Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடிதமும் கடந்து போகும் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடிதமும் கடந்து போகும் !
=====================

 

நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தாளில் நண்பருக்கோ உறவினருக்கோ கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? போன வாரம்? போன மாதம்? போன வருடம்? அல்லது சில வருடங்களுக்கு முன்னர்?

ஆமாம், இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் ஒன்றுதான்  கடிதம். ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது பிரதான தொடர்பாடல் ஊடகமாக கடிதமே இருந்தது. அதற்கு தந்தி, தபால் அட்டை, inland letter, aerogram, air mail என்று வேறுவேறு வடிவங்களும் இருந்தன. 

Inland letter இந்தியாவில் மக்களிடையே உள்ளூர் கடிதத் தொடர்பில் அதிகம் புழக்கத்தில் இருந்தது. இதற்கு தனியாக கடித உறை மற்றும் முத்திரை தேவையில்லை (Ready made ஆடை போல). இது இரண்டு பக்கங்களைக் கொண்டது. அதில் ஒரு பக்கம் முழுவதும் எழுத முடியும், மறுபக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் எழுத முடியும். மேலே உள்ள இரண்டு பகுதிகளில் அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசத்தை எழுதி அதனையே மடித்து ஒட்டி அனுப்பி விடலாம். 
இதே வடிவத்தை ஒத்த aerogram கடிதம் இலங்கையில் வெளிநாட்டுக்கு அனுப்பும் வகையாக பயன்பாட்டில் இருந்தது. இதைத் தவிர கடித உறையோடு முத்திரை ஒட்டி அனுப்பும் Air Mail மூலம் கடிதத்துடன், எமது குடும்பப் படங்களை வைத்து வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவருக்கு அனுப்புவோம். வீட்டுத் தலைவரும் தான் வேலை செய்யும் நாட்டில் எடுத்த சில படங்களை அனுப்புவதுண்டு. செலவு குறைந்த முறையாக இருந்ததால் இலங்கையில் உள்ளூர் தொடர்பாடலில் தபால் அட்டையும் மக்களிடையே அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது.

கடிதங்கள் காகிதத்தில் உள்ள வெறும் எழுத்துக்களாக மட்டும் இருக்கவில்லை. அது அனுப்புபவர், பெறுபவர் இருவருக்கும் இடையிலான உணர்வை, உறவை மட்டுமல்ல சிலநேரங்களில் மனிதர்களையே உயிப்போடு வைத்திருக்கும் ஒரு கருவியாகவே இருந்தது. குறிப்பாக தூர தேசத்தில் பணிநிமித்தம் தனியே வாழ்ந்த ஆண்கள் தம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுப்பும் கடிதங்களுக்காகக் காத்துக் கிடப்பார்கள். புதிய கடிதம் வரும்வரை கடைசியாக வந்த கடிதத்தை அடிக்கடி எடுத்த வாசித்து பரவசமாவார்கள். அவர்களின் ஆடைகள் இருக்கும் பெட்டியில் / அலுமாரியில் இந்தக் கடிதங்களுக்குக் கட்டாயம் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். 

கடிதங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் நாம் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தோம். சிலர் கடிதத்திலேயே கவிதையையும் சேர்த்தே எழுதுவார்கள். காதலர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சில கடிதங்கள் கவிதைகளாலேயே நிரம்பிருக்கும். கடிதம் எழுதுவது ஒருவகையில் பாடசாலைக் கல்விக்கு வெளியே எமக்கான எழுத்துப் பயிற்சியாகவும் இருந்தது. இவ்வாறு தமது இளமைக் காலத்தில்  கடிதங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு, அவற்றோடு இணைந்த அனுபவங்கள் இன்றும் பசுமையாக இருக்குமென்றே நான் நம்புகிறேன்.

