Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை?

on May 3, 2019

 

la-1556294649-kjyfuaddls-snap-image.jpg

 

பட மூலம், Lakruwan Wanniarachchi Photo, Los Angeles Times

எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். முஸ்லிம் பெண்ணான அவளைக் கடந்த உயிர்த்த ஞாயிறிலிருந்து வீட்டுப்பக்கம் காணவில்லை. என்னவென்று விசாரிக்க மாயா சொன்ன பதில், “அய்யோ! சரியான பாவம். போன ஞாயிற்றுக் கிழமையில இருந்து அவ வீட்ட விட்டு வெளியிலயே வரல்ல. நான்தான் போய் பார்த்துட்டு வந்தன். நல்லா பயந்து போய் இருக்கிறா. அவவுக்கு அபாயா இல்லாம வெளிய வர பழக்கமில்லதானே. உடுத்தாத மாதிரி இருக்கும் என்டு வராம இருக்கா. உடுத்துட்டு வந்தா இப்ப பிரச்சினையா இருக்குமோ என்டு பயந்து போய் வீட்டு உள்ளுக்கேயே இருக்கா. சரியான கவலையா இருந்திச்சு.” நானும் சல்வார், கமீஸ் உடுத்து தலையை மூடும் ஒரு முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில், அந்த அச்ச உணர்வை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

உயிர்த்த ஞாயிற்றுக் கொண்டாட்டத்தில் உயிர்ப்பலியெடுத்த பயங்கரவாதத்தின் அதிர்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ‘அர்ரஹீம்’- ‘நிகரற்ற அன்புடையோனின்’ பெயரில் என்று எந்தவொரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முஸ்லிமாக இருப்பதற்கும், அன்பேயற்று கொடூரக் கொலைகளை இஸ்லாத்தின் பெயரில் புரிவதற்கும் எப்படிப் பார்த்தாலும் தொடர்பே இல்லையே என்ற குழப்பம் எனக்குள்.

அப்பாவி மக்களின் இழப்பொரு புறம், சந்தர்ப்பம் பார்த்து அரசியல் ஆதாயம் பார்க்கும் கேடுகெட்ட கூட்டமொரு புறம், உயிரைப் பணயம் வைத்து பாதுகாப்பு கடமைக்காக செயலாற்றும் படையினர் ஒருபுறம், இனவாதம் தூண்டும் ஊடகமொரு புறம், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற தவிப்பு ஒருபுறம்.. மனிதத்தின் மீதும், அன்பின் பகிர்விலும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒரு முஸ்லிம் பெண் சமூக செயற்பாட்டாளரான நான் இயக்கமே இல்லாமல் கிடக்கிறேன்.

பெரும் அனர்த்தத்தின் பின்னரான மூன்றாவது நாளில் நான் பெரும் வயிற்று உபாதை காரணமாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. எனது வாகனத்தில் மறக்காமல் பெயரையும், தொலைபேசி இலக்கத்தையும் எழுதி ஒட்டியிருந்தேன். வழமையாக முஸ்லிம் அடையாளங்களுடனான நபர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனையில் நான் அறிய என்னைத் தவிர முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்படக் கூடியதாக யாருமிருக்கவில்லை. வந்திருந்த அனைவரது பார்வையும் என்னை துளைத்தெடுத்ததனை அவதானித்தேன். எனது தலையில் இருக்கும் முக்காடு எத்தனை தூரம் பயத்தைத் தோற்றுவிக்கிறது என்பதனை ஒருபுறம் உணர்ந்தாலும், மறுபுறம் எதிர்வினையாக எனக்கேதும் ஆகிவிடுமோ என்ற அச்சமும் என்னுள் எழாமல் இருக்கவில்லை. மருத்துவமனையின் கழிப்பறைக்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். எனக்குள் எழுந்த பதற்றத்தினைத் தணித்து நான் நிதானிக்க வேண்டியிருந்தது. அன்று வீடுவந்து சேரும் வரையும் பயந்தபடியே வந்தேன். மாயாவின் தோழி மட்டுமில்லை, நானும், எனக்குத் தெரிந்த தலைமூடுகின்ற, அபாயா உடுக்கின்ற, புர்கா (முகத்திரை) அணிகின்ற பெண்கள் இன்னும் வீட்டுக்குள் முடங்கித்தான் கிடக்கிறார்கள். ஒரு சிலர் பெரும் பயத்துடன் வெளியில் சென்று வருகின்றனர். பலவித சம்பவங்களுக்கும் முகம் கொடுத்து உடல்ரீதியான தாக்குதல் இன்றி வீடு திரும்பியிருக்கின்றனர்.

முஸ்லிம் பெண்களாகிய எங்களுக்கு இது பல கோணங்களிலிருந்து துன்பம் தருவதாக இருக்கின்றது என்பதனை நாங்கள் உரையாடிக் கொண்டோம். நாட்டில் எப்போது என்ன நடக்குமோ, எந்த இடத்தில் பயங்கரவாதம் என்னையும், என் பிள்ளையையும் பலியெடுக்குமோ என்ற பயம் அனைவரையும் போல் எங்களுக்குமுண்டு. சகவாழ்வின் மீது நம்பிக்கை கொண்டு பன்மைத்துவத்தை கொண்டாடி வாழும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் எழும் பெருங்கோபமும், ஆற்றாமையும் அதற்கும் மேலாய் முஸ்லிம்களாக இத்தருணத்திலே வாழ்வதன் அச்ச உணர்வும், எங்களுக்குமுண்டு. இவை எல்லாவற்றுககும் மேலாய் முஸ்லிம்களாக அடையாளப்படுத்தல்களுடன் முஸ்லிம் பெண்களாக நாங்கள் வாழ்தல் பெரும் பயங்கரத்தையும், அச்சத்தையும் எங்களுக்குள் விதைத்திருக்கிறது.

மனதை ரணமாக்கி வைத்திருக்கும் உயிர்த்த ஞாயிறுவும், அதற்குப் பின்னரான விடயங்கள், நாம் எவ்வாறு இனி முன்நகர்வது, தேசிய பாதுகாப்பு என்பது பற்றியும் பலரும் எழுதியும், கதைத்தும் வரும் நிலையில் முஸ்லிம் பெண்களது முகத்திரை தடை செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு குரல் எழுந்தது. இன்று அது தடை செய்யப்பட்டுமாயிற்று. ஒவ்வொரு இழப்பின் செய்தியும் வலிகளைத் தருகின்றபோதும், வலிகளைப் பகிர பலர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு, இக்கட்டுரையை அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எனது ஆடைத் தெரிவினையையும், எனதும் என் போன்றதுமான சகோதரிகளினதும் அச்சத்தினதும் வெளிப்பாடாக புர்காவைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.

