Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் விரோத சக்திகளைக் கழுவித் துடைக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள்.! - நா.யோகேந்திரநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விரோத சக்திகளைக் கழுவித் துடைக்கும் போலித் தமிழ் தேசியவாதிகள்.! - நா.யோகேந்திரநாதன்

Screenshot-2021-01-12-23-34-10-810-org-m

அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் தெரிவில் ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன் ஈழமக்கள் ஜனநாயக முன்னணியினரதும் சில தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களினதும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை மேயராகப் பதவி வகித்து வந்தவரும் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் பதவியிழந்தவருமான ஆர்னோல்ட் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஒரு மாநகர சபையையே நடத்த முடியாதவர்கள் மாகாண சபைத் தேர்தலைக் கோருகின்றனர் எனக் கேலி செய்திருந்தார். வாய் திறந்தால் இனவிரோதக் கருத்துகளைவிட வேறு எதையுமே பேசியறியாத அந்த முன்னாள் கடற்படைத் தளபதியின் வார்த்தைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்ற போதிலும் அவர் கூறியதில் உள்ள உண்மையை நிராகரித்து விடமுடியாது.

மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை போன்ற நிறுவனங்களில் அச்சபைகளின் நிர்வாகத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை அவர்களின் கட்சிகளைச் சேர்ந்தவர்களே கொண்டு வருவதும், வரவு செலவுத்திட்டங்களைத் தோற்கடிப்பதும் அடிக்கடி இடம்பெற்ற நிகழ்வுகளாகிவிட்டன. ஒரு கட்சியிலுள்ளவர்களே சபைகளில் தங்கள் கட்சியினருடன் மோதி ஊடகங்களுக்கு பரபரப்புச் செய்திகளை வழங்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி வந்தனர்.

இப்படியான சபைகளில் யாழ்.மாநகர சபை இன்னுமொரு கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, இத்தேர்தல் முடிவின் அடிப்படையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரனுக்குமிடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.

மாவை சேனாதிராஜாவின் தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாகவே யாழ்.மாநகர சபை மேயர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது எனவும், ஆர்னோல்டைத் தவிர வேறு யார் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரவு தரத் தயார் எனக் கஜேந்திரகுமார் அறிவித்திருந்தும், வரவு செலவுத் திட்டத்தால் தோற்கடிக்கப்பட்ட ஆர்னோல்ட்டை போட்டியிட வைத்தமையாலேயே தோல்வி ஏற்பட்டதெனவும் தாங்கள் சோ.சிறில் அவர்களை வேட்பாளராக நிறுத்தவே முயன்றதாகவும் சுமந்திரன் மாவை சேனாதிராஜா மீது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேவேளை மாவை சேனாதிராஜா ஆர்னோல்ட்டின் வேட்பாளர் நியமனம் உரிய முறைப்படி தான் இடம்பெற்றதாகவும் சுமந்திரன் கட்சிக்குள் கதைக்க வேண்டியவற்றை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுகிறார் எனவம் அவர் தலைமைக்கெதிரான அவதூறுகளை இரண்டாவது முறையாகவும் பகிரங்கமாக வெளியிடுகிறார் எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் ஆர்னோல்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்டது தொடர்பாகத் தனக்கு எதுவுமே தெரியாதெனப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழரசுக் கட்சியின் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இயங்கு சக்திகளாக இருப்பவர்கள் ஒரு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியாமல் ஒருவருடன் ஒருவர் பகிரங்கமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இவர்கள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நேர்மையாகவும் இறுதியுடனும் முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்பமுடியுமா?

கடந்த உள்ள10ராட்சி சபைத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் இவர்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழக்கும் வேகம் அதிகரித்துக்கொண்டு போகிறதென்ற செய்தி தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்பான இவர்களின் நிலைப்பாட்டின் மீது தமிழ் மக்களுக்கு வளர்ந்துவரும் நம்பிக்கையீனம் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடபகுதியில் வழமையாக ஒரேஒரு ஆசனத்தை மட்டும் பெற்று வந்த ஈ.பி.டி.பியினர் இரு ஆசனங்களைப் பெறவும், அங்கஜன் இராமநாதன் அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெறவம் முடிந்தது.

கடந்த உள்ள10ராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரேயொரு சபையைத் தவிர வடக்கில் ஆட்சியமைக்குமளவுக்கு எந்தவொரு சபையிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை. எனவே தமிழ்த் தேசியத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் உள்ளுராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கும்மென்றே தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மாவை சேனாதிராஜா சுமந்திரனின் ஆலோசனையின்பேரில் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு தமக்கு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைக் கோரினார்.

அதன் காரணமாக வடபகுதியில் உள்ள உள்ள10ராட்சி சபைகளில் ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் ஆட்சிகள் அமைக்கப்பட்டன.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் காலம் காலமாக தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்தவர்கள். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் எவ்வித ஒளிவு மறைவுமின்றிப் பகிரங்கமாகச் செயற்பட்டவர். போர்க் காலத்திலும் அதன் பின்பும் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவாளர்களைப் படுகொலை செய்வதிலும் தமிழ் இளைஞர்களைக் காணாமற் போகச் செய்வதிலும் அவர்கள் இராணுவப் புலனாய்வுக் குழுவினருடன் ஒட்டுக்குழுவாக இணைந்து செயற்பட்டனர் எனவும் பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நாணமுமின்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்துவிட்டு ஈ.பி.டி.பி.யினரைப் பங்காளிகளாகக் கொண்டு உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைத்தனர். அப்போது யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ், "எம்மைத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டி வந்த த.தே.கூட்டமைப்பினர் எம்மை அங்கீகரித்து எமது ஆதரவைப் பெற்றுக்கொண்டதன் மூலம் நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை ஏற்றுகொண்டு விட்டனர்" எனக் கூறியதை மறந்துவிட முடியாது. அது தொடர்பாக த.தே.கூட்டமைப்பினர் எவரும் மறுப்போ கண்டனமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சுமந்திரன் அந்த நடவடிக்கையை தன் அப்புக்காத்து வாதங்கள் மூலம் நியாயப்படுத்தி வந்தார். அடிப்படையில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புலி எதிர்ப்புக் கொள்கை காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகச் செயற்பட்டு வந்த கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரை அரசியலில் தலையெடுக்கவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் அவர்கள் செயற்பட்டனர்.

