Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி – நிலாந்தன்

August 30, 2020
  • நிலாந்தன்

ன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

கடந்த 11 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராடி வருகிறார்கள். இன்றோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் உலக சமூகத்திடமும் குறிப்பாக ஐநா விடமும் இரண்டு விடையங்களை கேட்கிறார்கள்.

முதலாவது நீதி. இரண்டாவது இழப்பீடு.

நீதி வேண்டும் என்றால் அதற்கு விசாரணை செய்ய வேண்டும். காணாமல் ஆக்கியவர்களை விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது இலங்கைத் தீவில் மறுபடியும் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ராஜபக்ச சகோதரர்கள் படைத்தரப்பை எப்பொழுதும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்படும் படைப் பிரதானிகளை அவர்கள் எது விதத்திலாவது பாதுகாப்பார்கள்.

1-3-9.jpg

 

அமெரிக்காவால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஒரு படைத் தளபதியை ஒரு வைரசுக்கு எதிரான  நடவடிக்கைக்கு தலைமை தாங்க விட்டு அதன்மூலம் படைத் தரப்பை அவர்கள் புனிதப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு ஒரு நோய்த் தொற்று காலத்தில் சிவில் கட்டமைப்புகளை படைமையப்படுத்தி அதன்மூலம் நாட்டை மேலும் ராணுவ மயப்படுத்தி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் காலம் எனப்படுவது இலங்கைத் தீவில் படைத் தரப்பை மகிமைப்படுத்தி இருக்கிறது. வைரசுக்கு பின்னரான அரசியல் சூழலில் படைத்தரப்பு ஒரு வைரஸை வென்ற படையாக புதிய பலத்தோடு எழுச்சி பெற்றிருக்கிறது. எனவே காணாமல் ஆக்கியவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் படையாட்களை விசாரிப்பதற்கு ராஜபக்சக்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அவ்வாறான விசாரணைகளுக்குத் தேவையான ஓர் அரசியல் சூழல் இப்போது இல்லை.

 

இப்பொழுது மட்டும் அல்ல முன்னைய ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்திலும் அப்படி ஒரு சூழல் நிலவவில்லை. அப்படி ஒரு சூழலை உருவாக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருக்கவில்லை. ஆனால் அவரும் மைத்திரிபால சிறிசேனவும் ஏற்றுக் கொண்டு அனுசரணை வழங்கிய ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்தின் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் ஐநாவின் 30/1 தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்கிறது. நிலைமாறுகால நீதியின் கீழ் உண்மையை வெளிக் கொண்டுவரும் விதத்தில் விசாரணைகள் நடாத்தப்பட்டு அந்த உண்மைகளின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

 

இவ்வாறு நிலைமாறுகால நீதியை நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஐ.நாவுக்குக் காட்டுவதற்காக சில கட்டமைப்புக்களை உருவாக்கியது.

அதில் முதலாவது-காணாமல் போனவர்கள் தொடர்பான சர்வதேச சமவாயத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது. அது தொடர்பான சட்ட மூலத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

 

இரண்டாவதாக சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

மூன்றாவதாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம்  ஒன்றை உருவாக்கியது. இந்த அலுவலகத்தின் கிளைகள் தமிழ் பகுதிகளிலும் நிறுவப்பட்டன.

நாலாவதாக சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான ஓர் அலுவலகத்தையும் உருவாக்கியது.

 

ஐந்தாவதாக இழப்பீட்டுக்கான ஒரு அலுவலகத்தையும் உருவாக்கியது.

ராஜபக்சக்கள் தொடக்கத்திலிருந்தே காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை எதிர்த்தார்கள். அவர்களுக்கு நெருக்கமான அமரபுர நிகாய அந்த எதிர்ப்பை கூர்மையாக வெளிப்படுத்தியது. ரணில் விக்கிரமசிங்க அமரபுர நிகாயாவுக்கு வாக்குறுதிகளை வழங்கி சமாதானப்படுத்தி காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை உருவாக்கினார்.

 

அந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் ஒரு விடயம் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. காணாமல் ஆக்கிய ஒருவர் தனது குற்றத்தை அந்த அலுவலகத்தின் முன் ஏற்றுக்கொள்வாராக இருந்தால் அவருடைய அடையாளத்தை மறைக்கும் அதிகாரத்தை அந்த அலுவலகம் கொண்டிருக்கிறது. அவர் யார் என்ற விவரத்தை எந்த நீதிப் பொறிமுறைக் கூடாகவும் எந்த நீதிமன்றத்திலும் போய் கேட்டுப் பெற முடியாது. அதை மறைப்பதற்கு முழு அதிகாரம் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்துக்கு உண்டு.