நான் சக மனிதர்களை ஒடுக்குமுறை செய்யாமலிருக்க வேண்டும் என்றும், வன்முறையற்றும் வாழ வேண்டும் என்றும் கொள்கை ரீதியாக வாழும் ஒரு முஸ்லிம் பெண். அமைதியான முறையில் எந்தவொரு தனிநபரும் எந்தவொரு சமயத்தையும், கலாசாரத்தையும், அதன் அடையாளங்களையும் பிறிதொருவரையும் துன்புறுத்தாது பின்பற்றவோ அல்லது பின்பற்றாதிருக்கவோ அனைவருக்கும் உரிமையுண்டு என ஆழமாக நம்புகிறவள்.

பெண்களது உடலும், ஆடையும் எப்போதும் பெரும் அரசியல் சார்ந்ததாகவே இருக்கின்றன. அரசும், சமுதாயமும், சமய ஸ்தாபனங்களும், குடும்பமும் எப்போதும் பெண்களின் ஆடைகள் குறித்த தீர்மானங்களை எடுப்பவர்களாகவும், கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இதில் முஸ்லிம் பெண்கள், முஸ்லிமல்லாத பெண்கள் என்ற வேறுபாடு கிடையாது. பாடசாலைக்கு கட்டாயம் சேலை அணிந்துதான் வரவேண்டும், அபாயா அணிந்துதான் வரவேண்டும், (முஸ்லிம் பாடசாலை) அபாயா அணிந்து வரக்கூடாது (முஸ்லிமல்லாத பாடசாலை), கோயிலுக்குள் செல்வது முதல் அரச நிறுவனங்களுக்குச் செல்வது வரை பெண்களது ஆடை பெரும் அரசியலாகவே இருந்து வந்திருக்கின்றது.

எந்தளவுக்கு மூடி மறைக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு முஸ்லிம் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதனைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத அளவுக்கு இனவெறுப்பு வேரூன்றிக் கிடக்கிறது. இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய அடிப்படை விடயம் ஒரு பெண் எந்தளவு திறந்து  ஆடை அணிகிறாள் அல்லது மூடி மறைக்கிறாள் என்பதற்கும், அந்தப் பெண்ணின் எந்தளவு தூரம் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டிருக்கிறாள் அல்லது ஒடுக்குமுறைக்கு எதிராக பணியாற்றுகிறாள் என்பதற்கும் முடிச்சுப் போட முடியாது என்பதுதான்.

இனி புர்கா அரசியலுக்கு வருவோம். புர்காவிற்கும் பயங்கரவாதத்திற்கும் என்ன தொடர்பு? புர்கா என்பது உச்சிமுதல் உள்ளங்கால் வரை மறைக்கும் ஒருவித ஆடையைக் குறிப்பிடுகின்றது. முகத்தை மறைப்பது நிகாப் எனப்படும் முகத்திரையாகும். இலங்கையின் பிரச்சினை நிகாப் என்னும் முகம் மறைத்தல் பற்றியது. எனினும், இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் புர்கா என்ற பெயரிலேயே பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டு வருவதனால் நான் அந்த பதத்தினையே முகத்தை மறைத்தல் என்பதாக இந்தக் கட்டுரையில் பாவிக்கிறேன். முகத்தை மறைத்தல் என்கையில் முற்றாக முகத்தை மறைப்பதாகவோ அல்லது கண்கள் மட்டும் தெரியும் வகையிலோ சில முஸ்லிம் பெண்களால் அணியப்படுவதாக இருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்கள் உள்ளடங்கலாக, பல இலங்கையருக்கு இது இலங்கையில் ஏன் அணியப்பட வேண்டும் என்ற கேள்வியும், எரிச்சலும், எழுவதுண்டு. இதற்கு சில முஸ்லிம்களும் இது எமது கலாசாரமல்ல, இது அராபிய கலாசாரம் என்று கடுப்புடன் பதிலளிப்பதையும் கேட்டிருக்கிறேன். எது எமது கலாசாரம்?

புழுங்கித் தள்ளும் வேளையிலும் கழுத்துப்பட்டி முதற் கொண்டு, நீளமான காற்சட்டை, சப்பாத்து, காலணி என்று எமது காலநிலைக்கு ஒவ்வாத காலனித்துவ சிந்தனையின் கீழான மேற்கத்தேய கலாசார ஆடையினை இன்னும் ஏன் காவிக் கொண்டு அலைகிறோம் என்ற கேள்வியோ, கையில் மெஹெந்தி (மருதாணி) போட்டு பாடி, ஆடி இந்திய வடக்கத்திய கலாசாரம் போல் இடம்பெறும் திருமண சடங்குகள் முதற் கொண்டு தெய்வங்கள், பூசை புனருத்தானங்கள் உட்பட பற்பல வட இந்திய செல்வாக்கினைக் கொண்டு கிராமத்திய வழக்காற்று கோயில்கள் எல்லாம் ஆகம கோயில்களாகி மாறி வருகின்ற  கலாசாரத்தினையோ, ஒவ்வொரு அரசமரத்தின் கீழும் கட்டாயம் புத்த பகவான் இருத்தல் வேண்டும், பௌத்தர்கள் முன்னர் போய (பௌர்ணமி) நாளன்று மட்டும் போவார்கள், ஆனால் இப்போது அடிக்கடி போவதனை சடங்காக்கி கலாசாரமாக்கி இருக்கின்றனர் என்பது பற்றியோ, கடந்த காலத்தில் கிறிஸ்தவர்களுக்குள் இத்தனை விதமான பிரிவினையும், இத்தனை விதமான ஆலயங்களும் இருக்கவில்லையே என்பது பற்றியோ, பறங்கி இன பெண்களது கலாச்சாரத்திலேயே இல்லாத சேலையை அணிந்துதான் அவ்வின பெண்கள் வேலைக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும் கலாசாரத்தையோ, இந்தத் தேசத்தின் பூர்வீகக் குடிகள் காலாகாலமாக பின்பற்றி வந்த கலாசாரங்ளை எல்லாம் குழிதோண்டிப் புதைத்து பலாப்பழம் பறிப்பதற்குக் கூட உரிமையற்றவர்களாய் அவர்களை ஆக்கி வைத்திருக்கும் கலாசாரத்தையோ கண்டுகொள்ளாத நாம் எந்தக் கலாசாரத்தைப் பற்றிப் பேசுகிறோம் என்பது எனக்குள் இருக்கும் கேள்வி.

