Jump to content

களிறன்ன நறுமாமலர் – ஜெயமோகனின் இரவு: கா.சிவா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

களிறன்ன நறுமாமலர் – ஜெயமோகனின் இரவு: கா.சிவா – அகழ்

எழுத்தாளர் ஜெயமோகன் விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், காடு, கொற்றவை போன்ற பெருநாவல்களையும் வெண்முரசு என்ற பெயரில் 26 நாவல்கள் கொண்ட தொகுதியையும் படைத்துள்ளார். பிரமாண்டமான இவற்றின் நிழலில், அவர் எழுதிய சிறு நாவல்களான ரப்பர், கன்னியாகுமரி, ஏழாம் உலகம், அனல் காற்று, இரவு, உலோகம்  போன்றவை மறைந்து கிடக்கின்றன. இவை மட்டுமல்லாமல் குறு நாவல்களும் சிறுகதைகளும் தனியாக குவிந்துள்ளன. இவற்றுள் கன்னியாகுமரி, அனல் காற்று, இரவு மூன்றும்  மனிதர்களுக்குள் காமத்தினால் ஏற்படும்  சிக்கல்களையும் அதனால் மனதில் உண்டாகும் உலைதல்கள், கொந்தளிப்புகளை  பேசுபொருளாகக் கொண்டவை. இவற்றுள் இரவு  முதன்மையான நாவலாகும்.

எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாய் சுட்டிக் காட்டி வெம்மையின் மொழியில் பேசும் பகல் தந்தையைப் போல. பகலை முழுக்க அறியமுடிவதால் சற்று விலக்கம் ஏற்படுகிறது. பெரும்பாலானவற்றை மறைத்து தேவையானதை மட்டும் காட்டி, தண்மையான மொழியில் பேசும் இரவு தாய் போல. இதை முழுவதுமாய் அறியமுடியாததாலேயே அணுக்கமானதாகவும் பிரியத்திற்குரியதாகவும் உள்ளது. பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான சூரியன்களில் ஒன்றை மட்டுமே பகலில் காணமுடிகிறது. ஆனால், இரவில் அளவிட முடியாத தொலைவுகளில் இருக்கும் எண்ணிலடங்கா நட்சத்திரங்களைக் காணமுடிகிறது. இப்படி பகலுக்கில்லாத இரவின் தனித்துவ  சிறப்புகள் பலபல. அவற்றுள் இரவு நாவலும் ஒன்று.

மனிதர்கள் அனைவருமே இரவு வாழ்வை அறிந்தவர்கள்தான். பகலின் வெம்மையை தணித்துக் கொள்ள, பகலின் ஓட்டத்திலிருந்து ஓய்வு கொள்ள, பகலின் கொந்தளிப்புகளை ஆற்றிக்கொள்ள இரவு தேவைப்படுகிறது. ஆறுதல் கொள்ள இரவு இருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் பலர்  பகலையே எதிர் கொள்கிறார்கள். இரவில் துளிர்க்கும் இன்பத்தை சுவைக்காத எவரும் இப்புவியில் இல்லை. ஆனால், இரவு வாழ்க்கை திணிக்கப்பட்ட காவலர்கள், பாதுகாவலர்கள், மருத்துவப் பணியாளர்கள், மென்பொருள் பணியாளர்கள் போன்ற  சிலரைத் தவிர பிறருக்கு  இரவில் மட்டும் வாழ்வதைப் பற்றி ஒருபோதும் எண்ணம் எழுவதில்லை. கடமைக்கென இல்லாமல் இயல்பான இரவு வாழ்க்கை அமைந்தால் எப்படியிருக்கும் என்பதைக் காட்டுகிறது இந்நாவல்.

