Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள் - பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ; கொழும்பு ரெலிகிராப்

Featured Replies

நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது?

இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதனை விட மிக சீரியசான அரசியல் கேள்வி, எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஜனநாயகமயப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு நடக்கப்போவது என்ன? என்பதாகும். 2015 ஆட்சி மாற்றத்தில் நேரடி பங்காளிகளாக இருந்த அரசியல், சமூக ஆர்வலர்கள் இக்கேள்வியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருக்கின்றனர். ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல்கள் நடைபெறும் கட்டம் நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கான அறிகுறிகள் அவர்களை இன்னும் கவலையில் ஆழ்த்துகின்றன. உளவியல் சுட்டிகளை மையமாக வைத்து நாட்டுப் பிரஜைகளை தேசப்பற்றுள்ளவர், தேசத்துரோகி என்ற இரு வகையில் பிரித்துப்பார்க்கும் அண்மைய‌ கால அறிக்கைகள் நாசிசத்தின் சிறியதொரு பரிமாண‌த்தை காட்டிநிற்கின்றன.

ஜனநாயக ஆர்வலர்களுக்கான இவ்வபாய எச்சரிக்கை நாடு சில தீவிரமான அரசியல் பிரச்சினைகளுக்குள் இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், அதன் மறுமலர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு விடயங்களில் ஈடுபட்ட இலங்கையின் சமூக இயக்கங்களிடமிருக்கும் தாக்கம் செலுத்தும் தேர்வுகள் பற்றிய புதியதொரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு பொறுத்தமான நேரமிது.

இவ்வகையானதொரு கலந்துரையாடலை ஆரம்பிப்பதைத் தூண்டும் பங்களிப்பை ஆற்றுவதற்கு இக்கட்டுரை முயற்சிக்கிறது.

மூன்று நிறுவனங்கள்

அடுத்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அரச அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் பின்வரும் மூன்று அரசியல் உருவாக்கங்களுக்கும் மத்தியில் போட்டி நிலவலாம்: UNP யும் அதன் கூட்டு கட்சிகளும், SLFP யும் அதன் கூட்டு கட்சிகளும், தற்போதைய கூட்டு எதிர்கட்சியும் அதன் கூட்டு கட்சிகளும். ஜனநாயகமயப்படுத்தல் வேலைத்திட்டத்தில் இம்மூன்று நிறுவனங்களும் மிகச் சிறியளவு நேர்மறையான சாத்தியப்பாடுகளையே வழங்கமுடியும்.

தற்போதைய பிரதமர் தலைமை தாங்கும் UNP மற்றும் தற்போதைய ஜனாதிபதி தலைமை தாங்கும் SLFP ஆகிய இரண்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக செய்தவை பற்றிப் பார்ப்பது பொறுத்தம். பின்வரும் எதிர்மறையான பாடங்களை அது எமக்கு கூறுகின்றது: (அ) ஆட்சி மாற்றம் என்பது ஜனநாயக மறுமலர்ச்சிக்கும் ஒருங்கிணைப்புக்கும் போதுமானதாக இல்லை, அது அவற்றுக்கான‌ ஒரு முன்நிபந்தனையாக இருப்பினும் கூட. (ஆ) அரசியல் கட்சிகளும் தலைவர்களும்- ஜனநாயக சீர்திருத்தம் என்ற வாக்குறுதிகளால் தேர்தல்களில் வென்றவர்கள் கூட- போதியள‌வு துணிவு, உறுதி பெற்றவர்களாகவோ அல்லது தொடர்ந்தேர்ச்சியான சீர்திருத்தமொன்றை வளர்த்தெடுக்கும் அரசியல் தேவை கொண்டவர்களாகவோ இல்லை. (இ) ஊழல்களற்ற ஆட்சி, நிலையான ஜனநாயகமயமாக்கல், சமாதானத்தை கட்டியெழுப்பல் போன்ற பகுதிகளில் அரைமனதோடு மேற்கொள்ளப்பட்ட முழுமையற்ற முயற்சிகள் வலதுசாரிக்கும், போதிய மக்கள் ஆதரவுகொண்ட எதேச்சாதிகாரத்திற்குமான அரசியல் தளம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றன‌.