மேற்கத்தேய, தென் இந்திய, வட இந்திய ஆடைக் கலாசாரங்களை கேள்வியேயின்றி பின்பற்றும் நாம், மத்திய கிழக்கு கலாசாரத்தினை ஏன்  பின்பற்ற வேண்டும் என்று கொதித்துப் போய்க் கேட்பதுதான் ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. பிறிதொருவருக்கு தீங்கிழையா வண்ணம் ஒரு தனிநபர் எந்தக் கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டும் அல்லது  பின்பற்றக் கூடாது என்பது அவரவர் தெரிவு என்பதுடன் இதில் உயர்ந்தது, தாழ்ந்தது எதுவும் இல்லை என்பது என் கருத்து (குறிப்பு: எது கலாசாரம், எது பண்பாடு என்ற புரிதலற்றிருந்தால் – காலத்துக்குக் காலம் அனைத்து கலாசாரங்களும் (ஆடை மட்டுமல்ல, அனைத்து அன்றாட விடயங்களும்) உலகில் எவ்வாறு மாறுபட்டுக் கொண்டே வருகின்றது என்று தயவு செய்து தேடிப் பார்த்துக் கொள்ளவும்).

இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லிம் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதனால் (அதாவது தலையிலும், முகத்திலும் ஒரு துணித்துண்டு இருப்பதனால்) அவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள் (முஸ்லிம் பெண்கள் எங்களுக்கெல்லாம் குரலில்லை பாருங்கள்!) என்ற பரப்புரையினால் பயங்கரவாதத்திற்கும், புர்காவிற்கும் எப்போதோ முடிச்சுப் போட்டுவிட்டார்கள். அதன் தொடர்ச்சிதான் தற்போது இங்கு ஆரம்பமாகியுள்ளது எனலாம்.

இதுவரை வந்த தகவல்களின்படி, இலங்கையின் இந்த துயர் மிகு நாட்களின் பயங்கரவாதத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் மிலேச்சத்தனமானவர்கள். அனைவரும் தமது அடையாளங்களை தெளிவாக காட்டியபடியே படுகொலைகளைப் புரிகின்றனர். மிகவும் நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட தாடியுடன் சிலரும், தாடி இல்லாமல் சீர் செய்யப்பட்ட மீசையுடன் சிலரும், மிகவும் நவீனமாக டீ சேர்ட், டெனிம் காற்சட்டை, பேஸ்பால் தொப்பி, விளையாட்டுக் காலணிகள் போட்டு மிகவும் ‘நவ நாகரிகமாகவே’ வந்து இரத்தப்பலி எடுக்கிறார்கள். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என அவர்களது மனைவிகளாகவும், குடும்பத்தினராகவும் அடையாளங் காணப்பட்டு வெளியிடப்பட்ட படங்கள்  ஒன்றிலும் கூட எந்தவொரு பெண்ணும் முகத்திரையினை அணிந்து கொண்டிருந்ததாகக் காணவில்லை. இச்சந்தர்ப்பத்தில் ஏன் திடீரென்று புர்காவினைத் தடை செய்யக் கோரப்பட்டது, ஏன் புர்கா தடை செய்யப்பட்டது என்பதுதான் இங்குள்ள கேள்வி. இதனை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்தல் (புடவைத் தலைப்பை எடுத்து தலையை மூடுவது) என்பது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பின்னர் அபாயாக்கள் (தோளிலிருந்து கால்வரைக்குமான நீண்ட ஆடை) புழக்கத்திற்கு வந்துவிட்டன. திறந்த பொருளாதாரமும், வீட்டுப் பணிப்பெண்களாக சென்ற பெண்களின் மீள்வருகையும் இந்த அபாயாக்களை அறிமுகம் செய்ததாக பலரும் குறிப்பிடுவர். துபாய் நாட்டில் நாகரிகம் எதுவாக வளர ஆரம்பித்ததோ அதிலிருந்து பல வர்ணங்களிலிருந்த அபாயாக்களும் கறுப்பாக மட்டும் அசுர வளர்ச்சி கண்டன (இதற்குப் பின்னால் ஒரே கறுப்பினை அணிவதனால் பொருளாதார சுமையிலிருந்தான விடுதலை உட்பட பல நியாயங்கள் பெண்களுக்கிருந்தாலும், காலப்போக்கில் தங்கத்தின் விலையை விடவும் கூடுதலான விலைக்கு இந்த கறுப்பு அபாயாக்களும் விற்பனையாகத் தொடங்கியமை வேறு கிளைக்கதை). ஆனாலும் திடுதிப்பென மார்க்கத்தின் மறுமலர்ச்சி என்ற பெயரில் வெவ்வேறு ‘உலமாக்கள்’ முகத்தை மூடுவதனை ‘வாஜிப்’ என்றும், முகத்தைக் காட்டும் பெண்கள் பெரும் பாவிகள் என்பதாக ‘பயான்களை’ (உபதேசம்) அள்ளிவிட்டதன் காரணமாக (பல இடங்களில்) இதை திணிப்பாகவும், சில இடங்களில் கலாசாரமாகவும், சில இடங்களில் மார்க்கப் பற்றாகவும், சில இடங்களில் தற்றுணிவிலும் (அது கட்டுப்பாடான முஸ்லிம் கிராமங்களில் பெண்களுக்கு நடமாடும் சுதந்திரத்தை கூடுதலாக  வழங்கியமையால்), பெண்கள் இந்த புர்கா (பொதுவில் புர்கா என்று சொல்லப்படுகின்றதாயினும், சரியான பதம் நிகாப்) எனும் முகத்திரையினை அணிய ஆரம்பித்தனர். அரசல் புரசலாக இருந்த இந்த புர்காவிற்கு அதிகார, மார்க்க அஸ்திவாரம் கொடுத்து வலுச் சேர்த்த முக்கிய சூத்திரதாரி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா.  பெண்களின் ஆடைகள் பற்றி விதம்விதமாக வகுப்பெடுத்த இந்த உலமா சபை புர்கா அணிவது வாஜிப் (கட்டாய கடமை) என்றும் பத்வாவும் (மார்க்கத் தீர்ப்பு) கொடுத்திருந்தது.

