Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு: ‘மஞ்சள் மேற்சட்டை’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு: ‘மஞ்சள் மேற்சட்டை’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 01:39Comments - 0

மக்கள் வீதிக்கு இறங்குவது இயல்பானதல்ல. ஆனால், வீதிக்கு இறங்கியவர்களை ஏமாற்றுவதும் என்றென்றைக்குமானதல்ல.  

அரசாங்கங்களுக்கெதிரான மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் கடந்த ஒரு தசாப்த காலமாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன.   

குறிப்பாக, நவதாராளவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில், இதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது.   

இந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள், இப்போது, ஐரோப்பாவின் பெரிய தேசங்களில் இருந்து வெளிப்படும் போது, அவை இன்னொரு பரிமாணத்தை எட்டுகின்றன. மக்களின் புதிய போராட்டங்களுக்கு, உந்துகோலாக அமைந்து விடுகின்றன.   

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவால், பிரான்ஸ் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக, ‘மஞ்சள் மேற்சட்டை’ அணிந்த போராட்டக்காரர்கள், பிரான்ஸையும் தாண்டி, உழைக்கும் மக்களின் போராட்டத்தின் குறியீடாக உள்ளார்கள்.   

ஐரோப்பாவில் உருப்பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிகளினதும் இலாபமீட்டல் வெறியினதும் குறியீடாகவே இந்தப் போராட்டங்களைக் கருதுதல் வேண்டும். ஐரோப்பாவெங்கும், அரசாங்கங்களுக்கு எதிராகக் கனன்று கொண்டிருக்கும் மக்களின் கோபத்தினதும் எதிர்ப்பினதும் பிரதிநிதிகளாக, இந்த மஞ்சள் மேற்சட்டை போராட்டக்காரர்கள் உள்ளனர்.   

மஞ்சள் மேற்சட்டையின் கதை  

பிரான்ஸில் எரிபொருள் விலை அதிகரிப்புகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமானது, இன்று பிரான்ஸையும் அதன் அண்டை நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது.  

 இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, பாரிஸைச் சேர்ந்த இரண்டு ட்ரக் ஓட்டுநர்கள், ‘எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக, தேசிய அளவிலான மறியல் செய்வதே, இதை எதிர்ப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை’ என்ற ஒரு யோசனையை, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த யோசனைக்குச் சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. இதுவே, ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமாக உருவெடுத்தது.   முதற்கட்ட மறியல் போராட்டத்தில், 200,000க்கும் அதிகமானோர் பங்குபற்றினர். இதன் வெற்றி, தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிகோலியுள்ளது.   

இந்தப் போராட்டத்தின் இடைவிடாத இயக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும் பிரான்ஸ் எங்கும் பரவியுள்ள சமூகக் கோபத்தின் வெளிப்பாடாகும். இந்த இயக்கமானது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எரிபொருள் வரி அதிகரிப்புகளுக்கு எதிராக, சிறு வணிகர்கள், டிரக் முதலாளிகள்-ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டணியின் வெளிப்பாடாக இருக்கிறது.   

இந்தப் போராட்டங்களின் அடிப்படையில், மூன்று விடயங்களைப் புரிந்து கொள்ளல் அவசியம்.   
முதலாவது, உலகளாவிய ரீதியில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள், இன்று நடந்து வருகின்றன. அதன் பகுதியாக, இதை நோக்க வேண்டும்.   

இரண்டாவது, இந்தப் போராட்டங்கள் சமூக வலைத்தளங்களின் ஊடு ஒன்றிணைக்கப்படுவதால், அதற்கெதிரான நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.   

மூன்றாவது, அரசாங்கங்களுக்கெதிரான இளந்தலைமுறையின் எதிர்ப்புகள், அரசாங்கங்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. அதை, ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கத்தின் செயற்பாடுகளில், இளைஞர்களின் பங்களிப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.   

இன்று, உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றங்கள் நடைபெறுகின்றன. அவை, பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.   குறிப்பாக, எரிபொருளுக்கான வரியை பிரான்ஸ் அதிகரித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பானது, “சூழலியல் மேம்பாட்டுக்கு நிதி அளிப்பதற்கானது” என்று, பிரான்ஸ் சொல்கிறது. 

