Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும்

-என்.கே. அஷோக்பரன்

முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார்.   

 நிறுவன ரீதியாக ஒன்றுபடுவதற்குத் தடையாக இருக்கின்ற விடயங்களாக, சுயநலத்தையும் அகந்தையையும் குறிப்பிடுகிறார். ‘நாம் ஒவ்வொருவரும், எமது கட்சிகளை மட்டும் மேம்படுத்த, சுயநலத்துடனும் அகந்தையுடனும் உளங் கொண்டிருந்தால், ஒற்றுமை சாத்தியப்படாது. அதனால், எமது மக்கள் பாதிக்கப்படக்கூடும். ஒன்றுசேருவது பற்றி, நாங்கள் பேசிக் கொள்வது, மக்களின் கோரிக்கையின் நிமித்தமே; அவர்களின் நன்மை கருதியே ஆகும். மக்கள்தான், ஒற்றுமையை வேண்டி நிற்கின்றார்கள். ஆனால், எமது கட்சிகள், தமது தனித்துவத்தையும் தலைமைத்துவத்தையும் பாதுகாக்கவே முனைகின்றன’ என்று, அவர் குறிப்பிட்டுள்ளார்.   

கடந்தகாலத்தில், இந்தப் பத்தியினூடாகப் பலமுறை, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அதன் முதற்படி, தேர்தல் கூட்டணியாகவோ நிறுவன மயப்படுத்தப்பட்டதாகவோ இருப்பது அவசியமில்லை என்ற கருத்தையும் உணர்த்தி இருக்கிறேன்.   

இதற்குக் காரணம் இருக்கிறது. நீதியரசர் விக்னேஸ்வரன், தனது பதிலில் சிலபல விடயங்களைத் தொட்டுச் சென்றிருந்தாலும், அனைவர் கவனத்தையும் ஈர்த்த விடயமானது, தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்குத் தலைவராக சட்டத்தரணி ந. ஸ்ரீ காந்தாவை, முன்மொழிந்ததாகும். அதை நியாயப்படுத்தும் அவர், ‘மாவை போன்ற ஒரு முக்கிய கட்சியின் தலைவர், கூட்டுக்கும் தலைமை வகித்தால், சிறிய கட்சிகள் வலுவிழந்து விடும். முக்கிய கட்சியின் கையே ஓங்கும்; அதன் செல்வாக்கே செல்லுபடியாகும். ஆனால், சிறிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டுக்குத் தலைமை வகித்தால், பெரிய கட்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. சிறிய கட்சிகளும் அடையாளம் பெறும். சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்ததையும், எவ்வாறு சிறிய கட்சிகள் அவரால் புறக்கணிக்கப்பட்டன என்பது பற்றியும் யாவரும் அறிவர்’ என்கிறார்.   

விக்னேஸ்வரன் எம்.பி, இங்கு குறிப்பிடும் பிரச்சினையை, உண்மையற்றது என்று ஒதுக்கிவிட முடியாது. இலங்கையின் தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, உருவான கூட்டுகள் சிதைந்தமைக்கு, எண்ணிக்கை சார்ந்து சமனற்ற மக்களாதரவு இல்லாத கட்சிகள் இடையேயான கூட்டணியில், பெரிய கட்சிகளின் வல்லாட்சியிலிருந்து, சிறிய கட்சிகளைப் பாதுகாக்கத்தக்க ‘தடைகளும் சமன்பாடுகளும்’ காணப்படாமை முக்கிய காரணமாகும். அன்று, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியிலிருந்து, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பிரியவும் பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல கட்சிகள் பிரிந்து செல்லவும் இது முக்கிய காரணமாக இருந்தது.  

