Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசியலைச் சூடேற்றும் புலிகள் விவகாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pg1bp1.jpg

தமிழக அரசியலைச் சூடேற்றும் புலிகள் விவகாரம்

சாதுர்யமாகக் காய் நகர்த்தும் கலைஞர்

தமிழக அரசியல் களத்தில் நீர்க்குமிழி போல, அவ்வப்போது தோன்றிமறையும் விடுதலைப்புலிகள் தொடர்பான சர்ச்சை, கடந்த சில நாட்களாக ஒரு சூறாவளியையே ஏற்படுத்தி விட்டது. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் வகையில், தமிழக போலீஸ் டி.ஜி.பி. முகர்ஜி வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அதற்குக் காரணம்!

கடந்த மார்ச் 29_ம் தேதியன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேர் நடுக்கடலில் சுடப்பட்டு இறந்தார்கள். அதே நாளில் தமிழக மீனவர்கள் 11 பேர், கேரள மீனவர் ஒருவர் என மொத்தம் 12 பேர் காணாமலும் போனார்கள்.

காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய தமிழக அரசு, அவர்கள் கிடைக்கும் வரை அவர்களின் குடும்பத்திற்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. அதே நேரத்தில், மீனவர்களைச் சுட்டது யார்? என்ற கேள்வியும் சட்டமன்றத்தில் எழுந்தது.

இப்பிரச்னை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன், ‘‘தமிழக மீனவர்கள் ஐந்து பேரைச் சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள்தான். எனவே இதுபற்றி மேலும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் கலைஞர், ‘‘எதற்கெடுத்தாலும் விடுதலைப்புலிகளைக் குறை சொல்லக்கூடாது. எனக்குக் கிடைத்த தகவல்படி நமது மீனவர்களைச் சுட்டது இலங்கை கடற்படையினர்தான். எனவே, இதுபற்றி மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம்’’ என்றார்.

இந்த நிலையில்தான், ஏப்ரல் 11_ம் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் வைத்து ஆறு இலங்கை மீனவர்களைக் கைது செய்தார்கள் நமது போலீஸார். மீனவர்கள் சுடப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ‘மரியா’ என்ற படகில் வைத்தே இவர்கள் கைதானதால், அவர்களை போலீஸ் காவலில் வைத்து மேலும் விசாரித்தார்கள். இதில் இவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட, அதன் பிறகு இந்த ஆறு பேரையும் ஏப்ரல் 23_ம் தேதியன்று தங்கள் கஸ்டடியில் எடுத்து தீவிரமாக விசாரித்தார்கள் ‘க்யூ’ பிரிவு போலீஸார்.

இந்த விசாரணையின் போதுதான் அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியாயின. பிடிபட்டுள்ள ஆறுபேரும் இலங்கைத் தமிழர்களும் அல்ல... மீனவர்களும் அல்ல.. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒரு பிரிவான ‘கடல்புலிகள்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் அதிர்ச்சி. ஐந்து மீனவர்களையும் முன்பு சுட்டுக் கொன்றது இலங்கை கடற்படை அல்ல. விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கடல்புலிகள்தான் என்பது இரண்டாவது அதிர்ச்சி. இதன் உச்சகட்டமாக, காணாமல் போன 12 மீனவர்களையும் தற்போது சிறைப்பிடித்து வைத்திருப்பதும் கடல்புலிகள் தான் என்ற மூன்றாவது அதிர்ச்சித் தகவலையும் அவர்கள் சொன்னபோது, ஒட்டுமொத்த தமிழக போலீஸ் உயரதிகாரிகளும் ஒரு கணம் ஆடிப்போயிருக்கிறார்கள். இந்தத் தகவல் உடனே முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

தான் சட்டமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு நேர்மாறான ஓர் உண்மை வெளிப்பட்டதில் அதிர்ச்சியடைந்த கலைஞர், இந்தத் தகவலை வெளியிடும் வகையில் சரியான சூழலுக்குக் காத்திருந்தார். அதே நேரத்தில் மத்திய உளவு அமைப்புகளான ‘ரா’ மற்றும் ஐ.பி. ஆகியவையும் இந்தப் பிரச்னையின் பின்னணிகளை ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருவதால், ஓர் எல்லைக்குமேல் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது என்பதையும் உணர்ந்தே இருந்தார் கலைஞர்.

