Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம் ” - நெகிழ வைக்கும் உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டி.இமான்: “உடல் எடையைக் குறைப்பு, திருமூர்த்திக்கு வாய்ப்பு, விஜய்பட அனுபவம் ” - நெகிழ வைக்கும் உரையாடல்

இமான்

2000வது ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக மேலேறிவரும் க்ராஃப் இசையமைப்பாளர் டி. இமானுடையது. விஸ்வாசம் படத்தில் இமானின் பின்னணி இசையும் பாடல்களும் தற்போதும் பேசப்பட்டுவரும் நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு இசைமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் இமான். பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:

கே. 20 வயசுலயே சினிமாவுக்கு வந்துட்டீங்க. முதல் சில படங்களிலேயே விஜய் நடித்த தமிழன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்புக் கிடைத்துவிட்டது. அந்த ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தன?

ப. ஆரம்ப கால நாட்கள் மிகச் சிரமமாகத்தான் இருந்தன. அந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸாகும் போது எனக்கு 19 வயது. படம் வெளியாகும்போதுதான் 20 வயது. அதற்கு முன்பு, தொலைக்காட்சிகளுக்கு பணியாற்றிக்கொண்டிருந்தேன். சினிமாவில் முதலில் இசையமைத்த படத்தில் பாடல்கள் நன்றாக இருந்தும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அந்த காலகட்டத்தில் ஒரு படம் நன்றாக ஓடவில்லையென்றால், அந்தப் படத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்குமே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பது கடினமாக இருந்தன. அவர்கள் காணாமலேயே போய்விடுவார்கள்.

முதல் நான்கைந்து படங்கள் வரை பாடல்களும் நன்றாக இருந்து, படமும் நன்றாக ஓடிய காம்பினேஷன் எனக்கு அமையாமலேயே இருந்தது. அப்போதுதான் கிரி வெளியானது. அந்தப் படம் ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலுமே நன்றாக ஓடிய திரைப்படமாக இருந்தது. அதற்குப் பிறகு, எல்லாமே மாறியது.

கே. உங்களுடைய கேரியரைப் பொறுத்தவரை மைனா ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்தது. மைனாவுக்கு முன், மைனாவுக்குப் பின் என உங்கள் கேரியரைப் பிரிக்கலாமா?

ப. பொதுவாக ஒரு இசையமைப்பாளரைப் பொறுத்தவரை, யார் இவர், பாடல்கள் நன்றாக இருக்கிறதே என கேட்க வைக்க வேண்டுமானால், அதற்கு ரொமான்டிக் படங்கள் தேவைப்படுகின்றன. அப்படி ஒரு படம் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. அந்த நேரத்தில்தான் பிரபு சாலமனின் மைனா அமைந்தது. அது காதல் திரைப்படமாக மட்டும் இல்லாமல், கிராமப் பின்னணியில் அமைந்த படமாகவும் இருந்தது. இப்போது நிறைய கிராமியப் பின்னணி கொண்ட பாடல்களைக் கொடுத்துவிட்டாலும் மைனாதான் துவக்கமாக இருந்தது. அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டாயின. அதனால்தான், மைனாவுக்கு முன், மைனாவுக்குப் பின் எனப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

இமான்

கே. இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் மிகப் பெரிய ஹிட், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து சிவா இயக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்கிறீர்கள்.. இதனை உங்கள் கேரியரின் உச்சகட்டம் எனச் சொல்லலாமா?

ப. நான் அப்படிப் பார்க்கவில்லை. நான் திரைப்படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பிக்க முன்பே, சிறிய சிறிய பாடல்கள், விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த காலத்திலேயே நான் விரும்பியதைச் செய்துகொண்டிருக்கிறேன் என்ற நிறைவு எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை இசையோடு இணைந்து இருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம்தான். நான் ஒரு ஆர்ஜேவாக ஒரு எஃப்எம் சேனலில் பணியாற்றினால்கூட, இதே நிறைவோடு இருந்திருப்பேன். அதற்குப் பிறகு எல்லாமே இறைவன் எனக்குப் போட்ட பிச்சையாகத்தான் நினைக்கிறேன்.