2012, அதற்குப் பின்னரான காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதம், இஸ்லாமிய வெறுப்பு என்பவற்றிற்கு அரசாங்கம் எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தது என்பது எமக்குத் தெரியும். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறை செய்யப்பட்டபோது, அப்போதும் பாதிப்பு முஸ்லிம் பெண்களுக்கே இருந்தது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, ஏனையவர்களுக்கு பார்ப்பதற்குத் தொந்தரவாக  இருப்பதனால்  முஸ்லிம் பெண்களை கறுப்பு ஆடை அணியாமல் நிறங்களிலான ஆடைகளை அணியும்படி கேட்டுக் கொண்டது. இதற்கென உடனடியாக பலவர்ணங்களில் அபாயாக்களும், துணிகளும் இறக்குமதி செய்யப்பட்டன.

சில வருடங்களுக்கு முன்னர் முகத்திரை அணிவது மார்க்கத்தில் கட்டாயமானது என்ற பத்வாவினை (மார்க்கத் தீர்ப்பு) வழங்கி ‘நல்ல’ முஸ்லிம் பெண்களுக்கான அடையாளமாக அதனை பரப்பியது இந்த ஜம்மியத்துல் உலமாதான். மீண்டும் மீண்டும் உலமாக்கள் அதனை மார்க்கக் கடமையாக சித்தரிக்க குறித்த உலமா சபையினரின் சிந்தனைப் பிரிவினைப் பின்பற்றும் கூட்டத்தினர் தமது குடும்பத்துப் பெண்களுக்கு புர்காவினை அணிவிப்பதனை சம்பிரதாயமாக்கிக் கொண்டனர் (இங்கு முகத்திற்கு அணிந்த புர்காவினை ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையோடு, அன்போடு சகவாழ்வு வாழ்வதற்கும் சேர்த்து அணிந்து கொண்டதனால் தனித்த சமூகமாக இவர்கள் வாழத் தலைப்பட்டதனால்தான் பிரச்சினை வந்தது என்பதனை இன்னமும் உணர்ந்த பாடில்லை, நிற்க).

இங்கு மிகவும் முக்கியமாக கருத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயம் இந்த முகம் மூடுதலுக்கு முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மைக்கும் அதிகமானோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தமையாகும் (இப்பொழுதும் இந்த புர்காவினைத் தடை செய்தமையை பெரும் நல்லதொரு விடயமாக அநேக முஸ்லிம்களும் ஆதரவளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு பிறகு வருவோம்). இவையெல்லாம் நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில் மார்க்கத்தில் முகம் மூடுதல் கட்டாயமில்லை, விரும்பினால் அணியலாம், அதிலும் முஸ்லிம்களுக்கு எதிராக இன வன்முறை, எதிர்ப்பு காணப்படுகையில் பல்லின சமூகத்தில் சிறுபான்மைகளாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முகம் மூடுதலை தவிர்த்தல் நலம் அல்லது அது தேவையே இல்லை என வாதிட்ட முஸ்லிம் உலமாக்களை, குறுகிய மார்க்கப் பிரிவினைகளுக்குள் தள்ளி, தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி அந்நிய சக்கிகளாகச் சித்தரித்து, பகிரங்கமாக அவமானப்படுத்தியது இந்த ஜம்மியத்துல் உலமா சபை.

புர்கா இன்றோ, என்றோ, எங்குமே பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு ஆடையாக இருக்க முடியாது என்று கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் (11.03.2016) வீர வசனம் பேசிய அதே உலமா சபையின் தலைவர் இன்று, நிலவரம் கலவரமாக மாற எரியும் நெருப்பில் பெற்றோல் ஊற்றி வளர்த்தெடுத்த அதே புர்காவினை அரசாங்கம் தடைசெய்ய முன்னரே தவிர்த்துக் கொள்ளும்படி கூறியதுடன், பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து எதுவித மறுப்பும் இன்றி முற்றாகத் தடை செய்தும் விட்டார் (அவசரகால நிலைமையின் கீழ் தற்காலிகத் தடை என்றால் என்ன என்பது போர்க்கால வரலாற்றை அறிந்த மக்களுக்கு நன்கு தெரியும். அதற்குள் அதே உலமா சபையின் இன்னுமொரு மார்க்க ‘அறிஞர்’, ‘ நான்கு நாட்களுக்கு முன்னரேயே புர்கா அணிய வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்து விட்டோம். எங்களது பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று ஜனாதிபதி எங்களுக்குச் சொல்லத் தேவையில்லை’  என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்). முஸ்லிம் பெண்கள் மார்க்க ரீதியாக என்ன ஆடையை அணிய வேண்டும், அணியக் கூடாது? என்ன நிறத்தில் அணிய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை ஜம்மியத்துல் உலமாவுக்கு வழங்கியது யார்? மார்க்க ரீதியாக அது கடமை என பெண்களை நம்ப வைத்து அணிய வைத்ததன் பின், எனது மார்க்க உரிமையாக நான் புர்காவினை அணிவதனை ஜம்மியத்துல் உலமா எப்படித் தடை செய்ய முடியும்?

முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக தம்மைக் காட்டிக் கொள்ளும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தமது இரட்டை வேடமும், போலித்தனத்தையும் பல சந்தர்ப்பங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது (கிளைக்கதை: இலங்கையில் முஸ்லிம்களுக்கான முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினைத் திருத்த வேண்டும், திருமணத்துக்கான வயதெல்லையினைக் கூட்ட வேண்டும் என பாதிப்புக்குள்ளான சிறுமிகளும், பெண்களும் கோரி நிற்கையில், 12 வயது சிறுமிக்கும் திருமணம் முடித்து கொடுக்க முடியும் என்று நீதியமைச்சிடம் அறிக்கை சமர்ப்பித்த இந்த உலமா சபை, பயங்கரவாதம் வெடித்தவுடன் திடீரென்று ‘நாங்கள் பொதுச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் என்று திரும்பத் திரும்ப மீடியாவுக்கு முன் அழுத்திச் சொல்கிறது).

உண்மையில் பாதுகாப்புக்காகத்தான் புர்கா தடை செய்யப்பட்டதா?

