Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறியாமையென்னும் கொடிய கிருமி - இலங்கையின் வடபுலத்தில் கொரானா தொற்றின் ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - பகுதி 1

இலங்கையின் வடபுலமும் கொடிய கொரானா தொற்றின் ஆபத்தை தொட்டு நிற்கிறது. எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எவையாவது இயல்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மாறாக இருக்கின்றபோது, சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் சமூகத்தின் இயல்பற்ற நடத்தைகளை சரியான முறையில் கையாள முன்வர வேண்டும்.

உலகில் கொரானா தொற்று அதிகரித்த நேரம் சுவிஸும் பெப்ரவரி 25 தொடக்கம் அதன் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்ச் 10  காலப்பகுதியில் குறித்த போதகர் இலங்கைக்கு வருகிறார். 

மார்ச் 9ம் திகதி இத்தாலி, தென்கொரியா, மற்றும் இரானிலிருந்து வந்தவர்களை இலங்கை அரசு தனிமைப்படுத்த தீர்மானித்திருந்தது. அடுத்த நாள் சுவிஸிலிருந்து வந்தவர் என்பதால் எந்தத் தடையுமின்றி நாட்டிற்குள் நுழைகிறார்.  

நாட்டு மக்கள் கொரோனாபற்றி பயந்து கொண்டிருந்த சூழ்நிலையில் எத்தகைய நோய்த்தொற்று சோதனைகளுக்கும் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகாமல் மார்ச் 13 அன்று யாழ்ப்பாணம் செல்கிறார். மார்ச் 14 ந் திகதி மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூட அரசால் தடை அறிவிக்கப்படுகிறது. ஆனால் அடுத்த நாள் (மார்ச் 15) எந்தப் பிரச்சினையும் இன்றி அவர் மத பிரச்சார கூட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த அனுமதிக்கப்படுகிறார். 

அதே நாளில் அசம்பிளி ஒப் கோட் என்ற சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆராதனை யாழ் பிரதேசச் செயலாளரினால் தடுத்து நிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த வடமாகாண ஆளுநரும் அந்த விசேட வழிபாட்டுக் கூட்டம் நடைபெறவிட்டது பொலிசாரின் தவறு என கூறியுள்ளார். பொலிசார்தான் போதகரை பாதுகாத்து பத்திரமாக வழியனுப்பி வைத்ததென்றும் ஆளுநர் கூறியிருந்தார். 

அதே ஆளுநர் சொன்ன வேறு தகவல்தான் முரண்பாடானது. மார்ச் முதலாம் திகதியிலிருந்து அரசு வெளிநாட்டவரை முழுமையாக பரிசோதித்ததாக அவர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால் இவர் முறையான பரிசோதனைக்குட்படாது யாழ்ப்பாணம் சென்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது. 

ஆனால் மார்ச் மூன்றாம் திகதியிலிருந்து மேலே கூறிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் ஏனைய நாடுகளிலிருந்து வந்தவர்கள் முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்பதே உண்மை. மேலும் விமான நிலையத்தில் அவர்கள் வைத்திருந்தது thermal detector தான். அது காய்ச்சல் இருந்தால்தான் காட்டிக் கொடுக்கும். 

மறுபக்கமோ மக்களாகிய நாமோ அது அரசின் பிரச்சனையென்று புறந்தள்ளிவிட்டு உள்ளூர் அரசியல் பேசிக்கொண்டும் தமிழ் அரசியல்வாதிகளைக் கேலி செய்து கொண்டும் இருந்தோம். ஆமாம், மார்ச் 12 வரை நாம் உள்ளூர் அரசியல்தான் பேசிக் கொண்டிருந்தோம்.

குறித்த மதபோதகர் யாழ் மக்கள் கேட்காமலேயே தானாகவே மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதாகக் கூறி யாழ் சென்று வெற்றிகரமாக நோயைப் பரிசளித்துவிட்டு சுவீஸ் திரும்பிய பின்னர் அவருக்கு,  நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் இலங்கையில் இருந்தபோதே அவருக்கு COVID-19 நோயின் அறிகுறிகள் இருந்துள்ளதாக இப்போது கூறுகிறார்கள். 

பின்னர் அந்தப் போதகர் நோயாளி என்பதை அறிந்த வட மாகாண சுகாதார பணிப்பாளர், குறித்த மதபோதகருடன் பூசையில் கலந்துகொண்ட மக்களை சுயதனிமைப்படுதலுக்கு உட்படும்படி தொடர்பூடகங்கள் மூலம் அறிவுறுத்தியதை அடுத்து யாழ் பொலிஸ் தலைமையகம் வடமாகாண சுகாதார பணிப்பாளரை எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக இதனையும் புறந்தள்ளி விடமுடியுமா என்று தமிழ் மக்கள் மத்தியில் இப்போது எழுப்படும் சந்தேகங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்.

