Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

பிரித்தானியாவில் தமிழின் எதிர்காலம்::வி.இ.குகநாதன்

spacer.png

பிரித்தானியாவில் ஏறத்தாழ 200 000 தமிழர்கள் இருப்பததாகக் கணிக்கப்படுகின்றது. 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பீட்டில் (In 2008, community estimates) 150 000 தமிழர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையின் படி, 2006 இல் 110 000 ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு பெருந்தொகையில் இங்கு வாழும் தமிழர்களின் மொழியான தமிழ்மொழிக் கல்வியானது எவ்வாறு உள்ளது, அக் கல்வியின் பயன்கள், அதன் எதிர்காலம் என்பன தொடர்பான ஒரு சிறு ஆய்வாகவே இக் கட்டுரை அமைகின்றது.

இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள் {மிகப் பெருமளவுக்கு இரண்டாம் தலைமுறை மாணவர்கள்}. இதில் பெருமளவு பள்ளிகள் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் (Tamil Education Development Council ) நடாத்தப்படுகின்றன. கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பள்ளிகளில் 60 000

spacer.png

மாணவர்கள், 3500 ஆசிரியர்களிடமிருந்து ( உலகின் சில நாடுகளிலிருந்து) கல்வி கற்பதாக அதன் இணையத்தளம் கூறுகின்றது. இதில் குறிப்பிடத்தக்களவினர் இங்கிலாந்திலிருந்து கல்வி கற்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். கல்வி மேம்பாட்டுப் பேரவையினை விடப் பிற சில அமைப்புக்களாலும் கூட ஒப்பீட்டுரீதியில் சிறியளவில் பள்ளிகள் நடாத்தப்படுகின்றன. இவற்றில் வளர்நிலை 1 தொடங்கி வளர்நிலை 12 வரை மாணவர்கள் கற்பிக்கப்படுகின்றார்கள். இப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி வருகின்றார்கள்; அத்துடன் பெற்றோர்களும் தமது நேரம், பணம் என்பவற்றினைச் செலவழித்துப் பிள்ளைகளைத் தமிழ் கற்க அனுப்பி வருகின்றார்கள். இவை எல்லாம் பாராட்டப்பட வேண்டிய நிகழ்வுகளே, ஆனால் இங்கு சில சிக்கல்களும் எழுகின்றன.

முதலாவதாக வளர்நிலை ஒன்றில் சேரும் மாணவர்களில் எத்தனை விழுக்காட்டினர் வளர்நிலை 12 வரைச் செல்லுகின்றார்கள். தெளிவான தரவுகள் என்னிடம் இல்லாதபோதும், பெருமளவானோர் இடை நிற்கின்றனர். இந்த இடைநிற்றலுக்குக் காரணமாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்.

  • பிள்ளைகள் வளரும் போது அவர்களின் முதன்மைப் பள்ளிப்பாடச் சுமைகள் (தேசியப் பள்ளிப் பாடச் சுமைகள்) அதிகரித்தல்
  • பெற்றோர்களின் உந்துதலால் சிறு வயதில் சேர்ந்தாலும் வளர வளர பெற்றோரின் பிடியிலிருந்து படிப்படியாக விடுபடுதல்
  • பிற துறைகளில் (விளையாட்டு, கலை…) செலவிடப்படும் நேரத்துக்கான பயனுடன் ஒப்பிடும் போது, தமிழினைக் கற்பதால் ஏற்படும் பயனை ஒப்பீட்டுப் பார்த்தல். { அமையச் செலவு (Opportunity Cost)}.
  • தமது எதிர்கால முன்னேற்றத்துக்குத் தமிழைப் படிப்பதால் ஏற்படும் பயன்கள். குறிப்பாக பல்கலைக் கழக அனுமதிக்கான பயன்கள் தொடர்பான ஐயங்கள்.

மேலே கூறப்பட்டவை போன்ற இன்னமும் சில காரணங்களாலேயே இடைநிற்றல் அதிகமாகக் காணப்படுகின்றது.

