Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடக்குமுறைக்குப் புறமுதுகு காட்டாத எழுத்துச் சமராடிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடக்குமுறைக்குப் புறமுதுகு காட்டாத எழுத்துச் சமராடிகள்

-சி.இதயச்சந்திரன்-

பிரகடனப்படுத்தப்படாத இராணுவ ஆட்சி எவ்வாறு நடைபெறுமென்பதை ஸ்ரீலங்காவில் வசிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். கிணற்றுத் தவளைபோல் வாழ்வது எப்படியென்பதையும் அங்கு கற்றுக்கொள்ளலாம்.

ஆசியப் பிராந்தியத்துள், ஜனநாயக முகமூடியணிந்த சர்வாதிகார ஆட்சிகள் பல இருந்தும், ஸ்ரீலங்கா போட்டிருக்கும் புதியரக முகக் கவசங்கள் புதுமையானவை. போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் இருக்கும். கடத்தலும், காணாமல் போகடித்தலும் தினமும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக்கும். எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா.

இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசயமும் இங்குதான் நிகழ்கிறது. மாமனிதர் சிவராம், நடேசன், நிமல்ராஜன், சுகிர்தராஜன் என்று நீளும் ஊடகவியலாளர் பட்டியலில் 'உதயன்" ஆசிரியர் வித்தியாதரனின் நாமத்தையும் இணைத்திட ஸ்ரீலங்கா ஜனநாயகம் படும்பாடு கொஞ்சமல்ல.

ஜனநாயக அமைப்பை நிலைநிறுத்தும் துப்பாக்கி முனைக்கும், அந்த அமைப்பை வளப்படுத்த முனையும் பேனா முனைக்கும் இடையே எழும் மோதல்களில், சுடுகலன்களின் பலம் மேலோங்கும்போது சர்வாதிகாரம் நிலைநாட்டப்படுகிறது.

இந்தப் பக்கவிளைவின் நிகழ்வொன்று 21.06.2007 அன்று கொழும்பில் அரங்கேறியுள்ளது.

வெள்ளவத்தையில் வசிக்கும் 'உதயன்", 'சுடர் ஒளி" ஆசிரியர் திரு. வித்தியாதரனின் வீட்டிற்கு விஜயம் செய்த வெள்ளை நிற சிற்றூர்திக் கும்பல், காவலாளியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அன்று ஆசிரியர் வீட்டில் இருந்திருந்தால், கடத்தப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் சிவராம் போல் வீதி ஓரத்தில் வீசப்பட்டிருப்பார். இப்படியெல்லாம் நடக்குமாவெனச் சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு, பல நிகழ்வுகள் முன்பே நடந்தேறியுள்ளன.

கற்பனை பண்ணுவதற்குக் கூட விடயங்கள் இல்லாத நிலையில் எல்லாமே நிஜமாகிப் போவது இயல்பு வாழ்க்கையாகி விட்டது. தலைக்குத் தெரியாமல், வால் எப்படி ஆடுமென்கிற தத்துவம் இங்கு புரிதலுக்குள்ளாகிறது.

சம்பவத்தைக் கேள்வியுற்றவுடன், காணாமல் போனவர் பற்றி விசாரிக்கும் சங்க உறுப்பினர்களும், அமைச்சர்களும், ஜனநாயகம் இன்னமும் சாகவில்லையென்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட, ஆசிரியரின் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

ஆசிரியர் கொல்லப்பட்டிருந்தால், இரண்டு இரங்கல் உரையுடன், சர்வதேச ஊடகவியலாளர் சங்கங்களின் வழமையான கடுங் கண்டனங்களுடன், எழுத்துச் சுதந்திரம் தீட்சை பெற்றிருக்கும்.

ஆளும் அதிகார வர்க்க ஆளுமையின் ஆணிவேரையே அசைக்கின்ற, எழுத்தாயுதங்களை, தயவு தாட்சண்யமின்றி அழித்தொழிப்பதில் இந்த முதலாளித்துவ ஜனநாயகங்கள் என்றுமே சோர்வுற்றதில்லை.

அரசுக்குள் உருவாகியுள்ள அதிகாரப் போட்டியின் விளைவாகவே, இவ்வகையான ஊடக அழிப்புகளும், ஜனநாயக மீறல்களும் தோன்றுவதாகக் கற்பிதம் கொள்பவர்கள், ஒரு பிரிவினரை அப்பாவிகள் போன்று கருதுவதை ஏற்க முடியாதுள்ளது.

தேசிய இனமொன்றின் மீதான ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படும்பொழுது, இவ்வகையான கிளைகள் பரவி, அத்தேசியத்தின் கருத்துச் சுதந்திரத்தினை வெளிப்படுத்தும் ஊடகங்கள் மீதே தனது கோரக் கரங்களை நீட்டும்.

