Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பட்ஜெட்: 7 லட்சம் கோடி கடன் வாங்கி, அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தாமரைபடத்தின் காப்புரிமை Getty Images Image caption கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை.

இந்தியாவின் நிதி நிலை அறிக்கை வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பிபிசியின் ஃபேஸ்புக் நேரலையில் இந்த அறிக்கை குறித்த தனது கருத்துக்களை செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பகிர்ந்துகொண்டார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர் க. ஜோதி சிவஞானம். அந்த உரையாடலில் இருந்து:

வியாழக்கிழமை வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது இது ஓர் ஏமாற்றமளிக்கும் நிதிநிலை அறிக்கைதான். வருடாவருடம் பொருளாதார ஆய்வறிக்கையானது, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தினத்திற்கு முதல் நாள் தாக்கல் செய்யப்படும். அதில்தான், பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள் என்ன என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கான தீர்வுகளையும் சுட்டிக்காட்டுவார்கள்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கையை மிகச் சிறந்த பொருளியல் அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். முன்பு அரவிந்த் சுப்ரமணியம் எழுதினார். அதற்கு முன்பு கௌஷிக் பாஷு எழுதினார். இதுபோன்ற பெரிய அறிஞர்கள் எழுதுவதால் அதற்கு கூடுதலான முக்கியத்துவமும் கிடைத்து வந்தது.

பட்ஜெட் உரையை ஒரு அரசியல் அறிக்கை என்று சொன்னோமானால், இந்த பொருளாதார ஆய்வறிக்கை மிகத் துல்லியமாக புள்ளிவிவரங்களுடன் இருக்கும். அரசியல் இல்லாமல் பிரச்சனைகளைச் சொல்லும். ஆனால், இந்த முறை பொருளாதார ஆய்வறிக்கையும் ஒரு அரசியல் அறிக்கையோ என்று கருதும் வண்ணம் அமைந்திருக்கிறது.

ஏனென்றால், இந்த பொருளாதார ஆய்வறிக்கை நம் பொருளாதாரத்தில் உள்ள பிரச்சனைகளை ஆராய்வதைவிட, அரசினுடைய லட்சிய அறிக்கையாக அமைந்திருக்கிறது. இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு விஷயத்தை முக்கியமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, தனியார் முதலீடுதான் வளர்ச்சிக்கான முக்கியமான காரணியாக அமையும் என்கிறார்கள். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், இந்தத் தனியார் முதலீடு கடந்த பத்தாண்டுகளாக வரவில்லை.

பேராசிரியர் க.ஜோதி சிவஞானம் Image caption பேராசிரியர் க.ஜோதி சிவஞானம்

2007-2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தத்திற்குப் பிறகு பெரிய அளவில் முதலீடுகள் வரவில்லை. 'மொத்த மூலதன உருவாக்கம்' நம்முடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 34 சதவீதத்தை ஒரு கட்டத்தில் எட்டியது. இன்று அது தொடர்ந்து குறைந்து மிகமிகக் கீழே இருக்கிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்துவிட்டது.

உள்நாட்டு உற்பத்தி - புதிய முறையில் அதிகரித்துக் காட்டப்பட்ட வளர்ச்சி

கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8%. கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8%தான். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் எல்லாமே, திருத்தப்பட்ட முறையின் கீழ் காட்டப்பட்ட வளர்ச்சி விகிதம். அதாவது, 2014ல் இந்த அரசு பொறுப்பேற்ற உடனே பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடும் முறையை மாற்றி அமைத்தார்கள். உடனே வளர்ச்சிவிகிதம் 2 சதவீதம் அதிகரித்தது. கணக்கிடும் முறையை மாற்றிய உடனேயே எதுவுமே நடக்காமல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்தது.

இந்த முறையில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகரித்துக் காட்டப்பட்டது என்கிறார் பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம். இந்த விவகாரம் கடுமையாக பொதுவெளியில் விவாதிக்கவும்பட்டது.

