Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரப் பகிர்வுப் பாதையில் முன்னேற கடந்தகால அநுபவங்கள் பாடங்களாக வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப் பகிர்வுப் பாதையில் முன்னேற கடந்தகால அநுபவங்கள் பாடங்களாக வேண்டும்

 அ. வரதராஜா பெருமாள்

VP.jpg?resize=228%2C300&ssl=1

இலங்கையில் மாகாண சபை முறைமையை உருவாக்குவதற்கும் அதற்குரிய சட்டவாக்க மற்றும் நிறைவேற்றதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இலங்கையின் அரசியல்யாப்பில் 13வது தடவையாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டன.

வரலாற்று அநுபவங்களைத்  அறிந்து கொள்வது அவசியமாகும்.

இந்த 13வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் பெரும் குறைபாடுகளையும்  குழப்பங்களையும் கொண்டதாக அமைந்ததற்கும், மேலும், அதில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தொடர்ந்து வந்த அரசாங்கங்களால் மிகச் சுலபமாக கரைக்கப்பட்டு இன்று அது கோதிருக்க சுழை விழுங்கப்பட்டதொரு பழம் போல ஆகியிருப்பதற்குமான வரலாற்று அநுபவங்களைத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகும். அது இந்த மாகாண சபை முறைமை மற்றும் அதற்கான அதிகாரப் பகிர்வு தொடர்பான எதிர்கால செயற்பாடுகளுக்கு மிகவும் அவசியமாகும். 

கடந்தகால அநுபவங்கள் கசப்பானவைதான். ஆனால், இந்த மாகாண சபை முறைமையினூடாகத் தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி முன்னேற வேண்டும் என்று கருத்தே இப்போது அரசியல் அரங்கில் முன்னணிக்கு வந்திருக்கிறது. இவ்வாறான கருத்தைக் கொண்டிருப்பவர்களும்  அதற்காக முயற்சிப்பவர்களும் அது தொடர்பான கடந்த கால அநுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்வது அவசியமாகும். உண்மைகளைக் கண்டறிவதுவும் பாடங்களைக் கற்றுக் கொள்வதும் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவானதொரு அறிவியல் தேவையே. அது இங்கும் விதிவிலக்கல்ல.

சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என்பன அழகான வார்த்தைகளே! அவற்றிற்கான பாதைகள் எதுவும் இங்கு யதார்த்தத்தில் இல்லை

இலங்கையின் அரசியல் யாப்பு மிக இறுக்கமான முறையில் ஒற்றையாட்சி அமைப்பை உறுதிப்படுத்துவதனால் அதற்கு உட்பட்ட வகையில் எவ்வாறுதான் அதிகாரப் பகிர்வை மேற்கொண்டாலும் அது அர்த்தமற்றதாகவே அமையும் என வாதிப்பவர்களோடு 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதா அல்லது அரை குறையாக நிறை வேற்றுவதா என விவாதிப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் அவர்கள் தாங்கள் வேறொரு கிரகத்தில் சஞ்சரிக்கும் கற்பனையில் மிதக்கிறார்கள். அவர்கள் மிதக்கிறார்களோ அல்லது அவர்களை நம்பியவர்களை மிதக்க விடுகிறார்களோ அது வேறு விடயம். ஆனால் அவர்கள் இன்று இலங்கையில் நடைமுறையில் இருக்கும் அரசியல்யாப்பு, 13வது திருத்தம், அதன் அடிப்படையிலுள்ள மாகாண சபை அமைப்பு என்கின்ற மைதானத்துக்குள் காலடி வைப்பதே துரோகம் என்ற கருத்தை கெட்டித்தனமாக பரவ விட்டிருக்கிறார்கள். இவர்கள் போக முடியாத ஊருக்கு வழி சொல்லுபவர்கள். எனவே, இந்த கற்பனாவாதிகளோடு 13வது திருத்தத்திலுள்ள அதிகாரப் பகிர்வு பற்றி உரையாடுவதில அரத்தமில்லை.

இலங்கையினது அக நிலையான அரசியற்பொருளாதாரத்தின் போக்குகள் மற்றும் நெருக்கடிகளையும், மேலும் இலங்கையோடு தற்போது தொடர்புபட்டதாக உள்ள பிராந்திய மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் மூலோபாய அம்சங்களினது யதார்த்தங்களையும் சரியாக கணக்கில் எடுக்காமல், வெறுமனே காற்றில் கோட்டை கட்டும் கற்பனைக் கதைகளாலும், உணர்ச்சிவசப்பட்ட வார்த்தை ஜாலங்களால் உசுப்பேத்தும் செயற்பாடுகளாலும் தமிழ் மக்களின் அடிப்படை நலன்கள் தொடர்பான இலக்குகளை அடைய முடியாது என்பது மட்டுமல்ல, அவை தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார நிலைமையை மேலும் பின்னோக்கியே தள்ளிச் செல்லும. 