சென்னையில் பெரும் வருமானம் ஈட்டும் ஆடிட்டர் சரவணன் ஒரு மாதம் தனிமையிலிருந்து பணியாற்றுவதற்காக கேரளாவின் எர்ணாகுளத்தை ஒட்டிய காயல்களுக்கு அருகில் அமைந்த இடத்திற்குச்  செல்கிறான். அங்கே, அண்டை வீடு இரவில் களியாட்டங்களுடனும் பகலில் தூங்கி வழிந்து கொண்டிருப்பதையும் கண்டு,  ஓர் ஆர்வத்தினால் மறுநாள் இரவு அங்கு செல்கிறான். அங்கிருப்பவர்கள் அவனைப் பார்த்தவுடனேயே அன்புடன் வரவேற்று தங்களில் ஒருவனாக உணர வைக்கிறார்கள். இரவுலாவிகளாக வாழும் அவர்களுடைய இனிமையும் உற்சாகமும் அதீதமாக உடைய வாழ்வை, புதிதாக பள்ளிக்கு செல்லும் இளம் பிள்ளையின் ஆர்வத்துடன்  பார்க்கிறான். இதுவரை உணராத அந்த வாழ்வின்  மாயத்தால் ஈர்க்கப்படும்  சரவணன் அவ்வாழ்வில் நீடித்தானா வெளியேறினானா என்பதை நாவல் இரவுக்கேயுரிய நளின  மொழியில் கூறுகிறது.

Review_Kaa.siva_1.jpg?resize=323%2C500&s

அருமையான வாசிப்பனுபவத்தைத் தரும் இந்நாவலின் கதையை கூறி அவ்வின்பத்தைக் குலைக்காமல், அதன் சிறப்புகள் என நான் எண்ணுபவற்றை மட்டும் கூறுகிறேன். விஜயன் மேனன் – கமலா தம்பதிகள் மட்டுமே இரவின் இனிமையை உணர்ந்து அதற்குள் வந்தவர்கள். நீலிமா, மஜீத், பிரசண்டானந்தா, முகர்ஜி, தாமஸ் போன்றவர்களெல்லாம் பகலில் வாழமுடியாமல் இரவு வாழ்க்கைக்கு வந்தவர்கள். இரவு வாழ்க்கைக்குள் வந்தவுடன் தேனில் சிக்கிய சிற்றுயிரென அதன் இனிமையிலிருந்து வெளியேற முடியாதவர்களாகிறார்கள். இரவின் கொந்தளிப்பும் பரவசமும் துயரும் உச்சத்திலேயே உள்ள வாழ்வை ஏற்றுக் கொண்டு வாழ்கிறார்கள். 

சாக்த வழிமுறைகளை கடைபிடிக்கும் பிரசண்டானந்தா சீடர்களுடன் இரவுக்கு ஏற்ற மாதிரி தனது ஆசிரமத்தில்  வழிபாடுகளை நடத்துகிறார். பாதிரியார் தாமஸ் தன்னிடம் பாவமன்னிப்பு கோரி வருபவர்களுக்காக இரவு பிரார்த்தணை நடத்துகிறார்.   பெரும் துயரத்தால் உண்டான அதிர்ச்சியில் மூளை நரம்பில் பிரச்சனை ஏற்பட்டதால், பகலைக் காண முடியாமலான நீலிமா இரவு வாழ்க்கைக்குள் வருகிறாள். இவளுக்காக இவளுடைய அப்பாவும்.   இவர்களின் வாழ்க்கை முறை கற்பனை என்று ஒரு கணமும் எண்ணமெழுந்திடாத வகையில் இயல்பாக காட்டப்பட்டுள்ளது.

சரவணனை நீலிமா  பாலைமணல் நீரை ஈர்த்துக் கொள்வதுபோல ஏந்திக் கொள்கிறாள். சரவணனை முதலில் கவர்வதும், தொடர்ந்து அவளை நோக்கி அவனை ஈர்ப்பதும் அவளின் மனமல்ல உடல்தான். இரவின் மயக்கும் பூடகத் தன்மையுடன் அவளும் இருப்பதனாலேயே இவன் மனம் ஏனென்றே புரியாமல் அவளை நோக்கியே அலைவுறுகிறது. அவள் நடத்தைகள் ஒருவித அசௌகரியத்தை அளித்தாலும், பிரிந்து சென்றாலும் கவலையில்லை என அவள் கூறினாலும் கடுமணத்தின் மேல் உண்டாகும் பிரியம்போல  சரவணனின் மனம் அவளை நோக்கியே செல்கிறது. தன் புதிர்த்தன்மையாலேயே விலக்கவும் ஈர்க்கவும் செய்யும் இரவின் ஒரு குறியீடு போலவே நீலிமா பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

