Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் "எக்ஸைல்" குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!

 

book_nadesan_2new_2.jpg

" ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்" இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர். அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன். இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார். " எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது."

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார். இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார். பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் காட்சி ஒரு உதாரணம். காவி உடுத்த சந்நியாசி கோலத்தில் ஒருவர், இவர் சிலோன்காரன் என்பதை தெரிந்துகொண்டு அட்டையாக ஒட்டிக்கொள்கிறார். ஒரு கமண்டலத்தில் கிணற்று நீரை வைத்துக்கொண்டு கங்கா தீர்த்தம் என்று சொல்லிச்சொல்லியே இவரை வலம் வருகிறார். இவரும் அந்த நபரின் ஆக்கினை பொறுக்கமுடியாமல் அந்த " தீர்த்தத்தை" பருகுகிறார். இவரிடமிருந்து அதற்கு பணம் கறப்பதுதான் அந்த நபரின் நோக்கம். அந்தக்காட்சியை இவ்வாறு சித்திரிக்கின்றார்: "பருத்தித்துணியில் பட்ட மசாலா குழம்பின் மஞ்சள் கறையாக தீர்த்தம் தந்தவர் ஒட்டிக்கொண்டார்"
 

nadesan_5.jpg

நடேசனுடைய ஏழுவயது பருவத்தில் இவரது வீட்டுக்கு வாக்குக்கேட்டுவருகிறார் தமிழரசுக்கட்சி தலைவர் தந்தை செல்வநாயகம். அவரிடம், " ஏனைய்யா இவ்வளவு தூரம் படகேறி வந்தீர்கள். ஒரு கங்குமட்டையை தமிழரசுக்கட்சி என்று நிறுத்தினாலும் ஊர்ச்சனம் அதற்கு புள்ளிடி போடும்" என்கிறார் நடேசனின் தாய் மாமனார் நமசிவாயம்.
இதிலிருக்கும் அங்கதம் இற்றைவரையில் தொடருகிறது. அந்த பெடறல் கட்சியை எதிர்த்து நிற்கும் தமிழ்க்காங்கிரஸ் வேட்பாளருக்கான கூட்டம், அக்காலத்தில் அந்தக்கிராமத்தில் மின்சாரம் இல்லாதமையினால் ஒரு பெட்ரோ மக்ஸ் வெளிச்சத்தில் நடக்கிறது. வந்தவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவு. அந்த பெட்ரோ மக்ஸ்ஸிற்கு கல்லெறிந்து குழப்புகிறது ஒரு இளம் தலைமுறை.  அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்லவரும் நடேசன், "புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது" எனச்சொல்லிவிட்டு அந்த அங்கத்தை கடந்து செல்கிறார். இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.

மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன். அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே சென்னையில் கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம் வாங்கிக்கட்டிக்கொள்கிறார். இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது. அத்துடன் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் ஆசான்களை சேர் என விளித்துப்பழகியிருக்கும் இவரை சென்னையில் ஒரு ஓட்டோ சாரதி, " சார், சார் " என்று அழைத்தது திகைப்பையூட்டுகிறது. இந்தக்காட்சிகளை வாசிப்பில் தரிசிக்கும் வாசகர்களும் குறிப்பாக இலங்கையர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்கிவிடுவார்கள்.  

இலங்கையில் இனமுறுகள் தோன்றிய காலத்தில் , தமிழர் தரப்பு நியாயங்களை ஏற்கும் நடேசனுக்கு, , மதவாச்சியில் முன்னர் பணியாற்றும்போது தன்மீதே ஒரு சந்தேகம் வருகிறது. " எதிர்கால சரித்திரத்தில் பிழையான இடத்தில் நின்றுவிடுவேனோ" என்ற பயம் இவருக்கு வருகிறது. இந்த இரண்டக வாழ்விலிருந்து விடைபெற்று தமிழகம் சென்று, மூன்று வருடங்களும் இரண்டு மாதங்களும் செலவிட்டவர், அக்காலப்பகுதியில் இணைந்திருந்த தமிழர் மருத்துவ நிலையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் மேற்கொண்ட பணிகளையும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் மத்தியில் குறைந்த பட்ச கருத்தொற்றுமையையாவது ஏற்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் ஆவணமாகவே பதிவுசெய்கிறார். இலங்கை - தமிழக, தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுத இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள் என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள். எழுத்தாளர் காவலூர் ஜெகநாதன், வாழ்நாள் பூராவும் துறவியாகவே வாழ்ந்து ஈழத்தமிழர்களின் உரிமைக்கும் நலன்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த டேவிட் அய்யா பற்றியும், வெலிக்கடை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள், மட்டக்களப்பு சிறை உடைப்பில் தப்பியவர்கள், இயக்கங்களுக்குள் நிகழ்ந்த துரோகங்கள், காட்டிக்கொடுப்புகள் பற்றியெல்லாம் விவரிக்கிறது இந்த நூல்.

ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக்குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார். அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா...? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. நல்லவேளை புலம்பெயர்ந்து சென்று, கடன் அட்டை மோசடியில் அவர் ஈடுபடவிரும்பவில்லை.  தமிழகத்தின் சாராயத்தையும் இலங்கை தென்பகுதி வடிசாரயத்தையும் ஒப்பிடும் காட்சிகளும் இந்த நூலில் வருகின்றன.  

ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக்கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு, போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை விரிவாக நினைவுக்குறிப்புகளாக பதிவுசெய்துள்ளார்.

இந்த அனுபவங்களின் திரட்சியாக இவர் மெல்பன் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில், தனது கைக்குட்டையை எடுத்துக்காண்பித்து, "போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத்துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்" என்ற வேண்டுகோளை விடுக்கின்றார். இந்த வார்த்தைக்குள்தான் சுயவிமர்சனம் மறைபொருளாகியிருக்கிறது. போர் முடிவடைந்த பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில், எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின் தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது. நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலில் தரிசிக்கலாம். எக்ஸைல் -  இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு. நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.

 

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4917:-qq-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

January 23, 2019

1 Min Read

invia_1.jpg?resize=381%2C800

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் ‘கானல் தேசம்’ (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் விமர்சனவுரைகளை ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், கிரிஷாந், யதார்த்தன், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹஸீன் ஆகியோர் ஆற்றுகின்றனர்;. நூல்களை டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் தலைவர் குகநாதனும் எழுத்தாளர் க. சட்டநாதனும் வெளியிட்டு வைக்கவுள்ளனர். நிகழ்வில் பங்கேற்று உரையாடல்களை நிகழ்த்துமாறு நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கவிஞர்கள், வாசகர்கள் அனைவரையும் மகிழ் வெளியீட்டகத்தினர் கேட்கின்றனர்.

dr.jpg?resize=500%2C500exile_cover_new_final_2s-1.jpg?resize=80

 

invia_2.jpg?w=1181

 

http://globaltamilnews.net/2019/110812/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

on January 29, 2019

 

3N7A5475.jpg

 

பட மூலம், Selvaraja Rajasegar

இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு தொடர்ந்தும் தீர்வுகளை வழங்காது தமிழர்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் இழுத்தடித்தும், ஏமாற்றியும் வருகிறது. இந்த யுத்தம் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் குறிப்பாக வடக்குக் கிழக்கிலே வாழும் சமூகங்களை மோசமாகப் பாதித்திருக்கிறது. மண் மீட்பு என்ற கோசத்துடனும், தேசிய விடுதலை என்ற வேட்கையுடன் ஆரம்பித்த போராட்டத்தின் துர்பாக்கியமான விளைவுகளிலே சிலவாக மக்கள் ஏற்கனவே தம்மிடம் இருந்த காணிகளை சிங்கள தேசியவாத அரசியலுக்கு அரணாக அமையும் இலங்கை இராணுவத்திடம் பறிகொடுத்ததும், தமிழ் மக்களின் மத்தியிலே கருத்துக்களை வெளியிடுவது தொடர்பிலே உளவியல் ரீதியிலான ஒரு சமூக அச்சம் உருவாகியமையும், இன முரண்கள் மேலும் கூர்மையடைந்தமையும், பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பும் அமைந்தன. போராட்டத்துக்கு முன்பிருந்த சிங்கள பௌத்த அரச கட்டமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. வடக்கில் போருக்குப் பின்னர் இடம்பெற்று வரும் அரச ஆதரவுடனான வலிந்த‌ பௌத்த மயமாக்கம் சில வகைகளில் அதனது கோரத் தன்மை மேலும் அதிகரித்தும் இருக்கிறதனையே எமக்குக் காட்டுகிறது.

