Jump to content

தலை நகரத்து வாழ்வுக்குக் காலத்தைப் பின்னோக்கி நகர்த்தல்- டி.சே தமிழன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

தலை நகரத்து வாழ்வுக்குக் காலத்தைப் பின்னோக்கி நகர்த்தல்- டி.சே தமிழன்

 

டி சே தமிழன்

 

கொழும்பில் இருந்தது ஒன்றரை வருடங்களுக்கும் குறைவானது. யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட சில மாதங்கள் சிலாபத்திலிருந்ததையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒருவருடந்தான் கொழும்பில் இருந்திருக்கின்றேன் என்றுதான் சொல்லமுடியும். கொழும்பு ஒரு நகரத்துக்குரிய வசீகரங்களையும் வக்கிரகங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எனது கொழும்பு வாழ்க்கை வீடு, பாடாசாலை, ரியூசன், சில உறவினர் வீடுகள் என்று ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே சுழன்றபடி இருந்தது. முக்கியமாய் கொழும்பில் எனது எல்லைகளை விரிவாக்கிப் பார்க்காமையிற்கு சிறிலங்கா பொலிசும், ஆமியும் பிடித்து உள்ளே போட்டுவிடுவான் என்ற பயத்தோடு எனக்குரிய சோம்பலும்தான் முக்கிய காரணம் என்பேன்.

இன்று வாலிபத்தின் கிழட்டுப் பருவத்தில் நின்று கொண்டு பார்க்கும்போது, யாரவது கடந்து போன வாழ்க்கையில் எதை நீ மீண்டும் வாழ ஆசைப்படுகின்றாய் என்று கேட்டால் கொழும்பில் இருந்த ஒரு வருட வாழ்க்கையை என்று தயங்காமல் கூறுவேன். அரசர்களுக்கு மட்டுமான ஒரு பொற்காலம் இருக்கவேண்டும்? என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கு இருக்கக்கூடாதா என்ன?

நெரிசலும், வெக்கையும் நிரம்பிய மாநகர் வாழ்க்கையை சுவாரசியமாக்கியவர்கள் இரண்டு நண்பர்கள். அப்போதுதான் பதின்மத்தில் காலடி வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெண்களோடு கோழிகளாய்ச் சண்டைபிடித்ததை மறந்துவிட்டு உடல்மாற்றங்களோடு புத்துணர்ச்சியாய் பார்க்கின்ற காலகட்டத்தில் இந்த இரண்டு நண்பிகள் கிடைத்திருந்தனர். இவர்கள் இருவரும் ஒரு மகளிர் கல்லூரியில் அந்தப் பாடசாலைக்குள்ளேயே இருந்த விடுதிக்குள் தங்கியிருந்து படித்துக்கொண்டிருந்தனர். ஒருவர் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்தவர். மற்றவர் நுவரேலியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர். சில வருடங்களுக்கு முன் வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு பத்திரிக்கையில் ‘நேர்காணல்’ என்ற ஒன்றைக் கண்டபோது, கவிதை எழுதுவதற்கு எது உனக்கு உந்துசக்தியாக இருந்தது என்று கேட்கப்பட்டபோது இந்த தோழிகள் தான் காரணம் என்று கூறியபோது அவர்கள் கொஞ்சம் நக்கலாய்ப் பார்த்துச் சிரித்தாலும், அதுவே உண்மைக் காரணமாகும். எதையாவது எழுத வேண்டும் என்ற ஆவலை ஊதித் தணலாக்கி நெருப்பாக்கி விட்டது அவர்கள் தான். (எனவே நான் எழுதும் கவிதைகள் சகிக்கமுடியாமல் இருந்தால் என்னைக் குற்றஞ்சாட்டாமல், இப்படி ஒரு கொடூரமான நிலைக்குத் தள்ளிவிட்ட அவர்களை நோகும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்). ஒரு பொழுது, எப்போதாவது ஒரு ‘தொ- குப்பை’ போட்டால் அவர்கள் இருவருக்கும் சமர்ப்பணம் செய்வதாய் கூறியிருந்ந்தது நினைவிலுண்டு.