அவை ஒரு புறமிருக்க, 13வது திருத்தம் மற்றும் மாகாண சபை தொடர்பாக தற்போது நிலவும் சிக்கல்களுக்கும் சிரமங்களுக்கும் அடிப்படையான காரண காரியங்கள் எந்தெந்த சந்தர்ப்பங்களில் எவ்வெவ் வகையாக நிகழ்ந்தன என்பன பற்றிய தெளிவான அறிவு இன்றைய காலகட்டத்தில் தேவைப்படுகிறது.

  • இந்த மாகாண சபை முறைமை ஒரு மோசமான கட்டத்தை அடைந்திருப்பதற்கான ஓட்டைகளைஜே.ஆர் ஜெயவர்த்தனாவே 13வது திருத்தத்தில் ஏற்படுத்தினார் என்பதையும்,
  • பின்னர் அதைப் பயன்படுத்தி ஜனாதிபதி பிரேமதாசா தொடக்கம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நடாத்திய கூட்டாட்சி வரை அடுத்தடுத்து இலங்கையை ஆண்ட அரசாங்கள் ஒவ்வொன்றும் அதிகாரப் பகிர்வை கரைத்துக் கொட்டின என்பதையும்,
  • பல ஆபத்துக்கள் மற்றும் சிரமங்கள் மத்தியிலும் தன்னம்பிக்கைகளோடு படிப்படியாக முன்னேற்றங்களை அடுக்கியபடி வீறுடன் செயற்பட்டுக் கொண்டிருந்த முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபையை பிரேமதாசாவின் ஆட்சியோடு கூட்டுச் சேர்ந்து அதனை நாசமாக்கிய தோடு, பிரபாகரன் தன்னை சோழ மகாராஜாக்கள் வரிசையில் கற்பனை பண்ணிக் கொண்டு சர்வதேச அனுசரணையோடு சமஷ்டித் தீர்வு வரைக்குமான சந்தர்ப்பங்கள் வந்த வேளைகளில் அவற்றை கோட்டை விட்டதையும்,
  • மைத்திரி – ரணில் கூட்டாட்சிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கைக்கு எட்டியதை வாய்க்கெட்ட விடாமல் பண்ணிய வரலாற்றையும்,

இன்றைய அரசியல் அவதானிகள் மற்றும் அக்கறை கொண்டோர் அனைவரும் குறைந்தபட்சமாயினும் அறிந்தவையே. அவை தொடர்பான விரிவான விளக்கங்களை அவசிய மேற்படும் வேறோரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

இந்திய – இலங்கை பேச்சுவார்த்தைகள் காலத்திலேயே அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட ஆரம்ப கோணல்கள்    

முதற் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். 13வது திருத்தத்தை திருத்துவதற்கும், மாகாண சபை முறையை ஆக்கபூர்வமானதாக ஆக்குவதற்கும் வேண்டியன எவை? அவற்றை எப்படி செய்வது? அதற்கான செயற்பாடுகள் எவை? அவற்றிற்கான முன்னேற்பாடுகள் எவை போன்ற கேள்விகளுக்கு தீர்க்கமான பதில்கள் காணப்பட வேண்டும். இவை அவ்வாறான இலக்கை நோக்கிய ஓர் அரசியல் வேலைத்திட்டத்திற்கானவை.

அதற்கு முதலாவதாக, 13வது திருத்தம் பற்றியும், இரண்டாவதாக, 1987ம் ஆண்டின் மாகாண சபைகள் பற்றியும், மூன்றாவதாக, மாகாண சபையின் சட்டவாக்க மற்றும் நிர்வாக நடைமுறைகள் பற்றியும், நான்காவதாக, மாகாண சபையின் அதிகாரங்களை குறைப்படுத்தும் வகையாக இலங்கையின் அரசியல் யாப்பின் ஏனைய பாகங்களில் – ஏற்பாடுகளில் உள்ள பிரச்சினைகள் பற்றியும், ஐந்தாவதாக அவ்வாறான குறைபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதில் நாட்டிலுள்ள பல்வேறு சட்டங்களின் வகிபாகம் பற்றியும் மிக ஆழமான, விரிவான ஆய்வும் தெளிவான புரிதலும் அவசியமாகும்.