தமிழர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துடன் இணைந்த வகையில் விடுதலை கோரி இயங்கிய இயக்கங்களினால் உருவாக்கப்பட்ட இராணுவமயமாக்கமும், அது ஏற்படுத்திய ஜனநாயக மறுப்பும், சமூகத்தின் சிந்தனைப் போக்கினைப் பொது வெளியிலே உறைந்து போகச் செய்துள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக போரினை நேரடியாக எதிர்கொண்ட சமூகங்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. அரசினது மீள்கட்டுமாணப் பணிகளின் தோல்வியும், என். ஜீ. ஓக்களினை மையமாகக் கொண்ட அபிவிருத்தி முயற்சிகளின் தொலைநோக்கற்ற, கட்டமைப்பு சார் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத பார்வையும், இன்று போரினால் பாதிப்புற்ற சமூகங்கள் நுண் நிதிக் கம்பனிகளின் பிடியில் அகப்பட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ரீதியிலே போருக்குப் பின் உருவாகும் எழுத்துக்களின் பணி என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த எழுத்துக்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் மற்றவர்களுக்கும் சொல்ல வரும் செய்தி என்ன? இவற்றின் வரலாற்றுப் பங்கு எத்தகையது? கடந்த காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இடையில் இவை எவ்வாறான ஊடாட்டங்களை ஏற்படுத்துகின்றன?

போருக்குப் பின்னைய காலத்திலே வடக்குக் கிழக்கிலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்கள் போரின் போது தாம் அடைந்த இழப்புக்களையும் அடக்கு முறைகளையும் பற்றித் தமது நாளாந்த வாழ்க்கையில் பன்மையான முறைகளிலே உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடல்கள் புலிகள் உள்ளடங்கலாக எல்லா விதமான அதிகார மையங்களினாலும் இழைக்கப்பட்ட ஜனநாயக விரோத, விடுதலை விரோதச் செயற்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவனவாகவே அமைகின்றன. ஆனால், பொதுவெளியில் தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் உரையாடல்களிலும், நினைவுகூரல்களிலும், வரலாற்று உருவாக்கச் செயன்முறைகளிலும் சமூகத்தின் கீழ் மட்டங்களில் அவதானிக்கப்படும்  நுணுக்கமான வெளிப்பாடுகளுக்கும், பன்மைத்துவக் குரல்களுக்கும் உரிய இடம் கிடைப்பதில்லை. அரசியற் கட்சிகளாக இருந்தாலும் சரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த‌ ஆசிரியர்கள், மாணவர்கள் சார்ந்த அமைப்புக்களும் சரி, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலான மத மற்றும் சமூகத் தலைவர்களையும், பல்துறைகளிலும் பணியாற்றுவோரினையும் உள்ளடக்கிய சிவில் சமூகக் குழுக்களும் சரி, தொழிற்சங்கங்களாக இருந்தாலும் சரி, வடக்குக் கிழக்கின் தமிழ்ப் பொது வெளியில் செயற்படும் முக்கியமான தரப்புக்களிலே, ஒரு சில தனித்த குரல்களைத் தவிர, கடந்த காலம் பற்றிய உரையாடல்களைத் திறந்த மனத்துடன் உரையாடுவதற்கான வாய்ப்புக்கள் அரிதாகவே தொடர்ந்தும் இருக்கின்றன‌. ஆதிக்கத் தமிழ்த் தேசியவாத நிலைக்கு மாற்றாகவும், புலிகளின் அரசியலில் அவதானிக்கப்பட்ட பாசிசக் கூறுகளை விமர்சிப்பனவாகவும் அமையும் கலை, இலக்கியப் படைப்புக்களினைத் தடை செய்வதிலும், அவற்றுக்கு எதிராக வன்மம் மிக்க பிரசாரங்களை மேற்கொள்வதிலுமே எமது புத்திஜீவிகளிலே பெரும்பாலானோர் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டிலே இடம்பெற்ற யாழ்ப்பாணத் திரைப்பட விழாவிலே ஜூட் இரத்தினத்தின் டீமன்ஸ் இன் பரடைஸ் (Demons in Paradise) என்ற படத்தினை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சமூகப் பொதுவெளிகளைத் தமது கட்டுப்பாட்டிலே வைத்திருக்கும் புலமைசார் மற்றும் மேற்தட்டு வர்க்கத்தினரின் ஆதிக்க அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வெவ்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் ஒத்துழைப்பின் மூலமாகத் தமிழ்நாட்டிலே உருவாகிய‌ தமிழர் மருத்துவ நிலையத்திலே தான் பணிபுரிந்த நாட்களிலே இடம்பெற்ற சம்பவங்களினதும், அந்த நாட்களிலே தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினதும் அடிப்படையில் எழுதப்பட்ட நினைவு மீட்டல் புத்தகமாக அண்மையில் வெளிவந்த‌ நோயல் நடேசனின் எக்ஸைல் என்ற நூல் அமைகிறது. இயக்கங்களினது ஜனநாயக மறுப்பு அரசியல் காரணமாக‌ அவற்றுடன் பொது நோக்கங்களுக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், அரசியல் விடுதலையின் பொருட்டும் இணைந்து செயற்பட்ட ஒருவருக்கு ஏற்பட்ட‌ நம்பிக்கையீனத்தினையும், விரக்தியினையும் இந்த நூல் உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருகிறது. இது சிவில் யுத்தம் தொடர்பாகத் தமிழர் தரப்பின் மத்தியில் பெரிதும் பேசப்படாத சில பக்கங்களைப் பேசும் ஒரு நூல். செய்திப் பத்திரிகைகளிலும், தமிழ்த் தேசிய கருத்துருவாக்கிகளின் பத்திகளிலும் வெளிவராத சில‌ உண்மைகளையும், நினைவுகளையும், சம்பவங்களையும் இந்தப் புத்தகத்தில் இருந்து நாம் வாசித்தறியக் கூடியதாக இருந்தது. ஆயுதப் போராட்ட காலங்களில் நாடு கடந்த நிலையில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி இந்த நூல் பல செய்திகளையும், குறிப்புக்களையும் தாங்கியதாக உள்ளது. தமிழ்த் தேசத்தினை மையமாகக் கொண்ட வன்முறைக்குத் தேசங்கடந்த ஒரு பரிமாணமும் இருக்கிறது என்பதனைச் சொல்லும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது.

