Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது ஒரு நதிநீர் சிக்கல்தான்! - புத்த பூர்ணிமா சிறப்புப் பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது ஒரு நதிநீர் சிக்கல்தான்! - புத்த பூர்ணிமா சிறப்புப் பகிர்வுபுத்தர்

புத்தர்

இந்த மூன்று காட்சிகளையும் சித்தார்த்தன் 29 வயதுவரை காணவில்லை என்பது நம்பக் கூடியதா? மேற்சொன்ன யாவும் நாள்தோறும் பொதுவாக நிகழ்பவை. அப்படியிருக்க சித்தார்த்தர் 29 வயதில் வரை பார்க்கவில்லை என்பது நம்பும்படி உள்ளதா? இவை அனைத்துமே புனை சுருட்டல்கள்.

இன்று 26.05.21 வைகாசி பவுர்ணமி, புத்தரின் பிறந்தநாள்.

'ஆசை, கோபம், கனவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் வாழும் தெய்வம்'

- என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில், கருணையே வடிவமானவர், சித்தார்த்த கௌதமர். இமயச் சாரலில் இன்றைய நேபாள நாட்டிற்கு அருகில் கோசல பேரரசுக்குக் கட்டுப்பட்ட சுதந்திர சாக்கிய தேசம். அதன் தலைநகர் கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி என்னும் நகரில் கிமு 563-ம் ஆண்டு வைகாசி பௌர்ணமி அன்று மன்னர் சுத்தோணருக்கும் அரசி மகா மாயாவிற்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு குலப்பெயர் கவுதமர் இணைத்து சித்தார்த்த கௌதமர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த வேளையில், குழந்தை பிறந்த ஏழாம் நாள் தாய் மகாமாயா நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்தினார். தாய் முகமறியாத பிள்ளையாக சித்தார்த்த கௌதமர் பெரிய அன்னை மகா பிரஜாபதி கௌதமியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

கௌதம புத்தர்
 
கௌதம புத்தர்

சாக்கியர்களின் வழக்கப்படி 8 வயதானவுடன் மனதை, உடலை பண்படுத்தும் கல்வி, போர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து கலைகளையும் கற்கத் துவங்கினார். இதில் வேட்டையாடச் சென்ற சில நாள்களிலேயே அதில் நாட்டம் கொள்ளாமல் வெறுப்புற்ற சித்தார்த்தன், வேட்டைக்குச் செல்ல மறுத்தபோது நண்பர்கள் கேலி பேசினார்கள். `என்ன சித்தார்த்தா... சிங்கம், புலியை பார்த்து பயப்படுகிறாயா? நாங்கள் இருக்கின்றோம் பார்த்துக்கொள்கிறோம்' என்றபோது, `நண்பர்களே உங்கள் வீரத்தை நான் நன்கறிவேன். நீங்கள் ஒன்றும் எதிர்த்துத் தாக்கும் சிங்கம், புலி போன்றவற்றை வேட்டையாடப் போவது இல்லை. நீங்கள் திரும்பித் தாக்கும் திறன் இல்லாத அபாயமற்ற மான், முயல்களைத்தானே வேட்டையாடுவீர்கள்? அனாவசியமாக பிற உயிர்களை வேட்டையாடிக் கொல்வதில் எனக்கு விருப்பமில்லை' என்று சொன்னார்.

 

அக்கால வழக்கப்படி சாக்கிய தேசத்தில் 16 வயது நிரம்பிய உடன் சுயம்வரம் திருமணம் நடைபெறும். சுயம்வரத்தில் பங்கேற்க பக்கத்து தேசங்களிலிருந்தும் இளவரசர்கள், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள், வீரர்கள் பங்கேற்பர். அப்படி நடைபெற்ற சுயம்வரத்தில் சித்தார்த்தன் கலந்துகொண்டார். மணமகள் யசோதரை கையில் மாலையை ஏந்தி ஒவ்வொரு இளைஞனாக பார்த்துக் கொண்டு வந்தபோது அமைதியே வடிவமாக மூக்கும் முழியுமாக வசீகர தோற்றத்தோடு நின்றுகொண்டிருந்த சித்தார்த்தனை பார்த்து கண்கள் நிலைகுத்தி நின்றது. வேறு ஒருவரை பார்க்க கண்கள் விரும்பாமல் மாலையை சித்தார்த்தன் கழுத்தில் அணிவித்தாள். கைத்தலம் பற்றி திருமணம் முடிந்து பழரச பானம், பன்னீர் குளியல், பளிங்கு மாளிகை வாழ்க்கை என்று காதல் ரசத்தில் பட்டு மஞ்சத்தில் புரண்ட இளவரசன் சித்தார்த்தன் - யசோதையின் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையின் பரிசாக ராகுலன் என்ற அழகிய ஆண் குழந்தையை பெற்று மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்ததாக அந்த திருமண வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.

