Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும்
எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 மார்ச் 18 ,

 

கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும்.   ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர்.  

image_e92f6d7720.jpg

ஆனால், ‘கொவிட்-19’ பரவும் வேகத்தைப் பார்க்கிலும், உலகளாவிய ரீதியில், அதைப் பற்றிய பீதி பரவும் வேகம், மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. ‘கொவிட்-19’ நோய் பரவும் வேகம், ஏனைய எந்தவொரு நோய் பரவும் வேகத்தைப் பார்க்கிலும், அதிகமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.   
தற்போது உலகிலுள்ள சுமார் 200 நாடுகளில், 120க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘கொவிட்-19’ பரவியிருக்கிறது. இதுவரை, ‘கொவிட்-19’ தாக்கியவர்களின் எண்ணிக்கை, 170,000யை எட்டியுள்ளது. ‘கொவிட்-19’ தொற்றியவர்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ளனர். அதாவது, குறைந்தபட்சம் 150,000க்கும் மேற்பட்டவர்கள், நோயால் தாக்கப்பட்டும், உயிர் தப்பியுள்ளனர்.  

சீனாவிலேயே இந்த நோய் முதலில் காணப்பட்டது. அந்நாட்டிலேயே மிகவும் கூடுதலானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டும் மரணித்தும் உள்ளனர். அங்கு, ‘கொவிட்-19’ தொற்றிவர்களின் எண்ணிக்கை சுமார் 80,000 ஆகும். அவர்களில் 4,000 பேர் உயிரிழந்தனர்.   

ஆனால், சீனாவில் ‘கொவிட்-19’இன் தாக்கம், தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. நோயால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாகாணம், மூடப்பட்ட போதிலும், அங்கு சிலநாள்களில், அதாவது இப்போது புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதே இல்லை. கடந்த சனிக்கிழமை (14) அந்த மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதோடு, அதையடுத்து மாகாணம் விழாக் கோலம் பூண்டிருந்தது.  

உலக சுகாதார நிறுவனம், இந்த நோய்க்கு ‘கொவிட்-19’ எனப் பெயரிட்டு இருந்தாலும், அப்பெயரைச் சூட்டுவதுதில் ஏற்பட்ட தாமதத்தால், உலகம் முழுவதிலும் பொது மக்கள் மட்டுமன்றி, சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதை, ‘கொரோனா வைரஸ்’ என்ற பெயரிலேயே அழைத்தனர். அப்பெயரிலேயே இன்னமும், சர்வதேச ஊடகங்கள் பெரும்பாலும் நோயை விளிக்கின்றன.  

நோயால், உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நியாயமான பீதியின் காரணமாக, அது ‘உலகளாவிய தொற்று’ என, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.   

நோய் பரவுவதை, குறிப்பாக நோய் தமது பிரஜைகளைத் தாக்குவதைத் தடுப்பதற்காக, பல சர்வதேச நாடுகள், பலவேறான திடமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.   

பொதுவாக, ஏனைய நாடுகளுடனான விமானம், கப்பல் போக்குவரத்தை நிறுத்துவதே அவற்றில் முக்கியமானதாகும். அத்தோடு, மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுப்பதற்காக, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டு, பொதுநிகழ்வுகள், சமய நிகழ்வுகள் போன்றவையும் நிறுத்தப்பட்டுள்ளன.  

சீனா போன்ற நாடுகளில், ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் சகல நாடுகளும், பல கோடி டொலர் நட்டமடைந்து வருகின்றன.  

இத்தாலி அரசாங்கம், முழு நாட்டையும் ‘மூடிவிட்டுள்ளது’; அமெரிக்கா, சவூதி அரேபியா, இலங்கை போன்ற பல நாடுகள், ஐரோப்பாவுக்கான விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவைக் கவனத்தில் கொள்ளும் போது, அமெரிக்காவின் முடிவு மிகவும் பாரதுரமானதாகும்.   

ஏற்கெனவே, சீனாவிலிருந்து ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் உள்ள நிலையில், அந்நாடுகள் பெருமளவில் நட்டமடைந்து வருகின்றன. பல நாடுகளில், பங்குச் சந்தை பாரியளவில் சரிந்துள்ளது.  

image_c1be12d1a4.jpg

சீனாவில், ‘கொரோனா வைரஸ்’ முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்நாடே நோயால், மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. இருந்த போதிலும், இப்போது ஐரோப்பாவே, நோயின் கேந்திர ஸ்தானமாக இருப்பதாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.   

