Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்குத் தேர்தல் வியூகம்: பலமடைய வேண்டிய தாயகம்

Editorial / 2019 ஜனவரி 22 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14 Comments - 0

-இலட்சுமணன் 

பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக அமையப்பெற்ற மாகாண சபை ஆட்சியை, தமிழர் தரப்புக் காத்திரமாகப் பயன்படுத்தியிருந்தால், இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்துக்கு, முற்றுப் புள்ளி வைத்திருக்க முடியும். எடுத்தவுடனேயே எல்லாமும் கிடைத்துவிடுமென்றால் எதுவுமே நிறுத்தப்பட்டதாகத்தான் இருக்கும்.   

2008ஆம் ஆண்டு, தமிழர்களின் பூர்வீக பூமி என்று சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவும் 13இன் ஊடாகவும் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.   

வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நிறைவடைந்து, அச்சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளுகைக்குட்படுத்திய போது, அதன் ஊடாகக் கிழக்கு மாகாண சபை பலமடையும் என்றுதான் எல்லோரும் நம்பினார்கள். ஆனால் நடந்தது வேறுகதை. 

இலங்கை மாகாண அமைப்பு முறையின் கீழ் அமையப்பெற்ற பல மாகாண சபைகள், மக்கள் பிரதிநிதிகளின் திட்டமிடல், வழிகாட்டலின் ஊடாக, கடந்த 25 வருடங்களுக்கு மேலாக, சிறப்பான நிர்வாகக் கட்டமைப்புடனும் நிதி முகாமைத்துவத்துடனும் மத்திய அரசாங்கத்தின் முழு வழிகாட்டலுடனும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் சமுகத் தேவைப்பாடுகளை நிறைவேற்றி, நிர்வகிப்பதற்கான நியதிச்சட்டங்களை உருவாக்கியும் அதன் கீழ் பலஅமைப்புகளையும் சபைகளையும் கூட்டுத்தாபனங்களையும் ஏற்படுத்தி, அரசியல் செல்வாக்குடன் பலமான முறையில் செயற்பட்டு வருகின்றன.   

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக, மக்கள் பிரதிநிதிகளின் திட்டமிடலின்றி செயற்பட்டு வந்தன. இருந்த போதும், வெளிநாடுகளின் நிதிஉதவியுடன், சமூக நலன்கருதிய நல்ல அதிகாரிகளின் திட்டமிடலூடாகவும் நிர்வாகத் திறமை காரணமாகவும் பல திணைக்களங்களின் நிர்வாகங்கள் திறன்படச் செயற்பட்டே வந்தன. இதற்கு எதிர் மாறாகவும் ஒருசில அதிகாரிகள் செயற்பட்டு வந்தார்கள்.   

ஆனால், 13ஆவது திருத்தச்சட்டம் என்ன நோக்கத்துக்காகக் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் முழுமை பெறவில்லை என்ற கசப்பான உண்மையை, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.   

மத்திய அரசாங்கத்தின் உத்தரவின் கீழ், அதிகாரமளிக்கப்பட்ட ஆளுநர் வடக்கு, கிழக்கு நிர்வாகங்களை மத்திய அரசாங்கத்துக்குச் சார்பாகவும், வெளிநாடுகளிலிருந்து பெறுகின்ற நிதியைச் சரியாகச் செயற்படுத்துகின்றோம் என்று வெளி உலகுக்குக் காட்டிக் கொள்வதற்கான போலிப் பிரசாரத்தை மேற்கொண்டும், சில உயர் அதிகாரிகளுக்குப் பதவி ஆசை காட்டி, தமக்குச் சார்பான செயற்பாட்டில் ஈடுபடவைத்ததும் குறிப்பிடத்தக்கதே.   