இதுதொடர்பாக சில செயற்பாட்டாளர்கள் அந்த அலுவலகப் பிரதானிகளோடு உரையாடிய பொழுது ஒரு சட்ட செயற்பாட்டாளர் “அப்படி என்றால் உங்களுடைய அலுவலகம் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றதா?”என்று கேட்டிருகிறார். அதற்கு அந்த அலுவலகத்தின் இரண்டாம் நிலைப் பிரதானியாகிய ஒருவர் பின்வருமாறு சொன்னாராம் “உங்களுக்கு இதுவும் வேண்டாமா ?” அதாவது ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதனையாவது அறிந்து கொள்ள நீங்கள் விரும்பவில்லையா?” என்று. இதுதான் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் நிலை.

அதேசமயம் தென்னாப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற ஒரு ஏற்பாட்டுக்கு குற்றவாளிகளைப் புலனாய்வு செய்து புலன் விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

1-2-31-300x182.jpg

 

இலங்கைத் தீவில் இந்த அலுவலகம் காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் விபரங்களை பதிவு செய்யும் ஓர் அலுவலகமாகவே பெருமளவுக்கு நடைமுறையில் சுருக்கப்பட்டது. இந்த அலுவலகம் இப்பொழுதும் இயங்குகிறது. அதற்கு வேண்டிய நிதி இப்பொழுதும் வழங்கப்படுகிறது. ஆனால் நடைமுறையில் ராஜபக்சக்கள் அந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஐநா தீர்மானத்தில்  ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளின்படி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை குறிக்கும் மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அவர் இயற்கையாக இறக்கவில்லை அல்லது கொல்லப்படவும் இல்லை அவர் காணாமல் ஆக்கப்பட்டார் என்று மரணச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது இன்று வரையிலும் யாருக்கும் வழங்கப்படவில்லை. மாறாக இல்லாமல் போனதற்கான ஒரு சான்றிதழை வழங்க அவர்கள் முயற்சித்தார்கள். certificate of absent. ஆனால் அந்தச் சான்றிதழைக் காட்டி காணாமல் ஆக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெற முடியாத ஒரு நிலைமையே காணப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் பேச்சாளரான கெகெலிய ரம்புக்வெல சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார்…காணாமல் ஆக்கப்பட்ட புலிகள் இயக்கத்தவருக்கு நட்ட ஈடு இல்லை என்று. அவர்களில் அநேகர் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ராஜபக்சக்கள் மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்கவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாகவும் துணிச்சலாகவும் நடக்கவில்லை. அந்த மக்களின் வாக்குகளை பெற்ற நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை தொடர்ச்சியாகப் பாதுகாத்து வந்த கூட்டமைப்பு அது தொடர்பில் எந்தக் கரிசனையையும் காட்டவில்லை. அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் எதிர்ப்பைக் காட்டவில்லை. இதன் விளைவாகவே காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயார் வவுனியாவில் வைத்து சம்பந்தரை நோக்கிச் செருப்பைக் காட்டினார்.

இவ்வாறு மக்கள் செருப்பை தூக்கிக் காட்டும் ஒரு நிலைமையின் வளர்ச்சிப் போக்கை இம்முறை தேர்தல் முடிவுகளில் காணமுடிந்தது. கூட்டமைப்பு அதன் ஏகபோகத்தை இழந்திருக்கிறது. மாற்று அணி நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் அதே சமயம் தென்னிலங்கையில் ராஜபக்சக்கள் அசுர பலத்தோடு ஆட்சியை மீண்டும் கைப்பற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே நிலைமாறுகால நீதியை அவர்கள் ஐநா பரிந்துரைக்கும் பரிந்துரைக்கும் வடிவத்தில் அல்லது ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்ட வடிவத்தில் நிறைவேற்றப் போவதில்லை என்று நடைமுறைகள் நிரூபித்திருக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்ட அலுவலகங்களை ராஜபக்சக்கள் தொடர்ந்தும் இயங்க அனுமதித்திருக்கிறார்கள். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம்; இழப்பீட்டிற்கான அலுவலகம்;சாட்சிகளையும் பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாப்பதற்கான அலுவலகம் போன்றன தொடர்ந்தும் இயங்குகின்றன. அவை முன்பு ஒப்பீட்டளவில் சுயாதீனமான இயங்கின. இப்பொழுது நீதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த அலுவலகங்களைத் தொடர்ந்து இயங்க விடுவதன் மூலம் ராஜபக்சக்கள் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஒரு செய்தியைக் கூற விரும்புகிறார்களா? நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகள் ஏதோ ஒரு வடிவத்தில் ஏதோ ஒரு விதத்தில் இலங்கைதீவில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்ற செய்தியா அது?

