Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2020 மே 21 

'எது வெற்றிகரமான சமூகம்?' என்ற வினாவுக்கான பதிலை, கொவிட்-19 பெருந்தொற்று காட்டி நிற்கின்றது. மக்களுக்காக அரசும் அரசுக்காக மக்களும், எவ்வாறு கைகொடுத்துத் தோளோடு தோள்நிற்பது என்பதை, இந்தப் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளும், அவர்தம் மக்களும் காட்டி நிற்கின்றனர்.

சமூக நல அரசின் அவசியமும் சமூகப் பாதுகாப்பின் தேவையும், இப்போதுதான் உணரப்படுகிறது. எல்லாவற்றையும் தனியார்மயமாக்குவோம் என்று கூவியவர்களே, அரசின் சேவைகளை நம்பி இருக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

image_8085446e0e.jpg

நகரங்கள்தான், இந்த நோய்த்தொற்றின் மய்யங்களாக இருக்கின்றன. அதிலும், குறிப்பாகப் பெருநகரங்களையே, இத்தொற்று மோசமாகப் பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரம், சனநெரிசல் கூடிய பெருநகரம்.

இப்போது, இத்தொற்றின் மய்யமாகவுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் நகரம், இன்னொரு பெருநகரம். உலகின், ஏனைய பகுதிகளிலும் பெருநகரங்களிலேயே, இத்தொற்றின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது; இருக்கின்றது. இந்தப் பெருந்தொற்றுக்குப் பின்னரான காலத்தில், பெருநகரங்கள் எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குரியது.

இந்த நெருக்கடி ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம், பெருநகரங்களையே மோசமாகப் பாதிக்கும். உணவு விடுதிகள், களியாட்டங்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புமா? மக்கள் பெருநகரங்களில், மிகவும் சனநெரிசலான பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்ய விரும்புவார்களா?

இப்போது, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை பார்த்தபடி, 'ஒன்லைன்'இல் கூட்டங்களை நடத்தும்போது, பாரிய அலுவலகங்கள் தேவையா, அவற்றுக்கு அவ்வளவு இடத்தை ஒதுக்க வேண்டுமா? குறிப்பாக, தனிமனித இடைவெளி தவிர்க்க இயலாததாகியுள்ள நிலையில், என்ன செய்யலாம்?

நோய்த்தொற்றுக் குறித்த அச்சம், எல்லோர் மனதிலும் இருக்கிறது. இது, எவ்வாறு பெருநகரங்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதே, எம்முன்னுள்ள கேள்வி ஆகும்.

கடந்த இருபதாண்டுகளில், பல நகரங்கள் பெருநகரங்களாக உருமாறியுள்ளன. அளவுக்கதிகமான மக்கள், கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி, இடம்பெயர்ந்த வண்ணமே இருக்கிறார்கள். இந்த இடப்பெயர்வு, பல்பரிமாண நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் அவை, இன்றுவரை கணிப்பில் எடுக்கப்படாமலேயே இருந்திருக்கின்றன. ஏனெனில், இன்றைய உலக நடைமுறையில், அனைத்தும் இலாப-நட்டத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இலாபம் கிடைத்தால் நல்லது; நட்டம் ஏற்பட்டால் கெட்டது என்ற, மிக இலகுவான பொருளாதார விதிகளே, அரசியல் தொட்டு ஆன்மிகம் வரை, அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

இந்த நெருக்கடியின் விளைவாகப் பலர், மீண்டும் கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள். குறிப்பாக, மேற்குலக நாடுகளில் உள்ள மேற்றட்டு, மத்தியதர வர்க்கம் இது குறித்து ஆழமாகச் சிந்திக்கிறது.

வயதானவர்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகியோரைக் கொண்ட குடும்பங்கள், ஊருக்குத் திரும்புதலே, தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும் என்று, நம்பத் தொடங்குகிறார்கள்.