ஆரம்பத்தில், சீனாவில் நோய் பரவியிருந்த போது, ஐரோப்பிய நாடுகளில் பலர், சீனர்களை இகழ்ந்தும் தாழ்த்தியும் கருத்து வெளியிட்டு இருந்தனர்.  

டென்மார்க்கில் ஒரு பத்திரிகை, சீனக் கொடியிலுள்ள ஐந்து நட்சத்திரங்களுக்குப் பதிலாக, ஐந்து வைரஸ்களை வரைந்து, ஒரு நாட்டின் தேசியக் கொடியை, கேலிச் சித்திரமாக வெளியிட்டு இருந்தது. ‘சீன இனமே வைரஸ்களாகும்’ என்ற கருத்தையே, அந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவரும் அப்பத்திரிகையின் ஆசிரியரும் தெரியப்படுத்த முனைந்துள்ளனர். ஆனால், இன்று சீனா தப்பித்துவிட்டது; ஐரோப்பா, கொரோனா வைரஸின் மய்ய நிலையமாகிவிட்டது. அதிலும் டென்மார்க் முக்கியமாகும்.  

இலங்கையில், ஜனவரி மாதம் 27ஆம் திகதி, முதலாவதாக ஒரு சீனப் பெண்ணே ‘கொரோனா வைரஸ்’ தாக்கிய நோயாளியாக அடையாளம் காணப்பட்டார். அப்பெண் குணமடைந்து, நாடு திரும்பிவிட்டார்.  

அதன் பின்னர், இத்தாலியில் இலங்கைப் பெண்ணொருவர் நோயால் பாதிக்கப்பட்டார்; இவரே, கொரோனா தாக்கிய முதலாவது இலங்கையர் ஆவார்.  இந்தப் பெண்ணும் தற்போது குணமடைந்துள்ளார்.  

அதனை அடுத்து, மார்ச் 11 ஆம் திகதி, வைரஸ் தாக்கிய மேலும் இரண்டு இலங்கையர்கள் டுபாயில் கண்டறியப்பட்டனர். அன்றே, இலங்கையில் ஓர் உல்லாசப் பிரயாண வழிகாட்டி, நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.   மறுநாள் (12) அவரது நண்பரொருவரும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.   

வெள்ளிக்கிழமை (13), மேலும் மூன்று நோயாளிகள் கண்டறியப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை (15), மேலும் எட்டுப்பேர் நோயாளர் பட்டியலில் சேர்ந்தனர். நேற்றுக் காலை (17) கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளர்களின் எண்ணிக்கை, உள்நாட்டிலுள்ள உள்நாட்டு நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்திருந்தது.  

மொத்தமாக, இலங்கையர்கள் 31 பேர், இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், 28 பேர் இலங்கையிலும் மூவர் வெளிநாடுகளிலும் உள்ளனர்.   

நாட்டுக்குள் உள்ளவர்களில் ஏழு பேர் ஞாயிற்றுக்கிழமை (15) கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்தே கண்டு பிடிக்கப்பட்டனர். அந்த நிலையத்தில், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தனித் தனி அறைகளில் வைக்கப்படவில்லை; இது ஆபத்தான நிலைமையாகும்.  

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய சிலர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குச் செல்லாமல், தப்பித்து வீடு திரும்பியிருக்கும் போது, அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நபர்கள் எந்தளவு பொறுப்பற்றவர்கள் என்பதே, இதன் மூலம் தெரிகிறது.   
வெளிநாடுகளில் இருந்து வருவோர், நோய்க் காவிகளாக இருக்கலாம் என்பதற்காகவே, அவர்கள் தனிமைப்படுத்தல், கண்காணிப்பு நிலையங்களில் தனியாக வைக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், அந்நிலையங்களில் 14 நாள்கள் தங்கியிருக்க முடியாது என்றே அவர்கள் தப்பிச் செல்கிறார்கள்.  

image_9b33121129.jpg

அவ்வாறு தப்பிச் செல்வோர், தமது குடும்பத்தினருடனேயே தங்குகிறார்கள்; வீடு சென்றவுடன் மனைவி மக்களை, பெற்றோர், சகோதர சகோதரிகளைக் கட்டித் தழுவுவார்கள். இவர்கள் நோய்க் காவிகளாக இருந்தால், முதலாவதாகப் பாதிக்கப்படப் போவது, அவர்களது குடும்ப உறுப்பினர்களே என்பதை, இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.   