அவற்றிற்கொல்லாம் முதலில், 13வது திருத்தம் மூலமான அதிகாரப் பகிர்வும், மாகாண சபை முறைமையின் அமைப்பும் பெரும் குறைபாடுகளையும் குழப்பங்களையும் கொண்டதாக அமைவதற்கும், மேலும் இப்போது காணப்படும் மோசமான கட்டத்தை அவை அடைவதற்குமான அடித்தளங்கள், இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கும் மற்றும் இலங்கையின் அரசியல் யாப்பில் 13வது திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கும் முன்னரே ஏற்பட்டுவிட்டன என்பது அடையாளம் காணப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழர் தரப்பில் அவை தொடர்பான கவனக் குறைகள், எச்சரிக்கையின்மைகள் மற்றும் சமூகப் பொறுப்பற்ற வகைகளில் நடந்து கொண்டமைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவையும் அரசியல்யாப்பின் 13வது திருத்தத்தைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்கு மிகவும் அவசியமானவை.

1)            1986ம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் தமிழர் கூட்டணியின் ஈடுபாட்டுடன் நடந்து முடிந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் சமாதான உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலும் மாகாண சபை அமைப்பும் அதற்கான அதிகாரப்பகிர்வும் அமைய வேண்டும் என்பதே மாகாண சபை முறைமை தொடர்பில் 1987ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான ஒப்பந்தமாகும்.

(குறிப்பு:-  இங்கு தமிழர் கூட்டணி என்பது தற்போது திரு. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி எனும் கட்சியைக் குறிப்பிடவில்லை. மாறாக திரு சிவசிதம்பரம் அவர்களை தலைவராகவும், திரு அமிர்தலிங்கம் அவர்களை செயலாளர் நாயகமாகவும் மற்றும் திரு சம்பந்தர் திரு ஆனந்தசங்கரி ஆகியோர் முக்கிய செயற்பாட்டாளர்களாகவும் கொண்டு செயற்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியையே குறிக்கின்றது. )

2)            இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு முறைமையை ஒத்ததாக தமிழர்களுக்கு மாகாண ஆட்சியமைப்பு முறையொன்றை பெற்றுக் கொடுக்கும் என பகிரங்கமாக 1984 – 1986 காலப்பகுதிகளில் பல்வேறு தடவைகள் இந்திய அரசாங்கம் பகிரங்கமாகவே அறிவித்தது. அதனடிப்டையிலேயே இலங்கையுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன. அந்த அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வின் பல விடயங்களில் உடன்பாடுகளும் காணப்பட்டன.
3)            அந்தப் பேச்சுவார்த்தைகளிலும் இந்தியாவின் அரசியல் யாப்பே முன்மாதிரியாகக் கொள்ளப்பட்டது. அதுமட்டுமல்லாது, அவ்வேளைகளில் இந்தியாவின் அரசியல் யாப்பினுடைய மொழியே பயன்படுத்தப்பட்டது.
4)            இலங்கை அரசியல் யாப்பில் 13வது திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சட்ட ஏற்பாடுகளைப் பார்த்தால், அவற்றின் உள்ளடக்கங்களில் உள்ள சொற்தொடர்களும் , வாக்கியங்களும், பந்தி அமைப்புக்களும் இந்திய அரசியல் யாப்பில் உள்ளவை போலவே அமைந்திருக்கும். அதனை மேலோட்டமாக அல்லது விரைந்து வாசிக்கும் யாரும் அதிலுள்ள குறைபாடுகளையும் குழப்பங்களையும் கண்டுபிடிக்க முடியா வகையில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா அதன் பல முக்கியமான இடங்களில் சுழித்து விட்டிருக்கிறார் என்பதை அரசியல் யாப்பு பற்றிய சட்ட அறிவோடு ஆழமாகவும் நிதானமாகவும் வாசிப்பவர்களால் கண்டறிய முடியும்.

பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றிய போதும் பேசாமடந்தையாகவே இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி (தற்போதைய TNA யினர்)