இந்த நிலையில்தான், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஓர் அறிக்கை வெளியிட்டார் வைகோ. ‘‘இன்ப மின்னல் இதய வானில் பாயும் செய்தியை எண்ணும் பொழுது கவலை மறந்து மகிழ்ச்சி பூக்கிறது...!’’ என்று ஆரம்பித்து, இலங்கை ராணுவத்தின் பலாலி விமான தளத்தை விடுதலைப்புலிகளின் வான்படை தகர்த்த சம்பவத்தை, அந்த அறிக்கையில் பாராட்டிய வைகோ, ‘‘நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்ந்து சொல்வோம்... விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம்!’’ என்றும் உறுதிபடச் சொல்லியிருந்தார்.

ம.தி.மு.க.வுடன் தோழமை கொண்டுள்ள ஜெயலலிதாவும் அதே நாளில் ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழகத்தின் சட்டம்_ஒழுங்கு சீர்கேடு பற்றி அதில் விளக்கிச் சொல்லியிருந்த ஜெ., ‘கருணாநிதி ஆட்சிக்கு வந்தாலே புலிகளின் செயல்பாடுகள், அவர்களுக்கு ஆதரவான குரல்கள் இங்கே அதிகமாகிவிடுகின்றன!’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளும் வெளியான தகவல் கிடைத்ததும், விசாரணையில் கிடைத்த விவரங்களை வெளியிட்டு விடும்படி டி.ஜி.பி.க்கு அனுமதி தந்தார் கலைஞர். (உண்மையில் அதற்குச் சில நாட்களுக்கு முன்பே விடுதலைப்புலிகளின் தொடர்பு பற்றி உறுதிப்படுத்திவிட்டார்கள் ‘க்யூ’ என்ற போலீஸார்!) டி.ஜி.பி.யும் அதே நாளில் அறிக்கையை வெளியிட்டு விட்டார். அடுத்த நாள் பத்திரிகைகளில் ஜெ., வைகோ, டி.ஜி.பி. ஆகியோர் தந்த அறிக்கைகள் பற்றிய செய்தி ஒரே சமயத்தில் வெளியாயின.

கலைஞர் எதிர்பார்த்தது போலவே விமர்சனங்களும், கோபமும், வைகோ மீது திரும்பியது. சட்டமன்றத்திலும் இது எதிரொலித்தது. ‘‘தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப்புலிகள்தான் என்று டி.ஜி.பி. அறிவித்திருக்கிறார். அப்படிப்பட்ட புலிகள் அமைப்பை என்றும் ஆதரிப்போம் என்று அறிவித்திருக்கிறார் வைகோ. எனவே ம.தி.மு.க.வைத் தடை செய்து, வைகோவைக் கைது செய்ய வேண்டும்’ என்று குரல் எழுப்பியது காங்கிரஸ் கட்சி.

பொதுவாகவே விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில், குறிப்பாக ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்பு, நழுவலாகவே பதில் சொல்லி வந்தார் கலைஞர். ‘ஏன்.. பத்மனாபா கொலைக்குப் பிறகு கூட புலிகளை ஆதரித்தவர்தானே ஜெயலலிதா?’ என்று கேட்டு திசை திருப்பும் வகையிலேயே பதிலளித்து வந்தார் கலைஞர்.

அப்படிப்பட்ட கலைஞர், காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும்போது, ‘நான் எப்போதும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல’ என்று அழுத்தமாகப் பேசிப் பதிவு செய்ததுடன், இந்த மண்ணில் அவர்கள் தீய செயல்கள் புரிவதற்கு ஒரு போதும் இடம் தரமாட்டோம்’ என்றும் உறுதிபடச் சொன்னார்.