UNP மற்றும் SLFP கட்சிகளும் அதன் தலைவர்களும் இலங்கைக்கான சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதில் தங்கியிருப்பவர்கள் அல்லர். ஜனநாயக மாற்றத்தின் தலைவன் எனும் நாமத்தை எதிர்காலத்தில் தமக்குச் சூட்டிக் கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இவை கசப்பான உண்மைகள். அரசியல் உண்மைகளும்தான். எமது காலத்தின் சில‌ அரசியல் கொடூரங்களையும் கூட‌ அவை உள்ளடக்கிருக்கின்றன.

இன்னும் ஒரு வருடத்தில் அல்லது அதன் பின் அதிகாரத்துக்கு வரத் தயாராகுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்? கூட்டு எதிர்கட்சி, அதன் புதிய அரசியல் கட்சியான‌ இலங்கை மக்கள் முன்னணி ஆகிய இரு நிறுவனங்களினதும் தலைவர்கள் மற்றும் 2019 இல் பொது ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதை எதிர்பார்த்திருக்கும் ஆதரவாளர்கள் ஒரு விடயத்தை தமக்குள் பகிர்ந்துகொள்கின்றனர்: ஜனநாயக சீர்திருத்த வேலைத்திட்டம் மீதான தம் வெறுப்பு மற்றும் அவமதிப்பு. தற்போது அவர்கள் ஜனநாயகத்துக்குப் பின்னரான மற்றும் மக்கள் ஆதரவு பெற்ற எதேச்சாதிகார அரசியல் மாற்றத்துக்கான மக்கள் ஆணையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை உருவாக்கி வருகின்றனர். அவர்கள் தம்முடைய இலக்கை அடையவும் முடியும். அவர்களது தேர்தல் வெற்றி – நடந்தால் – ஆரம்பத்தில் நல்லதொரு உணர்வைத் தோற்றுவிக்கும். இலங்கை குடிமக்களுக்கு அதன் அரசியல் பின்னடைவை காட்டிநிற்க குறிப்பிட்டதொரு காலம் எடுக்கலாம்.

அவ்வாறானதொரு ஆட்சி மாற்றம் நிர்வகிக்க முடியாத அரசியல், சமூக முரண்பாடுகள், மென்மேலும் துரிதப்படுத்தப்படும் அரசியல் ஸ்தீரமின்மை, இன -சமூக பிளவுகள் போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் ஆட்சியை நிலைக்கச்செய்யவும் சமூக எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் வன்முறையை கட்டாயமான சாதனமாக பயன்படுத்தவும் கூடும். இவ்வகையானதொரு ஆட்சியை அதிகாரத்திலிருந்து கலைப்பது வன்முறை கலந்ததாகவும் இரத்தக்களரியுடையதாகவுமே இருக்கும் என்பதை பல சர்வதேச மாதிரிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனநாயக வட்டம்

அண்மைக்கால இலங்கை ஜனநாயகத்தின் ஒரு பக்கமே மேலே கூறிய காட்சி. அதன் இன்னொரு பக்கமிருக்கிறது. ஜனநாயகமென்பது  குடிமக்களது அரசியல் அபிலாஷைகள், அர்ப்பணிப்புகள், போராட்டங்கள், ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்காலம், பின்னடைவுகளின் போதான எதிர்ப்பு, மீளுருவாக்க முயற்சி போன்ற மக்கள்மயப்படுத்தப்பட்டதொரு சமூய இயங்குதளம். இலங்கையின் அண்மைய வரலாற்று அரசியல் மாற்றங்களில் இதுவொரு முக்கிய பரிமாணம். ஜனநாயத்தை விட்டு பின்வாங்கும் வகையிலான எதேச்சாதிகார இலக்குகள் கொண்டதாக‌ அரசாங்கம் அமையும்போதெல்லாம் எதிர்ப்பு தோற்றம்பெற்று இறுதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை மிகைக்கும் மறுமலர்ச்சி ஒன்று உருவாகிவிடுகிறது.