இந்த தோழிகளுடன் முகிழ்ந்த நட்பைப் பற்றியும் கொஞ்சம் கூறவேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் கதைக்க விரும்பினாலும், வழமையான shy தன்மையுடன் அவர்களைத் தவிர்த்துக்கொண்டிருந்தேன். எனது நண்பர்களிடம் அவர்கள் என்னிடம் பேசவிரும்புவதாய்க் கூறியும் நான் அவர்களை விலத்தியபடியே வகுப்புக்களுக்குப் போய்க்கொண்டிருந்தேன். பதினைந்து வயதுகளில் யாழில் அல்ல கொழும்பிலும் கூட அப்போது பெண்களுடன் கதைப்பது என்பது பெரும் பாவமாய் இருந்தது. வகுப்புக்கள் முடிந்தவுடன் நின்றும் கதைக்க முடியாது. அவர்கள் விடுதியில் தங்கி நின்றதால் இருந்த கட்டுப்பாடுகளை விட, அந்த தனியார் நிறுவனத்தை எனது மாமியின் மகனொருத்தரே நடத்திக் கொண்டிருந்ததும் இன்னொரு காரணமாகும்.. பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் வகுப்புக்களில் பேச ஆரம்பிக்க (அடடா பதின்மத்தில் பெண்களோடு பேச ஆரம்பிக்கத் தொடங்கும் பொழுதுகள் எவ்வளவு அழகானவை). நேரங் காணாமல் கடிதங்களை வகுப்புக்களில் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினோம். அப்போது நான் கொஞ்சம் படிக்கிற ஆசாமி எனபதால், ‘நீ நல்லாய்ப் படிக்கவேண்டும், வகுப்புக்களில் வைக்கும் பரீட்சைகளில் அதிக மார்க்ஸ் எடுத்தால்தான் எங்களுக்குப் பெருமை’ என்ற விதமாய் எழுதுவார்கள். அவர்களும் நன்கு படிக்கக் கூடியவர்கள். அதிலும் ஒரு தோழி நன்கு ஆங்கிலமும் கணக்கும் செய்யக்கூடியவள். அவளது ஆங்கிலத்தைப் பார்த்து ஒவ்வொரு பொழுதும் வியந்திருக்கின்றேன். கனடா வந்து ஆங்கில மீடியத்தில் படித்தாலும் அவளது ஆங்கிலத்துக்கு, இப்போதும் எனக்குத் தெரிந்த ஆங்கிலம் முன்னுக்கு நிற்காது போலத்தான் தோன்றுகின்றது. ஒரு முறை இப்படிக் கடிதப்பரிமாறல் நடக்கும்போது எங்கள் பாடசாலையில் படித்த உயர்தர வகுப்பு மாணவர்கள் கண்டுவிட்டார்கள். அவர்களுக்கு நாம் ஏதோ காதல் கடிதம் பரிமாறுகின்றோம் என்ற பொறாமைத்தீ எரிந்ததோ என்னவோ தெரியாது. பிறகு நான் பள்ளிக்கூடம் போகத்தொடங்க தாங்கள் மாணவதலைவர்கள்(prefects) என்ற மிதப்பில், என்னைச் சும்மா சும்மா தேவையில்லாத காரணங்களுக்கு punishments என்று வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டாங்கள். ‘இல்லை அண்ணாமார் ; அது வெறும் நட்பு மட்டும்தான்’ என்றபோதும் நம்ப அவர்கள் தயாராகவில்லை.