இப்போது ம.தி.மு.க.வைத் தடை செய்ய வேண்டும் என்று பேச்சு வந்த போதும் அதே உறுதியைக் காட்டினார். ‘‘முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளிக்கும் போது, நமது மீனவர்களைச் சுட்டது இலங்கை கடற்படைதான் என்று சொன்னேன். இப்போது அடுத்தகட்ட விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களைச் சுட்டது இலங்கை கடற்படையினர் அல்ல. விடுதலைப்புலிகள்தான். அதுமட்டுமல்ல, காணாமல் போன 12 மீனவர்களையும் சிறைப் பிடித்து வைத்திருப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய வைகோவைக் கைது செய்வது பற்றியும், ம.தி.மு.க. வைத் தடை செய்வது பற்றியும், மத்திய அரசுடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி முடிவெடுக்கப்படும்!’’ என்று சொன்னார் கலைஞர்.

இதையடுத்துதான் வைகோ கைதாகப் போகிறார் என்ற தகவல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், ‘‘பொடா சட்டம் ரத்தான நிலையில், வைகோவை உடனடியாகக் கைது செய்வதற்கு வழியில்லை. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்பதாக வாய்மொழியாகப் பேசுவதைக் குற்றம் என்று கருதமுடியாது என்று பொடா வழக்கில் தீர்ப்புச் சொல்லப்பட்டு இருக்கிறது. தவிர, இதே மாதிரி பேசிய பேச்சுக்காக அவரைப் பொடாவில் கைது செய்தது தவறு என்று சொல்லி நடந்த கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்துப் போட்டவரே கலைஞர்தான். அவர் எப்படி வைகோவின் கைதை வலியுறுத்துவார்?’’ என்று கேட்கிறார்கள் ம.தி.மு.க. வட்டாரத்தில்.

‘‘கலைஞருக்கும் அது தெரியும். அவர் எதிர்பார்ப்பதும் வைகோவின் கைதை அல்ல. விடுதலைப்புலிகளின் விஷயத்தில் கடுமையான எதிர்ப்பு நிலை எடுத்திருக்கும் ஜெயலலிதா, புலிகளின் ஆதரவு நிலையைப் பகிரங்கமாக மீண்டும் அறிவித்துள்ள வைகோவின் நிலைப்பாட்டை ஆதரிக்கமாட்டார். மாறாக, அவர்கள் இருவர் இடையே உரசல்தான் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார் கலைஞர். இதே நேரத்தில் காங்கிரஸ் மூலமாக காய் நகர்த்தி வைகோவுக்கு நெருக்கடி தருவதன் மூலம் வைகோவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த முடியும் என்றும் நம்புகிறார் கலைஞர்!’’ என்கிறார்கள், தி.மு.க. வட்டாரத்தில்.

இதற்கேற்றாற்போல், கலைஞரை நேரில் சந்தித்து, வைகோ மீதும், ம.தி.மு.க. மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி. இதற்குப் பதிலடியாக, ‘‘காங்கிரஸைப் பகடைக்காயாக்கி எங்களைப் பலியிடத் துடிக்கிறது தி.மு.க. தலைமை. எங்களிடம் இழக்க எதுவுமில்லை. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குப் பயப்படப் போவதுமில்லை!’’ என்று, ஒரு திருமண விழாவில் பேசியிருக்கிறார் வைகோ.

வைகோவின் இந்தக் கருத்து பற்றி மத்தியஅமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம். ‘‘காணாமல் போன மீனவர்களை விடுதலைப்புலிகள் சிறைப் பிடித்திருக்கிறார்கள். ஐந்து மீனவர்களை அவர்கள் சுட்டுக்கொன்றிருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் போலீஸ் டி.ஜி.பி. இதன்பிறகும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதும், நடந்த சம்பவங்களை நியாயப்படுத்துவதும் எப்படிச் சரியாக இருக்கும்? இந்த வாதத்தை நாங்கள் எழுப்பினால், எங்களை பகடைக்காய் என்று விமர்சிப்பது சரியான விமர்சனமல்ல. இப்படி விமர்சிப்பதைவிட்டுவிட்டு ஒரு விஷயத்தை வைகோ தெளிவுபடுத்த வேண்டும். நமது மீனவர்களை புலிகள் கொன்றது நியாயமா? 12 மீனவர்களைக் கடத்திக் கொண்டுபோய் அடைத்து வைத்திருப்பது நியாயமானதுதானா? இல்லை... இவர் (வைகோ) ஏற்கெனவே போனது மாதிரி கள்ளத் தோணியில் போய் புலிகள் பிடித்து வைத்துள்ள மீனவர்களை மீட்டு வருவாரா என்று விளக்கவேண்டும்.

