Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞர் கருணாநிதியின் குடும்பம்-'புருஷோத்தம' நாடகம்

Featured Replies

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

"புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது.

'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது.

'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்க.." என்று கலைஞரின் பி.ஏ. சண்முகநாதனே தயாநிதிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அதே போல் அன்று மாலை சென்னை வந்தவுடனேயே தயாநிதி கலைஞரைச் சந்திக்க முயன்றுள்ளார். "இப்போது வர வேண்டாம்.. நிலைமை சரியில்லை.. நீங்கள் வீட்டில் இருங்கள். பிறகு பார்க்கலாம்.." என்று சொல்லியிருக்கிறார்கள்.

பின்பு மறுநாள் கோபாலபுரம் சென்றால் அடித்தாலும் அடித்துவிடுவார்கள் என்பதால் காத்திருந்து மதியம் லன்ச்சுக்கு கலைஞர் சிஐடி வீட்டுக்கு வந்த பின்பு அங்கு சென்றுள்ளார் தயாநிதி. கலாநிதி வராமல் தயாநிதி மட்டுமே வந்திருக்கிறார் என்பதையறிந்தவுடனேயே மிக கோபமாகிவிட்டாராம் கலைஞர். "நான் பார்க்க முடியாதுன்னு சொல்.." என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.

பிரதமர் வீட்டில்கூட பின் வாசல் வழியாக உள்ளே நுழையும் பாக்கியம் பெற்ற தயாநிதிக்கு.. இதே வீட்டில்கூட மீன் குழம்பை செய்துவைத்துவிட்டுத் தனக்காக அனைவரும் காத்திருந்ததையும் நினைவுபடுத்திப் பார்த்த தயாநிதிக்கு.. இன்றைய அனுபவம் மிகவும் அதிர்ச்சியையும், சோகத்தையும் தந்திருக்கக் கூடும். கூடுதலாக ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் மாடியைவிட்டு இறங்கி வரவேயில்லை என்கிறார்கள்.

"இனிமே என்னைப் பார்க்க வர்றதுன்னா எதுக்கு, என்ன விஷயமான்னு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வந்து பார்க்கச் சொல்லு.. இப்ப பார்க்க முடியாது. போகச் சொல்லுங்க.." என்று கலைஞர் உறுதியுடன் சொல்ல இதை அப்படியே வெளியில் காத்திருந்த தயாநிதியிடம் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் தாத்தாவைப் பார்த்தே தீருவது என்ற வைராக்கியத்தில் வெகுநேரம் பொறுமையாக அமர்ந்திருந்தாராம் தயாநிதி.

அறிவாலயம் செல்வதற்காகக் கிளம்பி வெளியே வந்த கலைஞர் தயாநிதியைப் பார்த்தவுடன், "என்னடா..? யாருன்னு நினைச்சு யார்கிட்ட விளையாடுறீங்க.. அழகிரி யார் தெரியுமில்ல. என் மகன்.. என் மகன்டா.." என்று பேசிக் கொண்டே சென்றுவிட்டாராம். நாகரிகம் தெரிந்த பேரன் அப்படியே நிற்க.. தாத்தா போயோ போய்விட்டார்.

பின்பு அன்றிரவு மீண்டும் கலைஞருடன் போனில் பேச முயன்றுள்ளார் தயாநிதி. ஆனால் இரண்டு முறை லைனில் வர மறுத்த முதல்வர், மூன்றாவது முறை தன் பி.ஏ.சண்முகநாதன் மூலமாகவே, "என்ன விஷயம் என்று கேளுங்கள்.." என்று கூறினாராம். அவரிடம், "நான் ராஜினாமா செய்யட்டுமா?" என்று கேட்க வேண்டும் என்று தயாநிதி கேட்டுள்ளார். இந்த விஷயத்தை முதல்வர் காதில் போட்டுள்ளார் சண்முகநாதன். ஆனால் முதல்வரோ, "அதை ஏன் என்னிடம் கேட்க வேண்டும்? அவரையே முடிவெடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.." என்று கறாராகச் சொல்லியிருக்கிறார்.

பொன்விழா நிகழ்ச்சியைக் காண்பதற்காக சென்னை வந்த ரவுடி அழகிரி, உள்ளாட்சித் துறை அமைச்சரான தன் தம்பி ஸ்டாலினைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து கலைஞரை சந்தித்தாராம்.

"அவனைத்(தயாநிதி மாறனை) திடீர்ன்னு எம்.பியாக்குனீங்க.. அப்படியே மினிஸ்டராக்கிட்டீங்க.. அப்பல்லாம் ஏன் அந்தச் சின்னப் பயலுக்கு மந்திரி பதவி கொடுக்கிறீங்கன்னு நாங்க ஒண்ணும் கேட்கலியே.. ஆனால் நான், ஸ்டாலின், கனிமொழி மூணு பேரும் நெருக்கமாகுறதைப் பார்த்திட்டு எங்களைப் பிடிக்காம, இப்படி சர்வே போட்டு பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். அதுவும் உங்க பொன்விழாவின்போது இந்த சர்வேயை ஏன் போடணும்..?

பொன்விழா நடத்தக்கூடாதுன்னு ஜெயலலிதாதான் சொல்லிட்டு வர்றார். அவர் பிரச்சாரத்திற்குத் தீனி போடுவதைப் போல் இந்த நேரம் பார்த்து ஏன் சர்வேயை போட வேண்டும்? இப்ப உங்களுக்கு பிள்ளைகளாகிய நாங்க வேணுமா? அவனுக வேணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.." என்று மூத்த மகன் என்கிற தோரணையில் மிரட்டியே இருக்கிறார் ரவுடி அழகிரி.

இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முதல்வரின் மகள் செல்வி, முதல்வரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) ஆகியோரால்தான் முடியும் என்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்னால்தான் தன் அம்மா தயாளு அம்மாவின் சிகிச்சைக்காக அவரை லண்டன் அழைத்துச் சென்று திரும்பி பத்திரமாக அழைத்து வந்த செல்வி, இந்தச் சம்பவத்தால் படு அப்ஸெட்டாகிவிட்டாராம்.

அவருக்கோ அழகிரிக்கு அப்பா ஓவராக சப்போர்ட் செய்வதாக பீலிங். இதை அப்பாவிடமே சொல்ல.. தந்தை என்றைக்கும் இல்லாத திருநாளாக "எனக்குக் கட்சிதான் பெரியது.." என்று கடிந்து கொண்டாராம். கோபமான செல்வி அப்பாவின் பொன்விழா நிகழ்ச்சியையே புறக்கணித்துவிட்டாராம். அநேகமாக செல்வி, தன் தந்தை கலைஞரின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது தி.மு.க. வரலாற்றிலேயும், அவரது சொந்த வாழ்க்கையிலும் இதுவே முதல் முறை என்கிறார்கள்.

