Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடேசனை கொலை செய்தவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் தண்டனை வழங்குவார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே ஏப்ரல் மே மாதங்களில் தான்.

16 வருடங்களுக்கு முதல் நடேசன் 2004 மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணைவிட்டு வெளியேறிய நான் கடந்த இரு வருடங்களுக்கு முதல் மட்டக்களப்புக்கு சென்றிருந்தேன்.

தமிழ் ஊடகவியலாளர்களிடையே ஒன்றுமையும் பலமும் இருக்க வேண்டும் என உழைத்த நடேசன், சிவராம் போன்றவர்களின் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டு ஏட்டிக்கு போட்டியாக பல ஊடக அமைப்புக்கள்,

மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அங்கிருந்து திரும்பி வந்தேன்.

அதன் பின்னர் கடந்த வருடம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் தங்கியிருந்தேன். ஜோசப் அண்ணன், கதிர்காமத்தம்பி காலத்திலும் மட்டக்களப்பில் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறேன். அதன் பின் சிவராம், நடேசன் ஆகியோர் காலத்திலும் பணியாற்றியிருக்கிறேன். அந்த பொற்காலங்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கங்கள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன.

நடேசன் படுகொலை செய்யப்பட்டு 16ஆண்டுகள் கடந்து விட்டன. நடேசனின் மரணம் என்பது வெறும் தனிமனிதர் ஒருவரின் கொலையாகவோ அல்லது இழப்பாகவோ கருத முடியாது.
நடேசனின் மரணத்திற்கு முன்னரான மட்டக்களப்பின் ஊடகத்துறையையும் அக்கொலைக்கு பின்னரான ஊடகத்துறையையும் ஆராயும் ஒருவர் இதனை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

சிங்கள பேரினவாதம் செய்த சூழ்ச்சியின் விளைவாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரிய பிளவு மட்டக்களப்பில் உருவான போது அந்த சதியை தகர்த்து மக்களை தமிழ் தேசிய விடுதலையின் பக்கம் நிறுத்த வேண்டும் என நடேசனும் சிவராமும் உழைத்தனர். அதற்காகவே தங்கள் உயிரையும் விலையாக கொடுத்தனர்.

வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதத்தை உருவாக்கி தமிழ் தேசிய விடுதலையையும் ஒற்றுமையையும் சிதைப்பதற்கு தடையாக இருந்த மட்டக்களப்பு ஊடகத்துறையை முடக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற சதியின் விளைவாகவே அதற்கு முதல் பலியானவர்தான் நடேசன்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவோ அல்லது அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராகவோ யாரும் வாய்திறக்க கூடாது, ஏனைய பிரதேசங்களை விட பலமிக்கதாக விளங்கிய மட்டக்களப்பு ஊடகத்துறையை மௌனிக்க செய்வதற்காக 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி ( அன்று ஒரு திங்கட்கிழமை) நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எல்லை வீதியில் நடேசனின் உடல் வீழ்ந்து கிடந்த அந்த கணத்துடன் மட்டக்களப்பின் ஊடகத்துறை மௌனிக்கப்பட்டு விட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக செயற்பட்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்ட நாளும் அதுதான்.
அன்றைய தினம் மூன்று சம்பவங்கள் நடைபெற்றது.
1. நடேசன் மட்டக்களப்பு எல்லைவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. தமிழினத்தின் மீது பற்றுறுதியோடு செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
3. தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்றின் தேவை கருதி தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதிற்கு காரணமாக இருந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அன்றுடன் மௌனிக்கப்பட்டது.

