Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை

-ஆர்.ராம்-

2020பொதுத்தேர்தலின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த சேனாதிராஜா சுமந்திரன் ‘அணி’ முரண்பாடுகளும், அதனால் அக்கட்சியின் தலைவராக இருக்கும்  மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், சுமந்திரன், சிறிதரன் போன்றவர்களுக்கும்  இருந்த ‘அரசியல் உறவில்’ ஏற்பட்ட ‘வெடிப்புக்களும்’ பகிரங்கமானவை. 

spacer.png

சேனாதிராஜா தேர்தலில் பின்னடைவுகளைச் சந்தித்திருந்த சொற்பகாலத்திலேயே தமிழரசுக்கட்சியின் தலைவர் பாத்திரத்திலிருந்தும் அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் இருந்தும் அகற்றப்படவுள்ளரா? என்ற சூழல் ஏற்பட்டிருந்தது. இத்தருணத்தில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று பதிலுரைத்து அவர் வீறு கொண்டு எழுவதற்கு, திலீபனின் நினைவேந்தல் அடித்தளமிட்டது. 

திலீபனின் நினைவேந்தலுக்கு அரசதரப்பால் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட தடைகளுக்கு எதிராக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்ட தளத்திற்கு கொண்டுவருவதற்கு சேனாதிராஜா என்ற தனி மனிதனின் ‘அரசியல் முதிர்ச்சியைக்’ கடந்த கீழிறங்கிச் செல்லும் மனோநிலையே வித்திட்டது.

இது, ஒருவேளை அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கான காய்நகர்த்தலாக இருக்குமோ என்ற ஐயப்பாடு வலுத்திருந்த நிலையில், திலீபனின் நினைவேந்தலைத் தொடர்ந்தும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பதற்குரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அது காலத்தின் தேவையும் தான். 

சேனாதிராஜாவின், விருப்பிற்கு சி.வி.கே.சிவஞானம் செயல்வடிவமளிக்க தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆகியவற்றுக்கு நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் ஒருங்கிணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைக்கப்பட்ட தரப்புக்களின் ஒன்றான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திலீபனின் நினைவேந்தலுக்கான ஒட்டுபட்ட செயற்பாடுகளின் பின்னர் ஒருங்கிணையும் தளத்தில் பிரசன்னமாகுவதற்கு விரும்பவில்லை. ‘கொள்கை’ முரண்பாட்டை வலுவான காரணமாக முன்வைத்தது. 

அதுமட்டுமன்றி, முன்னதாக “தாம் மாற்றுத் தலைமையாக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த தேர்தலில் கூட்டமைப்பில் பிளவடைந்த தரப்புக்கள் ஒருங்கிணைந்து போட்டியிடுகின்றன. தேர்தல் நிறைவடைந்ததும் அவை மீண்டும் ஒன்றிணைந்து விடும். சம்பந்தன் அணிக்கும் விக்கி அணிக்கும் வேறுபாடுகளே இல்லை” என்று பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர் கஜேந்திரகுமார். 

தற்போதைய சூழலில்  ‘தான் முன்பே கூறிய விடயங்கள் செயல்வடிவம் பெற ஆரம்பித்திருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்த அனைத்து தமிழ்க் தரப்புக்களும் மீண்டும் ஒன்றுபடுகின்றன. இந்த தரப்புக்கள் அனைத்துமே ‘கொள்கை’ விடயத்தில் ‘மோகமும் கொழுக்கட்டையும்’ தான். அந்தவகையில் ஒருங்கிணைந்த கட்சிகளுடன் தாமும் இணைவது சாத்தியமல்லாத விடயமென்றும் தடலாடியாக கூறிவிட்டார் கஜேந்திரகுமார். 

கஜேந்திரகுமாரின் இத்தகைய பிரதிபலிப்பால் அவர் தரப்பு தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக்  தரப்பினரின் பிரசன்னத்துடன் அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெற்றன.   இதேநேரம், பொதுத்தேர்தல் பிரசாரத்தின்போதும், தேசியப்பட்டியல் விடயத்திலும் சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் ஏற்பட்ட ‘மோதல்’ சேனாதிராஜாவுக்கு தமிழரசுக்கட்சிக்குள்ளும், வெளியிலும் ஆதரவுக்கரங்கள் நீளுவதற்கு வழிவகுத்திருந்தது. 

spacer.png

குறிப்பாக, சேனாதிராஜா, சுமந்திரன் மோதலே தமிழரசுக்கட்சியின் வவுனியா மத்திய குழுக் கூட்டத்தில் சேனாதிராஜாவுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கவும், செயலாளரை பதவி துறக்கும் முடிவெடுப்பதற்கான அழுத்தங்களையும் ஏற்படுத்தியிருந்தது. சுமந்திரனுடனான மோதலே தனக்கு பலமான தளமொன்றை அமைத்;திருகின்றது என்பதை தமிழ் இளைஞர் பேரவையின் ஊடாக பிரவேசித்து தற்போது வரையில் விடுதலை அரசியல் செயற்பாட்டிலிருக்கும் சேனாதிராஜா உணராதவர் அல்ல. 