அதன் பின்னர், அந்தக் குடும்ப உறுப்பினர்களும் நோய்க் காவிகளாகலாம். அவர்கள், தப்பிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டால், குடும்ப உறுப்பினர்களும் கண்காணிக்கப்படுவர். மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்க முடியாவிட்டாலும், தமது மனைவி, மக்கள், பெற்றோர், சகோதர சகோதரிகளைப் பற்றியாவது சிந்திக்க முடியாதவர்கள், எந்தளவு பொறுப்பற்றவர்கள் என்பது தெளிவாகிறது.  

எல்லா நாடுகளிலிருந்தும் வருவோர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக, நோயால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட சீனாவிலிருந்து வருவோர், அந்நிலையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை; இது விந்தையான நடைமுறையாகும்.   
இதைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, சீனாவில் ஹூபெய் மாகாணம் மூடப்பட்டு இருப்பதால், சீனாவிலிருந்து வருவோர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படத் தேவையில்லை எனக் கூறியிருந்தார்.   

ஆனால், இப்போது சீனாவில் ஹூபெய் மாகாணத்தில், புதிய நோயாளர்கள் கண்டறியப்படாத நிலை இருந்த போதிலும், ஏனைய மாகாணங்களிலிருந்து நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். அங்கிருந்து வருவோரும் நோய்க் காவிகளாக இருக்கலாம்.  

பொது மக்களைப் போலவே, அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த நோயால், தாம் பாதிக்கப்பட மாட்டோம் என்று அவர்களால் உத்தரவாதமளிக்க முடியாது. மாளிகைகளில் வாழ்ந்தாலும், வைரஸ் தாக்கும்; பல நாடுகளில் அமைச்சர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.    

தேர்தல் முக்கியமா, கொரோனா தடுப்பு முக்கியமா?

பொலன்னறுவை மாவட்டத்தில், கந்தகாடு புனர்வாழ்வு நிலையம், மட்டக்களப்பு மாவட்டத்தில் பனானியில் அமைந்துள்ள ‘பற்றிக்கலோ கம்பஸ்’, வவுனியா போன்ற இடங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் ‘கொரோனா வைரஸ்’ காவிகள் எனச் சந்தேகிக்கப்படுவோருக்கான தனிமைப்படுத்தும் நிலையங்கள் நிறுவப்படுவதை எதிர்த்து, பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதற்கு முன்னர், முதல் முதலாகச் சீனப் பெண்ணொருவர் ‘கொவிட்-19’ நோயாளியாக கண்டறியப்பட்டு, அவர் கொழும்பு தொற்று நோய் மருத்துவமனைக்கு (ஐ.டி.எச்) கொண்டுவரப்பட்ட போது, அங்கும் சிலர் அதனை எதிர்த்தனர்.   

image_293523790d.jpgசீனாவிலிருந்து இலங்கை மாணவர்கள் அழைத்துவரப்பட்டு, அவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்ட போது, பதுளையில் சிலர் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அந்த முகாமுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் பரிசோதனைக்காகக் கொண்டு வருவதாக இருந்தால், பதுளை பொது மருத்துவமனைக்கே கொண்டு வர வேண்டும்.   

அதனை அடுத்துத்தான் அரசாங்கம் புனானி, கந்தகாடு, ஹேக்கித்த தொழுநோய் மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களையும் தனிமைப்படுத்தலுக்காகத் தெரிவு செய்தது. ‘கொரோனா-19’ தாக்கிய நாடுகளில் இருந்து எவரையும், ஹேக்கித்தைக்கு கொண்டு வர வேண்டாம் எனச் சில ஆளும் கட்சி அரசியல்வாதிகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உட்படப் பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.   

தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களிலேயே அரசாங்கம், தனிமைப்படுத்தல்  நிலையங்களை நிறுவுவதாகச் சில தமிழ்,  முஸ்லிம் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், நோய்க் காவிகள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அந்த நிலையங்களில் தங்கவைக்கப்பட்டாலும், நோயுள்ளவர் எனக் கண்டறியப்பட்டவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனைக்கே அழைத்துச் செல்லப்படுகின்றனர். எனவே, சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்திலேயே அதிக ஆபத்து இருக்கிறது என, வேறு சிலர் வாதிடலாம்.   

