Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உருவே, உணர்வே, ஒலியே, தன்மையென” தமிழர்க்கு எழுத்தறிவித்தவன் இறைவனா? அல்லது மௌரிய மன்னன் அசோகனா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான ‘வெற்றிவேற்கை”யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடையாது. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும், வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர் என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உலக நாடுகள் அனைத்திலும் மக்கள் எழுத்தறிவு பெற்ற பின்னரே இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குக் காரணம் எழுத்துக்களின் வளர்ச்சி உருவ எழுத்து (Pictograph), கருத்தெழுத்து (Ideograph), ஒலியெழுத்து (Phonograph) மற்றும் தன்மை எழுத்து (Standard Script - நிலையான எழுத்து) என்று சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து படிநிலை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதாகும்.

எழுத்தில் ஏற்பட்ட இப்படிநிலை வளர்ச்சி பற்றி இற்றைக்குச் சுமார் 00 ஆண்டுகளுக்கு முன்பேயே தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பது தமிழ் இலக்கண உரை நூல்களாலும், நிகண்டுகளாலும் தெரியவந்துள்ளன.

‘உருவே, உணர்வே, ஒலியே, தன்மையென” இருவகையெழுத்தும் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு அறியக்கூடியது என்பதையும் மிக விளக்கமாகப் பாடல்களாலேயே மேற்குறிப்பிட்ட நூல்கள் தெரிவித்துள்ளன. உதாரணமாக உருவ எழுத்தை,

‘காணப்பட்ட உருவமெல்லாம்
மாணக்காட்டும் வகைமைநாடி
வழுவில் ஓவியன் கைவினைபோல
எழுதப்படுவது உருவெழுத்தாகும்”


என்று கூறுகிறது.

ஆதலால், ஒலியெழுத்து ஏற்பட்ட காலத்தில்தான் மக்கள் இலக்கிய அறிவு பெற்றிருப்பர். அதற்குப்பின்புதான் இலக்கியங்கள், இலக்கணங்கள் உருவாகியிருக்கும்.

தமிழகத்தில் எழுத்தில் ஏற்பட்டுள்ள படிநிலை வளர்ச்சியை நாம் பல இடங்களில் காண முடிகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள்; எழுத்து, பட எழுத்தாகவும் (pictograph), கருத்தெழுத்தாகவும் (Ideograph) வளர்ச்சி பெற்ற காலத்தைச் சார்ந்தவைகளாகும்.

ஒலியெழுத்து (Phonograph) நிலை எழுத்துக்குச் (Standard Script) சான்றுகளாக மயிலாடுதுறை மாவட்டம், செம்பியன் கண்டியூரில் கண்டெடுக்கப்பெற்ற புதிய கற்காலக் கருவி மீது பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், விழுப்புரம் மாவட்டம், கீழ்வாலை இரத்தப் பாறையில் தீட்டப்பெற்றுள்ள ஓவிய எழுத்துக்களையும் மற்றும் கோவை மாவட்டம், சூலூர் சுடுமண் தட்டில் பொறிக்கப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களும், பெருங்கற்காலப் பானை ஓடுகள்மீது எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும், கொடுமணல், இராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம், கடலூர் மாவட்டம், மருங்கூர் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள பானையோடுகளின்மீது எழுதப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், கரூர் மாவட்டம், கரூரில் கிடைத்துள்ள மோதிரத்தின்மீது காணப்பெறும் உருவ எழுத்துக்களையும், மதுரை மாவட்டம், கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம் ஆகிய ஊர்களின் மலைகளில் பொறிக்கப்பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு கூடிய உருவ எழுத்துக்களையும், கேரள மாநிலம், எடக்கல் மலை மீதும், இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரையிலும் பொறிக்கப் பெற்றுள்ள நிலையெழுத்துக்களோடு எழுதப்பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும் குறிப்பிடலாம்.

இவ்வொலி எழுத்துக்களுக்குச் சற்று முந்தைய காலத்தைச் சார்ந்ததாக ஹரப்பன் நாகரிக உருவ எழுத்துக்கள் இருக்கலாம். ஏனெனில், அவை சொல் - அசை (Logo-Syllabi) எழுத்துக்கள் என்று கருதப்பெறுவதாலாகும். இந்த ஹரப்பன் உருவ எழுத்துக்கள் திராவிட மொழிகளோடு - குறிப்பாகப் பழந்தமிழோடு உறவுடையதாகத் தெரிகிறது என்று ஹரப்பன் உருவ எழுத்து ஆய்வு அறிஞர் பின்லாந்து நாட்டு அஸ்கோ பர்போலா கூறுகிறார் என்றால் பழந்தமிழ் மொழிக்கு எழுத்து இருந்தது என்றுதானே பொருள்.

