Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக கரிசனையும் இந்திய கடும்போக்கும்

-சி.இதயச்சந்திரன்-

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இனவாத வேர்கள் பரவிப்படர்ந்து சகல பெரும்பான்மையின அரசியல் சக்திகள் மத்தியிலும் ஆழமாக ஊடுருவி இன்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்கிற எல்லைகளைக் கடந்து பேரெழுச்சி கொண்டுள்ளது.

தமிழின விடுதலை எழுச்சியின் குறியீடாக விளங்கும் விடுதலைப் புலிகளை ஒழிப்பதென்கிற பேரினவாத உந்துசக்தி, சிங்கள இனத்தின் முழுமையான அரசியல் சக்திகளையும் இனவன்மக் கோட்பாட்டோடு இணைய வைத்துள்ளது. இவற்றையெல்லாம் சர்வதேசம் புரிந்துள்ளதென்பதை ஊகிக்கக் கூடிய சக்தியும் தமிழ் மக்களுக்கு உண்டு.

ஜனநாயக வழியில் அதற்கான தீர்வினை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் தேர்தல் மூலமும் தமிழ்மக்கள் உலகிற்குத் தெரிவித்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலமாகிறது.

ஆயுதப்போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்திரிக்கும் மேற்குலகம், அன்று முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களைக் கருத்திற்கொள்ளவில்லை.

அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்திலும் ஆயுதப் போராட்டத்திற்கு முற்பட்ட காலத்து நாடாளுமன்ற வழிமுறையிலமைந்த ஜனநாயகப் போராட்டங்கள் பற்றி எவருமே குறிப்பிடவில்லை. அதுகுறித்துப்பேசி ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாமென்பதால் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டது போல் தெரிகிறது.

தமது விவகாரங்களைத் தாமே கையாளும் உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என யாழ்ப்பாண விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க உதவி அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் ஏற்றுக் கொண்டாலும் இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவோம் என்றும் அவர் அறுதியிட்டுக் கூறுகிறார். எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை இவருக்கும் தெரிகிறது.

போராடி இன உரிமையை மீளப் பெறக்கூடாது. அதேவேளை மாவட்ட சபைத் தீர்வும் பிரயோசனமற்றது. ஆகவே இதை எப்படித் தீர்க்கலாமென்பதே சர்வதேசத்தின் முன்பாகவுள்ள பாரிய சிக்கல் நிலை.

இலங்கை அரசு சீனாவின் கையில் மாட்டுப்படாமல் தவிர்ப்பதற்கு என்ன வகையான உத்திகளைப் பிரயோகிக்கலாமென்றே மேற்குலகின் முன்னுள்ள பிரதானமான பிரச்சினையாகவும் தீர்க்க முடியாத சிக்கலாகவும் உள்ளது.

போர்நிறுத்த காலம் நீடித்தால் விடுதலைப் புலிகள் அழிந்து போவார்களென்ற கணிப்பு முதன்மையான உத்தியாக மேற்குலகால் உருவகிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியைக் கொண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்து சின்னாபின்னமாக்கலாமென முயற்சித்தார்கள்.

அம் முயற்சியையும் மீறி புலிகளின் பலமும் பிரதேசக் கட்டுப்பாடும் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் உடைந்த உதிரிகளின் இயக்கம் பற்றிய இராணுவ அறிவை உபயோகித்து கிழக்கிலிருந்தே புலிகளை அகற்ற முயன்ற அரசின் இராணுவ முனைப்பினை விழித்திருந்து அவதானித்தது சர்வதேசம். இதற்கு முன்பாக மேற்குலகின் நன்மதிப்பைப்பெற்ற ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பகிஷ்கரிப்பால் தோல்வியைத் தழுவினார்.

இதனால் வெகுண்டெழுந்த மேற்குலகு தருணம் பார்த்து ஐரோப்பிய ஒன்றியம் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது. தொடர்ந்த தடைகளும் தனிநபர் கைதுகளும் விடுதலைப் புலிகளுக்கு புலம்பெயர் மக்களிடமிருந்து கிடைக்கும் பொருண்மிய உதவிகளை தடுக்குமென கற்பிதம் கொள்ளப்பட்டது.

பி.பி.சி. கிளப்பிய கடனட்டை விவகாரமும் இவ்வகையான பின் புலத்திலேயே இழிநிலை பரப்புரையாக மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கலாம். சகலவிதமான தடைகளையும் அழுத்தங்களையும் மீறி, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம், வான்புலியாக விஸ்வரூபம் கொண்டெழுந்தபோது புலி அழிப்புச் சூத்திரம் புஸ்வாணமாகிப் போனதை புரிந்து கொண்டது மேற்குலகம்.