அதே நேரம் செல்வியின் வீட்டில் வசித்து வரும் கலைஞரின் அக்கா(முரசொலி மாறனின் அம்மா) மட்டுமே கலைஞரிடம் உரிமையாக சமாதானத்திற்குச் சென்றுள்ளார். "ஏதோ சின்னப் பயலுக.. செஞ்சுட்டானுக.. எம்புள்ளைக்கே நீதான் அப்பா மாதிரி இருந்து எல்லாத்தையும் செஞ்ச.. இப்ப அந்தப் புள்ளைகளுக்கு அப்பாவும் இல்ல. நீதான எல்லாம் செய்யணும்.. அவங்களைக் கை விட்ராதப்பா.." என்று உருக்கமாக வேண்டிக் கொண்டாராம்..

இவ்விவகார வெடிப்பின் பின்னணியில் இருப்பது மாறன் குடும்பத்தினரின் வளர்ச்சிதானாம்.

முரசொலி மாறனின் தம்பியும், கலைஞரின் மூத்த மகள் செல்வியின் கணவருமான முரசொலி செல்வம், தற்போது பெங்களூரில் தங்கியிருந்து சன் நெட்வொர்க்கின் உதயா டிவி நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். தற்போதைய நிலையில் சன் டிவியில் முரசொலி செல்வத்தின் குடும்பத்திற்கு மட்டுமே பங்கு உண்டு. அதுவும் கோடிக்கணக்கில்..

ஆனால் கலைஞரின் மற்ற வகை சொந்தங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கலைஞரின் முதல் மனைவி பத்மாவதியின் மூலமாகப் பிறந்த மூத்த பிள்ளை மு.க.முத்து தறுதலையாகிப் போனது ஊர் அறிந்த ரகசியம். மு.க.முத்துவிற்கு இரண்டு பிள்ளைகள். மு.க.முத்துவின் மகன் அறிவுநிதி டாக்டராக இருக்கிறார். மாதச் சம்பளத்தில் ஜி.ஜி.மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருடைய சகோதரிக்கும் திருமணமாகி அவரும் தனியாக இருக்கிறார். இவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் ஆக வேண்டியவைகள் அனைத்தையும் கருணாநிதி தானேதான் செய்து வந்தார்.

இப்படி ரத்தச் சொந்தத்தில் பிறந்தவர்கள் மாதச் சம்பளத்தில் உழைப்பவர்களாக இருக்க... ஒருவகையில் பேரனானவர்கள் ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பதுதான் குடும்பத்திற்குள் வினையை உருவாக்கியிருக்கிறது.

மு.க.முத்துவின் மகன் குடும்பத்துடன் ஸ்டாலினுக்கும் இன்றுவரையில் தொடர்பில்லை. மு.க.முத்து மகன் அறிவுநிதியின் திருமணம் தஞ்சாவூரில் நடந்தபோது அதற்கு வராதவர்கள் ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி ஆகியோர்தான் என்கிறார்கள்.

ஆனால் அழகிரியும் மு.க.முத்துவும் நெருங்கிய நண்பர்கள். தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தபோது மூன்று முறை வந்து பார்த்தார் மு.க.முத்து.

இந்த மதுரை தினகரன் மேட்டர் வெடித்த பிறகு தயாநிதி மாறனை கட்சியும், கருணாநிதியும் புறக்கணித்த பிறகு முதல்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளார் அறிவுநிதி.

சட்டசபையில் கலைஞரின் பொன்விழாக் கூட்டத்திற்கு தன் மனைவி, பிள்ளைகளுடன் வந்திருந்த அறிவுநிதி சட்டசபை மாடத்தில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மாடத்தில் ரவுடி அழகிரி தன் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார்.

ஆக.. "இனிமேல் தூரத்துச் சொந்தங்களுக்கு அதிகாரமில்லை.. அதிகாரம் முழுவதும் எங்களுக்குத்தான்.." என்று ரத்த வழிச் சொந்தங்கள் முடிவு கட்டிவிட்டார்கள். இந்தக் கூட்டணியில்தான் இவர்கள் கனிமொழியை இணைத்துக் கொண்டார்கள். இதுவே இப்போது குழப்பத்திற்கு ஒரு காரணமாகிவிட்டது.

மூத்த மகள் செல்விக்கு கனிமொழியை முன்னிலைப்படுத்துவது பிடிக்காமல் போய்விட்டது. காரணம் பழங்கால, அரதப் பழசான கதையான 'சின்ன வீட்டு'க்குப் பிறந்தவர் என்பதால்தான். கலைஞரின் மூன்றாவது திருமணத்தை அகில உலகமும் ஏற்றுக் கொண்டாலும், இன்னமும் கலைஞரின் இரண்டாவது மனைவி தயாளு அம்மையார் ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாத்தி அம்மையாருடன், இதுவரை தயாளு அம்மையார் ஒரு வார்த்தைகூட பேசிக் கொண்டதில்லை.

ஆலிவர் ரோடு வீட்டில் நடந்த கனிமொழி-அரவிந்தன் திருமணத்தின்போதுகூட தயாளு அம்மையார் அந்த வீட்டுக்கு வரவில்லை. அப்போது பெண்ணின் தோழியாக இருந்தவர் அக்கா செல்விதான். அதன்பின் கன்னிமாரா ஹோட்டலில் நடந்த ரிசப்ஷனுக்கு மட்டுமே வந்து தலையைக் காட்டினார் தயாளு அம்மையார்.

இப்படி ஆலிவர் ரோடு வீட்டுப் பக்கம் காரில்கூட வரமாட்டேன் என்ற விரதத்தில் இருந்த தயாளு அம்மாவை, அங்கே போக வைத்த பெருமையும், இரண்டுபட்டுக் கிடந்த குடும்பத்தை அப்போதே ஒன்று சேர்த்த பெருமையும் ஜெயலலிதா அம்மையாருக்கு உண்டு.

அவருடைய போன ஆட்சியில் கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்களே. அப்போது கலைஞரை 'காவலர்கள்' என்ற பெயரில் வந்த 'வேட்டை நாய்கள்' தூக்கிச் சென்ற பிறகு கீழே இறங்கி வெளியே வந்த முரசொலி மாறன் தன் காரிலேயே ராஜாத்தி அம்மையாரை ஏற்றிக் கொண்டு கிளம்ப.. அப்போது அங்கே தன் மகள் செல்வியோடு வந்து சேர்ந்தார் தயாளு அம்மையார்.

முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தால் அவருடைய காரில் சென்றால்தான் எங்கும் உள்ளே நுழையலாம் என்ற எண்ணத்தில் முரசொலி மாறனின் காரிலேயே செல்வியும், தயாளு அம்மையாரும் ஏறிக் கொள்ள அன்றைக்குத்தான் அவ்வளவு பக்கத்தில் பத்திரிகையாளர்களே அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்.

இவர்களை ஏற்றிக் கொண்டு வந்த காரால்தான் முரசொலி மாறன் அரசினர் தோட்டத்தில் இருந்த சிபிசிஐடி அலுவலக கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

அப்போது கலைஞர் சிறையில் இருக்க.. ஆலிவர் ரோடு வீட்டிலேயே ஆதி காலத்திலிருந்தே அடைக்கலமாயிருந்த கலைஞரின் மாமியார்(ராஜாத்தி அம்மாவின் தாயார்) திடீரென்று மரணமடைந்தார். அப்போது மட்டும்தான் தயாளு அம்மாள் அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். அப்போதும் ராஜாத்தியிடம் பேசாமல் கனிமொழியிடம் மட்டுமே பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார் தயாளு அம்மையார்.