நகரங்களை மீள்வடிவமைத்தல்
 
நகரங்கள், இதற்கு முன்னரும், இவ்வாறான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்தவை ஆகும். இருப்பினும், இப்போது நகரங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி, வெறுமனே நோய்த்தொற்றுடன் மட்டும் தொடர்புடையதல்ல. அதிகரித்த சனத்தொகை, உணவு நெருக்கடி, சூழல் மாசடைதல், போக்குவரத்து நெரிசல், உளநலன் சார் பிரச்சினைகள், வறுமை உள்ளிட்ட பல நெருக்கடிகள், நகரங்களுடன் தொடர்புடையன. இவை அனைத்தையும், மீள்பார்வைக்கு உட்படுத்துவதற்கான வாய்ப்பை, இந்த நோய்த்தொற்று வழங்கியிருப்பது உண்மை.

நகரங்களை மீள்வடிவமைப்பதன் பிரதான அம்சம், மக்கள் தொடர்ந்தும் நகரங்களை நோக்கிப் படையெடுப்பதை நிறுத்துவது அல்லது, குறைப்பது ஆகும். இதுவே, மிகப் பெரிய சவால்.

கடந்த மூன்று தசாப்தங்களில், உலகெங்கும் மய்யத்துக்கும் (centre) எல்லையோரங்களுக்கும் (periphery) இடையிலான இடைவெளி, தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த அதிகரிப்பு வறுமை, சமத்துவமின்மை, புறக்கணிப்பு, சமூகநலக்குறைவு என, ஏராளமான காரணிகளை உள்ளக்கியது. மக்கள் நகரங்களை நோக்கி, இடம்பெயர்வதற்கான முக்கியமான காரணி, எல்லைப்பகுதிகள் புறக்கணிக்கப்படுவதேயாகும்.

image_2add40c578.jpg

பெருநகரங்களை உள்வாங்கியுள்ள மத்தியே, தொடர்ந்து அபிவிருத்தி அடைகிறது. வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. கல்வி, மருத்துவ வசதிகள், பொதுப் போக்குவரத்து என்பன, ஓரளவு சிறப்பாக உள்ளன. இதனால், பெருநகரங்களே நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரும் என்ற எண்ணம், மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதனாலேயே, மக்கள் பெருநகரங்களை நோக்கி நகர்கிறார்கள்.

பெருநகரங்கள், தமக்கே உரித்தான நெருக்கடிகளை, உட்பொதிந்து வைத்திருக்கின்றன. மிகச் சிறிய வீடுகள், தொடர்ந்து அதிகரிக்கும் அத்தியாவசியச் செலவுகள், சமூக அசைவியக்கம் இன்மை, தொழிலை மய்யப்படுத்திய ஒற்றைச் சிந்தனை மனப்பான்மை, மாசாகிய காற்றால் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் எனப் பல, இதில் அடங்குகின்றன. இவை, இதுவரை பேசப்படாமல், மறைக்கப்பட்ட விடயங்களாக இருந்து வந்துள்ளன.

இந்தப் பெருந்தொற்று, இந்த விடயங்களையும் சேர்த்துப் பேசுவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. பெருநகரங்கள், தங்களை மீள்வடிவமைக்க வேண்டும். அதேவேளை, எல்லையோரங்கள் என்று சொல்லப்படுகின்ற, நகரங்களைத் தாண்டிய மக்களின் வாழ்க்கைத்தரம், மேம்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, வளர்முக நாடுகள் சேவைப் பொருளாதாரத்தில் தங்கியிராமல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகருதல் வேண்டும். உலகமயமாக்கல் அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த நான்கு தசாப்தங்களில், பல மூன்றாமுலக நாடுகள், உற்பத்திகளைக் கைவிட்டு, சேவைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தன. இது, பலவழிகளில் தங்குநிலைப் பொருளாதாரமாக, இந்நாடுகளை மாற்றின. இதனால், உலகளாவிய ரீதியில் ஏற்படும் நெருக்கடிகள், ஏதோ ஒரு மூலையில் உள்ள மூன்றாமுலக நாட்டையும், மோசமாகப் பாதிக்கச் செய்யும்.

