Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது; மறுக்கவும் முடியாது. 

தனது தந்தையை, சகோதரனை, சகோதரியை, பிள்ளையை நினைவுகூர அன்புக்குரியவர்களுக்கு உரிமையுண்டு. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இந்த நினைவுகூரலை மய்யப்படுத்தி நடக்கும் அரசியலும் அதன் அபத்தமும், விரிவாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்பட வேண்டியது. 

மிகுந்த உணர்வுபூர்வமான இந்த நினைவுகூரல்கள், இப்போது மே 18ஆகவும் மாவீரர் தினமாகவும் சுருங்கியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வழித்தடத்தில், இழக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிர்களை, ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் நோக்கவியலுமா? 

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில், இழக்கப்பட்ட உயிர்களின் பல்வகைத் தன்மையை நாம், முதலில் ஏற்றுக் கொள்ளப் பழகவேண்டும். உயிரிழந்தவர்கள், அப்பாவிப் பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் மட்டுமல்ல. ஏனைய போராட்ட இயக்கத்தினர், அவர்களுடைய ஆதரவாளர்கள், இடதுசாரிகள், மாற்றுக் கருத்தாளர்கள், அரசியல்வாதிகள் என, வானவில் போல எல்லோரும் கலந்திருக்கிறார்கள். அனைவரும் நினைவுகூரப்பட வேண்டும்; அனைவரையும் நினைவு கூர்வதற்கான நியாயமும் உண்டு. 

தியாகியாக இறந்தவர்கள் மட்டுமல்ல, துரோகியாகக் கொல்லப்பட்டவர்களும் துரோகியாக்கப்பட்டு இறந்தவர்களும் நினைவுகூரப்படுவதற்கான நியாயம் உண்டு. அந்நியாயம் அவரவர் அளவுகோல்களின் அடிப்படையில் வேறுபடும். 

ஆனால், ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தில், பல்வேறு கருத்தியல் நிலைப்பாடுடையோரின் உடல்கள், இரத்தமும் சதையுமாக இணைந்திருக்கின்றன. இதை, அவ்வளவு இலகுவில் புறந்தள்ளிவிட முடியாது. 

இறந்தவர்கள் அனைவரும் மனிதர்கள். உறவுகளாலும் உலக பந்தங்களாலும் கட்டுண்டவர்கள். அவர்தம் நினைவுகளைச் சுமந்த உயிர்கள், இந்தப் பூமிப்பந்தில் உயிர்வாழ்ந்த வண்ணமே இருக்கின்றன. 

போரின் பின்னரான கடந்த ஒரு தசாப்தகால, தமிழ்த் தேசிய அரசியல் நகர்வுகள், புலி நீக்க அரசியலில் தொடங்கி, இன்று, வாக்குவங்கிகள் வெகுவாகச் சரிந்துவிட்ட நிலையில், மீண்டும் புலி ஆதரவுத் தோற்றத்தைக் காட்டுவதைத் தவிர்க்க இயலாததாக்கி இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, இப்போது அரங்கேறி இருக்கும் நிகழ்வுகளையும் நோக்க வேண்டியுள்ளது. இந்த அவல நிலைக்கு, எவ்வாறு வந்தடைந்தோம் என்ற வினாவை, நாம் கேட்டிருக்கிறோமா? 

தமிழ்த் தேசியம் நகரவியலாத, முன்னோக்கற்ற முட்டுச்சந்தியில் நிற்கிறது. தமிழ்த் தேசியம் இன்று, ஒரு முட்டுச் சந்தில் வந்து நிற்கிறது என்பதை, ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், 2009 மே 18 வரை, விடுதலைப் புலிகள் தோற்க மாட்டார்கள் என்று நம்பியவர்களையும் விட மோசமான மனநிலையில் இருப்பவர்கள் ஆவார்.

இந்த அவலத்துக்கான காரணங்களை, விடுதலைப் புலிகளுக்குள் மட்டும் தேடுவது அபத்தமானது. ஒரு சமூகமாக, நாட்டுக்குள்ளும் புலம்பெயர்ந்தும் வாழும் சமூகமாக, விமர்சன நோக்கில் எம்மை மீள்பார்வைக்கு உட்படுத்துவதும் தவிர்க்கவியலாதது. 
போரின் பின்னர், இரண்டு வேறுபட்டவையும் ஆனால், நோக்கில் ஒன்றான நிலைப்பாடுகளும் தீவிரமடைந்தன. 

ஒன்று, இலங்கை அரசாங்கத்தின் மீதான போர்க் குற்றங்களை, விசாரிப்பதைப் பற்றிய தீவிர நிலைப்பாடுகள். இவை அனைத்துமே, அரசாங்கத்தைப் பழி வாங்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.