இதேவேளை, பல்கேரியாவில், எரிபொருள் விலையேற்றங்கள், பழைய, அதிக சூழல்மாசுபடுத்தும் கார்களுக்கு அபராத வரிகள் அதிகரிப்பு, வாகனக் காப்புறுதித் தொகைகளின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பிரதான சாலைகள், நெடுஞ்சாலைகளை  மறித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கத்தின் செயற்பாடுகள், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுவதால், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், சமூக ஊடகத் தணிக்கை குறித்துத் திட்டமிட ‘பேஸ்புக்’ நிர்வாகத்துடன் சந்திப்புகள் நடத்தி, இதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.   

அத்துடன், தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையப் பயன்பாடு குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மக்ரோன் பேசுகையில், “இணையம் மூலமான பேச்சுச் சுதந்திர பயன்பாட்டின் காரணமாக, உலகம் பேரழிவின் விளிம்பில் இருக்கிறது” என்றார்.   

“இணையம், ஆரம்பத்தில் ஓர் ‘அருமையான வாய்ப்பாக’ இருந்தது. இருந்தபோதிலும் இப்போது அது, ஜனநாயக சமூகங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது” என்றார். இதன் மூலம், பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.   

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், எவற்றையெல்லாம் ஜனநாயகத்தின் கருவிகள், உயர்ந்த மனித உரிமை நடத்தைகள் என்று, மேற்குலக ஜனநாயகங்கள் கூறிவந்தனவோ, அவற்றையே இன்று, அதே ஜனநாயகத்தின் பெயரால், அவை விமர்சிக்கின்றன. இன்று, அரசாங்கங்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் மோசமான நிலைமையையே, இது சுட்டிக்காட்டி நிற்கின்றது.   

பிரான்ஸில், எரிபொருள் விலைகள் இவ்வாண்டு 20 சதவீதம் அதிகரிக்கபட்டன. அதேவேளை, அதற்கு மேலதிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டின. இப்போராட்டங்களின் விளைவால், முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகச் சொன்ன மக்ரோன் அரசாங்கம், பின்னர் முடிவுறாத போராட்டங்களின் விளைவால், அவ்வரிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.  ஆனால், போராட்டங்கள் முடியவில்லை. இப்போராட்டங்கள், பிரான்ஸில் செல்வம் படைத்த ஒரு சதவீதமானோருக்கு எதிரான மக்களின் போராட்டமாகும். எரிபொருட்கள் மீதான வரிவிதிப்பு, இப்போராட்டத்தை உந்தித்தள்ளிய நிகழ்வு மட்டுமே.  

இந்த ‘மஞ்சள் மேற்சட்டை’ போராட்டக்காரர்கள், மக்களிடையே வளங்கள், மீளப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டாண்டு காலமாக மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்ட சமூக நலன்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியே, தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.   

பெரும் செல்வந்தர்களுக்கு வழங்குகின்ற வரிச்சலுகைகள், ஏற்படுத்துகின்ற பொருளாதாரத் தாக்கத்தை, வரிகளின் பேரால், உழைக்கும் மக்களின் தலைகளில், பிரான்ஸ் ஜனாதிபதி கட்ட முனைகிறார். 

அதேவேளை, இராணுவப் பெருக்கத்துக்கு நூறு பில்லியன் கணக்கில் செலவிட பிரான்ஸ் கொண்டிருக்கும் திட்டங்களுக்கான செலவுகளையும் வேறு வடிவங்களில், சாதாரண பிரான்ஸியர்கள் மேல் திணிக்கும் போக்கை, கடந்த ஓராண்டாகப் பிரான்ஸ் மக்கள், பார்த்து வந்திருக்கிறார்கள்.   

 2018 தொடங்கியது முதலாக, பிரான்ஸின் மிகவும் வசதியான 13 பில்லியநர்கள், தமது செல்வத்தில் 23.67 பில்லியன் யூரோக்களைச் சேர்த்துள்ளனர், இதன்மூலம், உலகிலேயே, பில்லியநர்கள் அதிகவேகத்தில் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் நாடாக, பிரான்ஸ் ஆகியிருக்கிறது.  

image_0bcc0f4837.jpg

இந்தப் போராட்டங்கள், மரபார்ந்த ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து விலகியதாகவும் சுயாதீனமானதாகவும் நிகழ்ந்து வருகின்றன. இத்தன்மையானது, வழமையாக அறியப்பட்ட ‘வலது’,  ‘இடது’ ஆகிய இரண்டு அணிகளில் இருந்து விலகி, கலந்ததொரு நிலையில் இருப்பது, அதிகார வர்க்கத்துக்குப் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.   

