Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

Presidential-Election-2019-e157138860745

 

1.தேசியப் பாதுகாப்பு

இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம்.

இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும்?

(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன? (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன? (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா? (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை? (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை? (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன?

2. நாடாளுமன்றம்

19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை

(I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன? (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா? (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன?

3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம்.

குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும்.

(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன? (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா?

4. கல்வி

கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது.

மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது.

பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை.

(I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன? (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை?

5. பால் மற்றும் இறைச்சி

இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும்.

இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும்.

மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும்.

(I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா?

6. குப்பைப் பிரச்சினை

தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன.

(I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன?

7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில்

விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன.

எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும்.

(I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன?

8. குற்றவியல் வழக்குகள்

முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன?

(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா? அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

9. அரசியல்யாப்பு

தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது.

(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும்? அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா?

Victor-Ivan.jpg?resize=90%2C114&ssl=1விக்டர் ஐவன்
 

 

https://maatram.org/?p=8141

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.