Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடை வழங்கவில்லை; விடை பெறுகின்றார்

காரை துர்க்கா   / 2019 நவம்பர் 12

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலை, இன்னும் ஐந்து நாள்களில் இலங்கை எதிர்கொள்ள உள்ளது. கடந்து வந்த ஏழு ஜனாதிபதித் தேர்தல்களில், 1994 முதல் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்கள், தமிழ் மக்களின் பார்வையில் மாறுபட்டு நோக்கப்பட்டவைகள் ஆகும்.  

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கம், இருட்டுக்குள் வாழும் தங்களுக்கு,விடியலும் வெளிச்சமும் கிடைக்கப் போகின்றன என, தமிழ் மக்கள் உள்ளூர மிகப் பாரிய எதிர்பார்ப்புகள், நம்பிக்கைக் கோட்டைகளைக் கட்டிய ஜனாதிபதித் தேர்தல்கள் ஆகும்.  

1983ஆம் ஆண்டு, தெற்கில் வெடித்த இனக்கலவரம், 1987இல் இந்தியப் படைகளின் வருகையும் இந்தியா - புலிகளுக்கு இடையிலான போரும், மீண்டும் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவம் புலிகள் போர் என, 1983ஆம் ஆண்டு தொடக்கம், 1993ஆம் ஆண்டு வரையான பத்து ஆண்டு காலம், போரால் அழிந்து, சிதைந்து, நொந்து தமிழினம், அமைதி, சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.  

இதேபோல, நான்காம் கட்ட ஈழப்போராக, 2006இல் தொடங்கி 2009 மே 18 முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் துர்ப்பாக்கிய நிலை வரை, வார்த்தைகளில் வடிக்க முடியாத, மனிதம் முழுமையாக மரணித்த பேரவலத்தைக் கண்டு, அதன் பின்னரும் 2015ஆம் ஆண்டு வரை, மூச்சு விடக் கூட மூச்சை அடக்கிய தமிழினம், சமாதானத்தை எதிர்பார்த்து, ஆட்சி மாற்றத்தை வேண்டி நின்றது; அதனை வரவேற்றது.  

இந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்கள் மீது, தமிழ் மக்களது நம்பிக்கைகள் அதிகரித்தமையால் வாக்களிப்பு சதவீதமும் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், ஒருவித இனம் புரியாத எழுச்சி, தமிழ் மக்களிடையே உணரப்பட்டது.  

அத்துடன், ஏனைய தேர்தல்கள் போலின்றி, 2015 தேர்தலில் தெற்கின் இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, தேசிய அரசாங்கம் அமைக்கப் போகின்றன. ஆகவே, இனி இந்நாட்டில் இனப்பிரச்சினை இருக்காது என்ற உணர்வு, தமிழ் மக்கள் மத்தியில் உயர்வாகக் காணப்பட்டது.  

ஆதலால், 2015 ஜனவரி எட்டில் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம், திண்ணமாக இருந்தது. ஆனால், தமிழ் மக்கள் கட்டியவைகள் எல்லாமே, வெறும் மணல் கோட்டைகள் என, காலம் உறைக்க உரைத்து விட்டு, அமைதியாகக் கடந்து செல்கின்றது.  

பொதுவாக, இந்நாட்டில் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல்களில், பெரும்பான்மை மக்கள் ஒரு கோணத்திலும் சிறுபான்மை மக்கள் பிறிதொரு கோணத்திலும் வாக்களித்து வந்துள்ளார்கள்; வருகின்றார்கள்.  

சம்பள அதிகரிப்பு, வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, உரத்திலிருந்து உப்பு வரை விலைக் குறைப்பு, தரமான சுகாதார சேவைகள், உயர்வான கல்விச் சேவைகள் எனப் பெரும்பான்மை மக்களின் தேவைப் பட்டியல் தொடர்கின்றது.  பெரும்பான்மை மக்களுக்கு உள்ள அதே அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, நிலஅபகரிப்பும் காணிகள் விடுவிப்பும், கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என முடிவுகள் இன்றி நீட்சி பெறுகின்றன, தமிழ் மக்களின் பிரச்சினைகள்; இவை இனப்பிரச்சினையின் விளைவுகளாகும்.   

