Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ன? - பவானி தம்பிராஜா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ன? -பவானி தம்பிராஜா

பவானி-தம்பிராஜாஓவியம்: டிஷாந்தினி நடராசா

விழிவழியேகும் காதல் விரைந்து நிறைந்து மூட்டிய காதல்த்தீ எழுப்பிய விரகதாபம் காமசூத்திரத்தின் வழியேகி காமனையும் வென்று தணிக்கப்படலாம். அது இருவழிப் பயணமெனில் காதலுடன் காமமும் கலந்த மென்புணர்ச்சியாம். அஃதன்றி தன் உடலிச்சை தீர்க்கவென ஒருவழிப் பயணமாய் வன்புணர்வு செய்பவன் கணவனாய்க் காதலனாய் கண்ணாளனாய் இருந்தாலும் அவன் காமுகனே!

கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பெரும் கவலையையும், பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.

ஏன், பெண்கள் மீது இவ்வாறு வன்முறையாக நடந்துகொள்கின்றனர்? குழந்தைகள் மீதும் பாலியல் வன்முறையில் ஈடுபடக் காரணம் என்ன? இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்.

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிப்பதற்கான காரணம் என்ன? பள்ளி, பணியிடங்கள், பயணங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன.

ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து குற்றச் சம்பவங்களே ஊடகங்களில் வெளிவந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நாளொன்றுக்கு கணக்கற்று பெண்களுக்கு எதிராக பாலியல்ரீதியான குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்பாவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? இல்லை.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யும் கொடூர சம்பவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. குடும்பத்தின் கௌரவம், குழந்தையின் எதிர்காலம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பல விஷயங்கள் வெளியில் தெரியாமலே மூடி மறைக்கப்படுகிறது. அப்படி வெளியில் தெரிகிற ஒரு சில குழந்தைகளின் மரணங்களும் நம்மால் ஜீரணிக்க முடியாத அளவில் இருக்கிறது.

அதுவும், சிறு பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அன்றாட செய்தியாகி விட்டன; மனதை அவை கனக்கச் செய்கின்றன.பள்ளியில் மாணவியரிடம் அத்துமீறும் ஆசிரியர்கள் அசிங்கப்படுவதை, பத்திரிகைகளில் நாள்தோறும் பார்க்கிறோம். நல்லொழுக்கம், சிறந்த கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படி அறிவிழந்து நடந்து கொள்ளலாமா? வீட்டிலே கூட, நெருங்கிய உறவுகளாலும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாலும், பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது, மனம் பதறுகிறது. அதை எழுதவே என் பேனா கூசுகிறது… பெற்ற தந்தையே, தான் தூக்கி வளர்த்த மகளிடம் கொடூரமான செயலைச் செய்வது அக்கிரமத்தின் அநீதியின் உச்சம். மது மயக்கத்தாலும், போதைப் பொருட்களுக்கு அடிமையானதாலும் தான், பெரும்பாலான குற்றங்கள் நடக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் விளைவுகள்: எச்.ஐ.வி / எய்ட்ஸ், இனப்பெருக்க உறுப்புகளுக்கு நிரந்தர சேதம் மற்றும் பாலியல் வன்புணர்வுகளால் ஏற்படும் கர்ப்பம் போன்ற பெரிய உடல் ஆபத்துகளுக்கு மேலாக, பாதிக்கப்பட்டவர்கள் உளவியல் மற்றும் சமூக விளைவுகள், மனச்சோர்வு, பிந்தைய மனஉளைச்சல் பிரச்சினைகள் மற்றும் அவமானங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவாக சமூக விலக்கு ஏற்படுகிறது. மேலும், குடும்பத்தின் மரியாதை பாதிக்கப்படுகிறது, இது வீட்டு வன்முறைக்கு வழிவகுக்கும். அவமானமும் சமூக விளைவுகளும் பெண்கள் அமைதியாக இருக்க காரணமாகின்றன.