ரியூசனுக்குப் போய்க்கொண்டிருந்தபோது எனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு விபரீத ஆசை வந்துவிட்டது அங்கே படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது காதல் முகிழ ஆரம்பித்தது. அந்தப் பெண்ணும் கொஸ்டலில் தங்கியிருந்தே படித்துக்கொண்டிருந்தார். காதல் ஆசை வந்ததில் பிழையில்லை, ஆனால் அவன் உதவி கேட்டு என்னிடம் வந்ததில்தான் அவனுக்கு சனி (எனக்கும் தான்) ஆரம்பிக்கத் தொடங்கியது. எப்படி அந்தப் பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது என்று மண்டையைக் குடைந்து அலசி ஆராய்ந்து இறுதியில் கடிதம் ஒன்றின் மூலமாகவே விருப்பைத் தெரிவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது. கொடுப்பதற்கான கடிதத்தை, தான் எழுத்துப் பிழையுடன் எழுதிவிடுவேன் நீயே எழுதித்தாவென்று கூறினான். எனக்கும் அந்தமாதிரி புளுகம். முதன்முதலாய்க் காதல் கடிதம் எழுதுவது என்றால் சும்மாவா என்ன? அத்தோடு எனக்குள்ளும் ஒரு நினைப்பிருந்தது. முதலில் இவனை அனுப்பி வெள்ளோட்டம் விட்டால், பிறகு நான் யாரையாவது பெண்ணை விரும்பினால பாதை இலகுவாயிருக்கும் என்று. காதல் கடிதம் எழுதக் கற்பனைக் குதிரையைப் பறக்கவிடவேண்டும் அல்லவா? ஒரு இராஜ தோரணையுடன் நாமெல்லோரும் (வெள்ளவத்தையில்) இருந்த தேநீர்க் கடைக்குள் நுழைந்தோம். அன்றைய பாற்தேத்தண்ணி, வடை, வாய்ப்பன் இன்னபிற செலவெல்லாம் காதலிக்கும் நண்பனுக்கு உரியதென்பதால் கவலையில்லாமல் வெட்டினோம். வடையும் வாய்ப்பனும் வாழைப்பழமும் வயிற்றுக்குள் போகின்றதே தவிர பேனா மையில் ஒரு எழுத்தும் ஊறவில்லை. நண்பனை நிமிர்ந்து பார்த்தேன், காதலிக்கும் ஆசையில் மிகவும் பதட்டமாய் இருந்தான். அத்தோடு இப்படி இன்று செலவழிக்கும் பணத்துக்கு தனது அப்பரிடம் எத்தனை ஏச்சு வாங்கவேண்டும் என்ற கவலையும் சேர பரிதாபமாய்த் தோன்றினான். (இப்பவாவது பெண்களே புரிந்துகொள்ளுங்கள், ஆண்களுக்கும் காதலிக்கையில் பிரச்சினைகள் பிணக்குகள் என்று எவ்வளவு கஷ்டம் இருக்கிறதென்றாவது). இனியும் இப்படி இருத்தல் சரியாய் இருக்காது என்று ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்து’ காதற்கடிதத்தை எழுததொடங்கினேன். ஈழததில் சமயம், தமிழ் பாடங்களை படித்திருந்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவற்றுக்கு கொஞ்ச உண்மையும் கனக்க கற்பனையும் (பொய்யும்) தேவை என்று. சம்பந்தர் செய்த அற்புதங்களை எழுது என்று பரீட்சையில் கேட்டால், ஒரு வரி உண்மையை வைத்துக்கொண்டு நூறுவரி பொய்யை எழுதும் சாமர்த்தியம் பெற்றவனாய் அப்போது இருந்தது எனக்கு காதல் கடிதம் எழுத அந்தமாதிரி உதவியது. கடிதத்தை எழுதிமுடித்துவிட்டு நண்பனிடம் நீட்டியபோதுதான் வழமையான எனது ஆறாம் அறிவு விழிக்கத்தொடங்கியது. வெவ்வேறு எழுத்துக்கள் இருந்தால் எவரோ எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள் என்று அந்தப்பெண்ணுக்கு விளங்கிவிடும் என்று நினைத்து நானே நண்பனுக்காய் கையெழுத்தும் போட்டேன். வெற்றிகரமாய் நமது தாக்குதலுக்கான முன்னகர்வைச் செய்துவிட்டு தாக்குதலுக்காய் வகுப்புக்குப் போனோம். வகுப்பு ஆரம்பிக்கும்போது கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டான் நண்பன். வகுப்பின் நடுவில் அந்தப்பெண்ணைப் பார்த்தால் அவசரம் அவசரமாய் ஏதோ எழுதிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஆகா நண்பா, வெற்றி மேல வெற்றிதான் என்று ஜெயப்பேரிகை முழங்காத குறையில் நாங்கள் அனைவரும் வகுப்பில் உற்சாகத்தில் இருந்தோம். வகுப்பு முடிந்தவுடன் என்னைச் சந்திக்க விரும்புவதாய் அந்தப்பெண் விரும்புவதாய், எனது நண்பிகள் மூலம் எனக்கு தகவல் சொல்லப்படது.

