Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமாவளவன்: `அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்துவோம்`

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •   
     
தொல் திருமாவளவன்

பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்களும் எதிர்க்கட்சியினரும் மிக உன்னிப்பாக கவனித்த தொகுதி சிதம்பரம் தொகுதி. வாக்கு எண்ணிக்கையின்போது கடைசிவரை இழுபறியாக நீடித்த இந்தத் தொகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழகத்தின் சமீபகால தேர்தல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று.

சென்னை அசோக் நகரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் கட்சித் தொண்டர்களாலும் தோழமைக் கட்சித் தலைவர்களாலும் நிரம்பி வழிகிறது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிதம்பரம் தொகுதி வெற்றி குறித்தும் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான தனது திட்டங்கள் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் தொல். திருமாவளவன். பேட்டியிலிருந்து:

கே. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை தேசிய அளவிலும் தமிழக அளவிலும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஜாதிய, மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தி.மு.க. தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக மோதி அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக மோதி எதிர்ப்பு அலை இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டது. அதன் விளைவாகத்தான் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாதபடி ஒவ்வொரு தொகுதியிலும் பல லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைத்த நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதன் தாக்கம் தென்னிந்திய மாநிலங்களான கேரளா, ஆந்திராவிலும் வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதை அகில இந்திய அளவில் மதவாத சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.

திருமாவளவன்படத்தின் காப்புரிமை FACEBOOK / THOL THIRUMAVALAVAN

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணி. வாக்குவங்கி அரசியலுக்காக கடைசி நேரத்தில் பேரம்பேசி உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணி. அதனால் அக்கூட்டணி கடுமையான தோல்வியை சந்திக்க நேர்ந்துள்ளது.

ஆனால், தி.மு.க. கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட கூட்டணி. கொள்கை சார்ந்து உருவாக்கப்பட்ட கூட்டணி. குறிப்பாக மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பா.ஜ.க. உள்ளிட்ட சங்கபரிவார அமைப்புகளை தமிழ்நாட்டில் வேறூன்றவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல போராட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என படிப்படியாக பல போராட்டங்கள் இங்கு வலுப்பெற்றதால் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மோதி எதிர்ப்பு அலை தமிழ்நாட்டில் இருந்தது. இது மிகப் பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணிக்கு வழங்கியிருக்கிறது.

தமிழகத்தில் கிடைத்த இந்த வெற்றி, அகில இந்திய அளவில் வேறு மாநிலங்களில் அமைய முடியாமல் போனதற்குக் காரணம் இங்கே தி.மு.க. தலைமையில் ஒரு மத சார்பற்ற அணி உருவானதைப் போல வேறு மாநிலங்களில் உருவாகவில்லை. தென்னிந்தியாவில்கூட கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற இடங்களில் மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கவில்லை. நடந்தாலும் வெற்றிபெறவில்லை.

அதனால்தான் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜியும் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷும் காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டிருந்தால் பாரதீய ஜனதாக் கட்சியின் இந்த தனிப் பெரும் வெற்றியைத் தடுத்திருக்க முடியும். ஒரு வேளை தொங்கு பாராளுமன்றம்கூட உருவாகியிருக்கும். அப்படி ஒரு ஒருங்கிணைப்பு இல்லாததால், பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய சூழலை வட மாநிலங்கள் உருவாக்கிவிட்டன என்பது வேதனைக்குரியது.

கே. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லிவிட முடியுமா? நாடு முழுவதும் ஒரு இந்து எழுச்சியை பா.ஜ.க. வெற்றிகரமாக ஏற்படுத்தியிருப்பதே அக்கட்சியின் எழுச்சிக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது..

ப. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தவர்களை இந்து அல்லாதவர்கள் எனச் சொல்லிவிட முடியாது. அதேபோல, வட இந்திய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளிலும் வெற்றிகளிலும் இந்துக்களின் வாக்குகளே அதிகம். ஆகவே இந்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை எனச் சொல்ல முடியாது. இந்து - இந்து அல்லாதவர்கள் என்ற உணர்வை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது பாரதிய ஜனதாக் கட்சி. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகமும் பா.ஜ.கவின் பின்னால் நிற்பதாக இந்த வெற்றியைப் புரிந்துகொள்ளக்கூடாது. அந்த சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் பா.ஜ.கவுக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.

சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளான நிலையில், மிக மூர்க்கமாக பா.ஜ.கவை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆகவே இந்து எழுச்சியால் கிடைத்த வெற்றி என்பதைவிட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையே இருந்த பலவீனம்தான் அவர்களிடையேயான வெற்றிக்கு வழிவகுத்துவிட்டது. இருந்தாலும் இந்து உணர்வு என்ற கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் ஓரளவுக்கு உண்மைதான்.

கே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்காத காரணத்தால், தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியின் காரணமாக தமிழகத்திற்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கருத்தும் இருக்கிறது.

ப. நலத்திட்டங்கள் என்ற அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற வெற்றியை நாம் அணுக முடியாது. நாடாளுமன்றத்தில் கொள்கை முடிவு எடுக்கும் நேரங்களில், சட்டங்களை வரையறுக்கும் நேரங்களில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. நாடாளுமன்றத்திற்குச் செல்வதே அமைச்சராக வேண்டுமென்பதற்காக அல்ல. கொள்கை தொடர்பானவற்றை விவாதிக்கத்தான். ஒரு சட்டத்தை உருவாக்கும்போது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே மதவாத சக்திகளின் கைகளில் ஆட்சி இருக்கும்போது, மிகப் பெரிய பெரும்பான்மையுடன் அவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கும் சூழலில் அவர்கள் விரும்பியபடி அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றும் வாய்ப்பு இருக்கிறது. விரும்பியபடி புதிய அரசியல் சட்டத்தை எழுத வாய்ப்பு இருக்கிறது. சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக காய்களை நகர்த்த வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகளால் முடியும். அல்லது எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும்.

நாடு தழுவிய அளவில் மக்களிடையே அந்த உணர்வை உருவாக்க முடியும். நாடாளுமன்றத்தில் நாங்கள் எழுப்பும் குரல் மக்கள் மன்றத்தில் எதிரொலிக்கும். எனவே மதசார்பின்மையை பாதுகாக்க எதிர்க்கட்சிகளின் குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் எழும். ஆகவே, அமைச்சராகாவிட்டால் நாடாளுமன்றத்தில் எம்.பி. ஆவது வீண் என்பது பயன்கருதக்கூடியவர்களின் சிந்தனை. பதவி, பவிசை மனதில் வைத்திருப்பவர்களே இம்மாதிரி கருத்தைச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மக்களுடைய உணர்வை பிரதிபலிக்க இந்த வாய்ப்பு உதவுமென நம்புகிறேன்.

திருமாவளவன்படத்தின் காப்புரிமை FACEBOOK

கே. கேபினட் கமிட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இல்லாமல் போவது, அமைச்சரவைக் கூட்டங்களில் தமிழகம் தொடர்பாக என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தாதா?

ப. அப்படி அல்ல. எந்த முடிவு எடுத்தாலும் எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. எதிர்க்கட்சிகளின் கருத்து வெற்றிபெற முடியாமல் போகலாமே தவிர, நம்முடைய குரல் எடுபடாமல் போகலாமே தவிர நம் கவனத்திற்கு வராமல் எதுவும் நடக்காது. எல்லா முடிவுகளும் நாடாளுமன்றத்தின் பார்வைக்கு வந்துதான் போகும். அவை நிச்சயமாக நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படும். நம் விருப்பத்திற்கு ஏற்றபடி அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல்போனாலும் மாற்றுக் கருத்தைச் சொல்ல முடியும். அது மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும். போராட்டங்களாக வெடிக்கும்.

கே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒற்றை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நீங்கள் இருக்கும்போது நீங்கள் பேசுவதற்குக் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த சவாலை எப்படி எதிர்கொள்வீர்கள்?