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் தாக்குதலால் தீவிரமாக அதிர்ச்சியடையக்கூடும் மற்றும் செயல்படுவதில் சிரமம் இருக்கலாம். உதாரணமாக, அவர்களுக்கு செறிவு கோளாறுகள், தூக்கக் கோளாறுகள் அல்லது உணவுப் பிரச்சினைகள் இருக்கலாம். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர், பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் கடுமையான மன அழுத்தக் கோளாறுகளை அனுபவிக்கிறார், தீவிரமான, சில நேரங்களில் கணிக்க முடியாத உணர்ச்சிகள் போன்ற அறிகுறிகளுடன்,  பாலியல் வன்புணர்வு பற்றிய அவர்களின் நினைவுகளைச் சமாளிப்பது கடினம். தாக்குதல் நடந்த உடனடி மாதங்களில், இந்த பிரச்சினைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும், அவை பாலியல் பலாத்காரத்தை நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் சொல்வதிலிருந்தோ அல்லது பொலிஸ் அல்லது மருத்துவ உதவியை நாடுவதிலிருந்தோ தடுக்கின்றன. கடுமையான மன அழுத்தக் கோளாறின் கூடுதல் அறிகுறிகள் பின்வருமாறு: ஆள்மாறாட்டம் அல்லது விலகல் (உலகம் விசித்திரமானது மற்றும் உண்மையற்றது என்ற உணர்வு) பாலியல் வன்புணர்வின் பகுதிகளை நினைவில் கொள்வதில் சிக்கல் தொடர்ச்சியான எண்ணங்கள், நினைவுகள் அல்லது கனவுகள் மூலம் தாக்குதலை விடுவித்தல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு நினைவூட்டும் விஷயங்கள், இடங்கள், எண்ணங்கள் மற்றும் / அல்லது உணர்வுகளைத் தவிர்ப்பது கவலை அல்லது அதிகரித்த விழிப்புணர்வு (தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை) சமூக வாழ்க்கை அல்லது  பாலியல் வன்புணர்வு இடத்தை தவிர்ப்பது , இந்த அறிகுறிகள் சிலருக்கு முதல் சில மாதங்களுக்குப் பிறகும் தொடர்கின்றன. சிலர் பிந்தைய மனஉளைச்சல் பிரச்சினைகள் மற்றும் அவமானங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக இதுபோன்ற பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.

பெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.

காதல்க் கோரிக்கையை பெண்கள் மறுக்கும் போது பழிவாங்கும் நோக்கில் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தல் அவமானப் படுத்தல் அல்லது அந்தப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்தல் போன்ற நடவடிக்கைகள் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. தனது வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆணுக்குள்ள அதே உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். காதல்த் தோல்விகளை ஏற்றுக் கொண்டு எனக்கும் ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் பொறுமையாய் வாழ்வதற்கு சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். ஒருவரின் உணர்வுகள் அபிலாசைகள் என்பவற்றை புரிந்து கொள்ளவும் மரியாதையான முறையில் மற்றவர்களுடன் பழகவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.

நிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். பாலியல் மற்றும் மென்புணர்ச்சி, வன்புணர்ச்சி பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பாலியல் உந்தல் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. பாலியற் கல்வியூடாக அதை எப்படிக் கையாளுவது என்ற யுக்திகள் மாணவர்களுக்குப் புகட்டப்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் சமமானவர்கள். ஒருவரையொருவர் மதித்து நடக்கப் பழகுதல் அவசியம். சிறுவயதிலிருந்து பெற்றோர்களும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் தத்தமது உடலமைப்பிற்கேற்ற வகையிலும் கௌரவமான முறையிலும் தாங்கள் கலந்து கொள்ளும் வைபவத்திற்கேற்ற முறையிலும் உடையணிவது சிறப்பு.

ஆனால் பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை.  உடை கட்டுப்பாடு இருந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சில காமவெறி கொண்ட கயவர்களால் நடந்து கொண்டு தான் இருக்கிறது இவர்களை தண்டிக்க எப்படி பட்ட சட்டம் இயற்றலாம்? கடுமையான சட்டங்கள் வராதவரை இது போன்ற பலாத்காரம் முடிவிற்கே வராது.

பாலியல் வன்முறை என்பது நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. இதற்கு இன்னும் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். பல விஷயங்களுக்காக நாம் போராடியிருக்கிறோம். எனவே, இந்த குழந்தைகளுக்காகவும் நாம் போராட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது நாம் மெழுகுவர்த்தியை ஏற்றி அஞ்சலி மட்டுமே செலுத்துகிறோம். இதுபோன்ற கொடூர சம்பவங்கள் வரும்காலங்களில் நிகழாமல் இருக்க இதற்கான விழிப்புணர்ச்சி சமூதாயத்தில் ஏற்படுத்தப் பாடுபட வேண்டும்.

இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது குழந்தைகள் அதிலிருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் பயிற்சிகளும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். Good touch, Bad touch குறித்து நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாலியல்ரீதியான விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் குழந்தைகளை நம் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும்.