இரண்டாவது பெரும் சிக்கலாக தமிழ் மொழிக் கல்வியின் எதிர்காலம் குறித்த உறுதியின்மை காணப்படுகின்றது. ஏற்கனவே இரண்டாம் தலைமுறை மாணவர்களின் இடை நிற்றல் பற்றிப் பார்த்தோம். இவர்கள்தான் மூன்றாம் தலைமுறையினரைத் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய பெற்றோராக விரைவில் மாறப் போகின்றவர்கள். இவர்கள் எவ்வாறு தற்போதைய முதலாம் தலைமுறைப் பெற்றோர்கள் போன்று அக்கறைப்பட்டுத் தமது எதிர்காலப் பிள்ளைகளைத் தமிழ் கற்க அனுப்புவார்கள்!. மூன்றாம் தலைமுறையிலேயே சேடம் இழுக்கப்போகும் தமிழ்ப் பள்ளிகள், எவ்வாறு நான்காம் தலைமுறையினரைக் காணும்? அவ்வாறு நடைபெற்றால், இன்று மொரிசியசிலும் ரீயூனியன் பகுதியிலும் வாழும் தமிழ் தெரியாத ஒரு தமிழ்த் தலைமுறை போன்ற ஒன்று விரைவில் இங்கும் தோன்றப் போகுன்றதே! இங்குதான் எமது தமிழ் மொழிக் கல்விக்கு பெறுமதி கூட்ட வேண்டிய (Value addition) இடத்துக்கு, நாம் வந்து சேருகின்றோம்.

தமிழ் மொழிக் கல்வியின் பெறுமதி:

தமிழ் மொழிக் கல்வியின் பெறுமதி கூட்டல் செய்முறைக்கு வருவதற்கு முதலில், இப்போது இங்கிலாந்தில் தமிழ்மொழிக் கல்வியின் பெறுமதி என்னவாகவிருக்கின்றது எனப் பார்ப்போம். கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலோ அல்லது அது போன்ற அமைப்புகளாலோ வழங்கப்படும் (வளர்நிலை 1 முதல் 12 வரை) சான்றிதழ்களுக்கு எந்தவிதப் பெறுமதியும் வேலை சார்ந்தோ/ பல்கலைக் கழக அனுமதி சார்ந்தோ இல்லை என்பதே உண்மை. இங்கு கல்வி மேம்பாட்டுப் பேரவை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வழங்கும் `தமிழ்மாணி`ச் சான்றிதழுக்கும் இங்கிலாந்தினைப் பொறுத்தவரை அதே நிலைதான் {கல்வி மேம்பாட்டுப் பேரவை தமிழ்ப் பள்ளியிலேயே வழங்கும் ஆசிரியர் வேலைகள்= பகுதி நேர குறைந்தளவிலான வேலைகள் புறநடை}. இதுதான் இன்றைய தமிழ்மொழிக் கல்வியின் பெறுமதி. சிலர் தமிழைப் பெறுமதிக்காகத்தான் படிக்க வேண்டுமா? தாய் மொழிப் பற்றுக்காகப் படிக்கக் கூடாதா? எனக் கம்பு சுற்றினால், நாம் இங்கு பேசுவது மூன்றாம், நான்காம் தலைமுறை பற்றி என்பதைக் கவனத்திற்கொள்க.