பேச்சுவார்த்தை நீட்சியின் இடைநடுவில் ஏற்படுத்தப்பட்ட இராணுவ களத்தில் விடுதலைப் புலிகள் தற்காப்பு நகர்வுகளை மேற்கொண்டார்கள். அதேபோன்று சர்வதேசத்தால் விரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகளத்திலும் விடுதலைப் புலிகள் தமது அரசியல் நிலைப்பாடுகளை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தினூடாக வெளிப்படுத்தினார்கள்.

இவ்விதமாக இரண்டு களங்களும் புலிகளால் உருவாக்கப்படவில்லையென்பதே குறிப்பிடத்தக்க விடயமாகும். 87 இலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்த காலம்வரை, தமது இராணுவ களத்தினை தமக்கேற்றவாறு புலிகள் உருவாக்கினார்களென்பதே உண்மையாகும். மற்றவர்கள் உருவாக்கிய நாடக மேடையில் புலிகள் ஆடவில்லை. தம்மால் உருவாக்கப்பட்ட மேடையிலேயே அவர்கள் பல பிரதேசங்களை கைப்பற்றியுள்ளனர்.

வான் புலிகளின் தாக்குதல், சர்வதேசத்தின் இரட்டை வேடம் கலைக்கப்பட்டு ஒரு வழியில் நகர்வதற்கு முன்னெடுக்கப்பட்ட 'தடை நீக்கித்" தந்திரமாகவும் கொள்ளலாம்.

ஏனெனில் வான் புலிகளின் பிரதேசத்தை தற்காப்புத் தாக்குதல், வலிந்த தாக்குதல் என்கிற வரையறைக்குள் அடக்க முடியாது.

இடம்பெயரா அசைவினை பெயர்த்தெடுத்து நகர்வினை உட்புகுத்திய மூலவிசையாகவே வான் புலித் தாக்குதலை நோக்க வேண்டும். தேக்கமுற்று நகராமல் ஸ்தம்பித்து நின்ற பேராட்டத்திற்கு அடுத்த கட்ட அளவு ரீதியான பாய்ச்சலிற்கு உந்துவிசையாகவே வான் பிரவேசம் கருதப்படும்.

இனிப் புதிய அரசியல் இராணுவ தளங்களை இந்தியாவோ அல்லது மேற்குலகமோ தயார்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்க விடயமாக விடுதலைப் புலிகள் குறித்தான இந்திய கடும் போக்கில் மாற்றமேற்படும் சாத்தியப்பாடுகள் தற்போது அரிதாகவே தென்படுகின்றன.

அதிகரிக்கும் மேற்குலகக் கரிசனை இக் கடும் போக்கினை மென்மேலும் வலுவூட்டுகிறது. தமிழகத்தைத் தமது வெளியுறவுக் கொள்கையின் அனுசரணையாளராக மாற்றி விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பலத்தினை சிதைப்பதால் பெரியளவில் மாற்றமெதனையும் இந்தியாவால் உருவாக்க முடியாதென்பதையும் அது விரைவில் உணரும்.

தென்னாசியப் பிராந்தியத்தில் தமது தோல்வியுறும் வெளியுறவுக் கொள்கை குறித்து மீள்பரிசீலனை செய்யும் கால அவகாசம், குறுகியதாகவுள்ளதென்பதையும் இந்தியா விரைவாக உணர வேண்டும்.

ஏனெனில் இலங்கைக்கு பொருத்தமாகவிருக்கும் மூன்றுவிதமான தெரிவுகள், அதன் எதிர் நிலையாகவுள்ள விடுதலைப் புலிகளுக்கும் உண்டென்பதை யதார்த்தபூர்வமாக சிந்திக்கும் எவரும் இலகுவில் புரிந்துகொள்வர். அதேவேளை வட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு தமிழ்த்தேசிய விடுதலை பற்றிய விழிப்புணர்வோ அல்லது கரிசனையோ இருக்குமெனக் கற்பிதம் கொள்வது மிகத் தவறான பார்வையாகும். அவர்கள் தமது பிராந்திய நலனை நிலை நிறுத்தவே தமிழ் விடுதலை இயக்கங்களை வரவேற்று தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்க அனுமதித்து இலங்கை பலவீனமடைந்த நிலையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள்.

தற்காலிகமாக வட கிழக்கை இணைத்தார்கள். பெயரளவில் மாகாண சபையாகவும் செயலளவில் கிராம சபையாகக் கூட இயங்க முடியாத நிலையில் அச்சபை இருந்தது. கோயில் காணி உரிமை கூட அதற்குக் கிடையாது.