ExileImage.jpg?resize=665%2C333&ssl=1

தேசம் கதைகளிலே வாழ்வதாக ஹோமி பாபா என்ற பின்காலனிய சிந்தனையாளர் குறிப்பிடுவார். தேசத்தின் கதைகளினைக் குறுகிய தேசியவாதம் எப்போதுமே தூய்மைப்படுத்தித் தனக்கு அசௌகரியமானவற்றினை பிரித்து நீக்கியே பெரும்பாலும் சொல்ல முற்படுகிறது. அவ்வாறு தேசியவாதம் தன்னை வெளிப்படுத்தும் போது ஏற்படும் அறிவு சார் வன்முறை சமூகத்தின் அரசியல் பிரக்ஞையின் மீதான ஒரு வன்முறையாகவும், பன்மைத்துவம், விடுதலை மற்றும் நீதிக்கான குரல்களின் மீதான ஒரு வன்முறையாகவும் அமைகிறது. தேசத்தின் உள்ளிருக்கும் முரண்கள், அதன் மையத்துக்கும், விளிம்புக்கும் இடையில் இருக்கும் உறவுகள், தேசத்தின் எல்லைக்கோட்டின் வெளியில் இருப்போருக்கும் அதன் உள்ளிருப்போருக்கும் இடையிலான கதைகள் போன்றன‌ வெளிக்கிளம்பும் போதே தேசியவாதத்தின், தேசத்தின் பேரில் இடம்பெறும் வன்முறைகள் வெளிவருகின்றன. இதுவே விடுதலை பற்றி நாம் மீளவும் புதிய முறையில் சிந்திக்க எம்மைத் தூண்டும். நோயல் நடேசனின் நினைவுப் பதிவுகள் தனியே அவரினது ஞாபகங்களின் தொகுப்பல்ல; அவை தேசத்தினைப் பற்றிய பதிவுகள்; எம்மத்தியிலே இருக்கும் தேசச் சிந்தனையின் போதாமைகளை வெளிக்கொண்டு வரும் விளிம்பில் இருந்து அல்லது தேசத்தின் வெளியில் இருந்து தேசத்தினை நோக்கும் வகையிலாக‌, எம்மைச் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள். நாம் எமது வேறுபட்ட அனுபவங்களுடன், வேறுபட்ட நினைவுகளுடன், பன்மைத்துவத்தினை சிதைக்காத முறையில் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் மக்கள் மைய அரசியல் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு எக்ஸைல் போன்ற பதிவுகளின் வாயிலாக வெளிப்படும் உண்மைகளும், உரையாடல்களும் முக்கியமானவை. இவை உண்மை, நீதி, நல்லிணக்கம் போன்ற செயன்முறைகள் வெவ்வேறு இனங்களுக்கு இடையில் மாத்திரமல்ல, கடந்த கால உள்ளக வன்முறையினால் பிளவுற்றுப் போயிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட இடம்பெற வேண்டும் என்பதனை அடிக்கோடிட்டுச் சொல்லுகின்றன.