ப. நாடாளுமன்றத்தில் 8 எம்.பிக்கள் இருந்தால்தான் நாடாளுமன்ற கட்சி என அங்கீகரிப்பார்கள். 5 உறுப்பினர்கள் இருந்தால் அதை ஒரு 'க்ரூப்' என அங்கீகரிப்பார்கள். ஐந்துக்கும் கீழே இருந்தால் உதிரி என்றுதான் நாடாளுமன்றத்தால் பார்க்கப்படும். எனவே, 'பார்ட்டி', 'க்ரூப்' ஆகிய பிரிவுகளுக்குத்தான் நேரம் பகிர்ந்தளிக்கப்படும். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது. நாமாக வலிந்து, நேரம் கேட்டுத்தான் பேச வேண்டும். மற்றபடி எல்லா அதிகாரங்களும் எல்லா உறுப்பினர்களுக்கும் உண்டு.

கே. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, நீங்கள் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் உங்களுடைய வெற்றி என்பது இறுதிவரை போராட்டமாகவே இருந்தது. என்ன காரணம்?

ப. எனக்கு துவக்கத்திலிருந்தே போராட்டம்தான். முதலில் கூட்டணி அமைவதே போராட்டமாகத்தான் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.கவுடன் இணைந்து போராட்டக் களத்தில் செயல்பட்டிருந்தாலும்கூட தேர்தல் கூட்டணி அமைக்கும் நேரத்தில் தி.மு.கவும் பா.ம.கவும் பேச்சுவார்த்தை நடத்தின. தி.மு.க. - பா.ம.க. கூட்டணி அமையாது என்ற நம்பிக்கையில் நான் பொறுமையாகக் காத்திருந்தேன். இதுவே ஒரு போராட்டமாகத்தான் ஒரு சில நாட்கள், சில வாரங்கள் கடந்தன. கடைசியில் தி.மு.கவோடு கூட்டணியில் தொடரும் சூழல் அமைந்தது.

கூட்டணியில் இடம்பெற்ற பிறகு, தொகுதிப் பங்கீடு, என்னென்ன தொகுதி என அடையாளம் காணுதல் போன்றவற்றில்கூட கடுமையாக நாங்கள் போராட வேண்டியிருந்தது. பின்னர் இரண்டு தொகுதிகளைப் பெற்று நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கினோம். மற்ற எந்தத் தொகுதியிலும் இல்லாத அளவுக்கு சிதம்பரம் தொகுதியில் மிக மூர்க்கமாக சாதி வெறி சக்திகளும் மதவெறி சக்திகளும் எங்களை எதிர்த்தார்கள். வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்தார்கள். பல கிராமங்களில் நுழையவிடாமல் தடுத்தார்கள். எழுதிய விளம்பரங்களை அழித்தார்கள். ஒட்டிய போஸ்டர்களைக் கிழித்தார்கள். கல்லெறிந்தார்கள். காயப்படுத்தினார்கள். சாதிப் பெயரைச் சொல்லி வசவுபாடினார்கள். அது ஜாதி மோதலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் பொறுத்துக்கொண்டோம்.

வாக்கு சேகரிப்பது ஒவ்வொரு வேட்பாளரின் உரிமை. எல்லா தேர்தலிலும் பிரசாரத்தின்போது நான் எதிர்ப்பை சந்திப்பது வழக்கம்தான். ஆனால் இந்தத் தேர்தலில் திட்டமிட்டு ஜாதி அடிப்படையில் இதைச் செய்தார்கள். எனக்காக வாக்கு சேகரித்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது. குறிப்பாக தி.மு.கவை சேர்ந்த பொறுப்பாளர்களை, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களை இழிவுபடுத்தி பேசினார்கள். எனக்கு வேலை செய்யக்கூடாது, வாக்கு சேகரிக்கக்கூடாது என அவர்களுக்கும் நெருக்கடி தந்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை வாக்களிக்கவிடாமல் பல கிராமங்களில் தடுத்தார்கள். அவர்களே அந்த வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்குகளை பதிவுசெய்துகொண்டார்கள்.

அந்தத் தொகுதியில் சங்கபரிவார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எனக்கெதிராக தீவிரமாக அவதூறுகளைப் பரப்பினார்கள். பிரசாரம் செய்தார்கள் என்ற தகவல்களும் வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பொன்பரப்பியில் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், பலரைத் திரட்டி எங்கள் விளம்பரங்களை அழிப்பது, சுவரொட்டிகளைக் கிழிப்பது, பானையை உடைப்பது, பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்களைத் திரட்டி எங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றையும் செய்தார்.

