Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகம் பறிபோகிறது- சிங்களக் கட்சிகளின் கூக்குரலும் தமிழர்களின் அரசியல் விடுதலையும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் பறிபோகிறது- சிங்களக் கட்சிகளின் கூக்குரலும் தமிழர்களின் அரசியல் விடுதலையும்!

By
 sharmi
 -
 
5538a5b6-hs.jpg

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ( (Unitary State) நீதித்துறை எப்போதும் சுயாதீனமாகச் செயற்பட்டதாகக் கூற முடியாது.

சில நேரங்களில் சுயாதீனமாகச் செயற்பட்டது என்று கூறினாலும் அது சிங்கள நிலை சார்ந்ததாக அமைந்திருக்கும். ஆனாலும் ஆட்சியாளர்களின் தேவை கருதி சில முக்கியமான சந்தர்ப்பங்களில், சுயாதீனத் தன்மை இழந்ததும் உண்டு.

1999 ஆம் ஆண்டு சந்திரிகா இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறாணி பண்டாரநாயக்கவை மூப்பு நிலைக்கு மாறாக உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்திருந்தார். 

சிறாணி பண்டாரநாயக்க  

அப்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டமே நடத்தியிருந்தனர்- ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அவரை பிரதம நீதியரசராகப் பதவி உயர்த்தியிருந்தார். ஆனால் 2014ஆம் ஆண்டு அவரைப் பலத்காரமாகப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

1999ஆம் ஆண்டு அவரது நியமனத்தை எதிர்த்த ஐக்கிய தேசியக் கட்சி 2014இல் அவருக்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை நிறைவேற்றிப் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை சட்டத்திற்கு மாறானதென நிரூபித்தது.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரம் நாடாளுமன்றத்தை விட உயர்அதிகாரம் கொண்டது எனச் சுட்டிக்காட்டி, மொகான் பீரிஸை பிரதம நீதியரசராக அவசர அவசரமாக நியமத்திருந்தார்.

மாகாண சபைகளின் நிதி அதிகாரங்களை பறிக்கும் சட்டமூலம் ஒன்று தொடர்பான சிறாணி பண்டாரநாயக்காவின் வியாக்கியானம் தன்னுடை நோக்கத்துக்கு மாறானது என்ற காரணத்தினாலேயே அவரைப் பதவி நீக்கி, மொகான் பீரிஸ் மூலமாக அந்தச் சட்ட மூலத்திற்குச் சார்பான வியாக்கியாணத்தை மகிந்த பெற்றிருந்தார்.

தற்போது கோட்டாபய ராஜபக்ச, மீயுயர் நீதிமன்றத் தீர்ப்புகளும் அவசியமில்லை என்ற தொனியில் அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைக்கிறார்.

இலங்கை அரசியல் யாப்பில் ஜனநாயகத்துக்கு முரணான சில சரத்துகள் இருப்பதாக அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர்கள் பலர் ஏலவே கூறியிருக்கின்றனர்.

39 மனுக்கள்   

இவ்வாறான நிலையிலேதான் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 39 மனுக்கள் மீதான பரிசீலனைகள் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த நகல் வரைபு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஆட்சி முறையை மேலும் பலப்படுத்துவதாகவே அமைகின்றது. 

அதாவது 19ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அரச நிறுவனங்களை சுயாதீனமாகச் செயற்பட வைப்பதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் நியமனங்களில் ஜனாதிபதி தலையிடக் கூடிய அல்லது உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிக்கக் கூடிய விதப்புரைகள் நகல் வரைபில் காணப்படுகின்றன.

குறிப்பாக நீதிச் சேவை ஆணைக்குழுக்களுக்கான நியமன விடயங்களிலும் நீதியரசர்கள் நியமன விவகாரங்களிலும் ஜனாதிபதிக்கு நேரடித் தலையீடு செய்யக்கூடிய முறையிலான ஏற்பாடுகள் 20ஆவது திருத்தத்திற்கான நகல் வரைபில் காணப்படுகின்றன.

ஆகவே குறித்த வரைபுக்கு எதிரான 39 மனுக்களையும் தற்போது பரிசீலித்து வரும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், எவ்வளவு தூரத்துக்கு நேர்மையாகவும் தங்கள் மனட்சிக்கு ஏற்பவும் பரிசீலனை செய்வார்கள் என்பது தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

ராஜபக்சக்களின் கடந்தகால நீதித்துறை தொடர்பிலான செயற்பாடுகள் அவ்வாறான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன.

20ஆவது திருத்தச் சட்டத்திற்காகத் தாயரிக்கப்பட்டுள்ள நகல் வரைபு அரசியல் யாப்புடன் ஒத்துப் போகின்றது. அதில் ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறான விதப்புரைகள் எதுவுமே இல்லையென நீதியரசர்கள் தமது தீர்மானத்தில் கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலைமை என்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கும். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் நன்கு தெரியும்.

ஏனெனில் சிங்கள ஆட்சியாளர்களில் ராஜபக்ச மாத்திரமல்ல ஏனையவர்களும் ஆட்சி புரியும்போது நீதித்துறையின் சுயாதீனச் செயற்பாடுகளில் தலையிட்டுத் தமக்கு ஏற்றவாறு நீதித்துறையை மாற்றியமைத்திருந்தனர்.

முன்னாள் நீதியரசர் சிறியாணி பண்டார நாயக்காவின் நியமனத்தை இதற்கு உதாரணமாகக் கருதலாம். பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் மூத்த உறுப்பினர்களுக்குக் கூட அரசியல் யாப்பில் உள்ள முரண்பட்ட தன்மைகள், நீதித்துறையின் சுயாதீனம் அற்ற நிலைகள் குறித்து நன்றாகவே புரியும்.