எனினும் சேனாதிராஜா, சுமந்திரனின் சிறுப்பிட்டி விருந்துபசார நிகழ்வில் பங்கேற்றார். ஒற்றுமைக்காகவே கசப்புக்களை கடந்து சென்றதாக கூறினார். சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், பரஞ்சோதி, கே.வி.தவிராசா, சரவணபவன், உட்பட பல கிழக்கு உறுப்பினர்கள் என்று சேனாதிராஜாவின் அணியில் இருந்த அனைவரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தனர். அமைதி காத்தனர். செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நின்றனர்.  

தமிழரசுக்கட்சிக்குள் இவ்விதமான நிலைமை இருக்கையில் ஒருங்கிணைந்த தமிழ்க் கட்சிகளுக்கும் சேனாதிராஜாவின் மீதான நம்பிக்கை குறித்து தர்மசங்கடமொன்று ஏற்பட்டது. அதுமட்டுமன்றி இறுதியாக இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவுக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்  பிரசன்னமாகினர். 

குறிப்பாக சுமந்திரன், ஸ்ரீதரன் பிரசன்னமாகினார்கள். இதில் சுமந்திரன் விசேட அதிரடிப்படை பாதுகாப்புடன் பிரசன்னமாகியதால் ஏற்பட்ட ‘ஒவ்வாமை’ காரணமாக கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே அனந்தி சசிதரன் திடீரென வெளியேறினார். ஏனைய தரப்பினர் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். 

கட்சித்தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக்கப்பட்டார்கள் என்ற தர்க்கம் அனந்தியால் முன்வைக்கப்பட்டது. ஏனைய தரப்புக்களும் சேனாதிராஜாவிடம் விளக்கம் கோர முஸ்தீபு செய்தன. 

அதேநேரம், சிறிகாந்தாவும், சுமந்திரனும் முன்பின்னாக மண்டபத்திற்குள் பிரவேசித்தமை கூட சந்தேகத்துடன் நோக்கப்பட்டது. தனது முயற்சியில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் தளத்தில் இந்த அளவிற்கு ‘சுமந்திரன் வெறுப்பு’ மனோநிலை இருக்கின்றது என்பதை சேனாதிராஜா அப்போதாவது உணர்ந்திருப்பாரோ தெரியவில்லை. 

கிழக்கு மாகாணத்தினையும் உள்ளீர்ப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள் என்று கேள்விக்கணைகளுக்கு முன்னதாகவே சேனாதிராஜா தன்னிலை விளக்கம் அளித்துவிட்டார். அதேநேரம், அந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறும் ‘பார்வையாளர்களாகவே” பங்கேற்று சென்றிருந்தார்கள்.  

இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கடந்து ஒருவாறு ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் நிறுவன ரீதியாக கட்டமைப்பொன்றை ஸ்தாபிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதென தீர்மானித்தன. அந்தக்குழு கூடி கட்டமைப்பு உள்ளிட்ட இதர செயற்றிட்டங்களை வெளிப்படுத்துவது தான் அடுத்த கட்டச் செயற்பாடாக இருக்கின்றது. 

நிலைமைகள் சுமூகமடைந்தன என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் அடுத்து நடைபெற்ற நிகழ்வுகள் மீண்டும் தமிழ்த் தேசிய பரப்பில் குட்டையை குழப்பியிருக்கின்றன. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களான சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சந்திப்பொன்றை நடத்தியிருக்கின்றனர்.

spacer.png

இதன்போது, கூட்டமைப்புக்கு வெளியே உருவாகிவரும் தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கூட்டமைப்பிற்குள் உள்ளீர்ப்பதே பொருத்தமானது. அதுவே கூட்டமைப்பினையும் வலுப்படுத்தும் என்று சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவுரை வழங்கியதாக தகவல். 