இந்தப் போராட்டங்களில், வலுவான தொழிலாள-உழைக்கும் வர்க்கத்தின் குணவியல்புகள் இருக்கின்ற அதேவேளை, தீவிர வலதுசாரியியலின் சில இயல்புகளும் இதில் உள்ளடங்கியுள்ளதையும் நோக்க வேண்டும். தொடர்ச்சியானதும் வலுவானதுமான மக்கள் நோக்கிலான, இடதுசாரி முற்போக்குச் சக்திகளின் செயற்பாடு இன்மையையே, இது குறிகாட்டுகிறது.   

அடிப்படையில் இந்தப் போராட்டங்கள்,  சமூகக் கோபத்தின் விளைவாகும். இதனை நன்கறிந்தமையாலேயே, பிரான்ஸ் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது. “எங்கேனும் மறியலால் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கோ, சுதந்திர நடமாட்டத்துக்கோ ஆபத்து இருக்குமானால், நாங்கள் தலையிடுவோம்” என்று சொன்ன பிரான்ஸின் உள்துறை அமைச்சர், “ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் வழக்கம் கொண்ட, எந்தத் தொழிற்சங்கமும் இதை ஒழுங்கமைக்கவில்லை. ஆர்ப்பாட்டம் என்றால், நீங்கள் பொலிஸ் அலுவலகத்தில் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். இப்போது, மிகவும் வெகு சிலரே அவற்றை அறிவிக்கின்றனர். இவ்வாறு அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்படும்” என்றார்.   

பிரான்ஸில் கல்வித்துறைப் போராட்டங்கள்  

பிரான்ஸில் நீண்ட  காலமாக கல்வித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களும், இப்போதைய போராட்டங்களுடன் தொடர்புபட்ட முக்கிய போராட்டங்களாகும்.   
மக்ரோன் அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நிதிநிலை அறிக்கைக்கு எதிராக, நவம்பர் 12அன்று பிரான்ஸ் பூராவும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2011க்குப் பின்னர், முதன்முறையாக தொழிற்சங்கங்கள், தேசிய அளவிலான கல்வித்துறை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. 

இந்த வேலை நிறுத்தத்தின் பகுதியாக, அனைத்து ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், இரண்டு இடைநிலைப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும் நான்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் பங்குபெற்றிருந்தனர்.   

அரசாங்கப் பாடசாலையில் 2,650 ஆசிரியர்களையும் தனியார் துறையில் 550 பேரையும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள 400 பேரையும் வேலையில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை ஆசிரியர்களும் கல்வித்துறை சார்ந்தோரும் எதிர்க்கிறார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில், பாடசாலைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 40,000 மாணவர்களால் அதிகரிக்கவுள்ள நிலையில், இந்த வேலை இழப்புகளை, பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.   

அதேவேளை, முழுநேர நிரந்தர ஆசிரியர்களுக்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைப் பணிக்கமர்த்தும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவையே, ஆசிரியர்களின் எதிர்ப்புக்கான காரணங்களாகும்.   

இதேவேளை, உயர்நிலைப் பாடாலை மாணவர்கள், சில நாள்களுக்கு முன்னர், தலைநகர் பாரிஸில் மத்திய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களையும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் திணிப்பதையும் கண்டனம் செய்த அவர்கள், ‘மஞ்சள் மேற்சட்டை’ ஆர்ப்பாட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இவை, ஆட்சிக்கெதிரான இளந்தலை முறையினரின் எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.   

உண்மை யாதெனில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்தாண்டு நடத்திய ‘தலைமுறை எது?’ கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோரும், பிரான்ஸ் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினரும், தற்போதுள்ள அமைப்பு முறைக்கு எதிராக, வெகுஜன எழுச்சியில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.  

 இதன் பின்னணியிலேயே, பிரான்ஸ் அரசாங்கம், அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை நடைமுறையை மீள அறிமுகப்படுத்துவாக அறிவித்துள்ளது. அதன் மூலம், இளைஞர்களைப் பணிவுள்ள நாட்டுப்பற்றாளர்களாக மாற்றலாம் என, அது நினைக்கிறது.    