இதுவரை துரதிஸ்டவசமாக உலகில் பல்வேறு இடங்களிலும் ஆயிரமாயிரம் பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பல உயிர்களைக் காவு கொண்டிருக்கின்றன. ஆனாலும், அவற்றில் யேமனில் ஒரு ஆண் புர்கா அணிந்து ஆயுதங்களை வைத்திருந்தான் என்ற ஒரேயொரு சம்பவத்தினைத் தவிர ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆண்கள் வெளிப்படையாகவே தாக்குதல் நடத்தியிருந்தனர். இலங்கை வரலாற்றிலும் ‘புலிப் பயங்கரவாதம்’ என்பதில் போராளிப் பெண்களாக முன்வந்த தற்கொலைக் குண்டுதாரிகள் உட்பட புர்கா எனும் முகத்திரை அணிந்திருக்கவில்லை. இந்தத் தருணத்தில் நமது நாட்டில் பயங்கரவாதம் எனும்போது பாதுகாப்புக் காரணத்துக்காக என்று உரிய ஆதாரங்கள் இன்றி உடனே புர்காவினைத் தடை செய்வது ஏன் என்ற கேள்விக்கான பதில் அவசியமாகும்.

பொது இடத்தில் முகத்திரை அணிவது தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. 2016ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் கடற்கரையில் குளிப்பதற்கு முஸ்லிம் பெண்கள் ‘புர்கினி’ என்ற முகத்தைத் தவிர முழு உடலும் மறைத்த ஆடையினை உடுத்தபோது அதற்கெதிராக பிரான்ஸ் அரசாங்கம் புர்கினி அணிந்து கடலில் குளிக்க முடியாது என்று தடைவிதித்தது. இதன் போது பிரான்ஸ் பெண்களும், ஏனைய பெண்களும் ஆடை பற்றிய ஒடுக்குமுறைக்கு எதிராக முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக புர்கினியை உடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பெண் உடல்களை, பெண் ஆடைகளை அரசியலாக்க வேண்டாம் என்பது இவர்களின் கோரிக்கையாக இருந்தது. இங்குள்ள விடயம் எவ்வாறு குறித்த இனத்தின் மீதான எதிர்ப்பும், காழ்ப்புணர்ச்சியும் படிப்படியாக செயற்படுத்தப்படுகின்றது என்பதாகும்.

இலங்கை நிலவரத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த மூன்று தசாப்தங்களாக இன, மத, மொழி, பால் இன்னபிற வேறுபாடின்றி நாம் கொடிய யுத்தத்தினையும், அதன் விளைவுகளையும் எதிர்கொண்டு வந்திருக்கிறோம். இதன் போது பல குண்டு வெடிப்பு சம்பவங்களையும், பல சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகளையும் கடந்து வந்திருக்கிறோம். ‘பயங்கரவாதத்தை ஒழிக்க’ என்று அரசாங்கம் கடுமையாக போராடிய காலம் அத்தனைக்கும் ஒரு நாளிலேனும் முகத்திரையினை தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கவில்லை. முஸ்லிம் பெண்களாகிய நாங்கள் கறுப்பு அபாயாவினையும், சிலர் முகத்திரையினையும் அணிந்துமிருந்தோம்தான். அப்போதும் யார் வேண்டுமானாலும் பயங்கரவாதத்திற்காக புர்காவினை பயன்படுத்தக் கூடும் என்ற அனுமானத்தில் தடை செய்திருக்கலாம். ஆனாலும் செய்யவில்லை.

புர்கா அணிந்திருந்தாலும் இலங்கையில் அடையாள அட்டை, கடவுச் சீட்டு, வாகன சாரதி அனுமதி பத்திரம் என்று அனைத்து சந்தர்ப்பங்களிலும், ஏனைய சோதனைச் சாவடிகளிலும் முஸ்லிம் பெண்கள் தமது அடையாளத்தினை உரிய முறையில் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலும் அடையாளத்தினை வெளிப்படுத்துவதில் முஸ்லிம் பெண்கள் முரண்பட்டது கிடையாது. உலகில் அனைத்து நாடுகளிலும் புர்கா அணியும் பெண்கள் செய்வதும் இதுவே. இவ்வாறிருக்க, நமது நாட்டில், பாதுகாப்பு காரணங்களுக்காக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களிலும் முகத்தை மறைத்த அல்லது அடையாளத்தை வெளிப்படுத்தாத எதுவித பயங்கரவாத செயலும் இடம்பெறாத நிலையில் எதற்காக இந்தத் தடை?

இந்தத் தடைக்கான காரணமாக ஒன்றேயொன்று மட்டுமே வலுவானதாக தோன்றுகின்றது. ‘அது என்ன புர்கா? அதனைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வருகிறது. ஏன்தான் இதனைப் போடுகிறார்களோ?’ பல முஸ்லிம்களதும், பல முஸ்லிமல்லாதோரினதும் அங்கலாய்ப்பு. குறித்த ஆடை தொடர்பாக எமக்குள்ள வெறுப்பு. நீண்ட நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த எதிர்ப்பு, சந்தர்ப்பம் பார்த்து வெடித்திருக்கிறது. தற்போதைய நிலவரத்தின் படி பாதுகாப்புக் காரணம் என்பதனையும் தாண்டி, ‘பயம்’ அல்லது ‘அசௌகரியம்’ என்பதாகக் கொள்ளலாம். புர்கா அணிந்த நிலையில் எனக்கருகில் ஒரு நபரிருந்தால் எனக்கு எழக் கூடிய அச்சம். இங்கு மீண்டும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய விடயம் பயங்கரவாதத்துக்கும், புர்காவுக்கும் தெளிவாக தொடர்புகளை, ஆதாரங்களை முன்வைக்காத நிலையில் அச்சமாக இருக்குமோ என்ற உணர்வை நான் பயம் என்பதை விட ‘அசௌகரியம்’ என்றே அடையாளப்படுத்துகிறேன். இந்த அசௌகரியம் எங்களுக்குள் எப்பொழுதும் இருந்து வந்ததுதான் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதற்கான மிகச் சிறந்த ஆதாரம் உலமா சபையின் வேண்டுகோள் கடிதம் (28.04.2019,) பெண்கள் கறுப்பு நிறத்திலான ஆடைகளை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல், கறுப்பு நிறம் தவிர்ந்த ஏனைய நிறத்திலான ஆடைகளை அணிதல் என்று குறிப்பிடுகிறது. அபாயாவைத் தடை செய்யாமல் கறுப்பை தடை செய்ய  என்ன காரணம்? கறுப்பு நிறத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் என்ன சம்பந்தம்? இது பாதுகாப்புக் காரணமல்ல, மாறாக குறித்த ஆடையினதும், அந்த நிறத்திலும் இருக்கும் வெறுப்பு என்பதே தெட்டத்தெளிவு.