அதுமட்டுமன்றி ‘அவர்கள்’ மக்களால் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்பதையும் கூட்டமைப்பின் தலைவர் சேனாதிராஜாவுக்கு சுட்டிக்காட்டியிருக்கின்றார். இருந்தபோதும், ‘ஒருங்கிணைந்த கட்சிகளை மையப்படுத்தி கூட்டொன்றை அமைக்கும் செயற்பாட்டை கைவிடப்போவதில்லை’ என்று சேனாதிராஜா திடமாக பதிலளித்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் பொறுத்தவரையில், தமிழர் தரப்பு ஒற்றுமையை அவர் விரும்பினாலும், அந்த ஒற்றுமை என்பது கூட்டமைப்பு என்ற வட்டத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதையே அதிகமாக விரும்புகிறார். 

ஆகவே தனது ‘தலைமைக்கு’ சமாந்தரமாக கூட்டமைப்பிற்கு வெளியில் ‘தலைமையொன்று’ உருவாகுவதை அவர் நிச்சயமாக விரும்பமாட்டார் என்பதை உய்த்தறிந்து கொள்ளலாம்.  ஆகவே கூட்டமைப்பிற்கு வெளியில், பிறிதொரு அரசியல் கூட்டும் தலைமையும் உருவாகமல் தடுப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ளாது அமைதியாக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. 

அவ்வாறானால் சம்பந்தன் என்ன செய்வார் அவருக்குள்ள தெரிவுகள் என்ன என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்… 

 

https://www.virakesari.lk/article/93974

10 hours ago, கிருபன் said:

அவ்வாறானால் சம்பந்தன் என்ன செய்வார் அவருக்குள்ள தெரிவுகள் என்ன என்பதை அடுத்தவாரம் பார்ப்போம்… 

நிலைமை இவறிருக்க சீன ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதியுடன் ஸும் தொழிநுட்பம் வாஜிலாக கதைத்துளார். எப்பவாம் மோடியார் கதைப்பார்?. அப்படி பொத்தானை அழுத்தி கதைக்க இவளவு நாளாகுதே?. இதோ அழைப்பு வருது தோரணம் கட்டவேணும் என்று எழுதித்தள்ளின பத்திரிகையாளர்கள் இப்ப உட்பூசல் பற்றி வாராந்த கட்டுரை எழுத போட்டினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியான பத்தியின் தொடர்ச்சியாக…, 
 

சம்பந்தனைப் பொறுத்த வரையில் பங்காளிக்கட்சிகளை தன்னுடன் வைத்திருப்பதன் மூலம் கூட்டமைப்புக்கு வெளியே உருவாகின்ற கூட்டுக்கு ‘செக்’ வைக்க முடியும் என்று கருதலாம். அதாவது, தற்போதைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும், கொறடா பதவியையும் பங்காளிக்கட்சிகளான புளொட்டும், ரெலோவும் கோரிக்கொண்டிருக்கின்றன. இந்தப்பதவிகளை புளொட்டினதும் ரெலோவினதும் கோரிக்கைக்கு இசைந்து வழங்குவதன் மூலமாக அத்தரப்புக்களை தம்முடனனேயே நிலைநிறுத்த முடியும் என்ற ‘அரசியல் கணக்கிற்கு’ சம்பந்தன் செயல்வடிவம் கொடுக்க முனையலாம்.

spacer.png

பங்காளிக்கட்சிகளின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமாகின்றபோது, அவையும்,  தாம் முன்வைத்த நிபந்தைகளுக்கு சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சி ‘சரண்’ அடைந்து விட்டது என்ற மனோ நிலையில் எதிர்காலத்திலும் அதே மூலோபயத்தினை பயன்படுத்தி ‘பிடியை’ இறுக்கமாகக் கொண்டு கூட்டமைப்பை நகர்த்திச் செல்லமுடியும் என்ற பெருநம்பிக்கையை தமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும். 

அத்துடன் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக ‘கூட்டமைப்பு’ என்ற ‘பாதுகாப்பு வளையமும்’ பங்காளிக்கட்சிகளுக்கு மேலும் உறுதியாகுவதுடன், ஒவ்வொரு  தேர்தல்களிலும் தலையிடியாக இருக்கும் ஆசன ஒதுக்கீடுகளையும் நியாயமாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்ற மனோநிலையையும் அவற்றுக்குள் தோற்றம் பெறச் செய்யும். இவ்விதமான நிலையால் பங்காளிக்கட்சிகளும் ‘கூட்டமைப்புக்குள்ளேயே’ தொடர்ந்தும் பயணிப்பதற்கான அதிக விருப்பினையே கொண்டிருக்கும்.  

