Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வென்றது ஆம் ஆத்மி: சாமானிய தோற்றம், மோதியுடன் மோதல் - யார் இந்த அரவிந்த் கேஜ்ரிவால்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பரணி தரன் பிபிசி தமிழ்
 
Delhi Results
ஆம் ஆத்மி -62
பாஜக-07
Cong: 0
 

யார் இந்த கேஜ்ரிவால்?

ஹரியாணாவில் ஒரு நடுத்தர பொறியாளரின் குடும்பத்தில் 1968-ஆம் ஆண்டு பிறந்தவர் கேஜ்ரிவால். ஐஐடி காரக்பூரில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் படித்தவர், டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் 1989-ஆம் ஆண்டு சேர்ந்தார். ஜாம்ஷெட்பூரில் அவருக்கு பணி வழங்கப்பட்டது.

1992-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு ஆயத்தமாவதற்காக விடுப்பு எடுத்திருந்த பின்னணியில், தமது தனியார் பணியில் இருந்து அவர் விலக நேர்ந்தது. பிறகு கொல்கத்தாவில் சில ஆண்டுகள் வாழ்ந்தபோது அன்னை தெரசா நடத்தி வந்த மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீஸ், வடகிழக்கு இந்தியாவில் ராமகிருஷ்ணா மடத்தின் சேவை, நேரு யுவ கேந்திரா ஆகியவற்றின் சேவைகளுடன் தன்னை கேஜ்ரிவால் தொடர்புபடுத்திக் கொண்டார்.

கேஜ்ரிவால்படத்தின் காப்புரிமை Getty Images

1995-ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு இந்திய வருவாய் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறையில் உதவி ஆணையராக சேர்ந்த அவருக்கு 2000-ஆம் ஆண்டில் மேல்படிப்புக்காக வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, பணியில் மீண்டும் சேர்ந்த பிறகு குறைந்தது 3 ஆண்டுகளுக்காவது பணியில் இருந்து விலகக் கூடாது என அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய விருப்ப ஓய்வு

அதன்படி 2002-இல் மீண்டும் பணியில் சேர்ந்த அவர், ஓராண்டாக எந்த பொறுப்புக்கும் நியமிக்கப்படாமல் இருந்தார். 18 மாத காத்திருப்புக்கு பிறகு ஊதியமில்லா விடுப்பு கோரி விண்ணப்பித்த அவர், வருமான வரித்துறையின் புது டெல்லி பிரிவு இணை ஆணையராக இருந்த வேளையில், தமது பதவியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகினார்.

முன்னதாக, வருமான வரித்துறையில் இருந்தபோது கேஜ்ரிவாலும், மணிஷ் சிசோடியாவும் சேர்ந்து 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிவர்தன் என்ற அமைப்பை நிறுவினார்கள். பிறகு இருவரும் கபீர் என்ற மற்றொரு தத்துவார்த்த சிந்தனை அமைப்பை நிறுவினார்கள். அதன் மூலம் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை அவர்கள் நடத்தினார்கள்.

கேஜ்ரிவால்

இந்த நிலையில், மகராஷ்டிராவை சேர்ந்த அண்ணா ஹசாரேவுடன் கேஜ்ரிவாலுக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்களை, பாதிக்கப்பட்டவர்கள் பெறுவதற்கு ஆதரவாக கேஜ்ரிவால் குரல் கொடுத்தார். பரிவர்தன் அமைப்பு மூலம் ஆற்றிய சேவைக்காக ரமொன் மகசாசே விருது கேஜ்ரிவாலுக்கு கிடைத்தது.

இந்த நிலையில், 2010-ஆம் ஆண்டில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகளில் ஊழல் நடந்ததாகக் கூறி போராட்டம் நடத்திய கேஜ்ரிவால், அடுத்த ஆண்டே அண்ணா ஹசாரே, கிரண் பேடி உள்ளிட்டோர் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற அமைப்புடன் சேர்ந்து, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அண்ணா ஹசாரேவின் மூளையாக அப்போது அறியப்பட்ட கேஜ்ரிவால், பிறகு ஹசாரேவிடம் இருந்து விலகி 2012-ஆம் ஆண்டில் முழு நேர அரசியலுக்குள் நுழைந்தார்.