அப்போதே தி.மு.க.வினர் ஜெயலலிதாவை நைஸாக இந்த ஒரு விஷயத்துக்காகவே பாராட்டத்தான் செய்தார்கள். "கலைஞர் 35 வருடமாக முயற்சித்ததை, ஜெயலலிதா ஒரே நிமிடத்தில் செய்துவிட்டார்.." என்றார்கள்.

கலைஞரின் மகள் செல்வி என்றே பிரபலமான செல்விக்கு தனக்குப் போட்டியாக இன்னொரு மகள் வெளிச்சத்திற்கு வருவது அரவே பிடிக்கவில்லை. இதற்காகவே தனது கணவரின் அண்ணன் மகன்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறனுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். இது ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பிடிக்காமல் போய் சகோதரியுடன் சமீபகாலமாக ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டுள்ளார்களாம்.

கலைஞரின் மற்றொரு சகோதரியின் மகன்களான அமிர்தம், சொர்ணம் இருவரின் குடும்பத்தினருக்கும் பங்காளிகளான மாறன் குடும்பத்தினரின் அனுக்கிரகமும், பண ஆசியும் கிடைக்காததால் அவர்களும் ஸ்டாலின் பின்னால் அணிவகுத்துள்ளனர்.

பூம்புகார் புரொடெக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்படும் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் அமிர்தம், சமீப காலமாக வேலை வாய்ப்பின்றி சும்மாதான் இருந்து வருகிறார். முரசொலி மாறன் இருந்தவரையிலும் அவருடைய பாதுகாப்பில்தான் தனது குடும்பத்துத் திருமணங்களை நடத்தி முடித்துக் கொண்டார்.

இதே போல் சொர்ணம்.. இவரும் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியின் முதல்வராக இருந்து தனது குடும்பத்தைக் கவனித்துக் கொண்டவர். இவரும் தற்போது தனது பிள்ளைகளின் சிறிய small businessல் தான் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

முரசொலி மாறன் இருந்தவரையிலும் இந்த பங்காளிகளுக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்சினை வராமல் பார்த்துக் கொண்டார். அவர் போன பின்பு தலையெடுத்திருக்கும் கலாநிதி மாறன் இக்கால இளைஞர்களுக்கே உரித்தான கோபத்தில், "அவங்கவுங்க உழைச்சு சம்பாதிக்க வேண்டியதுதான.. எதுக்கு எங்ககிட்ட வரணும்?" என்று பிச்சைக்காரர்களை விரட்டுவதைப் போல் விரட்டியதுதான் ஒட்டு மொத்தக் குடும்பமும் மாறன் குடும்பத்திற்கு சூன்யம் வைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.

இப்போது கலைஞரின் கோபம் சீக்கிரத்தில் ஆறிவிடும்.. அதன் பின்பு பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று 'மாறன்களுக்கு' சித்தப்பா முரசொலி செல்வம் அட்வைஸ் செய்துள்ளாராம்.

ஆனாலும் தான் நேரில் போய் பேசினால் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்திருக்கும் கலாநிதி மாறன், அமெரிக்காவில் டாக்டராகப் பணியாற்றும் தன் சகோதரியின் வீட்டில் இருக்கும் அம்மா மல்லிகா மாறனை அழைத்து வர அமெரிக்கா சென்றுள்ளார்.

மல்லிகா மாறன் சென்னை வந்தவுடன் முழுமையான சமாதானப் படலம் மீண்டும் துவங்கும் என்கிறார்கள். ஏனெனில் தயாளு அம்மாவுக்கு ஆரம்பக் காலத்திலிருந்தே மிக நெருங்கியவர் மல்லிகா மாறன்தான். அவர் சொன்னால் கலைஞர் குடும்பத்துப் பெண்கள் கேட்பார்கள். பெண்கள் மூலமாக அணுகினால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று கோபாலபுரத்திற்குள் உலா வரும் போஸ்ட்மேன்கள் வரை அனைவரும் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு கலைஞரின் கோபம் ஆறினாலும் குடும்பத்து ஆண்கள் 'சொத்து' என்பதில் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது. ஏனெனில் தி.மு.க. என்ற கட்சியும், கலைஞரின் ஆட்சியும் இல்லாமல் போயிருந்தால் மற்றத் தொலைக்காட்சிகளை 'ஒழித்துக்' கட்டிய சுமங்கலி கேபிள் விஷனை, சன் டிவியால் நடத்தியிருக்கவே முடியாது. ஆக நம்மை வைத்து காசு சம்பாதித்தவர்கள் இப்போது வளர்ந்தவுடன் கட்சிக்காரனைப் போல் நம்மையே எட்டி உதைக்கிறார்கள் என்ற கேள்விக்கு மாறன்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதில்தான் இந்த நாடகத்திற்கு விடை கிடைக்கும்.

இப்படி சென்னை வெயிலைவிடவும் கோபாலபுரம் சூட்டில் வெந்து கொண்டிருக்க...

எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருவாரூரில் தன் நான்காவது 'ஆசை நாயகி'யுடன் ஒரு குடிசை வீட்டில் பட்டப் பகலிலேயே 'சரக்கு' அடித்துக் கொண்டு டூயட் பாடி வருகிறார் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து.

ஆண்டவன் அத்தனை பேருக்கும் அளந்துதான் கொடுத்திருக்கிறான்..

http://truetamilans.blogspot.com/2007/05/blog-post_14.html

தி.மு.க.&வில் அதிர்ச்சித் திருப்பங்கள்

மாடத்தில் அழகிரி!

தள்ளிவைக்கப்பட்ட தயாநிதி...

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அவரது மனசாட்சியாகவே இருந்த முரசொலி மாறனுக்கும் இடையே நிலவிய இறுக்கமான பாசப்பிணைப்பு, அடுத்த தலை முறைக்கும் தொடராமல் போனதன் விளைவுகள்தான் இன்று அந்தக் கட்சிக்குள் அரங்கேறி வரும் அதிரடி யான சம்பவங்கள்!

மாறன் மகன்களுக்கும் கருணாநிதி மகன்களுக்கும் இடையே சின்னதும் பெரிதுமான உரசல்கள் உள்ளூர நடந்துகொண்டேதான் இருந்தன. ஆனால், Ôஇதெல்லாமே எழுந்து எழுந்து அடங்குகிற அலைகள்தான்Õ என்றே அத்தனை பேரும் நினைத்திருந்தார்கள். Ôநீர் அடித்து நீர் விலகாதுÕ என்றே எல்லோரும் நினைத்திருக்க... கருத்துக் கணிப்பு, Ôதினகரன்Õ அலுவலக எரிப்பு ஆகியவை... தி.மு.க&வுக்குள் நீர் அடித்து நீர் விலகும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிவிட்டன!