வகுப்பு முடிந்தவுடன் அந்தப்பெண் நடந்துவந்த வேகத்தைப் பார்த்தபோது இரண்டு அடி எனக்குத் தராமல் நடையை நிறுத்தமாட்டார் போலத்தான் தெரிந்தது. என்றாலும், கடிதம் எழுதியது எனக்காக இல்லைத்தானே, எனவே அடி எனக்கு விழாது என்பதில் உறுதியாய் இருந்தேன். ‘உம்மை ஒரு தம்பி மாதிரி நினைதேன். நீரே அவனுக்கொரு கடிதம் எழுதிக்கொடுத்து இருக்கின்றீர். உமக்கே இது சரியா இருக்கிறதா?’ என்று அந்தப்பெண் நேராய்க் கேட்டார். அங்கே நின்று அதிக நேரம் கதைக்கமுடியாது என்பதால், வகுப்பில் இடைநடுவில் எழுதிய நீண்ட கடிதத்தை என்னிடம் தந்தார். அதில் அவர் தனது தம்பி ஒருவரை சிலவருடங்களுக்கு முன் தான் இழந்திருக்கின்றார் என்றும் பிற குடும்பக்கஷ்டங்களையும் எழுதியிருந்தார். அதனாலேயே என்னவோ ஒருவருடம் பிந்தி எங்களோடு படித்துக்கொண்டிருந்தார். அவர் தன் நிலை பற்றி எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் மிகவும் கவலையாகி விட்டது. நன்றாய் நகைச்சுவையுடன் கதைத்துக் கொண்டிருந்த நண்பனின் நகைச்சுவைக் குணம் அதற்குப் பிறகு சற்றுக் குறைந்திருந்தாலும் அவன் இந்த விடயத்தை பெரிதுபடுத்தாமல் இலகுவாய் எடுத்துக்கொண்டு நகர்ந்துபோனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

இப்படி இந்த விடயம் சுமூகமாய் முடிந்தாலும் எனக்கு இன்னொரு பிரச்சினை ஆரம்பிக்கத் தொடங்கியது. ஏற்கனவே ‘கவிதைகள்’ எழுதுபவன் என்று சிலருக்குத் தெரிந்ததுடன், இப்படி காதல் கடிதம் நண்பனுக்கு எழுதிகொடுத்ததும் தெரியவர, என்னை விட வயது கூடிய சில மாணவர்கள் வந்து தங்களுக்கும் காதல் கவிதைகள் எழுதத் தரச் சொல்லி, கேட்கத் தொடங்கினார்கள். சிலரைச் சமாளித்து தப்பினாலும், பலர் பயங்கரமான முரடர்களாய் இருந்தார்கள். கொழும்பில் அப்போது குழுக்களாய் இருந்த பாடசாலைக் காங்குகளில் இருந்தவர்களில் சிலரும் அடங்குவார்கள். எழுதித் தரமுடியாது என்றால் இரண்டு அறையாவது தராமல் விடமாட்டார்கள் என்பது மட்டும் வெள்ளிடை மலைத் தெளிவாய்த் தெரிந்தது. ‘அண்ணை, நான் நட்புக்கவிதைகள்தான் எழுகின்றனான் (உண்மையில் அப்படித்தான் அந்த வயதில் எழுதிக்கொண்டிருந்தேன்), காதல் கவிதைகள் எல்லாம் எழுதுவதில்லை என்றபோது, ‘சரி இப்போது அதையும் எழுதத் தொடங்கு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘கவிதை’ எழுத வந்த என் விதியை நொந்தபடி சிலருக்கு ‘காதற்கவிதைகள்’ எழுதிக்கொடுத்திருக்கின்றேன். நிச்சயம் எந்தப் பெண்ணும் அந்தக் கவிதைகளால் வசீகரிக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி. எனென்றால் அப்போது மு.மேத்தா போன்றவர்களின் ‘எழுது எழுது எனக்கொரு கடிதம் எழுதும் என்னை நேசிக்கின்றேன் என்று எழுதாவிட்டாலும் வேறு ஒருவரையும் நேசிக்கவில்லை என்றாவது எழுது’ போன்ற ‘அற்புத கவிதைகளில்’ மயங்கிக் கிடந்த காலம். ‘போடா போடா விசரா, எழுதிறன் எழுதிறன் ஒரு கடிதம். வேறு யாரை நேசித்தாலும் உன்னை மட்டும் நேசிக்கவில்லை என்றாவது ஒரு கடிதம் உனக்கு எழுதித் தாறன்’ என்றுதான் அந்தப் பெண்கள் கூற விரும்பியிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

டி சே தமிழன்

 