விடுதலைப் போராட்ட இயக்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட‌ படுகொலைகள் பற்றி எழுதும் நடேசன் உண்மைக்கான தேடல் என்பதனை நாம் கொலையாளிக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் தண்டனை வழங்குவதற்கான ஒரு செயன்முறையாகக் குறுக்கிவிடக் கூடாது என்பதனை வலியுறுத்துகிறார்; மாறாக இதனை பொறுப்புக் கூறலுடன் தொடர்பான செயன்முறையாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையினை அறிவதற்கான ஒரு சந்தர்ப்ப‌மாகவும், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு முயற்சியாகவும் நடேசன் காண்கிறார்.

ஈ-பி-ஆர்-எல்-எஃப் உள்ளடங்கலாக வெவ்வேறு இயக்கங்களில் அவதானிக்கப்பட்ட இனவெறி உணர்வுகளை இந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்திலே மலையாளி ஒருவரினை ஈ-பி-ஆர்-எல்-எஃப் இயக்கத்தினர் சிங்களவர் எனக் கருதி எவ்வாறு தாக்கினர் என்பதனை நடேசன் வேதனையுடன் விபரிக்கிறார். இவ்வாறான‌ இனவெறி இயக்கங்களில் இருந்து வெளிப்பட்ட அவற்றுக்கே உரித்தான‌ ஒரு அகவயமான‌ வெறி அல்ல; இந்த இனவெறிக்கான‌ சமூகப் பொருளாதாரத் தளம் ஒன்று இருக்கின்றது என்பதனை நூல் எடுத்துக்காட்டுகிறது. வட அமெரிக்காவில் இருந்து வந்த சில புலம்பெயர் தமிழர்கள் தாம் ஒரு தொகைப் பணத்தினை வைத்திருப்பதாகவும், எந்த இயக்கம் கொழும்பிலே ஒரு குண்டுத் தாக்குதலினை மேற்கொள்வார்களோ அவர்களுக்கே அந்தப் பணத்தினைத் தாம் வழங்குவோம் என சென்னையிலே வைத்துத் தம்மைச் சந்தித்தோரிடம் அவர்கள் சொன்ன விடயத்தினையும் வாசிக்கும் போது எமது விடுதலையின் இலக்குகள் எவ்வாறு சமூகத்தினைச் சேர்ந்த பணபலம் மிக்கவர்களினால் மாற்றியமைக்கப்பட்டன என்பதனை நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. ஏனைய இனத்தவர் மத்தியிலே எமது போராட்டம் பற்றிய நம்பிக்கையினை நாம் கட்டியெழுப்புவதற்கு எமது சமூகத்திலே பலம் படைத்தவர்கள் எவ்வாறு இயக்கங்களைத் தடுத்திருக்கிறார்கள் என்பதனை நாம் இங்கு அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதேவேளையிலே புலம்பெயர் சமூகங்களினைச் சேர்ந்தவர்களிடம் அவதானிக்கப்படும் இனவாதத்துக்கு அவர்கள் முன்னர் இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட முறைகளும், வன்முறைகளும் கூடக் காரணங்களாக அமைகின்றன என்பதனையும் நடேசன் மற்றொரு இடத்திலே சுட்டிக்காட்டுகிறார்.