அதுமட்டுமன்றி சம்பந்தன் உள்ளிட்டவர்களின் விருப்பினை பிரதிபலிக்கும் முகமாக சேனாதிராஜாவின் கூட்டமைப்புக்கு வெளியிலான கூட்டணி நகர்வுகளுக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஊடாக பங்காளிக்கட்சிகளும் ‘முட்டுக்கட்டைகளை’ போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அதேநேரம், பங்காளிக்கட்சிகளை தம் வசப்படுத்துவதற்காக சம்பந்தன் மேற்படி நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் ஊடகப்பேச்சாளர் பதவியை ‘அண்மைக்கால அரசியல் நண்பர்’சிறிதரனுக்கே வழங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ள சுமந்திரனையும், ஊடகப்பேச்சாளர், கொறடா ஆகிய இரண்டு பதவிகளையும் பங்காளிகளிடத்தில் வழங்கமுடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் சிறிதரனையும் சாந்தப்படுத்த வேண்டிய நிலையொன்று அவருக்கு ஏற்படும். அந்த ‘சாந்தப்படுத்தல்’ எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியும் உள்ளது.

ஏனென்றால், மூன்று தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானமை, இரண்டு தடவைகள் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றமை, பாராளுமன்ற அரசியலில் சம்பந்தனுக்கு அடுத்தாக ‘அரசியல் சிரேஷ்டத்துவத்தினை’ (தற்போதைய தமிழரசுக்கட்சியின் சார்பில்) கொண்டிருக்கின்றமை ஆகிய பெருமைகளை சிறிதரன் கொண்டுள்ளார். அத்தகையவர்,  தன்னை நோக்கி வந்துள்ள ஊடகப்பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. 

அத்துடன் சுமந்திரனும் தனது முன்மொழிவு நடைமுறைச்சாத்தியமாகாது இருப்பதையும் விரும்பமாட்டார். அவ்வாறு விட்டுக்கொடுப்பற்ற நிலைமைகள் ஏற்படுகின்றபோது புதிய பதவி நிலைகளை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு கோரப்படும். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவைப் பொறுத்தவைரயில் சிறிதரன், சுமந்திரன் அணி பக்கமே ‘பெரும்பான்மை’ உள்ளமையையும் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

ஆகவே நிலைமைகள் மோசமடைந்து வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு சம்பந்தன் நிச்சயம் இடமளிக்கமாட்டார் என்று நம்பலாம். அப்படியென்றால் தனது ‘அரசியல் சீடரான’ சுமந்திரனின் முன்மொழிவு ஒருபக்கம், தன்னுடைய தலைமைக்கான ‘தனித்துவம்’ மறுபக்கம். இதில் எதனை தக்கவைப்பதென்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து எவ்வாறு மீள்வதென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சமான விடயம். 

அடுத்து இடம்பெற்ற மற்றொரு விடயம் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு சேனாதிராஜா நியமிக்கப்பட்டமை. உள்ளுராட்சி மன்றங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் கூட்டமைப்பின் பங்காளிகள் சகிதம் கூட்டமொன்று இடம்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் திடீரென ‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு பதிலளிப்பதற்காக தீர்மானம் எடுக்க வேண்டும்’ என்ற கூற்று பிரதான பொருளானது. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதானால் அதன் தலைவர், செயலாளர் யார் என்ற பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருப்பதாக’ சி.வி.கே.சிவஞானம் ஆவணம் சகிதம் வெளிப்படுத்தினார். 

‘தலைவர் சம்பந்தனாக இருக்கையில் செயலாளர் ஒருவர் கூட்டமைப்புக்காக நியமிக்கப்பட வேண்டியுள்ளது என்ற கோரிக்கையை’ முன்வைத்த அவர் ‘அதற்கு சேனாதிராஜாவே பொருத்தமானவர்’ என்றும் முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும் எதிர்பார்த்திருக்காத போதும் அதனை ஏகமனதாக ஆமோதித்தனர். தமிழரசுக்கட்சியின் தற்காலிக செயலாளராக உள்ள வைத்தியர்.சத்தியலிங்கமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டமைப்பிற்கான திடீர் செயலாளர் அறிவிப்பை இட்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். காரணம், அவர் இந்த விடயத்தினை முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் சிலவேளை அவர் சார்ந்தோரின் அறிவுரைகளைப் பெற்றாவது ‘சட்டரீதியான தர்க்க வாதங்களை முன்வைத்து நியமனத்திற்கான தடுப்புக்களை’ போட்டிருப்பார். இல்லை ‘நமக்கேது வம்பு’ என்று கூட்டத்தில் பங்குபற்றாது நழுவியிருப்பார். எனினும் அந்தக் கூட்டத்தின் திரைமறைவு நிகழ்ச்சி நிரலை அறியாமை அவரது துரதிஷ்டம் தான், 