ஜனநாயகத்தின் பின்னடைவும், அதனைத் தொடர்ந்த மீளுறுவாக்கமும் எனும் தொடரியக்க வட்டம் இலங்கை அரசியல் மாற்றத்தில் நீண்டகால பரிமாணத்தில் நிகழ்ந்தே வந்திருக்கிறது. ஒவ்வொரு குடிமக்கள் பரம்பரையும் இதனை முகம்கொடுக்கவும் அதன் மோசமான விளைவுகளைத் தாங்கிக்கொள்ளவும் நல்ல விளைவுகளை அனுபவிக்கவும் வேண்டியிருக்கிறது.

அதேநேரம், அரசியல் கட்சிகளும் அரசியலை தொழிலாகச் செய்பவர்களும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் போராட்டத்தில் நம்பத்தகுந்தவர்களல்லர் என்ற பாடத்தை 2015 அனுபவம் இலங்கை பிரஜைகளுக்கு கற்றுத்தருகிறது. அவர்களைப் பொறுத்தவரை பொதுமக்களது ஜனநாயக ஆசைகளும் அபிலாசைகளும் வெறும் சாதன விழுமியங்களே. தம் தேர்தல் தொகுதி மீதான அவர்களது கவனக்குவிப்பும் நம்பிக்கையும் தற்காலிகமானவையாகவும், சந்தர்ப்பம் சார்ந்தவையாகவும் தியாகம் செய்யக்கூடியவையாகவுமே உள்ளன.

ஜனநாயகத்தின் வாழ்வு

SLFP மற்றும் UNP ஆகிய இரு கட்சிகளும் புதிய அரசாங்கத்தின் பின் – ஜனநாயக அரசியல் வேலைத்திட்டத்தில் மிகவும் பலவீனமடைந்த நிலையில் – எதிர்க்கட்சியாக – இருப்பின் ஜனநாயகத்தின் வாழ்வு மிகவும் சவால்மிக்கதாகவே இருக்கும். தெற்கில் JVP வடக்கில் ஓரிரண்டு தமிழ் கட்சிகள் தவிர ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளும் மிரட்டல்களுக்கு அடிபணிந்து, புதிய எதேச்சாதிகார அணியின் பங்குதாரர்களாக மாறிவிடலாம். மிக மோசமான‌ இவ்வாறான நிலைமை, எதிர்க்கட்சியைச் சிதைக்கவும் கட்டுப்படுத்தவும் ஜே.ஆர் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளை ஓரளவு ஒத்ததாக இருக்க முடியும்.

இச்சாத்தியப்பாட்டை ஏற்படுத்த பல்வேறுபட்ட‌ தேசிய மற்றும் சர்வதேச காரணிகள் துணைசெய்ய முடியும். அவற்றுள் மிக முக்கியமானவை: (அ) தோற்றம்பெறும் புதிய அரசாங்கத்தின் சீனாவுடனான‌ இறுக்கமான பிணைப்பு, சீன பொருளாதார, அரசியல் மாதிரி மீதான அதன் ஈர்ப்பு, சர்வதேச சந்தையில் தோன்றியிருக்கும் புதிய குழுக்களுடனான அதன் தொடர்பு. (ஆ) முன்னெப்போதுமில்லாத கடும் பொருளாதார நெறுக்கடி சூழலில் அது முன்வைக்கும் துரித பொருளாதார வளர்ச்சித் திட்டம் மற்றும் அதிக கரிசனை கொள்ளும் அரசியல் ஸ்தீரநிலை. (இ) முன்னாள் இராணுவ – சிவில் அதிகாரத்தின் கூட்டாக உருவாகும் எதேச்சாதிகாரம் புதிய அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைத்திட்டங்களை வரையலாம். (ஈ) ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து ஜனநாயக பின்னடைவை தடுத்து நிறுத்தி, அதனை எழுச்சி நோக்கி நகர்த்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படலாம். (உ) தேசிய பாதுகாப்பு அரசாங்கம் எனும் ஆட்சி மாதிரி நோக்கி மீளுதல். இப்பின்னணியில், இலங்கை மாலைத்தீவை ஒத்த, புதியதொரு தோற்றம்பெற சாத்தியமிருக்கிறது.