இரவுதான் அனைத்து உயிர்களும் வாழ்வதற்கான பொழுது என்பதை பல்வேறு தர்க்கப்பூர்வமான காட்சிகளினால் விவரிக்கிறது நாவல். காணும் காட்சிகளில் வெளிப்படும் அழகு, தண்மையான வெளி, மென்மையான ஒளி, உற்சாகமான மனநிலை எல்லாம் இரவில்தானே அமைந்துள்ளது. மனிதனின் அத்தனை கலை வடிவங்களும் இரவில் நிகழ்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன எனக் கூறுவதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஆசிரியரின் பெரும்பாலான கதைகளில் வாசகர்கள் தங்களின் உணர்வால் சிந்தனையால் முன்சென்று உணர்வற்கான இடைவெளி இருக்கும். ஆனால் இந்நாவலில் ஒரு அத்தியாயத்தில் வாசகனின் தர்க்க மனம் ஏற்காதவாறு ஒரு சம்பவம் நிகழும். அடுத்த அத்தியாயங்களில் ஏன் அப்படி நிகழ்ந்தது என்பதை தர்க்கப்பூர்வமாக விவரிக்கப் பட்டிருக்கும். உதாரணமாக சரவணனை முதல் முறையாக பார்த்தவுடனேயே நீலிமா காதல் கொள்வதாக காட்டப்பட்டிருக்கும். இதை வாசித்தவுடன் இதென்ன திரைப்படக் காட்சிபோல பெரும் கற்பனையாக உள்ளதே எனத் தோன்றும். சில அத்தியாயங்களுக்குப் பிறகு  வாசிப்பவர் ஏற்றுக்கொள்ளும் வண்ணம்  இதற்கான விளக்கம் இருக்கும். ஒரு நிர்வாண சடங்கு முறையைக் கண்டவுடன் சரவணன் மயங்கி விழுகிறான். ஏன் இது நிகழ்கிறது என்பதற்கான பதில் அடுத்த அத்தியாயங்களில் விவரிக்கப் பட்டிருக்கும். பொதுவாக இம்மாதிரியானவற்றை வாசகனே உய்த்துணருமாறு விடுபவர் இதில் விவரிப்பதற்கு காரணம்,  தவறான ஒன்றை எண்ணிக் கொள்வதற்கான சாத்தியம் அதிகமிருப்பதால்தான் என நான் கருதுகிறேன்.

இரவில் மட்டும் மீன் பிடிக்கும் தோமா, பெரியச்சன் பாத்திரங்கள் மூலம் பொருளீட்டுவதற்காக இரவு வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்களையும்  அறிய முடிகிறது. அம்மீனவர்களுக்கு உணவு அளிக்கும் கடைக்காரர்களும் இரவுலாவிகள்தான். ஆனால் இவர்களெல்லாம் பெரும் பரவசம் ஏதுமின்றி, பெரும் கலைக்கோவிலினுள் அதன் சிற்பத்தையோ மரபையோ அறியாது கடமைக்கென பணியாற்றும் அதிகாரிகள் போல, விதிக்கப்பட்டதெனவே இரவு வாழ்வை வாழ்கிறார்கள். 