தமிழ் தேசிய விடுதலைக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த விரிவுரையாளர் தம்பையா மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டு சரியாக ஒரு வாரத்தில் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நடேசன் மீது எனக்கு பிடித்த ஒரு குணம். அவன் கோபத்தை மனதில் வைத்திருப்பதில்லை. அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் மட்டக்களப்புக்கு வந்த நடேசனை விடுதலைப்புலிகள் கைது செய்து வைத்தியசாலை வீதியில் இருந்த விடுதலைப்புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.
50ஆயிரம் ரூபாவை நடேசன் குடும்பத்தினரிடமிருந்து விடுதலைப்புலிகள் பெற்ற பின்னரே அவரை விடுதலை செய்திருந்தனர். நடேசன் 50ஆயிரம் ரூபாவை கொடுக்க முடியாத கஷ்டநிலையிலேயே இருந்தார். பின்னர் அவனின் அக்கா நெல்லியடியிலிருந்து வந்து 50ஆயிரம் ரூபா பணத்தை கொடுத்தே நடேசனை விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்து மீட்டெடுத்திருந்தார்.

தன்னை தடுத்து வைத்திருந்தது. தன்னிடம் 50ஆயிரம் ரூபாவை பெற்றது போன்ற செயல்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் பிற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளனாகவே செயற்பட்டது அவனின் மன்னிக்கும் மறக்கும் பண்பை வெளிப்படுத்தியிருந்தது. நடேசன் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் விடுதலைப்புலிகள் என்பதை விட விடுதலைப்போராட்டத்தை நான் நேசிக்கிறேன் என சொல்வான்.

ஊடகத்துறை நடேசனின் முழுநேர தொழிலாக இல்லாத போதிலும் தனது அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எல்லாம் அவனின் சிந்தனை, நடவடிக்கை அனைத்தும் தனது ஊடக தொழில் பற்றியதாகத்தான் இருக்கும்.
செய்திகள், கட்டுரைகள் என அவன் இறக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தான்.

அவன் இறப்பதற்கு முதல்நாள் வீரகேசரியில் எழுதிய ஒரு கட்டுரையே அவனை கொலைகாரர்கள் சுட்டுக்கொல்வதற்கு காரணம் என சிலர் சொன்னதை கேட்டிருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை நடேசனை கொல்ல வேண்டும் என அவர்கள் திடீரென எடுத்த முடிவாக இருக்க முடியாது. நீண்டநாள் அவர்கள் போட்ட திட்டத்தையே நிறைவேற்றியிருந்தார்கள்.

ஓயாமல் எழுதிக்கொண்டிருந்த ஒரு பேனா இன்று ஓய்ந்து விட்டது.

2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக , அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடுவீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு வீரகேசரியில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது.

மிக காரசாரமானதும், துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.

அந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பபட்டிருந்தது.

இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய தம்மையாவின் படுகொலையை வெறும் செய்தியாக பார்த்து விட்டு மௌனமாக இருக்க போகிறோமா?

இத்தகைய கொலைகளுக்கு எதிராக வெகுஜனரீதியாக திரண்டெழுந்து இதை தடுக்கவில்லை என்றால் ஒரு தம்பையாவை போன்ற பல கல்விமான்களை, அறிஞர்களை, சமூக பணியாளர்களை இழக்க வேண்டி வரும். அந்த இழப்புக்களை பார்த்து வெறும் கண்ணீரை விடும் சமூகமாக இருக்கப்போகிறதா அல்லது அராஜகவாதிகளுக்கெதிராக தங்கள் சக்தியை காட்டப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்த நடேசன் கட்டுரையின் இறுதியில் அராஜகவாதிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.

அடுத்த இலக்கு தன் மீதுதான் என்பதை தெரிந்து கொண்டுதான் இதை எழுதினாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தம்பையாவின் படுகொலையை ஒத்த கொலைகள் தொடரப்போகிறது என்ற ஆரூடத்தை அக்கட்டுரை சொல்லியிருந்தது.. ஆனால் அந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே தங்களின் அடுத்த இலக்கு யார் என்பதை கொலையாளிகள் வெளிப்படுத்தி விட்டார்கள்.

மே 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடேசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு வீரகேசரியில் என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.

இந்த படுகொலைகளையும், அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகிறது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான்.

2004 மே 31 திங்கட்கிழமை. சரியாக தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரம். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.