Ôஎரிப்புக்குக் காரணம் அழகிரிதான். அவரைக் கைது செய்தாக வேண்டும்Õ என்று Ôசன்Õ டி.வி&யில் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்ததற்கு... இந்த மீடியா பிரஷருக்கு கருணாநிதி கட்டாயம் கட்டுப்படுவார் என்ற நம்பிக்கை தான் காரணம். ஆனால், Ôதானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்Õ என்பதே இறுதியில் ஜெயித்து விட்டது.

‘‘எது நடந்தாலும் அதற்குக் காரணம் அழகிரிதானா? Ôசிறப்பாகச் செயல்படும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் யார்?Õ என்ற சர்வே முடிவுகளையே வெளியிட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டபோது, அதை Ôதினகரன்Õ ஏற்கவில்லை. கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் அந்த சர்வே ஏற்படுத்திய சலசலப்பை சமாளிக்க பெரும்பாடுபட வேண்டி வந்தது. அடுத்து, எனது அரசியல் வாரிசு யார் என்ற சர்வே முடிவு வெளியாகாமல் தடுக்கவும் நான் முயன்றேன். அதையும் Ôதினகரன்Õ ஏற்கவில்லை.

இப்போது, விளைவு கள் கைமீறிப் போன பிறகு மு.க.அழகிரியை ஒரேயடியாக முடக்குவதற்கும் பார்க்கிறார்களே..?ÕÕ என்று தனக்கு நெருக்க மானவர்களிடம் சொல்லி வருந்திய முதல்வர், Ôஇந்த முறை என் அணுகுமுறை கடுமையாகவும் உறுதியாகவும் இருக்கும்Õ என்றும் அழுத்தமாகச் சொல்லிவிட்டார்!

போதாக்குறைக்கு அழகிரியும், Ôகொதிநிலையில் இருக்கும்போதே இரும்பை வளைத்தால்தான் உண்டுÕ என்று முடிவெடுத்து, தயாநிதி மாறனையும் சன் டி.வி&யையும் தி.மு.க. தள்ளி வைப்பதுதான் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று கருணாநிதியிடம் வாதாடியதோடு, அடுத்தடுத்து மிக வேகமாகக் காய்களை நகர்த்த ஆரம்பித்தார். மு.க.ஸ்டாலினும், Ôஅண்ணன் எடுக்கிற முடிவுகள்தான் என் முடிவும்Õ என்று சொல்லி, அழகிரியின் பக்கம் உறுதியாக நின்றார்.

மே 9&ம் நாள், புதன்கிழமை தொடங்கி, மின்னல் வேகத்தில் அரங்கேறிய காட்சிகளை இங்கே பார்ப்போம்...

Ôவிளம்பரத்தை நிறுத்து!Õ

Ôஅழகிரியின் ரவுடி கும்பல்Õ என்ற Ôசன்Õ டி.வி. வார்த்தைகளிலும், தன் பேரை எஃப்.ஐ.ஆரில் சேர்த்தே ஆக வேண்டும் என்று Ôதினகரன்Õ தரப்பிலிருந்து வந்த பிரஷரிலும் கொதித்திருந்த அழகிரி, முதல் வேலையாக சன் டி.வி&க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதோடு, Ôசட்டசபையிலும் தீவுத் திடலிலும் நடக்கவிருக்கும் தலைவரின் சட்டமன்றப் பொன்விழா கொண்டாட்டங்களுக்கு நம் கட்சியினர் யாரும் தினகரனில் விளம்பரம் தரக்கூடாதுÕ என்றும் தி.மு.க&வின் முக்கிய சீனியர்களை அழைத்து உத்தரவிட்டார் அழகிரி. கட்சியின் எல்லா மட்டத்துக்கும் அது வாய்மொழி உத்தரவாகப் பறந்தது. மற்ற தினப்பத்திரிகைளில்தான் விளம்பரங்கள் வெளியாகின!

Ôவேண்டாம் சன் டி.வி.!Õ

மே 11&ம் தேதி காலை சட்டமன்றத்தில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியின்போது, தயாநிதியோ கலாநிதியோ காணவில்லை. மாலை, தீவுத்திடலில் பிரதமர், சோனியா முன்னிலையில் பாராட்டுவிழா நடக்க சில மணிநேரங்களே இருந்தபோது, Ôமேடையில் சேர்களை போடுகையில், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு ஸீட் தேவையில்லைÕ என்று முதல்வர் அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவு வந்தது. பாராட்டு விழாவை Ôசன் செய்திகள்Õ சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதற்கென, சன் டி.வி&யின் குழு தீவுத்திடலுக்கு வந்தபோது, Ôநேரடி ஒளிபரப்புக்கு உங்களுக்கு அனுமதியில்லைÕ என்று சொல்லித் திரும்பிப் போகச் சொல்லிவிட்டனர். காற்று திடீரென Ôராஜ் டி.வி.Õ பக்கம் அடிக்க ஆரம்பித்தது.

முதல்வர் வீட்டிலிருந்தே Ôராஜ் டி.வி.Õ நிர்வாகத்துடன் பேசியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு வாய்ப்பு உண்டாக்கப்பட்டது. அதற்கான Ôஓ.பி.Õ வேன் தயாராக அவர்களுக்கு இல்லாததால், டெல்லி வரை பேசப்பட்டு Ôதூர்தர்ஷன்Õ சேனலின் Ôஓ.பி.Õ வேன் மூலம் Ôஅப்லிங்க்Õ செய்யும் வசதி Ôராஜ் டி.விÕ&க்கு ஏற்படுத்தித் தரப்பட்டது.

தாத்தாவின் கோபம் தொடர்ந்துகொண்டே இருப்பதை உணர்ந்து, தயாநிதி மாறன் நேராக சி.ஐ.டி. காலனி இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் (அவருடைய உதவியாளர் கவுதம்தான் சென்றார் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்). முதல்வரோ பாராமுகமாக நடந்துபோய் காரில் ஏறி கோபாலபுரம் இல்லத்துக்குப் போய்விட்டாராம்.

Ôநான் ரவுடியின் அப்பா!Õ

கோபாலபுரம் இல்லத்து மாடியிலிருந்து முதல்வர் லிப்ஃடில் இறங்கி வந்தபோது, அங்கே வந்து சேர்ந்திருந்தார் தயாநிதி மாறன். அவருடன் முதல்வரின் மகளும், Ôஉதயா டி.விÕ&யைக் கவனித்துக் கொள்ளும் முரசொலி செல்வத்தின் மனைவியுமான செல்வியும் இருந்தார். இருவரையும் முதல்வர் கண்டும் காணாமலும் தாண்டிக் செல்ல... அவரிடம் இவர்கள் ஏதோ சொல்ல... Ôநான்தான் ரவுடி அழகிரியின் அப்பாவாச்சே. தி.மு.க. என்ற ரவுடிக் கட்சியின் தலைவராச்சே! என்னிடம் என்ன பேச இருக்கு?Õ என்றபடி காரில் ஏறி விழா அரங்கு நோக்கிப் பறந்தாராம். இதற்கிடையே, Ôதயாநிதி மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவோடு இருக்கிறார்Õ என்று சிலர் முதல்வரிடம் சொன்னபோது, Ôஅதை இங்கே ஏன் சொல்றீங்க? ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அல்லவா அனுப்பி வைக்கணும்?Õ என்று முதல்வர் பதில் தந்தாராம்.