இடதுசாரி நிலைப்பாடிலான தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்கள் அடிக்கடி கதைத்து வேதனைப்படும் ஒரு விடயம் சிங்கள இடதுசாரிகள் எவ்வாறு பேரினவாதத்தினைத் தழுவி சிறுபான்மையினரையும், அவர்களது நீதிக்கான போராட்டங்களினையும் கைவிட்டார்கள் என்பது. இந்த நூலிலே ஒரு பகுதியிலே நூல் ஆசிரியர் நடேசனுக்கும் சிங்கள இடதுசாரி செயற்பாட்டாளர் ஒருவருக்கும் இடையில் 1980களில் அநுராதபுரத்திலே சிங்களவர் மீது புலிகள் மேற்கொண்ட இனவெறித் தாக்குதல் பற்றிய ஒரு சம்பாசணை இடம்பெறுகிறது. இந்தச் சம்பாசணையில் இருந்து நான் விளங்கிக்கொள்வது யாதெனில் 1980களிலும் அதற்குப் பின்னரும் சிங்களவர்களின் மத்தியில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளைப் பற்றிப் பேசிய ஒரு சில சிங்கள இடதுசாரிகளையும் தமிழ் மக்களும், தமிழ் மக்களின் சார்பிலே போராடியவர்களும் எவ்வாறு கைவிட்டோம் என்பதனை; நாம் எவ்வாறு சிங்கள் இடதுசாரிகளை எமது வன்மம் மிக்கப் பதிலடிச் செயற்பாடுகளின் மூலமாக சிங்கள‌ சமூகத்தினை எதிர்கொள்ள முடியாது செய்தோம் என்பதனைப் பற்றியும், அவர்கள் தொடர்ந்தும் எமது போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைப்பதற்கு முட்டுக்கட்டையாகச் செயற்பட்டோம் என்பதனையும் போருக்குப் பிந்தைய காலத்திலே சிந்திக்க வேண்டியதன் அவசியத்தினை இந்த நூல் உணர வைக்கிறது. அநுராதபுரப் படுகொலைகள் நோயல் நடேசன் தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்திலே நம்பிக்கை இழப்பதற்கும் காரணமாக அமைந்தன.

நடேசனின் அனுபவங்கள் தென்னிந்தியா தவிர இலங்கையில் அதிலும் தென்னிலங்கையிலே அவர் வாழ்ந்த காலத்திலே அவர் எதிர்கொண்ட சிங்கள‌ இனவாத நிகழ்ச்சிகள் பற்றியதாகவும் அமைகிறது. வடக்குக் கிழக்குக்கு வெளியிலே வாழும் தமிழர்கள் பற்றி எமது தமிழ்த் தேசியவாத அரசியல் பெரிதாகச் சிந்தித்தது கிடையாது. சர்வதேசத்திடம் எமக்கு நீதி கேட்கும் போது நாம் எமது நீதிக்கான கோரிக்கைக்களுக்கு வலுச் சேர்க்கும் கறிவேப்பிலைகளாகவே நாம் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்கள் எதிர்கொண்ட இனவாதத்தினையும் பல சமயங்களிலே பயன்படுத்தி இருக்கிறோம். வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்டு நாம் முன்வைக்கும் அரசியற் தீர்வுகளினால் வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழருக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்பது பற்றித் தேசியவாதம் பேசும் பெரும்பாலானோர் சிந்திப்பதில்லை. சிங்கள -பௌத்தத் தேசியவாதிகள்  தீவு முழுவதும் தமது சமூகத்துக்கே உரியது என்ற மனநிலையிலே செயற்படுகிறார்கள். தமிழ்த் தேசியவாதிகளிலே பலர் வடக்குக் கிழக்கிலே தமிழ்த் தேசத்துக்கு மாத்திரமே சுயநிர்ணய உரிமை இருக்கிறது எனச் சொல்லுகிறார்கள். இந்த இரண்டு தரப்புக்களுமே வடக்குக் கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரசைகளாக‌ இருப்பதற்கு உரிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படுவதற்குச் சார்பாகவே தமது கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் முன்வைத்து வருகிறார்கள். தனது அடையாளத்தினை மாற்றினால் ஒழியத் தென்னிலங்கையிலே நடேசனுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமையினைச் சிங்களத் தேசியவாதம் உருவாக்குகிறது எனில், வடக்குக் கிழக்கினை மையமாகக் கொண்ட‌ தமிழ்த் தேசியவாதம் தென்னிலங்கையினைச் சிங்கள தேசம் எனச் சொல்லிச் சொல்லியே அந்த நிலைமை நீடிப்பதற்கு வழிசெய்கிறது என்பத‌னை நாம் நினைவில் நிறுத்துவது நல்லது. ஒவ்வொரு பிரதேசத்திலும் சிறுபான்மையாக வாழும் மக்கள் பற்றி எமக்கு இருக்கும் கரிசனையின்மை காரணமாகவே வடக்கிலே இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதனையும் இங்கு மீட்டிப் பார்ப்பது பொருத்தமானது.

ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தவிர, சிலோனினைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்துடன் சென்னையில் நடேசன் எதிர்கொண்ட அனுபவங்களினையும் சுவாரஸ்யமான முறையிலே எக்ஸைல் பதிவிடுகிறது. நடேசனின் நூலிலே தென்னிந்தியாவுக்கும், வட இலங்கைக்கும் இடையில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளிலே இருந்த தொடர்புகள் குறித்தும், அரசுகளின் கண்காணிப்புக்களையும் மீறி மக்கள் வியாபார நிமித்தமும், தொழில் தேடியும் எவ்வாறு இரு இடங்களுக்கும் பயணம் செய்தார்கள் என்பது பற்றியும் விபரணம் மிக்க‌ முறையிலே சொல்லப்பட்டிருக்கிறது. காசியானந்தன் பிரபாகரன் மீது வைத்திருந்த அபரிமிதமான‌ ‘விசுவாசத்தினை’ நடேசன் நகைச்சுவை மிக்க முறையில் கூர்மையாக‌ விமர்சிக்கிறார். ரெலோ இயக்கத்தினர் தம்மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தியாவினைக் கோரிய போதும், அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பினையும் இந்தியா வழங்காமையினைச் சுட்டிக் காட்டும் எழுத்தாளர் அவ்வாறான ஒரு நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிலே சிலர் புலிகளையும் மக்களையும் 2009இல் இந்தியா காப்பாற்றும் என நினைத்தமை ஒரு முரண்நகை என எழுதுகிறார். பிராந்திய வல்லரசு எமது போராட்டத்திலே ஏற்படுத்திய அழிவுகளையும், குழப்பங்களையும் விமர்சிக்க நடேசன் தவறவில்லை.

நடேசனின் அனுபவங்கள் தமிழ்ச் சூழலிலே நினைவுகூரல் செயற்பாடுகள் குறித்து மீளச் சிந்திப்பதற்கும், போரின் வடுக்களை ஒழிப்பு மறைப்பின்றிப் பேசவும் எமக்கு அறிவுறுத்தவனவாக அமைகின்றன. போருக்குப் பிந்தைய இன்றைய காலப் பகுதியிலே தமிழ் மக்கள் எவ்வாறு ஏனைய சமூகங்களுடன் இணைந்து அரசினது இனவாதத்தினையும், புறமொதுக்கும் ஏனைய‌ தேசியவாதங்களையும் முறியடிக்கப் போகிறார்கள் என்பது பற்றிச் சிந்திப்பதற்குத் தூண்டும் ஒரு நூலாக எக்ஸைல் அமைகிறது. தேசியவாதங்களின் புறமொதுக்கும் போக்குகளில் இருந்தும், அரசினாலும் இயக்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட இராணுவ மயமாக்கற் சூழலில் இருந்தும் எம்மை விடுவித்து, நாம் வாழுகின்ற பிரதேசங்களிலும், வேலை செய்கின்ற பிரதேசங்களிலும், எமது அடையாளங்களும் நாமும் கௌரவமான முறையில் நடாத்தப்பட, நாம் எவ்வாறு போராடப் போகிறோம் என்பதனைத் தீர்மானிக்க எமக்குச் சில பாதைகளைக் காட்டக் கூடிய ஒரு நூலாகவே நான் நடேசனின் நூலினைப் பார்க்கிறேன். எமது போராட்டங்கள் எவ்வாறு எதிர்காலத்திலே இருக்க வேண்டும் என்று எந்த விதந்துரைப்பினையும் இந்த நூல் வெளிப்படையாக‌ மேற்கொள்ளாவிடினும், இந்த நூலினை நாம் இன்றைய அரசியற் சூழலிலே எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், அதிலிருந்து நாம் எதனைக் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதிலேயே இந்த நூலின் வரலாற்று வகிபாகம் தங்கியிருக்கும் என நான் நினைக்கிறேன். இவ்வாறான நூல் முயற்சிகள் ஆதிக்கச் சக்திகளினால் மறைக்கப்பட்ட வரலாறுகளை சமூகத்திடம் கொண்டு சென்று சேர்ப்பதுடன், எமது அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான முயற்சிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய மாற்று அரசியற் சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் கூடிய வல்லமை மிக்கனவாகவும் அமைகின்றன.

மகேந்திரன் திருவரங்கன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே ஆங்கிலத் துறை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.

 

https://maatram.org/?p=7495

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.