புத்தர்
 
புத்தர்

இளவரசர் சித்தார்த்தனனின் 29 வயதில் ஒரு நாள் அரண்மனையைக் கடந்து திடீரென்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வெளியே நகர்வலம் வந்தபோது அவர் கண்ட மூன்று காட்சிகள்... ஒரு வயதானவர், ஒரு நோயாளி, ஒரு சவ ஊர்வலம். இதைக் கண்ட பின் நிலைகுலைந்து அவரின் உடலில் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்பட்டு, இதற்குக் காரணம் யாது என்ற தேடலில், கைத்தலம் பற்றிய காதல் மனைவியை விட்டுவிட்டு, அன்பு மகன் ராகுலனை தவிக்க விட்டுவிட்டு, பாசத்திற்குரிய பெற்றோர்களை மறந்து, யாருக்கும் சொல்லாமல் இரவோடு இரவாக அரண்மனையைத் தொடர்ந்து ஆரணியம் சென்று, இறைவனின் அருளால் துறவறம் பூண்டு, ஞானம் பெற்று புத்தனாக மாறினார். `அவர் மகாவிஷ்ணுவின் மறு அவதாரமாக மண்ணுலகில் தோன்றி அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திய மகாபுருஷர்' என்று இன்றும் பள்ளிக்கூடங்களிலும் சமூக வெளியிலும் சொல்லப்பட்டு வருகிறது.

மேலே குறிப்பிட்ட இந்த மூன்று காட்சிகளையும் சித்தார்த்தன் 29 வயதுவரை காணவில்லை என்பது நம்பக் கூடியதா? மேற்சொன்ன யாவும் நாள்தோறும் பொதுவாக நிகழ்பவை. அப்படியிருக்க சித்தார்த்தர் 29 வயதில் வரை பார்க்கவில்லை என்பது நம்பும்படி உள்ளதா? இவை அனைத்துமே புனை சுருட்டல்கள். அப்படி என்றால் சித்தார்த்தன் துறவறம் மேற்கொண்டு புத்தனாக மாறியதன் காரணம் என்ன? அதை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டாரா அல்லது அந்த சூழ்நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டாரா? காரணங்களை விவரிக்கிறார் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர்.

அதுவரை புத்தரின் கொள்கைகள் பாலி மொழியில் இருந்ததை ஆங்கில மொழியில் மொழிப்பெயர்த்து இருந்தார். அதை புத்தர் பிறந்த வைகாசி பௌர்ணமி 24. 5 1994 அன்று தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு படைத்தளித்தார் பேராசிரியர் சித்தார்த்த பெரியார்தாசன் அவர்கள்.

 

பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் குறித்து பகுத்தறிவு பிரசாரங்களை நாதழும்பேற பேசி வந்தவர். அவ்வப்போது மாமல்லபுரம் வருவார். பல விஷயங்கள் குறித்து கடற்கரையோரமாக இருந்த என்னுடைய `தேனருவி' உணவகத்தில் அமர்ந்து நண்பர்கள் புலவர் கங்காதுரை, ஆலை இளங்கோவன், வழக்கறிஞர் மாரிமுத்து, என் மூத்த சகோதரர் சிங்காரம் உள்ளிட்டோருடன் பல மணி நேரம் விவாதிப்போம். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது சிற்பிகளின் கைவண்ணத்தில் மாமல்லபுரத்தில் விதவிதமாக புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டு இருப்பதும், அதில் எலும்பும் தோலுமான ஒட்டிய வயிற்றில் முதுகெலும்பு தெரியும் வகையில் உள்ள ஒரு புத்தர் சிலை இருப்பது பற்றி பேச்சு திரும்பியது. உலகப் புகழ்பெற்ற சிற்பி பாஸ்கர் பாகிஸ்தான் லாகூர் அருங்காட்சியத்தில் இருந்து சிலையின் மாடலை கொண்டு அயர்லாந்து நாட்டுக்கு செதுக்கிய அந்தச் சிலை குறித்து பேச்சு திரும்பியது.

