Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை – குழம்பிய குட்டையில் பிடிக்க நினைக்காத மீன்

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88.jpg?w=1170&sசினிமா அழகியல் சார்ந்தது. அழகியல் புரிதலுடன் தொடர்புடையது. ஐம்புலன்களையும் ஈர்க்கும் ஒரு விஷயம் நமது அறிவை சென்று அடையாவிட்டால் எஞ்சுவது குழப்பம் மட்டுமே. நன்னெறிகள் ஒற்றைத் தன்மை கொண்டவை. அழகியல் மீது ஒற்றைத் தன்மையை புகுத்தினால் கிடைப்பதோ அபத்தம். குழப்பமும் அபத்தமும் மிகச்சரியான அளவுகளில் சேர்க்கப்பட்டிருந்த படம், சினிமா விரும்பிகளின் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆடை.

படத்தின் மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை வைத்தாலும் படம் ரசிக்கும்படியாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. படத்தின் முதல் பாதியில் வரும் பகடிகள் – காமினியின் தாய் பெமினிசமா, கம்யூனிசமா என்று தெரியாமல் ஏதோ ஒரு படத்தில் வரும் ஒரு வசனத்தை சொல்லுவது, ஆவேசமடைந்த டீக்கடைக்காரர் ‘பார்த்து பேசு பின்னாளில் நான் பிஎம் ஆகக்கூடும்’ என்பது போன்றவை – பொது ஜனத்தின் மனதை பிரதிபலிப்பதாய் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தின் இரண்டாம் பாகம் காமினி ஆடைகள் இல்லாமல் அந்தப் பெரிய கட்டிடத்தில் இருந்து வெளியே வர வழி இல்லாமல் உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியாமல் சிக்கி தவிக்கும் காட்சிகள் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டிருந்தது. இந்து ஆங்கில நாளேட்டில் இப்படத்தை விமர்சனம் செய்து எழுதியிருந்தவர் இக்காட்சிகள் துன்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் குறியீடு என்று அழகாக விளக்கி எழுதி இருந்தார். அது படத்திற்கு பொருத்தமான பார்வை. காமினியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அமலாபால் படம் முழுவதையும் தனது தோள்களில் நேர்த்தியாக சுமக்கிறார். அவருக்கும் நடிகர் நடிகையரின் திறனை வெளிக்கொணர்ந்த இயக்குனருக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். படத்தில் அடிக்கடி அடல்ட் ஜோக்ஸ் வைத்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்லாமல் அவை ஆபாசமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டது படக்குழுவின் சித்தாந்த தெளிவை காட்டுகிறது. 

இவ்வளவு தெளிவான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் முடியும் தருவாயில் சொல்வதெல்லாம் சமூக சீர்கேட்டிற்கு காரணம் பெண்கள் அடைந்திருக்கும் சுதந்திரம்தான். அது எல்லையை விட்டு மீறுவது கூடாது; அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இது ஒன்றும் புதிதல்ல. ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு மனநலம் குன்றிய குழந்தை பிறக்கும் என்ற கருத்திற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. தமிழ்சினிமாவில் பொறுப்பற்ற தன்னலம் மிக்க செய்கைகளை செய்யும் பெண்கள் அனைவரும் பெண்ணியம் பேசுவது ஒன்றும் தற்செயல் இல்லை.

ஒரு ஜனரஞ்சகமான படத்தை கொடுக்கும் முனைப்பு படத்தின் பல இடங்களில் வெளிப்படுகிறது. படத்தின் முற்பகுதி முழுவதுமாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக நிறைய இளமை ததும்பும் கலாய்ப்பு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. அதனூடாக மையப் பாத்திரம் காமினியின் குணநலன்களும் அழுத்தந்திருத்தமாக பார்வைக்கு வைக்கப்படுகிறது. இது ஒரு கனமான வலி நிறைந்த படம் இல்லை என்பதை காண்பிப்பதற்காகவே பிற்பகுதியில் மயங்கி விழும் தாய் காப்பாற்றப்படுகிறார்.

பெண்கள் இன்று அடைந்திருக்கும் சுதந்திரம் பல கட்ட போராட்டத்திற்கு பின் பெறப்பட்டது என்பதை முன்னுரையில் நங்கேரியின் கதை மூலமாக மிக ஆழமாக பதிவு செய்கிறார் இயக்குனர்.