மீனவர்களுடன் சிறு படகில் காயல் வழியாக கடலுக்குள் செல்லும் சரவணன் சுற்றிலும் விளக்கொளி இல்லாத இருளில்,  தொலைவில் வானில் சுடரும் விண்மீன்களையும் கடலில் பிரதிபலிக்கும் அவற்றின் ஒளியையும் கண்டு இயற்கையின் பிரமாண்ட அழகையும் விரிவையும் உணர்கிறான். இதனால், பெரும் மனவெழுச்சியடைந்து இரவு வாழ்க்கையை விட்டு விலகுவதென எடுத்த முடிவை  கைவிடுகிறான். இக்காட்சி  இரு பேரிலக்கிய காட்சிகளை நினைவுக்கு கொண்டுவருகிறது. ஒன்று, லேய் தல்ஸ்தாயின் “போரும் அமைதியும் ” நாவலில் நீல வானின் பின்னணியில் நெப்போலியனைக் காணும் போது மனிதர்களின் இருப்பும், அவன் லட்சியமும், வாழ்வும் எத்தனை சிறியது  என பிரின்ஸ் ஆண்ட்ரூஸ் அடையும் தரிசனம். மற்றொன்று, பியோதர் தஸ்தவேஸ்கியின்  “கரமோசவ் சகோதரர்கள்” நாவலில் அல்யோஷா, முதியவர் ஸோசிமாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வெளிவந்ததால் உண்டான மன சஞ்சலத்துடன் இருக்கும்போது, கருநீல வானத்தையும் நட்சத்திரங்களையும் கண்டு உள்ளெழுச்சியுடன் மனமுறுகி பூமியை முத்தமிட்டு உலகிலுள்ள அனைவரையும் மன்னிக்கவும்,  அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவும் விரும்பும் இடம். இம்மூன்று காட்சிகளையும்  ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கும்போது பெரும் மனயெழுச்சி உண்டாகிறது. அதே நேரத்தில், சூழ்ந்து,   விரிந்திருக்கும் ஒளிர் வானத்தை பார்க்காமல் வாழும்  மனிதர்கள்தான் குறுகிய மனதுடன் வாழ்கிறார்களோ, அதனைக் கண்டால் மனம் விரிந்துவிடுவார்களோ என்றும் எண்ணம் தோன்றுகிறது.

நாவல், சரவணனின் எண்ணவோட்டங்களாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் இரு அத்தியாயங்களில் இரவை பற்றிய அவன் எண்ணங்கள் பொதுவான மன நிலையுடன் ஒரு தட்டையான பார்வையாகவே உள்ளது. பிறகு மெல்ல மெல்ல அவ்வாழ்க்கைக்குள் நுழையும்போது, அவன் பார்வையும் எண்ணவோட்டமும் இரவின் நுணுக்கமான செதுக்குகளையும் உணரும் அளவிற்கு கூர் கொள்வதைக் காட்டி அவனின் பரிணாமத்தைச் சுட்டுகிறது.  வாசிப்பவர்களின் உள்ளமும் அதில் தோய்கிறது. மேனன் இரவை அறியும் கணம் ஒரு கவித்துவ தருணமாக உள்ளது.    

மரநாயின் மரகதக்கல் போன்ற பசும் விழிகள் அவரை இரவின் அற்புதத்திற்குள் இழுக்கிறது. கொன்னைப் பூக்குவியலில் செய்யப்பட்டது போன்ற சிறுத்தையின் மீசை முடிகளில் தண்ணீர்த்துளி ஜொலித்ததை கண்டவுடன் மேனனின் இரவுக்கான  அகவிழிகள் திறக்கின்றன. சரவணனின் அகவிழி திறக்கும் கணமும் பெரும் தரிசனம் போலவே காட்டப்பட்டுள்ளது. இதுவரை வானத்தை சாவகாசமாய் பார்த்தேயிராதவன் பார்க்க ஆரம்பிக்கிறான். பல்லாயிரம் விழிகளென சூழ்ந்து,  விண்மீன்கள்  இவனை பார்க்கின்றன. அவையும் சில கணங்களில் உணர்வுகள் வெளிப்படும் மிருகங்களின் விழிகளாக தெரிய ஆரம்பிக்கின்றன. அவை இரவின் விழிகளேதான். இந்தப் பார்வை மூலம் மேனன் மற்றும் சரவணனின் அகவிழிகள் திறப்பதாக ஓர் எண்ணம் எழுந்தாலும் இரவு தன்னை இவர்களுக்கு காட்டி உள்ளிழுக்கிறது என்பதே உண்மையெனத் தோன்றுகிறது.

இந்நாவலை உவமைகளாலேயே கட்டமைத்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு உவமைகளையும் வாசித்து அதை கற்பனையில் காண்பது பேரனுபவமாக உள்ளது. உதாரணமாக  இரவு வாழ்க்கைக்கு பழகியபின் சரவணன் பகலைக் காணும் காட்சி.                                  