இலங்கை ஜனநாயக நிறுவனங்கள் பின்வரும் கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளன: 2019 – 2020 தேர்தல்களின் பின் ஜனநாயகம் மிக தீவிரமான பின்னடைவை சந்திப்பது ஊர்ஜிதமாகுமாயின், அதனை மீளுறுவாக்கம் செய்வது எவ்வாறு? தவிர்க்க முடியாத அடக்குமுறை சூழலிலும் அணிதிரட்டலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தலுக்குமான வாயில்கள் மூடப்படும் சூழலிலும் ஜனநாயக சிவில் சமூகம் மற்றும் அரசியல் சமூக தொகுதிகள் தம் வாழ்வை முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு? மக்கள் ஆதரவுடன் தோற்றம் பெறும் வலதுசாரி, எதேச்சாதிகார ஆட்சியின் நிபந்தனைகளின் கீழ் ஜனநாயக இயக்கங்களது மீளுறுவாக்கம் எவ்வாறு சாத்தியமாகும்?

ஜனநாயகத்தின் பாதுகாப்பு

மாலைத்தீவை ஒத்த ஒரு நாடாக இலங்கை உருவாக்கப்பட்டுவிடாமல் இருக்க, எமது சமூகத்தில் இருக்கும் ஜனநாயக பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, கட்டியெழுப்புவதே முடியுமான ஏக வழியாக இருக்கக்கூடும். ஜனநாயக நிறுவனங்களான அரசியல் கட்சிகளது வீழ்ச்சி, நாட்டு பிரஜைகள் மீதும் அவர்களது சுயாதீனமான அணிதிரட்டல் மீதும் பொறுப்புக்களை சுமத்திவிடுகிறது.

எதிர்த்தியங்கும் கலாச்சாரம் இலங்கை சமூகத்தின் நிரந்தர‌ அரசியல் பண்புகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஜனநாயக மையத்தை வடிவமைக்ககூடிய செயற்பாட்டாளர்கள் குழுக்களால் எதிர்த்தியங்கும் நடைமுறை தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டும் தக்கவைக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கை ஜனநாயகத்தின் சிவில் சமூகத்தையும் அவர்களே ஒழுங்குபடுத்தினர். சிவில் சமூக ஈடுபாடு பின்வரும் அரசியல் பண்புகள் கொண்டிருந்தன: (அ) ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் போதெல்லாம் அதனைப் பாதுகாத்தல். (ஆ) சிவில் எதிர்ப்பை தோற்றுவித்தல். (இ) பொதுமக்களை மையமாக கொள்ளல். (ஈ) பொதுமக்களை எச்சரித்து விழிப்பூட்டல். (உ) கூட்டாக இயங்குதல். (ஊ) ஜனநாயகத்தை அத்தியவசியமான‌ பொதுமக்கள் சொத்தாக கருதுதல். வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவன ஊழியர்கள், மாணவர் இயக்கங்கள், விவசாய அமைப்புகள், நகர – கிராம இளைஞர்கள், பெண்கள், தொழில் அமைப்புகள், சமூக சிந்தனை கொண்ட மத நிறுவனங்கள், ஊடக அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், ஜனநாயக பற்றுள்ள நாட்டுப் பிரஜைகள் என பல தளங்களில் அவர்கள் பரவியிருப்பார்கள்.