இதைச் சாதித்தால்தான், வாழ்க்கையில் ஒன்றைச் சாதித்ததாக நான் நினைப்பதில்லை. ஒரு சின்ன விளம்பரப் படமாக இருந்தால்கூட, அதை நன்றாகச் செய்தால்போதும் என்று நினைப்பேன்.

இமான்

கே. புதிதாக நடிக்க வரும் நடிகர்கள், இயக்குனர்களின் படங்களுக்கு உங்கள் பாணியில் இசையமைப்பது அல்லது பெரிய நடிகர்களின் படங்களுக்கு அவர்கள் சொல்லும் வகையில் இசையமைப்பது - இந்த இரண்டில் எது மிக சவாலானது?

ப. இரண்டிலுமே சவால்கள் இருக்கின்றன. புதிய நடிகர், இயக்குனர் என்றால் எந்த பிம்பமும் இருக்காது. இசையமைப்பாளருக்கு ஒரு சுதந்திரம் இருக்கும். ஆனால், அந்தப் பாடல் மக்களிடம் சென்று சேர்ந்து, பிரபலமாகும் வகையில் இருக்க வேண்டும். முழுக்க முழுக்க இசைமைப்பாளரின் திறமையால் அந்தப் பாடல் வெல்ல வேண்டிய கட்டாயம் அதில் உண்டு. ஆனால், பெரிய நடிகரின் படங்களுக்கு இசை அமைக்கும்போது அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும். உடனே நிறைய பேர் கேட்பார்கள். ஆகவே, அந்தப் பாடல் நல்ல பாடலாக இருக்க வேண்டும்.

ஆகவே, உடனடியாக அந்தப் பாடல் பிரபலமாக நடிகர்களின் பிரபலம் உதவும். தொடர்ந்து கேட்கப்படுவதற்கு அந்த பிரபலம் உதவாது.

Presentational grey line
கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

Presentational grey line

கே. பாடல் நீண்ட காலம் கேட்கப்படுவது குறித்து சொல்கிறீர்கள்.. ஆனால் உருவாகும் தருணத்திலேயே உள்ள அழுத்தம் எப்படி இருக்கும்?

ப. கண்டிப்பாக இருக்கும். பிரபலங்களுக்குப் பாடல்களை அமைப்பது என்பது பெரிய அளவில் சமைப்பது போன்ற ஒரு விஷயம்தான். அதில் பெரும்பாலானவர்கள் உணவு நன்றாக இருந்திருக்கலாம் என்று சொல்லிவிட்டாலே வெற்றிதான். பிரபலங்களுக்கு பணியாற்றும்போது, நிச்சயம் ஒரு அழுத்தம் இருக்கும். ஆனால், அந்த பிரஷரை நம் தலையில் ஏற்றிக்கொண்டால் சரியாக வராது. என்னைப் பொறுத்தவரை, பணியில் இறங்கிவிட்டால் இதையெல்லாம் மறந்துவிடுவேன். வேலையில்தான் கவனத்தைச் செலுத்துவேன்.

கே. பெரிய நடிகர்கள் யாராவது இப்படித்தான் பாடல் வேண்டுமென பெரிய அளவில் அழுத்தம் கொடுத்ததுண்டா?

ப. பாடல்களை உருவாக்கும்போது அருகிலேயே அமர்ந்து, இப்படித்தான் வேண்டுமென யாரும் சொல்லியதில்லை. ஆனால், ஒரு பாடலை உருவாக்கும்போது ஒரு ஸ்க்ராட்ச் ட்யூனை உருவாக்குவோம். இதனை தயாரிப்பாளர்கள், இயக்குனர், நடிகர், பாடலாசிரியர் எல்லோருமே கேட்பார்கள். பாடலாசிரியரின் ஒப்புதலும் இருந்தால்தான் நல்லது. இவர்கள் எல்லோருமே கலந்து பேசித்தான் இதை முடிவெடுப்போம்.