மக்களை கவரும் உத்திகள்

அதே வேகத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஆட்சியை அவரது ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. இதனால், கேஜ்ரிவாலின் அரசியல் பிரவேசத்தை நாடே திரும்பிப்பார்த்தது.

கேஜ்ரிவால்படத்தின் காப்புரிமை PTI

எளிமையான தோற்றம், சாமானியர்களை அணுகும் போக்கு, அடித்தட்டு மக்களை ஈர்க்கும் பேச்சு என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் செயல்பாடுகளை பட்டியலிடலாம்.

டெல்லியில் 2013-ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது முதல், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியுடன் ஊழல் எதிர்ப்பு விவகாரங்களில் மல்லுக்கு நின்றது, 2014-ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மீண்டும் ஊழல் எதிர்ப்பு மற்றும் மாநில சுயாட்சியை வலியுறுத்தி போராடியது என கேஜ்ரிவாலின் 49 நாட்கள் ஆட்சிப்பிரவேசம், கிட்டத்தட்ட ஒரு போராட்டக்களமாகவே கழிந்தது.

2015-இல் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகே, தமது அரசியல் உத்திகளை சற்றே மாற்றிக் கொண்டு, முழு நேர மக்கள் நலப்பணி மற்றும் அரசு திட்டங்களில் கேஜ்ரிவால் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

கல்வி, குடிநீர், மின்சாரம், சுகதாரம் ஆகிய நான்கு துறைகளில் அடித்தட்டு மக்கள் முதல் சாதாரண வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக தமது செயல்பாடுகள் இருப்பதால், அவற்றில் நடைமுறைப்படுத்திய சேவைகளை மீண்டும் தொடர தமது கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு வாக்காளர்களை அரவிந்த் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டார்.

மக்கள் முதல்வரானது எப்படி?

ஆட்சிக்கு வந்த முதல் ஆறு மாதங்களில், டெல்லி அரசு தலைமைச் செயலகத்தையும் தமது வீட்டையும் வாக்காளர்களையும் டெல்லி மக்களையும் சந்திக்கும் மக்கள் குறைதீர் முகாம்களாக மாற்றி சில தடாலடி நடவடிக்கையை கேஜ்ரிவால் மேற்கொண்டார்.

ஓட்டு போடுதல்படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அவரை சந்திக்க வந்த மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நாள்தோறும் அதிகரித்தது.

சுவரொட்டிகளில் சாலையோர தட்டிகளில் மட்டுமே அமைச்சர்களையும் முதல்வரையும் சந்தித்து வந்த டெல்லி நகர வாக்காளர்களுக்கு, அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பு, டெல்லிவாசிகளிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது.

இருப்பினும், பின்னாளில் மக்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்த கேஜ்ரிவால், ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை மக்களை சந்திக்கும் பிரதிநிதிகளாக அறிவித்தார்.

கேஜ்ரிவாலின் குறிப்பிடத்தக்க ஆரம்பகால ஆட்சியின் சாதனையாக தலைநகர் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்ட சுமார் 450 மொஹல்லா கிளினிக்குகளை (சமுதாய ஆரம்ப சுகாதார மையம்) குறிப்பிடலாம். இலவச மருத்துவ ஆலோசனையில் தொடங்கி, நகரவாசிகளுக்கு அவற்றில் அளிக்கப்படும் சிகிச்சை வசதிகள், நெல்சன் மண்டேலா மற்றும் ஐ.நா முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அனான் ஆகியோர் உருவாக்கிய எல்டர்ஸ் என்ற சர்வதேச தொண்டு அமைப்பாலேயே பாராட்டப்பட்டது.

இலக்கை எட்டாத திட்டம்

ஆனால், தமது ஐந்தாண்டுகால ஆட்சியில் 1,000 மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்திருந்த கேஜ்ரிவால், பதவிக்காலத்தின் நிறைவில், பாதியளவை மட்டுமே எட்டியிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.