மற்றையது, அனைத்துக்கும் விடுதலைப் புலிகளையே காரணமாகக் காட்டுவதானது, விடுதலைப் புலிகளைப் பழி தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. 

ஆனால், இந்தப் பழித்தீர்ப்புகள்  பற்றிக் கவனம் காட்டுமளவுக்கு, போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றிய எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை. இந்த நிலை, இன்றுவரை தொடர்க்கிறது. அவ்வாறில்லாது விட்டால், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை, இன்று மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றைய நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இது, போரின் பின்னரான ஈழத்தமிழ் அரசியலின் செல்நெறியின் பின்விளைவு என்பதை மறக்கலாகாது. 

தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் ஆகியவை பற்றி, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்குக் கடந்த காலம் பற்றிய தெளிவான புரிதல் தேவை. அத்துடன், விடுதலைப் புலிகளைப் பற்றிய விவாதங்களும் தவிர்க்க இயலாதவை. 

நமக்கு முன்னாலுள்ள பல சவால்களில் அனைத்தையும், விடுதலைப் புலிகளின் சாதனைகளாகவோ, அவர்களது குற்றங்களாகவோ நோக்குகின்ற தன்மையில் இருந்து விடுபடுவது முக்கியமானது. விடுதலைப் புலிகள், போராட்டத்தின் மய்யச் சக்தியாக இயலுமாக்கிய அகக் காரணிகளையும் புறக்காரணிகளையும் விளங்கிக் கொள்வது முக்கியமானது. 

தேசியம், சுயநிர்ணயம், தேசிய இன விடுதலை என்பவை பற்றிய, நமது புரிதல்களைச் செம்மைப்படுத்துவது முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலை, இலங்கையின் தேசிய பிற இனங்களின் விடுதலையில் இருந்து, எவ்வாறு பிரிக்க இயலாததாக உள்ளது என்பதை ஆராய்வது முக்கியமானது. தமிழ் மக்களின் விடுதலைக்கு, பிராந்திய அரசியலுடனும் சர்வதேச அரசியலுடனும் இருக்கக் கூடிய உறவுகளை, விளங்கிக் கொள்வது முக்கியமானது. 

இவற்றைக் கொஞ்சம் மேலோட்ட மாகவேனும் நோக்கும்போது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், பிற விடுதலைப் போராட்டங்களில் இருந்து,  தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதை உணர முடியும். 

இந்தப் பின்னணியிலேயே, இறந்தவர்களை நினைவுகூர்தலை, ஒற்றைப் பரிமாண நிலைப்பாட்டில் நோக்குவதன் அபத்தங்களையும் சொல்லியாக வேண்டும். 

ஈழத்தமிழர்கள் சமூகமாக, ஏராளமான இழப்புகளைச் சந்தித்து இருக்கிறார்கள். 1983 இனக்கலவரம், 1987 முதல் 1990 வரை இந்திய அமைதிகாக்கும் படைகள் காலத்தில் நிகழ்ந்த துன்பங்களும் கொலைகளும் எனத் தொடங்கி, சகோதரப் படுகொலைகள் என விரிந்து, இறுதிப் போரின் அவலமான முடிவு வரை, அனைத்தும் நினைவுகூரப்படல் வேண்டும். 

இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது யாதெனில், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை, தமிழீழக் கோரிக்கையுடன் சமன்படுத்துகிற தன்மை, தமிழீழப் பிரகடனத்துடன் தொடங்கி, ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியுடன் வலுப்பட்டது. 

விடுதலைப் புலிகள் தம்மை, ஆயுதப் போராட்டத்தின் தலையாய சக்தியாக என்றைக்கு நிலை நிறுத்தினரோ, அன்று முதல் அச்சமன்பாடு விடுதலைப் புலிகளை, விடுதலைப் போராட்டத்துடன் சமப்படுத்துகின்ற திசையில் நகரத் தொடங்கிவிட்டது. 

இதன் ஆபத்துகளை எடுத்துரைக்க முயன்றோர் துரோகிகளாயினர். இதன் அவலமுடிவையே, முள்ளிவாய்க்காலில் கண்டோம். எந்த ஒன்றையும், ஒற்றைப் பரிமாண நிலையில் மட்டும் நோக்குவதன் ஆபத்துகளை, இது எடுத்து நோக்குகிறது.  

இந்திய அமைதிகாக்கும் படையின் வருகை முதல், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை, விடுதலைப் புலிகளை மய்யப்படுத்தியே, தமிழ்த் தேசியத்தின் அரசியல் பரப்பில், விவாதங்கள் பொதுவாக நிகழ்ந்து வந்துள்ளன; இன்றும் அதே போக்கையே காண முடிகிறது. இப்போக்கு புலம் பெயர்ந்தோரிடையே வலுவாகவும் வெளிவெளியாகவும் காணப்படும் அதேவேளை, இலங்கையில் அது மறைமுகமாகத் தொடருகிறது. 