மிக நீண்ட காலமாக எம்முள் வளரத் தொடங்கிய ஆடை தொடர்பிலான காழ்ப்புணர்ச்சியின் ஒரு வடிவம் சந்தர்ப்பம் வரும்போது உடனடியாக தடை செய்யப்பட ஏதுவாகிற்று. வன்முறையற்று வாழ்வதற்காக நபர்களுக்கிடையிலான, இனங்களுக்கிடையிலான நல்லுறவை, புரிந்துணர்வை வளப்படுத்த, வலுப்படுத்த பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். அந்த புரிந்துணர்வில்லாமல் எனது தனிப்பட்ட வெறுப்பினை அடிப்படையாகக் கொண்டு எப்போது எனக்கு ஒருவரின் ஆடை பிடிக்கவில்லை, ஆகவே அந்த நபர் வேறு ஆடை அணிய வேண்டும் என எப்போது நான் கருதுகிறேனோ மாற வேண்டியது அந்த நபர் அல்ல, நான்தான் (இது புர்காவினை எதிர்க்கும் முஸ்லிம்களுக்கும் சேர்த்துத்தான்.) எனது விருப்பு, வெறுப்புகளை நான் இன்னொருவர் மீது திணிக்க ஆரம்பித்தலிலேயே எனது ஒடுக்குமுறை ஆரம்பிக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போன்று இதுதான் பெண்களின் ஆடை பற்றிய அரசியல். இது சகோதரி, மகள், மனைவி, தாய், தோழி, காதலி…. என்று பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்று தீர்மானிப்பதில், “நானாக ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் எனக்குப் பிடிப்பதில்லை என்பதால் அவர்கள் உடுப்பதில்லை” என்று சொல்வது வரை ஒடுக்குமுறை அரசியல்தான்.

காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.  எனக்குத் தெரிந்து அந்த ஊரில் பள்ளிவாயலில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்த சம்பவத்தால்  பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கும், சில தமிழ் குடும்பங்களுக்கும் இடையில் இன நல்லுறவினைப் பேண கடுமையாக பல வருடங்களாக நம்பிக்கையோடு சமூகப் பணியாற்றுகின்ற, ஆரையம்பதிக்கும், காத்தான்குடிக்கும் காணிப்பிரச்சினை வரும்போது இன முறுகலின்றி சுமுகமாக பிரச்சினையைத் தீர்க்க இரவு பகலாகத் திரிந்த, கலையின் ஊடாகவும், இலக்கியத்தின் ஊடாகவும் இன நல்லுறவுக்காக உழைக்கின்ற, பெண்களது முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் புர்கா, அபாயா அணிந்து வருகின்ற, களனிப் பிரதேசம் வெள்ளத்தில் அள்ளுண்டபோது ஓடோடி வந்து நாட்கணக்காக பொருட்கள் சேகரித்து சிங்கள கிறிஸ்தவ பகுதிகளிலே நிவாரணப் பணிகள் செய்த என் அத்தனை தோழமைகளும் காத்தான்குடியிலிருந்து வந்தவைதான். சிலர் ஒட்டுமொத்தமாக காத்தான்குடி அப்படித்தான் என்னும் போது என்னால் உடன்படவே முடியவில்லை. எப்படிச் சொல்ல முடியும் காத்தான்குடியே அப்படித்தான் என்று?

அது போன்றே புர்காவையும் பார்க்க வேண்டும் என்று கருதுகிறேன். புர்கா அணிந்தவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்ற பார்வை எமக்கு ஏன் எழ வேண்டும்? அபாயா அணிந்த பெண்கள் தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். உண்மைதான். இலங்கையில் ஒரு மில்லியன் முஸ்லிம் பெண்களில் அதிகமானோர் அந்த கறுப்பு ஆடையைத்தான் அணிகிறார்கள் என்றால் அது ஒரு ஆடையே தவிர பயங்கரவாதிகளின் சீருடை அல்ல என்பதை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறோம்? பாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா. நாளை?

நாட்டின் நிலைமை கருதி எம் ஒவ்வொருவருக்கும் பொறுப்புண்டு. நாட்டின் பாதுகாப்பு மிக அவசியம். இச்சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு நிமித்தம் பாதுகாப்புப் பிரிவினருக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்குதல் வேண்டும். இயலுமான அளவு எமது அடையாளங்களை வெளிப்படுத்தல் எவ்வாறு அல்லது பொது வெளியில் இந்த நெருக்கடி நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்பது தொடர்பில் கரிசனை எடுத்தல் வேண்டும். இதுவரை காலமும் முஸ்லிம் பெண்கள் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியும் இருக்கிறார்கள். புர்காவினைத் துறக்க வேண்டுமெனின் ஒவ்வொரு பெண்ணினதும் தீர்மானமாகவே இருத்தல் வேண்டுமேயொழிய அரசாங்கத்தால் சட்டமாக தடை செய்யப்படக் கூடாது. இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் புர்காவினைத் தடை செய்த உலக நாடுகளில் பயங்கரவாதம் ஒன்றும் முடிந்து போய்விடவில்லை என்பதனைக் கவனத்தில் கொண்டு பயங்கரவாதத்துக்கு எதிராக இறுக்கமாக, உறுதியாக என்ன நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பதில் அரசாங்கம் அரசியல் பண்ணாமல் சிரத்தை காட்ட வேண்டும். உள்காயத்திற்கு மருந்திடாமல் வெளிப்புண்ணிற்கு மருந்திடும் அரச கோமாளித்தனம் முற்றுப்பெற வேண்டும்.

இஸ்லாத்தின் பெயரில் பயங்கரவாதிகள் செய்த பயங்கரவாதத்தின் காரணமாக ஏன் அமைதியான முறையிலான முஸ்லிம் பெண்களது தனிப்பட்ட உரிமைகள்  பறிக்கப்பட்டு அல்லது விட்டுக் கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன? நான் மிகவும் உறுதியாக இந்த பயங்கரவாத வன்முறையை எதிர்க்கிறேன். இது எனது பிழையல்ல என்று தெரிந்தும் ஒரு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்ற தவிப்பில் இனம்புரியாத குற்ற உணர்ச்சியில் திணறிப் போயிருந்தேன். மனிதத்தை நேசிக்கும் நான், இத்தனை படுபாதகங்களைச் செய்தவர்களை ஏன் முஸ்லிமாகப் பார்க்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து தேற்றுகிறேன். நான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டும் பழிக்கும் ஆளாகி, பாவத்துக்கும் ஆளாக நேரிட வைக்கும் சந்தர்ப்பத்தை நான் கேள்வி கேட்கக் கூடாதா?