ஆண்கள் தற்போது மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். படித்தவர்கள், ஏழைகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் தற்போது மது அருந்தி வருகின்றனர். இந்த நாளில், எத்தனை பேர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த குடிப் பழக்கம் ஆண்களை மற்ற குற்றச்செயல்களை எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் செய்யத் தூண்டுகிறது. இதுமட்டுமின்றி, இணையம் முதற்கொண்டு எல்லா இடங்களிலும் பாலியல் தொடர்பான காணொளிகளும் படங்களும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்வகையில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பார்ப்பதும், கைபேசி மூலமாகவே சமூக வலைதளங்களில் முன்பின் அறியாதவர்களோடு எளிதில் தொடர்புகொள்ளக் கூடிய துரித வசதிகளும் ஆண்களுக்கு தவறான எண்ணங்களைத் தூண்டுகின்றன. இதனால் அவர்களுக்கு குழந்தைகளைக் கூட ஒரு வக்கிரப்புத்தியுடன் அணுகும் மனப்பான்மையை வளர்த்து அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கிறது. பாலியல் வன்முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. ஆண்களுக்கு முறையான பாலியல் கல்வி சிறு வயதிலிருந்தே அளிக்கப்படாததும் மற்றொரு காரணம்.

இதுதவிர, நாடு முழுவதும் ஆண்கள் சிலர் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஆண்மைத்தன்மை குறைந்ததாக அவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை தோன்றும். இதனால் பெண்களிடம் தங்கள் ஆண்மையை நிலைநாட்டுவதாக நினைத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுகின்றனர். இந்த வன்முறைகள் வெளிச்சத்துக்கு வருவதே இல்லை. தற்கால கல்லூரி மாணவர்களும், பள்ளிச் சிறுவர்களும்கூட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது, அவர்களுடைய உடல் நலத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் சமூக நோயாகவும் மாறி அடுத்த பாலினத்தின் மீதான வன்முறையில் முடிகிறது.

இதுமட்டுமின்றி, பாதிக்கப்படும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து வெளியே சொல்வதில்லை. நடிகைகள், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தாக்குதல்களை   சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிலர் உள்ளனர். ஆனால் அன்றாடம் செத்து செத்துப் பிழைக்கும் சாமானிய பெண்கள் குறித்து சமூகத்தில் யாரும் பேசுவதில்லை. இதற்குக் காரணம், அவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதேயில்லை என்பதுதான். சமுதாயத்தில் நம்மை தவறாக நினைப்பார்களோ? திருமண வாழ்க்கை என்ன ஆகுமோ?, கணவர் என்ன நினைப்பாரோ?, வேலைபார்க்கும் இடத்தில் விட்டுக்கொடுத்துப் போகவில்லை என்றால் வேலை போவிடுமோ? என்ற பல சூழ்நிலைக்குத் தள்ளப்படுவதால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.

இது தவிர, பெண் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். இதனால் குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. குழந்தைகள் தொலைந்துபோவது வரை அவர்கள் என்ன செய்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்? என்பது தெரிவதில்லை. குழந்தைகளிடம் அறிமுகமில்லாத நபர்கள் மட்டுமல்லாமல், குடும்பத்துக்குள் இருக்கும் நெருங்கிய உறவினர்களே இழிவாக நடந்துகொள்கின்றனர். இதை குழந்தைகள் வெளியே சொல்லத் தயங்குகின்றனர் அல்லது அஞ்சுகின்றனர்.

விடலைப் பருவத்தில் இருக்கும் ஆண்களும், பெண்களும் ஈர்ப்பின் காரணமாக அதை காதல் என்று அர்த்தப்படுத்திக்கொள்வது தவறான நிகழ்வுகளுக்கு அவர்களை இட்டுச் செல்கிறது. பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளுவின் காரணமாக குழந்தைகளின் நடத்தைகளை கவனத்தில் கொள்வதில்லை.

ஆபாச திரைப்படங்கள், அசிங்கமான சமூக வலைதளங்கள் போன்றவற்றை தடுக்க, கடுமையான சட்டங்கள் இல்லாதது தான், இது போன்ற வன்கொடுமைகள் அதிகரிக்க காரணம். அரைகுறை ஆடை அணிவதும், உடல் தெரிய உடை உடுத்துவதும் மட்டுமே, பிரச்னைகளுக்கு காரணம் என, பழியை பெண்கள் மீதே சுமத்துகின்றனர், ஒரு சில ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள். நாகரிகமாக உடை அணிந்தாலும், கண்ணியமாக உடுத்துவது தான் பெண்களுக்கு அழகு, பாதுகாப்பு, அவசியமும் கூட! இதில் மாற்றுக்கருத்தே கிடையாது. அப்படியானால், பச்சிளம் குழந்தைகளிடமும், பள்ளி செல்லும் சிறுமியரிடமும், அவர்களின் உடையிலும், என்ன ஆபாசம் கண்டீர்? பெற்ற பெண்ணின், உடன் பிறந்த சகோதரியின் உடையில் ஆபாசமா அல்லது மன விகாரத்தின் வெளிப்பாடா? மூன்று வயதுக் குழந்தை மீதும் ஏழு வயதுக் குழந்தை மீதும் உங்களுக்கு தவறுதலாக நடந்துகொள்ளத் தோன்றினால் அது உங்களுக்கு ஏற்பட்ட மன நோய். இந்த மன நோய்க்கு மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறுங்கள். இதைத் தவிர்த்து, பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்தாதீர்கள்.