அத்தகைய நிலையிலிருந்த சத்தியலிங்கம், கூட்டமைப்புக்கான செயலாளர் நியமனம் இடம்பெற்றபோது ‘சேனாதி அண்ணன் இதுபற்றி சொல்லவே இல்லையே, நான் செயலாளராக இருந்து என்ன செய்வது’ என்று மனக் குமுறல் அடைந்திருக்கின்றார். அதனை கூட்டம் முடிந்த வேளையோடு நெருங்கியவர்களிடத்தில் அவ்வாறே பகிர்ந்தும் இருக்கின்றார். சத்தியலிங்கத்தின் நிலைமை அவ்வாறிருக்க, கூட்டமைப்பினுள் தமிழரசுக்கட்சியானது ‘தான்தோன்றித்தனமாகச்’ செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கும் பங்காளிக்கட்சிகள் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு சேனாதிராஜா முன்மொழியப்பட்டபோது அதனை சற்றும் மறுதலிக்காது ஏகமனதாக ஆதரித்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் ‘எதுவுமில்லை’ என்று கொள்ள முடியாது.  

கட்டமைக்கப்படாத கூட்டமைப்பிற்கு ‘செயலாளர்’ என்ற ‘கௌரவ வேடத்தினை’ தரிப்பதை விடவும் அதனை தமிழரசுகட்சிக்கு வழங்குவதன் மூலம் குழப்பிப்போயிருக்கும் குட்டை மேலும் குழம்பும் என்று பங்காளிக்கட்சிகள் கருதியிருக்கலாம். அவ்விதமான குழப்ப நிலைமை ஏற்படுகின்றபோது கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் அகன்றுவிடும் என்றும் பங்காளிக்கட்சிகள் கணக்குப்போட்டிருக்கலாம்.

பங்காளிகள் அவ்விதமான கணக்கினையே போட்டிருக்கின்றன என்பது அதற்கு அடுத்து நடைபெற்ற விடயங்களுடன் இணைத்துப் பார்க்கையில் கனகச்சியதமாக இருக்கின்றது. ஏனெனில் கூட்டமைப்பு சார்ந்த நியமனங்கள் அனைத்தும் அதன் ஒருங்கிணைப்பு குழுவிலேயே தீர்மானிக்கப்படுவது வழமை. அவ்வாறிருக்க, கூட்டமைப்பின் தலைமைக்கும், தமிழரசுக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களுக்கும் முன் அறிவிக்கப்படாதே செயலாளர் நியமனம் இடம்பெற்றுள்ளது. 

ஆகவே இந்த நியமனம் நிச்சயமாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதை செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சேனாதிராஜா சில மணிநேரங்களிலேயே உணர்ந்துவிட்டார். அதன் வெளிப்பாடாக, சுமந்திரனை சந்திப்பதற்கு அன்றே முனைந்திருந்தார். இருப்பினும் அது சாத்திமாகது போகவும் மறுதினமும் முயற்சித்திருக்கின்றார். மரணச்சடங்கு மற்றும் சொந்தக் கிராமத்திலும் அதனை அண்மித்த பகுதிகளுக்குமான களப்பயணங்களில் ஈடுபட்டிருந்த சுமந்திரனால் நேரகாலத்துடன் யாழ். திரும்ப முடிந்திருக்கவில்லை. 

இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டாவது நாளில் சுமந்திரனை அவருடைய யாழ்.இல்லத்தில் வைத்து சந்தித்தார் சேனாதிராஜா. சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் மட்டுமே முதலில் கலந்துரையாடல் ஆரம்பித்திருந்தபோதும், பிறிதொரு காரணத்திற்காக சுமந்திரனின் ‘அரசியல் நண்பரான’ சிறிதரன் அங்கு சென்றமையால் அவரும் அச்சந்தப்பில் பங்கேற்றார். 

அதுமட்டுமன்றி, சுமந்திரனுடனான நட்புவட்டத்தினை கிளிநொச்சி தாண்டி மன்னார் வரையில் விஸ்தரிப்பதற்கு சிறிதரன் விரும்பியிருந்தார். அதனால் தனது நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் சுமந்திரனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். நட்பு வட்டத்தினை பெரிதாக்குவது என்பதற்கு அப்பால், சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான கீறல்களை ஆற்றுப்படுத்துவது தான் சுமந்திரன் இறுதி இலக்காக இருந்தது.