உயர்தரம் படித்து முடியும்வரை காதலிப்பதில்லை என்பதில் ‘தெளிவாய்’ இருந்தேன். ஆனால் வகுப்புகளுக்கு வரும் பெண்களைப் பார்த்து சலனமடைவது அன்று மட்டுமல்ல இன்றுவரை தொடர்கிறது (முன் ஜென்மத்தில் செய்த புண்ணியமாக்கும்). இப்படி சலனமடையச்செய்யும் பெண்களைப் பற்றி எனது நண்பிகளிடம் விசாரித்தால், அவர்களும் அந்தப்பெண்களின் பூர்விகம், எந்தப் பாடங்கள் நல்லாய்ச் செய்வார்கள், என்னவாய் எதிர்காலத்தில் வர விரும்புகின்றார்கள், தங்களோடு அந்தப் பெண்கள் எப்படி பழகுவார்கள் என்று எல்லாம் விபரமய் எழுதித் தருவார்கள். ஆனால் கடிதத்தை முடிக்கும்போது மட்டும், உனக்கு இவர் சரிவரமாட்டார் போலத்தான் கிடக்கிறது என்ற ஒரு அடிக்குறிப்பை மட்டும் மறக்காமல் எழுதிவிடுவார்கள். நானும் எதிர்காலத்தில் எனக்கும் பிறருக்கும் உதவுமே என்ற நல்லெண்ணத்தில் எனது database-ஐ update செய்துகொண்டிருப்பதில் சளைக்காமல் இருப்பேன். அந்தச் சமயத்தில் ‘ஆசை’ படம் வெளிவந்திருந்தது. ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’ பாடலை எப்போது கேட்டாலும் தங்கள் நினைவு வரவேண்டும் என்று அடிக்கடி இந்தத் தோழிகள் கூறுவார்கள். வஞ்சிக்கொடி வர காத்திருக்கவேண்டிய கொஞ்ச நாள் என்பது எத்தனை நாள்கள் என்று அப்போது கேட்டுத் தெரிந்திருக்கலாம். இல்லாவிட்டால் அந்தப்பாட்டைக் கேட்டபடி வருடக்கணக்காய் கனவுகளில் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை எனக்கு வந்திருக்காது.

அந்த வகுப்புக்களில் எனக்குக் கிடைத்த இந்த இரு நண்பிகளைப் போல மறக்கவே முடியாத இன்னொருவர் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இரண்டிலும் தடுமாறும்/தடுமாறிய உங்களுக்கெல்லாம் இரண்டிலும் அரைகுறை எனபார். மிகவும் பிடித்த ஆசிரியர். எதையும் அவரோடு தயங்காமல் பேசலாம்; என்னோடு ஒரு நண்பரைப்போலப் பழகியவர். ஆங்கிலத்தில் எப்படி ஒரு வாக்கியம் அமைப்பது என்பதை அவரிடம்தான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். யாழில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டாலும், பாடப்புத்தகங்களுக்கு அப்பால் போகாமல் நிறுத்தி விடுவார்கள். நாங்களும் புத்தகத்தைக் கொஞ்சம் பாடமாக்கி ஆங்கிலத்தில் ஏதோ எழுதித் தப்பிவிடுவோம். எப்படி தமிழில் ஒரு கட்டுரையை என்னுடையபாட்டில் எழுதமுடியுமோ அப்படி எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவில் என்பாட்டில் கட்டுரைகளை எழுதலாம் என்று நம்பவைத்து எழுதச்செய்தவர் அந்த ஆசிரியர். வீட்டில் பொங்கல், வருசப்பிறப்பு, நவராத்திரி இன்னபிற விழாக்களுக்காய்ச் செய்யப்படும் உணவுகளை அவருடன் பகிர்ந்தபடி ஆறுதலாய்ப் பேசிய பொழுதுகள் அருமையானவை. அவருடைய வகுப்பு என்றால் எதையும் கதைக்கலாம். ஒரு நாள் வாத்தி என்னிடம் உனக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டார். அப்போது ரோஜாவும், மீனாவும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலம். நான் உடனே ரோஜா என்று தயங்காமல் கூறினேன். வகுப்பு முடிந்து போகும்போது வகுப்பில் படிக்கும் ஒரு பெண் அருகில் வந்து, ‘சே உம்மை நல்ல ஒரு பெடியன் என்று நினைத்திருந்தேன். நீர் மீனாவை சொல்லுவீர் என்று நினைத்தால். கவர்ச்சி காட்டி நடிக்கின்ற ரோஜாவைச் சொல்லிவிட்டார். உம்மோடு எல்லாம் இனி கதைக்க முடியாது’ என்று. என்ன ஒரு பரிதாபமான நிலை. ஒரு ரோஜாவுக்காய் இன்னொரு ரோஜாவை இழக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு நாவில் புரண்ட சனியைத் தவிர வேறு எது காரணமாய் இருக்கமுடியும்? இப்போது யோசித்துப் பார்க்கும்போது, மீனாவைச் சொல்லியிருக்கலாமோ என்று யோசிக்க தோன்றுகின்றது. மீனாவைச் சொல்லியிருந்தால் அந்தப் பிள்ளையை இழந்திருக்காமல் இருந்திருக்கலாம். மேலும் மீனாவும் ரோஜாவைப் போலன்றி single-ஆய்தானே யாரோ ஒரு தீவிர இரசிகருக்காய் காத்துக்கொண்டும் இருக்கக்கூடும்.