அதற்காக அவர்கள் எதிரியுடன் சேரவும் சரணடையவும் தயங்கவில்லை. அவர்களின் கயிற்றில் ஆடிய மாவை சேனாதிராஜாவும் அக்குற்றத்திலிருந்து தப்பிவிடமுடியாது.

அன்று மக்கள் விரோத சக்திகளை அரவணைத்துக் கழுவித்துடைத்த அதேவேளையில் தேசிய சக்திகளை நிராகரித்ததன் பலாபலனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக்கொண்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய விரோதிகளான ஈ.பி.டி.பி.யுடன் உள்ள10ராட்சி சபைகளில் நல்லுறவைப் பேண முடியுமானால், தாங்கள் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அங்கஜன் இராமநாதனுக்கும் வாக்களிப்பதில் என்ன பிழை என தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதியிருந்தால் அதைத் தவறெனச் சொல்லிவிடமுயுமா?

சொலமன் சிறில் ஒரு புலிகளின் ஆதரவாளர் என்ற காரணத்தால் இது காலவரைத் த.தே.கூட்டமைப்பின் தலைமைகளினால் புறமொதுக்கப்பட்டவர் என்பதை மறந்து விடமுடியாது. தற்சமயம் சொலமன் சிறிலின் பெயர் பாவிக்கப்படுவது உண்மையில் அவரை மேயராகக் கொண்டுவரவேண்மென்ற அக்கறையுடன்தானா என்ற கேள்வியும் எழுகிறது.

அடிப்படையில் யாழ்.மாநகர சபைத் மேயர் தெரிவில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஆர்னோல்ட், மாவை சேனாதிராஜா ஆகிய தனிநபர்களைக் குற்றம் சுமத்தி விட்டு உண்மையான காரணகர்த்தாக்கள் தாங்கள் தப்பிவிடமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி அதன் தலைமை தமிழ்த் தேசிய முகமூடியை அணிந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்ற முயன்றதே தொடர்ந்து சந்திக்கும் தோல்விகளுக்கு உண்மையான காரணமாகும்.

இது ஒரு தனித் தோல்வியல்ல? கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் என்பற்றில் பெற்ற தோல்விகளின் தொடர்ச்சி என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

2015ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, தமிழ் மக்களின் நலன்களை ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்தியவர்களே இத்தகைய தொடர் தோல்விகளுக்கும், இனி வரப்போகும் தோல்விகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டும்.

1965ம் ஆண்டு தமிழரசுக் கட்சி ஐக்கி;ய தேசியக் கட்சித் தலைமையிலான ஏழு கட்சிக் கூட்டணியில் பங்காளியாகி அமைச்சுப் பதவியும் பெற்றது. நாலரை வருடங்கள் மாவட்ட சபை என்ற மாய மானைத் தமிழ் மக்களுக்குக் காட்டி வந்தது. நான்கரை ஆண்டுகளில் மாவட்ட சபை தரமுடியாதென டட்லி செனநாயக்க மறுத்துவிட்ட நிலையில் ஆட்சியிலிருந்து வெளியேறினர். அப்படி வெளியேறிய போதும் வெளியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி, அதன் ஆட்சிக்காலம் முழுவதும் அதைக் காப்பாற்றினர்.

2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிர்க் கட்சியிலிருந்தே சகல விதமான ஆதரவையும் வழங்கிய த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு "புதிய அரசியலமைப்பு" என்ற மாய மானைக் காட்டி வந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பின்பு புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்பது தெரிந்த பின்பும் கடைசிவரை ஐ.தே.கட்சி அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வந்தது.

1970 தேர்தலில் பல தொகுதிகளில் தமிழரசுக் கட்சியைத் தோற்கடித்து தமிழ் மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டினர். 2020 தேர்தலில் த.தே.கூட்டமைப்புக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் அன்றும் சரி, இன்றும் சரி ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்களுக்கு தமிழ் மக்களின் நலன்களைக் கீழ்ப்படுத்துவதை எந்த ஒரு தமிழ் மகனும் ஏற்கத் தயாரில்லை. ஆனால் தமிழரசுக் கட்சியினரோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ தங்கள் அனுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.

டட்லி சேனநாயக்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் டக்ளஸ் தேவானந்தா போன்ற மக்கள் விரோத சக்திகளைக் கழுவித் துடைத்து அவர்களுடன் நல்லுறவைப் பேணி தமிழ் மக்களின் நலன்களைப் புறந்தள்ளும் தீய சக்திகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து களையெடுக்காவிடில் தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகவே அமைந்துவிடும் நிலைமை ஏற்படுவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலரங்கை விட்டு காணாமற் போய்விடவும் கூடும்.

அருவி இணையத்திற்காக நா.யோகேந்திரநாதன்.

http://aruvi.com/article/tam/2021/01/12/21492/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.