கே. நீங்கள் விளம்பரப் படங்கள், தொலைக்காட்சி தொடர்களிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்போது தொலைக்காட்சித் தொடர்களில் வரும் இசைக்கும் பாடல்களுக்கும் போதுமான முக்கியத்துவம் இருப்பதாக நினைக்கிறீர்களா?

ப. தொலைக்காட்சித் தொடர்களை நான் இப்போது அதிகம் கவனிக்கவில்லை. நான் ஒரு 30 -40 படங்கள் பணியாற்றிவிட்டுத்தான் சினிமாவுக்கு வந்தேன். நான் வேலை பார்த்த காலகட்டத்தை பொற்காலமாகத்தான் இருந்தது. கிருஷ்ண தாசி தொடரில் சிகரம் பார்த்தாய் சிறகுகள் எங்கே என்ற பாடல், கோலங்கள் தொடரின் பாடல், திருமதி செல்வம் தொடரின் டைட்டில் பாடல் ஆகியவைதான் என்னை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்றதாகப் பார்க்கிறேன். ஆனால், இப்போது நான் தொலைக்காட்சித் தொடர்களை அதிகம் தெரியவில்லை. சினிமாவைத்தான் அதிகம் கவனிக்கிறேன்.

இமான்

கே. நீங்கள் விஜய், சிவ கார்த்திகேயன் போன்ற நடிகர்களையும் பாட வைத்திருக்கிறீர்கள். அது முக்கியமான விஷயமாக நினைக்கிறீர்களா?

ப. வெளிப்படையாகச் சொன்னால், அது ஒரு மார்க்கெட்டிங் விஷயம்தான். ஆனாலும் பாடவே முடியாத நடிகரை அழைத்துவந்து பாடவைப்பதில்லை. அவர்களுக்கும் இசை ஆர்வம் தேவை. மைக் முன்பு அவர்கள் சரியாகப் பாட வேண்டும். இல்லாவிட்டால் சரியாக வராது. அவர்களுக்கும் சரியாக இருந்து, நமக்கும் சரியாக இருந்தால்தான் இந்த முயற்சியை எடுக்கிறோம். பல நடிகர்களுக்கு குரலைப் பதிவுசெய்து, சரியாக வராமல் விட்டிருக்கிறோம். அது பெரிய பட்டியல் இருக்கிறது. அது யாருக்கும் தெரியாது. ஆகவே, நன்றாக வரும் என்றால்தான் பாடவைக்கிறோம்.

கே. விஜய் - ஷ்ரேயா கோஷல் காம்பினேஷனை எப்படி முடிவுசெய்தீர்கள்?

ப. ஷ்ரேயா கோஷல் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடைய இசையில் பாடியிருக்கிறார். கிட்டத்தட்ட 70 பாடல்களுக்கு மேல் பாடியிருப்பார். நான் இசையமைக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். ஜில்லா படத்தில் அந்தப் பாடலை ஷ்ரேயா கோஷலை பாட வைக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஆனால், விஜய் முதலில் தயங்கினார். பிறகு, பயிற்சி எடுத்துக்கொண்டு பாடினார். 2 -3 மணி நேரங்களில் பாடல் பதிவே முடிந்துவிட்டது. பாடி முடித்த பிறகுகூட, நன்றாக இல்லாவிட்டால் விட்டுவிடலாம். பயன்படுத்தியே ஆக வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்றெல்லாம் சொன்னார். ஆனால் பாடல் நன்றாக வந்திருந்தது.