அதேவேளை, தியத்தலாவை இராணுவ முகாமில் உயர் இராணுவ அதிகாரிகளுக்கான 23 விடுதிகளை, இராணுவம் திங்கட்கிழமை (16) தனிமைப்படுத்தல் பணிகளுக்காக ஒதுக்கியதாக ஒரு செய்தி நேற்று வெளியாகியிருந்தது. அந்த இராணுவ முகாமில் மட்டுமன்றி, அதனை அண்டிய பிரதேசங்களிலும் சிங்கள மக்களே அதிகமாக வாழ்கின்றனர். 

அதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் அனைவரும் சிங்கள மக்களுமல்ல. எனவே, இந்த விடயத்தைப் பற்றி, மேலும் கவனமாக ஆராய்ந்தே, கருத்துத் தெரிவிக்க வேண்டும்.   அரசாங்கம் பொறுப்போடு செயற்படுகிறதா என்பது, வேறு காரணங்களாலேயே எழுகிறது. அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து வருவோரைத் தனிமைப்படுத்த, இவ்வளவு காலம் ஏன் எடுத்தது என்பது, இன்னமும் தெளிவாகவில்லை. 

இப்போது தான் அரசாங்கம், மார்ச் முதலாம்  திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பாவில் இருந்தும் தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வந்தவர்கள், தம்மைப் பற்றிய விவரங்களைப் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.   

இன்னமும் சீனாவிலிருந்து வருவோர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. அவர்கள், தாமாகவே தாம் இலங்கையில் தங்கியிருக்கும் இடங்களில், 14 நாள்கள் தனிமைப்பட்டிருக்க வேண்டும் என, அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது எந்தளவு சாத்தியம் என்பதும், தெளிவில்லாமல் இருக்கிறது.   

புதன்கிழமை (11), வியாழக்கிழமை (12) வெள்ளிக்கிழமை (13)ஆகிய கிழமைகளில் ஐந்து உள்நாட்டு நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அரசாங்கம் கடந்த திங்கட்கிழமையை (16) விடுமுறை நாளாக அறிவித்தது. 

ஒரு நாள் விடுமுறையால் என்ன பயன் இருக்கிறது? சனி (14), ஞாயிறு (15) ஆகிய இரு தினங்களையும் சேர்த்தாலும், மூன்று விடுமுறை நாள்களிலேயே மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க முடியும். அதில் என்ன பயன்? அரசாங்கம் பொதுத் தேர்தலுக்காக மார்ச் 17, 18, 19 ஆகிய நாள்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காகவே திங்கட்கிழமையை (16) மட்டும் விடுமுறை நாளாக அறிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியது. இப்போது அரசாங்கம் அந்த மூன்று நாள்களையும் விடுமுறை நாள்களாக அறிவித்துள்ளது.   

அத்தியாவசிய சேவைகளுக்கு விடுமறை இல்லை என, அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறாயின், எதிர்வரும் வெள்ளிக்கிழமையையும் (20) விடுமுறையாக அறிவிக்காதது ஏன் என்பது புரியவில்லை. அவ்வாறு செய்திருந்தால் தொடர்ச்சியாக ஒன்பது நாள்களுக்கு மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.   

தற்போதைய நிலையில், பொதுத் தேர்தலை ஏப்ரல் 25 ஆம் திகதியே நடத்த வேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளனர். ஆனால் அரச தலைவர்கள், தேர்தல் ஒத்திப் போடப்பட மாட்டாது எனக் கூறியுள்ளனர்.   

ஊடகங்களைத் தமது கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சியைப் போலல்லாது, ஏனைய கட்சிகளுக்குத் தற்போதைய நிலையில் தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்வது கடினமானதாக இருக்கும். பல கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரக் கூட்டங்களை ஒத்திவைத்துள்ளன. ஆனாலும் ஆர்வத்தின் காரணமாக, கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு தேர்தல் பணிகளில் கூட்டாக ஈடுபடலாம். இது ஆபத்தானதாகும். எனவே, தேர்தலை ஒத்திவைப்பதே உசிதமானதாகும்.    
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பறபப-மறநதல-மழ-நடடயம-வரஸ-தககம/91-247130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.