நடேசன் பணியாற்றிய அலுவலகத்திலிருந்து தான் ஒருவர் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். அவரின் மனைவிக்கு அறிவித்து விட்டோம். எங்கள் அலுவலகத்திலிருந்து சற்று தள்ளித்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும் தாங்கள் அந்த இடத்திற்கு போகவில்லை என்றும் சொன்னார்கள்.
உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எல்லை வீதிக்கு சென்றேன்.

நடேசன் தன் அலுவலகத்திற்கு ஒருபாதையால் தினமும் செல்வது கிடையாது. அன்று எல்லைவீதி வழியாக நடேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கைத்துப்பாக்கியால் நடேசன் மீது சுட்டிருக்கின்றனர். நான் போனபோது இரத்தம் கொப்பளித்தவாறு நடேசனின் உடல் வீதி ஓரத்தில் கிடந்தது. மோட்;டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.
இராணுவத்தினரும் பொலிஸாரும் நின்றனர். தூரத்தில் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சடலத்திற்கு அருகில் வர பலரும் அஞ்சினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த தினக்குரல் பத்திரிகையாளர் சந்திரபிரகாஷ் அண்ணன் இங்கு நிற்கவேண்டாம். சுட்ட ஆக்களும் இங்கதான் நிக்கிறாங்கள். நீங்கள் நிற்பது ஆபத்து போய்விடுங்கள் என சொன்னான்.

அங்கு வந்த பொலிஸார் சுடப்பட்டவரை தெரியுமா என்று கேட்டனர். தெரியும், அவர் எங்கள் சக பத்திரிகையாளர் என கூறிய போது சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்க முடியுமா என கேட்டனர். நான் ஆம் என்றேன்.

பக்கத்தில் இருந்த வீட்டாரிடம் சென்று நடந்த சம்பவத்தை கேட்டேன். சொல்வதற்கு தயங்கினார்கள். அந்த வீட்டுக்கார வயோதிபர் என்னுடன் ஒரளவு பழக்கம் என்பதால் தனியாக அழைத்து சென்று சில தகவல்களை சொன்னார்.
தமிழ் குழுவை சேர்ந்த இருவர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டார்கள். அவர்கள் சுட்டு விட்டு திருமலை வீதிப்பக்கம் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து இறந்து விட்டரா என பார்த்து சென்றனர் என கூறினார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சற்று உயரமானவர், பின்னால் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தவர் குள்ள உருவம் கொண்டவர் என சொன்னார்.
என்னிடம் காவல்துறையினரும், பின்னர் மரணவிசாரணை நடத்திய நீதிபதியும் வாக்குமூலங்களை எடுத்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சத்தால் உறைந்து போய் இருந்தார்கள். வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு போனதும் அங்கு தவராசா வந்து சேர்ந்தார். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நாள் நெல்லியடியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நடேசன் படித்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கொழும்பிலிருந்து சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய உட்பட சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். அந்த அஞ்சலி கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

நெல்லியடி சுடலையில் தகனம் செய்யப்பட்ட பின் சுனந்த தேசப்பிரிய என்னை சந்தித்து மட்டக்களப்புக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை கூறினார். கொழும்புக்கு வருமாறும் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதாகவும் கூறினார்.
தவராசாவும் வேதநாயகமும் மட்டக்களப்பில் தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தனர்.

கொழும்பில் நாங்கள் தங்கியிருந்த போது சிங்கள ஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, புத்திக, விக்ரர் ஐவன், ஆகியோரும், பல வழிகளில் உதவி செய்தனர். கொழும்பில் தங்கியிருக்கும் போது நிதி நெருக்கடிக்குள் நாங்கள் இருப்போம் என்பதை நாங்கள் சொல்லாமலே உணர்ந்து கொண்ட லண்டனில் இருந்த நண்பர் சீவகன் பூபாலரத்தினம் தனது சொந்தப்பணத்தில் எமக்கு செலவுக்கு காசு அனுப்பியிருந்தார். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். இப்போது அப்பணம் சிறு தொகையாக இருக்கலாம். ஆனால் அச்சூழலில் அதன் பெறுமதி எல்லை கடந்தது.