எனக்கு முதலில் பரீட்சயமான கடிதம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய சுகவீனக் கடிதமாகும். சில பிள்ளைகள் பாடசாலைக்கு வராது வீட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நிற்பதற்காகவே தமது தாத்தா, பாட்டிமாரை அடிக்கடி கொல்வதும் உண்டு. வகுப்பாசிரியரிடம் சுகவீனக் கடிதத்தைக் கொடுத்ததும் அவர் அதைப் படிக்க முன்னர், “ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை” என்று கேட்பார். அதன் பின்னரே கடிதத்தைத் திறந்து படிப்பார். படித்த பின்னர் அதனை மடித்து வைத்துவிட்டு, வகுப்பு முடிந்ததும் தன்னுடன் எடுத்துச் செல்வார். அப்போதெல்லாம், ஆசிரியர் அந்தக் கடிதங்களை எல்லாம் கொண்டுபோய் என்ன செய்வார் என்ற கேள்வி என் மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும். 

 அடுத்து நானே கடிதம் எழுதத் தொடங்கியது என் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோதுதான். மாதம் இருமுறை அவரிடமிருந்து கடிதங்கள் வந்து சேர்ந்துவிடும். ஒரு கடிதம் வந்து ஒரு வாரத்திற்குள் பதில் கடிதம் நாங்கள் எழுதி அனுப்புவோம் என்று அவர் காத்திருப்பார். கடிதத் தாளில் அம்மாவும் பிள்ளைகள் நாங்கள் நாலுபேரும் ஒருவர் பின் ஒருவராக எழுதுவோம். நாம் ஆளுக்கு நான்கு வசனங்கள் மட்டுமே எழுதுவோம். அப்பா ஒவ்வொரு முறையும் நிறைய விடயங்களை எழுதச் சொல்லுவார். பத்து வயதில் என்ன எழுதுவது என்ற குழப்பத்தில் ஆடு குட்டி போட்டது, சைக்கிள் ஓடி விழுந்தேன் என்று ஏதோவெல்லாம் எழுதியதாக ஞாபகம். ஒருவழியாக ஐந்தாறு வருடங்களில் அவர் ஊர் திரும்பியதும் அந்தக் கஷ்டமும் நீங்கியது.

பின்னர் என் பதின்ம வயதில் வேறு பல கடிதங்கள் பற்றியும் தெரிய வந்தது. அதில் முக்கியமானது காதல் கடிதம். எங்கள் ஊரிலும் கடிதம் கொடுத்து காதல் வளர்த்தவர்கள் பலர் இருந்தார்கள். பல இடங்களில் நண்பனுக்காக கடிதம் எழுதிக் கொடுத்து காதலை வெற்றி பெற வைத்த நல்ல நண்பர்களும் இருந்தார்கள். குழப்பிவிட்டவர்களும் இருந்தார்கள்.  சிலரின் காதல் திருமணத்தில் முடிந்தாலும் வேறு சிலரின் காதல் பாதியிலேயே கருகியதும் உண்டு. கடிதத்தை கடைசிவரை கொடுக்க முடியாமலே காதலைத் தவற விட்டவர்களும் இருக்கிறார்கள்.  

அந்த நாட்களில் ஒரு ஆணுக்கு தான் காதலிக்கும் பெண்ணுக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதே பெரும்பாடு. கண்ணாலே கதை பேசி புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டாலும் காதலை உறுதிப்படுத்த கடிதங்களே ஆபத்துதவிகளாக கடிதங்களே இருந்தன. காதலைத் தெரிவிக்க அல்லது உறுதிப்படுத்த கடிதம் கொடுப்பது அப்படியொன்றும் இலகுவானதல்ல, படிக்கும் புத்தகத்தில் கடிதத்தை வைத்துக் கொடுத்துவிட்டு அல்லது அந்தப் பெண்ணின் தோழி மூலம் அனுப்பிவிட்டு என்ன பதில் வருமோ என்ற ஒரு பதட்டம் ஒருபுறம், கடிதம் தந்தை அல்லது தாயின் கைக்குப் போய் வீட்டிற்கு வழக்கு வருமோ என்ற பயம் ஒருபுறம் என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.  