ஹரப்பன் நாகரிக சொல் - அசை எழுத்துக்களின் வளர்ச்சியைத்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதிய கற்காலக்கருவி உருவ எழுத்துக்கள், சூலூர் சுடுமண் தட்டு உருவ எழுத்துக்கள், பெருங்கற்காலப் பானையோட்டு உருவ எழுத்துகள், நிலை எழுத்துக்களோடு (தொன்மைத் தமிழ் எழுத்துக்கள்) காணப்பெறும் உருவ எழுத்துக்கள் ஆகியவை சுட்டுகின்றன.

ஹரப்பன் நாகரிக உருவ எழுத்துக்களையும், ஹரப்பன் நாகரிகக் காலத்தொடர்ச்சியான செப்புக்கால மற்றும் பெருங்கற்காலப் பானை ஓடுகளின்மீது எழுதப் பெற்றுள்ள உருவ எழுத்துக்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய நடுவண் அரசு தொல்லியல்துறை மேனாள் இயக்குநர் முனைவர் பி.பி. லால், 100-க்கு 9 பங்கு பெருங்காலப் பானையோட்டு உருவ எழுத்துக்கள் செப்புக்கால, ஹரப்பன் நாகரிகக்கால உருவ எழுத்துக்களோடு ஒற்றுமையுடையதாகவும், 100-க்கு 5 பங்கு ஹரப்பன் நாகரிக, செப்புக் கால உருவ எழுத்துக்கள் பெருங்கற்கால உருவ எழுத்துக்களோடும் ஒற்றுமையுடையதாகவும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆதலால்தான் இதுநாள் வரை பெருங்கற்காலக் குறியீடுகள் என்று தொல்லியலாளர்களால் அழைக்கப்பெற்று வந்ததை உருவ எழுத்துக்கள் என்றே குறிப்பிட்டுள்ளேன்.

ஹரப்பன் நாகரிகக் கால உருவ எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பத்தை - குறிப்பாகப் பழந்தமிழ் மொழியைக் குறிக்கிறது எனில், பெருங்கற்கால உருவ எழுத்துக்கள் (Hitherto called Graffiti) வளர்ச்சியடைந்த தமிழ் மொழிக்கு உரிய எழுத்துக்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

இவற்றின் அடுத்தக்கட்ட வளர்ச்சிதான் நிலை எழுத்தான (standard script) தொன்மைத்தமிழ் எழுத்து. இந்தத் தொன்மைத் தமிழ் எழுத்தில் கல்வெட்டுகள் அண்மைக்காலங்களில் குறிப்பிடத்தகுந்த அளவில் மலைக் குகைகளிலும், பானை ஓடுகளிலும், மோதிரங்களிலும், காசுகளிலும், முத்திரைகளிலும் கிடைத்துள்ளன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பெறும் முடியுடை மூவேந்தர்களின் தலை நகரங்கள், துறைமுகப் பட்டினங்கள், வணிகத்தலங்கள் என்று மட்டுமல்லாது, சாதாரண குக்கிராமங்களில் அகழாய்வு மேற்கொண்டாலும் அங்கெல்லாம்கூட தொன்மைத்தமிழ் எழுத்து எழுதப்பெற்ற யானையோடுகள் கிடைத்து வருகின்றன. உதாரணத்துக்கு, திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டிப்பட்டி, விழுப்புரம் மாவட்டம், மாளிகைமேடு, கடலூர் மாவட்டம், மருங்கூர், திண்டுக்கல் மாவட்டம், பொருந்தல், இராமநாதபுரம் மாவட்டம், தேரிருவேலி, விருதுநகர் மாவட்டம், மாங்குளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அது மட்டுமல்லாமல் மன்னர்கள் பெயர்கள் மட்டுமல்லாது சாதாரணக் குடிமகனின் பெயர்கூட தொன்மைத்தமிழ் எழுத்தில் பொறிக்கப்பெற்ற மோதிரங்களும் கரூரில் கண்டெடுக்கப் பெற்றிருக்கின்றன.

இது எவற்றைப் புலப்படுத்துகிறது? சாதாரணக் குடிமகனுக்கும் தொன்மைத் தமிழ் எழுத்து மிகவும் பழக்கமான ஒரு எழுத்தாக விளங்கியது என்பதையே ஆகும். சில அறிஞர்கள் கூறுவது போன்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியையோ அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தையோ அப்பானையோடுகளும், பிற பொருட்களும் சார்ந்தவையெனில், அத்தொன்மைத் தமிழ் எழுத்து சாதாரணக் குடிமகனுக்கும்கூட மிகவும் பழக்கமான எழுத்தாக ஆகிவிடுவதற்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்! குறைந்தது ஒரு நூறு ஆண்டுகளாகவாவது ஆகியிருக்குமல்லவா! ஆதலால் கி.மு.4-ஆம் நூற்றாண்டளவிலேயே தொன்மைத் தமிழ் எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கிறது என்பதுதானே உண்மையிலும் உண்மை. அவ்வாருக்கையில் கி.மு.3-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில் ஆட்சி புரிந்த மௌரிய மன்னன் அசோகன் தமிழ்நாட்டுக்கு அவன் நாட்டு எழுத்தை அறிமுகப்படுத்தினான் என்று கூறுவது எங்ஙனம் பொருத்தமாகும்?