கொழும்பில் எங்கள் வீட்டில் ஆரம்பத்தில் ரீவி, விசிஆர் போன்றவை இருக்கவில்லை. அதனால் படம் பார்ப்பதென்றால் உறவினர் வீடுகளுக்குச் சென்றுதான் பார்க்கவேண்டும். ஒரு நாள் ஒரு உறவினர் வீட்டில் படம் பார்க்கப்போய் இருந்தேன். அவர்கள் வெளியே அவசரமாக போகவேண்டி இருந்ததால் என்னைப் படம் போட்டு பார்க்கும்படி கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். கொப்பிகளைப் பார்த்தால் அதில் பெயர் எழுதப்படாத ஒரு கொப்பி இருந்தது. சரி என்னதான் இருக்கிறதென்று போட்டுப் பார்த்தால், அது ஒரு adults only படம். தொடர்ந்து பார்க்க ஆசையிருந்தாலும், யாராவது வந்துவிடுவார்களோ எற பயத்தில் சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டேன். Adults only movie பார்க்காதபோது அதைப் பார்க்கவேண்டும் போல இருந்த சுவாரசியம் அதைப் பார்த்தவுடன் போனது ஏனோ என்று பிறகு தெரியவில்லை. படத்தை நிறுத்தியபிந்தான் எனது மூளையும் விழிக்கத் தொடங்கியது. இப்படி ஒரு ‘மகா பாவத்தை’ செய்துவிட்டேனே என்ற அந்த வயதுக்குரிய பயம் வந்துவிட்டது. பிறகு இந்தப் பாவத்தை நீக்குவதற்காய் ஒருகிழமை தொடர்ந்து கோயிலுக்குப் போயிருக்கின்றேன். ஆனால் Savoy போன்ற adults only movie தியேட்டர்களில் படம் பார்பதற்காய் வரிசையில் நிற்பவர்களைப் பார்க்கும்போது இவர்கள் இப்படித் ‘தெளிந்து’ வர எத்தனை முறை கோயிலுக்குப் போயிருப்பார்கள் என்று யோசித்திருக்கின்றேன். ஒரு நாள் பாடசாலையில் ஒரு நடிகையில் (ஹொலிவூட்டாய் இருந்திருக்கவேண்டும்) பெரிய flow-up நிர்வாணப் படத்தை நண்பர்கள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். என்னையும் பாரடா என்று அவர்கள் கேட்க, ஏறகனவே ஒரு கிழமை கோயிலுக்கு அலைந்த நினைவு வர, வேண்டாமடா வினை என்று தவிர்த்துவிட்டேன். நான் எதோ ‘நல்ல பெடியன்’ முகமூடி போடுகின்றேன் என்று அவங்களுக்குத் தெரிந்ததோ என்னவோ, அவங்களும் வேணும் என்று, ‘ஆகா நல்லாயிருக்கிறது’, ‘super’ என்று படதைப் பார்த்து commets செய்துகொண்டிருந்தாங்கள். என்றாலும் பம்பலப்பிட்டி பிள்ளையாரைத் தினம் போய்த் தொந்தரவு செய்யக் கூடாது என்பதில் மிக உறுதியாய் இருந்ததால் அந்த வாய்ப்பை இழந்துவிட்டேன். நண்பர்களிடம் யார் அந்த நடிகை என்றாவது கேட்டிருக்கலாம் என்று இப்போது கொஞ்சம் கவலையாய் இருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டமாதிரி, பெண்களோடு சும்மா நின்று கதைப்பதே பெருங்குற்றமாகப் பார்க்கப்பட்டது அல்லது கதைப்பவர்கள் எல்லாம் காதலிப்பவர்களாய் இருப்பார்கள் என்பதுதான் பலரின் பொது அபிப்பிராயமாய் இருந்தது. நான் ஒரு முறை வகுப்பு முடிந்து நண்பிகளிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது, நிறுவன அதிபர் (மச்சான் உறவுமுறைப்படி) என்னைக் கழுத்தில் பிடித்து வெளியில் கொண்டுபோய் தள்ளிவிட்டது இன்னும் நினைவில் உண்டு. பிறகு எனக்குக் கூறுவதற்குப் பதிலாய் எனது நண்பிகளிடம், இவனிடம் நீங்கள் கதைத்தால் வகுப்புக்களுக்கு வராது செய்துவிடுவேன் என்று சொல்லப்பட்டதாயும் கேள்விப்பட்டேன். இப்படி சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு குறைவில்லாது இருந்தது. அதுவும் முதன் முதலாய் ஜீன்ஸ் போட்டு வகுப்புக்கு வந்த பெண்ணை எங்களின் கடிகளால் கிட்டத்தட்ட அழுகின்ற வரைக்கும் கொண்டு வந்ததை நினைத்தால் இப்போது சற்று சங்கடமாய் இருந்தாலும் அந்த வயதுக்குரிய நிலையில் அது சந்தோசமாய் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இத்தனைக்கும் அந்தப்பெண் எனது நண்பர்களில் ஒருவரின் காதலியாக இருந்தவர். அதானால்தானோ கூட பகிடி செய்தமோ தெரியவில்லை. அவரும் தொடர்ந்து ஜீன்ஸ் அணிந்துகொண்டு வகுப்புக்களுக்கு வந்தது, எமது கடிகளைப் பெரிதுபடுத்தவில்லை போலத்தான் பிறகு தோன்றியது.

