Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

ஆபத்தின் கரங்களில் ஆதி இனம்

ஆபத்தின் கரங்களில்  ஆதி இனம்

 — அகரன் — 

வழமைபோல மனைவியிடமிருந்து நச்சரிப்பு வந்துவிட்டிருந்தது. ‘’காடுபோல முடி வளர்ந்துவிட்டது. வெட்டுங்கள். பயமாக இருக்கிறது’’ என்று. முடி வெட்டுவதில் எனக்கு அக்கறை இருப்பதில்லை. குறைந்த விலையில் முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரத்தில், ஜெயமோகனின் வெண்முரசின் சில பகுதிகளை படித்துவிடலாம் அல்லது பிரஞ்சு வார்த்தைகளை மகளிடம் கேட்டுபடிக்கலாம், வீட்டுக்குள் வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். ஆனால் மனைவி தன்னை பயமுறுத்தவே இப்படி இருப்பதாக உறுதியாக எண்ணுவாள். அவளின் கடுமையான கண்டனக்குரல், இறுதிப் போராட்டத்தின்பின் முடி திருத்து நிலையத்துக்கு சென்றேன்.  

அ.முத்துலிங்கம் எழுதிய ‘சுவரோடு பேசும் மனிதன்’ என்ற சிறுகதை முடி வெட்டப்போகும் ஒவ்வொரு தடவையும் என் நினைவுகளை நிறைத்துவிடும். அதில் ஆதி மொழிகளில் ஒன்றான ‘’அராமிக்‘’ மொழி பேசும் மனிதர் முடி திருத்து நிலையத்தில் சந்தித்ததையும் அவர் கதையையும் அழியும் மொழிகள் பற்றியும் கூறிஇருப்பார். 

அப்படி ஒர் சம்பவம் எனக்கு நிகழும் என்று நான் நினைத்ததில்லை. அந்த முடிதிருத்தும் நிலையம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது. வழமையாக இரு தமிழர்கள் ஒயாது முடி திருத்துவார்கள். அன்று நான் சென்றபோது வட இந்தியச்சாயலில் ஒரு இளைஞர் முடிதிருத்தத் தயாராக இருந்தார்.  

எனக்கு இவரிடம் தான் என்றில்லை. எவரிடமும் தலையை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்துவிடுவேன். அந்த இளைஞர் பிரான்சுக்கு புதியவராக இருப்பது தெரிந்தது.  

வழமையாக என் தலையை பயன்படுத்தி உழைக்கும் தமிழர் சொன்னார். ‘’தம்பி உவன் ஆப்கானிஸ்தான் பெடியன்’’ எனக்கு மகிழ்ச்சி. என் தலையை இதுவரை ஒரு ஆப்கானியரிடம் கொடுக்கவில்லை. அதைவிட இன்று உலகச் செய்திகளுக்கு தீனி போட்டு கொழுக்க வைப்பது தலிபான்களும்- ஆப்கானிஸ்தானும்தான் என்பது உங்களுக்கு தெரிந்தது.  

அண்மையில் நேட்டோ படையும், தலைவர் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விட்டு தம் படைகளை விலக்கிக்கொண்ட நிகழ்வில் ஒரு ஒளி வடிவம் உலகமெல்லாம் பார்க்கப்பட்டது. இராணுவ விமானத்தில் ஏறிவிட வேண்டும் என்று மக்கள் விமான ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியும், பறக்க ஓடும் விமானத்தில் ஏதோ பேரூந்தில் தொற்றி ஏறிவிட வேண்டும்போல மக்கள் ஏறமுனையும் காட்சியும். இவை இந்த நூற்றாண்டின் வலி மிகுந்த காட்சிகள். தமது சொந்த தேசத்தைவிட்டு உயிர்போனாலும் வெளியேறிவிட வேண்டுமென்ற மனநிலை எத்தனை கொடிது? வீழ்ந்து இறந்த ஒருவர் ஆப்கான் உதைபந்தாட்ட இளம் வீரர் என்பது பின்னர் தெரிய வந்தது. தலிபான்களுக்கு பயந்த அந்த நாட்டின் நிலை கோரங்களின் உச்சம். உலகில் இப்படி ஒரு நிகழ்வு இதற்குமுன் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.  

என்னிடம் நிறைந்திருந்த முடியை கோதிக்கொண்டு அமர்ந்து இருந்தேன். அந்த இளைஞர், மேல் தலையில் முடி வளராமல் நின்று போன பிரஞ்சு முதியவருக்கு வேகமாகவும், லாவகமாகவும் முடி திருத்திவிட்டு மெக்சிகோ மாட்டு வீரர் போல் கறுப்பு போர்வையை விரித்தவாறு என்னை அழைத்தார்.   

