Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக...

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 பெப்ரவரி 06

வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன.   

தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும் காட்டும் குறிகாட்டிகள் வரலாறெங்கும் உண்டு. அவற்றை, இன்று நாம் நினைவுகூரும் போது, அந்த இருண்ட பக்கங்களுக்கு இட்டுச் சென்ற காரணிகளையும் கவனமாய் மனத்தில் இருத்துதல் வேண்டும்.   

ஏனெனில், அதேபோன்ற பயங்கரங்கள் இனியும் நிகழாது என்பதற்கு, எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. இதை ஈழத்தமிழர்களை விட, நன்கறிந்தவர் யாருமில்லை.   

‘அவுஸ்ட்விட்ச்’ விடுவிக்கப்பட்டதன் 75ஆம் ஆண்டு நிறைவு, கடந்த வாரம் நினைவுகூரப்பட்டது. ‘அவுஸ்ட்விட்ச்’ ஒரு குறியீடு. உலக வரலாற்றின், மிக முக்கியமான பல பக்கங்களின் திறவுகோல் இந்த ‘அவுஸ்ட்விட்ச்’.   

உலக அரசியலின், தேசியவாத இனவெறியின், கம்பெனிகளின் இலாபவெறியின், மருத்துவ விபரீதங்களின் எனப் பலபக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவது ‘அவுஸ்ட்விட்ச்’.   
இத்தனைக்கும் உரிய ‘அவுஸ்ட்விட்ச்’ போலந்து நாட்டின் ஓர் அழகிய நகரம்; தலைநகர் வார்சோவில் இருந்து, 300 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.   

1939ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி, ஜேர்மன் நாட்டின் தலைவர் அடல்ப் ஹிட்லர், போலந்தின் மீது படையெடுத்தார். இது, இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகவும் அமைந்தது. போலந்தின் பெரும்பகுதியை ஜேர்மனி கைப்பற்றியது. அதற்குள் ‘அவுஸ்விட்ச்’உம் அடக்கம்.   

முதலில், அங்கு ஓர் இராணுவ அரண் நிர்மாணிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1940ஆம் ஆண்டு போலிஸ் நாட்டு அரசியல் கைதிகளைச் சிறை வைப்பதற்கான சிறைக்கூடம் தயாரானது. ஜேர்மனியில் குற்றம் புரிந்து, தண்டனை பெற்றவர்கள் கொண்டு வரப்பட்டு, இந்தச் சிறைக்கூடம் உருவாக்கப்பட்டது.    

1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், போரின்போது கைதான போலிஸ், சோவியத் ஒன்றிய படைவீரர்கள், இங்கு விஷவாயு செலுத்தப்பட்ட அறைக்குள் இடப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.   

இதைத் தொடர்ந்த நான்கு ஆண்டுகளில், 1.3 மில்லியன் மக்கள் ‘அவுஸ்ட்விட்ச்’க்கு அனுப்பப்பட்டார்கள். அதில் 1.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களில் பெரும்பான்மையோர், விஷவாயு செலுத்தப்பட்ட அறைக்குள் இடப்பட்டே கொல்லப்பட்டார்கள். மிகுதிப்பேர், மருத்துவ பரிசோதனைகளில் இறந்தார்கள்.  இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 960,000 பேர் யூதர்கள். ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து, யூதர்களைக்  கொண்டு வருவதற்காக, ‘அவுஸ்ட்விட்ச்’ சிறைக்கூடம் வரை, ரயில் பாதைகள் இடப்பட்டன.   

image_6a728c6975.jpg

இந்தக் கொடுமைகளை, சோவியத் ஒன்றியத்தின் செம்படை, 1945ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி முடிவுக்குக் கொண்டு வந்தது. செம்படை, ஜேர்மனியைத் தோற்கடித்து ‘அவுஸ்ட்விட்ச்’ஐ விடுவித்தது.   

அங்கு, அவர்கள் கண்ட காட்சிகள், நெஞ்சை உறைய வைத்தன. பட்டினியால் மெலிந்த உடல்கள், எலும்புக்கூடுகள், 370,000 ஆண்களின் ஆடைகள், 837,000 பெண்களின் ஆடைகள், 7.7 தொன் அளவிலான மனிதத் தலைமயிர் ஆகியவற்றைக் கண்டெடுத்தனர். 7,000 பேர் மீட்கப்பட்டனர். இதேபோல, ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை, செம்படை மீட்டதன் ஊடு, பல சித்திரவதைக் கொலைக் கூடங்களையும் விடுவித்தது. பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மீட்கப்பட்டார்கள். ஆனால், இன்றும் ‘அவுஸ்ட்விட்ச்’ பற்றிப் பேசுபவர்கள், அதை விடுவித்தது சோவியத் ஒன்றியத்தின் செம்படை என்பதைச் சொல்லாமல் தவிர்க்கிறார்கள்.  