முதலாவது,
நோய்த்தொற்று வேகமாக உலகம் பூராக பரவிய காலத்தில் அதுவும் நாட்டில் கூட்டம் கூட்ட தடை ஏற்படுத்தப்பட்ட நிலையில், வேறு ஒரு மதக்கூட்டம் அதேநாளில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இவருக்கு மட்டும் கூட்டம் நடாத்த பொலிசார் அனுமதி வழங்கியது, 

இரண்டாவது, 
மதபோதகர் சுவீஸ் திரும்பிய பின்னர் அவர் கொரானோ நோய்த் தொற்றுக்கு உள்ளானவர் எனத் தெரிந்த நிலையில் மக்களை எச்சரித்தமைக்காக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் சிறிலங்கா பொலிசாரால்  எச்சரிக்கப்பட்டமை. 

மூன்றாவது, 
யாழ்ப்பாணத்தில் நோய்த்தொற்றை அடுத்து  வடமாகாணம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டமை. 

கடந்த 70 வருடங்களாக இன ஒதுக்கல்கள், தொடர் திட்டமிடப்பட்ட இன  அழிவுகளைச் சந்தித்த இனம் என்ற வகையில் நாம் சந்தேகப்படாமல் இருக்க முடியவில்லை. இம்முறையும் வடமாகாணத்தின் வாசல் மூடப்பட்டதைப் பார்க்கும்போது கடந்த வருட ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் வடக்குக் கிழக்கில் தமிழர்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.

இதே நேரம் சுவீஸில் இருந்து யாழ் வந்த மதபோதகரின் தவறான செயல்பாட்டிற்காக ஒருவர் பின்பற்றும் மதத்தை நிந்திப்பது தவறு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவது அவரவர் உரிமை. 

இந்தப் போதகரை நம்புவோருக்கு அவர் சாமியாகத் தெரிந்தாலும், தான்  உண்மையில் ஆசாமிதான் என்பது அவருக்குத் தெரியும். நோயின் அறிகுறிகள் தனக்கு இருந்ததும் தெரியும். ஆனால் கொஞ்சம்கூட சமூகப் பொறுப்புணர்வு இன்றி  நோயைக் காவி வந்து, தன்னை  நம்பி வந்த மக்களுக்கு நோயைக் கொடுத்துவிட்டுச் சென்ற இவரை யார் தண்டிப்பது? எப்படித் தண்டிப்பது? 

அதே நேரம்  இந்த மத போதகரின் தவறான செயற்பாடுகளை மூன்று வருடங்களுக்கு முன்னரே சுவீஸ் தேசிய தொலைகாட்சியில் அம்பலப்படுத்திய பின்னரும் அவரை பின்பற்றும் மக்களை என்ன சொல்வது?

RG
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - 2

மீண்டும் சுவிஸ் போதகர் விவகாரத்தை யாழ்ப்பாண ஊடகங்களும் சமூக வலைதள போராளிகளும் கையில் எடுத்துள்ளனர். அவற்றுள் எவை உண்மையாக இருக்கலாம். அரசு இதனை எவ்வாறும் கையாண்டது என கொஞ்சம் பார்ப்போம்.

நாம் முன்பு கூறியதுபோலவே  சுவிஸ் போதகர் இலங்கைக்குள் வந்த தினத்தில் உண்மையிலேயே இலங்கை அரசு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் செய்திருக்கவில்லை. அவர் மார்ச் 10ம் திகதி வந்தாக சொல்லப்படுகிறது. 

ஆனால் மார்ச் 13 அன்றுதான் ஐரோப்பியர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆக, அவரை இலங்கை வர அனுமதித்தது அரசின் தவறு என்று சொல்லுவது முட்டாள்தனமானதா இல்லையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த குற்றச்சாட்டு  - போதகர் நோயைக் காவி வந்தார் என்பது. துரதிஸ்டவசமாக COVID-19 நோயாளிகள் பலருக்கு தமக்கு நோய் இருப்பதே தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் இரு தவறுகள் உள்ளன.

1. மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு பிரார்த்தனையை ஒழுங்கு செய்தது.
2. அரசு மார்ச் 14 ம் திகதியே இவ்வாறான கூட்டங்களைத் தடை செய்த நிலையில் சமூகப் பொறுப்பின்றி அவர் கூட்டம் நடாத்தியது. கூட்டத்தை தடை செய்யாததில் பொலிசாரின் பங்கும் இருக்கிறது.