இந்த இடத்தில், பலமான கட்சிகளின் யதார்த்த சிந்தனையையும் நாம் மறந்துவிட முடியாது. சிறிய கட்சிகள், வாக்குகளுக்காகப் பயணிக்கும் வாகனமாக, தாம் மாறிவிடக் கூடாது என்பது பலமான கட்சியினரின் கவலையாகும். தேர்தல் வெற்றி என்று வரும் போது, அதில், குறித்த கூட்டுக்குள் எந்தக் கட்சியினர் அதிக வாக்குகளைக் கொண்டுவருகிறார்கள் என்ற கேள்வி அல்லது, குறைந்தபட்சம் சிந்தனையாவது எழும்.   

இங்கு, கட்சிக்கான வாக்குகள், விருப்பு வாக்குகள் என்ற இரண்டு விடயங்களையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம். இன்னமும் வாக்காளர்கள், பெருமளவுக்கு கட்சி ரீதியாகவே வாக்களிக்கிறார்கள். ஏலவேயுள்ள கட்சிக் கட்டமைப்பைத் தகர்த்து, தனித்துத் தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெறும் பலம்மிக்க தனித்த ஆளுமை, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலில் இல்லை.   

ஆனால், இன்று பிரிந்து நிற்கும் ஒவ்வொரு தரப்பிலும், ஒன்றிரண்டு நட்சத்திர அரசியல் ஆளுமைகள் இருக்கிறார்கள். இவர்களால் தனித்துப் போட்டியிட்டு, தேர்தல் வெற்றியை உடனடியாக அடையப்பெற முடியாது போனாலும், கூட்டணியாகப் போட்டியிட்டால், இவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார்கள். இந்த நிலையும், பெரிய கட்சியானது பலமான கூட்டணி அமைப்பதில், அக்கறை அற்றிருப்பதற்கு முக்கிய காரணமாகும்.   

பெரிய கட்சிகளின் கருத்துப்படி, தனித்து நின்று வெற்றிபெற முடியாதவர்கள், கூட்டணியாக வெற்றி பெறுகிறார்கள் என்றால், அதற்குத் அவர்களது கட்சி வாக்குகள்தான் காரணம். நாம், மற்றவர்களை வெற்றிபெற வைக்க, ஏன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சிந்தனை, அவர்களுக்கு எழுவது யதார்த்தமானது.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடைபாட்டுக்கு, தமிழரசுக் கட்சியின் வல்லாதிக்கம் முக்கிய காரணமென்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஒவ்வொரு கட்சியினதும் கருத்துகளிலிருந்து புரிந்துகொள்ளக் கூடிய ஒரு விடயம் ஆகும்.   

இன்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியவையாகும். டெலோவின் செல்வாக்கு என்பது, பெரிதும் வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்டது. குறிப்பாக, மன்னார் மாவட்டம் டெலோவின் செல்வாக்குத்தளம். டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், அங்குதான் போட்டியிடுகிறார்; தொடர்ந்தும் வெற்றி பெறுகிறார். தற்போதைய சூழலில், வன்னியைத் தாண்டிய தமது பிரதிநிதித்துவம் பற்றி, டெலோ அவ்வளவு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஆகவே, தேர்தல் அரசியல் என்று பார்த்தால், தமிழரசுக் கட்சிக்கு டெலோவுடனான கூட்டு, ஒரு ‘வெற்றி-வெற்றி’க் கூட்டு. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை பற்றியும் கொள்கைசார் விடயங்கள் பற்றியும் டெலோ அவ்வளவாகக் கரிசனை கொள்வதாகவோ, அதற்காக அடிபடுவதாகவோ தெரியவில்லை. இதுவும் தமிழரசுக் கட்சிக்குச் சாதகமானதொன்று.  

