Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் அரசு - (அஜாதசத்ரு)

Featured Replies

நாடுபூராவும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள், கைது, காணாமல் போதல் போன்ற மிக மோசமான சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் அது தொடர்பாக சர்வதேச சமூகத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும் கண்டனங்கள் எழுப்பப்படும் நிலையில் அதனை தட்டிக்கழிக்கும் போக்கொன்றையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வதையே காணக்கூடியதாகவுள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் மிக மோசமான வன்முறைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி நாட்டின் சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையொன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டுமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவும் அயல்நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், ஜப்பான் போன்ற பல நாடுகள் கடந்த காலங்களில் வலியுறுத்திக் கேட்டுள்ள போதிலும் அவ்வாறான கோரிக்கைகளை உதாசீனப்படுத்தும் நடவடிக்கைகளே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாகவுள்ளன.

இவ்வாறானதொரு நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகிய மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பாக கடும் விசனமும் கவலையும் வெளியிட்டுள்ளதுடன் இந்த நிலைமைகளை முழுமையாக கட்டுப்படுத்தி சாதாரண பிரஜைகளை காப்பாற்றி மனித உரிமைகளைப் பேணுவதற்கு ஐ.நா.வின் தலையீடு அவசியமென்று கோரிக்கை விடுத்துள்ளன.

ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்களுக்கு அப்பால் சிறுவர்களையும் இளைஞர்களையும் பலவந்தமாக படையணிகளில் இணைக்கும் நடவடிக்கையானது மேலும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கே வழிவகுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள குறிப்பிட்ட மனித உரிமை அமைப்புகளின் கண்காணிப்பாளர்களால் திரட்டப்பட்ட ஆய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே ஆரோக்கியமான பாதுகாப்பான சூழலொன்றை தோற்றுவிக்க ஐ.நா. வின் தலையீடு அவசியமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்றுச் செயற்படுகின்ற போதிலும் அந்த அமைப்புகள் கடந்த காலங்களிலும் சரி, தற்போதைய மிகவும் மோசமான நெருக்கடியான காலகட்டத்திலும் கூட அச்சம் காரணமாகவும் அரசியல் தலையீடுகளாலும் நெகிழ்வுத்தன்மையான போக்கொன்றையே கடைப்பிடித்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

எனினும், ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல் என்பவற்றிற்கு எதிரான மக்கள் கண்காணிப்புக் குழு, காணாமல் போனோரை தேடியறியும் குழு என்பன துணிச்சலான பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களை அழைத்து அரசுக்கு எதிராக தலைநகர் கொழும்பில் பாரிய எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனைவிட மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் பெற்றோர், உறவினர்களை ஒன்றுதிரட்டி நடத்திய மாநாட்டில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிக்கொணர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனைவிட மக்கள் கண்காணிப்பு குழுவினால் திரட்டப்பட்ட காணாமல் போனோரின் விபரங்கள் தொடர்பான சர்வதேச மன்னிப்புச்சபை, ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கு முறையிடப்பட்ட நிலையில் அது தொடர்பான பலரின் விபரங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு மனித உரிமைகளைப் பேணுவதற்காக இவ்வாறு துணிச்சலுடன் செயற்படும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல தடவைகள் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டமாகவே மக்கள் கண்காணிப்பு குழுவின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பு நாரஹேன்பிட்டியில் அதிஉச்ச பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இவரது படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்றதுடன் ஸ்கொட்லண்ட்யாட் உதவியும் கோரப்பட்டது. எனினும், இலங்கை அரசுகளின் வழமையான விசாரணைகள் போன்றே இதுவும் காணாமல் போயுள்ளது.

1990 களில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் தென்னிலங்கையில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான படுகொலைச் சம்பவங்களின் உண்மை நிலைவரங்களை வெளிக்கொணர்ந்தமைக்காக ஊடகவியலாளர் ரிச்சர்ட் டி. சொய்ஸா கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வாறே அப்போதைய காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணர்ந்தமைக்காக மனித உரிமை ஆர்வலரும் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவருமான குகமூர்த்தி கொழும்பு ஜாவத்தைப் பகுதியில் வைத்து ஜீப்பொன்றில் வந்த ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனார்.