ஆகவே, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி தங்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவராக இருக்க வேண்டும் எனப் பெரும்பான்மை மக்கள் எதிர்பார்க்கின்றர். அதேவேளை, தெரிவாகப் போகின்ற ஜனாதிபதி, தங்களுக்குப்  புதிய வாழ்வையே வழங்க வேண்டும் எனத் தமிழ் மக்கள் பாரிய அங்கலாய்ப்புடன் வாக்களித்து வருகின்றார்கள்.  

பிரித்தானியரின் வெளியேற்றத்தோடு, இனப்பிரச்சினை இலங்கையில் உள் நுழைந்தது. ஏனெனில், 1948இல் நாடு சுதந்திரமடைந்த அடுத்த ஆண்டே விவசாய விரிவாக்கம் எனும் போர்வையில், காணி அபகரிப்புக்கும் குடியேற்றத்துக்கும் அம்பாறையில் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதன் நீட்சியாக, நாடு 1978ஆம் ஆண்டளவில், இரண்டு இனக் கலவரங்களைக் (1956, 1977) கண்டது.  

இந்நிலையில், 1978ஆம் ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அன்று, அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ், நான்கு தசாப்தங்கள் (41 ஆண்டுகள்) கடந்து, நாடு ஆளப்பட்டு வருகின்றது.  

“ஆணைப் பெண்ணாக்க முடியாது; பெண்னை ஆணாக்க முடியாது; இதனைத் தவிர இது (ஆட்சி முறை), அனைத்தையும் செய்யும்” என, முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியும் ஜனாதிபதி ஆட்சி முறைமையை உருவாக்கியவருமான ஜே. ஆர் ஜெயவர்தன கூறிப் பெருமை கொண்டார்.  

இவ்வாறாக, 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பும் ஜனாதிபதி ஆட்சி முறையும் அப்படிப்பட்ட உச்ச அதிகாரங்களை, ஜனாதிபதிக்கு  வழங்கியிருந்தாலும், ஆட்சி புரிந்த எவருமே அதைக் கொண்டு, இனப்பிணக்கைச் சுமூகமாகத் தீர்க்க முயலவில்லை.  

இந்நிலையில், அன்று தொட்டு இன்று வரை, தமிழ் மக்களை வெறும் 12 சதவீதமான சிறுபான்மை மக்களாகவே, பேரினவாதம் பார்த்துப் பழகி விட்டது. மாறாக, வரலாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட, ஒரு தேசிய இனமாகத் தமிழ் மக்களை, இன்னமும் பேரினவாதம் பார்க்கவும் இல்லை; பார்க்கப் போதும் இல்லை.  

முன்னைய ஜனாதிபதிகளான ஜே. ஆர் ஜெயவர்தன, சந்திரிகா குமாரணதுங்க, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சி புரிந்து உள்ளார்கள். ரணசிங்க பிரேமதாஸ ஒரு முறையும் (ஆட்சி முடியும் முன்னர் அமரராகி விட்டார்) இறுதியாகத் தற்போதைய மைத்திரிபால சிறிசேன ஒரு தடைவையும் ஆட்சி புரிந்து உள்ளார்கள்.  

இந்நிலையில், 2015 ஜனாதிபதித் தேர்தலில், தான் தோல்வி அடைந்திருந்தால், காணாமல் போயிருப்பேன் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் என, வெற்றி ஈட்டிய பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

அவ்வகையில், ஜனாதிபதி காணாமல் போகாமலும், சிறையில் அடைக்கப்படாமலும் நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியை அடையவும் அலங்கரிக்கவும் சிறுபான்மை இனத்தவர்களே அனுமதியும் அங்கிகாரமும் வழங்கினார்கள்.  

அக்காலப் பகுதியில், எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இனப் பிணக்குக்குப் பரிகாரம் காணும் பொருட்டு, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிக்கு, எதிர்க்கட்சியாக இல்லாது ஆளும் தரப்பின் ஓர் அங்கமாக இருந்து, பெரும் உதவியும் ஒத்தாசையும் புரிந்தார்கள்.  