இப்போது, கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதம் என்கிறார்கள். அதில் 5.8 சதவீதத்தில், இவர்கள் கணக்கிடும் முறையை மாற்றுவதன் மூலம் அதிகரித்த 2 சதவீதத்தைக் கழித்தால், நம் உண்மையான வளர்ச்சி வெறும் 3.8 சதவீதம்தான். ஆக, கடந்த காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி விகிதம் என்பது கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வளர்ச்சி விகிதம். முழு ஆண்டுக்கும் எடுத்துப் பார்த்தால்கூட, இந்த 2 சதவீதத்தைக் குறைத்துவிட்டால் 4.8 சதவீதம்தான் வளர்ச்சி.

பிற துறைகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல தொழில்துறை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. நாம் நல்ல வளர்ச்சி விகிதத்தில் இருந்தபோது, நம்முடைய ஏற்றுமதி - இறக்குமதி மதிப்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம், அதாவது பாதிக்குப் பாதி இருந்தது. இவை இப்போது கடுமையாக குறைந்திருக்கின்றன. குறிப்பாக ஏற்றுமதி வெகுவாகக் குறைந்திருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தத்தினால் சேவைத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைகளை மேம்படுத்த வேண்டுமானால் தனியார் முதலீடு தேவை. ஆனால், அது தொடர்ந்து வீழ்ந்தவண்ணமே இருக்கிறது. இம்மாதிரியான சூழலில் அரசு முன்வந்து, சலுகைகளை அளித்து முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும்.

நிதிநிதி அறிக்கைபடத்தின் காப்புரிமை AFP

அதற்கேற்றபடி இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மூன்று முறை குறைத்தது. மேலும் குறைப்பதற்கு ஏதுவாக தனது கொள்கைகளையும் மாற்றி அமைத்தது. ஆனாலும் தனியார் முதலீடுகள் வரவில்லை. அப்படியான சூழலில் அரசுதான் முதலீடு செய்ய முன்வர வேண்டும். நிலைமை இப்படியாக இருக்கும்போது, தனியார் முதலீடுதான் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என ஆய்வறிக்கையில் சொல்கிறது மத்திய அரசு. அதன் பொருள், தாங்கள் ஏதும் முதலீடு செய்யப்போவதில்லை என்பதுதான்.

இந்த நிதிநிலை அறிக்கையின்படி பார்த்தால் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாய் 2019-20ஆம் ஆண்டில் 19 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செலவு 27 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய். இந்த இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை கடனாக வாங்கப் போகிறார்கள். அதாவது கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கப்படவுள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம்.

7 லட்சம் கோடி கடன் வாங்கி, 6.6 லட்சம் கோடி வட்டி கட்டி...

இதில் கவலை தரத்தக்க அம்சம், 7 லட்சம் கோடி ரூபாய் கடனாக வாங்கி 6.6 லட்சம் கோடி ரூபாயை ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாக செலுத்த வேண்டும். நம்முடைய மொத்த வருவாயே 19 லட்சத்து 62 ஆயிரம் கோடியாக இருக்கும்போது, அதில் வட்டிக்கு மட்டும் 6.6 லட்சம் கோடி என்றால் மீதமிருப்பது 13 லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு வழக்கமான செலவுகளைக்கூட அரசால் செய்ய முடியாது.

இந்தப் பற்றாக்குறை என்பது, பட்ஜெட்டோடு முடியவில்லை. பட்ஜெட்டிற்கு வெளியிலும் கடன் வாங்கப்படுகிறது. நம்முடைய பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கும் கடன்கள் பட்ஜெட்டில் வராது. உதாரணமாக, நேஷனல் ஹைவேஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா, ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களை எடுத்துக்கொள்வோம்.

salt pan, mumbaiபடத்தின் காப்புரிமை NurPhoto

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமே 4.4. லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளன. இவை பொதுத் துறை நிறுவனங்கள் என்பதால், இதுவும் அரசின் கடன்தான். பட்ஜெட்டில் காட்டினால், கடன்விகிதம் அதிகரிக்கும் என்பதால், நிறுவனங்கள் தனியாக வாங்குவதைப் போல இந்தக் கடன்கள் காட்டப்படுகின்றன.

இப்படி பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்களையும் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 6 சதவீதம் வருகிறது.