 இதன் பின்னால் உள்ள அரசியல் பெரிது. போலந்தில் இவ்வாறாதொரு பெரிய சித்திரவதைக் கூடம் அமைக்கப்படுகிறது என்ற தகவல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரெஞ்சு ஆகிய நாடுகளின் கூட்டுப்படைகளுக்கு தெரிந்திருந்தது. அவற்றைக் குண்டு வீசி அழிக்கும்படியும் கேட்கப்பட்டது.  ஆனால், இக்கோரிக்கை ‘செவிடன் காதில் விழுந்த கதை’ ஆகியது. இந்தச் சிறைக்கூடங்கள் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள், பேராசிரியர் Wachsmann Nikolaus எழுதிய KL: A History of the Nazi Concentration Camps  என்ற நூலை வாசிக்கலாம்.   

‘அவுஸ்ட்விட்ச்’இல் தெரியப்பட்ட சிறைவாசிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சிறைவாசிகள் சம்மதம் தெரிவிக்காதபோதும் அவர்களுக்கு ஊசிகளும் பிற மருந்துகளும் கொடுக்கப்பட்டன.   

எடுவார்ட் வேர்ட்ஸ் என்ற வைத்தியரின் தலைமையில், 20 நாசி வைத்தியர்கள் இங்கு கடமையாற்றினார்கள். இதில் புகழ்பெற்றவர் ஜோசப் மெங்கலே; ‘மரணத்தின் தேவதை’ என அறியப்பட்ட இவர், மிக மோசமான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டவர்.   

மானிடவியலிலும் மருத்துவத்திலும் டொக்டர் பட்டம் பெற்ற இவர், தனது ஆய்வுகளுக்குச் சிறைவாசிகளைப் பயன்படுத்தினார். அவர், சிறைவாசிகளைப் பொருள்கள் போல் பாவித்தார். இதில் வருத்தமான செய்தி யாதெனில், இவர் இறுதிவரை கைதுசெய்யப்படவில்லை.   1979ஆம் ஆண்டு, பிரேஸிலில் இயற்கை மரணம் அடையும்வரை, இவரை ஜேர்மனியாலோ, இஸ்‌ரேலின் மொசாட்டாலோ கண்டு பிடிக்க முடியவில்லை.   

 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று IG Farben-Bayer. இந்த நிறுவனத்தின் வேலைத்தளம், ‘அவுஸ்ட்விட்ச்’ சிறைக்கூடங்களுக்கு அண்மையில் நிறுவப்பட்டது. சிறைவாசிகள் இந்த வேலைத்தளத்தில் கடமை புரிந்தார்கள். ‘அவுஸ்ட்விட்ச்’இல் பயன்படுத்தப்பட்ட விஷவாயுவை வழங்கியதும் இந்த நிறுவனம்தான். மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மருந்துகளை சோதித்துப் பார்ப்பதற்காகவும் ‘அவுஸ்ட்விட்ச்’ சிறைவாசிகள் பயன்படுத்தப்பட்டனர்.  அதேவேளை, இந்த நிறுவனத்துக்கு வேண்டிய ஏராளமான மருத்துவ பரிசோதனைகளும் நிறுவனத்தின் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அனுமதியை வழங்கி, மேற்பார்வை பார்த்தவர் மெங்கலே.   

இந்த விஷப்பரீட்சைகளால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உடல் நலக் குறைவுக்கும் மனநலம் சார் சிக்கல்களுக்கும் உள்ளானார்கள். இதற்குப் பொறுப்பான இந்த நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு மிகக்குறைந்தளவான சிறைத்தண்டனையே வழங்கப்பட்டது.  

 சிறைவாசிகளை ‘அடிமைகளாக வேலைக்கு அமர்த்திய’ குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், மருத்துவப் பரிசோதனைகள் செய்தமை, விஷவாயு விநியோகித்தமை குற்றங்களாகக் காணப்படவில்லை.   