தேர்தலுக்கு சில கிழமைகளுக்கு முன்பு விஜயதாஸ ராஜபக்ச ஒரு விடயத்தை சூசகமாகச் சொல்லியிருந்தார். பொறுப்புக் கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றைக் குறித்து தாங்கள் சிந்திக்க போவதாக. நிலைமாறுகால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பொறுப்புக்கூறல் தான். எனவே பொறுப்புக் கூறலுக்கான அதாவது நிலைமாறுகால நீதிக்கான “ராஜபக்சக்களின் மொடல்” ஒன்றை அவர்கள் நடைமுறைப்படுத்தப் போகிறார்களா?.

நிச்சயமாக “ராஜபக்சக்களின் நிலைமாறுகால நீதியில்” காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் காணாமல் ஆக்கியவர்களை எப்படியும் பாதுகாப்பார்கள். அதேசமயம் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புக்களை தொடர்ந்தும் இயங்க விடுவதன் மூலம் ஐநாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஒரு பொய்த் தோற்றத்தை காட்டுவார்கள். அதாவது அவர்கள் தங்களுக்கான ஒரு பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கக் கூடும். அது நிச்சயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தராது. எனவே அடுத்த ஆண்டும் ஓகஸ்ட் 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி கேட்டுப் போராட வேண்டியிருக்குமா?

 

http://thinakkural.lk/article/65277

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் – அடுத்த கட்டம் ? நிலாந்தன்..

August 29, 2020

 

நாளை அனைத்துலக காணாமல் ஆக்கபட்டவர்களின் தினம்.அதையொட்டி  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ்ப் பகுதி எங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் நகர மையத்தில் இருந்து தொடங்கி ஊர்வலம் கச்சேரியை சென்றடையும். மட்டக்களப்பில் கல்லடி பாலத்தில் இருந்து தொடங்கி காந்தி சிலையை சென்றடையும். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இவ்வாறு போராடுவது இதுதான் முதல் தடவை அல்ல ஆனால் ராஜபக்சக்கள் இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் நடத்தும் பெரிய அளவிலான போராட்டம் இது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் வீதியோரங்களில் அமர்ந்து போராடத் தொடங்கினார்கள். ஒவ்வொரு மார்ச் ஜெனிவா கூட்டத்தொடரை ஒட்டி அல்லது அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படும். நாளை 30ஆம் திகதியோடு இப்போராட்டங்கள் 1,290 ஆவது நாளை அடைகின்றன. ஆனால் போராடும் மக்களுக்கு பொருத்தமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. ஏன்?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெருவோரங்களில் அமர்ந்திருந்து போராடத் தொடங்கிய பொழுது தொடக்கத்தில் ஊடகங்களின் கவனத்தையும் அரசியல்வாதிகளின் கவனத்தையும் அவர்களால் கவர முடிந்தது. தொடக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் போராட்டக் குடில்களுக்குப் போய் தங்கள் வருகையைப் பதிவு செய்தார்கள். ஊடகங்கள் ஒவ்வொரு நாளும்  எத்தனையாம் நாள் போராட்டம் என்று முன்பக்கத்தில் செய்தி போட்டன. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாமே தொய்யத் தொடங்கியது. படிப்படியாக இப்போராட்டங்கள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காத ஒரு நிலைமை வந்தது.

தெருவோரப் போராட்டங்கள் 500வது நாளை நெருங்கிய போது சட்டச் செயற்பாட்டாளரான வழக்கறிஞர் ரட்ணவேலும் உட்பட வவுனியாவைச் சேர்ந்த சில செயற்பாட்டாளர்கள் போராடும் மக்களை அணுகி சில ஆலோசனைகளை முன்வைத்தார்கள். அரசாங்கத்தின் கவனத்தையும் வெளி உலகின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் இந்தப் போராட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்றும் சிந்திக்கப்பட்டது. அதன் பிரகாரம் தெருவோரப் போராட்டங்களை நிறுத்தி போராடும் மக்கள் தங்களுக்கென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகங்களை உருவாக்கி அந்த அலுவலகங்களில் இருந்தபடி போராடலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டது.