ஏனென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுமந்திரன் மன்னாருக்கு வரவே கூடாது, அவர் தோன்றும் அரசியல் மேடைகளில் பங்குபற்றவே மாட்டேன் என்று திடசங்கற்பம் பூண்டிருந்தவர் சாள்ஸ் நிர்மலநாதன். அவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கும் சாள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரனுடன் தொடர்ந்தும் முரண்பட்டே இருப்பாராயின் தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அவர் முட்டுக்கட்டையாகி விடலாம் என்று எண்ணியே ‘சுமந்திரன், சாள்ஸ்’ புத்துறவை ஏற்படுத்த விளைந்திருக்கின்றார் சிறிதரன். அவர் அதில் வெற்றியும் கண்டுவிட்டார் என்பது வேறுகதை. 

இந்நிலையில், சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சாள்ஸ் ஆகியோர் கூடிப்பேசலாயினர். முதலில் சேனாதிராஜா மும்முரமாக நின்று கூட்டமைப்புக்கு வெளியில் உருவாக்கிவரும் கூட்டணியை தாம் விரும்பவில்லை என்று சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் ஆகிய மூவரும் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றனர். 

வடக்கில் மக்களால் தெரிவாகியுள்ள தங்கள் மூவரையும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளுடன் இணைத்துச் செயற்பட விரும்பவில்லை என்றால் கட்சி உறுப்புரிமையை துறந்து விடுகின்றோம் என்று சிறிதரன் உள்ளிட்டவர்கள் கூறுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. 

அதுமட்டுமன்றி, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் சபைகளை கூட்டமைப்பின் தலைமையில் அமைப்பதற்கு உங்களுடன் (சேனாதிராஜாவுடன்) இணைந்து பணியாற்றிய என்னை, புறக்கணித்து அது குறித்து கூட்டமொன்றை நடத்தியமைக்கான காரணத்தினை கூறுமாறு சுமந்திரன் கோரியிருக்கிறார்.

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களான தம்மை புறக்கணித்து அக்குழுவிலே உறுப்புரிமை இல்லாதவர்களின் பங்கேற்புடன் எவ்வாறு ஒருங்கிணைப்புக்குழுவை நடத்த முடியும். அதில் முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும்  அடுக்கடுக்காக சேனாதிராஜவிடத்தில் எழுப்பட்டன.  எனினும், தேர்தல் காலத்தில் நடைபெற்ற ‘கசப்பான’ செயற்பாடுகளை மீள நினைவுபடுத்திய சேனாதிராஜா சுமந்திரன் மற்றும் அவரது அணிமீது பலமான குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறே இருந்திருக்கின்றார். ‘கசனப்பான விடங்களை பட்டியலிடுங்கள்’ என்று சுமந்திரன் தரப்பில் இறுக்கமாக கோரப்பட்டபோதும் சுட்டிக்காட்டும்படியாக எவ்விதமான விடயங்களையும் சேனாதிராஜா வெளியிட்டிருக்கவில்லை.  

அதேநேரம், தமிழரசுக்கட்சியின் செயலாளரே கூட்டமைப்பினதும் செயலாளராக இருப்பார் என்று 2010ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியேறி உள்ளது. புளொட் உள்ளே வந்துள்ளது. ஆகவே தான் தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதுபற்றி ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்தேசப்பிரிய தன்னுடனும் பேசியதாக சேனாதிராஜாவிடத்தில் கூறிய சுமந்திரன் ‘புதிய செயலாளரை’ தேர்தல்கள் ஆணைக்குழு கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.  

அது சேனாதிராஜாவை சிந்திக்க வைக்கவும், ஈற்றில், வழமைபோன்றே ‘சரி தம்பி நாங்கள் திரும்பவும் பேசுவோம். ஒன்றாய் செயற்படுவோம். யாழ்.மாவட்ட உள்ளுராட்சி சபைளை பற்றி கலந்து பேச வேண்டியுள்ளது. அதற்கு வந்து விடுங்கள்’ என்று கடுமையான நிலைமைகளை தணித்த அவர் கூட்டமைப்புக்கு வெளியே உருவாகும் ‘கூட்டணி’ தொடர்பில் தீர்க்கமாக எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை. இந்த சந்திப்பின் பிற்பாதியில் சேனாதிராஜாவின் புதல்வர் கலைஅமுதனும் ‘தந்தையின்’ அழைப்பில்’ அவ்விடத்திற்கு வந்ததாகவும் தகவல்.