இது தவிர, மாநில அரசுகளின் பற்றாக்குறை, கடன் ஆகியவை இருக்கின்றன. இதையும் சேர்த்துக்கொண்டால் நாட்டின் கடன் என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் அளவுக்கு இருக்கிறது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்பது 26 சதவீதம். அதாவது, அரசின் மொத்த அளவே ஜிடிபி-யில் 26 சதவீதம்தான். ஆனால், ஒட்டுமொத்த ஜிடிபி-யில் 10-11 சதவீதத்தை அரசே கடனாகப் பெற்றால், எப்படி சரியாக இருக்கும்?

இதற்கு எவ்வளவு வட்டி கட்டுவது? 7 லட்சம் கோடி ரூபாயைக் கடனாகப் பெற்று, அதில் 6.6 லட்சம் கோடியை வட்டியாகக் கட்டுகிறோம். பிறகு எப்படி நலத் திட்டங்களுக்குச் செலவழிப்பது?

சொன்னார்களே செய்தார்களா?

2014ஆம் வருடத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். அதில் பொருளாதாரப் பிரச்சனைகள்தான் மிக மிக முக்கியமாக முன்னிறுத்தப்பட்டன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் உற்பத்தி குறைந்துவிட்டது, விலைவாசி அதிகரித்துவிட்டது; நாங்கள் வந்தால் இதை சரிசெய்வோம் என்றார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர். கடந்த ஐந்தாண்டுகளில் அதைச் செய்யவில்லை.

அசாமின் பக்சா மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் நெல் வயலில் மீன் பிடிக்கும் பழங்குடிப் பெண்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption அசாமின் பக்சா மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் நெல் வயலில் மீன் பிடிக்கும் பழங்குடிப் பெண்.

இது தவிர, வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அறிமுகம் போன்றவை. ஏற்கனவே பொருளாதாரம் கீழே சென்றுகொண்டிருக்கும்போது, இந்த நடவடிக்கைகள் வீழ்ச்சியை அதிகப்படுத்தின.

முதன்மை பொருளாதார ஆலோசகர், தனியார் முதலீடு தேவை என்கிறார். இந்திய மக்களின் ஒட்டுமொத்த சேமிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்தான். அது மொத்தத்தையும் அரசே கடனாக வாங்கிவிட்டால் தனியார் எங்கே கடன் வாங்க முடியும்?

இந்த நிலையில்தான் அரசு கடன்வாங்குவதைக் கட்டுப்படுத்த ஒரு நெறிமுறை கொண்டுவரப்பட்டது. நிதி பொறுப்புணர்வு மற்றும் வரவுசெலவுத் திட்ட மேலாண்மை சட்டம் (Fiscal Responsibility and Budget Management Act) இதற்காகக் கொண்டுவரப்பட்டது.

அதன் மூலம் அரசு வாங்கும் கடனுக்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது. அதன்படி, நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தைத் தாண்டக்கூடாது. வருவாய் பற்றாக்குறை எப்போதுமே பூஜ்யமாகத்தான் இருக்க வேண்டும். இதன் அர்த்தம், தன் அன்றாட செலவுகளுக்கு அரசு கடன் வாங்கக்கூடாது என்பதுதான். பொதுக் கடன் எனப்படும் ஒட்டுமொத்த கடனுக்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறைகூட நாம் அந்த இலக்கை அடையவில்லை.

மாறாக, என்.கே. சிங் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. 'பொருளாதாரம் மாறிக்கொண்டேயிருக்கிறது. அதனால் நிலையான உச்சவரம்பு தேவையில்லை' என்றதோடு வருவாய்ப் பற்றாக்குறை கூடாது என்ற அம்சத்தையும் இந்தக் கமிட்டி நீக்கியது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

விலையேறும் தங்கம்.படத்தின் காப்புரிமை Getty Images Image caption விலையேறும் தங்கம்.

2018-19க்கான பட்ஜெட் போடும்போது நிதிப் பற்றாக்குறை 3.2 சதவீதம் என்றார்கள். ஆனால், உண்மையில் அது 3.5 சதவீதமாக உயர்ந்தது. இந்த முறை 3.3 சதவீதம் பற்றாக்குறை என்கிறார்கள். இதைத் தவிர வெளியில் வாங்கும் கடன்கள் வேறு இருக்கின்றன. இது தவிர மாநில அரசுகளின் பற்றாக்குறை இருக்கிறது. இப்படியாக 9-10 சதவீதம் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை இருப்பது, நாடு அன்றாட செலவுகளையே சந்திக்க முடியாத நிலையில் இருப்பதைத்தான் காட்டுகிறது.

