Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கல்வி ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் இந்த பெரும் சிக்கலை கவனித்தீர்களா? சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள்

விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ்
மாணவிGetty Images

கொரோனா பொது முடக்கம் நமது வாழ்க்கையில் பல புதிய விஷயங்களை பரிச்சயமாக்கிகொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் வகுப்புகள்.

கொரோனா பரவலை தடுக்க பள்ளி கல்லூரிகள் கிட்டதட்ட 4 நான்கு மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பல தனியார் பள்ளிகள் இணையத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் இணைய வகுப்புகள் என்ற பெயரில் பல மணி நேரம் அலைபேசி அல்லது கணினியில் குழந்தைகள் நேரம் செலவிடுவது குறித்தும் இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் இணைய வகுப்புகளுக்கு மாற்றாக சில வழிமுறைகளை முன் வைக்கின்றனர்.

இணைய வகுப்பில் உள்ள சிக்கல்கள்

இணைய வகுப்புகளை எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் 'சமத்துவமின்மை' என்கின்றனர் ஆர்வலர்கள். ஆம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவராக இருந்தாலும் அந்த மாணவர் வீட்டில் அவருக்கென தனியாக அலைபேசியோ அல்லது இணைய சேவையோ வழங்குவது கடினமான ஒன்றுதான் என்கின்றனர் ஆர்வலர்கள்.

"நூறுநாள் வேலைக்கு செல்லும் ஒரு பெற்றோர் கடன் வாங்கி தனது குழந்தையை பள்ளியில் சேர்த்திருக்கும் பட்சத்தில் திடீரென அவர்களால் ஒரு செல்போனும் அதற்கான இணைய சேவையையும் ஏற்பாடு செய்வதில் பல சிரமம் ஏற்படுகிறது," என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் இனியன்.

தற்போதைய சூழலில் பல வீடுகளில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இணைய வகுப்புகளுக்காகப் பணம் செலவிடுவது என்பது இந்த சூழலின் பளுவை மேலும் கூட்டுவதாகவே உள்ளது என்கின்றனர் பெற்றோர்கள்.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் அனைவருக்கும் அலைப்பேசியோ அல்லது கணினியோ வழங்குவது சாத்தியமற்ற சூழலாகவும் உள்ளது.

இதைத்தவிர்த்து குழந்தைகள் அலைப்பேசி பயன்படுத்துவதை எதிர்த்துவிட்டு நாமே தற்போது அவர்கள் கையில் அலைப்பேசியை திணிக்கிறோம் என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது.

"இது ஒரு நெருக்கடியான சூழல்தான் இருப்பினும் குழந்தைகளை அலைப்பேசி மற்றும் கணினியிலிருந்து விலகியிருக்குமாறு நாமே கூறிவிட்டு தற்போது நாமே அவர்கள் கையில் இந்த தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது," என்கிறார் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசகர் வசந்தி சண்முகம்.

உளவியல் சிக்கல்

மொபைல் பார்க்கும் பெண்Getty Images

இந்த நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தருவது அவசியம் என்றாலும்கூட அது குழந்தைகள் மத்தியில் எம்மாதிரியான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும் என்கிறார் வசந்தி.

"பல தனியார் பள்ளிகள் கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கும்கூட இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பல சமயங்களில் இந்த இணைய வகுப்புகளில் குழந்தைகள் சரியாக கவனிக்கிறார்களா, அவர்களுக்கு அந்த பாடம் புரிகிறதா என்பதைக்கூட ஆசிரியர்களால் பார்க்க முடிவதில்லை," என்கிறார் வசந்தி.

"எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான புரிதல் தன்மையோடு இருப்பதில்லை அப்படியிருக்கும் பட்சத்தில் அனைத்து விதமான குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறையாக இந்த இணைய வகுப்புகள் இருக்கின்றன என்பதால் அதில் பெரிதும் பலன் இல்லை," என்கிறார் அவர்.

குழந்தைகள் பெரும்பாலும் பாடம் கற்பதைவிட தனது சக தோழர்களுடன் இருப்பதைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதன் வழியாக கற்றலும் ஏற்படும் ஆனால் இந்த இணைய வகுப்புகளில் அதற்கு வாய்ப்பில்லாமல் போகிறது.

"பள்ளிகளில் நேருக்கு நேர் பார்த்து பேசி பழகி நண்பர்களுடன் கற்றபோது பள்ளிகள் கொடுக்கும் உளவியல் விடுதலையை ஒருபோதும் இணைய வகுப்புகள் வழங்குவதில்லை," என்கிறார் குழந்தைகள் நல ஆர்வலர் இனியன்.