 //அதிக வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல பளீரென்று வெளிறிக்கிடந்தது தென்னந்தோப்பு. மரநிழல்கள் நடுவே பீய்ச்சியிருந்த ஒளி சுண்ணாம்பு நீரை வீசி வீசிக் கொட்டியது போலிருந்தது.  கீழே கிடந்த காய்ந்த தென்னையோலைகள் சாம்பல்நிறமாக, செத்து மட்கிய கால்நடைகளின் விலா எலும்புகள் போலக் கண்களை உறுத்தின. தென்னைமரங்களின் தடியே இந்த அளவுக்கு அசிங்கமான சாம்பல்நிறம் என்பதை அப்போதுதான் கவனித்தேன். ஓலைகள் உதிர்ந்த வடுக்கள் புண்தழும்புகள் போலிருக்க பிரம்மாண்டமான சிலந்தியொன்றின் நூற்றுக்கணக்கான கால்கள் போல அவை நின்றன. முற்றத்தில் மண் மீது தென்னை ஓலைகளின் நிழல்கள் ஆடிய வெயில் வழுவழுப்பான திரவம் போல சிந்திப் பரவிக் கிடந்தது // மேலும் ஒரு திகைக்க வைக்கும்  உவமை “தூங்கும் மிருகம் ஒன்றின் உடல் வழியாக ஊர்ந்து செல்லும் பேன் போல நகரில் சென்றது டாக்ஸி”. இன்னும் ஒரு புதுமையான உவமை  “ஜெட் விமானத்தின் பின் பக்கம் நெருப்பு உமிழும் உக்கிரமான இயந்திரம் போல என் இலக்குகள் என்னை ஒவ்வொரு கணமும் தூக்கிச் சென்று கொண்டிருந்தன”.  இவற்றைப் போன்ற உவமைகள்தான் வாசிப்பவரை நாவலுக்குள்ளேயே லயித்திருக்கச் செய்கின்றன.

ஜெயமோகன் எழுதி,  இப்போது வெளிவந்துள்ள  “பத்து லட்சம் காலடிகள்” சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஔசேபச்சன் கதைகளுக்கு சுவைகூட்டும் உரையாடல்களுக்கு முன்னோடியான தொடக்கம் இந்நாவலில் உள்ளது. நாயருக்கும்  தாமஸுக்குமான உரையாடலின் போது //இந்த நாயர்கள் அடிப்படையில் போலீஸ்காரர்கள். அதாவது படைவீரர்கள். அவர்கள் தத்துவஞானிகளாக இருக்கலாம். கலைஞர்களாக இருக்கலாம். அரசியல்வாதிகளாக இருக்கலாம். ஒரு லார்ஜ் உள்ளே போனால் எல்லா நாயரும் படைநாயர்தான். அதன் பிறகு லெ·ப்ட் ரைட் மட்டும்தான் மண்டைக்குள் இருக்கும்// என்று தாமஸ் கூறுவதும், அதற்கு நாயர்  

//இவனோட பிஷப்புக்கு ஒரு நான்கு லார்ஜ் ஊற்றிக்கொடுத்துப்பாரு. சங்ஙனாச்சேரியிலே அவன் அப்பூப்பன் பரட்டுக்காட்டு தோமாச்சன் வாத்து மேய்க்கிறப்ப சொல்ற எல்லா கெட்டவார்த்தையும் அவன் வாயிலேயும் வரும்//. எல்லா மதத்தவரும் பிற மதத்தினருடன் எத்தனை இணக்கமாக இருந்திருந்தால்  இத்தனை உரிமையோடு பேசிக் கொண்டிருக்கமுடியும் என்ற எண்ணத்துடன் பெருமூச்சு எழுகிறது. 

ஜெயமோகன்,  யட்சிகளை மையமாக வைத்து பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்நூலை யட்சி நாவல் என்றும் சொல்லலாம். கமலா மற்றும் நீலிமாவின் பாத்திரங்கள் யட்சிகளைப்  போலவே படைக்கப்பட்டுள்ளன. பகலில் பெண்களாயிருப்பவர்கள் இரவில் யட்சிகளாகிறார்கள் என்ற விளக்கம் பொருத்தமாக  உள்ளது. நள்ளிரவில் ஆம்பல் குளத்தருகே புழக்கமின்றி இருக்கும் யட்சி கோவிலும், அதன் அருகே அரவம் சூழ பூத்திருக்கும் நிஷாகந்தி மலரை பறித்து வரும் நீலிமாவைப் பற்றிய சித்தரிப்பும், கொடுங்கல்லூர் ஆலய வழிபாட்டைக் கூறும் காட்சியும் மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தருகிறது.