   

அடித்தட்டு, நடுத்தர வாக்காளர்களை கவர்ந்த மொஹல்லா கிளினிக்குகள் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புறநோயாளிகளுக்கு உதவியதே தவிர, நாள்பட்ட சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தேவையான மேல் சிகிச்சை மற்றும் அதற்கான பரிந்துரைகளை வழங்கும் அமைப்பாக செயல்படவில்லை என்பது அங்கு வரும் நோயாளிகளின் தீர்க்கப்படாத கோரிக்கைகளாக உள்ளது.

டெல்லி முழுவதும் இலவச கம்பியில்லா இன்டர்நெட் சேவைக்கான "வைஃபி" வசதி வழங்குவதாக கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்த கேஜ்ரிவால், அதை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் தொடங்கினார். ஆனாலும், நகர் முழுவதும் 11 ஆயிரம் இன்டர்நெட் சேவைக்கான ஹாட்ஸ்பாட் அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயித்த அவரது அரசு, இன்னும் முழுமையாக அந்த திட்டத்தில் வெற்றி பெறவில்லை என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது.

குடிநீர் முதல் மின்சாரம் வரை சலுகை

குடிநீர் கட்டணத்தை பொறுத்தவரை, நிலுவை கட்டண தள்ளுபடி சலுகையை கேஜ்ரிவால் கடந்த ஆண்டு அறிவித்தபோது மீண்டும் மக்களின் பெரும் கவனத்தை பெற்றார்.

 

குடிநீர் விநியோக அளவை கணக்கிடும் மீட்டர்களை பொருத்தினால் தள்ளுபடி சலுகையை பெறலாம் என்ற நிபந்தனையுடன் அரசு வெளியிட்ட அறிவிப்பு, 13 லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன் பெற காரணமானது.

இ, எஃப், ஜி, ஹெச் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு நிலுவை கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியும், ஏ, பி பிரிவுகளில் உள்ளவர்களுக்கு 25 சதவீதமும், பி பிரிவில் உள்ள உரிமையாளர்களுக்கு 50 சதவீத நிலுவை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 600 கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட முடிவதாக டெல்லி அரசு கூறியது.

குடியிருப்புவாசிகளில், குறிப்பாக வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்திய இந்த திட்டம், அவர்களில் பலரும் வாக்காளர்களாக இருப்பதை மனதில் வைத்து அமல்படுத்தப்பட்டதாக எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதையடுத்து, மின்சார கட்டணத்திலும் சலுகை அறிவிப்புகளை டெல்லி அரசு வெளியிட்டது. டெல்லியில் மின் விநியோகத்தை பிஎஸ்இஎஸ் ராஜ்தானி, பிஎஸ்இஎஸ் யமுனா, டாடா மின் விநியோக நிறுவனம் ஆகியவைதான் மேற்கொண்டு வருகின்றன.

நஷ்டத்தில் இயங்கி வருவதாக அந்த நிறுவனங்கள் கூறி வந்தாலும், முதல் 200 யூனிட்டுகள் மின்சார பயன்பாடு இலவசம் என்ற கேஜ்ரிவால் அரசின் அறிவிப்பு, மீண்டும் அவரது செயல்பாட்டை திரும்பிப்பார்க்க வாக்காளர்களையும் நகரவாசிகளையும் தூண்டியது.

201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டபோது, மக்களின் வரவேற்பை அந்த அறிவிப்பு பெற்றது. இதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்துவது கடினம் என எதிர்கட்சிகள் கூறியபோதும், கடந்த ஆறு மாதங்களாக அதை செயல்படுத்தி வருவதால், மக்களின் வீடுகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவராக கேஜ்ரிவால் பரிணமித்தார்.

பெண்களை கவரும் மற்றொரு சிறப்பம்சமாக டெல்லி நகர பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வசதியை கேஜ்ரிவால் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த இலவச சேவையை பெற பிங்க் நிற பயணச்சீட்டை பெண் பயணிகள் வாங்க வேண்டும். தங்களுடைய பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தும் தேர்வு, ஒரு வாய்ப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்டதும் பரவலாக வரவேற்கப்படுகிறது.

ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்கு முன்பே கேஜ்ரிவால் நிறைவேற்றினார் எனக் கூறி பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன.