நடைமுறை சிக்கல்கள்

இம்மாதிரியான இணைய வகுப்புகள் தொடர்பான தொழில்நுட்பங்களைப் பழகுவதில் பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் பெற்றோர்கள்.

"நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு சில சமயங்களில் வீட்டுப்பாடத்தை வாட்சப்பில் அனுப்புகிறார்கள் பின் அதை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்ப சொல்கிறார்கள். எங்கள் வீட்டில் பிரிண்டர் வசதி கிடையாது. அருகாமையில் கடைகளும் இல்லை. எனவே எங்களால் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது," என்கிறார் லதா.

ஆன்லைன் வகுப்புGetty Images

இம்மாதிரியான நடைமுறை சிக்கல்களை தாண்டி பிள்ளைகள் ஏதேனும் ஆபாச வலைதளங்களை பார்க்க நேரிடும் என்ற பயம்தான் பெற்றோர்கள் மத்தியில் பிரதானமாக உள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிய மனுவிலும் இதைதான் குறிப்பிட்டிருந்தார்கள்.

"குழந்தைகளைக் காட்டிலும் வளர் இளம் பருவத்தினர் தொடர்ந்து இம்மாதிரியான இணைய வகுப்புகளில் பங்கேற்பது மேலும் ஆபத்தானது. அதிகப்படியான நேரங்களுக்கு அலைப்பேசியோ அல்லது கணினியோ அவர்களுக்கு கொடுக்கும்போது இதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை நாமே அவர்களுக்கு அளிக்கிறோம்," என்கிறார் குழந்தைகள் நல எழுத்தாளர் விழியன்.

ஆசிரியர்களின் வேதனை

இந்த இணைய வழி வகுப்புகளால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்துப் பேசும்போது பெற்றோர்களுக்கு இருக்கும் அதே அளவிலான சுமை பல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் உண்டு என்கிறார்கள் ஆர்வலர்கள்.

கோப்புப் படம்Getty Images கோப்புப் படம்

இணைய வகுப்புகளில் மாணவர்களின் கவனத்தைத் தொடர்ந்து தக்க வைப்பதற்குப் பல சுவாரஸ்யமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது ஆனால் அதற்கான தொழில்நுட்ப வசதிதான் இல்லை என்கிறார் தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த காயத்ரி.

"நாங்கள் படத்தொகுப்புக்குப் பயன்படுத்தப்படும் செயலிகள் போன்றவற்றின் மூலம் ஒரு வீடியோ தொகுப்பை உருவாக்கி அதை மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றனர், பல ஆசிரியர்களிடம் அந்த தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள், எனக்கு பணியிலிருந்து விலகும் வாய்ப்பு இருந்ததால் நான் விலகிவிட்டேன். ஆனால் குடும்பத்தில் தனது ஊதியத்தை மட்டுமே நம்பி வாழும் எனது சக ஆசிரியருக்கு அந்த வாய்ப்பும் இல்லை," என்கிறார் காயத்ரி.

வேறு வழியில்லாமல்

இணைய வகுப்புகளுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் எழுந்தாலும் பல மாதங்களாக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காமல் இருப்பதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு வழியில் அவர்களுக்குப் பாடங்களைக் கொண்டு சேர்ப்பதற்கு இந்த இணைய வகுப்புகள் வழி செய்கின்றன என்கிறார் தனியார் பள்ளி முதல்வர் அனு.

"எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் காலெடுத்து வைக்கும்போது அது சவால்களை கொண்டுதான் அமைந்திருக்கும். ஏற்கனவே நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குப் பழகிக் கொண்ட சூழலில் இந்த முடக்கக் காலத்தில் இந்த இணைய வகுப்பிற்கும் நாம் பழகிக் கொள்ள வேண்டியது அவசியமே," என்கிறார் அவர்.

உடல் நலப் பிரச்சனைகள்

இணைய வகுப்புகளுக்காக அதிக நேரம் அலைப்பேசியைப் பார்ப்பதால் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் குழந்தைகளுக்கு ஏற்படும் என தெரிவிக்கிறார் கண் மருத்துவர் ஸ்ரீ வித்யா.

"அதிகப்படியாக அலைப்பேசியை பார்ப்பதால், கண்கள் உலர்ந்து போதல், தலைவலி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அலைபேசி அல்லது மடிக்கணினியைப் பார்ப்பதால் அவர்கள் அதற்கு அடிமையாவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதிக நேரம் அவர்கள் அலைபேசியைப் பார்ப்பதால் அவர்களால் எந்த ஒரு விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்த முடியாமல் போகும்" என்கிறார் ஸ்ரீவித்யா.