உண்மையில் அரசியல்த் தீர்வு விடயங்களை யாருமே புறக்கணிக்க முடியாது. இது, இலங்கையின் முதலாவது பிரதமர் தொடக்கம், இன்றைய ஜனாதிபதி வரை அனைவருக்கும் பொருந்தும்.  

ஆனால், உத்தேச புதிய அரசமைப்பு விடயத்தில், ஜனாதிபதி பெரிதாகக் கவனம் காட்டவில்லை. இன்று புதிய அரசமைப்பு கருவில் கலைந்த விடயமாகப் போய் விட்டதாகவே, தமிழ் மக்கள் கருதுகின்றனர்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்கள் விடயத்தில் ஒன்றும் செய்யவில்லை எனக் கூற முடியாது. ஆனாலும், யானைப் பசியாக உள்ள தமிழ் மக்களது தேவைகளுக்குச் ‘சோளப்பொரி’ போட்டு விட்டே செல்கின்றார்.  

நாட்டின் ஜனாதிபதி என அவருக்கு இருந்த உச்ச அதிகாரங்களைக் கொண்டு, பறிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, முன்னாள் போராளிகள் மறுவாழ்வு, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் விவகாரம், என இன்னும் பல விடயங்களில் (சிறப்பக்) கூடுதல் கவனம் செலுத்தி, கருமங்களை முடித்திருக்கலாம்.  

2015 ஜனவரி எட்டில் மைத்திரிபால சிறிசேனவுக்குத் தமிழ் மக்கள் துடிப்புடன் வாக்களித்தமையால், ஜனாதிபதிக்கு மறுவாழ்வு கிடைத்தது. ஆனால், தனக்கு மறுவாழ்வு வழங்கிய தமிழ் மக்களுக்குத் தன்னால் இயன்ற அளவிலேனும், புதுவாழ்வு வழங்க ஜனாதிபதி பின்னடித்து விட்டார் அல்லது முன்வரவில்லை என்றே, தமிழ் மக்கள் வருந்துகின்றார்கள்.  

“நானே யுத்தத்தை முடித்து வைத்தேன்” எனக் கூறுவதில், பெருமையும் புகழும் அடைய முற்படுகின்ற எந்தவொரு பெரும்பான்மையைச் சேர்ந்த நபரும், “நானே, தீராத இனப்பிணக்கைத் தீர்த்து வைத்தேன்” எனப் பெருமை அடைய விரும்பவும் இல்லை; முயலவும் இல்லை.  

இதுவே, இலங்கையின் அரசியல் நிலைவரம். என்னதான், தமிழ் மக்களது கோரிக்கைகள் நியாயமானவைகளாக இருந்தாலும் அவை அநியாயமாக மறுக்கப்படுகின்றன. 2009 வரை காலமும் தமிழ் மக்களது கோரிக்கைகளை, பயங்கரவாதமாகச் சித்திரித்து, சிங்கள மக்களிடம் திரித்துக் கூறினார்கள்.  

இன்று தமிழ் மக்கள், தங்களது நீதியான நியாயமான தேவைகள், கோரிக்கைகளை முன்வைத்தால், அவை புலிகளது கோரிக்கைகளைக் காட்டிலும், அதிகமானது எனப் பொய் உரைக்கின்றார்கள்.  

இந்நிலையில், ஐந்து ஆண்டுகள் ஜனாதிபதியாகக் கடமையாற்றிய ஜனாதிபதி, இன்னும் ஐந்து நாள்களில் விடை பெறுகின்றார். “என்னால் விடை அளிக்க முடியும்” என, ஜனாதிபதியால் அன்றைய தேர்தல் பரப்புரைக் காலங்களில் கொட்டப்பட்ட வாக்குறுதிகள், இன்னமும் அவ்வாறாகவே உள்ளன.  

ஆகவே, புதிதாதக இன்னமும் ஐந்து நாள்களில் பதவி ஏற்கவுள்ள புதிய ஜனாதிபதி பொறுப்புக் கூறுவாரா?   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விடை-வழங்கவில்லை-விடை-பெறுகின்றார்/91-240932

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.