் ஒன்றிணைவுகளை ஏற்படுத்துவதைவிடப் பிரிவினை உளவியலையே பெரிதும் விதைக்கின்றன.

இன்றைக்கு நிலவும் இந்துமதப் படிமங்களின் அடிப்படைகள் இவ்வாறே உதித்தன.

இவற்றை அடியொட்டிய புராணப் படைப்புகள், அவற்றை அடியொட்டிய இலக்கிய மரபுகள், கோவில் உருவாக்கங்கள், சிற்ப, ஓவிய, இசை, நாடக மரபுகள், வழிபாட்டு மரபுகள், திருவிழா மரபுகள், விழாக்களோடு இணைக்கப்பட்ட அரச மரபு, அரச மரபின் அடிப்படையாக அமைந்த சாதியக் கட்டமைப்பு மரபுகள், சொத்துடமை மரபுகள், உடமை மரபுகள், பண்பாட்டு மரபுகள் ஆகிய இன்னபிற அதிகார மரபுகளை இணைத்து உருவான அல்லது உருவாக்கம் பெற்ற ஒன்றே இன்றைய இந்து மத இருப்பு.

இந்து மத இருப்பு என்பது, சமூகத்தில் தந்தைவழிச் சமூக அதிகாரத்தின் இருப்பே. தந்தைவழிச் சமூக அதிகாரத்தின் இருப்பு என்பது, தனிச்சொத்துடமைச் சமூக அதிகாரத்தின் இருப்பு. தனிச்சொத்துடமைச் சமூக அதிகாரத்தின் இருப்பு என்பது, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், பாசிசம் போன்ற இன்னபிற அதிகார, உற்பத்தி முறைகளின் இருப்பு என்பதாகும்.

– ஸ்ரீரசா.

 

http://maattru.com/ganapathy/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.