2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி, இப்போதைய கொவிட்-19 நெருக்கடி ஆகியன, இதற்கான நல்ல உதாரணங்கள் ஆகும். சேவைப் பொருளாதாரத் துறை, இப்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்ளுர் உற்பத்தி இல்லாத/ குறைந்த இறக்குமதியில் தங்கியுள்ள நாடுகள், இதன் தாக்கத்தை அனுபவிக்க நேர்ந்துள்ளது.

இந்தப் பெருந்தொற்று, கிராமங்களைக் கவர்ச்சிகரமானதாக மாற்றியுள்ளது. உயிரைப் பாதுகாக்கும் பொருட்டு, கிராமங்களுக்குத் திரும்புதல், இப்போது வழமையாகியுள்ளது. குறிப்பாக, பெருநகரங்களில் வீடுகளுக்குள் அடைக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகள், கிராமங்களைக் கவர்ச்சியாக்கும் நடவடிக்கைகளை முன்தள்ளியுள்ளன.

பெருநகரங்களில், சிறிய வீடுகளுக்குள் இருந்தபடியே, வாரக்கணக்கில் சீவிப்பது இயலாத ஒன்று என்பது, இப்போது விளங்குகிறது. என்னதான் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும், திறந்த வெளிகளும் வீசுகின்ற காற்றும் எதிர்ப்படும் மனிதர்களும் மரங்களும் செடிகளும் மனித நடமாட்டமும் தரும் ஆறுதலை, மெய்நிகர் உலகில் எந்தவொரு தொழில்நுட்பமும் தரமுடியாது.

இந்தப் பின்புலத்தில், நகரங்கள் தம்மை மீள்தகவமைக்க வேண்டும். அவ்வகையில், நகரங்களுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன. முதலாவது, ஏற்கெனவே உள்ள நெருக்கடிகளையும் இந்தப் பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளையும் உள்வாங்கிக் கருத்தில் கொண்டு, அனைவரையும் உள்வாங்கக் கூடிய பாதுகாப்பான நெகிழ்வுத்தன்மையான நகரங்களாகத் தம்மை மறுஉருவாக்கம் செய்தல் ஆகும்.

இரண்டாவது, எந்தவொரு மாற்றத்துக்கும் உட்படாமல், சில சிறிய மாற்றங்களை மட்டும் செய்து கொண்டு, (தொற்றின் விளைவால் ஏற்பட்ட சுகாதார நடைமுறைகளை உள்வாங்கல்) இப்போது உள்ளபடியே தொடர்ந்து செயற்படுதல் ஆகும்.

image_6ad62664d6.jpg

மூன்றாவது, இந்தத் தொற்றைக் காரணங்காட்டி, பெருநகரங்களையும் பொதுவெளிகளையும் மெதுமெதுவாக, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்ளும் கண்காணிப்புக்குள்ளும் கொண்டு வருதல் ஆகும்.

இம்மூன்று தெரிவில், முதலாவது தெரிவே வேண்டப்படுவது. உலகளாவிய ரீதியில், பல நகர்த் திட்டமிடலாளர்கள் (urban planners) இந்தப் பெருந்தொற்றைத் தொடர்ந்து, இதை வாய்ப்பாக்கி, நகரங்களை மீள்வடிவமைக்கக் கோருகிறார்கள். சன அடர்த்தியான வாழ்க்கை முறையின் பேராபத்துகளையும் இந்நகரங்களின் பொருளாதார மாதிரிகளின் அவலத்தையும் கொவிட்-19 காட்டியுள்ளது. எனவே, அரசுகள் இது குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, நகரத் திட்டமிடலாளர்களின் வேண்டுகோளாகும்.

இந்த நோய்த்தொற்று, பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால், அரசுகள் பெருநகரங்களின் நெருக்கடிகள் குறித்துச் சிந்திக்கும் நிலையில் இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.

இப்போது அரசுகளினதும் அதிகாரவர்க்கத்தினதும் பெரும்பிரச்சினை, தங்கள் இலாபம் குறைவுபடாமல், எவ்வாறு பார்த்துக் கொள்வது என்பதேயாகும். எனவே, நகரங்களை மீள்வடிவமைத்தல் என்பது, பாரிய பணி. இதற்கு, அரசு மட்டுமன்றி தனியார்துறையும் பாரிய நிதியைச் செலவிடும் பட்சத்திலேயே சாத்தியமாகும்.