நான் செல்லும்போது அருகே முடி திருத்திக்கொண்டிருந்த தமிழர் ‘அண்ண கவனம், கழுத்தை வெட்டி போடுவான். நியூஸ் பார்க்கிறனிங்க தானே?’ என்றார். அவரின் ஆப்கானிஸ்தான் செய்திகள் கழுத்து வெட்டுவதோடு நின்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.   

அந்த இளைஞர் ‘hello’ என்று கட்டம் கட்டிய அரும்பும் தாடியோடு என்னை வரவேற்றார். மெதுவாக பேச்சை ஆங்கிலத்தில் தொடுத்தேன். அவரது பெயர் ‘மசூத்’ என்றார். 

 «‘அஹமது ஷா மசூத்தை’ அறிந்திருக்கிறேன் என்றேன்.» அவர் முடி திருத்துவதை விட்டுவிட்டு அதிசய உயிரை பார்ப்பதுபோல என் முகத்தை எட்டிப் பார்த்தார்.  

«உங்கள் நாடு பரிதாபமாக இருக்கிறது» என்றேன். மசூத் சில நொடி மெளன மூச்செறிதலுக்குப் பிறகு «அது ஆபத்தின் கரங்களில் சென்றுவிட்டது» என்றார்.  

அப்போதே மசூத் தலிபான்களின் எதிர்ப்பாளர் என்று எனக்கு புரிந்து விட்டது.  

தனது தந்தை ‘அஹமது ஷா மசூத்’ என்ற வடக்கு கூட்டணித் தலைவராக இருந்தவரின் ஞாபகமாகவே தனக்கு மசூத் என்ற பெயரை வைத்தார் என்றார். இவர் தலிபான்களின் எதிரி. சோவியத் ஒன்றிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அவர் தூக்கிய ஆயுதம் ஒசாமா பின்லேடன் மனித வெடிகுண்டு மூலம் அவரை அழிக்கும் வரை ஓயாமல் இருந்தது.   

மசூத்தின் கதைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்துக் கொண்டேன். ஆப்கானிஸ்தானின் தெரியாத கதைகளை அவை தந்தன. 

மசூத் ‘மஹார் ஏ ஷரீஃப்’ என்ற நகரத்தை சொந்த இடமாக கொண்டவன். ஆப்கானிஸ்தானில் உள்ள 40 மொழிகளில் பெர்சிய மொழி பேசும் ‘ஹஸாரா’ இனத்தை சேர்ந்தவன். ஆப்கானில் சிறுபான்மை இனம் ஹஸாராக்கள்.    

1998 இல் மசூத்துக்கு 5 வயதாக இருந்தபோது, பாமியானில் இருந்த அவனது சித்தி அவனை அழைத்துச் சென்று விட்டார். அவர் ஆசிரியராக இருந்தார். தலிபான்கள், பெண்கள் ஆசிரியராக இருக்க முடியாது என்றபோது வேலையை இழந்தவர். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் மசூத்தை தன்னோடு வைத்துக் கொண்டார்.  

1998 ஆகஸ்ட் 8ம் திகதி தலிபான்கள் மஹார் ஏ ஷரீஃப் நகரத்தில் இனப்படுகொலையை ஆரம்பித்தார்கள். அந்த நகரத்தை சுற்றிவளைத்த ‘முல்லா நியாஸ்’ என்ற தலிபான் தளபதி‘ அசையும் எல்லாவற்றையும் சுட்டுக் கொல்லுங்கள்’ என்று ஆணையிட்டான்.  

அந்த நகரம் ஹஸாரா இன மக்கள் அதிகம் வாழும் இடம். இரண்டு நாட்களில் 8000 ஹசரா இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அன்று ஆப்கானை முல்லா ஓமர் தலைமையில் தலிபான்களே ஆட்சி செய்தார்கள். ஹசரா மக்கள் யாரிடம் முறையிட முடியும்? 

முடிந்தவர்கள் ஓடி ஒழிந்தார்கள். முடியாதோர் செத்து வீழ்ந்தார்கள். 

அந்த இன சுத்திகரிப்பில் மசூத்தின் தாய், தந்தை, அக்கா, அண்ணா, பாட்டி என எல்லோரும் கொல்லப்பட்டனர். பாமியானில் சித்தியுடன் இருந்ததால் தப்பியவன் மசூத் மட்டுமே.  

பாமியானில் தலிபான்களின் தலையீடு குறைந்தே இருந்தது. ஆனால் வரலாற்றின் சொத்தாக இருந்த மலைக்குகை புத்தர் சிலைகளை 2001ல் தலிபான்கள் இடித்துத் தள்ளினார்கள். உலகமே அருவருத்து நின்றது. அதற்கு தலிபான்களின் ஆஸ்தான குரு முல்லா ஓமர் ‘கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றினோம். சிலைகளை உடைப்பது இஸ்லாமிய சட்டம்’ என்று மோசமான அறிக்கையை விட்டார்.  