அந்த வாழ்வுக்குள்ளேயே இருப்பவர்கள் இதற்கு மேல் அடுத்து என்ன என உந்தும் மனதிற்கு செவிகொடுப்பதன் மூலம், உள்ளிழுத்து அழிக்கும் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் புதிதாக நுழையும் சரவணன்  இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு நீருக்குள் இறங்குபவனைப் போல  எப்போதும் திரும்புவதற்கான ஒரு கதவை திறந்து வைத்தபடியே உள்நுழைகிறான். சற்று விலகி நின்று ஐயத்துடனேயே அணுகுகிறான். இதனால் அவர்கள் போல உக்கிரத்துடன் சென்று மாட்டிக் கொள்ளாமலும் மேல்மட்டத்திலேயே நின்று தவிக்காமலும் அவ்வாழ்வில் திளைக்கிறான். அவ்வாழ்வினால் ஏற்படக் கூடிய இன்னல்களை லாவகமாகத் தவிர்த்து இனிமையாக வாழத் தொடங்குகிறான்.

இயல்பாக செல்லும் கதை சட்டென ஒரு உச்சத்தை அடைந்துவிடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வை மனம் ஏற்கத் தயங்குகிறது. எல்லாச் சம்பவங்களுக்கும் விளக்கமிருக்கையில்  பலரின் வாழ்வைப் பாதிக்கும் முதன்மையான திருப்பத்திற்கு விளக்கம் சரிவர அளிக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. மேலும், இரவுலாவிகளாய் இருப்பவர்கள் பகலில் சந்திப்பதாக கூறப்படுவது சற்று முரணாகவும் படுகிறது. ஆனால் வாசித்து முடித்தபின் நாவலைப்பற்றி எண்ணினால் மேனன் மற்றும் சரவணன் இரவு வாழ்க்கையில் அடைந்த பரவச கணங்கள் மட்டுமே மனதில் இனிமையாக நீடிக்கிறது. இதற்கு காரணம், நாவலின் கட்டமைப்பில் அந்த பரவசக் காட்சிகள் நேரடியாக காட்டப்பட்டுள்ளதும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் மற்றொருவரின் கூற்றாக அமைந்துள்ளதும்தான். இரவின் சிறப்பான கூறுகளில் ஒன்றான தேவையானதின் மீது மட்டும் ஒளி பாய்ச்சி பார்த்துக் கொள்ளலாம் என்பதை சுட்டும் வண்ணம்  முக்கியத்துவம் எனத் தான் கருதுவதை மட்டும் காட்சிப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இந்த இலக்கிய நாவலை சுவாரசியமான த்ரில்லராக ஜெயமோகன் எழுதியுள்ளார். இதைப் போன்றே இவரின் “உலோகம்” நாவலும் விறுவிறுப்பான கதையோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் வாழ்வு முறையின் பல்வேறு சாத்தியங்களை காட்டுவதிலும், நிகர் வாழ்வனுபவத்தைத் தருவதிலும் “இரவு” நாவல் வேறுபட்டு முன்நிற்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளாக பகலில் விழித்து வாழ்ந்து பழகிய முன்னோர்களைக் கொண்ட வாசகனின் உள்ளத்தில் இரவு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டுமென்ற விழைவை, அந்த இனிமையை சுவைத்துவிட வேண்டுமென்ற பேராவலை  ஒரு கணமேனும்  ஏற்படுத்திவிடுவது  இந்நாவலின் வெற்றியாகும்.

ஆனால் அந்த எண்ணத்தை இரண்டு காரணிகள் தடுக்கின்றன. ஒன்று உக்கிரமான இன்ப வாழ்வை உணர்த்தபின் எளிய அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப முடியாதென்பது. மற்றொன்று, பெரும் பணம் சேமிப்பிலிருக்க வேண்டுமென்பது.