கே. நீங்கள் நிறைய புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறீர்கள். யூடியூபில் பாடுபவர்கள், டிவியில் பாடுபவர்கள் என நிறைய புதியவர்கள் உங்கள் இசையில் பாடுகிறார்கள். எப்படி குரல்களை தேர்வுசெய்கிறீர்கள்?

ப. நிறைய பேர் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் குரல் பதிவுகளை அனுப்புகிறார்கள். இது தவிர, யூ டியூப் போன்ற தளங்களில் பாடி பதிவுசெய்து வைத்திருப்பதையும் சென்று கேட்பேன். அவர்கள் குரல்கள் வித்தியாசமாக இருந்தால், புதியதாக இருந்தால் அவர்களைப் பயன்படுத்திக்கொள்வேன். இப்படியாக முதல் படத்திலிருந்து நம்ம வீட்டுப் பிள்ளைவரை நான் 130 பேருக்கு வாய்ப்பளித்திருக்கிறேன். ஒரு படத்தில் குறைந்ததை ஒருவரையாவது அறிமுகப்படுத்துவது என அதனைக் கட்டாயமாக வைத்திருக்கிறேன்.

கே. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை, கடந்த காலங்களில் பாடகர்களே - குறிப்பாக எஸ்.பி.பி., ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் - போன்றவர்கள் பாடல்களுக்கான அடையாளமாக இருந்தார்கள். ஆனால், நீங்கள் புதியவர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துகிறீர்கள்..

ப. உண்மையிலேயே தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதுதான் காரணம். யாரையாவது பாட வைத்தாக வேண்டுமென்ற நோக்கத்தில் இதைச் செய்வதில்லை. தகுதி வாய்ந்தவர்களையே பாட வைக்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய கலைஞர்கள்தான் இருந்தார்கள். இப்போது ஏகப்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள். நான் அறிமுகப்படுத்தியவர்களில் எல்லோருமே பெரிய நட்சத்திரங்களாகிவிடவில்லை. சிலர் மிகப் பிரபலமாகியிருக்கிறார்கள். சிலர், சில பாடல்களில் மட்டும் பிரபலமாகியிருக்கிறார்கள். சிலர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அறியப்படுகிறார்கள். ஆனால், நமக்கு இப்போது தேர்வுசெய்ய நிறைய குரல்கள் இருக்கின்றன. இது பாடகர்களுக்கும் சவாலான விஷயம்தான்.

கே. பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட திருமூர்த்திக்கு வாய்ப்பளித்திருக்கிறீர்கள். இவரை எப்படி தேர்வுசெய்தீர்கள். பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்களை பாட வைப்பதில் பல சிரமங்கள் இருக்குமே?

ப. உண்மைதான். ஆனால், பார்வையுள்ளவர்களைவிட இவர்களை பாட வைப்பது எளிதும். வைக்கம் விஜயலட்சுமியை தமிழில் நான்தான் அறிமுகம் செய்தேன். ஆரம்பத்தில் ரொம்ப தயக்கமாக இருந்தது. அவருக்கு பார்வைத்திறன் இல்லை என்பதோடு, மொழியும் தெரியாது. எப்படி அதைச் செய்வார் என யோசனையாகவே இருந்தது. ஆனால், அவர் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். ஆனால், அவர் பாடல் பதிவுக்கு வந்தபோது, நான் பல்லவியை மூன்று முறை பாடிக்காட்டினேன். அவ்வளவுதான். உடனே அந்தப் பாடலை மனதில் ஏற்றிக்கொண்டு, பாடிவிட்டார். பாதிப் பாதியாக பாடுவதே கிடையாது. சரணம், பல்லவி என முழுமையாக பாடிவிடுவார். பார்வையுள்ளவர்களைவிட அவர்கள் மிகக் கவனமாக இருப்பார்கள்.