எழுத்துப் போராளிகளின் பங்களிப்பு, அடக்கப்படும் இனத்தின் விடுதலை உணர்வை எழுச்சியுறச் செய்வதால், ஆயுத பலம் கொண்டு, புதிய ரக ஊடகச் சமரையும் அரசு மேற்கொள்ளும்.

மன்னராட்சிகள் அழிவுற்றாலும், அக்காலத்தில் பிரசவித்த தொல்காப்பியங்களும், பரணிகளும் அழியவில்லை. ஓர் இனத்தின் தொன்மையை வரலாற்று நகர்வோடு காவிச் செல்லும் படைப்புகள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

பண்பாட்டு, கலாசார விழுமியங்களை இருத்தலுக்கு உள்ளாக்கும் எழுத்துக் கலைஞர்களை இல்லாதொழிக்க முனைவதும் இன அழிப்பே.

புதிய வரலாறுகளை மக்கள் படைத்தாலும், அதன் பன்முகப் பரிமாணங்களை, மொழியூடாகவும் வௌ;வேறு வடிவங்களிலும் படைப்பவனே கலைஞன்.

மக்களுக்கும் இலட்சிய வேட்கைக்கும் இடையேயுள்ள காலத்தைக் குறுகியதாக்கி, அதுவாகத் தோற்ற முறவைக்கும் கலையை மெய்ப்பொருளாக்குபவனே எழுத்தாளன். விரலை முறித்து, ஏகலைவனின் வித்தையை முடமாக்கியவர்களை சரித்திரத்தில் கண்டோம். இன்று எழுத்தாணி பிடித்தவன், மாயமாய் மறையும் நவீன உலகத்தைப் பார்க்கிறோம். அரசிற்கும் சில ஊடகங்கள் உண்டு. எதிர்க்கட்சிக்கும் பல ஊடகங்கள் உண்டு. இவை தவிர்த்து, சுதந்திரமான ஊடகங்களும் சிலவுண்டு.

இச்சுதந்திர ஊடகங்கள், மக்களின் அடிப்படை அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு, ஊடக தர்மத்தை மனதில் இருத்தி, மனு நீதிச் சோழனாக வாழ்வது, அதிகார மையத்திற்கு உடன்பாடான விடயமல்ல.

ஊடகத் தலைமைகளை விருந்திற்கழைத்து, தேசிய நலனென்கிற அறிவுரை வழங்கி, மூளைச்சலவை செய்ய முற்படும். சலவைக்குள் அகப்படாதோர், அச்சுறுத்தப்படுவர். இருப்பிற்கு ஆபத்தென்று, எழுத்தாணியை தூரவீசி, ஓடி ஒளிந்து கொண்டவர்கள் பலர் உண்டு.

சிலர், அதிகார வர்க்கத்துக்குள் சரணாகதி அடைந்து, ஜனநாயக வேடமிட்டபடி, தணிக்கைச் செல்வர்களாக மாறிய கதையுமுண்டு. விடுதலைப் போராளியாக இருந்த சிலர், அரசின் பரப்புரைப் போராளியாக மாற்றமடைந்த சோக வரலாறுகளையும் நாம் தரிசித்துள்ளோம்.

ஆயுத போராளியாகவிருந்த தராகி சிவராம், எழுத்துப் போராளியாகி, புதிய தரிசனங்களை மக்கள் பார்வைக்குள் உட்செலுத்திய இன்பியல் நிகழ்வுகளையும் கண்டுள்ளோம். தமது நிறுவன ஊடகச் சிற்பிகள் அறுவரை அரச இராணுவம் பலிகொண்ட நிலையிலும், உறுதி தளராது ஊடகச் சமரினை, நிமிர்த்திய நெஞ்சுடன் எதிர்கொள்ளும் வித்தியாதரனையும் இன்று நாம் காண்கிறோம்.

கொலைக்களமான யாழ். மண்ணில், உலைக்களமாகத் திகழும் 'உதயன்" நிறுவனத்தை, சந்திரிகா அம்மையார் குண்டு வீசித் தகர்த்தாலும், உட்புகுந்த ஒற்றர்கள் எழுத்தாணிகளைத் துவம்சம் செய்தாலும், ஊடகச் சமரிற்கு புறமுதுகு காட்டாமல் தீரத்துடன் முகங்கொள்ளும் 'வித்தி" யை, 'எழுத்துச் சமராடி" என்று விளிப்பதில் எமக்குப் பெருமைதான்.

இராணுவ மயமாகும் சிறிலங்கா அரசியலில், சுதந்திர ஊடகங்களின் பங்களிப்பு, அங்கீகாரமற்று, ஆயுதக் கலாசாரத்துள் அமுங்கி விடும் நிலையொன்று உருவாகிறது.

இச்சவாலை எதிர்கொண்டவாறு, ஊடகங்களின் இருப்பு நிலை, எவ்வாறு அமையப் போகின்றதென்பதை மக்களின் ஒருங்கிணைவே தீர்மானிக்கப் போகிறது.

தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.