இவ்வளவுக்குப் பிறகும் புலிகளை ஆதரிக்கும் வைகோ மற்றும் ம.தி.மு.க. மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, கலைஞரைக் கேட்டுக்கொள்கிறோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் நம்புகிறோம். அதுவரை எங்கள் குரலைத் தொடர்ந்து ஒலிப்போம்!’’ என்றார் இளங்கோவன்.

‘‘இந்த எதிர் விமர்சனங்களால் வைகோவுக்கோ, ம.தி.மு.க.வுக்கோ உடனடியாக எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் புலிகளின் வான்வெளித் தாக்குதலைச் சிலாகித்து வைகோ வெளியிட்ட அறிக்கை _ தவறான நேரத்தில் வெளியாகிவிட்டது அல்லது எங்கள் மீதான தவறான விமர்சனத்திற்கும், மக்களின் அதிருப்திப் பார்வைக்கும் அது பயன்பட்டு விட்டது என்பதை மறுக்க முடியாது. ‘நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல’ என்று வைகோ வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டாலும் யாரும் நம்பமாட்டார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டதை அவர் தவிர்த்திருக்கலாம்’’ என்று ஆதங்கப்படுகிறார் ம.தி.மு.க.வின் மாநில நிர்வாகி ஒருவர்.

அரசியல் களம் இப்படி ஒரு புறம் விவாதங்களைக் கிளப்பிவிட, மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். ‘மத்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து செய்த சதிக்குப் பலியாகி விட்டார் கலைஞர். புலிகள் இந்தக் காரியங்களைச் செய்திருக்க மாட்டார்கள்’ என்கிற ரீதியில் வெளிநாட்டு டி.வி. ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறாராம் பழ.நெடுமாறன்!

சரி... கலைஞரை விட்டுக்கொடுக்க முடியாமல், புலிகளையும் ஆதரிக்கும் சிலர் என்ன சொல்கிறார்கள்... என்று கேட்க விரும்பி, அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றால், செல்போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, மற்ற தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டு மௌனம் காக்கிறார்கள் அவர்கள். இதைவிட வேறு நல்ல வழி இப்போதைக்கு அவர்களுக்கு இல்லை என்பதும் யதார்த்தமான உண்மை! ஸீ

ஸீ எஸ்.பி. லட்சுமணன்

ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மீனவர்கள் மாயமான விவகாரத்தில், ஐம்பத்து நான்கு நாட்களுக்குப் பிறகு அதிரடியான திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. ‘தங்கள் சொந்தங்கள் என்ன ஆனார்களோ?’ என தவியாய் தவித்துக் கொண்டிருந்த மீனவ மக்களுக்கு, விடுதலைப்புலிகள் வசம் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கிடைத்திருக்கும் தகவல் ஆறுதலைக் கொடுத்துள்ளது.

காணாமல் போன அந்தப் பன்னிரண்டு மீனவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். கிங்ஸ்லி, கிளமன்ஸ், ததேயுஸ், ஷோசப் தீபக்ராஜ், ஷோசப் ததேயுஸ், அனிஸ்டன், ஷேம்ஸ், ஆகிய ஏழு பேர் குமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்தவர்கள், ஏசுதாசன், ஆல்பர்ட், பிராங்ளின் ஆகியோர் குளச்சல் அருகேயுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர சந்தியாகு ராயப்பன் என்பவர் தூத்துக்குடிக்காரர்.

இந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியிருக்கும் தமிழக அரசு, மீனவர்கள் மீண்டு வரும்வரை குடும்பச் செலவுக்காக மாதம் தோறும் ஆயிரத்து ஐநூறு ரூபாயும் வழங்குவதாக அறிவித்திருப்பது பாதிக்கப்பட்ட மக்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது.