வவுனியா மாவட்ட போராடும் அமைப்பின் ஒருபகுதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் போராட்டம் பெருமளவிற்கு சோர்ந்து போய்த் தேங்கிவிட்டது.

இப்படிப்பட்டதொரு பின்னணியில்  கோட்டாபய ராஜபக்சவின் வருகைக்குப்பின் பெரிய அளவில் ஒரு போராட்டத்தை மேற்படி அமைப்புகள் ஒழுங்குபடுத்தி இருக்கின்றன. எனினும் வவுனியா மாவட்ட அமைப்பு தனது போராட்டத்தை ஒரு நாள் முன்னதாக அதாவது இன்று சனிக்கிழமை நடத்தப்போவதாக கூறியிருக்கிறது. இம்முறையும் போராட்ட அமைப்புகளுக்கு இடையே ஒத்த கருத்து இல்லை என்றே தோன்றுகிறது.

ஈழத்தமிழர்களின் அரசியல் பரப்பில் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் என்று பார்த்தால் அது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தெருவோரப் போராட்டம்தான். இதற்கு முன் மூன்றாம் கட்ட ஈழப்போர் காலகட்டத்தில் மல்லாவியில் நிவாரண வெட்டை எதிர்த்து ஐ.சி.ஆர்.சி அலுவலகத்துக்கு அண்மையில் ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்டம் ஒப்பீட்டளவில் நீண்ட நாட்களுக்கு நடந்தது.

அதற்குப்பின் இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் நாளை 1,290 ஆவது நாளை அடைகிறது. போராடத்  தொடங்கியதிலிருந்து இன்று வரையிலும் மொத்தம் எழுபதுக்கும் குறையாத  உறவினர்கள் இறந்து போய்விட்டதாக அமைப்புகள் தெரிவிக்கின்றன. மன்னாரில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த பெற்றோர்களில் ஒருவர் அடுத்த ஆண்டு இதே போல ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் பொழுது எங்களில் எத்தனை பேர் உயிரோடு இருப்பார்களோ தெரியாது என்று கூறியிருந்தார்.

அதுதான் உண்மை இந்த போராட்டத்தின் உயிர்மூச்சாக காணப்படுவது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ரத்த உறவுகள்தான். அதிலும் குறிப்பாக முதிய பெற்றோர்தான். அப்படிப்பட்டவர்கள்தான் தமக்கு வரக்கூடிய உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாது ஆவேசமாகப்  போராடுவார்கள். அவர்களுடைய உடல்நிலையும் வயதும் அவர்களுக்கு ஒரு தடைதான். ஆனாலும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைக்கு  நீதி வேண்டும் என்ற ஆவேசம் அவர்களைப் போராட வைக்கிறது. இப்பெற்றோர் படிப்படியாக இறந்து போனால் போராட்டத்தின் கதி என்னவாகும்?

இவ்வாறு ஒவ்வொரு நாளும் போராட்டக் குடிலில் குந்தி இருப்பதற்கு பதிலாக அவர்கள் வீட்டில் ஆடு வளர்த்தால் அல்லது கோழி வளர்த்தால் அல்லது பாய் இழைத்தால் எதையாவது சம்பாதிக்கக் கூடியதாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் தமது பேரப்பிள்ளைகளையாவது பராமரிக்கலாம். ஆனால் அவை எவற்றையும்  செய்யாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைக்காக இவ்வாறு பொது இடம் ஒன்றில் வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களால் தென்னிலங்கையின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை. உலகத்தின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை. அதைவிடக் கொடுமை என்னவெனில் தமது சொந்த மக்களின் கவனத்தையும் ஈர்க்க முடியவில்லை என்பதே.இதைச் சுட்டிக்காட்டி கண்ணன் அருணாச்சலம் என்ற ஓர் ஆவணப் பட தயாரிப்பாளர் குடில் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தைத்  தயாரித்திருக்கிறார்.