பேராசிரியர் உடனடியாக, தான் அதை பார்க்க விரும்பி அதை சென்று கண்டு வந்தபின் புத்தர் குறித்து நாங்கள் அறிந்தவற்றை சொல்லச் சொன்னார். நாங்களும் அறிந்தவற்றை ஒரே கோணத்தில் சொன்னபோதுதான், அதுவரையில் நாங்கள் கேட்காத கோணத்தில் புத்தனின் துறவு நிலை குறித்து எங்களுக்கு வகுப்பு எடுத்தார் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள்.

புத்தர்
 
புத்தர்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரியம் தன் கொடிய கரங்களால் மனிதர்களை மடையர்களாக மாற்றி, அறிவை முற்றிலும் ஒழித்து, மெளடிகத்தில் அரசாட்சி செய்து கொண்டிருந்த காலத்தில் மனிதனின் மீட்புக்காகவும், அரக்கத்தனமான சிந்தனைகளுக்கு எதிராகவும் ஒரு மனிதன் தீ கக்கும் விழிகளோடு, தனது பறந்து விரிந்த ஞானத்தால் உலகை வலம் வந்து உணர்ந்து, அறிந்து, ஓங்கி உரத்த குரலில் சொன்னான்... `கடவுளைப் பற்றி கவலைப்படாதே, இல்லாத மோட்சத்தை இங்கு ஏன் தேடிக் கொண்டிருக்கிறாய்? இதோ மனிதம் விழுந்து கிடக்கிறது. அவனை தூக்கி நிறுத்து. ஒழுக்க வாழ்விற்கு அவனை பக்குவப்படுத்தி அறிவாயுதத்தை ஏந்தச் சொல். சொல்வது மகானாக இருக்கட்டும் அல்லது ரிஷியாக இருக்கட்டும். எதையும் நம்பிவிடாதே. தர்க்கம் செய். விவாதி. உன் அறிவை முழுமையாகப் பயன்படுத்தி அவர்களின் கருத்துகளின் மெய்த்தன்மை அறிந்து உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு, எஞ்சியதை தூக்கிக் குப்பையில் வீசு' என்ற குரலைக் கேட்டு அதிர்ந்தனர். காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கைக்கு எதிராக, அஞ்சாமல் புதிய பாதையை உருவாக்கினார். அறிவாயுதத்தை ஏந்தினார்.

 

சித்தார்த்தன் குழந்தைப்பருவம் கடந்து திருமணத்திற்கு பின் குழந்தை ராகுலன் பிறப்புக்கு பின் மூன்று காட்சிகளை கண்டபின், வீடுவிட்டு, நாடு துறந்து, இளவரசர் பட்டத்தை துறந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் போடும் பட்டத்து இளவரசர் ராஜா ஆடைகளைக் களைந்து, எளிமையான துறவு ஆடை அணிந்து, கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி, வீடுவிடாகச் சென்று, உணவு பிச்சை வாங்கி உண்டார் என்பதுவரை நாம் முன்னமே அறிந்த ஒன்று.

இருப்பினும் துறவறம் போவதற்கான உண்மையான காரணம், அவர் கண்ட மூன்று காட்சிகள். அல்ல தமிழ்நாட்டில், ஏன் உலகம் முழுவதும் உள்ள நதிநீர் சிக்கல்கள்தான் சித்தார்த்தன் சாக்கிய தேசத்தை விட்டு வெளியேறக் காரணமாக இருந்தது.

சர்வதேச அளவில் நதிநீர் தாவாக்களுக்கு தீர்வு காணும் ஈங்சிங்கி ஒப்பத்தத்தின் மூலவர், ரோகிணி ஆற்றுக்காக நடுவர் மன்றம் அமைத்த புத்தர் என்றால் அது மிகையன்று.

ஆறுகள் இயற்கையின் அருட்கொடை. குறிஞ்சி மலையும் மலைசார்ந்த நிலப்பரப்பில் உருவாகி முல்லை காடும் காடு சார்ந்த நிலப்பரப்பு வழியாக ஓடி, மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பரப்பை செம்மையாக்கி, நெய்தல் கடலும் கடல் சார்ந்த நிலத்தைக் கடந்து இறுதியாக கடலில் கலந்துவிடுகிறது. மழை நீரும் ஊற்று நீரும் இணைந்து மண்ணை அரித்து அரித்து தனக்கான பாதையை உருவாக்கிக் கொண்டு மேலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து ஓடுகிறது. நீர், மண்ணை அறிப்பதால் ஆறு என்று அழைக்கப்பட்டது.