அதன் தொடர்ச்சியாகவே இந்நாள் நங்கேரி கூறுகிறார், “நீ ஆடையாவது மண்ணாவது என்று வெளியே வருவாய் என்று நினைத்தேன். ஆனால் நீ அவ்வளவு மோசமில்லை.” இந்த இடத்தில் வெளிப்படுகிறது கதாசிரியரின் பெண்ணிய பார்வை. ஒருவகையில் அவர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள விரும்பாத பழமைவாதியாகவே இருக்கிறார். பெண்ணியத்திற்கும் சமூக சீர்கேட்டிற்கும் ஆழமான தொடர்பு இருப்பதாக அழுத்தமாக நம்புகிறார். இதற்கு காரணம் பெண்ணியம் என்பது ஊடகங்கள் பொது ஜனத்திற்கு காட்டுவதுதான் என்ற புரிதல். அதாவது பெண்ணியத்தில் நம்பிக்கை உள்ள பெண்கள் மணம் புரிந்து கொள்ளமாட்டார்கள்; குடிப்பார்கள்; நிறைய ஆண்களுடன் நட்பு வைத்திருப்பார்கள்; அந்தரங்கத்திற்கும் பொதுவெளிக்கும் உள்ள வேறுபாட்டை கடைப்பிடிக்க மாட்டார்கள்; ஆண்கள் செய்யும் வேலைகளைச் செய்து காட்டி தங்களது திறமையை நிரூபிக்க விரும்புபவர்கள்; எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் உறவுகளில் வாழ்பவர்கள்; எப்போதும் தங்களின் ஆதிக்கத்தை அடுத்தவர்கள் மேல் திணிப்பவர்கள்; வீட்டில் பெரியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் என்பதாகச் சில கருத்தியல்கள் பெண்ணியத்தின் மேல் தொடர்ந்து பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் ஒன்றுவிடாமல் நமக்கு படத்தில் காட்டுகிறார் இயக்குனர். 

ஆனால் இவர் புரிந்துகொள்ள விரும்பாத ஒரு விஷயம் பெண்ணியத்தின் வகைபாடுகள். பெண்கள் அனைவரும் அடிமைப்படுத்தப்பட்டதில் சகோதரிகள் என்ற தட்டையான கட்டமைப்பின் பாதிப்புகள் தான் இந்த குழம்பிய குட்டை.

வரலாற்று நங்கேரியின் போராட்டம் பெண்உரிமை மட்டுமல்லாது அவளது சாதி விடுதலை சார்ந்த போராட்டமும் கூட. ஆனால் காமினியோ ஒடுக்கப்பட்ட சாதி என்ற தொடர் மத்தின் வெளியே நிற்கிறாள். அவள் அதிகப்படியான ஆடைகளால் போர்த்தப்பட்டு மூச்சுத்திணறி வெளியேவர நினைப்பவள். தற்கால நங்கேரி விளிம்புநிலை வாழ்க்கையில் இருந்து வெளிவர அதிகார கயிற்றினைப் பற்ற நினைப்பவள். காமினி ஒடுக்குமுறை பற்றிய சிறிய புரிதல் கூட இல்லாதவள். இவர்கள் இருவரும் இணைவது சாத்தியமா என்று சிந்தித்தால் இயக்குனரின் பார்வை சாத்தியம் என்பதாகவே காட்டுகிறது. அதாவது காமினிகள் தங்களது சுதந்திரத்தை ஒடுக்கப்படும் பெண்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தினால் சாத்தியம் என்பதாக படம் முடிகிறது. நம் முன்னே இரண்டு கேள்விகள் இருக்கிறது: 1. காமினிகள் முன்வருவார்களா? 2. நங்கேரிகள் காமினிகளை நம்புவார்களா? 