நடைமுறையில் மக்களைப் புறந்தள்ளி, பெருநிறுவனங்களை அரசுகள் பிணையெடுப்பதை நாம், தினம்தினம் இப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில், அரசுகள் நகரங்களை மறுசீரமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

இராணுவ மயமாகும் பொதுவெளிகள்

கடந்த பத்தாண்டுகளில், இராணுவமய்ய, சர்வாதிகாரத் தன்மையுடைய பலவான்கள் (strongman) பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இவர்களின் மிகப்பெரிய ஆதரவுத்தளம், பெருநகரங்கள் அல்லளூ மாறாக, நகருக்கு வெளியேயான மக்கள் தொகையினரின் ஆதரவே, இவர்களை ஆட்சியில் இருத்தியது.

இவர்களுக்கான நெருக்கடிகளும் சவால்களும் பெரும்பாலும், நகர்புறங்களில் இருந்தே எழுகின்றன. மேலும், நகர்புறங்களில் எழும் எதிர்ப்புகள், கூடிய கவனம் பெறுகின்றன. இவை, அரசுகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்தப் பெருநகரங்களையும் பொதுவெளிகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே, இந்தப் பலவான்கள் விரும்புகிறார்கள்.

இதைச் சாத்தியமாக்குவதற்கான வாய்ப்பை, கொவிட்-19 பெருந்தொற்று வழங்கி இருக்கிறது. பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய சாக்குப்போக்குகளைச் சொல்லி, பொதுவெளிகள் மெதுமெதுவாக, இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் முழுமையான கண்காணிப்புக்குள்ளும் கொண்டு வரப்படுகின்றன. பெருந்தொற்றுப் பரவுதலைத் தடுத்தல் என்ற போர்வையில் நடக்கும் இந்த மாற்றங்கள், நகரங்களில் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளை, இராணுவத்துடன் பின்னிப் பிணைந்ததாக வைத்து இருக்கும், 'புதிய வழமையை' (new normal) ஏற்படுத்த முனைகின்றன; இது மிகவும் ஆபத்தானது.

இந்தச் செயற்பாடுகளுக்கு, அதிகார வர்க்கத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். பெருவணிகர்களின் ஆதரவும் இருக்கும்ளூ மேற்றட்டு வர்க்கத்தின் ஆதரவும் இருக்கும். பல வழிகளில், மிகச் சாதாரண நகர்வாசிகளும் 'சுத்தமான ஒழுங்கான நகரம்' என்ற கதையாடலை, நம்பத் தொடங்குவார்கள்.

இவை, எதிர்க்கேள்வி கேட்காக, விமர்சனம் செய்யாத ஒரு சூழலையும் செயலற்ற குடிமக்களை (passive citizens) உருவாக்குவதற்கான நடவடிக்கையின் ஓர் அங்கமேயாகும். இது நீண்டகால நோக்கில், கேள்விகளுக்கு அப்பாலான சர்வாதிகாரத்தை நிரந்தரமாக்கும் ஆபத்தைப் பலர் உணர்வதில்லை.

கொவிட்-19க்குப் பின்னரான உலகில், மூன்றாமுலக நாடுகள் எதிர்நோக்கவுள்ள சவால்களில், இராணுவமயத்துக்கும் கண்காணிப்புக்கும் உட்படும் பொதுவெளிகள் பிரதானமானவை. இவற்றை, ஒருபோதும் மக்கள் அனுமதிக்கக்கூடாது. இவற்றை அனுமதித்தால், காலப்போக்கில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பும் அமைதியைக் குலைத்துவிடலாம் என்பதால், மக்கள் மௌனங்களிலேயே உரையாடவும் கற்றுக்கொள்ள வேண்டியநிலை உருவாகும்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19க்குப்-பின்னரான-உலகம்-பெருநகரங்களின்-எதிர்காலம்/91-250598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.