அதன் பின்னர் யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் நிலைமைகள் தொடர்பில் சுமந்திரன், சிறிதரனின் பிரசன்னத்துடன் கூட்டம் நடைபெற்றிருந்தது, கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட அதே விடயங்களே மீளவும் பேசப்பட்டதால் செல்வம், சித்தார்த்தன் ஆகியோருக்கு அது ‘முகச்சுழிப்பை’ ஏற்படுத்தியிருக்கின்றது. எவ்வாறாயினும், கூட்டமைப்பின் கௌரவப் பதவியை ஏற்ற சேனாதிராஜாவுக்கு அவரது கட்சிக்குள்ளிருந்தே மெல்லென ‘அழுத்தங்கள்’ ஆரம்பித்துவிட்டன. அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுக்க முழுக்க சுமந்திரனுடன் இணைக்கப்பாட்டிற்குச் சென்று அணியாகிவிட்டதையும் சேனாதிராஜா இனியும் உணராதிருக்க வாய்ப்பில்லை. 

சுமந்திரனின் சிறுப்பிட்டிக் கூட்டத்திற்குச் சென்றதால் தன்னுடன் இருந்தவர்களுக்கு மனக்கசப்பு, கூட்டமைப்புக்கு வெளியில் கூட்டணி அமைப்பதை சம்பந்தன் விரும்பான்மை, செயலாளர் பதவியை முறையின்றி பெற்றதால் சுமந்திரன் அணியின் அழுத்தம் என்று சேனாதிராஜாவின் நிலைமை தற்போது இடியப்பச்சிக்கலாவிட்டது. இந்த நிலைமையில் இருந்து எவ்வாறு மீள்ப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துவருகையில் அவர் மற்றுமொரு ‘அரசியல் பொறிக்குள்’ சிக்கும் நிலைமை  ஏற்பட்டுள்ளது.

அதாவது, கூட்டமைப்பிற்கு வெளியில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்த்த் தேசியக்  கட்சிகளின் ‘ஐக்கிய அணிக்கான’ கட்டமைப்பினை உருவாக்கும் உறுப்பினர்கள் குழு விரைவில் கூடவுள்ளது. அக்குழு கூடுகின்றபோது ‘ஐக்கிய அணிக்கு’ தலைவர், செயலாளர், பொருளாளர், அரசியல் பீடம் உள்ளிட்ட பதவி நிலைகளை ஸ்தாபிக்கப்பட வேண்டி சூழல் உருவாகும். அத்தகையதொரு சூழலில், தமிழரசுக்கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் செயலாளர் ஆகிய பதவிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் சேனாதிராஜாவுக்கு ஒருங்கிணைந்துள்ள ஐக்கிய அணியின் தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது தான் பிரதான கேள்வியாகின்றது. 

சேனாதிராஜா கூட்டமைப்பின் செயலாளர் பதவியைப் பெற்றதன் பின்னர் அவர் மீதான ‘அரசியல் நேர்மைத்தன்மை’ தொடர்பில் ஐக்கியத்திற்காக ஒருங்கிணைந்துள்ள தரப்புக்கள் மனச்சஞ்சலம் அடைந்திருக்கின்றன. அத்தகைய தரப்புக்கள் தலைமைத்துவ பாத்திரத்தினை சேனாதிராஜா ஏற்பதற்கு இலகுவாக  ஒத்திசைந்து அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஐக்கியத்திற்காக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் சேனாதிராஜா களமிறங்கியபோது ‘அவரே தலைவர்’ என்ற மனோநிலையே அனைவரிடத்திலும் இயல்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த  நிலைமையில் பலத்த மாற்றம் ஏற்பட்டு விட்டது. தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவை ‘தமிழ்த் தேசிய கட்சிகளின் ஐக்கிய அணிக்கான’ தலைமைப் பொறுப்புக்கு உகந்தவர் என்று சி.வி.விக்கினேஸ்வரன் முன்மொழிந்திருக்கின்றார். 

இது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவு. இதனைவிட திரைக்குப்பின்னால் எத்தகைய முன்மொழிவுகள், திட்டங்கள் இருக்கின்றன என்பது இதுவரை வெளிவராத சங்கதி. தற்போது சேனாதிராஜாவுக்கு ஏறக்குறைய ‘இரட்டைத் தோணியில்’ கால் வைத்த நிலை தான் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் சேனாதிராஜாவும், சும்மா இல்லை. தனக்கு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை போக்கும் ஏக நேரத்தில் ‘ஐக்கிய அணியையும்’ பலப்படுத்துவதற்கும் அதன் ‘தலைமையைப்’ பெறுவற்கும் காய்களை நகர்த்தியுள்ளாராம். 