அது ஒருபுறம் இருக்கட்டும். நமது குட்டை எதனால் குழம்பியது என்று பார்ப்போம். இளைஞர்களால் ரசிக்கக்கூடிய ஒரு படம்; முற்போக்கான கருத்தை முன்வைக்க விழையும் ஒரு படம்; அதேநேரம் சமூக ஒழுங்கைச் சீர் குலைக்காத ஒரு படம்; சமுதாயத்திற்கு ஒரு கருத்தைச் சொல்லும் படம்; இன்றைய முதலாளித்துவ அரசியல் மனோபாவத்தை பகடி செய்யும் ஒரு படம்; பொதுவெளியில் ஆபாசம் என்று கருதுபவை பெரும்பாலும் நெருங்கிய வட்டாரங்களில் மிக இயல்பாக எடுத்துக்கொள்ளப் படுபவை. அவற்றை மூடி மறைக்காமல் பொதுவெளியில் போட்டு உடைக்கும் ஒரு படம்; விளிம்புநிலை மக்களை விலக்காத ஒரு படம் என்று ஒரே நேரத்தில் பல கம்பிகள் மேல் நடக்க முயற்சித்திருக்கிறார் கதாசிரியர். சமூகம் வகுத்திருக்கும் சட்டகத்தினுள் இருந்துகொண்டே புரட்சிகள் செய்வது என்பது பொதுவாக சாத்தியமில்லை.

ஜனரஞ்சகமான ஒரு படத்தை யார் மனதையும் புண்படுத்தாமல் எடுக்கலாம். உதாரணமாக நானும் ரவுடி தான் படத்தை சொல்லலாம். அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்பட்ட இந்த படம் யார் மனதையும் புண்படுத்தவில்லை. சமூகத்திற்கு கருத்து சொல்லும் ஒரு படத்தை நகைச்சுவை உணர்வோடு எடுக்கலாம். ஆனால் இவ்விரண்டு வகையான படங்களிலும் தான் எடுக்க விழையும் படம் எது என்ற தெளிவு கதாசிரியருக்கு அல்லது இயக்குனருக்கு இருக்க வேண்டும். அப்படி இருக்குமானால் கோர்வையான ஒரு கதை கிடைக்கும். இல்லாது போனால் வெறும் கலங்கிய குட்டைதான். படத்தில் நிர்வாண அம்சத்தை மையப்படுத்தி பிற நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளது.

நடிகர்களை முன்னிலைப்படுத்தி படங்களை எடுப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதில்லை. பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவையே. நண்பன் போன்ற படங்களில் நடிகர் விஜய் பிரதானமாக தெரிந்தாலும் அதில் அவர் முன்னிலை படுத்தப்பட்ட ஒரு மைய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதை நம்மால் காண முடியும். பஞ்சவன் பாரிவேந்தனை தீர்க்கமான கருத்துக்களும் கொள்கைகளும் இயக்கும். இதற்கு நேர் எதிராக அறம் போன்ற படத்தை பார்க்கலாம். படம் துவங்கும் பொழுது விளிம்புநிலை மக்களின் வாழ்வை காண்பிப்பது போல் துவங்கி முடியும் பொழுது அனைத்து வித சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு மக்களை ஆட்டுவிக்கும் அதிகாரம் படைத்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி தான் நினைத்தது போல மக்களுக்கு பணியாற்றும் சுதந்திரம் இல்லாதவராக இருக்கிறார் என்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொடி பிடிக்கும். இதுதான் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடிப்பதற்கும், ஒரு நடிகருக்காக ஒரு கதை உருவாக்கப்படுவதற்குமான வித்தியாசம். சில கதாசிரியர்கள் ஒரு நடிகருக்காக ஒரு கதையை உருவாக்கினாலும் அது அப்பட்டமாய் தெரியாத வண்ணம் கோர்வையான சம்பவங்களின் மூலம் அழகானதொரு படைப்பை பார்வையாளர்களுக்கு அளிக்கிறார்கள். பலசமயம் அது அறம், ஆடை போன்று குழப்பத்தில் சென்று முடிகிறது.