13வது திருத்தச் சட்டம் தொடர்பாக வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக அமுலாக்குவதற்கோ, மாகாண அமைப்பு முறை தொடர்பான மேலதிக உரிமைகளைப் பெறுவதற்கோ எந்த முயற்சிகளையும் ஆளுநர் மேற்கொண்டிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒருசில உயர் அதிகாரிகளும் இதற்கு உடந்தையாகத் தங்கள் பதவி பறிபோகும் எனும் அச்சத்துடன் செயற்பட்டு வந்தனர் என்றும் கருத்துகள் இருக்கின்றன.   

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகச் செயல்படும் போது, கடந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களைச் சர்வதேச ரீதியாக அதிகாரபலத்துடன் எடுத்துக் கூறுவதற்கு முடியும் என்றே தமிழ்த்தரப்பு நம்புகிறது.   

குறிப்பாக, வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பான செயற்பாட்டை வீரியத்துடன் முன்னெடுக்க முடியும். 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கலுக்கான குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யவதோடு தேவையான உரிமைகளைப் பெறுவதற்கு மத்திய அரசுடன் பேரம் பேச முடியும் என்ற நம்பிக்கை வட மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய போது இருந்தது என்பது உண்மையே.   

சர்வதேச ரிதீயாக நிதிகளைப் பெறுவதற்கும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அதிகாரப் பலமிக்க ஆளும்தரப்பாக செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள முடியும். இவ்வாறான பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் நம்பப்பட்டது.   

ஆனால், வடக்கு மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களுடன் வென்றதையடுத்து, கிழக்கு மாகாண மக்கள் பங்காளியாக மாறும் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாக தவிடு பொடியானது. அந்த மாகாண சபையையே சரியான முறையில் நடத்தமுடியாமல் போனது என்ற விமர்சனம் வெளிப்படை.   

இந்த நேரத்தில் தான் வேறு ஒரு பார்வையை தமிழர்கள் மாற்றியாகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளால் கை காட்டி அடையாளப்படுத்தப்பட்ட கட்சி என்ற வகையில், அதில் தற்போது இருக்கின்றவர்கள் ஒவ்வொரு கருத்தை அதற்கெதிராகவும் வெளியிடுகிறார்கள். என்றாலும் அதனையும் தாண்டிய மனோநிலையில் தமிழ் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது, இணைந்திருந்த கட்சிகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய இரண்டும் இப்போதில்லை. இடையில் புளொட் இணைந்து கொண்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்து ஒரு நிலைப்பாட்டையும் கிழக்கில் ஒரு நிலைப்பாட்டையும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையிலேயே இருக்கிறது.   

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைத் தலைமையாகக் கொண்டுள்ள அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸை அடியாகக் கொண்டியங்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சர்வதேசம் ஒன்றே தீர்வுக்கு வழி என்று சொல்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வி.ஆனந்தசங்கரி இன்னொரு புறமிருக்கிறார்.   

கிழக்கைப் பொறுத்தவரையில் பொதுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பலதும் பத்துமாகக் கட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் கிழக்குத் தமிழ்க் கூட்டமைப்பைத் தோற்றுவிக்க முயன்ற கிழக்குத் தமிழர் ஒன்றியம் இப்போது வெறும் அமுக்கக் குழுவாகவே இயங்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது.   

இருந்தாலும் தேர்தல் வருகையில் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிழக்கின் முதலாவது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதொரு நிலைப்பாட்டிலேயே இருக்கிறது.   

விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதி, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றன.   

இவ்வாறான அரசியல் சூழலில், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் நிலைமை எவ்வாறிருக்கும் என்று கொஞ்சமும் யோசித்துப்பார்க்க முடியவில்லை, என்பதைத்தான் பலரும் கருத்துச் சொல்கிறார்கள். தேர்தல் என்றாலே, வெற்றி தோல்வி என்கிற போட்டிதான். ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அதனைச் சற்று மாற்றியமைத்திருந்தது.

அதாவது, வென்றவர்களின் வாக்குகளின் அடிப்படையில் ஏனையவர்களுக்கும் உறுப்புரிமை வழங்கியது. ஆனால், அந்த ஜனநாயகம் மாகாணசபைத் தேர்தலில் எதனைச் செய்யும் என்பது தெரியாமலேயே உள்ளது.   