ஏதோ இந்தியப் பரிந்துரைப்பான மாகாண சபையை இயங்க விட்டிருந்தால் பிரச்சினை இவ்வளவு தூரத்திற்கு ஆழமாகச் சென்றிருக்காது என வாதிடுவோர், கடைசிக் காலத்தில் நிர்வாகப் பரவலாக்கம் குறித்து மாகாண சபை மண்டபத்தில் நிகழ்ந்த காரசாரமான விவாதங்கள்பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

மாகாண சபையில் பங்கெடுத்தவர்களே, அரசுடன் இனப்பிரச்சினைக்கான காத்திரமான தீர்வினை எட்டுவது சாத்தியப்பாடற்ற விடயமென்பதை அனுபவத்தினூடாகப் பெற்று ஈழம்தான் இறுதி முடிவெனப் பிரகடனம் செய்தது சாசுவதமான உண்மை.

பௌத்த இன மேலாதிக்க வாதம், தமிழ் மக்களின் சுயாட்சிக்குரிய உரிமையை நிச்சயம் வழங்காதெனத் தெரிந்தும் தமது நலன்களை நிறைவேற்ற எமக்குச் சார்பானவர்கள் போல் நடித்து பின் தமது நோக்கம் நிறைவேறியவுடன் எம்மை அடக்க முயற்சித்ததே இந்தியாவின் தந்திர உத்தியாக விருந்தது.

தாம் அழிக்க முனைந்த புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் பெற்ற பின்விளைவுகளை ஆயுதப் போராட்ட முதன்மைச் சக்திக்கெதிரான கடும் போக்கு நிலையாக மாற்றி இலங்கையுடன் தற்போது கூட்டுச் சேர்ந்துள்ளது இந்தியா.

அதாவது இலங்கையை அடிபணிய வைக்க முன்பு விடுதலைப் புலிகளை அழிக்க தற்போது இந்தியாவிற்கு இலங்கை தேவைப்படுகிறது. இலங்கையினுள் வேறெவரும் புக முடியாதவாறு தடுப்பதற்கு அங்கு நிலை கொண்டுள்ள இருவேறு எதிர்ச் சக்திகளையும் தமது மூலோபாயதிற்கேற்றவாறு பயன்படுத்துவதே இந்தியாவின் தந்திரோபாயமாகும்.

இதுதான் இலங்கை தொடர்பான இந்தியாவின் முதன்மையான வெளியுறவுக் கொள்கை.

ஆயினும் தமிழ் மக்களின் சுயநிர்ணய பிறப்புரிமையை உள்வாங்கி அங்கீரித்தவாறு தமது தென்னாசிய பிராந்தியத்தின் வெளியுறவுக் கொள்கையினை மீள் உருவாக்கம் செய்வதே இந்தியாவிற்கு முன்னுள்ள ஒரே தெரிவாக அமையப்போகிறது.

இந்தியாவின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்கிற பொதுமைப்படுத்தப்பட்ட கூற்றின் அடிப்படையைக் கொண்டு அதனால் உருவாகும் சுயபெருமிதத்தின் அளவுகோலால், பழைய வெளியுறவுக் கொள்கையை சாகாவரம்பெற்றது போன்று நினைத்தால், வரலாறு அதை மாற்றிவிடும்.

கன்னியாகுமரி, கச்சதீவு, மாலைதீவு என இலங்கையைச் சூழ எவ்வகையான வியூகங்களை வகுத்தாலும் மையச் சக்தியை ஊடுருவி, கையகப்படுத்தலென்பது இலகுவானதல்லதென்பதை, சர்தேச மயப்படுத்தப்பட்ட இனப்பிரச்சினை இந்தியாவிற்கு உணர்த்தியபடியே இருக்கும். பௌத்த சிங்கள இன மேலாதிக்க எழுச்சி சகல தளங்களிலும் விரிவடைந்து சிங்கள மக்களிடையே இரண்டறக் கலந்து புதுக்கோலம் பூண்டுள்ளது.

அவ்வெழுச்சி, பொருளாதாரத் தடை விதிக்கும் உலக வல்லரசுகளுக்கு எதிராகவும் போர்க்கோலம் கொள்கிறது. நோர்வே தேசியக் கொடி எரிப்பிலிருந்து ஆரம்பமாகி உலக மயமாக்கிகள் யாவரையும் (சீனாவைத் தவிர்த்து) உதாசீனம் செய்யும் போக்குவரை வளர்ந்த இன மேலாதிக்க எழுச்சியை, ஏகாதிபத்தியங்களுக்கெதிரான முற்போக்கானபோக்கென்று கணிப்பிடுவது சில சக்திகளுக்கு இலகுவான சிந்தனையாக இருக்கும். திரும்ப திரும்பச் சுழன்று மிதக்கும் தவறான முடிவுகள், யதார்த்த நிலையிலிருந்து அந்நியமாகும் போக்கிற்கே வழிசமைக்கும்.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (27.05.07)

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/27.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.