கட்டாய இராணுவ சேவையின் கதை கொஞ்சம் சுவையானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்கள், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவும் கெடுபிடிப் போரின் முடிவும் கட்டாய இராணுவ சேவைப் பல நாடுகள் நிறுத்த வழிகோலியது.  அதன்வழி பிரான்ஸ் 1997இலும் ஸ்பெயின் (2001), இத்தாலி (2005), போலந்து (2008) ஜேர்மனி (2010), சுவீடன் (2017) ஆகியவை பின்தொடர்ந்தன. ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள் இதைத் தொடரும் என எதிர்பார்க்கவியலும்.   

ஆனால், ஐரோப்பியர்களிடையே கட்டாய இராணுவ சேவைக்குக் திரும்புவதற்குப் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. 2017இல் நடத்தப்பட்ட ‘தலைமுறை எது’ என்ற கருத்துக்கணிப்பின் படி, 60 சதவீதம் பேர், கட்டாய இராணுவ சேவையை மறுப்போம் என்று பதிலளித்துள்ளனர்.   இவையனைத்தும் அரசாங்கங்களுக்கெதிரான கோபத்தின் வெளிப்பாடுகளாகும். மறுபுறம் அரசாங்கங்கள் ஏதோவொரு வகையில் மக்கள் எதிர்ப்பை அடக்க முனைகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.  

மஞ்சள் மேற்சட்டை இயக்கத்தின் போராட்டங்கள், வெறுமனே தனியான போராட்டம் அல்ல. அது, ஐரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் ஆகும்.   

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாய், பெல்ஜியத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் சுத்திரிகரிப்பு மய்யங்களை முற்றுகையிட்டனர், அதேநேரத்தில் பல்கேரியா, சேர்பியா, கிரீஸ், ரொமேனியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கின்றன.   

இவை, ஐரோப்பாவுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. எகிப்திய ஜனாதிபதி சீசி, மஞ்சள் மேற்சட்டை விற்பனையைத் தடை செய்துள்ளார். எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்த 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினம் ஜனவரி 25 நினைவு கூரப்படவுள்ள நிலையில், அத்தினம் முடியும் வரை மஞ்சள் மேற்சட்டைகளை விற்கக் கூடாது எனப் பொலிஸ் உத்தரவிட்டிருக்கின்றது. மஞ்சள் மேற்சட்டை, மக்கள் போராட்டத்தின் குறியீடாகியுள்ளது.   

நெதர்லாந்து, பல்கேரியா, ஈராக்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கின், பாஸ்ரா நகரில் அசுத்தமான குடிநீர், மோசமான நகர சேவைகளுக்கு எதிராக ‘மஞ்சள் மேற்சட்டை’ போராட்டம் நடைபெற்றதற்குப் பின்னர், தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பாஸ்ரா ஆர்ப்பாட்டங்களுடன் ஐக்கியத்தைக் காட்டுகின்ற விதத்தில், மஞ்சள் சீருடைகளை அணிந்திருந்தனர்.  

ஆபிரிக்காவிலும் இதன் தாக்கம் செல்வாக்குச் செலுத்துகிறது. புக்கீனா பாசோவில், இவ்வாறான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் முகநூல் குழு, செயற்படத் தொடங்கியுள்ளது.   

இதேபோலவே, துனீசியாவில் ‘சிவப்பு சீருடைகள்’ என்று, உருவாக்கப்பட்ட முகநூல் குழு, துனிசிய அரசியல் அமைப்புமுறையின் தோல்வியையும் ஊழலையும் மக்களை வறுமைக்குள் தள்ளும் அரசாங்கத்தின் கொள்கையையும் கண்டனம் செய்து, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அல்ஜீரியாவில் ‘மஞ்சள் மேற்சட்டை’ அணிந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

பிரான்ஸில் தோற்றம் பெற்ற ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமானது, அதன் முன்னாள் கொலனிகளிலும் அண்டை நாடுகளிலும் எனக் கண்டம் தாண்டிய செல்வாக்கைப் பெற்றதோர் இயக்கமாகியுள்ளது. மக்களின் கூட்டு வெளிப்பாடாகவும் பாரம்பரிய அரசியல் முறைகளைக் கடந்த வெளிப்பாட்டுக் கருவியாகவும் இதை நோக்க வேண்டியுள்ளது.   

ஒரு சதவீதமானோருக்கு எதிராக, 99 சதவீதமான மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. உலகை 99 சதவீதமானோருக்கு உரியதாக மாற்றியாக வேண்டும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்கள்-போராட்டத்தின்-புதிய-குறியீடு-மஞ்சள்-மேற்சட்டை/91-226863

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.