புத்தர்
 
புத்தர்

இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளும் அதன் சிக்கல்களும்...

பகத்சிங்கின் வீர நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் பஞ்சாப்பிற்கும் ஹரியானாவிற்கும் இடையில் ஓடும் சட்லெஜ் நதி பிரச்னை

ராஜபுத்திரர்களின் வீரத்தை பறைசாற்றும் ராஜஸ்தானுக்கும் ஹரியானாவிற்கும் இடையில் பாய்ந்தோடும் ரவி பியாஸ் ஆற்றுநீர் பிரச்னை

மகாத்மா காந்தியின் தொட்டில் பிரதேசம் குஜராத், மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிராத்திற்கு இடையில் ஓடும் நர்மதை ஆற்று நீர்ப் பிரச்சினை

ஆந்திரப் பிரதேசம் மகாராஷ்டிரத்துக்கு இடையில் ஓடுகின்ற கோதாவரி ஆற்று நீர் சிக்கல்

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே பாய்ந்தோடும் காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு கன்னிதீவைப் போன்று முற்றுப் பெறாமல் தொடரும் ஆற்றுநீர் சிக்கல்கள்

சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே பாய்ந்தோடும் ஆற்று நீர் சிக்கல்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாய்ந்து ஓடும் சிந்து நதிநீர் சிக்கல்

இந்தியா வங்கதேசம் நேபாளம் இடையில் ஓடும் கங்கை நதி நீர்ப் பிரச்சினை

இஸ்ரேலுக்கும் எகிப்திற்கும் இடையில் ஓடும் சூயஸ் கால்வாய் நீர் யுத்தங்கள்

எகிப்திற்கும் சூடான் நாடுகளுக்கு இடையில் ஓடும் நைல் நதி பிரச்சனை

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பாய்ந்தோடும் கொலம்பியா ஆற்றுநீர் சிக்கல்

பிரான்ஸ் நாட்டுக்கும் ஜெர்மன் நாட்டுக்கும் இடையில் ஓடும் ரைன் நதிப் பிரச்சினை

ஜெர்மன் நாட்டின் பிளக் பாரஸ்டில் உருவாகி ஆஸ்திரியா, ஸ்லோவேக்கிய ஹங்கேரி, குரோஷியா, செர்பிய ருமேனியா, பல்கேரியா, மால்டா, உக்ரைன் ஆகிய 11 நாடுகளுக்கு இடையில் 2,880 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து ஓடும் டான்யூப் நதிநீர்ப் பிரச்னை உட்பட உலகின் முக்கியமான நதிநீர் தாவாக்கல் அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தன் வகுத்த நடுவர் மன்றம் ஈங்சிங்கி ஒப்பந்தம் மூலம்தான் தீர்க்கப்பட்டு வருகிறது.

 

இன்றைய சாதிய சங்கங்கள் எப்படி கட்சிகள் மீதும் அரசுகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறதோ அதேபோன்று அப்போதும் சாக்கிய சங்கங்கள், மக்கள் மீதும் அரசின் மீதும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. சில நாடுகளில் இன்றளவும் கட்டாய ராணுவத்தில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதைப் போன்று, 20 வயதே நிரம்பிய ஒரு சாக்கிய இளைஞன் சாக்கிய சங்கத்தின் கட்டாய உறுப்பினராக இணைந்து தன்னார்வலராக பணியாற்றவேண்டும், சாக்கிய சங்கத்திற்கு என்று சட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். 20 வயது நிரம்பிய சித்தார்த்த கௌதமர் சாக்கிய சங்கத்தின் உறுப்பினராக ஆட்சேபனை ஏதும் இல்லாமல் சேர்க்கப்பட்டார். சாக்கிய சங்கத்தின் உறுதிமொழி சங்க கூட்டங்களில் தவறாமல் பங்கேற்றார். `தன் உடலாலும் மனதாலும் உடமையாலும் சாக்கியர்களின் நலனை பாதுகாப்பேன்' என்றார்.