குகமூர்த்தி பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மாத்திரமே உறவினர்களாலும் நண்பர்களாலும் மீட்டெடுக்கப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தின் போது மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வெள்ளைவான் ஆயுதக் கலாசாரம் தலைநகர் கொழும்புக்கு விரிவுபடுத்தப்பட்டு பின்னர் வடக்கு - கிழக்கில் தமிழர்களை அழித்தொழிக்க புதியதோர் இராணுவ யுக்தியாக கையாளப்பட்டது.

இன்று வெள்ளைவான் ஆயுதக் கலாசாரம் உச்சத்தை எட்டியுள்ளதுடன் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கு மட்டுமன்றி தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்தொழிப்பதற்கும் வெள்ளைவான் ஆயுதக் கடத்தலே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

தலைநகர் கொழும்பிலுள்ள பல தமிழ் வர்த்தகர்கள் ஆயுதபாணிகளால் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டு பல கோடிக்கணக்கான ரூபா பணம் கப்பமாக அறவிடப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பாக இதுவரை அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்கு அப்பால் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலைமையே மேலோங்கிக் காணப்படுகின்றது.

தலைநகர் கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் பல வருடக் கணக்காக ஈடுபட்ட பல வர்த்தகர்கள் தமிழகத்திற்கும் ஏனைய பல நாடுகளுக்கும் தப்பியோடிச் சென்றுள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தின் போது சிங்கள பௌத்த கடும் போக்குடைய வர்த்தகப் பின்னணியைக் கொண்டவர்களின் துணையுடன் சில விஷமத்தனமான அரசியல்வாதிகளால் சிங்கள வீரவிதான என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளிலும் தமிழ் வர்த்தகத்துறையை முடக்கும் நோக்குடனும் செயற்பட்டு வந்தமையும் கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் நாட்டின் பிரதான பிரச்சினையான இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் சாதாரண ஒரு விடயமாக உதாசீனப்படுத்தப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பொன்றில் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நிகழ்ச்சி நிரல்களே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவாகவே இன்று மனிதஉரிமைகள் உச்சத்தை எட்டியுள்ளன.

போர்நிறுத்த உடன்படிக்கை, புரிந்துணர்வு உடன்படிக்கை என்பவற்றின் பிரதான அனுசரணையாளர்களான நோர்வே தரப்பு படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு சமாதான செயற்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு கூட திராணியற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வடக்கு - கிழக்கில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு கண்காணிப்பு குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் சோல்பெர்க் மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை - இந்திய உடன்படிக்கை மூலம் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) சட்டத்தின் துணையுடன் பிரிப்பதற்கான அனுமதியைப் பெற்றதன் மூலம் தமிழ் மக்களிடமிருந்த குறைந்தளவு நம்பிக்கையையும் இன்றைய ஆட்சியாளர்கள் இல்லாமல் செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான தனித்தனி நிர்வாக அலகுகளை உடனடியாக உருவாக்கி அதனை செயற்படுத்தும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.

கிழக்கில் பாரிய நடவடிக்கையொன்றை முன்னெடுத்ததன் மூலம் வாகரைப் பிரதேசத்தை தரைமட்டமாக்கியதுடன் அங்கு இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 120 இற்கு மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டன.

அவ்வாறே மூதூர் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 19 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் இன்று வேறிடங்களில் அகதி வாழ்க்கையை எதிர்கொண்டுள்ளனர்.

திருகோணமலையின் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறிய நிலையில் தமிழகத்தின் அகதி முகாம்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் முடங்கிக் கிடக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசமான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

ஏ-9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டின் இயல்புநிலை சீரழிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையில் திறந்த வெளிச்சிறைச்சாலையில் தமது வாழ்நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நெருக்கடியான அவல நிலைமைகளுக்கு மத்தியில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்ற சிங்கள பௌத்த கடும் போக்காளர்களை திருப்திப்படுத்தும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துக்கொண்டு மறுபக்கம் தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள் இறுதியாக சர்வதேச சமூகத்திற்கு என்ன பதிலை சொல்லப்போகின்றார்கள்.

http://www.thinakkural.com/news/2007/5/27/...s_page27908.htm

Edited by ஈழவன்85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.