அதுபோல விஜயதசமி ஒன்றில் ஹொஸ்டலில் இருந்த பெண்கள் ஆடிய ஆட்டத்தை என்றைக்குமே மறக்கமுடியாது. அதுவும் இந்தப்பூனையும் பால்குடிக்குமா என்று வகுப்புக்களில் அமைதியாயிருக்கும் ஒரு பெண் (நாம் அவருக்கு சூட்டிய பெயர் பணிஸ்) ‘முக்காலா முக்காப்பலாவுக்கு’ நடனம் ஆடியது இன்றும் கண்ணுக்குள் நிற்கிறது. ஆண்கள் என்று நானும் இன்னொரு உறவுக்காரனும் மட்டுமே ஹொஸ்டல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டோம். அதற்குக்காரணம் நாங்கள் ரீயூசன் அதிபருக்கு உறவினராய் இருந்தமையே. பெண்கள் நடனம் ஆடிவிட்டு எங்கள் இருவரையும் ஆடச்சொல்லிக் கேட்டார்கள். அவர்கள் ஆடிய நடனங்களைப் பார்த்து, ஆட்டத்தின் அரிச்சுவடி எதுவுமே தெரியாத எனக்கே ஆடவேண்டும் போல் கால்கள் உதறினாலும், இப்படி பெண்களின் முன் அவமானப்பட்டு மட்டும் விடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாய் இருந்தேன். ஏதோதோ காரணங்கள் எல்லாம் சொல்லிச் சமாளித்துக்கொண்டிருந்தோம். உண்மையான ‘உண்மையை’ அந்தப் பெண்கள் எங்கள் பேச்சைப் பார்த்தே அறியாமலா இருந்திருப்பார்கள்?