ஹரப்பன் நாகரிகக் காலம் (கி.மு.2500 - 1700) மற்றும் செப்புக் காலம் முதல் பழந்தமிழுக்குரியச் சொல் - அசை எழுத்து, பின்பு புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்தில் ஒலியெழுத்தாக வளர்ச்சி பெற்று, பெருங்கற்கால இறுதியான சங்க காலத்தில் நிலையெழுத்தான தொன்மைத் தமிழ் எழுத்தாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியான ஒரு வளர்ச்சியைத் தமிழ் எழுத்தில் காணமுடிகிறது. ஆனால், இது போன்றதொரு எழுத்து வளர்ச்சியை அசோகன் காலத்து எழுத்துக்குக் காட்ட முடியாது.

கி.மு.300-இல் இந்தியாவின் வடபகுதிக்கு வருகை புரிந்த கிரேக்க நாட்டுத் தூதுவர் மெகஸ்தனிஸ் இந்தியாவில் அப்பொழுது எழுத்தே இல்லை என்று எழுதியிருக்கிறார். மேலும், கி.பி.1030-இல் இந்தியாவின் வடபகுதிக்கு வந்த அல்பெருனியும், ‘தாம் முன்பே குறிப்பிட்டதுபோன்று இந்தியா எழுத்தை இழந்துவிட்டது. மக்கள் எழுத்தை மறந்துவிட்டனர். அது பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆதலால் மக்கள் கல்வியறிவு அற்றவர்களாக ஆகிவிட்டனர் என்று எழுதியிருக்கிறார். இந்தியாவின் வடபகுதி அவ்வப்பொழுது எழுத்தை இழந்திருக்கிறது.

அப்படியிருக்கையில் மௌரிய மன்னன் அசோகன் திடீரென கி.மு.3-ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு எழுத்தை எவ்வாறு பெற்றிருப்பான்? அவன் இந்தியாவின் வேறெந்த பகுதியிலாவது வழக்கிலிருந்த ஒரு எழுத்தைத்தான் தம் நாட்டிலும் பயன்படுத்தியிருப்பான்.

அக்கால கட்டத்தில் தமிழ் நாட்டில் மன்னர்கள் மற்றும் சாதாரணப் பொதுமக்கள் ஆகியோருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த தொன்மைத் தமிழ் எழுத்தைத்தான் அசோகன் தம் நாட்டில் தம் நாட்டு மொழிக்கு ஏற்ப சில மாற்றங்களோடு பயன்படுத்தியிருப்பான் என்று கொள்வதே நியாயமான முடிவாகும்.

இக்கருத்துக்கு வலிவு சேர்க்கும் வகையில் கி.பி.7-ஆம் நூற்றாண்டில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. திபேத்திய நாட்டு அரசர் ஸ்ராங்-த்சென் கன்-போ தம் நாட்டுக்கென ஒரு எழுத்தில்லாத நிலையில், இந்தியாவில் வழங்கிவந்த எழுத்தைத் தம் நாட்டுக்குத் தேவையான சில மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொண்டார் என்று வரலாறு கூறுகிறது. எனவே, மௌரிய வேந்தன் அசோகனும், பிற்காலத்தியத் திபேத்திய மன்னர் போன்று, இந்தியாவில் தென்பகுதியான தமிழ்நாட்டில் வழங்கி வந்த தொன்மைத் தமிழைத்தான் பயன்படுத்தியிருப்பான்.

தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டில் கி.மு.5-ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைத்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாழியின் உள்பக்கத்தில் எழுதப் பெற்றுள்ள தொன்மைத் தமிழ் எழுத்துக்களும், மதுரைக்கு அருகில் உள்ள மாங்குளம் மலைக்குகைக் கல்வெட்டும் இவற்றுக்குச் சான்றுகளாகும்.
இவை மட்டுமல்லாமல் கி.மு.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ‘அதினன்னெதிரான்”, பாண்டியன் ‘செழியன் செழியன்” காசும் அக்காலத்தில் தொன்மைத் தமிழ் எழுத்து வழக்கிலிருந்து வந்ததைப் புலப்படுத்துகின்றன. புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டி பெருங்கற்காலச் சின்னங்களில் காணப்பெறும் தொன்மைத் தமிழ் எழுத்துக் கல்வெட்டுக்களும் அசோகன் காலத்துக்கு 100 - 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து வழங்கி வந்தது என்பதை உறுதி செய்கின்றன. அறச்சலூர் கல்வெட்டு ‘எழுதுதும் புணருத்தான் மசீய் வண்ணக்கன் தேவன் ஙாத்தன்” என்று கூறுவதும் எழுத்து இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது. எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ‘எழுத்தறிவித்தவன் இறைவனே” என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தொல்லியலறிஞர் நடன. காசிநாதன்,
தமிழ் நாட்டரசு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.