புளொட்டைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய முன்பு, அவர்களது ஆதரவுத் தளம் வவுனியாவாக இருந்தது. ஆனால், அவர்களுக்குத் தேர்தல் வெற்றியென்பது, சிம்மசொப்பனமாக இருந்து வந்தது. கூட்டமைப்பில் இணைந்த பின்னர், புளொட் தலைவர் சித்தார்த்தன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும் வெற்றியை ஈட்டியிருந்தார். இதற்குத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சித்தார்த்தனின் தந்தையார் வீ. தர்மலிங்கத்துக்கு இருந்த தமிழரசுக் கட்சி வாக்குகள் முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஆகவே, கூட்டமைப்பினுடனான இணைப்பு என்பது, புளொட்டுக்குத் தேர்தல் வெற்றியைச் சாத்தியமாக்கியது. அவர்கள் அதுபோதும் என, தலைமைத்துவச் சண்டைகளில் ஈடுபடாது அமைதியாக இருக்கிறார்கள்.   

தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, மூன்று கட்சிகளாவது இல்லாவிடில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது, அர்த்தமற்றது ஆகிவிடும். ஒப்பீட்டளவில் புளொட், தமக்கு இடைஞ்சல் குறைந்த கட்சியாக இருப்பதால், இதுவும் இரு கட்சிகளுக்கும் ‘வெற்றி-வெற்றி’க் கூட்டாகவே இருக்கிறது.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கொள்கை முடிவெடுத்தாலும், இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டாலும், அது தமிழரசுக் கட்சியின் முடிவாகவே இருப்பது ‘வௌ்ளிடைமலை’. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திரிகளுடனான எத்தனை சந்திப்புகளில், டெலோ, புளொட் தலைவர்களைக் காணக் கூடியதாக இருக்கின்றது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின், எத்தனை கொள்கை முடிவுகளில், டெலோ, புளொட் தலைவர்கள் பங்களித்திருக்கிறார்கள்? ஆனால், இவை பற்றி அவர்களே அக்கறை கொள்ளாததுதான், இன்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, குறைந்தது இந்த மூன்று கட்சிகளைக் கொண்டாவது அமைந்திருக்கக் காரணம் என்றால், அது மிகையல்ல.   

மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது தாம் கொண்டுள்ள செல்வாக்குப் பிடியைத் தளர்த்த, தமிழரசுக் கட்சி விரும்பவில்லை. இதனால்தான், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்தவர்கள், மீண்டும் ஒன்றிணையத் தயங்குகிறார்கள். இதனால்தான் நீதியரசர் விக்னேஸ்வரன், “தமிழரசுக் கட்சியின் தலைமை கூட்டமைப்புக்குத் தலைமைதாங்கக் கூடாது; மாறாக, மற்றொரு சிறிய அங்கத்துவக் கட்சிக்குத் தலைமை வழங்கப்பட வேண்டும்” என்கிறார்.   

இதுவரையான அவருடைய கூற்று பொதுப்படையானதும், கொள்கை அடிப்படையானதும் ஆகும். ஆனால், அதற்கு ந. ஸ்ரீகாந்தாவை முன்மொழிந்தமை, அவருடைய தனிப்பட்ட கருத்தாகப் பார்க்கப்பட வேண்டியது. தனிப்பட்ட முன்மொழிவு இங்கு முக்கியமானதல்ல. ஆனால், தவிர்க்க முடியாமல் பலரது கவனமும் அதன் மீதுதான் பதிகிறது. அந்தத் தனிநபர் பெயர் முன்மொழிவைக் கடந்து, பெரிய கட்சியின் வல்லாதிக்கம் தொடர்பிலான ‘தடைகளும், சமன்பாடுகளும்’, ‘சிறுபான்மைத் தரப்பின் பாதுகாப்பு’ என்ற அடிப்படையில் நீதியரசர் விக்னேஸ்வரனின் அந்தக் கூற்று பார்க்கப்பட வேண்டும்.  

ஆனால், இந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்து ஒரு கூட்டணியை ஸ்தாபிக்க வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறதா?   
ஏனைய தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைவதை ஏற்குமா?   