முதல் வரிசையில் அழகிரி...

விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரையும் சோனியாவையும் தயாநிதி சால்வை அளித்து வரவேற்றார். ஆனால், தீவுத்திடல் அரங்கத்துக்கு அவர் வரவில்லை. மு.க.அழகிரிதான் அந்த விழாவின் ஹைலைட் வி.ஐ.பி.! மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை, விமான நிலையத்தில் ஸ்பெஷல் கேட் வழியாக வெளியே போலீஸார் அழைத்துச் சென்றதை குறிப்பிட்டு, அ.தி.மு.க. தரப்பு சர்ச்சை கிளப்பியிருந்தது. ஆனாலும், தீவுத்திடல் அரங்கத்துக்கு வந்த அவரை சல்யூட் வைக்காத குறையாகத்தான் வரவேற்றது போலீஸ். பார்வையாளர் பகுதியின் முதல் வரிசையில் அமைச்சர்களுடன் சேர்ந்து அவர் அமரும் வரை, Ôஅஞ்சா நெஞ்சன் அழகிரி வாழ்கÕ என்று தொண்டர்களும் கோஷம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். மத்திய&மாநில அமைச்சர்களான பழனி மாணிக்கத்துக்கும் கே.என்.நேருவுக்கும் நடுவில் அட்டகாச சிரிப்போடு அமர்ந்திருந்த அவரை நோக்கி, கட்சிப் பிரமுகர்கள் ஓடி ஓடிப் போய் Ôஅட்டென்டன்ஸ்Õ கொடுத்தபடி இருந்தார்கள். விழா முடிந்தபோது, அழகிரியும் மு.க.ஸ்டாலினும் ஜாலியாகப் பேசிச் சிரித்தபடியே ஒன்றாக அந்த மைதானத்திலிருந்து நடந்து சென்றார்கள்.

தயாநிதி மாறன் இடத்தில் ராசா...

வழக்கமாக சோனியா காந்திக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டு தமிழக மேடை நிகழ்வுகளை மொழிபெயர்த்துச் சொல்லும் தயாநிதி இல்லாததால், சோனியாவுக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றொரு மத்திய அமைச்சரான பெரம்பலூர் ராசா கச்சிதமாக அந்த வேலையை செய்தார். அதேபோல், பிரதமரின் பின் இருக்கையில் இருந்தபடி தலைவர்களின் பேச்சுக்களை ஆங்கிலத்தில் பிரதமருக்கு விளக்கினார் சீனியர் அமைச்சரான டி.ஆர்.பாலு.

தீவுத்திடல் பொதுக்கூட்டம் முடிந்து கிளம்பும்போது, மேடையை ஒட்டியிருந்த அறையில் பிரதமர் மற்றும் சோனியாவுடன் சில நிமிடங்கள் பேசினார் கருணாநிதி. தயாநிதி தொடர்பாகத் தான் எடுக்கவிருக்கும் சிலÔமூவ்Õகளைச் சொன்னவர், Ôஇனி தமிழகம் தொடர்பான டெல்லி விஷயங்களை டி.ஆர்.பாலுதான் உங்களிடம் கொண்டு வருவார்Õ என்று கூறியதாகவும் தெரிகிறது. பேச்சினிடையே, மத்திய அமைச்சர் ராசாவை மட்டும் உள்ளே முதல்வர் அழைத்துக்கொள்ள... Ôஇனி ராசா நிஜமாகவே ராசாதான்Õ என்று கட்சி சீனியர்கள் சிலர் தூரத்தில் நின்றபடி கமென்ட் அடித்ததும் நடந்தது.

Ôகிச்சன் காபினெட்!Õ

தீவுத்திடல் நிகழ்ச்சி முடிந்தும் ஊருக்குக் கிளம்பிவிடவில்லை அழகிரி. தி.மு.க&வின் முக்கிய பிரமுகர்களுடன் போனில் பேசிக்கொண்டே இருந்தார். Ôஇந்த விஷயத்தில் எக்காரணம் கொண்டும் தலையிடக் கூடாதுÕ என்று தன் சகோதரி செல்விக்குக் கடுமையாக உத்தரவும் போட்டாராம். முரசொலி மாறனின் தாயார் மூலம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான பிளவு வலுத்துவிடாமல் மருந்து போடும் முயற்சிகள் நடந்ததாகவும், அதற்கும் அழகிரி முட்டுக்கட்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வரின் இல்லத் தரப்பிலான Ôகிச்சன் காபினெட்Õ வசமும் Ôஅரசியல் வேறு. குடும்பம் வேறு. அரசியல் விஷயத்தில் இனி யாரும் ஒட்டுப்போட முயலாதீர்கள்Õ என்று சொல்லி அழகிரி அதிரடியாக வாயடைத்ததாகவும் கூறப்படுகிறது. ‘தயாநிதிக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் எனது சகோதரி திருமதி கனிமொழிதான் அமர்த்தப்பட வேண்டும். அதற்காக விரைவில் வரும் ராஜ்யசபா தேர்தலில் அவரை தி.மு.க. சார்பில் எம்.பி&யாக்க வேண்டும்’ என்று தனது தந்தையிடம் அழகிரி தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து தயாநிதி இடத்துக்கு வருகிறார் கனிமொழி என்று வேகமாக செய்தி பரவத் தொடங்கியது.

சட்டசபையில் அழகிரி...

மே 12&ம் தேதி... நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி வீற்றிருக்க, கருணாநிதிக்குப் பாராட்டு விழா... முந்தைய இரவே கலாநிதி மாறன் வெளிநாடு சென்றுவிட, தயாநிதியும் கோவை சென்று அங்கிருந்து ஊட்டிக்குப் போய்விட்டார் (ஊட்டி கொட நாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா தங்கியிருப்பதால், இரண்டையும் முடிச்சுப் போட்டு சிலர் பரபரப்பு பண்ணியது தனிக் கதை!). பொதுவாகவே தயாநிதி மாறன் சொந்த விஷயமாக கோவைக்குச் செல்லும்போதெல்லாம், எந்த ஆர்ப்பாட்டங்களும் இன்றி சென்று திரும்புவதுதான் வழக்கம். ஆனால், படு கொதிப்பான சூழலில் அவர் வருகிறார் என்பதால், விமான நிலையத்தில் அவரைச் சந்திக்க தி.மு.க. பிரமுகர்கள் யாரேனும் காத்திருப்பார்களா என்று பார்த்தனர் பத்திரிகையாளர்கள். கட்சிக்காரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. தயாநிதியும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை.

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். அவர்களையும்கூட தன்னோடு வரவேண்டாம் என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டாராம். கோத்தகிரியில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் தங்கினார் தயாநிதி. பத்திரிகையாளர்கள் தன்னைப் பார்க்க விரும்பியபோதும், Ôநாளை சந்திப்போம்Õ என்று தகவல் சொல்லி அனுப்பிவிட்டார்.