திருமூர்த்தி

திருமூர்த்தியைப் பொறுத்தவரை சீர் என்ற படத்தில் பாடியிருக்கிறார். அவரும் இதேபோலத்தான். பாடலை முன்பே கொடுத்துவிட்டோம். அதை கேட்டுக்கேட்டு மனப்பாடம் செய்துகொண்டார். வழக்கமாக ஒரு பாடலைப் பதிவுசெய்ய 3-4 மணி நேரம்தான் ஆகும். திருமூர்த்திக்கும் அதே நேரம்தான் ஆனது.

பார்வைத் திறன் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, சில சமயங்களில் மைக்கை விட்டு விலகிவிடுவார்கள். நாம் திரும்பவும் மைக் முன்பாக நிறுத்த வேண்டும். அவ்வளவுதான், வேறு பிரச்சனைகளே கிடையாது.

கே. கடந்த காலங்களோடு ஒப்பிட்டால், தற்போது தமிழ் சினிமாவில் பாடல்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவருகிறது. ஒரு இசையமைப்பாளராக உங்கள் வேலையை இது எளிதாக்கியிருக்கிறதா அல்லது புதிய சவால்களை உருவாக்கியிருக்கிறதா?

ப. இந்தப் போக்கு புதிய எதிர்காலத்தை சுட்டிக்காட்டுகிறது. சினிமா ரசிகர்கள் தொடர்ந்து பாடல்களைக் கேட்பார்கள். அது மாறாது. எந்தப் பாடலைக் கேட்பார்கள் என்பதுதான் மாறக்கூடும். இந்த நடிகருடைய பாடல் என்பதற்குப் பதிலாக, இசையமைப்பாளர்களை அடையாளம் சொல்லி, பாடல்களைக் கேட்பார்களோ எனத் தோன்றுகிறது.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் படம் முழுக்க பாடல்களாகத்தான் இருக்கும். பிறகு எட்டு பாடல்கள், அதன் பின் ஐந்து பாடல்கள், பிறகு, மூன்று - இப்போது ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் இருக்கின்றன. பல தருணங்களில் பாடலே இருப்பதில்லை.

திரைப்படங்கள் முன்பெல்லாம் எல்லாம் கலந்த மசாலா படமாகத்தான் இருக்கும். அதில் எல்லா விஷயமும் இருக்கும். இப்போது முழு நீள காமெடி படங்கள், திகில் படங்கள் வரத் துவங்கிவிட்டன. ஆகவே, இனி இசையமைப்பாளர்கள் அந்த வகை மாதிரிக்கான இசையை உருவாக்க வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில், இசையமைப்பாளர் அறிமுகமாகும்போதே சவாலான பின்னணி இசையை உருவாக்கி, இதனால் பிரபலமாகும் வாய்ப்பும் இனி உருவாகுமென நினைக்கிறேன்.

கே. நீங்கள் மிகுந்த எடையோடு இருந்து, பிறகு மிகவும் குறைத்திருக்கிறீர்கள். என்ன காரணம்? உடல் சார்ந்த கேலியை சந்தித்திருக்கிறீர்களா?

ப. அப்படி அல்ல. நண்பர்கள், உறவினர்கள் சில சமயங்களில் கேலி செய்வார்கள். உடல் அதிகமாக இருப்பது எல்லா விதங்களிலும் சிரமமாக இருந்தது. விமான இருக்கையில் துவங்கி பல பிரச்சனை இருந்தது. ஆனால், எனக்கு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு, என் தாயாரின் மரணம். அவர் மிக குண்டாக இருந்தார். அதனால், நீரிழிவு நோய் இருந்தது. இதையடுத்து சிறுநீரகம் செயல் இழந்தது. அது எனக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது.

தவிர, நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தால் எனக்கே கஷ்டமாக இருந்தது. நம் பாடலைக் கேட்கத்தான் வருகிறார்கள் என்றாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்க வேண்டாமா என்று நினைத்தேன். அதனால்தான் உடல் எடையைக் குறைக்க முடிவுசெய்தேன்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-50606665

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.