மாற்று வழி

"எப்போதுமே ஒரு தொழில்நுட்பம் கல்விக்குள் நுழையும்போது அது ஒரு சமூக வலியுடன்தான் நுழையும் அதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இந்த சமயமானது தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கான ஒரு காலம் இல்லை. நீண்ட நேரம் குழந்தைகள் அலைபேசி அல்லது மடிக்கணினி பயன்படுத்துவதால் அவர்கள் கண்ணுக்கு மட்டுமல்ல காதுகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது," என்கிறார் குழந்தை எழுத்தாளர் விழியன்.

இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இணைய வகுப்புகளால் மாணவர்கள் எந்த அளவு பயனடைகிறார்கள் என்று கேட்டால் அது அவ்வளவு பயனளிப்பதாக இல்லை என்கின்றனர் குழந்தை நல ஆர்வலர்கள்.

"இணைய வகுப்புகளுக்காகச் செலவிடும் உழைப்பிற்கான விளைவு நிச்சயம் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது ஒரு தேவையற்ற ஏற்பாடே. பெரும்பாலான காலங்களில் சக மாணவர்களின் மூலமாகத்தான் கற்றல் ஏற்படுகிறது இந்த இணைய வகுப்புகளில் அதற்கு சாத்தியமில்லாமல் போகிறது." என்கிறார் விழியன்.

பள்ளி சிறுவன்Getty Images

இந்தச்சூழல் அருகாமை பள்ளியின் முக்கியத்துவத்தைப் பல பெற்றோர்களுக்குப் புரியவைத்துள்ளது என்கிறார் அவர்.

"எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் இணையக் கல்வியே வேண்டாம் என்று நாம் புறக்கணித்துவிட முடியாது. ஒவ்வொரு வகுப்பிற்குமான நிலையான இயக்க நடைமுறைகளை அரசாங்கம் வழங்க வேண்டும். மேலும் இந்த சமயத்தில் புத்தக பாடத்தை மட்டுமே பயில்விக்காமல்,. இந்த வாய்ப்புகளைக் கருத்து அடிப்படையிலான கற்றல் ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்," என்கிறார் விழியன்.

   

"ஆன்லைன் வகுப்புகள் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை மட்டும் பேசாமல் இவ்வாறு டிஜிட்டல் கற்றல்தான் முக்கியம் என்றால் அதற்கான சரியான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கண்டறிவது அவசியம்." என்கிறார் அவர்.

இந்த சமூக முடக்கக் காலத்தில் குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் கல்வி முறைகளில் கவனம் செலுத்தலாம் என்கிறார் ஆர்வலர் இனியன்.

"நான்கு மாதங்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால், குழந்தைகள் பாடத்தை மறந்துவிடுவார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இங்கு கல்வி என்பது மனப்பாடம் செய்வது என்ற நிலையில் மட்டும் இருக்கும் பட்சத்தில்தான் இம்மாதிரியான கூற்றுகள் வருகின்றன. இது ஒரு நெருக்கடியான காலம் என்றாலும் இந்த சூழலைக் குழந்தைகள் அனுமானித்துக் கொண்டிருப்பார்கள். இந்த சூழலில் குழந்தைகள் தங்களை தகவமைத்துக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். குழந்தைகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். குழந்தைகள் நிச்சயம் இந்த சூழலிலிருந்து மீண்டு வருவார்கள்," என்கிறார் இனியன்.

"இந்த சூழலில் குழந்தைகளுக்குக் கலை போன்ற அம்சங்களை கற்றுக் கொடுக்கலாம். கல்வி முறையை மறுசீரமைப்பு செய்வதற்கான காலமாகவும் நாம் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்," என்கிறார் அவர்.

இந்த முடக்கக் காலம் தொடரும் பட்சத்தில் மாற்று வழிகளையும் திட்டங்களையும் அரசு வகுக்க வேண்டும் என்கிறார் அவர்.

"செலவில்லாத தொழில்நுட்பங்கள் மூலமாகப் பாடங்கள் குழந்தைகளைச் சென்று சேரும் சாத்தியங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். இந்த முடக்கம் தொடரும் பட்சத்தில் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவில் அருகாமை பள்ளி என்ற திட்டத்தைக் கொண்டு வருவது குறித்தும் யோசிக்கலாம்." என்கிறார் அவர்.
 

https://www.bbc.com/tamil/india-53377571

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.