இதுபோன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதன்மூலம் இந்த தவறுகளை சரி செய்ய முடியாது. ஒருமுறை தவறு செய்தவன் மீண்டும் நன்னடத்தையாக நடந்துகொள்வது மிகவும் கடினம். சிறையிலிருந்து வருபவன் மீண்டும் அதே தவறை செய்ய முயல்வான். எனவே, இதற்கு தற்போதுள்ள தண்டையைவிட கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலைக்குப் பிறகும் கண்காணிக்க வேண்டும்.

தீண்டாமையை நல்லொழுக்கமாகக் கருதும் சமூகத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஏன் இயங்க மறுக்கிறதோ, அதே காரணத்தினால்தான், ஆணாதிக்க வன்முறைகளுக்கு எதிரான சட்டங்களும் இயங்குவதில்லை. சட்டம் எதனைக் குற்றம் என்று விளக்குகிறதோ, அதுவே ஆண்மையின் இலக்கணமாக பண்பாட்டால் உயர்த்தப்படும்போது, பெண்ணை துரத்தி மிரட்டிப் பணியவைப்பது கதாநாயகர்களின் சாதனை ஆகிவிடுகிறது.

இந்த சமூகச் சீரழிவை, சட்டத்தின் துணைகொண்டு மாற்றியமைக்க முடியாது. காரணம், அந்தச் சட்டத்தை ஏந்தியிருப்பவர்கள்தான் இந்தச் சீரழிவை விதைத்தவர்கள். இந்தச் சூழலிலிருந்து தனியாக யாரும் பாதுகாப்பு தேடவும் முடியாது. தனித்தனியாக திருத்தவும் முடியாது. குறிப்பிட்ட சமூகச் சூழல்தான் தனிநபர் பண்பாட்டை சீரழித்தது என்றாலும், தனிநபர்களாக அதனை மாற்றிக் கொள்ள இயலாது.

தனிப்பட்ட முறையில் ஆண்-பெண் உறவில் ஜனநாயக விழுமியங்கள் வரவேண்டுமானால், புதிய ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய போராட்டங்கள்தான் ஆண்-பெண் உறவில் ஜனநாயகக் கூறுகளை அமுல்படுத்தும். ஒரு பெண்ணுக்குப் பேருந்திலோ, பொது இடத்திலோ அநீதி நடந்தால் பார்த்துக் கொண்டு செல்லாமல் தலையிட்டுத் தட்டிக் கேட்கும் பண்பை அனைவரிடமும் வளர்க்கும். பெண்களை இழிவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குப் பணிந்து போகாமல், எதிர்த்துப் போராடும் மனவலிமையைத் தரும்.

இதுவரை ஆணாதிக்கமாகத் தெரிந்திராதவற்றை ஆண்களுக்கும், பெண்ணடிமைத்தனமாகப் புரிந்து கொள்ளாதவற்றை பெண்களுக்கும் புரிய வைக்கும் அதிகாரத்தை மக்கள் கையிலெடுப்பதற்குப் பயின்று கொள்ளப் பாடுபட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிகளை முடிந்தவரை விரைவாக தண்ணீர் ஊற்றி அணைப்பதன் மூலம்தான், தனது அதிகாரத்தையும் மேலாண்மையையும் அரசு தக்கவைத்துக் கொள்கிறது. இத்தகைய எழுச்சிகளை இயல்பான நிகழ்வுகளாக மாற்றுவதன் மூலம்தான், இந்த அரசதிகாரத்தைச் செல்லாக் காசாக்கவும், மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் முடியும்.

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதரும் தலை கவிழ்ந்தார்’ என்றார், பெண்மையைப் போற்றிய, எங்கள் பாரதி. ஆனால், வீடுகளில் கூட பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கும் சமூகமும், சட்டமும், அரசும் எப்பொழுது பெண்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்து அவர்களையும் சமமாக மதித்து நடக்கிறார்களோ அன்றுதான் இந்தப் பிரச்சினைகள் ஒரு முற்றுப்புள்ளியை அடையும்.

பவானி தம்பிராஜா -ஹொலண்ட்

 

 

https://naduweb.com/?p=15396

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.