ஆடை படத்தைப் பற்றிய பல விமர்சனங்களில் ஒன்று அதில் ஒரு கோர்வையான கதை இல்லாதது என்பது. அது பற்றி பரவலாக பேசப்பட்டு இருந்தபோதிலும் அதே விஷயத்தை மீண்டும் இங்கு பேச காரணம் அது பெண்களின் சுதந்திரத்தின் மேல் எழுப்பும் சந்தேகங்களும் தற்சார்பை விரும்பும் பெண்களை ஆதரிப்பது போல் அவர்களுக்கு அறிவுரை கூறும் பிற்போக்கு வாதமும் தான். இதை சொல்லும் பொழுதே நம் முன் ஒரு கேள்வி நிற்கிறது. காமினி போன்ற பெண்கள் செய்வது சரியா என்பது. அதன் கூடவே வரும் பெண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தாக்கம். இதை சற்று தலைகீழாக யோசித்துப் பார்க்கலாம். காமினி போன்ற பொறுப்பற்ற சுயநலமான செயல்களில் ஈடுபடும் ஆண்களை என்ன சொல்லி இந்த சமுதாயம் வசை பாடுகிறது? ஆண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தை நாம் எப்போதாவது கேட்டிருக்கிறோமா? மாறாக பணத்திமிரில் செய்கிறான் அல்லது அந்த ஆண் நாம் விரும்பாத ஒரு சாதியை, மதத்தை அல்லது மொழியை சார்ந்தவராக இருந்தால் இவர்களின் ஆட்டம் அதிகமாகிறது என்பதுதான் மிகைப் படியான கண்டனமாக இருக்கும். இரு பாலருக்குமான வாசவுகளிலும் நாம் மிக கச்சிதமாக மறந்துவிடுவது இதுபோன்ற விஷமமான விளையாட்டுகளை ஊக்குவிற்பவர்களை. அதில் முக்கிய பங்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளை ரசிக்கும் சமூகமாகிய நமக்கும் உண்டு. நம்மைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெண்களுக்கு கொடுத்த சுதந்திரம் என்று கிடைத்தவர் மேல் பழி போடுவது கறந்த பாலினும் சுத்தமான அயோக்கியத்தனம். 

ஆப்பிரிக்க அமெரிக்க அறிஞர் எழுத்தாளர் பெல் ஊக்ஸ் சொல்லுவார் “பெண்ணியம் என்பது அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும் எதிரானது” என்று. அப்படி இருப்பது ஒன்று மட்டுமே விடுதலையை நோக்கி இட்டுச்செல்லும் பாதையாக இருக்க முடியும். ஒடுக்குமுறையையும் அக்கறையின்மையையும் சுயநலத்தையும் பரப்பும் எதுவும் விடுதலைப் போராட்டம் ஆகாது. அப்படி முன்னிறுத்தப்பட்டால் அது விசாரிக்கப்பட வேண்டிய உள்நோக்கம் கொண்டது. 

இப்போது நாம் முதலில் பார்த்த இரண்டு கேள்விகளுக்கு வருவோம். முதல் கேள்வி காமினி நங்கேரிக்கு உதவிட முன் வருவாளா என்பது. படம் நமக்கு முன் வருவாள் என்பதையே காட்டுகிறது. அதேபோல நங்கேரியும் காமினியை நம்புவார் என்று முடிகிறது. அதை தனிப்பட்ட இருவரின் முடிவாக விட்டுவிடுவோம்.

அத்தோடு நில்லாமல் படம் ஒரு படி மேலே சென்று காமினி தனது தனிப்பட்ட வாழ்க்கைமுறையை விட்டுக் கொடுக்காமல் தான் செய்யும் வேலையை சற்று மாற்றிக் கொண்டாள் என்று பார்க்கிறோம். சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை தனது உணர்வுகளை, பாதுகாப்பை பணயம் வைத்து உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுபவராக காமினி தன்னை மாற்றிக் கொள்கிறார். வாய்ப்பு கேட்டு செல்லும் பாடலாசிரியரின் வீட்டில் இருந்து வெளியேறும் காமினி அழுது கொண்டே வருகிறார். உள்ளே என்ன நடந்தது என்பதை நம்மால் உணர முடியும். 

தவறை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் பொறுப்பை காமினி போன்று தற்சார்புடன் வாழும் பெண்கள் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்? அவருக்கு கணவன் குழந்தைகள் போன்ற சுமைகள் இல்லாததாலா?

 

https://solvanam.com/2019/09/14/ஆடை-குழம்பிய-குட்டையில்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.