இந்த நிலைமை, இரண்டு விடயங்களை எடுத்துக்காட்டுகிறது. ஓன்று, இயலாமை; இன்னொன்று, அரசியல் வறுமை. 

புலம்பெயர் தேசங்களில், நினைவு கூரல்கள் ஒரு சடங்குபோல இன்று நடந்தேறுகின்றன. ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு வருவது போல, மே 18உம் கார்த்திகையும் வந்து போகின்றன. 

அமெரிக்காவையும் மேற்குலகையும் வால்பிடித்து, தனிநாடு பெற்றுக் கொள்ளலாம் என்று, தூரநோக்கற்றும் அரசியல் தெளிவற்றும்  நம்புகின்ற கூட்டத்தினரின் கூத்துகளே இன்று, வருடாவருடம் நடந்தேறுகின்றன. இவற்றின் சமூகப் பெறுமானம் மிகக் குறைவு. 

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டோர், முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பங்கள் எனப் பலரும் சொல்லொணாத் துயரங்களை, தினந்தினம் சந்திக்கிறார்கள். அவர்களின் இன்னல்களை, மேற்குலக தலைநகர நினைவுகூரல்களில், பிரகாசமாய் ஒளிரும் வர்ண விளக்குகள் மறைக்கின்றன. இந்த முரண்நகையை, எவ்வாறு விளக்குவது; எவ்வாறு விளங்குவது?

மேற்குலக நாடுகளின் கடவுச்சீட்டுகளைக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு, உச்சஸ்தாயியில் கத்துகிறார்கள் “தனிநாடுதான் தீர்வு” என்று! ஊரில் இருப்பவனுக்கோ, அடுத்தவேளை உணவுக்கே வழியில்லை. அவரவருக்கு, அவரவர் அரசியலும் இருப்பும் முக்கியமானவை. அதற்கு எதுவுமே விலைபேசப்படலாம் என்பதே விதி. இங்கு நினைவுக்கு வருவது, ‘போரின் முகங்கள்’ என்ற சி. சிவசேகரத்தின் கவிதை. அக்கவிதை இப்படி முடியும்: 

என் முகத்தில் எதைக் காண்கிறாய் என்று வினவியது போர்
இடிபாடுகளை என்றான் ஒரு கிழவன்
இழவு வீடுகளை என்றாள் ஒரு கிழவி
குருதிக் கோலங்களை என்றான் ஒரு ஓவியன்
உடல் ஊனமானோரை என்றாள் ஒருதாதி
மருந்துகளின் போதாமையை என்ற வைத்தியனை முந்தி
இறக்குமதி வாய்ப்புக்களை என்றான் ஒரு விநியோகஸ்தன்
விலைவாசி உயர்வை என்றான் ஒரு குடும்பஸ்தன்
மேலதிக வருமானத்தை என்றான் ஒரு வியாபாரி
பொருட்களின் தட்டுப்பாட்டை என்றாள் ஒரு குமரி
பெரும் வருமானத்தை என மகிழ்ந்தான் ஒரு கடத்தற்காரன்
இன்னும் விற்றுமுடியாத ஆயுதங்களை என்றான் ஒரு விற்பனையாளன்
என்னுடய கமிஷனை என்றான் ஒரு தரகன்
வீர மரணங்களை என்றான் ஒரு பிரசாரகன்
பைத்தியக்காரத்தனத்தை என்று சிரித்தான் ஒரு ஞானி
பசியில் வாடும் குழந்தைகளை எனப் பதறினாள் ஒரு தாய்
பாணுக்கான கியூ வரிசையை என்றாள் ஒரு சிறுமி
வெறிதான தேவாலயங்களை என ஏங்கினான் ஒரு பூசகன்
மேலும் பல அறிக்கைகளை என்றான் ஒரு என். ஜி.ஓ. ஊழியன்
ஏராளமான போர்ச் செய்திகளை என்றான் ஒரு பத்திரிகையாளன்
என்னை என்ற குரல் வந்த திசையில்
கவனிப்பாரற்றுக் கிடந்தது
ஒரு அகதியின் பிணம்.

இப்போது போர் என்ற இடத்தில் நினைவுகூரல் என்பதைப் போட்டு வாசித்துப் பாருங்கள். ஒற்றைப் பரிமாணமாக நோக்குவதன் ஆபத்தும் அதன் அரசியலும் அனைத்தினதும் அபத்தமும் புரியும். 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மரணங்களை-நினைவுகூரல்-அரசியலும்-அபத்தமும்/91-260029

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.