5)            1987 இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் 1986ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அடையப்பட்ட உடன்பாடுகள் என்று குறிப்பிடப்பட்டாலும் அந்த உடன்பாடுகள் முழுமையாகவும் முறையாகவும் தொகுக்கப்பட்ட வடிவில் எந்தக் கட்டத்திலும் வரையப்படவோ இந்திய மற்றும் இலங்கை அரசுகளால் கையெழுத்திடப்பட்ட வரைபாகவோ ஆக்கப்படவில்லை. அதேவேளை அந்தப் பேச்சுவார்த்தை அனைத்திலும் ஈடுபட்ட திருவாளர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தர் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி கூட அவ்வாறான தொகுப்பை இந்திய இலங்கை அரசுகளிடமிருந்து பெறவுமில்லை – கோரவுமில்லை. தமிழர் கூட்டணியின் ஈடுபாட்டுடன் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் உடன்பாடுகளும் துண்டு துணுக்குகளாகவே மேற்கொள்ளப்பட்டன.
6)            1984ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்திய பிரதமரின் விசேட தூதுவராக செயற்பட்ட ஜி. பார்த்தசாரதி தொடக்கம் இந்திய மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்தை முன்னிலையாகக் கொண்டு 1986ம் ஆண்டு இறுதி வரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் அவற்றில் முன் வைக்கப்பட்ட பிரேரணைகளும், அவ்வப்போது துண்டு துணுக்குகளாக காணப்பட்ட உன்பாடுகளும் பின்னைய ஒரு காலகட்டத்திலேயே தொகுப்பாக ஆக்கப்பட்டன. ஆனால், ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடுகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, அவற்றின் அடிப்டையிலேயே, மாகாண சபை முறைமைக்கான கட்டமைப்புக்கும், அதற்கான அதிகாரப் பகிர்வுக்குமான ஏற்பாடுகள் இலங்கையின் அரசியல் யாப்பில் அமைய வேண்டும் என்பது செம்மையாக மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அரசு அழைத்த போதெல்லாம் பேச்சுவாரI;த்தைகளில் ஈடுபட்ட தமிழர் கூட்டணியினர் தீர்மானகரமாக – முழுமையாக தொகுத்து வரையப்பட்ட ஒரு பெட்டகமாக அவை இந்திய, இலங்கை அரசுகளுக்கிடையில் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதனையும் அவ்வேளைகளில் முன்வைக்கவுமில்லை.
7)            இந்திய அரசியல் யாப்பை முன்மாதிரியாகக் கொண்டு தமிழர் கூட்டணியின் ஈடுபாட்டுடன் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான  பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது,  பாராளுமன்ற மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சியையும், அதியுச்ச நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிடிமானத்துக்கு உட்பட்ட நீதித் துறையையும் கொண்ட இலங்கையின் அரசியல் யாப்புக்கு உட்பட்டு மாகாண சபைக் கட்டமைப்பும் அதன் அதிகாரப் பகிர்வும் எவ்வாறு சுயாதீனமாக செயலாற்றும் என்பது பற்றியோ அல்லது மாகாண சபைகள் சுயாதீனமாக செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையாக இலங்கையின் அரசியல் யாப்பில் எவ்வகையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றியோ இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையில் எவ்வகையான பேச்சுவார்த்தைகளும் அந்தக்காலகட்டத்தில் இடம்பெறவில்லை. இந்திய அமைச்சர்கள் மற்றும் ராஜதந்திரிகள் அதுபற்றிய தெளிவான புரிதல்களைக் கொண்டிருக்காவிட்டாலும், இலங்கையின் நீண்ட பாராளுமன்ற அநுபவமும், சட்ட அறிவாற்றலும் கொண்ட தமிழர் கூட்டணி தலைவர்கள் அந்த பேச்சுவார்த்தைகளின் போது அவை தொடர்பான கேள்விகளையோ கோரிக்கைகளையோ எழுப்பவில்லை என்பதுதான் இங்கு விசனத்திற்குரியது..
😎 இந்திய அரசியல் யாப்பில் உள்ள மாநிலங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் பல நூற்றுக்கணக்கான வழக்குகள் இந்திய உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்றிருக்கின்றன. அந்த உச்சநீதி மன்ற தீர்ப்புகள்தான் இந்திய அரசியல் யாப்பில் வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வு விடயங்கள் நடைமுறையில் செயற்படுவதை முறைப்படுத்தியுள்ளன – உறுதிப்படுத்தியுள்ளன; அவைதான் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான அதிகார வேறாக்கத்தை ஒன்றையொன்று மீறா வகையில் நெறிப்படுத்தியிருக்கின்றன. இலங்கையில் மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான திருத்தமானது  இந்திய அரசியல் யாப்பின் சொற்பதங்கள், வாக்கிய அமைப்புக்களை ஒத்ததாக அமைந்தாலும் அவற்றுக்கான இந்திய உச்ச மன்ற தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகமாட்டா என்பதுவும் அன்றைய காலகட்டத்தில் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