நான் வெற்றிபெற்றுவிடக்கூடாது என திட்டமிட்டு ஜாதீய, மதவாத சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி இறைத்தார்கள். எனக்கெதிரான அவதூறுகளைத் திட்டமிட்டு பரப்பினார்கள். மிக நெருக்கடியான சூழல்களை எனக்கெதிராக உருவாக்கினார்கள். என்னோடு வந்தவர்களின் வாகனங்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினார்கள். நான் செல்லும் வழியில் மரங்களைக் குறுக்கே போட்டு, பாறாங்கற்களைத் தூக்கிப்போட்டு பயணங்களைத் தடைசெய்தார்கள். தலித் அல்லாத குடியிருப்புகளுக்குள் நுழையக்கூடாது என மறித்தார்கள். எல்லாவற்றையும் மீறி இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றிவாய்ப்பைத் தந்திருக்கிறார்கள். 7 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. தோற்றுப்போனது. என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியிலும் அவர்கள் தோற்றுப்போனார்கள். பா.ம.க. மட்டுமல்ல, சங்கபரிவார அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து எனக்கெதிராக வேலை செய்தார்கள்.

தேர்தல் நேரத்தில் நான் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியது அவர்களுக்கு மிகப் பெரிய உறுத்தலாகவும் எரிச்சலாகவும் இருந்தது என்பதை அவர்கள் செய்த பிரசாரத்தில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இதையெல்லாம் மீறி ஒடுக்கப்பட்டவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தி.மு.க. கூட்டணியையும் என்னையும் ஆதரித்தார்கள். அதைத் தாண்டி சாதிய அடிப்படையில் என்னை ஒதுக்க நினைத்த சூழலில், தலித் அல்லாத, சிறுபான்மைச் சமூகம் சாராத மக்களும் கணிசமாக வாக்களித்த காரணத்தால்தான் 5 லட்சம் வாக்குகளை என்னால் பெற முடிந்தது. சொற்பமான வாக்கு வித்தியாசமாக இருந்தாலும்கூட வெற்றிபெற முடிந்தது. எனவே அங்குலம் அங்குலமாக இந்தத் தேர்தல் களத்தில் நான் போராடிப் போராடி வெற்றியை எட்ட முடிந்தது. இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்துவிடவில்லை. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

கே. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நீங்கள் நடத்துவதற்கு என்ன காரணம்? இம்மாதிரியான முயற்சிகள் இந்து வாக்குகளை உங்களுக்கு எதிராக ஒருங்கிணைக்க உதவுமே..

ப. தேர்தலில் வரப்போகும் வெற்றி-தோல்வியைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் மோதிக்கு எதிராக ஒரு உளவியல் இருக்கிறது. அதை வலுப்படுத்த வேண்டும், நிலைப்படுத்த வேண்டும் என்ற வேட்கை எனக்குள் இருந்தது. 2016 தேர்தலை ஒட்டி அமைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி, தேர்தல் முடிந்த உடனேயே தொடர்ந்து இயங்க முடியாமல் போனது. ஆனால், நான் அப்படியே முடங்கிப்போகாமல், உடனடியாக மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்தேன். அந்த மாநாட்டில் காங்கிரஸ் உட்பட பல அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக மதவாத சக்திகளுக்கு எதிராக, அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். தொடர்ச்சியாக தி.மு.கவோடு கைகோர்த்து அனிதாவின் மரணத்திற்குப் பிறகு நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு என அடுத்தடுத்து மோதிக்கு எதிரான உளவியலைக் கட்டமைப்பதில் பெரும்பங்கு ஆற்றினோம். அதனுடைய உச்ச நிலைதான், சனாதன எதிர்ப்பு மாநாடு.

மதச்சார்பற்ற கட்சிகள் எல்லாம் இணைந்துதேர்தலைச் சந்திக்க வேண்டும்; அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதை மையமாக வைத்து அந்த மாநாட்டை நடத்தினேன்.