அவருக்கு நாடு திரும்பும் முன்னர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரியாலையில் மருந்து எடுத்ததாகவும் தெரிகிறது. அவருக்கு ஏற்கனவே பிறபொருள் எதிரிக் குறைபாட்டுநோய் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த வடமாகாண ஆளுநரும் அந்த விசேட வழிபாட்டுக் கூட்டம் நடைபெறவிட்டது பொலிசாரின் தவறு என கூறியுள்ளார். போலீசார்தான் போதகரை பாதுகாத்து பத்திரமாக வழியனுப்பி வைத்ததென்றும் ஆளுநர் கூறியிருந்தார். 

உண்மையில் நாட்டில் இப்போது இருப்பது அவரசகால நிலையே. எனவே மேற்படி சூழலில் வடக்கின் ஆளுநருக்கும் சரியான முறையில் செயற்படவேண்டிய பொறுப்பு உள்ளது. ஆனால் அவர் போலீசாரைக் குற்றவாளியாக்கிவிட்டு தப்பிக் கொள்ளப் பார்க்கிறாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

இந்த சந்தேகத்தைத் தருவது அவர் தனது பேட்டியில் அவர் கூறிய இன்னொரு விடயம். ஆளுநர் அதே பேட்டியில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து அரசு வெளிநாட்டவரை முழுமையாக பரிசோதித்ததாக அவர் சொல்கிறார். அவர் சொல்வது உண்மையென்றால் போதகர் எப்படி முறையான பரிசோதனைக்குட்படாது யாழ்ப்பாணம் சென்றது எப்படி என்ற கேள்வி மக்கள் மத்தியில் இயல்பாக எழுகிறது. 

ஆனால் ஆளுநர் சொன்ன அந்தத் தகவல் உண்மையில்லை என்றே தெரிகிறது. மார்ச் மூன்றாம் திகதியிலிருந்து ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டபோதும் ஏனைய நாடுகளிலிருந்து வந்தவர்கள் முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்பதே உண்மை. 

மேலும் விமான நிலையத்தில் அவர்கள் வைத்திருந்தது thermal detector தான். அது காய்ச்சல் இருந்தால்தான் காட்டிக் கொடுக்கும். (அரசு COVID-19 தொடர்பாக விடுத்த அறிவுறுத்தல்கள், நடவடிக்கைகளின் தொகுப்பை இணைப்பில் பார்க்கவும்.)

அப்படியானால் ஏன் ஆளுநர் மார்ச் முதலாம் திகதியிலிருந்து முறையான நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லுகிறார்? இதன்மூலம் அரசு சரியாகத்தான் இயங்குகிறது. பொலிசார்தான் சரியில்லை என்கிறாரா? பொலிசார் அரசின் அங்கம் இல்லையா? 

இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அண்மைக்காலமாக பொலிசாரின் பல கடமைகளுக்குள் இராணுவப் பொலிசாரும் இராணுவத்தினரும் உட்செல்லுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்திலும், நடந்த சம்பவங்களைப் பயன்படுத்தி பொலிசாரின் பலவீனங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு, இராணுவத்தின் கைகளில் மீண்டும் வடக்கு கிழக்கை ஒப்படைக்க அரசு காய் நகர்த்துகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இன்னொரு விடயம் சுகாதாரப் பணிப்பாளர் சம்பந்தப்பட்டது. சுவிஸ் போதகர்  நோயாளி என்பதை அறிந்த வட மாகாண சுகாதார பணிப்பாளர், குறித்த மதபோதகருடன் பூசையில் கலந்துகொண்ட மக்களை சுயதனிமைப்படுதலுக்கு உட்படும்படி தொடர்பூடகங்கள் மூலம் அறிவுறுத்தியதை அடுத்து யாழ் பொலிஸ் தலைமையகம் வடமாகாண சுகாதார பணிப்பாளரை எச்சரிக்கை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக சிங்கள தொலைகாட்சியில் நேரலையில் வந்த வடமாகாண பொலிஸ் அதிகாரி சுவிஸ் போதகருக்கு நோய்த் தொற்று இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். இதில் முரண்பாடான விடயம் என்னவென்றால் இவ்வாறு ஊடகங்களுக்கு போலீஸ் ஊடகப் பேச்சாளர்தான் கருத்து தெரிவிக்க முடியும். இவர் ஊடகங்களுக்கு பேட்டி தர எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்? 

இதில் வேடிக்கை என்னவென்றால் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சுவிஸ் போதகருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மார்ச் 23ம் திகதி கூறியதாக ஆசியா நெட் தெரிவித்திருக்கிறது. ஆம், இதனை ஒரு தமிழர் சொல்லவில்லை, ஒரு சிங்களவர் அதுவும் இலங்கையின் இராணுவத் தளபதி கூறியிருக்கிறார். அப்படியானால் அது உண்மையாகத்தானே இருக்க வேண்டும்??