வீட்டுக்கு வீடு தொலைபேசிகள் கூட இல்லாத அந்த நாட்களில் காதலை உறுதிப்படுத்திக் கொண்டாலும் அதன்பின் காதலர்கள் சந்திந்துப் பேசுவதும் கிராமங்களில் இலகுவானதல்ல.  இதனால் பெரும்பாலும் அந்த நாட்களில் கடிதங்களே அந்தக் காதல்களை வளர்த்தன. அந்தக் கடிதங்களை தமது காதலியின் கையில் சேர்ப்பதும் பதில் கடிதம் பெறுவதும் சில நேரங்களில் ஒரு திரில்லர் திரைபடத்தை 3Dயில் பார்ப்பது போலத்தான் ஆண்களுக்கு இருந்தது. பெண்கள் தனியே வெளியே செல்வது குறைவென்பதால் சரியான சந்தர்ப்பம் பார்த்து அவள் உலாவும் நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் வீசுதல், கல்லில் கட்டி அவள் கண்பட வீட்டுத் தோட்டத்திற்குள் வீசுதல். அவள் சைக்கிளின் செல்லும்போது உடன் செல்லும் தோழிக்கே தெரியாது  நுட்பமாக கடிதத்தை கைமாற்றுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதைத் தவிர காதலுக்காக நிரந்தர மற்றும் தற்காலிகத் தூதுவர்களைப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

சில வேளைகளில் இந்தக் கடிதங்கள் பெற்றோர், மாமன்மார் அல்லது அண்ணன்மாரின் கையில் சிக்கி கதாநாயகன் சின்னாபின்னமாவதும் உண்டு. இதனால் சில பெற்றோர் உடனேயே தமது பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைத்து, காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கதாநாயகனைத் தாடி வைத்த கவிஞனாக மாற்றிவிடுவதும் உண்டு. சில காதல் கதைகளில் கடிதத்தோடு தூது போன தூதுவர்களே பெண்ணை கவர்ந்ததும் நடந்துண்டு. நான் ஐந்து வருடமாகக் காதலித்துத் திருமணம் புரிந்திருந்தாலும் கடைசிவரை என் மனைவிக்குக் காதல் கடிதம் எழுதவேயில்லை. அதை என் மனைவி இன்றும் ஒரு குறையாகச் சொல்வதுண்டு.

காதல் கடிதங்களை விட மிகவும் சுவாரசியமானவை எம்மவர்கள் எழுதும் மொட்டைக் கடிதங்கள். அதிலும் இரண்டு வகையான மொட்டைக் கடிதங்கள் உள்ளன. அதில் முதல் வகை குடும்ப, உறவு மட்டத்தில் குழப்பிவிடும் வகையிலான மொட்டைக் கடிதம். தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் திருமணத்தைக் குழப்புதல், கணவன் மனைவிக்குள் சண்டையைக் கிளப்புதல், தனது எதிரியாக இருப்பவனின் உத்தியோகத்தைக் கெடுத்தல், பிடிக்காதவர் வீட்டுத் திருமணத்தைக் கெடுத்தல், தனக்கு கிடைக்காத பதவி உயர்வு தன்னோடு உள்ள இன்னொருவனுக்கு கிடைக்கவிடாது செய்தலென நம்மவர்கள் மொட்டைக் கடிதங்களை நாகாஸ்திரமாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். 

இவ்வாறு யாரென்று தெரியாது கடிதம் எழுதும் இவர்கள் கடிதத்தை தமது ஊரில் இருந்து அஞ்சலில் சேர்க்காது இன்னுமொரு நகரத்துக்குச் சென்று அங்கு போடுவார்கள். சிலர் அதற்கு முத்திரை ஓட்டுவதும் கிடையாது. வேறென்ன, கடிதத்தைப் பெறுபவனே அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தட்டும் என்ற நல்ல நோக்கம்தான். 

இரண்டாவது வகை மொட்டைக் கடிதங்கள் நிறுவன மட்டத்திலான மொட்டைக் கடிதங்கள். இதில் சமூக நன்மைக்காக whistle blower ஆக உண்மையிலேயே சமூக அக்கறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யும் வகையிலானவை ஒருவகை. அடுத்தது அலுவலக உயரதிகாரிகள், சக ஊழியர்கள் மீது புகார் செய்து அடுத்துக் கெடுக்கும் வகையிலானவை இன்னொருவகை. எமது சமூகத்தில் மிகச்சிலரே உண்மையான சமூக அக்கறையோடு அடையாளத்தை மறைத்து புகார் செய்வதுண்டு. அதிகமாக petition வகையிலான மொட்டைக்கடிதங்கள் தமக்குப் பிடிக்காத அரசு உயரதிகாரிகளை மாட்டி விடுவதற்காகவே எழுதப்படுவது வழமை. அந்த நாட்களில் பெரும்பாலும் ஊருக்கு ஒரு மொட்டைக் கடித நிபுணர் இருப்பார். 