ஏதேனும் தாங்கள் செய்த குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படுகையில் குற்றம் செய்து இருப்பின் அதை ஒப்புக்கொள்ள வேண்டும். தாங்கள் நிரபராதியாயின் அதையும் தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்க வேண்டும்.

சாக்கிய சங்கத்தின் உறுப்பினர் கொலை, பாலியல் வல்லுறவு, களவு, பொய் சாட்சி மற்றும் சாக்கியர்களுக்கு எதிராக செயல்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவர். தண்டனைகள் சொத்துகள் பறிமுதல் செய்வது, நாடு கடத்தல், தூக்குத்தண்டனை. இதை ஏற்றுக்கொண்டு சாக்கிய சங்கத்தின் உறுப்பினராக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட செயல் உறுதி மிக்க உறுப்பினராக திகழ்ந்தார் சித்தார்த்தன்.

சித்தார்த்தனை புத்தனாக மாற்றியது ஒரு நதிநீர் சிக்கல்தான்! - புத்த பூர்ணிமா சிறப்புப் பகிர்வு
 

உறுப்பினர் பொறுப்பேற்ற எட்டாம் ஆண்டில் துன்பத்தின் துவக்கம்; ரோகிணி ஆற்று நீரால் உண்டானது. கோசல பேரரசின் சிற்றரசுகளாக சாக்கிய அரசும் கோலிய அரசும் இருந்தது. இரண்டு தேசத்தின் நடுவே ரோகிணி ஆறு பாய்ந்து ஓடியது. வான் பொய்த்து மழை நீர் இல்லாத காலங்களில் ரோகிணி ஆற்றில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீருக்காக இரண்டு தேசங்களுக்கும் அவ்வப்போது பகை ஏற்படும். காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடக அரசும், கட்சிகளும், மக்களும் சகோதர மாநிலம் கடைமடைப் பகுதி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடாமல் அடம் பிடிப்பதும், தமிழர்கள் தாக்கப்படுவதும், அதற்கு தமிழ்நாட்டில் எதிர்வினை ஆற்றுவது இன்றும் தொடர் கதையானதைப் போன்று... ரோகிணி ஆற்றின் தலைமடைப் பகுதி, சாக்கிய தேசம் கடைமடைப் பகுதி, கோலிய தேசம் தங்கள் வயல்களில் பாசனத்திற்கு சாக்கியர்கள் தண்ணீர் திறந்து விட மறுக்கும் போதெல்லாம் கோலியர்கள் ஒன்றுதிரண்டு ரோகிணி ஆற்று நீர் மதகுகளை திறந்து விடுவார்கள். இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடியும்.

சித்தார்த்தனின் 28-வது வயதில் ரோகிணியின் ஆற்றுநீர் குறித்து சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையே பெரிய மோதல் ஏற்பட்டு இரு தரப்பிற்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சாக்கியர்களின் சேனாதிபதி கோலியர்கள் மீது போர் தொடுக்க சாக்கிய சங்கத்தின் ஒப்புதல் பெற கூட்டத்தைக் கூட்டி பேசினார். நம் மக்களை கோலியர்கள் தாக்கியுள்ளனர், நம்மவர்களும் திருப்தி தாக்கியுள்ளனர், இத்தகைய மோதல்கள் நடைபெறுவது இது முதல்முறை அன்று, இதுவரை நாம் பொறுத்துக் கொண்டோம், ஆனால் இது இப்படியே நீடிக்க முடியாது, அதற்கு ஒரே வழி கோலியர் மீது போர் தொடுப்பது மட்டும்தான் தீர்வு, எனவே சாக்கிய சங்கம் கோலியர் மீது போர்தொடுக்க ஒப்புதல் தர வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதில் கருத்து சொல்ல விரும்புபவர்கள் பேசலாம்' என்றபோது சேனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து யாரும் பேச முன்வராத நிலையில் சித்தார்த்த கௌதமர் எழுந்து நின்றார்.

`இந்த தீர்மானத்தை நான் எதிர்க்கின்றேன், எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது. சங்கம் கோலிமர்கள் மீது போர் தொடுப்பதில் அவசரம் காட்டக்கூடாது. நம்மவர்களும் வன்முறைகளில் ஈடுபட்டு அவர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இது உண்மையானால் நாமும் குற்றவாளிகள்தானே' என்றார்

சேனாதிபதி, `ஆம் நம்மவர்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள்தான். ஆனால் முதலில் நீர் பங்கிட்டுக் கொள்ள வேண்டியது தலைமடைப் பகுதியை சேர்ந்த நமது உரிமை என்பதை மறந்துவிடக் கூடாது' என்றார்.