அவ்வாறாயின் எவ்வாறு தமிழ் மொழிக் கல்விக்குப் பெறுமதி கூட்டலாம் எனப் பார்ப்போம். உண்மையில் பலரும் கலந்துரையாடிச் செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுக் கடமைதான் இதுவெனினும், சில முன்மொழிவுகளை முன்வைத்து இக் கட்டுரையானது இந்த உரையாடல் வெளியினைத் தொடங்கி வைக்க எண்ணுகின்றது. முதலாவதாக இங்கு ஏற்கனவே கேம்பிரிச் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவான CAIE { Cambridge Assessment International Education} இனால் தமிழ்மொழித் தேர்வுகள் OL , AL மட்டங்களில் நடாத்தப்படுகின்றன. CAIE ஆனது இங்கு மட்டுமல்லாமல் 160 நாடுகளில் 10000 பள்ளிகளில் வெவ்வேறு துறைகளில் தேர்வு நடாத்துகின்றது. 5 வயது முதல் 19 வயது வரை இந்த அமைப்பில் கற்பிக்கப்படுகின்றது. CAIE இனால் வழங்கப்படும் தமிழ் மொழிப் பாடச் சான்றிதழ் (AL) தொடர்பான ஒரு குழப்பம் இங்கு பலரிடமுள்ளது. குறிப்பாக தமிழ் AS, AL மட்ட சான்றிதழ்கள் பல்கலைக் கழக அனுமதிக்கு எந்தளவுக்கு உதவும் என்ற ஒரு குழப்பமே அதுவாகும். UCAS` scale இன் படியான (Tariff points) புள்ளிகளுக்கு இவை சேர்கப்படவில்லை; எனினும் பல நாடுகளிலும், இங்கும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் அவற்றினை (CAIE, GCE AL ) சமனாக ஏற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையுமில்லை. பல பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் UCAS` tariff இன் படி அனுமதி வழங்காமல் British A Levels இன் Grades இனை அடிப்படையாகக் கொண்டு தமது (Offer) முனைவுகளை வழங்க முன்வருகின்றன. இவ்வாறான வேளைகளில் கேம்பிரிச் CAIE A Level இன் தரங்களானவை British A Level தரங்களுக்குச் சமனாகவே கொள்ளப்படுகின்றன { British AL grades = CAIE AL grades}. குறிப்பாக Bristol King`s college London, LSE and Cambridge , அமெரிக்க நிறுவனங்களான Yale, MIT, Columbia and Duke போன்ற பல உயர்கல்வி நிறுவனங்களில் CAIE இன் AL சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றினை நீங்கள் விரும்பினால் CAIE இனை கடிதம்/ மின்னஞ்சல் மூலம் அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளலாம். எனவே ஏற்கனவே எம்மிடம் பெறுமதி மிக்க ஒரு தேர்வுமுறை உண்டு. இதனை உரிய விளக்கங்களுடன் மாணவர்களுக்கு எடுத்துச் சென்று, அவர்களை அத் தேர்வினை (CAIE AL ) எடுக்க வைப்பதே இதன் முதற் படி நிலையாகும். இதற்கு ஆண்டு தோறும் போதியளவு மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். தவறுவோமாயின் ஏற்கனவேயிருந்த OCR {Oxford, Cambridge & RSA } தேர்வு முறையினைப் போதியளவு தமிழ் மாணவர்கள் இல்லாது முன்னர் இழந்த நிலை போன்று இப்போதும் ஏற்படலாம். ஏற்கனவே கல்வி மேம்பாட்டுப் பேரவை, இலண்டன் தமிழ் நடுவகம் (London Tamil centre ) போன்ற அமைப்புகள் CAIE தேர்வுக்கு மாணவர்களை அனுப்பியே வருகின்றன. இவை போதுமானளவில் இல்லை. குறிப்பாக கல்வி மேம்பாட்டுப் பேரவையின் வளர்நிலை 12 தேர்வினை விட, CAIE இன் தமிழ் AL தேர்வானது ஒப்பீட்டுரீதியில் இலகுவானதும், கூடிய பயனுடையதுமாகவிருக்க; அதனை எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவிருப்பது வியப்பாகவுள்ளது. {இதன் உள் அரசியலுக்குள் இப்போதைக்கு இக் கட்டுரை போக விரும்பவில்லை}. எனவே இது தொடர்பான ஒரு பெரிய விழிப்புணர்வினை மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஏற்படுத்த வேண்டும்.

அடுத்த கட்டமாக, UCAS` tariff இற்குள் தமிழ் மொழித் தேர்வுகளைக் (AL results)கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எத்தகைய தேர்வுகளை அப் பட்டியலுக்குள் கொண்டு வர முயற்சிப்பது? அதற்கு எவ்வாறு பாடத் திட்டங்களைத் தயாரிப்பது? எழுத்து, வாசிப்பு, கேட்டல் என்பவற்றுடன் பேச்சினை எவ்வாறு உள்ளடக்குவது எனப் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட வேண்டும். ஆகக் குறைந்தது இது தொடர்பான கலந்துரையாடல்களையாவது இப்போதைக்குத் தொடங்க வேண்டியுள்ளது.