நான் வாழ்நாளில் யாருக்கும் மொட்டைக் கடிதம் எழுதாத போதும் எனக்கும் ஒரு  மொட்டைக் கடிதம் வந்தது. என் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பாக வந்திருந்த அந்தக் கடிதம், என் மனைவிக்கு அனுப்புவதற்கு பதிலாக என் விலாசத்திற்கே அனுப்பப்பட்டிருந்தது. நானும் அனுப்பியவரைத் திட்டிவிட்டு, வேறு வழியில்லாமல் மறுநாள் மனைவியைச் சந்தித்தபோது கொண்டுபோய் அவரிடம் கொடுக்க வேண்டியிருந்தது. கடிதம் எழுதியவரும் என்ன செய்வார் பாவம், எனது அலுவலக கோப்பில் என் வீட்டு விலாசம்தானே இருக்கும்? என் மனைவியும் வாசித்து வாய்விட்டுச் சிரித்துவிட்டு என்னிடமே கொடுத்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் கையெழுத்தை வைத்து அதை எழுதியவரையும் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் பின்னர் அவரிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

பாடசாலை நாட்களின் பின்னர் எனக்கு கிடைத்த கடிதங்களில் முக்கியமானது என் முதல் வேலை நியமன நேர்முகத் தேர்வுக்கான கடிதம். அதில் இருந்த செய்தி முழுக்க முழுக்க சிங்களத்தில் இருந்தது. அதில் மருந்துக்கும் ஆங்கிலமோ தமிழோ இருக்கவில்லை. எங்களூரில் நல்ல ஆங்கில அல்லது சிங்களப் புலமையோடு இதற்காகவே பிறப்பெடுத்தது போல சில மூத்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரிடம் ஓடோடிச் சென்று விளக்கம் பெற்றேன். பின்னர் கொழும்பு செல்ல அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரு கடிதம், நேர்முகத்தேர்வுக்கு வருகிறேன் என அமைச்சுக்கு ஒரு கடிதம் என்பவற்றோடு எனது வாழ்க்கை நான் பிறந்த கிராமத்திலிருந்து தலைநகருக்கு நகர்ந்தது.

அதன் பின்னர், பல்கலைக் கழக அனுமதிக்கான படிவங்கள், பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் பெற்றோருக்குக் கடிதம், படிப்பு முடிந்ததும் வேலைக்கு விண்ணப்பம், வேலையிலிருந்து விலகும் அறிவிப்பு, அடுத்த வேலைக்கு விண்ணப்பம், உயர் கல்விக்கான விண்ணப்பம் என்ற எமது காலத்தில் கடிதங்கள் எங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தே இருந்தன. ஆனாலும் காலப் போக்கில் கைப்பேசிப் பாவனை, மின்னஞ்சல் என்பன கடிதம், தபால் அட்டை போன்றவற்றின் தேவைகளை இல்லாது ஒழித்தன. ஆனாலும் அலுவலகத் தேவைகளுக்காக  கடிதங்களின் பாவனை தொடர்ந்திருந்தது. இன்று கடிதம் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.

கடந்த பத்தாண்டுகளில் அலுவலகத் தேவைகளுக்கும் கடித உறையில் வைத்துக் கடிதம் அனுப்பும் வழக்கம் குறைந்து செல்லத் தொடங்கி இன்று நாம்  paperless கலாச்சாரத்துக்குள் முழுமையாக மூழ்கத் தொடங்கியிருக்கிறோம்.

-- அக்கம்-பக்கம் --
 

 

https://www.facebook.com/101881847986243/posts/281051986735894/?d=n

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.