 

சித்தார்த்தர் பதில் கூறினார். `நாம் குற்றத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதையே சேனாதிபதியின் பதில் காட்டுகிறது. நம்மில் இருவரை தேர்ந்தெடுங்கள். கோலியர்களில் இருவரை தேர்ந்தெடுத்து கோசல தேசத்தில் இருந்து ஒருவரை மத்தியஸ்தம் செய்ய தெரிவுசெய்து இக்குழுவினர் ரோகிணி ஆற்று நீர்ப் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என நான் இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன்' என்றார். கெடுவாய்ப்பாக சித்தார்த்தன் கொண்டு வந்த தீர்மானம் தோற்கும் வண்ணம் மக்களின் உணர்ச்சிகளை கூர்மைப்படுத்தி வைத்திருந்தார் சேனாதிபதி.

சேனாதிபதி தனது தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட்டார். பெருவாரியான வாக்குகளால் வெற்றி பெற்றது.

இலங்கையின் புத்தர் கோவில்களில் ஒன்று
 
இலங்கையின் புத்தர் கோவில்களில் ஒன்று #theHolyBiker

சித்தார்த்தன் சங்கத்தவர்களைப் பார்த்து பேசினார். `நண்பர்களே... உங்கள் பக்கம் பெரும்பான்மை உள்ளது. போருக்கான ஆயத்தங்களை துவங்குங்கள். உங்கள் முடிவை நான் எதிர்ததற்காக வருந்துகிறேன். போரில் நான் பங்கேற்க மாட்டேன்' என்றார். சேனாதிபதி பேசினார், `சங்கத்தின் உறுப்பினராக சேர்க்கப்படும் போது நீங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை நினைத்துப் பாருங்கள். இப்போது நீங்கள் சாக்கியர்களுக்கு எதிராக சிந்திக்கிறீர்கள்' என்றபோது சித்தார்த்தர் எழுந்து சொன்னார்... `நான் போருக்கு எதிராக சிந்திக்கின்றேன், சாக்கியர்களுக்கு எதிராக அல்ல. இப்போதும் சாக்கிய சங்கத்தின் உறுதிமொழியை மீறியதற்காக எந்த தண்டனை வேண்டுமென்றாலும் கொடுங்கள்' என்றபோது...

மூன்று தண்டனைகள்...

`மரண தண்டனையை பெறுமளவிற்கு பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்து குடும்பமும் சமூக அவமதிப்புக்கு உள்ளாக்கி சொத்துகள் பறிமுதல் செய்வது. என் பொருட்டு குடும்பத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்வது சமூக அவமதிப்புக்கு ஆளாவது அவர்களை துன்பத்தில் ஆழ்த்தும். எனவே என் தவறுகளுக்காக நானே தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்' என்று முன்வந்தார்.

சேனாதிபதி சொன்னார், `இருப்பினும் கோசல பேரரசிற்கு செய்தி அறிந்தால் சங்கத்திற்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்' என்றபோது சித்தார்த்த கௌதமர், `எளிய வழியைச் சொல்கிறேன். நான் பரிவ்ராஜகனாகிறேன். துறவறம் மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறி விடுகிறேன். அதுவும் ஒருவகையில் நாடுகடத்தல்தானே?' என்று குடும்பத்திடம் ஒரு வழியாக தன்நிலைக்கு ஒப்புதல் பெற்று துவராடை அணிந்து துறவறம் பூண்டு சாக்கிய தலைநகரை விட்டு விரைவான பயணத்தில் பொங்கிவரும் கங்கையைக் கடந்து 5 மலைகளால் சூழப்பட்ட மகத நாட்டின் தலைநகரான ராஜகிரஹத்தை அடைந்தார்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் ஒரு செய்தி வந்து சேர்ந்தது. கபிலவஸ்துவை விட்டு வெளியேறிய செய்தி தேசமெங்கும் காட்டுத்தீயாக பரவியது. மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். எங்கள் சகோதரர்கள் கோலியர்கள், அவர்களுக்கு எதிரான போரை நாங்கள் விரும்பவில்லை என்றபோது சாக்கிய சங்கம் அதற்கு கட்டுப்பட்டு சித்தார்த்தன் சொன்னதைப் போன்று கோசல பேரரசின் ஒரு பிரதிநிதி தலைமையில் ரோகிணி ஆற்றுநீர் சிக்கல் குறித்து பேச சாக்கிய தேசத்தின் சார்பில் ஐவர் குழுவை நியமனம் செய்து அறிவித்தது.

இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்த கோசல தேசம் தங்கள் தரப்பில் பேசுவதற்கு ஐவரைத் தேர்வு செய்து அறிவித்தது. இது இரண்டு தேசத்து பிரதிகளும் சந்தித்து மனம் விட்டுப் பேசி ரோகிணி ஆற்று நீர்ப் பிரச்சினை குறித்துப் பேசி முறைவைத்து ரோகிணி ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்ள அதிகாரமுள்ள நடுவர் மன்றம் உருவாக்கப்பட்டு அதன் முடிவுக்கு கட்டுப்பட சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். போர் நிறுத்தப்பட்டது. எனவே சித்தார்த்தர் உன் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டது, துறவறம் கலைந்து சாக்கிய தேசத்திற்கு திரும்பலாம் என்றபோது எதையும் பகுப்பாய்வு செய்யும் சித்தார்த்தர், `நான் கோலியர்களுக்கு எதிரான போர் காரணமாக வீட்டை விட்டு வந்தது உண்மை. ஆனால் சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் இடையேயான போர் சமாதான முடிவு பெற்றது என்பதனாலேயே நான் வீடுதிரும்பிவிட முடியாது. என் பிரச்னைகள் விரிவடைந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

ராஜ்ஜியங்களுக்கு இடையே முரண்

மன்னர்களுக்கு இடையே முரண்

மக்களுக்கிடையே முரண் குடும்பங்களுக்கிடையே முரண்.

 

வர்கங்களுக்கு இடையே முரண்

இந்த முரண்பாடுகளுக்கு தீர்வு காண விழைகிறேன்' என்று புத்தொளியைத் தேடி கௌதமர் ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி, காடு மேடுகளைச் சுற்றி பிக்குவின் ஆசிரமம் சென்று, பின் அங்கிருந்து வைஷாலி தேசத்திலுள்ள ஆராத காலம் ஆசிரமத்திற்கு சென்றார். தியான மார்க்கம், மூன்று வகைப்பட்ட சுவாசிக்கும் முறை, ஒன்று மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம்), இரண்டு மூச்சை நிலைப்படுத்துதல் (கும்பகம்), மூன்று மூச்சை வெளியிடுதல் (ரேசகம்) மேற்கொண்டார். பின் அங்கிருந்து யோகியை சந்தித்து சில பயிற்சிகளை பெற்று இப்படியாக சாக்கியம் சமாதி மார்க்கம் பயின்று வெளியேறி காயாய நகரின் ராஜ ரிஷியான நெகரியின் ஆசிரமத்தில் தங்கி ஆற்றங்கரையில் குடில் அமைத்து கடும் பயிற்சியை செய்யத் துவங்கினார்.

பயிற்சி மேற்கொள்ள மேற்கொள்ள மழை, வெயில், குளிர், இரவு, பகல் பாராமல் தன்னை முழுமையாக வருத்திக்கொண்டு புத்தொளியைத் தேடி ஆண்டுகள் ஆறு உருண்டோடி உடல் துரும்பாக இளைத்து நகர முடியாத சூழலில் தள்ளப்பட்டார். தன் வயிற்றை தொட்டால் அது அவரின் முதுகெலும்பாக இருந்தது. சீடர்கள் வழக்கம் போல் அவருக்கு பணிவிடை செய்து வந்தனர். இறுதியாக ஆறு ஆண்டுகள் தவத்தில் இருந்தார்.

அவ்வேளையில் இசைக்கலைஞர்கள் சித்தார் இசைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் சித்தாரின் சுருதி மாறியபோது சித்தார் இரும்புக் கம்பிகளை முறுக்கி இசைத்தபோது இசை சரியாக வரவில்லை. மீண்டும் சரிசெய்ய தளர்த்திய போது சுருதி சரியாக வரவில்லை. பின்பு மென்மையாக சமநிலையை வைத்தபோதுதான் சித்தாரில் இருந்து சரியான இசை வந்தது.