ஜனநாயக எதிர்ப்பு

இவர்கள் சிறு தொகையினராக இருப்பினும் இக்குழு சார்ந்தவர்களில் சிலரே ராஜபக்‌ஷ சகோதரர்களது எதேச்சாதிகார ஆட்சிக்கெதிரான‌ எதிர்ப்பை ஓரளவு வெளிக்காட்டினர். அரசியல் கட்சிகளது புதிய கூட்டு ஜனநாயக எழுச்சிக்கான தளமொன்றை தோற்றுவித்திருக்கிறது. சிவில் குழுக்கள் மிகவும் செயலற்றதாக உள்ளன. அவை புதிய, புத்துணர்வுடன் கூடிய அணிதிரட்டலொன்றையும் ஒத்துழைப்புடன் கூடிய செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தலையும் எதிர்பார்த்திருக்கின்றன.

சிதறிப்போயுள்ள ஜனநாயக சமூக இயக்கங்களுக்கான நிறுவனமயப்பட்ட தலைமைத்துவமொன்றை வழங்குவதே தற்போது போதிய வளங்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் சிவில் சமூக அமைப்புகளது அவசர கடமை. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் எதிர்த்து நிற்கவுமான புதியதொரு சமூக இயக்கத்தை வடிவமைக்கவும் ஜனநாயகத்துக்குப் பதிலாக தோன்ற முடியுமான எதேச்சாதிகாரம் மிக்க வலதுசாரி சீர்திருத்த வேலைத்திட்டத்தை எதிர்த்து நிற்கக்கூடிய பலமான கூட்டமைப்பொன்றையும் கட்டியெழுப்ப‌ அவர்களுக்கு இன்னும் ஒரு வருடம் மாத்திரமே – அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் – இருக்கிறது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான புதிய சமூக இயக்கத்தினது அரசியல் சில ஒழுங்குமுறைகள் கொண்ட அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும்: (அ) அது சமூக இயக்கங்களது விரிந்ததொரு கூட்டணி. அது “ஜனநாயக பன்மைத்துவம்” என்பதன் அடிப்படைகள் மீது கட்டப்படல். (ஆ) மையம் இல்லாத, குறிப்பிட்ட சிந்தனையொன்றின் இரும்புப் பிடியில்லாத, நிர்வாக படிநிலை இல்லாத தொடர்ந்து வளர்ந்து செல்லும் வகையிலான இறுக்கமில்லாத கட்டமைப்பு கொண்டதாக இருத்தல். (இ) பெரும் அரசியல் கட்சிகளுடன் முழுமையான தந்துரோபாய கூட்டணி அமைக்கக் கூடியதாகவும் அதேநேரம் அதன் அரசியல் சுயாதீனத்தை எக்கட்டத்திலும் விட்டுக்கொடுக்காததாகவும் செயற்படல். (ஈ) சிறிய அரசியல் கட்சிகளுடனும் அவர்களது தேர்தல் வேலைத்திட்டத்தில் சிக்கிக்கொள்ளாத வகையில் நெருங்கிய கூட்டுறவுகளை வைத்துக்கொள்ளல். (உ) அது புதியதொரு அரசியல் மொழியொன்றை உருவாக்குவதனூடாக நாட்டுப் பிரஜைகளது ஜனநாயக மற்றும் சுதந்திர அரசியல் கனவையும் அடைந்துகொள்ள துணைசெய்வதாக இருத்தல்.

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட எழுதி கொழும்பு ரெலிகிராப்பில் வெளியாகிய “Sri Lanka’s Democracy: Very Critical Challenges Ahead என்ற கட்டுரையின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் ரிஷாட் நஜிமுடீன்.

http://maatram.org/?p=7119

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.