spacer.png

இவை எல்லாவற்றினதும் இறுதி இலக்காகப் பிரித்தானியத் தேசிய பள்ளிகளில் எவ்வாறு தமிழினை இரண்டாம் பாடமாக இணைப்பது எனச் சிந்திக்க வேண்டும். ஏற்கனவே இங்கு இரண்டாம் மொழிப் பாடங்களாக பிரென்சு, யேர்மன், அராபிக், ஸ்பானிஸ், சீனம்(Mandrain) போன்ற மொழிகளுள்ளன. அவ்வாறு தமிழையும் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். பின்லாந்து, ஆத்திரேலியா (New South Wales ) போன்ற இடங்களில் தமிழானது இரண்டாம் மொழியாக அரசால் கற்பிக்கப்படுகின்றது. எனவே இங்கும் அத்தகைய ஒரு முன்னெடுப்பினைச் செய்ய வேண்டும். இங்கிலாந்திலுள்ள எல்லா மக்களிடையேயும் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 62% ஆனோர் ஆங்கிலம் தவிர்ந்த பிற மொழியேதும் அறியாதவர்களாக உள்ளமை தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, இங்குள்ள பல வணிக அமைப்புகள் பிரித்தானிய அரசினை பிற மொழிக் கல்விகளுக்கு கூடிய முதன்மை கொடுக்கச் சொல்லி அழுத்தம் தரும் இவ் வேளையில் எமது முயற்சியினைத் தொடங்குவது பொருத்தமானதாகவிருக்கும். புதிய பேரத்துடனான பிரித்தானிய வெளியேற்றம் ( BREXIT with new deal ) மேலும் பிற மொழித் தேவைகளை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம். இங்கு பிற ஐரோப்பிய நாடுகளிலுள்ள தமிழர்களுடனான தொடர்பாடலுக்கு எமக்குத் தமிழ் கைகொடுக்கும். இப் பயணம் பெரியதுதான், ஆனால் எப் பெரும் பயணமும் ஒரு சிறு அடியிலேயே தொடங்க வேண்டும்.

இத்தகைய மேற்கூறிய முயற்சிகளினூடாகத் தமிழுக்கு ஒரு பெறுமதி ஊட்டுவதனூடாகவே தமிழை எமது அடித்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்த முடியும். இவற்றுக்கு முதல் நாம் செய்ய வேண்டிய இரு செயல்கள் உண்டு. ஓன்று: பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, தமிழர் /பிரித்தானியத் தமிழர் எனக் குறிப்பிட வேண்டும்; ஆசியர்கள் என்பதிலுள்ள பிற ஆசியர்கள் ( Other Asians ) என்பதைத் தெரிவு செய்து பின்பு தமிழர்/ பிரித்தானியத் தமிழர்(British tamil) எனக் குறிப்பிட வேண்டும். சிறீலங்கா /இந்தியா எனக் குறிப்பிடக் கூடாது. இதன் மூலம் இங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கையினை அரசுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் எமது மொழி சார்ந்த வேண்டுகோள்களை வென்று எடுக்க முடியும் {கட்டுரையின் தொடக்கத்திலுள்ள தமிழரின் எண்ணிக்கை பற்றிய தெளிவின்மையினைப் போக்கலாம்}. இரண்டு: முடியுமானளவுக்குப் பிள்ளைகளுடன் தமிழில் வீட்டில் பெற்றோர் உரையாட வேண்டும். பயன்பாட்டிலில்லாத எந்த மொழியுமே தேய்ந்து போகும். அவ்வாறு பயன்படுத்தாவிடில் இரண்டாம் தலைமுறையிலேயே எமது கண்ணுக்கு முன் தமிழ் இங்கு அழிந்து போகும்.

 

 

https://inioru.com/tamil-schools-in-the-uk/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2020 at 20:45, கிருபன் said:

ஆத்திரேலியா (New South Wales ) போன்ற இடங்களில் தமிழானது இரண்டாம் மொழியாக அரசால் கற்பிக்கப்படுகின்றது

NSW பாடசாலைகளில் தமிழ் ஒரு மொழியாக கற்பிக்கலாம். உண்மையில் இதற்கு உழைத்தவர்களுக்கு நன்றி கூறவேண்டும்..

ஆனால் எனக்குள் எழும் கேள்வி இதுதான்..சாதாரணமாக பாலர்பள்ளியில் 3 அல்லது 4 வகுப்புகள் வைக்கும் அளவிற்கு வரும் பிள்ளைகளில் அரைவாசிக்கும் குறைவாகவே திரும்ப வருகிறார்கள். ஏனெனில் ஆண்டு 3ல் Opportunity Class பரீட்சைக்காக தமிழ் கற்பதில் இடைநிறுத்தி வைக்கப்படும் பிள்ளைகள், ஆண்டு 6 Selectively School பரீட்சையை முடித்தபின்பே பெற்றோரால் திருப்ப தமிழ் படிக்க அனுப்புபடுகிறார்கள். ஆகையால் நீண்ட காலத்திற்கு இது நிலைத்திருக்குமா என்பது எனது சந்தேகமே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.