வளர்ச்சிதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. வளர்ச்சி இருந்தால்தான் வருமானம் வரும். வேலை வாய்ப்பு உருவாகும். பொருளாதார வளர்ச்சியே இல்லையென்றால் இவையெதுவும் இருக்காது. அரசையும் இது கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் வரிவருவாய் குறையும்.

பொருளாதாரத்தை மதிப்பிடும் இரு எண்கள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் 8-9 சதவீத வளர்ச்சி இருந்ததால் அவர்களால் மிகப் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த முடிந்தது. இப்போது வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதால் கிடைக்கும் வருவாய் விகிதமும் குறையும். இவர்கள் கணக்கிட்டதைவிட ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயில் குறைந்திருக்கிறது.

உலகில் பொருளாதாரத்தை அளவிட இரு எண்கள் முக்கியம். ஒன்று வளர்ச்சி விகிதம். மற்றொன்று நிதிப் பற்றாக்குறை. இந்தியாவில் இரண்டுமே கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில் 5 ட்ரில்லயன் டாலர் பொருளாதாரமாக 2025ல் இந்தியாவை வளர்த்தெடுப்போம் என்கிறார்கள்.

முன்பு 'அச்சே தின்' வரும் என்று சொன்னதைப் போலத்தான் இது. இன்று நம் பொருளாதாரத்தின் அளவு 2 ட்ரில்லியன் டாலர்களுக்குள் இருக்கிறது. இதனை 2025ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்க வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கை சொல்கிறது.

Fish marketபடத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், கடந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதம். கடந்த காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8. கடந்த ஐந்தாண்டுகளில் இதுதான் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம். அடுத்த ஆண்டு வளர்ச்சி 7 சதவீதம்தான் வளர்ச்சி இருக்குமென கணிக்கப்பட்டிருக்கிறது.

தனியார் முதலீடு இல்லாமல், அரசு முதலீடு இல்லாமல், சர்வதேச சூழலும் சாதகமாக இல்லாமல் இப்போது உள்ள 5.8 சதவீத வளர்ச்சியிலிருந்து 7 சதவீத வளர்ச்சியை அடைய முடியுமா என்பதே சந்தேகம். அப்படியே 7 சதவீத வளர்ச்சி இருந்தால்கூட நீங்கள் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக ஆக முடியாது.

இந்த பட்ஜெட்டிற்கு முன்பாக எல்லாத் தரப்பினரும் தகவல்களையும் ஆலோசனைகளையும் கொடுக்கும்படி கோரியிருந்தார்கள். எல்லோரும் அவரவர் தேவைகளைச் சொல்லியிருந்தார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிகளைக் குறைக்கும்படி கோருவார்கள். தனி மனிதர்கள் வருமான வரி குறைப்பைக் கோருவார்கள். இப்படி ஒவ்வொருவரும் தம் தேவையைக் கருதி ஆலோசனைகளைத் தந்தார்கள். ஆனால், இதையெல்லாம் பட்ஜெட் செய்ய முடியுமா? தவிர, இப்படி வெளியில் இருந்து கருத்தும் ஆலோசனையும் கேட்பது சரியா என்பது தெரியவில்லை. காரணம் நிதி நிலை தொடர்பான சரியான, துல்லியமான விவரங்கள் அரசிடம்தான் இருக்கின்றன.

பட்ஜெட்டிற்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது. அதாவது, எல்லோருக்கும் பலனளிக்கும் வகையில் வரவுசெலவுத் திட்டத்தைத் தீட்டுவது. அதற்கு வளர்ச்சி விகிதம் நன்றாக இருக்க வேண்டும். அதுதான் எல்லோருக்கும் பலனளிக்கும். வரி வருவாய் அதிகரிப்பதால் அரசுக்கும் பலனுள்ளதாக இருக்கும். அரசின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஏற்றுமதி, விற்பனை, முதலீடு அதிகரிக்கும்.

வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முதலீட்டுச் செலவு செய்ய வேண்டும். ஆனால், அன்றாடச் செலவுக்கே கடன் வாங்குவதால் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இப்படித்தான் இந்த நிதிநிலை அறிக்கையை பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-48895152

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.