ஒரே இரவில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள இந்நாவலை  வாசிப்பதற்கு முன் மனதில் இருந்த மர்மமான, அழகான, தண்மையான இரவைப்பற்றிய சித்திரம் வாசித்து முடித்தபின் பல மடங்கு அதிகமாகிவிட்டது. இதுவரை சாதாரண கல்லென எண்ணிப் புழங்கிக் கொண்டிருந்த ஒன்றின் மீது  ஒளியைப் பாய்ச்சி, அது இதுவரை காணாத பலவித  வணணங்களாக பிரதிபலிப்பதை சுட்டிக்காட்டி அதனை வைரமென உணரவைப்பதைப் போல இரவின் பல பரிமானங்களைக் காட்டுகிறார் ஆசிரியர். இருளுக்குள் உறைந்திருக்கும்  பிரமாண்ட விஷ்ணு சிலையை காண்பதற்காக காட்டப்படும் தீபம், இன்னும் பல மடங்கு பெரியதாக,அரூபமானதாக,  எண்ணும் போதெல்லாம்  பரவசத்தை தருவதாக மனதுள் நிலைக்க வைப்பதைப் போல   இந்நாவல் மூலம் இரவை விளக்க முற்படுவதான பாவனையில் அதனை பரவசமாக எண்ணித் திளைக்குமாறு வாசகர் மனதில் பெரும் படிமமாக உறையவைக்கிறார்  ஜெயமோகன்.

பொதுவாக விமர்சனக் கட்டுரைகள் நூலை இயந்திரத்தின் பாகங்களை பிரித்து பரப்பி வைத்து இப்பாகங்கள் இதனுடன் இணைகிறது. இப்பாகத்தின் சிறப்பு இது. இவை இணைவதன் பயன் இவை என விளக்குவதாகவோ அல்லது படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதாகவோ இருக்கும். ஆனால், அழுத்தினாலே கசங்கி கன்றிவிடும், மெல்லிய கடுமணம் வீசும் வெண்மையான மென் நிஷாகந்தி மலர்  போன்ற இரவு நாவலை அவ்வாறு பிரித்து ஆராய என் மனம் ஒப்பவில்லை.  அது என் மனதில் ஏற்படுத்திய உணர்வுகளையும் அது தொட்ட நினைவுகளையும் மட்டுமே கூறியுள்ளேன். விமர்சனத்தை எதிர்பார்த்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடைசியாக ஒன்று…   “மிருகங்களிலேயே யானையை பழக்குவதுதான் மிகமிக எளிமையானது. ஆனால் ஒருபோதும்  முழுமையாக பழக்கிவிட முடியாத மிருகமும் யானைதான்” என்று இரவை வரையறுக்க முயலும் ஒரு கூற்று இந்நாவலில் உள்ளது. இது  “இரவு” நாவலுக்கும் பொருந்தும். வாசிக்க எளிமையான நாவல்தான் இது. ஆனால் ஒரு போதும் முழுமையாக வாசித்துவிடவும் முடியாது.

 

கா. சிவா 

 

கா.சிவா ‘விரிசல்’ சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.

https://akazhonline.com/?p=3533

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக வெளிநாட்டவர்கள் செய்யும் அஜாரங்களால் தான் மாற்றுக்கட்சியினர் எழுச்சி அடைகின்றார்கள்.  
    • மலிவான இன்பம் என்பது அந்த நாட்டிற்கு அபகீர்த்தியை தான் தரும். இந்த மலிவான இன்பம் அனுபவிப்பவர்கள் அடுத்த மலிவு வரை தான் இங்கே குலாவுவார்கள். இதுவரை கியூபா, பாங்கொக்,  தாய்லாந்து என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும் ...
    • முன்னுக்கு நீங்கள் எத்தனை  0.  உம். போடலாம்    தடையில்லை    பெறுமதியும்.  மாறப்போவதில்லை     ஆனால் பின்னுக்கு.  போட முடியாது   போடவும் கூடாது      0.  அதிகூடிய   பெறுமதியுள்ள.  இலக்கம்  🤣
    • பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்).  1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)  ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)  இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 )  இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம்  20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)  ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) -தமிழரசு கட்சி(3) 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ( 1) 29) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி(2) 30)திருமலை- ஐக்கிய மக்கள் சக்தி(3) 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி( 3)  32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி( 4) 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி (5) 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி(11) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு - தமிழரசு கட்சி 44) வவுனியா -  தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு -  தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசு கட்சி 47) திருகோணமலை  - ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி   49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி  51  - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 1 54)தமிழரசு கட்சி - 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) -  5 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 70 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 115 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 20  
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.