அதுதவிர அவருக்காகப் பிரார்த்திக்கும்படி அவருடைய சபையின் துணைப் போதகர், போதகர் போல் சற்குணராஜா கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் அவருக்காகப் பிரார்த்திக்கும்படியும் சமூக வலைத் தளங்களில் கேட்டுக் கொண்டிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

பிந்திக் கிடைத்த செய்திகளின்படி, யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் COVID-19 தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அப்படியென்றால் முன்பு வந்த செய்திகள் பொய்யா? அது பொய் என்றால் பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்மீது வதந்தி பரப்பியதாக ஏன் அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?

இவ்வாறு இந்த ஒருவிடயத்தையே தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக்கிவிட்டு சத்தமில்லாமல், மிருசுவிலில் குழந்தைகள் உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களை கழுத்தறுத்து கொலைசெய்து தூக்குத் தண்டனை பெற்ற கைதியான முன்னர் ராணுவவீரர் நாட்டின் தலைவரால் விடுவிக்கப்பட்டிருக்கிறார். அதற்காகத்தான் சுவிஸ் போகதர் விடயத்தில் தமிழ் மக்களைத் திசைதிருப்பி குழப்பி விட்டார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 

மொத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து பலவாறாக மக்களைக் குழப்பி தமக்குத் தேவையானவற்றை அரசு செய்துகொள்வது போலவே தெரிகிறது. ஏற்கனவே COVID-19 கட்டுப்பாடு நிர்வாகம் இராணுவத்தின் கட்டுப்பாடுக்குள் சென்றுள்ளது.  

இவ்வாறான தந்திரங்களைப் பயன்படுத்தி எதிர்காலத்திலும் தமக்குத் தேவையான வகையில் வடக்குக் கிழக்கை நிர்வகிப்பதற்கான ஆயத்த வேலையும் நடக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. மறுபுறம் வடக்கில் இயங்கும் சில ஊடகங்களும் தனிமனிதர்களும் எதனையும் சரியாக ஆராயாது கண்டபடி வார்த்தைகளால் வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறியாமையென்னும் கொடிய கிருமி - 3

அண்மைக் காலமாக இயேசுவின் பெயரால் பல சபைகள் புதிது புதிதாக முளைத்து பைபிளின் அடிப்படைத் தத்துவங்களையும் தமக்கேற்றவாறு மாற்றி எழுதி வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன. அவற்றுள் சில நீண்டகாலமாகவே இலங்கையில் இயங்குகின்றன. 

அதற்கு நிகராக பக்கத்து நாடான இந்தியாவில் இயங்கும் பல புதிய இந்து அமைப்புக்களின் செல்வாக்கு இலங்கையிலும் அவற்றின் கிளைகள் உருவாக வழி சமைத்துள்ளது. 

இவ்வாறான புதிய அமைப்புக்கள் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவித் தமிழ் மக்களைப் பிறழ்ந்த சமூகமாக அல்லது திசைமாறிய சமூகமாக மாற்ற முற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றன.

இவ்வாறான அமைப்புகள் அல்லது தனிமனிதர்களின் பின்னால் மக்கள் மந்தைகளாக செல்வதற்கு அவர்களின் வறுமை மற்றும் இயலாமையினால் ஏற்பட்ட கையறுநிலை, அறியாமை என்பன பிரதான காரணங்களாக அமைந்துள்ளன. அதைத் தவிர தாம் பின்பற்றிய சமயத்தைப்பற்றி ஆழமான அறிவின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.

சில புதிய கிறிஸ்தவ அமைப்புக்கள் மக்களை மதம் மாற்றுவதில் குறியாக இருக்க, அவர்கள் மதம் மாற்றுவதை தடுக்கிறேன் என்று சில இந்து அமைப்புக்கள் கிளம்பி தமிழ் மக்களிடையே மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கின்றன. அதிலும் குறிப்பாக மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட சிவசேனை அமைப்பு தமிழ் கட்சிகளுக்குள்ளும் ஊடுருவி கட்சிக்குள் மதவாதம் பேசமுனைவது மிகவும் ஆபத்தானது. 

இவர்கள் அனைவரும் சொல்லுவது ஒன்றைத்தான். அது – என் பின்னே நின்று நான் சொல்வதைக் கேட்டால், நான் சொல்வதைச் செய்தால் மட்டுமே நீங்கள் கடவுளை அடையமுடியும் என்பதுதான். இதுவே இவ்வாறான தலைவர்களை பலமிக்கவர்களாக மாற்றிவிடுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இப்படியான சில இந்து கிறீஸ்தவ அமைப்புகளின் செயற்பாடுகள் அசாதாரணமாக அமைந்திருப்பதும் தமிழ் மக்களின் ஒற்றுமையைத் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கி வருவதும் கவலை தருகிறது.

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.