ஒருவரையொருவர் தேர்தல் மேடைகளில் விளாசித் தள்ளியவர்கள், இன்று எப்படிக் கைகோர்ப்பது? என்ற கேள்விகளும் கூட இதனை இன்னும் சிக்கலாக்குகின்றன.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்னொரு-கூட்டமைப்பு-சவால்களும்-சாத்தியங்களும்/91-259053

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு கூட்டமைப்பு சவால்களும் சாத்தியங்களும் (பகுதி -02)

-என்.கே. அஷோக்பரன்  

இன்றைக்குத் தமிழ்த் தேசிய கட்சிகள் என்று, நாம் எந்தக் கட்சிகளை வரையறுக்கிறோம் என்பது இங்கு முக்கியமானது. குறைந்த பட்சமாக, திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையிலான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற, தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை முன்னிறுத்தும் கட்சிகளே, ‘தமிழ்த் தேசிய கட்சிகள்’ என்ற அடையாளத்துக்கான குறைந்தபட்ச தகுதியைக் கொண்டுள்ளன எனலாம். 

வடக்கு, கிழக்குப் பகுதிகளில், அரசியலில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான தமிழ்க் கட்சிகள், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையே முன்னிறுத்துகின்றன. ஆகவே, அவர்கள் முன்னிறுத்தும் அடிப்படைக் கொள்கை,  சுவீகரித்துக்கொண்டுள்ள சித்தாந்தம் ஆகியவற்றுக்கு இடையே, வேறுபாடுகளைக் காண்பது கடினம். 

ஆனால், அந்த அடிப்படைக் கொள்கையின் விஸ்தீரணம், இயங்குமுறை, நெகிழ்ச்சித்தன்மை என்பவற்றில்தான் வேறுபாடுகள் இருக்கின்றன. இன்று, தமிழ்த் தேசிய அரசியலின் இருதுருவங்களாக, பொதுவில் அடையாளப்படுத்தப்படும் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் நாடாளுமன்றத்தில் பேசும் விடயங்கள், ஒருவருக்கொருவர் ஆதரவானதாக இருப்பதை அவதானிக்கலாம். ஆனால், அவர்கள் பேசும் விதம், விடயங்களுக்கு வழங்கும் முன்னுரிமை என்பவற்றில் வேறுபாடுண்டு. 

இத்தகைய செல்நெறி, பெரும்பாலான தமிழ்க் கட்சிகளிடையே அடிப்படைக் கொள்கைகளில் முரண்பாடு இல்லை என்பதையும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முரண்பாடில்லை என்பதையும் கோடிட்டுக்காட்டி நிற்கின்றன. 

ஆகவே, இக்கட்சிகள் இடையே, கூட்டமைப்பாக உருவாகுவதற்கான அடிப்படைகள் இருக்கின்றன. ஆனாலும், தமிழ்த் தேசிய கட்சிகள் இடையேயான கூட்டமைப்புகள், இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் நீடித்து நிலைக்காததற்கான காரணமென்ன என்று, சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது.  

கொள்கை அரசியல் என்பது, ஒரு விடயம்; தேர்தல் அரசியல் என்பது, இன்னொரு விடயம். தேர்தல் அரசியல் என்று வரும்போது, தமிழ்க் கட்சிகளிடையே வாக்குகள் அடிப்படையிலான சமமின்மை காணப்படுகின்றது. 

இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி பெருமளவு வாக்குவங்கியை, ஒப்பீட்டளவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தப் பலம், அதைத் தன்னிச்சையுடன் நடந்துகொள்ளச் செய்கிறது. ‘பெயருக்கு மட்டும்தான் கூட்டமைப்பு; வாக்குகள் யாவும் என்னுடையவை; ஆகவே, நானெடுப்பதுதான் முடிவு’ என்ற, தன்னிச்சை மனநிலையில், தமிழரசுக் கட்சி செயற்படும் போது, கூட்டணியிலுள்ள ஏனைய தரப்புகள் கசப்படைந்து விலகிக் கொள்கின்றன. 