ஆதி... போக்கிரி!

அதேசமயம், சென்னையில் சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்க்க வந்த அழகிரிக்கு ஏக மரியாதை. மோர் & இளநீர் உபசரிப்பு! கனிமொழி தன் மகன் ஆதித்யாவுடன் அங்கே வர... குழந்தையை அருகில் அழைத்த அழகிரி, ÔÔஎன்ன ஆதி... நீ அடுத்தது Ôபோக்கிரிÕயா?ÕÕ என்று ஜாலியாகக் கேட்க... அருகில் இருந்தவர்கள் புரியாமல் குழம்ப... ÔÔவிஜய் நடிச்ச ÔஆதிÕ படத்துக்கு அடுத்தது Ôபோக்கிரிÕதானே? அதைச் சொன்னேன்!ÕÕ என்று கனிமொழி உள்ளிட்டவர்களை வெடிச் சிரிப்பில் ஆழ்த்தினார் அழகிரி.

ஸ்பீடான ஸ்டாலின் அணி!

ஸ்டாலினை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் தி.மு.க&வின் புள்ளிகள் அடுத்தது என்ன என்று அடுத்தடுத்த இரவுகளில் ஆலோசனையைத் தொடர்ந்தபடி உள்ளனர். மே 10&ம் தேதி இரவு அடையாறில் உள்ள ஒரு வீட்டில் கூடியபோது, சன் டி.வி. பற்றிய சூடான பேச்சு வந்திருக்கிறது.

Ôதளபதியின் நிகழ்ச்சிகளையே பல சமயங்களில் புறக்கணித்திருக்கிறது அந்த சேனல்! சமீபத்தில்கூட தாம்பரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியபோது, அதில் ஸ்டாலின் பேசியதைக் காட்டவில்லை?Õ என்று ஒரு பிரமுகர் சொல்ல... Ôநமக்குனு ஒரு டி.வி&யும் ÔமுரசொலிÕ தவிர ஒரு பேப்பரும் ஆரம்பிக்கணும்Õ என்று அவர்கள் சீரியஸாக விவாதித்திருக்கின்றனர்.

அதேசமயம், தயாநிதி மாறனுடன் நெருக்கமான தொடர்புள்ள மந்திரிகள், கட்சிப் பிரமுகர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியல் ஒன்றையும் போட்டுப் பார்த்தனர். அமைச்சர்களில் & திருச்சி செல்வராஜ், பரிதி இளம்வழுதி, கூடலூர் ராமச்சந்திரன், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் அந்தப் பட்டியலில் இருக்க... தமிழக ஐ.ஏ.எஸ்&ஸில் ஐ.டி. துறையின் சந்திரமவுலி, தொழில் துறை செயலர் சக்தி கந்ததாஸ், Ôஎல்காட்Õ உமாசங்கர் ஆகியோர் அந்த இரவுக் கூட்டத்தில் பட்டியலில் படிக்கப்பட்டதாகத் தகவல். சுமங்கலி கேபிள் விஷன் இணைப்புகளை எடுத்து நடத்தும் கட்சிப் பிரமுகர்கள், அதைத் திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும் என்று ஒரு ஓலை அனுப்பவும் முடிவெடுத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியிலுள்ள சில கவுன்சிலர்களைச் சொல்லி, Ôஅவங்க விஷயத்திலும்கூட இனி நாம் உஷாரா இருக்கணும்Õ என்று பேசிக் கலைந்திருக்கிறார்கள், இந்த ஸ்டாலின் ஆதரவுப் பிரமுகர்கள்.

சுமங்கலி கேபிள் உரிமங்களை மாவட்ட அளவில் கட்சியைச் சேர்ந்த சிலர் வைத்திருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக, அந்த உரிமங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென தீர்மானித்து, அங்கிருந்தபடியே மாவட்ட பிரமுகர்களுக்குத் தகவல் கொடுத்தனர். மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு துறை போன்ற சில துறைகளில் தனது ஆதரவாளர்களுக்கு தயாநிதி மாறன் கௌரவப் பதவிகளை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த மாதிரி பதவிகளைப் பெற்றவர்கள் உடனே ராஜினாமா செய்யும்படியும் ஸ்டாலின் கோஷ்டியினர் வற்புறுத்தத் துவங்கிவிட்டனர்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, அறிவாலயத்தின் வெளி காம்பவுன்டை ஒட்டி வைக்கப்பட்டுள்ள சன் டி.வி&யின் விளம்பர போர்டை மே 11&ம் தேதியன்று இரவு தீவுத்திடல் பொதுக்கூட்டம் முடிந்து, அந்த வழியாகத் திரும்பிய தி.மு.கழக தொண்டர்கள் தகர்க்க முயன்றனர். Ôதி.மு.க&வைத் தாறுமாறாகத் திட்டும் சன் டி.வி&க்கு அறிவாலயத்தில் எதற்கு போர்டு? உடனே வெளியேறுÕ என்று குரல் கொடுத்தனர். இதை எதிர்பார்த்தே, அங்கே ஏராளமான போலீஸார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் அறிவாலயத்துக்குள் நுழைந்து சன் டி.வி. ஆபீஸை தாக்கக்கூடுமென்று முன்கூட்டியே உளவுத்துறை எச்சரித்திருந்ததால், தொண்டர்களைக் கட்டுப்படுத்தித் திருப்பி அனுப்பினார்கள் போலீஸார்.

அமைச்சர்கள் கூச்சல்... ஸ்டாலின் சமாதானம்!

ÔÔதலைவர் ரொம்ப வேதனையில் இருக்கிறார். நாம் எதுவும் புதியதாகப் பிரச்னை பண்ணக்கூடாது. பொறுமையாக இருங்கள்Õ’ எனறு சக அமைச் சர்களிடம் ஸ்டாலின் சமாதானப்படுத்தும் அளவுக்குப் போய்விட்டதாம்! இதுகுறித்து தி.மு.கழக அமைச்சர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ÔÔஆமாங்க... தயாநிதி மாறன் மீது நாங்க ஒரு புகார் பட்டியல் எழுதி தலைவர்கிட்ட தர நினைத்தோம்! வளர்த்த கடாவே மார்புல பாய்ந்த கதைதான் எங்க தலைவருக்கு! தயாநிதி மாறனை உச்சாணிக் கொம்புக்கு உயர்த்தினார். இன்று அவர் தன் சுயரூபத்தைக் காட்டிவிட்டார். சீனியர் மந்திரிகள் சிலரையே புண்படுத்தும் விதத்தில் அவர் நடந்து கொண்டார். அவரை கட்சி உறுப்பினராகவும் வைத்திருக்கக் கூடாது. இதை ஸ்டாலினுக்கு சொல்லாமல், தலைவரிடம் நேரில் வலியுறுத்தப்போகிறோம்ÕÕ என்றார் நம்மிடம்.

நடந்தே விட்டது..!

Ôஅடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க, தி.மு.க&வின் நிர்வாகக் குழு நாளை மாலை கூடும்Õ என்று சனிக்கிழமை அறிவாலயத்திலிருந்து அறிவிப்பு வெளியானபோதே, Ôஅது தயாநிதி மாறனுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கத்தான்Õ என்று கட்சி வட்டாரம் முழுவதும் புரிந்து கொண்டது. அதேசமயம், ஊட்டியில் இருந்த தயாநிதி மாறனோ பத்திரிகையாளர்களிடம் எதுவுமே பேசவில்லை.

ஞாயிறு மாலை அறிவாலயத்தில் கூடிய நிர்வாகக் குழுவினர் அனல் கக்கும் விதமாகத் தயாநிதி மாறன் பற்றி பேசினர். சிலர், Ôவிளக்கமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மந்திரி பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குங்கள்Õ என்றே கோஷமிட... முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு அளிப்பதாகத் தீர்மானம் போட்டுக் கலைந்தது நிர்வாகக் குழு.

இந்தத் தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே தயாநிதி மாறன், அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவிக்க...

அடுத்தகட்ட விறுவிறுப்பான காட்சிகளுக்காக தி.மு.க. தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. பொன்விழா முத்துக்கள்...

தீவுத்திடல் விழா நிகழ்வுகளை கவனித்துக் கொண்டவர், தி.மு.க&வின் வடசென்னை மாவட்டச் செயலாளர் பலராமன். கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு பிளாஸ்கிலிருந்து காபி ஆற்றிக் கொடுப்பது வரை வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு படு காஷ§வலாக மேடையில் வளையவந்த பலராமனை, ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார், மத்திய ரயில்வேதுறை அமைச்சர் லாலு.

விழா தினத்தன்று சென்னையின் பல பகுதிகளில் தி.மு.க&வின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பினார்கள். அதில் நாகூர் ஹனிபா பாடிய Ôவளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா... வஞ்கரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா’ என்ற பாட்டை பல இடங்களில் திரும்பத் திரும்பப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

தயாநிதி விஷயம் குறித்து கருணாநிதி தன் உரையில் ஏதாவது சொல்வார் என்று தீவுத்திடலில் திரண்டிருந்த கூட்டம் எதிர்பார்த்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை. மற்றவர்கள் பேச்சை சோனியாவுக்கு ராசா மொழிபெயர்க்க, சோனியாவின் பேச்சை மைக்கில் மொழிபெயர்த்தவர் பீட்டர் அல்போன்ஸ். பீட்டரும், நன்றி உரை நிகழ்த்துவதற்காக காங்கிரஸின் சட்டமன்றத் தலைவர் சுதர்சனமும் மேடையில் இருக்க... அது புரியாமல், Ôசோனியா முன்னிலையிலேயே தமிழக காங்கிரஸ§க்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து அறிவிக்கப் போறார் கலைஞர். பீட்டருக்கும் சுதர்சனத்துக்கும் அமைச்சர் பதவிÕ என்று சிலர் Ôயூகித்தபடிÕ இருந்தார்கள். ஆனால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு விவகாரங்களில் தமிழகம் ஒரு தீபகற்ப நிலையில் தவிப்பது பற்றி குறிப்பிட்டு, Ôஇதை எங்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. டெல்லிதான் கைகொடுக்க வேண்டும்Õ என்று பிரதமருக்கும் சோனியாவுக்கும் வேண்டுகோள் வைத்துப் பேச்சை முடித்துவிட்டார் கருணாநிதி.

செம பந்தாவாக இங்கிலீஷிலேயே பேசிவிட்டுப் போனார் ம.தி.மு.க. Ôஅவைத் தலைவர்Õ எல்.ஜி.! லோக்கல் தலைவர்கள் யார் பேச வந்தாலும், பக்கவாட்டில் போய் நின்று, அவர்களை ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்ளும்படி நகத்தால் சுரண்டாத குறையாக நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார் ஆற்காட்டார். ஆனால், டாக்டர் ராமதாஸ§க்கு இதிலிருந்து விதிவிலக்கு!

Ôவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களேÕ என்று சொல்ல வந்த கருணாநிதி, வாய் தவறி Ôவிடுதலைப் புலிகள்Õ என்று சொல்ல... பத்திரிகையாளர் வரிசையில் சின்ன சலசலப்பு!

விழாவை முன்னிட்டு வெளியான பொன்விழா மலரைத் தயாரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டவர் உணவு அமைச்சர் எ.வ.வேலு. மலரின் இறுதிப் பணிகளின்போது ஸ்டாலினும் பொன்முடியும் சில மாலை நேரங்களில் வேலுவின் வீட்டுக்கே போய் உற்சாகமாக ஆலோசனைகள் வழங்கினார்களாம்!

சட்டசபையில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியின்போது சிறப்பு அழைப்பாளர்களையும் சேர்த்து சட்டசபையில் ஏக நெருக்கடியாக இருக்க... அதையே தன் பேச்சில் குறிப்பிட்டு, ÔÔசட்டமன்றத்துக்குப் புது இடம் பார்க்கப்படும். அதற்கென விரைவில் அடிக்கல் நாட்டப்படும்ÕÕ என்று புது அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர். அரசினர் தோட்டத்தில்தான் புது சட்டசபை வரப் போகிறது என்கிறது அரசு வட்டாரம்.

ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு?

‘‘தயாநிதி மாறன் டெல்லி விவகாரங்களை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் அவருக்கு உதவியாகவும், வீட்டுப் பொறுப்புகளைக் கவனித்துக் கொள்ளவும் கோபாலபுரம் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஊழியரை தயாளு அம்மாள் அனுப்பி வைத்திருந்தாராம். முக்கியமான விஷயங்களை இரண்டு குடும்பங்களும் பகிர்ந்து கொள்வதும்கூட அந்த ஊழியர் மூலமாகத்தான். அந்த ஊழியர் எப்போது வேண்டுமானாலும் கருணாநிதியை நேரில் சந்திக்கும் அளவுக்குக் குடும்பத்தோடு பல ஆண்டுகளாக ஒன்றி விட்டவர்.

கொந்தளிப்பு தொடங்கியபிறகு மாறன் குடும்பத்திலிருந்து சமாதானத் தூதராக இவரும்கூட அனுப்பப்பட்டார் என்கிறார்கள். எப்போதும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அந்த ஊழியரை அனுமதித்துக் கொண்டிருந்த கோபாலபுரம் இல்ல பாதுகாப்பு அதிகாரிகள், ‘உங்களை இனி இங்கே வர வேண்டாம்னு அம்மா சொல்லச் சொன்னாங்கÕ என்று கூறி அனுப்பிவிட்டார்களாம்.