போராட்டத்துக்கு சொந்த மக்கள் மத்தியில் இருந்தே தொடர்ச்சியான ஆதரவு கிடைக்கவில்லை.அதாவது அவை மக்கள் மயப்படவில்லை. போராட்டங்கள் தொடங்கிய புதிதில் போராட்ட குடில்களுக்குள் காணப்பட்ட அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் படிப்படியாக அங்கே போவதைக் குறைத்துக் கொண்டார்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். ஆனால் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பெரும்பாலானவர்கள் தயாரில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்த நிலைமை? பாதிக்கப்பட்டவர்களை மட்டும் போராட விட்டுவிட்டு ஏனையவர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் ஒரு நிலைமை ஏன் தோன்றியது ? இதில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் ஏன் இந்தப் போராட்டங்களுக்கு தலைமை தாங்க முன்வரவில்லை ? குறிப்பாக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் இப்போராட்டங்களை ஒருங்கிணைக்க மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. இதற்கு காரணம் என்ன?

பின்வரும் இரண்டு காரணங்களை கூறலாம்.

முதலாவது காரணம்-இப்போராட்டங்கள் கருத்து மையச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மைய செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகின்றன என்ற விமர்சனம்.கருத்து மையச் செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்திருந்தால் அவை சிலவேளைகளில் இப்போது இருக்கும் தேக்கத்தை உடைத்துக்கொண்டு புதிய போராட்ட வடிவங்களைக் கண்டுபிடித்து இருந்திருக்கும். ஆனால் இப்போராட்டத்தை இன்றுவரை முன்னெடுப்பது பாதிக்கப்பட்ட மக்களே. எனவே அவை அதிகபட்சம் உணர்வுபூர்வமான தளத்திலேயே இப்பொழுதும் நிற்கின்றன. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம்- காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பும் ஒருமித்த சிந்தனையும் இல்லை. நாளை நடக்கப்போகும் போராட்டத்தில் வவுனியா அமைப்பு இணையப் போவதில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே வவுனியா மைய  அமைப்பு இரண்டாக உடைந்து விட்டதாக ஒரு அவதானிப்பு உண்டு. கிளிநொச்சியிலும் நிலைமை அப்படித்தான். இந்த உடைவுகளுக்கு காரணம் மேற்படி போராட்டங்களைப் பின்னிருந்து ஊக்குவிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகக்களே என்று ஒரு அவதானிப்பு உண்டு.

ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழ் தரப்புகளின் தார்மீக மற்றும் நிதி ரீதியான ஆதரவு இல்லையென்றால் இந்த போராட்டங்கள் இந்த அளவுக்கு சோர்ந்து போன நிலையிலும்கூட இவ்வளவு காலத்துக்கு இழுபட்டுக் கொண்டு வந்திருக்காது. அதே சமயம் அதே புலம்பெயர்ந்த பணத்தின் தலையீடு தான் இப்போராட்ட அமைப்புகளை ஒற்றுமைப்பட விடுவதில்லை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் அனந்தி சசிதரன் அவ்வாறு ஒற்றுமைப்படுத்த எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அப்போது அவரும் இப்படி ஒரு கருத்தைத்தான் சொன்னார். இந்த அமைப்புகளை பின்னிருந்து ஊக்குவிக்கும் வெவ்வேறு புலம்பெயர்ந்த தரப்புகள் இந்த அமைப்புகளையும் போராட்டத்தையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புகின்றன. அதனால் அவை இந்த அமைப்புகள் ஒற்றுமைப்படுவதை விரும்பவில்லை என்று பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இப்படிப்பட்டதொரு பின்னணியில் காணாமல் போனவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சங்கங்கள் ஒருமித்த வேலைத்திட்டத்தின் கீழ் இயங்குவதாகத் தெரியவில்லை. தவிர எல்லாரையும் ஒன்றிணைக்க கூடிய ஓர் அரசியல் இயக்கம் இந்தப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இப்போதுள்ள தேக்கத்தை உடைத்துக் கொண்டு ஒரு புதிய போராட்ட வழிமுறையைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் வரும் ஆண்டும் இதே நாளையொட்டி அதாவது அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளையொட்டி இப்படி ஒரு கட்டுரையை எழுத வேண்டி வருமா? இப்போது உயிரோடு இருக்கும் அம்முதிய பெற்றோரில் எத்தனை பேர் அப்போது உயிருடன் இருப்பார்கள் ?
 

https://globaltamilnews.net/2020/149398/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.