திருமாவளவன்படத்தின் காப்புரிமை FACEBOOK

கே. இந்தத் தேர்தலில் உங்களுக்கான வெற்றி மிகப் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது. தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றிருந்தால் வெற்றி எளிதாகக் கிடைத்திருக்கும் என்று ஒரு வாதம் இருக்கிறது. நீங்கள் ஏன் தனிச் சின்னத்தில் நிற்க முடிவு செய்தீர்கள்?

ப. அதை நான் மறுக்கவில்லை. உதயசூரியன் சின்னத்தில் நின்றால் எளிதாக வென்றுவிடலாம் என்றாலும்கூட, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக தனிச் சின்னத்திலே போட்டியிட்டு தேர்தலை சந்தித்துவந்திருக்கிறோம். இந்தத் தேர்தல்களில் எல்லாம் நாங்கள் தோல்வியைச் சந்தித்தாலும்கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்துவரும் கட்சி; சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு செயல்பட்டுவரும் கட்சி. ஆகவே அந்தத் தனித்துவத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தொகுதிகளிலுமே தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். முடிவெடுத்தோம்.

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் மூன்று - நான்கு முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். கடலூர் மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறோம். 2001ல் நான் மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுதான் வெற்றிபெற்றேன். அதன் பிறகு தொடர்ச்சியாக தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டுவருகிறோம்.

2006ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றபோது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும்படி ஜெயலலிதா அம்மையார் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அப்போது நாங்கள் மணிச் சின்னத்தில் போட்டியிட்டு கடலூரில் 2 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனாலும் அப்போது விழுப்புரத்தில் வெற்றிபெற முடியவில்லை.

2009ல் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, நான் சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் சின்னத்தில் வெற்றிபெற்றேன். அப்போதும் விழுப்புரம் மாவட்டத்தில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். 2011ல் மெழுகுவர்த்தி சின்னத்தில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டோம். ஆனால், தி.மு.க. அணிக்கு எதிரான அலை தமிழ்நாடு முழுவதும் வீசியது. ஆகவே போட்டியிட்ட எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தோம். அப்போது நாங்கள் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். சிதம்பரம், திருவள்ளூர் ஆகிய இரு தொகுதியிலுமே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இருந்தாலும் தனிச் சின்னத்தில் போட்டியிட்டோம் என்ற திருப்தி இருந்தது.

2016ல் மக்கள் நலக் கூட்டணியில் 25 இடங்களில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டோம். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நான் 3,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக முதலில் அறிவித்தார்கள். சில நிமிடங்களில் 87 வாக்குகளில் நான் தோற்றதாக அறிவித்தார்கள். வெற்றியோ, தோல்வியோ 25 இடங்களில் தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம் என்பது ஒரு சிறப்பு.

இந்த முறையும் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றுதான் விரும்பினோம். ஆனால், விழுப்புரத்தில் மறுபடியும் தனிச் சின்னத்தால் வெற்றிவாய்ப்பை இழந்துவிடக் கூடாது; கூட்டணிக் கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவை எடுத்தோம். அதனால் நான் தனிச் சின்னத்திலும் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென்று முடிவெடுத்தோம். இப்போது இரு தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கிறது. இது போராடிக் கிடைத்த வெற்றி என்றாலும்கூட தனித் தன்மையோடு வி.சி.க. ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறது என்ற வரலாற்றை பதிவுசெய்திருக்கிறோம்.

கே. அடுத்த ஐந்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்.

ப. மக்களுடைய உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க முடியும். மதசார்பின்மையைப் பாதுகாப்பதுதான் இப்போது நம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால். சிறுபான்மை மக்களுக்கு, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு, பெண்களுக்கு இந்துத்துவ, சனாதன சக்திகளிடமிருந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கான ஒரு போராட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்களால் முன்னெடுக்க முடியுமென நம்புகிறேன்.

மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். என்றாலும் சாலைகளை அமைத்தோம், கட்டடங்கள் தந்தோம், வேலைவாய்ப்பு தந்தோம் என்பதையெல்லாம்விட அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க ஒரு சித்தாந்த யுத்தத்தை நடத்தினோம் என்பதற்கான வாய்ப்பாக இந்த ஐந்தாண்டு காலத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்..

https://www.bbc.com/tamil/india-48422301

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.