பிபிசி சந்தேசிய சிங்கள சேவையில் பணியாற்றும் பண்டார அதற்கு மேல் ஒரு படி சென்று கொழும்பிலிருந்து சுவிஸிற்கு வருவதற்கான பயணசீட்டுக்குரிய பணம் தொடக்கம் லண்டனில் இருக்கும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஊடாக துரிதமாக செய்தார்.

விக்ரர் ஐவன், சுனந்த தேசப்பிரியா ஆகியோர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் பேசி விண்ணப்பத்தை கொடுத்து 18 நாட்களில் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொண்டு விசாவை வழங்கியிருந்தார்கள்.

உயிர் ஆபத்திலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக வெளிநாட்டில் தஞ்சமடைவதே எமக்கு தெரிந்த ஒரே வழியாக அப்போது தெரிந்தது.

1990களின் பின்னர் மட்டக்களப்பில் தமிழ் ஊடகத்துறையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அந்த மறுமலர்ச்சியின் முக்கிய பங்குதாரர்களாக சிவராம், நடேசன் போன்றவர்களையே நான் பார்க்கிறேன்.

நடேசனோ அல்லது சிவராமோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர்கள் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப்போராட்டத்தையும் அதனை முன்னெடுத்த காரணத்தால் விடுதலைப்புலிகளையும் ஆதரித்தார்கள். அதற்காக விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாடுகளையும் ஆதரித்தவர்கள் அல்ல.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் வந்த நெருக்கடிகளால் அச்சங்கம் செயலிழந்திருந்தது. மீண்டும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை புனரமைத்து செயற்பட வேண்டும் என்று ஆர்வம் காட்டியவர் நடேசன் தான்.

ஊடகவியலாளர் சங்கத்திற்கு ஊடகவியலாளர்களின் நலன்கள் மட்டுமல்ல தாம் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் நலன்களும் அவசியமாகும். அதன் விளைவாகவே கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகள் தொடக்கம் பல்வேறு செயற்பாடுகளில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஈடுபட ஆரம்பித்தது.

1990 தொடக்கம் 2004 வரையான காலம் மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினராலும் அவர்களுடன் சேர்ந்திருந்த ஒட்டுக்குழுக்களான புளொட் போன்ற குழுக்களாலும் அச்சுறுத்தல் இருந்த போதிலும் துணிச்சலுடன் செயற்பட்ட காலம் அது.

ஆயுதப்போராட்டம் மட்டும் விடுதலையை தந்து விடாது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மாதாந்தம் அரசியல் கருத்தரங்களை நடத்தியது. அதன் செயலுருவாக்கத்தில் மூல வேர்களாக இருந்தவர்கள் நடேசனும் சிவராமும் தான். அவர்களின் ஆலோசனைகள் திட்டமிடல்களே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் அரசியல் பரப்பில் திடமாக கால் பதிக்க முடிந்தது.

நடேசன் மரணித்த 2004 மே 31ஆம் திகதியுடன் இவை அனைத்தும் முடங்கி விட்டது என்றே நான் கருதுகிறேன்.

ஊடகவியலாளர் நடேசன், கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் தம்பையா, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் என பலரும் மட்டக்களப்பு மண்ணில் கொல்லப்பட்டனர்.

இலங்கையின் நீதித்துறையால் இக்கொலையாளிகளுக்கு இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை. இனியும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கவும் முடியாது.

ஆனால் இக்கொலைகளை புரிந்தவர்களுக்கு தகுந்த தண்டனையை மட்டக்களப்பு மக்களால் வழங்க முடியும்.

மனித நேயத்தை நேசிக்கும் அத்தனை பேரின் எதிர்பார்ப்பும் அதுதான்.

இரா..துரைரத்தினம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.