இதை கண்ணுற்ற சித்தார்த்தருக்கு சிந்தனை தெளிவு பெற்றது, ஞானம் அடைந்தார், ஓர் இசைக்கருவிக்கே கூடுதல் முறுக்கும் கூடுதல் தளர்ச்சியும் கூடாது என்ற நிலையில் தன்னுடைய பயணத்தில் கடும் தவம் சரியல்ல என்று சொல்லி தவக்கோலத்தை கலைந்து கொண்டு உயிரை தக்க வைத்துக் கொண்டு, அதற்குப் பின்னும் மெய்ஞானம் தேடி கயாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று... ஓர் உந்துதலில் அங்கிருந்த அரசமரம் கீழே அமர்ந்தார். 40 நாள்களில் மெய்ஞானம் அடைய தவம் இருந்தார். நான்காவது வாரத்தில் இறுதி நள்ளிரவில் பவுர்ணமி அன்று அவருக்கு புத்தொளி உண்டானதை உணர்ந்து மெய்ஞானம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 35.

அதுவரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அசைப்போட்டு பார்த்தார். உலக மாந்தர்கள் அனைவரும் இருவகை பயணங்களை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஒன்று குடும்பம், வாழ்க்கை, பொருளாதாரம், இன்பம் இவற்றை மட்டுமே நாடிச் செல்லும் பாதை. இரண்டு இன்ப வாழ்விலிருந்து துண்டித்துக் கொண்டு துறவு, பாவம், புண்ணியம், இறைவன் சொர்க்கம் என்று பயணிப்பது. இதில், தான் எதைத் தேர்ந்தெடுப்பது? இரண்டுக்கும் இடையே உள்ள நடுப்பாதையை தேர்ந்தெடுத்து தன்னுடைய அனுபவங்களைப் பேசினார்.

பெளத்தம் என்னும் வாழ்வியல் பிறந்தது. கௌதம சித்தார்த்தன் கௌதம புத்தரானார். வாழ்க்கையில் துன்பத்திற்கு காரணம் ஆசையே என்று ஓங்கி முழங்கினார். அதற்குப் பின் 45 ஆண்டுகள் பல தேசங்களுக்குச் சென்று பல மன்னர்களை, துறவிகளை, கொள்ளையர்களை, சமய மாற்றம் செய்து தனது 80-வது வயதில் உடல் நலம் குன்றி பயணத்தை மேற்கொள்ள முடியாமல் இருந்தபோது, சீடர்கள் கேட்டார்கள்.

`எங்களில் உங்கள் வாரிசாக யாரை நியமிக்கப் போகின்றீர்கள்?' என்று

`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!
 
`அழிப்பது அல்ல... காப்பதே வீரம்’ - அன்பின் வழியை போதித்த புத்தர் அவதரித்த தினம் இன்று!

புத்தர் சிரித்துவிட்டு, வாரிசு எதற்கு என்று வினாவினார். `உங்கள் உபதேசங்கள் நீங்கள் வகுத்த பாதை தொடர்ச்சியாக தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்க வேண்டும் அல்லவா?' என்றபோது, `சரி அப்படியானால் இதோ இப்போது அறிவிக்கின்றேன். என் உபதேசங்களே எனது வாரிசு' என்று சொல்லி வைகாசி பௌர்ணமி நள்ளிரவு நேரத்தில் உயர்வெய்தினார் புத்தர்

ஞாயிறு பகலில் மட்டுமே ஒளிரும்

நிலவு இரவில் மட்டுமே ஒளிரும்

வீரனோ கவசம் தண்ணிலே ஒளிர்வான்

தவசிகள் தியானத்தில் ஒளிவார்கள்

ஆயினும் மெய்ஞானமடைந்த புத்தரோ பகலிலும் ஒளிர்வார் இரவிலும் ஒளிர்வார் புகழெனும் தன் பேரொளியாலே

ஐயமின்றி அவரே இவ்வுலகின் ஒளியானவர்

புத்தம் என்றால் அறிவைக் குறிப்பது, மதத்தை குறிப்பதல்ல

புத்தன் என்றால் கடவுளல்ல, வாழ்வுக்கு வழிகாட்டும் மகத்தான பாதையை அமைத்துத் தந்த மனித குலத்தின் மீட்பர்

புத்தம் சரணம் கச்சாமே

தர்மம் சரணம் கச்சாமே

சங்கம் சரணம் கச்சாமே

- மல்லை சத்யா

 

 

https://www.vikatan.com/spiritual/news/how-rohini-river-dispute-changed-gautama-siddharthan-to-gautama-buddha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.