ஏனைய அனைவரையும் போலவும் ஆலயங்களில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்குமாக முஸ்லிம் பெண்கள் நாங்களும் அழுகிறோம், பயங்கரவாதிகளுடன் கொல்லப்பட்ட சிறுவர்களை நினைந்து கண்ணீர் விடுகிறோம். பயங்கரவாதிகளையும், ஆதரவளித்தவர்களையும் திட்டித் தீர்க்கிறோம், குமுறுகிறோம். ஒவ்வொரு செய்தியின் பிற்பாடும் அதிர்ந்து போகிறோம். இருந்தும் முஸ்லிம் பெண் என்ற அடையாளத்தினால் ஒவ்வொரு நாளும் வெளியில் வர வழியின்றி அச்சத்துடன் கழிக்கிறோம்.  எம்மைப் புரிந்து கொண்ட இன, மத வேறுபாடுகளறியாத அன்பையும், ஆதரவையும் வழங்கும் பேரன்பு  காட்டும் தோழமைகளால் மட்டும் இந்நாட்களில் உயிர்த்திருக்கிறோம். பயங்கரவாதத்தால் தொடர்ந்தும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருவது நாமும்தான். எமக்கு ஏன் இன்னும் வலிகளைத் தரத் தீர்மானிக்கிறீர்கள்?

அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்ற சுற்றிவளைப்பும், சாய்ந்த மருதுவில்  பயங்கரவாதிகளைக் கொன்றொழித்தமையும் முற்று முழுதாக முஸ்லிம் ஊர்களுக்குள் இடம்பெற்ற விடயங்கள். இதற்கான துப்பினை வழங்கி வெற்றிகரமாக அவர்களது தாக்குதலை முறியடிக்க பாதுகாப்புப் படையினருக்கு உதவியளித்தது அந்த ஊர் முஸ்லிம் மக்களே. முஸ்லிம் பொது சனங்கள் தாமும் எவ்வாறு இலங்கை பிரசைகளாக பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்பதற்கு இவை சிறு உதாரணங்கள். (முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதனை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம்).

பெண்கள் உரிமைகளுக்கான ஒரு செயற்பாட்டாளராக நான் அதிகம் முஸ்லிம்  பெண்களுடன் வெவ்வேறு முஸ்லிம் கிராமங்களில் பெண்களோடு களத்தில் நேரம் செலவழிக்கிறேன். கட்டுப்பாடான முஸ்லிம் ஊர்களுக்குள் இருந்து கொண்டு சிறுமிகளுக்கு செய்யப்படுகின்ற திருமணங்களைத் தடை செய்வதற்கும், திருமணமானதால் பாடசாலைகள் தள்ளி வைத்த, விவாகரத்தான சிறுமிகளுக்கு கல்விக்கான  தனிப்பட்ட வசதிகளைச் செய்து கொடுக்கின்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு பிள்ளைகளுக்கான தாபரிப்பு வழக்கு வைக்கவும், தனித்து வாழும் பெண்கள் சுயமாக வாழ்வாதாரம் ஈட்டவும் உதவி செய்கின்ற, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காய் பங்கேற்கின்ற இன்னும் பெண்களது ஒடுக்குமுறைகளுக்கு தம்மாலானவற்றை துணிந்து செய்கின்ற எத்தனை எத்தனையோ  பெண்கள் இந்த கறுப்பு அபாயாக்களுக்குள்ளும், முகத்திரைக்குப் பின்னாலும் இருந்துதான் சமூகப் பணியாற்றுகிறார்கள். எத்தனையோ பாடசாலை மாணவிகளுக்கும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளுக்கும் உகந்த தெரிவாக அவர்களால் அடையாளப்படுத்தப்படுவதும் அபாயாக்களும், புர்காக்களும்தான். மாறாக சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளிலும் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டம் சார்ந்தும், நடைமுறைசார்ந்தும் விரவிக் கிடக்கும் போது தமது நிலையை, எதிர்ப்பை, செயலாளுமையை இந்த ஆடைத் தெரிவின் ஊடாக இப்பெண்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் அத்தனை ஒடுக்குமுறைக்குள்ளிருந்தும் ஒரு கவசமாக, கருவியாக புர்காவினை அணிவதன் ஊடாக கல்வித் தகைமை முதற் கொண்டு, சிறந்த தொழிலாளுமையைப் பெற்றுக் கொண்டது வரை இப்பெண்கள் சாதித்து வருகின்றமை ஏராளம்.

புர்கா நிர்ப்பந்திக்கப்பட்டதா அல்லது அவர்களது தெரிவா  என்ற வாதாட்டத்திற்கு நான் வரவில்லை. மாறாக நீண்டகாலமாக அதனையே தங்கள் ஆடையாக அடையாளப்படுத்தி வந்த முஸ்லிம் பெண்களைப் பொறுத்தளவில் புர்காவினைத் தடை செய்வது நானறிந்த வகையில் ஏற்கனவே பலவகையிலும் தமக்கான உரிமைகளுக்காக தமக்கு இயைபான வழிகளில் போராடும், செயற்படும் எத்தனையோ முஸ்லிம் பெண்களை விளிம்பு நிலைக்குள் நிச்சயமாகத் தள்ளிவிடும். மார்க்க ரீதியாக இத்தனை காலமும் முகத்தைக் காட்டுவது பெரும் பாவம் என்று கூறி பல தசாப்தங்களாக முகத்திரையிட்டு வாழ்ந்த பெண்களை திடீரென்று கழட்டி விட்டு பொதுவெளியில் நடமாடு என்று கூறுவது எத்தனை கொடுமையான விடயம் என்பதனை உணர முடிகிறதா? இந்த அத்தனை பெண்களையும் நடமாடும் சுதந்திரத்தினைப் பறித்து பலவந்தமாக வீடுகளுக்குள் ஒடுக்கப் போகிறோம்  என்பதனை நாம் உணர்ந்திருக்கிறோமா? வசதி படைத்த வர்க்கத்தினரன்றி பொதுவெளியில், பொது போக்குவரத்தை பாவிக்கும் அடித்தள மட்ட முஸ்லிம் பெண்களை இது எவ்வளவு தூரம் பாதிப்புக்குள்ளாக்கும் என்று யோசித்திருக்கிறீர்களா?