இந்த இடத்தில்தான் தமிழர்களின் இருப்பும், தேசியமும் கிழக்கில்? என்ற கேள்விக்குப் பதில் தேட முயல வேண்டும். 

கிழக்கில் இரண்டாவது மாகாண சபை அமைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து, நஜீப் அப்துல் மஜித் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றம் தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்துக்கும்  உதாரணமான ஓர் அரசாங்கம் அமைக்கப்பட்டது.   

இது வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்ததும் கூட. ஆட்சியமைப்பின் போது, பெரும்பான்மையான ஆசனங்களை வைத்துக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தம்முடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சையும் இரண்டு அமைச்சையும் கொடுத்துவிட்டு, தாம் இரண்டு அமைச்சுகளை எடுத்துக்கொண்டது.   

தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழ் அரசியல் தரப்புகளின் உள்ளேயும் இது பெரும் உளைச்சலையும் கோபத்தையும் வெறுப்பையும் என்று பலவற்றையும் ஏற்படுத்தியது; விமர்சனங்களை அள்ளி வீசியது.   

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு முழுமையாக விளக்கமளிக்க முயலவேயில்லை. அவ்வாறு முதலமைச்சைக் கொடுத்ததற்கு மாகாண சபையின் அரைக் காலத்தை வைத்துக் கொண்டு எதனைச் சாதிக்கலாம் என்பது தவிர வேறும் பல காரணங்கள் இருக்கலாம்.   

வடக்கில் ஆளும் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கிலும் ஆளும் தரப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற நிலைப்பாடு இருந்தது. முன்பு சொன்னது போல, வடக்குப்போல அல்லாமல் கிழக்கில் எதனையேனும் நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் தரப்பினது ஆதரவு கட்டாயம் என்ற நிலைமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இவ்வாறிருக்கையில், கடந்த மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனையும் பெரிதாகச் செய்துவிடவில்லை.   

இருந்தாலும் நடக்கவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தல், சற்று வித்தியாசமான முடிவுகளையே ஏற்படுத்தும் என்று நம்புவோம். ஆளும் தரப்பாகத் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அப்பால், விமர்சனங்கள் இதனைச் செய்து கொடுப்பதற்கான பிரசாரங்களை மேற்கொள்ளும். அவ்வேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய முஸ்லிம் தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணைந்து ஒத்துழைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புடன் செயற்படும்.   

 அதனைத் தவிர்க்கவும் முடியாது என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் கை கோர்ப்பது முஸ்ஸிம் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கப் போவதில்லை என்ற கருதுப்பட உருவாகும் அலைக்குப் பலம் இருக்குமா என்பது சந்தேகம் தான்.   

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், எதிர்காலத்தில் ஏன் இணைந்து இயங்கக்கூடாது என்ற கேள்விக்கான பதிலும் இதிலிருந்தே கிடைக்கவும் கூடும்.   

தேசியம் என்பது ஒவ்வொரு கட்சிக்கும் வேறுபட்டதல்ல. அது அவர்களது இனம் சார்ந்து பார்க்கையில் ஒன்றாகவே இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அனைத்துக்குமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. முன்நகர்ந்தும் வருகின்றன. முடிவை மக்கள் தான் எடுப்பார்கள்.  

எல்லோரும் நினைக்கின்றது போல, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அல்லது கைகோர்த்துச் செயற்படாது என்ற நிலைப்பாட்டிலேயே மாற்றம் ஏற்படும் என்றால், தமிழர் தரப்பு சிந்தித்தே செயற்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தலை அதற்குத் துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொள்வோமா?     

காலத்தின் தேவை, அரசியல் வேலை

தராகி டி. சிவராம், 2004ஆம் ஆண்டு எழுதிய ‘காலத்தின் தேவை, அரசியல் வேலை’ என்ற கட்டுரையின் ஒரு சில வசனங்கள், இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக அமைகின்றன.   