எனது மாமியொருவர் தெஹிவளைக் கடற்கரையையொட்டிய இடத்தில் வசித்துக்கொண்டிருந்தார். கடற்கரைக்கு அருகில் முளைத்திருக்கும் தாழைகள், பாதிரிமரங்களுக்கருகில் காதற்சோடிகள் மத்தியான வெயில்,மழை என்று எல்லாம் பார்க்காது உட்கார்ந்திருப்பார்கள். எங்களின் (எனதும் என் வயதொத்த மச்சான் ஒருவனின்) பொழுதுபோக்கு என்னவென்றால் அவ்வாறு ஆழமாய் காதலித்துக்கொண்டிருக்கும் சோடிகளுக்கு கல்லெறிந்து இயல்பு நிலைக்கு வரச்செய்வது. ஆனால் நாங்கள் எங்கள் முயற்சிகளில் தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருப்போம். அனேகமான சோடிகள் ஏதோ நுளம்பு கடித்தது மாதிரி திரும்பிப்பார்த்துவிட்டு காதல் கடிவாளத்தைத் தட்டிவிட்டபடி இருப்பார்கள். இப்படி அடிக்கடி தண்டவாளத்தருகில் நடக்க ஆரம்பித்ததன் உண்மைக்காரணம் புரிந்ததோ என்னவோ, பிறகு மாமி எங்களை அந்தப்பக்கம் போகவிடுவதில்லை. கல்லெறிந்த பாவந்தான் இப்போதும் என்னை விடாது துரத்துகின்றது போல. அப்போதே அந்தச் சோடிகளில் எவரிடமாவது, ‘ஒரு காதலில் வெற்றிபெற என்னவெல்லாம்’ செய்யவேண்டும்?’ என்று கேட்டிருந்தால் நான் இப்படி அவலநிலையில் நின்று எழுதிக்கொண்டிருக்க நேர்ந்திருக்காது. ஆகக்குறைந்து ஒரு காதல் துணை கிடைக்காவிட்டாலும், ‘கடற்கரையில் நுளம்பு கடிக்கும்போதும் கல்லெறி விழும்போதும் விடாது காதலிப்பது எப்படி?’ என்று மணிமேகலைப் பதிப்பகத்தை ( இன்னொரு பதிப்பகமும் நினைவுக்கு வருகின்றது)கொண்டு புத்தகம் வெளியிடச் செய்து பிரபலமான எழுத்தாளரும் ஆகியிருக்கலாம்.வாழ்க்கையில் எவ்வளவு அருமையான பெண்களைச் சந்திந்திருக்கின்றேனோ அதுபோல சில பெண்களை வாழ்க்கைப் பாதையில் சந்திருக்காமலிருந்திருந்தால் மிகவும் நனறாக இருந்திருக்கும் என்றும் நினைத்திருக்கின்றேன். பெண்களைப்பற்றிய எனது புரிதல் இந்த இரு தோழிகளிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றது. அக்காவுடன் சேர்ந்திருந்த காலங்கள் என்பது மிகவும் குறைவு என்றாலும் தொலைவிலிருந்தபடி ஒரு ஆளுமையாக அக்கா எனக்குள் அமர்ந்திருக்கின்றார் என்பதையும் மறுக்கமுடியாது. இந்த நண்பிகளை எனது பதின்மத்தில் பெறாதிருந்தால் பெண்கள் பற்றிய எனது புரிதல் நிச்சயம் வேறு திசையில் நகர்ந்திருக்கும் என்றுதான் உறுதியாய்க் கூறுவேன். வாழ்க்கையில் பிறகு சில cruches வந்தாலும் இந்தப்பெண்கள் மீது எனக்கோ அல்லது அவர்களுக்கோ எந்த crushes-ம் வராதது நட்பு நட்பாய் மட்டும் இருக்கவும்முடியும் என்பற்கு ஒரு சின்னச் சாட்சி. அண்மையில் உரையாடிய ஒரு பெண்மணி, எனது எழுத்துக்களில் பெண்களின் ஆக்கிரமிப்புத்தான் அதிகம் தெரிகிறது என்று (பிழையான அர்த்தத்தில் சொல்லவில்லை) சொல்லியதும் அதுபோல எனது பதிவுகளை வாசிக்கும் எனது குடும்ப அங்கத்துவர் ஒருவர், ஆண்கள் மட்டும்தான் இந்தச் சமூகத்தில் தவறு செய்கின்றார்கள் என்ற அர்த்தம் வரும்படி உனது எழுத்துத்தொனி இருக்கின்றது என்று கூறியதும் நினைவுக்கு வருகின்றது. இதற்கு என்ன காரணமாய் இருக்கும் என்று நானும் யோசித்துப் பார்த்திருக்கின்றேன். சிலவேளைகளில் எனது முக்கிய பருவங்களில் எனது குடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ பெண்களை நேரடியாகச் சந்திக்காததால் வந்த பாதிப்பாயும் இருக்கலாம் அல்லது எனது பதின்மத்திலிருந்து இன்றுவரை பல அரிய தோழிகள் கிடைத்துக்கொண்டிருப்பதுவும் முக்கிய காரணமாயிருக்கலாம்.

 டி.சே தமிழன்-கனடா

டிசே தமிழன்

 

 

 

https://naduweb.com/?p=16015

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.