புர்காவே அவர்களது கவசம். ஏற்கனவே பல்வேறு வகைகளில் சமூகத்தில் தமக்கான தளத்துக்காக போராடும் இப்பெண்கள் ஒதுக்கப்படவும், வீடுகளில் ஒதுங்கிவிடவும் கூடும். புர்காவினை அணிவதனாலேயே இப்பெண்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றார்கள். புர்காவினை தடை செய்வது இப்பெண்கள் பாடசாலைக்கு சென்று கல்வி கற்பதனையும், வகுப்புகளுக்குச் செல்வதனையும், பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதனையும், சமூகப் பணியாற்றுவதை முடிவுறுத்தலிலுமே கொண்டு சென்றுவிடும். இது தூர நோக்கில் எமது சமூகத்தின் அரைக்கரைவாசியான பெண்களின் வளர்ச்சியை மட்டுமன்றி முழு சமூகத்தையுமே நிச்சயமாக பாதிப்புக்குள்ளாக்கும்.

தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னர்,  தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் புர்கா என்பது அவசியம்தானா என்ற கேள்விக்குப் பேர் பெற்றதொரு உலமா வழங்கிய பதில், “பெண்களது இடம் வீடுதான். அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டால் இந்த புர்கா பிரச்சினையே இல்லை. அவர்கள் வெளியில் வருவதனால்தான் இந்த புர்கா பற்றிய பிரச்சினையே வருகிறது” என்பதாக அமைந்தது. முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பெரும் மார்க்கத் தலைமைகளிடமிருந்து இந்தப் பதில் வருகின்றதாயின் புர்காவினை தடை செய்வதன் ஊடாக ஏற்கனவே பல்வேறு தடைகளுக்குள் சிக்கியுள்ள முஸ்லிம் பெண்களது நிலைமை நிச்சயமாக இன்னும் மோசமாகி விடும் என்பதனை நாம் உணர வேண்டும். இந்தப் பெண்களது போராட்டத்துக்கு நாம் துணை நிற்காவிட்டாலும் பரவாயில்லை, எமது சௌகரியங்களுக்குள் நின்று கொண்டு, விமர்சித்துக் கொண்டு இன்னும் சுமையினைக் கூட்டாமலாவது இருக்க நம்மால் முடியுமா? புர்காவினை அணிவது எண்ணிக்கை அடிப்படையில் மிகச் சொற்பமான தொகையினரே. தொகையில் சிறுபான்மை என்பதனால் நாம் அவர்கள் தெரிவினை ஒடுக்குமுறைக்குள்ளாக்க முடியுமா? எமது சலுகைகளை அனுபவிக்கும் நாம், எமது வெறுப்பின் அடிப்படையில், பயங்கரவாதத்தின் பெயரில் தயவு செய்து விளிம்பு நிலைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பெண்களை இன்னும் ஒடுக்குமுறை செய்யாமல் இருக்கவாவது முயற்சிப்போமா?

நாட்டு நிலவரத்தின் படி பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமான அம்சம். இதற்கு மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால், பாதுகாப்புத் தேவைகளுக்கான ஆதாரங்கள் இன்றிய இந்த புர்கா தடை பெரும் அரசியல் சார்ந்தது என்பதனையும், அதன் பாதிப்பு நமது முஸ்லிம் பெண்களுக்கே என்பதையும் நாம் உணரவாவது வேண்டாமா?

அடையாளம் தெரியாமல் முகத்தை மறைத்தல் தடை என்பது புர்காவுக்குத் தடை என்பதாக அர்த்தப்படுத்தப்பட்டு அதனை எதிர்த்தவர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், துரதிஸ்டவசமாக  பல்லின சமூகங்கள் வாழும் நாட்டில், நெருக்கடியான இந்த நேரத்தில் போதிய விளக்கம் இன்மையினாலும், இன வெறுப்பினாலும் காதுகள் உட்பட முகத்தை மறைத்தல் தடை என்பதனை சரியாக விளங்கிக் கொள்ளாமல் பொதுவெளிகளில் ஹிஜாப்பால் (தலையை மட்டும் மறைத்தல்) தலைமூடக் கூடாது, ‘சோளாலும்’ மூடக் கூடாது, மூடினால் உள்ளே வர முடியாது என்று வைத்தியசாலைகள் உட்பட பல்வேறு இடங்களிலும் பல்வேறு கெடுபிடிகளும், அடாவடித்தனங்களும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன (எனக்கும் நடந்தது! ஆனால் என்னை சட்டத்தரணி என்ற ‘மேல் வர்க்க சலுகை’ அரசியல் என்னைக் காப்பாற்றியது. ஏனைய பெண்கள்?) இதனை விடவும் முக்கியமான விடயம் அடையாளத்தை காட்டும்படி கோரும் அதிகாரம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது? குழப்பகரமான இந்தத் தருணத்தில் முகம் மறைக்காமல் தலையை மூடுகின்ற பெண்களைக் கூட சூழலில் உள்ள அனைவருமே பொறுப்புதாரிகளாக மாறி முஸ்லிம் பெண்களது சோளைக் கழற்ற சொல்வதற்கு என்ன எதிர்வினையாற்ற முடியும்?

தூபம் போட்டாயிற்று. இனி என்ன? நாம் மௌனமாக தூங்குவோம். புர்காவுக்கான தடையை ஆதரித்து  வெறுப்புணர்வினால் கொண்டாடிய நாளை நினைந்து வருந்தும் நாள் கனவிலேனும் ஒருபோதும் வராதிருக்கட்டும்.

குறிப்பு 1: தனிப்பட்ட ரீதியில் எனக்கு  புர்காவை பிடிக்குமா பிடிக்காதா என்பதற்கு அப்பால் பாதுகாப்புக்கு காரணிகளுக்காக அல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு அரசியலால் இத்தடை ஏற்படுகையில் என்னால்  ஏற்க முடியாதுள்ளது.

குறிப்பு 2: ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு, இந்த நெருக்கடியான நேரத்திலும் நான் புர்காவிற்கான தடைக்கு எதிராக எழுதுவதன் ஊடாக என்னையும் ஒரு அடிப்படைவாதியென்று நீங்கள் வரையறுப்பீர்களானால், தயவு செய்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சுய விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி, நடக்கும் நிகழ்வுகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான இயல்பினை உங்களில் வளர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

மனிதம்  வாழட்டும். அன்பு ஓங்கட்டும்.

ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்


 

 

https://maatram.org/?p=7758

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.