‘தமிழ்ச் சமூகத்தை, அதனுள் இயல்பாகக் காணப்படும் முரண்பாடுகளை கூர்மை அடையச் செய்வதன் மூலம், அடக்கி ஆளலாம் என, நவீன சிங்களப் பேரினவாதிகள் நம்புகின்றார்கள். தமிழ் மக்களைப் பட்டி தொட்டியெங்கும் இன்று அரசியல் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எம்முன் உள்ள மாபெரும் வரலாற்றுக் கடமையாகும். பிரித்தாளும் தந்திரோபாயங்களின் ஊடாக, எம்மை வென்று விடலாம் எனச் சிங்களப் பேரினவாதிகள் எதிர்பார்க்கின்றனர்.   

தமிழீழச் சமூகம் என்ற மேற்பரப்பை, நாம் சற்று சுரண்டிப்பார்த்தால் அதன் கீழ் பிரதேசவாதம், மதம், சாதி, வட்டாரவழக்கு உரசல்கள், ஊர்களுக்கு இடையிலான அடிபிடிகள் எனப்பலவற்றைக் காணலாம். ஆனால், சிங்களப் பேரினவாதம் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச் செய்து, தமிழர் தாயகம் அனைத்தும் சிங்களப் பௌத்தத்தின் வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இடங்கள் என்ற கருத்தை நிலைநாட்ட, அயராது உழைத்து வருகிறது’ என்பதாக அக்கட்டுரை நகர்ந்து செல்கின்றது.  

வெளிநாடொன்றிலுள்ள நண்பர் ஒருவருடன் உரையாடுகையில், “கிழக்கில் தமிழ்த் தேசியம் என்று பார்த்தால், முதலில் முஸ்லிம் எதிர்ப்பு, வடக்கு, கிழக்கு பிரதேசவாதம், அதன் பின்னர்தான் தமிழ்த் தேசியம் இருப்பதைக் காண்கிறோம்” என்றார். 

வெளிநாடுகளில் இருந்து தமிழர்களின் போராட்டத்தைத் தொடர்வதற்காக கோடி கோடியாகப் பணம் வந்துகொண்டிருந்த வேளை, தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஒருமைப்பாடு கூட, இன்று இல்லாமல் போய் இருக்கிறது; போய்க் கொண்டிருக்கிறது.   

 ஒரு சில குறிப்பிட்ட அரசியல்வாதிகள் ‘அபிவிருத்தி மட்டும்’ என்ற போக்கிலும், இன்னும் சில அரசியல்வாதிகள் ‘அரசியல் உரிமை’ ஒன்றே முதலில் தேவை என்று கொண்டும் பயணிக்கிறார்கள். இவர்கள் இரண்டு பகுதியினரையும் முரண்பட்ட இரண்டு குதிரைகளை ஒரு வண்டிலில் பூட்டி பயணிக்க விடுவதுபோல், இலங்கை அரசாங்கமும் பேரினவாத பௌத்த அமைப்புகளும் பயணிக்க விட்டு வேடிக்கை பார்க்கின்றன. ‘ஓடுகிற வண்டி ஓட, ஒற்றுமையா இரண்டு மாடு, ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்தால் என்னவாகும் எண்ணிப்பாரு’ என்ற பாடல் வரிகளையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியது பொருத்தமாக அமையும்.   

அஹிம்சை, ஆயுதம், இராஜதந்திரம் என்று உணர்ச்சிப் பேச்சுகளுடன் தமிழ் மக்களை வழி நடத்தும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள், இந்த நிலைமை தொடர்ந்தால், இடப்பெயர்ச்சி என்பதே இல்லாமல் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டிய கதையாகத்தான் இருக்கும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-கிழக்குத்-தேர்தல்-வியூகம்-பலமடைய-வேண்டிய-தாயகம்/91-228360

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.