75 ஆண்டுகளின் பின்,   

இன்று, ‘அவுஸ்ட்விட்ச்’ நினைவுகூரப்படும் போது, அத்தோடு சேர்ந்து நாசிசம், பாசிசம் ஆகியவற்றின் ஆபத்துகளும் சேர்த்தே நினைவுகூரப்பட வேண்டும். யூதர்களே, பிரதான இலக்காக இருந்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்காக, இன்று யூதர்கள் உலகில் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லை. நினைவு நிகழ்வு அண்மையில் ஜெருசலத்தில் நடந்தது. இதில் பேசிய இஸ்‌ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகு, “மனிதகுலத்துக்கு ஈரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது” என்றார்.

image_5a2f62ae89.jpg  

 இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், இன்று, அமெரிக்காவுக்கு அடுத்தபடி அடாவடித்தனமாக இயங்கும் அரசாக இஸ்‌ரேல் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனமாக இருந்து, ஏனைய இனங்களை ஒடுக்குகின்ற இனமாக இன்று யூதர்கள் மாறியிருக்கிறார்கள். இது ஒரு மோசமான உதாரணம். பாதுகாப்பின் பெயரால், ஓர் இராணுவ மய்யப் பாதுகாப்பு அரசாக, இஸ்‌ரேல் மாறியுள்ளது. இதை, யூதத் தேசியவாதமும் தீவிரவாதமும் ஆதரிக்கின்றன.   

யூதர்களுக்கு எதிராகச் சென்ற நூற்றாண்டுவரை, ஐரோப்பாவில் செய்யப்பட்ட கொடுமையைக் காரணம் காட்டி, இஸ்‌ரேல் என்ற நாட்டை உருவாக்குகிற கருத்துக்குத் திரட்டப்பட்ட ஆதரவு, இஸ்‌ரேலின் தோற்றத்துக்கு வழி செய்தது.   

அரபு மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த மண்ணில், 2000 ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த யூதர்களின் வாரிசுகள் வந்து, குடியேறக்கூடிய ஓர் இஸ்‌ரேலின் உருவாக்கம், வன்முறையால் அப்பாவி அரபு மக்களை விரட்டியும் வஞ்சகமாயும் மிரட்டல்களாலும் அவர்களது மண்ணை அடிமாட்டு விலைக்கு வாங்கியும் நடந்த நிலப்பறிப்பால் இயலுமாக்கப்பட்டது.   

இஸ்‌ரேல் சமூகம் குறித்த பெறுமதியாக கண்ணோட்டமொன்றை, மைக்கல் வார்ஷ்சாவ்ஸ்கி என்ற இஸ்‌ரேலியர் தனது ‘திறந்த கல்லறையை நோக்கி’ என்று நூலில் தருகிறார்.   

அதில் அவர், ‘இஸ்‌ரேலிய அரசு நடத்துகிற கொடுமைகளுக்கு எதிரான குரல்கள், எப்போதுமே இஸ்‌ரேலுக்குள்ளிருந்து எழுந்து வந்துள்ளன.எனினும், சரிக்கும் பிழைக்கும் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமூகமாக, இஸ்‌ரேல் சீரழிந்து வந்துள்ளது’ என்கிறார்.  யூதர்களை ஈழத்தமிழர்களுடன் ஒப்பிடும் அபத்தத்தைச் செய்பவர்கள் இந்த நூலைத் தேடி வாசிப்பது பயனுள்ளது.   

இன்று, ‘அவுஸ்ட்விட்ச்’ யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட சமூகம் எவ்வாறு, மனிதாபிமான அடிப்படைகள், அறங்கள் அற்ற சமூகமாக இஸ்‌ரேலிய சமூகம் மாறியுள்ளது என்பதையும் காட்டியுள்ளது. அதனிலும் மேலாக, பாசிச அபாயத்தையும் உணர்த்தி நிற்கிறது. 

இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பாசிசம் போலன்றி, நவீன பாசிசம் தனது வேலைத்திட்டத்தை, அதிகாரத்திலுள்ள கட்சியாகவும் கூட்டரசாங்கத்தின் பங்காளியாகவும் நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இயங்கும் வலுவான அழுத்தக் குழுவாகவும் செயற்படுத்துகிறது.  

 இதை விளங்குவதும் அதற்கு எதிர்வினையாற்றுவதும் காலத்தின் தேவையாகிறது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவுஸ்ட்விட்ச்-75-ஒடுக்கப்பட்டோரில்-இருந்து-ஒடுக்குவோராக/91-245072

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.