புலிகள் வசம் சிக்கியுள்ள மீனவர்களில் ஒருவரான கோடி முனையைச் சேர்ந்த ததேயுஸ் மனைவி புஷ்பராணி, ‘‘மீனவக்குடும்பங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு வேலை இருக்காது. அதனால்தான் கடல் தொழிலுக்குச் செல்லும் ஆண்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் என்றால் குடும்பமே தவித்துப் போகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழகஅரசு எங்களுக்கு உதவியதையும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க உதவியதையும் மறக்க முடியாது. அவங்க உயிரோடு இருக்காங்கன்னு தெரிஞ்ச பிறகுதான் எங்களால சிரிக்கவே முடியுது’’ என்றார், பாதி சந்தோஜத்துடன்!

அதே சமயம், ‘மார்ச் 29_ம் தேதி குமரி மீனவர்கள் ஐவரைச் சுட்டதும் புலிகள்தான்; பன்னிரண்டு பேரைக் கடத்தியதும் புலிகள்தான்’ என்பதை இன்னமும் மீனவப் பிரதிநிதிகளால் நம்ப முடியவில்லை. இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய குறும்பனை பங்குத்தந்தையும், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு கன்வீனருமான சர்ச்சில், ‘‘கடந்த காலங்களில் அப்படி எந்தத் தொந்தரவும் புலிகளிடமிருந்து வந்ததில்லை என்பதால், இதனை நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. நான் இதுபற்றி டி.ஜி.பி., கியூ பிராஞ்ச் எஸ்.பி. ஆகியோரிடம் பேசினேன். உயர் அதிகாரிகள் அறுதியிட்டுச் சொல்லும் போது நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. இனியாவது இப்படி அடிக்கடி காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க குமரியில் ஹெலிகாப்டர் தளம், அதிவேகப் படகு போன்ற வசதிகளைச் செய்ய வேண்டும்!’’ என்றார் ஃபாதர் சர்ச்சில்.

இது ஒருபுறமிக்க... புலிகள் வசமுள்ள பன்னிரண்டு மீனவர்களையும் பத்திரமாக மீட்பதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள், விவரமறிந்தவர்கள். புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், மீனவர்களை இலங்கை அரசிடம் அவர்கள் ஒப்படைக்க வாய்ப்பு இல்லை. இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ நேரடியாகப் புலிகளிடம் பேச்சு நடத்தவும் வெளியுறவுக் கொள்கை இடம் கொடாது. எனவே புலிகளாகப் பார்த்து வேறு வகையில் விடுவித்தால்தான் மீனவர்கள் மீண்டு வர வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

புலிகளுக்கும், தமிழக மீனவர்கள் மீது பகை இருக்க வாய்ப்பில்லை. தங்களின் ஆயுதக் கடத்தலுக்கு அவசரமாகப் படகு தேவைப்பட்டதாலேயே மீனவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இப்போது திடுதிப்பென புலிகள் அவர்களை விடுவித்தாலும், இலங்கை கடற்படையின் கண்காணிப்பை மீறி மீனவர்கள் கடல் மார்க்கமாக தமிழகம் வந்து சேர்வது அபாயகரமான விஜயம்தான். இதற்கிடையே, குமரியைச் சேர்ந்த பாதிரியார்கள் சிலர், இந்த விவகாரத்தை இலங்கையின் மன்னார் மறைமாவட்ட பிஜப்பின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்கிறார்கள். அந்த பிஜப் தரப்பினரும்கூட, ‘புலிகளிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது’ என்றே கூறுகிறார்களாம்.

எது எப்படியோ, ராஜீவ் கொலைக்குப் பிறகு தமிழகத்தில் தங்களுக்கு இருந்த தார்மீக ஆதரவைப் பெருமளவில் இழந்துவிட்ட புலிகளுக்கு, இது மற்றுமொரு சறுக்கல்தான். குறிப்பாக மார்ச் 29_ல் குமரியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களைச் சுட்டுக் கொன்றதும் புலிகள்தான் என்கிற தகவல் மீனவ மக்களால் ஜீரணிக்கவே முடியாத விஜயமாகியிருக்கிறது. அந்த அவப்பெயருக்கு லேசான பரிகாரம் தேடும் நோக்கிலாவது இந்தப் பன்னிரண்டு மீனவர்களையும் புலிகள் பத்திரமாக அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.

நன்றி - குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.