தமிழரசுக்கட்சிக்கு நிரந்தர செயலாளர் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்காக விரைவில் அக்கட்சியின் பொதுச்சபை கூட்டப்படவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமையை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கி விட்டு செயலாளர் பதவியை தான் தக்கவைத்துக் கொள்வதே சேனாதிராஜாவினுடைய காய்நகர்த்தலின் உள்ளீடாகும். சேனாதிராஜாவின் இந்த பதவிநிலை மாற்றதினை யாரும் கேள்விக்கும் உட்படுத்த முடியாது. ஏனென்றால் கடந்த பொதுச்சபை கூட்டத்தில் தலைவர் வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டதால் செயலாளர் கிழக்கிலிருந்து நியமிக்கப்பட்டார். இம்முறை அது முறையாக மாறியிருக்கின்றது என்று தனது பதவி நிலை மாற்றத்தினை அவர் இலாவகமாக நியாயப்படுத்தவும் முடியும். 

இந்நிலையில் மீன்பாடும் தேன் நாட்டைச்  சேர்ந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) ஒருவர் தலைமைப்பதவிக்காக தயார் படுத்தப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன. தலைவர் தயாராகினாலும் பொதுச்சபை கூட்டத்தில் ‘செயலாளர்’ பதவியை சேனாதிராஜா தக்கவைப்பது தான் அவருக்கு இப்போதுள்ள பெரும்சவால்.

ஏனென்றால் தமிழரசுக்கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேனாதிராஜாவை ஆதரிப்பார்களா என்பது முதலாவது விடயம். சேனாதிராஜாவின் முன்னெடுப்பில் கூட்டமைப்புக்கு வெளியே பிறிதொரு ‘ஐக்கிய அணி’ உருவாகுவதற்கு அவர்கள் விரும்புவார்களா என்பது இரண்டாவது விடயம். குறிப்பாக, சேனாதிராஜாவுக்கு எதிரான அணியால் கூட்டமைப்பின் ‘முதன்மைத் தானம்’ சிதைக்கப்படுகின்றது என்ற பிரசாரம் செய்யப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் சேனாதிராஜாவின்  நிலைமை ‘அந்தோ பரிதாபம்’ ஆகிவிடும். 

அதுமட்டுமன்றி அவ்வணியால், பொதுச்சபை உறுப்பினர்களில் பலர் அரசியல் அடையாளத்திற்காக காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு மாகாண சபையில் வாய்ப்பு தருவோம் என்ற நம்பிக்கை அவ்வணியால் வழங்கப்பட்டாலும் சேனாதிராஜாவிற்கு ‘இறங்கு முகம்’ தான். ஆக, தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை ‘மையப்படுத்திய’ சேனதிராஜாவின்  ‘ஒற்றைக்கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கும்’ முயற்சி வெற்றி பெற்றால் அது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியலுக்குமே புதிய திருப்பம் தான். 

ஒருவேளை அவரது முயற்சி தோல்வியுற்றால் கூட்டமைப்பும் இல்லை, தமிழ்த் தேசிய ஐக்கிய அணியும் இல்லை என்ற கையறு நிலை அவருக்கு மட்டுமல்ல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய வாக்காளர்களுக்கும் தான் ஏற்படும். இது தமிழ்த் தேசிய அரசியலின் மீதான பெரும் வெறுப்பிற்கும் விரக்திக்கும் மேலும் வித்திட்டுவிடும். ஏற்கனவே மக்களுக்கு எதிர்பார்ப்புக்களை வழங்கி முன்னெடுக்கப்பட்ட ‘அரசியல் சித்து விளையாட்டுக்களால்’ திரிசங்கு நிலையில் இருக்கும் ‘தமிழ்த் தேசிய சித்தாந்தாந்தம்’ தொடந்தும் அதேபோக்கிலேயே சென்றால் தேசிய அரசியல் நீரோட்டத்தில் வேகமாகக் கழுவிச் செல்லப்படும்.

அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தவே அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது, பகை ஒடுங்கி பண்பாடு விளங்க வழி செய்கிறது என்பதை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களுக்கு இப்போதைக்கு நினைவு படுத்திச் செல்ல முடியும்.

-ஆர்.ராம்-
 

 

https://www.virakesari.lk/article/94423

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.