Ôமாறுபட்ட கருத்துக்களுடன் இனி அறிவாலய வளாகத்துக்குள் சன் டி.வி. அலுவலகம் எப்படி செயல்பட முடியும்?Õ என்ற கேள்விக்கு, விவரமான சிலர் ஒரு தகவலை முன்வைக்கிறார்கள்&

ÔÔமூன்று வருடங்களுக்கு முன்பு ÔதினகரனைÕ வாங்க சன் குழுமம் முடிவெடுத்தபோது, ‘இனி நாம் அறிவாலயம் காம்பவுன்டில் இருந்தால் அது நமக்கு மைனஸ்தான்’ என்று Ôசன்Õ குழும நிர்வாகிகள் கருதினார்கள். இதை தி.மு.க. தலைமையிடம் சொல்லியும் இருக்கிறார்கள். ஆனால், அந்த சமயத்தில், Ôஅறிவாலயத்தின் ஒட்டுமொத்த பராமரிப்பு செலவுகளையும் சன் டி.வி. நிர்வாகம்தான் பார்த்துக் கொள்கிறது. அவர்கள் காலி பண்ணிக்கொண்டு போய்விட்டால் இவ்வளவு பெரிய வளாகத்துக்கான மெயின்டனென்ஸை கட்சி செலவில் பார்த்துக் கொள்வது சிரமம்Õ என்று மு.க.ஸ்டாலின் தரப்பிலிருந்து சொல்லி, காலி செய்யும் எண்ணத்தைக் கைவிட வைத்தார்கள். ஆனால், இப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்தே, சன் டி.வி&யை அறிவாலய வளாகத்திலிருந்து காலி செய்ய வைப்பதற்கு பிரஷர் தரப்படுகிறது. எப்படியிருந்தாலும் அறிவாலயத்தை விட்டு வெளியே வருவது சன் டி.வி&க்கு ப்ளஸ்தான். நடுநிலை சேனல் என்ற முத்திரை கிடைக்கும்ÕÕ என்கிறார்கள் இவர்கள்.

இப்படி நடப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்த்தே, மாற்று இடத்தை ஏற்கெனவே தயார்படுத்தி வைத்துவிட்டதாம் சன் நிர்வாகம்.

கடந்த சில மாதங்களாகவே தயாநிதிக்கும் அழகிரிக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மோதல்கள் நடந்து வருவதாக தி.மு.க&வின் மேல்மட்ட வட்டாரம் சொல்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பின்போது, மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட தனக்கு விருப்பம் இருப்பதாக அழகிரி சொல்ல... அங்கிருந்த தயாநிதி மாறன், ÔÔநீங்க மதுரையில் இருந்து ஒட்டுமொத்தமாக கட்சியைப் பார்த்துக்கறதுதான் நல்லது. எம்.எல்.ஏ&வெல்லாம் எதுக்கு?ÕÕ என்று கேட்டதாகவும்.... அதை ரசிக்காத அழகிரி, அங்கேயே தயாநிதியிடம் கசப்பாக சில வார்த்தைகளை உதிர்த்ததாகவும் சொல்கிறது இந்த வட்டாரம்.

Ôதினகரன்Õ கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைகாட்சி காட்டிய செய்தியில், தா.கிருட்டிணன் படுகொலை உட்பட மதுரையில் இதற்குமுன் நடந்த பல வன்முறைகளைக் காட்டி, அழகிரியை நோக்கி விரல் நீட்டியதுதான் அழகிரியை கோபத்தின் உச்சிக்கே போகச் செய்தது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம். ÔÔகம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை விவகாரத்தில் தன் பேரை இழுத்ததுதான் அண்ணனோட ஆத்திரத்தை பல மடங்கு ஆக்கிடுச்சுÕÕ என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

ஸ்டாலினை முதல்வராக ஆக்குவதற்கான சீரியஸான யோசனையில் தி.மு.க. தலைமை இருந்தபோது, கட்சியின் சீனியரான ஆற்காட்டார் அதை ரசிக்கவில்லை என்றும் அதனால்தான் முடிவு சற்றே தள்ளி வைக்கப்பட்டது என்றும்கூட சிலர் சொல்கிறார்கள். ÔÔசமீபத்தில் ஒருநாள், ‘தினம் தினம் வேலைப் பளு ஜாஸ்தி ஆகிட்டிருக்கு. அதனால அதுக்கு மாத்து ஏற்பாடு ஏதாவது செய்யலாம்னு நினைக்கிறேன்’னு சி.எம். ஏதோ சொல்ல வந்தாரு. சுத்தி வளைச்சு, ஸ்டாலினை முதல்வரா கொண்டு வர்றது பத்தித்தான் பேசறாருனு அங்கிருந்தவங்க புரிஞ்சிகிட்டாங்க. அப்ப ஆற்காட்டார், ‘தலைவரே! இப்போ நீங்க உங்ககிட்ட வெச்சிருக்கற தொழில் துறையினாலதான் உங்களுக்கு வேலை ஜாஸ்தியாயிருக்கு. தினம் தினம் வெளிநாட்டுக்காரங்க தொழில் தொடங்க வர்றாங்க. எல்லோரையும் நீங்க பார்க்க வேண்டியிருக்கு. அதுதான் உங்களுக்குக் கூடுதல் வேலையா இருக்கு. அந்தத் துறையை வேணா கூடுதல் பொறுப்பா ஸ்டாலின்கிட்ட கொடுத்துடுங்க’னு சொன்னாருÕÕ என்கிறார்கள் இவர்கள். தற்போது பிரச்னை வேறு திசையில் வெடித்துவிட, ஸ்டாலின் விஷயத்தில் ஆற்காட்டார் மனமாறுதல் அடைந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

கோட்டையிலும் கொடி!

கோட்டையிலும் ராஜ் டி.வி&க்கு ஏக மரியாதைதான்! வழக்கமாக, சட்டசபை நிகழ்வுகளை கவர் செய்யும் தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, அதை கேசட்டில் ரெடி செய்து உடனுக்குடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பி வைக்கும். தி.மு.க. ஆட்சி வந்துவிட்ட பிறகு முதல் கேசட்டை சன் டி.வி&க்குத்தான் அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள். ஆனால், கருணாநிதியின் பொன்விழா கொண்டாட்டம் சட்டசபையில் நடந்த நாளன்று, ‘ஏம்ப்பா! கேசட் ராஜ் டி.வி&க்குப் போயிடுச்சாÕ என்றுதான் அதிகாரிகள் பறந்து கொண்டிருந்தார்கள். கோட்டைக்கு செய்தி சேகரிக்கப் போன ராஜ் டி.வி. செய்திக் குழுவினருக்கும் ஏக வரவேற்பு. கேமரா, லைட், ஸ்டாண்ட் என்று கருவிகளை ராஜ் டி.வி. குழுவினர் ஒரு ஓரமாக வைத்திருக்க, ‘‘ராஜ் டி.வி இப்ப அரசு டி.வி ஆயிடுச்சு. இது எல்லாம் அரசு சொத்து! பத்திரமா பார்த்துக்கோங்கப்பா’’ என்று அங்கிருந்த செய்திப் பிரிவு ஊழியர்களிடம் யாரோ ஒரு பத்திரிகையாளர் சொல்ல... அங்கிருந்தவர்கள் கலீரெனச் சிரித்தனர்.

- ஆர்.பி., எஸ்.சரவணகுமார்,

நன்றி : ஜூனியர் விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.