கல்வியில் சீர்திருத்த முயற்சி

கல்வியை தொடர முடியாதவர்களின் விகிதத்தை குறைக்கும் நோக்குடன் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி அளித்த யோசனைகளால் உந்தப்பட்ட கேஜ்ரிவால் அரசு, 2016-ஆம் ஆண்டு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை கல்வியில் பின்தங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேஜ்ரிவால்படத்தின் காப்புரிமை NurPhoto/Getty Images

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் குறைபாட்டை தேர்தல் பிரசாரத்தின்போது பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை பார்வையிட இந்திய உள்துறை அமைச்சர் முன்வந்தால், அவருடன் இணைந்து செல்ல தாமும் தயாராக இருப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் வெளிப்படையாக கூறி வருகிறார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கல்வி அமைச்சராக இருப்பதால், பள்ளிகளிலும் கல்வித்துறை அலுவலகங்களிலும் அடிக்கடி அவர் மேற்கொள்ளும் திடீர் கண்காணிப்பு நடவடிக்கை, பெற்றோர்கள் இடையே வரவேற்பும், ஆசிரியர்கள் இடையே ஒருவித பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.

மத்திய அரசுடன் மோதல்

டெல்லிக்கு சுயாட்சி தேவை என்ற முழக்கத்துடன் தொடக்க காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட கேஜ்ரிவால், காவல்துறையை மத்திய அரசிடம் இருந்து விடுவித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என குரல் கொடுத்தார்.

 

துணைநிலை ஆளுநர் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்க மறுப்பது, அதிகாரிகளின் பணி ஆணையை நிராகரிப்பது என நேரடியாக மோதல் களத்தில் குதித்த கேஜ்ரிவால், பிறகு நீதிமன்றத்துக்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.

அதுவே, டெல்லி அரசின் அதிகாரம் எவை என்பதை தெளிவுபடுத்தும் கட்டாயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு ஏற்படுத்தியது.

2013-14 ஆண்டுகளில் சில மாத ஆட்சி, அதன் பிறகு நடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சி என ஆட்சிக்காலத்தின் முதல் பாதியை, மத்திய ஆளும் அரசுக்கு எதிரான மல்லுக்கட்டு மோதல்களிலேயே செலவழித்ததாக கேஜ்ரிவால் மீது ஒரு பார்வை இருந்தாலும், அவரது "விடாப்பிடி செயல்பாடு", நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

டெல்லியில் மூன்று மாநகராட்சிகளில் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி கோலோச்சும் நிலையில், சட்டப்பேரவையில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆளுகைக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்த பிறகு, தலைநகரில் முக்கிய கட்சியாக ஆளும் ஆம் ஆத்மியும், எதிர்கட்சியாக பாரதிய ஜனதாவும்தான் பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு நகரில் உள்ள செல்வாக்கு குறைய கேஜ்ரிவாலின் செயல்பாடும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் உத்திகளும் காரணமாக இருக்கலாம்.

டெல்லியில் 15 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இதேபோல, டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக போஜ்புரி திரைப்பட நட்சத்திரமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோஜ் திவாரி நியமிக்கப்பட்ட பிறகு, அவரது கவர்ச்சிகர பிரசாரம், பரவலாக நகரவாசிகளிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்தான் அரசின் சாதனைகளை வீட்டு வாயிலுக்கே வந்து விவரிக்கும் பிரசார உத்தியை ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.

7690944444 என்ற செல்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், வீட்டுக்கே வந்து முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்வார்கள் என்றும் கூறியதுடன் நிற்காமல் அதை செயல்படுத்தவும் கேஜ்ரிவால் அரசு முனைந்திருப்பது நகர வாக்காளர்களை கவரும் விதமாக இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.

இதேபோல, மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால் இலவச மின்சாரம், 24 மணி நேர குடிநீர், ஒவ்வொரு மாணவருக்கும் உலகத்தர கல்வி என்பது உள்ளிட்ட பத்து அம்ச உத்தரவாத அட்டையை விநியோகித்த கேஜ்ரிவாலின் நடவடிக்கையும் வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-51460033

 

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.