இலங்கையின் உச்ச நீதிமன்றம் மாகாண சபை கட்டமைப்பு மற்றும் அதற்கான அதிகாரங்கள் தொடர்பான கேள்விகள் எழும் வேளைகளில் சரியான முழுமையான மொழி விளக்கம் தரும் வகையாக அவற்றிற்கான சொற்பதங்கள் மற்றும் வாக்கிய அமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இலங்கையின் சட்டங்கள் மற்றும் நீதி மன்ற நடைமுறைகள் அறிந்த சட்ட மேதைகளான தமிழர் கூட்டணியினர் கருத்தில் கொண்டிருந்திருக்க வேண்டும்.
இலங்கை அரசுப்பிரதிநிதிகள் அவை தொடர்பாக அன்றைய காலகட்டத்தில் எவ்வகையான சிந்தனைகளோடு இருந்தார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இந்திய அரசு பிரதிநிதிகளிடையே அப்போது அவை தொடர்பான கருத்தெதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நீண்ட பாராளுமன்ற அநுபவமும், ஆழ்ந்த சட்ட அறிவும் கொண்டதோடு மட்டுமல்லாது ஏற்கனவே மாவட்ட சபைகளுக்கான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அநுபவம் பெற்றிருந்த தமிழர் கூட்டணித் தலைவர்கள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் எவ்வாறாக சொற்பதங்கள், மற்றும் வாக்கிய அமைப்புகள் அமைய வேண்டும் என்று இந்திய அரசுக்கு அப்போது எடுத்துரைக்கவில்லை –
ஏன் அவர்கள் அப்போது அது பற்றி எந்தவித பிரக்ஞையோ கரிசனையோ இல்லாமல் இருந்தார்கள்? இந்தியாவே எல்லாவற்றையும் செய்து தரும் என்று பொறுப்பற்றவர்களாக இருந்துவிட்டார்களா? என்றே கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
9)            மாகாண சபை தொடர்பான அரசியல் யாப்பு திருத்த வரைபின் அதாவது 13வது திருத்த வரைபில் இடம் பெறும் அனைத்து உள்ளடக்கங்கள் தொடர்பில்; இறுதி உடன்பாட்டை வரைமுறைப்படுத்துவதற்கான எந்த செயற்பாடும் இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டிற்கு முன்னரோ அல்லது பின்னரோ இடம்பெறவில்லை. ஜே. ஆரும், அரசில் இருந்த சிங்களப் பேரினவாதிகளும் எவ்வாறானவர்கள் என்பதை தமிழர் கூட்டணித் தவைர்கள் நன்கு தெரிந்தவர்களே. இருந்தும், அவர்கள் இந்திய அரசிடமிருந்தே எல்லாவற்றையும் எதிர்பார்த்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே தெளிவாகின்றது.
பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்குக்கு மேற்பட்ட பெரும்பான்மையைக் கொண்டிருந்த ஜே. ஆர் ஜெயவர்த்தனா, இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தத்தால் அனைவரது கவனமும் அங்கு நோக்கி திசை திரும்பியிருந்த வேளையை தனக்கு வாய்ப்பான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி 13வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றி விட்டார். மாகாண சபைகளுக்கான பல்வேறு விடயங்கள் 1984 க்கும் 1986க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பேசப்பட்டாலும் அதில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டனவென்றாலும் 13வது திருத்தத்துக்கான சட்ட நகல் வரைபை ஜே. ஆர் அரசாங்கம் ஒரு பக்க முடிவாகவே வரைந்து சட்டமாக்கினார். அதற்குப் பிறகு அது மீள் பரிசீலனைக்கு உரிய விடயமாக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லாமற் போனதென்பது குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்வாறானதொரு தொகுப்பை ஏன் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறதென்றால், அன்றைக்கு இந்தியா தமிழர்களுக்கான அரசியற் தீரவுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தானாக செய்து தரும் என்று  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித்தலைவர்கள் (இன்றைய TNA யினர்) இருந்ததனாலேயே தாம் செய்திருக்க வேண்டிய கடமைகளை செய்யத் தவறினார்கள். அது போல இன்றைய தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் செய்துவிடக் கூடாது எனும் நோக்குடனேயே இந்த விபரங்கள் இங்கு தரப்படுகின்றன.

13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதால் இந்தியா அதற்கானதொரு ஒரு பூரண செயற்பாட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்கும் – இந்தியாவே எல்லாவற்றையும் செய்து முடித்துத் தரும் என்று இருக்காமல் தமிழர்களின் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் முன்னால் உள்ள பொறுப்புக்களையும் கடமைகளையும் உணர்த்தவே இந்த விடயங்களை இங்கு கூற வேண்டியுள்ளது.

https://sdptnews.org/2021/04/15/அதிகாரப்-பகிர்வுப்-பாதைய/?fbclid=IwAR2dZIoGeG1J7rLwnPVr-4GR6lPtmIHH19TCBsfwsB38fVyXwHTGGVfQIx4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.