இதனால்தான், கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் இருந்தபோது, அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், “கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும்” என்றார். கூட்டமைப்பு பதிவு செய்யப்படும் போது, அதன் கட்டமைப்பு, தீர்மானிக்கப்பட வேண்டி வரும். அத்தகைய கட்டமைப்பு தீர்மானிக்கப்படும் போது, தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிரான தடைகள், முன்வைக்கப்படும். கூட்டமைப்பு மீதான, தமிழரசுக் கட்சியின் கிடுக்குப்பிடி தளரும்.இதனால்தான் என்னவோ, கூட்டமைப்பைப் பதிவு செய்வதில், தமிழரசுக் கட்சி ஆர்வம் காட்டவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை சார்ந்த பிரச்சினையும் இங்கு, குறிப்பிட்டாக வேண்டியதொன்றாக இருக்கின்றது.   

இன்னொரு தரப்பால், கூட்டமைப்புக்கு  என்று பேச்சுவார்த்தைக்கான அழைப்போ, கூட்டமைப்பு சார்பில் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்போ வழங்கப்படும் போது, அந்த அழைப்பும் வாய்ப்பும், கூட்டமைப்பின் தலைமைக்கே செல்கின்றது. 

கூட்டமைப்பின் தலைமையாகத் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தோர் உள்ளபோது, அழைப்பு கூட்டமைப்புக்கானதாக அமையும்போது, அதுதொடர்பில் அங்கத்துவக் கட்சிகளோடு பேசி முடிவெடுக்க வேண்டியதும், குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை அவற்றுக்கும் வழங்க வேண்டியதுமான தார்மிகக் கடமை, தமிழரசுக் கட்சிக்கு இருக்கிறது. தமிழரசுக் கட்சி, இதைச் செய்யவில்லை என்ற விசனத்தை, பலமுறை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியினர் பதிவு செய்துள்ளார்கள்.  மேற்கூறிய பிரச்சினைகளால்த்தான், நீதியரசர் விக்னேஸ்வரன், இன்னொரு கூட்டமைப்பாகத் தமிழ்க் கட்சிகள் இணையும்போது, தமிழரசுக் கட்சி அல்லாதவர்களிடம் அதன் தலைமை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். 

இன்று, கட்சிகள் பிரிந்துள்ளதால், தமிழரசுக் கட்சி கணிசமானளவு வாக்குகளை இழந்துள்ளது என்பது உண்மை. ஆனால், தமிழ்த் தேசிய கட்சிகள் இடையேயான இந்த ‘அடிபிடிகள்’, அவை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாக இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலில் அதிகம் ஊறிப்போகாத இளம் வாக்காளர்கள், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு மாற்றான தரப்புகளுக்கு வாக்களித்து உள்ளமையை, 2020 பொதுத் தேர்தல் முடிவுகள் உணர்த்தி நிற்கின்றன. 

குறிப்பாக, கிழக்கில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த வியாழேந்திரன், ராஜபக்‌ஷர்களின் மொட்டுச் சின்னத்திலேயே வெற்றி பெற்றிருக்கிறார். யாழ். மாவட்டத்தில் அதிக விருப்புவாக்குகளை, ராஜபக்‌ஷர்களின் கூட்டுக்கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் பெற்றிருக்கிறார். இவைதான், தமிழ் மக்கள் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கியுள்ள எச்சரிக்கை சமிக்ஞைகள்.   

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ்த் தேசிய அரசியலை நடைமுறைப் பிரச்சினைகளோடும் ஒத்திசைந்த வகையிலும் திட்டமிட்டு, தமிழ் மக்களுக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லாவிட்டால், அவர்களை நிராகரிக்க தமிழ் மக்கள் தயங்கமாட்டார்கள். இந்தச் சூழலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைவது, தமிழ்த் தேசியத்துக்கு மாற்றான கட்சிகளை, அரசியல் ரீதியாகப் பலத்துடன் எதிர்கொள்வதற்கு அவசியமான ஒன்றாகிறது.   

தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, மீளிணக்கப்பாடு உருவாகுவதற்கான அடிப்படையாக, முதலில் தமக்கு இடையேயான தற்போதைய உறவில் குறைபாடுள்ளது என்பதையும் பிழைகள் விட்டுள்ளோம் அநீதிகள் சில இழைக்கப்பட்டுள்ளன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு, பழிவாங்கல், பிரிவு என்பவை அல்லாத வகையில், தமக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளத் திடசங்கற்பம் பூண வேண்டும்.   

முதற்படியாக, தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதற்கு, அதிக வாய்ப்புள்ள விடயங்களில் இருந்து, ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டும். தேர்தல் அரசியல் என்பதுதான், இங்கு மிகப் பிரச்சினையானதாக இருக்கிறது. ஆகவே, அதைத் தற்போதைக்குத் தவிர்த்துவிட்டு, கொள்கை ரீதியிலான கூட்டை ஸ்தாபிக்க வேண்டும். இதற்கான முதற்படியாக, நாடாளுமன்றத்திலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ்த் தேசிய ஆதரவு தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, ‘தமிழ் கோகஸ்’ (Tamil Caucus) ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும். இது, நாடாளுமன்றத்தில் கொள்கை அளவிலேனும் தமிழ் உறுப்பினர்கள் ஒரே குரலில் செயற்பட வழிவகுக்கும்.  

அடுத்தபடியாக, அனைத்துத் தமிழ்த் தேசிய கட்சிகளும், கூடிப்பேசும் மாநாட்டுத் தளம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும். இதன் நோக்கம், தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவது அல்ல; மாறாக, தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பிலான கொள்கை முடிவை, இந்த மாநாட்டில் கலந்துரையாடி, ஒற்றைக் குரலில் வௌியிட வேண்டும். இந்த மாநாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுடன், சிவில் அமைப்புகளும் அழுத்தக் குழுக்களும் இடம்பெறுவதுகூடச் சிறப்பானது. 

இந்தக் கட்சி சாரா அமைப்புகள், தமிழ்த் தேசிய கட்சிகள், கட்சி நலன்களைத் தாண்டிச் சிந்திப்பதைத் தூண்டுவனமாகவும் அழுத்தம் தருவனவாகவும் கூட அமையும். இவ்வாறு, தமிழ்த் தேசிய கட்சிகளிடையே, பொதுக்கலந்துரையாடல் வௌி உருவாகும் போது, அதன்மூலம் பொதுவான கொள்கை நிலைப்பாடுகளில் இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குரலாக நிற்கும் போது, அது கட்சிகள் இடையேயான இணக்கப்பாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வலுப்படுத்தும். 
இவ்வாறான நெருங்கிய செயற்பாடும், இணக்கப்பாடும் நீண்டகாலத்துக்குத் தொடரும் போது, தேர்தல் அரசியலிலும் அவை இணக்கப்பாட்டுடன் ஈடுபடவேண்டிய சூழல் உருவாகும். அப்போது, தேர்தல் அரசியலிலும் ஒற்றுமையும் இணக்கப்பாடும் ஏற்படும் சாத்தியங்கள் உண்டு.  
ஆகவே, தமிழ்த் தேசிய கட்சிகள் இன்னொரு தேர்தல் கூட்டணியை பதவி செய்வதைப் பற்றி யோசிக்காமல், ஒரு மாநாடாக ஒன்றிணைவதைப் பற்றிச் சிந்திப்பதே சாலச் சிறந்ததோர் உபாயமாகும். தமிழினத்துக்கு யார் தலைவர் என்று அடிபடுவதைவிட, தமிழினத்தை எவ்வாறு காப்பாற்றப்போகிறோம் என்று சிந்திப்பதுதான் காலத்தின் தேவை. அதைத் தமிழினத்தின் தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்வோர் செய்வார்கள் என்று நம்புவோம்!   

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்னொரு-கூட்டமைப்பு-சவால்களும்-சாத்தியங்களும்-பகுதி-02/91-259619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.