ஆனால் ஆளும் கட்சியாக மாறும்போது அவை தங்களுக்கும் சாதகமாகத் தேவைப்படும் என்ற நோக்கில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஏதோ ஜனநாயக மீட்பர்கள் போன்று கத்திவிட்டுப் பின்னர் அமைதியாகி விடுவர்.

மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள்  

அதுவும் ஈழத் தமிழர் சார்ந்த விடயங்களில் நீதித்துறை மாறான தீர்ப்புகளை வழங்கும்போது மகிழ்ச்சியோடு அமைதியாக இருப்பார்கள்.

குறிப்பாக 20ஆவது திருத்த வரைபின் மூலம் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணங்களுக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்படவுள்ளமை பற்றி சிங்களக் கட்சிகள் இதுவரை எதுவுமே கண்டித்துக் கூறவில்லை. மாறாக சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் பற்றியே கவலைப்பட்டுப் பேசுகின்றனர்.

அத்துடன் வடக்குக் கிழக்குப் பிரிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், காணி அபகரிப்பு, கைதாகும் இராணுவத்தினர் பிணையில் விடுதலை செய்யப்படுதல், அல்லது பொது மன்னிப்பு வழங்கப்படுதல் போன்ற விடயங்களிலும் அமைதியாக சிங்களக் கட்சிகளும் சிங்களத் தலைவர்களும் இருப்பர். (அப்போது சிங்கள தேசம் என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்) 

வேண்டுமானால் அந்தக் கட்சிகளில் அங்கம் விகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் சும்மா ஒப்பாசாரத்துக்காக ஆவேசமாகச் கத்திட்டு அறிக்கை விடுவர்- அதுவும் அரசியல் நாடகம் என்று சிங்களத் தலைவர்களுக்கும் புரியும்.

ஆகவே தமிழ்க் கட்சிகள் இந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்குள் நின்று கொண்டு சாதாரண கட்சி அரசியலில் ஈடுபடும் அதேவேளை, தமிழ்த்தேசியக் கோட்பாட்டின் அடிப்படையில் இருதரப்புப் பேச்சுக்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான நிலையில் கடந்த ஒரு தசாப்பத காலத்தில் அதற்கான தற்துணிவு தமிழ்க் கட்சிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

குறிப்பாகத் தமிழரசுக் கட்சி 1950-60களில் வெளிக்காட்டிய தமது அரசியல் இயலாமைகளில் இருந்து பாடம் கற்காமல் முப்பது ஆண்டுகால போரின் பின்னரும் மீண்டும் அந்த இயலாமைகளையே தமது மிதவாத அரசியலாகவும் புதிய ஜனநாயகப் பண்பாகவும் கண்பித்து மற்றுமொரு அழிவை நோக்கிச் செல்கின்றதா என்ற கேள்விகளும் எழாமலில்லை.

தற்போது இலங்கை அரசியலில் தீவிரமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரிதாக எதுவுமே அலட்டிக்கொள்ளவில்லை.

ஏனெனில் அது ஈழத் தமிழர்கள் சாந்த விடயமல்ல என்ற கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுமாக இருந்தால், 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆபத்து உண்டு. 

அதாவது காணி, பொலிஸ்துறை சார்ந்த விடயங்களில் தேசிய ஆணைக்குழுக்களை நியமிக்கும்போது ஜனாதிபதி தலையிடுவதும், அந்த ஆணைக்குழுக்களில் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமல் விடுபடக் கூடிய ஆபத்துகளும் உண்டு. ஆனால் அது பற்றியெல்லாம் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவுமே பேசவில்லை.

தமிழ்த் தேசியக் கட்சிகள்   

13ஆவது திருத்தச் சட்டம் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனால் குறைந்த பட்சம் இருக்கின்ற சட்ட ஆவணம் ஒன்றை இல்லாமல் செய்து மேலும் ஒற்றையாட்சி முறையை பலப்படுத்துகின்ற திட்டத்திற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் துணைபோக முடியாது.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபை தற்போது எதிர்க்கும் சிங்களக் கட்சிகள் அது நடைமுறைக்கு வந்ததும் அமைதியாகி விடுவார்கள் ஏனெனில் பிரதான சிங்கள கட்சிகளைப் பொறுத்தவரை மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அது தமக்கு வசதியாக இருக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

அத்துடன் ஈழத் தமிழர் விவகாரத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டமும் அதன் கீழான மாகாண சபை முறைகளும் இல்லாமல் போக வேண்டும் என்ற விருப்பம் அனைத்துச் சிங்களக் கட்சிகளுக்கும் உண்டு.

ஆகவேதான் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த விடயத்தில் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு, மக்களை ஒரு அணியாகத் திரட்ட வேண்டிய காலம் இது. தேசம் என்பதை நிறுவுவதற்கான சூழல் இது. 

ராஜபக்சக்களிடம் இருந்து தமக்கான ஜனநாயக உரிமைகள் பறிபோகின்றன என்று ஏனைய சிங்களக் கட்சிகள் கூக்குரல் எழுப்பும்போது, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் விடுதலையை இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்து பிரிந்து சுயாமாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற குரலை சர்வதேசத்தில் ஓங்கச் செய்ய வேண்டும். அதற்கான காலமும் இதுவே.  

https://samugammedia.com/democracy-is-eroding-the-cry-of-sinhala-parties-and-the-political-emancipation-of-tamils/?fbclid=IwAR3vb2KwA9DTkzIKfDvsYDI6fwLEQPKIm39yElIz9ZZ2NYOYa6eNp5W19A4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.