பாமியான் மாகாணம் ஆப்கானுக்கு ஒரு மணி மகுடம். உலக சுற்றுலாவாசிகளையும் வரலாற்றாளர்களையும் சுண்டி இழுத்த நிலம். அதன் மகுடமான அந்த இரு சிலைகளும் இடிக்கப்பட்டவுடன் ஆப்கானின் ஆன்மா எரிக்கப்பட்டது.   

4FF69C3E-33A3-41F5-8EC2-41CA8AD99710.jpe

பாமியானில் கி.பி 507ல் மன்னர் காலத்தில் முதல் சிலை செதுக்கப்பட்டது. அது 121 அடி உயரமானது. பின்னர் கி.பி 554ல் 180 அடி உயரமான சிலை செதுக்கப்பட்டது. நிஜம் சிரிப்பது எதற்கென்றால்-இஸ்லாமிய மார்க்கத்தின் சுருதியான முஹமது நபி அவர்களின் பிறப்பு கி.பி 560ல் நடக்கிறது. அவரின் நாற்பதாவது வயதில் அவருக்கு இறை தரிசனம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அப்படி எனில் கி.பி 610ல் அவர் இறைத்தூதர். அவர் காலத்தின் முன்னரே பாமியான் சிலைகள் செதுக்கப்பட்டு விட்டன. 

நபிகள் நாயகத்தின் காலத்திலும் அவரைத் தொடர்ந்த கலிபாக்கள் காலத்திலும் உடைக்கப்படாத புத்தர் சிலைகள், ஆப்கானை மீட்க வந்த இறைவனின் திருக்குமாரர்களாக தம்மைச் சொல்லிக்கொள்ளும் தலிபான்களால் விமான எதிர்ப்பு பீரங்கிகளால் இடித்து தூளாக்கப்பட்டது.  

மசூத் தனது கதைகளை கூறும்போதே முகத்தில் வியர்வைத் துளிகள் தெரிந்தது. அவர் ‘சற்றுப்பொறுங்கள், தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்’ என்றார். 

என் மூளை கேள்விகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. மசூத் மீண்டும் என் முடியை பெருமூச்சோடு திருத்த ஆயத்தமானார். 

‘பிரான்சில் உங்களுக்கு உறவினர் உண்டா?’ என்றேன். இல்லை. ஜெர்மனியில் சிலர் இருக்கிறார்கள். அதனால் தான் முதலில் ஜேர்மனிக்கு சென்றேன். அங்கு ஐந்து வருடத்தின் பின்பு எனக்கு அகதி கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள் . அதனால் தான் சென்ற ஆண்டு பிரான்சுக்கு வந்து மீண்டும் கோரிக்கையை அனுப்பிவிட்டு காத்திருக்கிறேன் என்றார். 

மசூத் உங்களை வளர்த்த சித்தி எங்கே இருக்கிறார்?  

«அவர் பாமியானில் தான் இருந்தார். இப்போது தலிபான்கள் மீண்டும் வந்து விட்டதால் ஹஸாரா இன மக்களை முற்றாக அழித்து விடுவார்கள். அதனால் நமது இன மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறுகிறார்கள். என் சித்தி ‘பஞ்சசீர்’ சென்று விட்டார். அதை தலிபான்களால் பிடிக்க முடியாது.» என்றார் உறுதியோடு! 

பஞ்சசீர் பள்ளத்தாக்கின் மக்களையும், மண்ணையும் பற்றி அ.முத்துலிங்கம் ஒரு ‘ஆயுள்’ எழுதியுள்ளது என் நினைவில் மிதந்து வந்தது.  

பஞ்சசீர் ஆப்கானிஸ்தானின் வட மேல் பகுதியில் இந்துகுஷ் மலைகள் சூழ்ந்திருக்க பள்ளத்தாக்கில் இருக்கும் மலைகளின் தொட்டில். அங்கு வாழும் மக்களும் தனித்துவமானவர்கள். உலகை தனது கரங்களில் ஏந்த ஆசைப்பட்டு ‘புசபெலஸ்’ குதிரையில் வேகமாகச் சென்ற அலெக்சாண்டர், மலை உச்சியில் நின்று பிரமித்து நின்ற நிலம் அது.  அவர் படை வீரர்கள் சிலர் அதன் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டதாக கதைகள் உலவுகின்றன. அந்தக் கதைகளுக்கு ஏற்றால்போல் அந்த மக்கள் யாருக்கும் அடிபணியாதவர்கள். இயற்கையை சிதைக்காமல் வாழ்பவர்கள். அந்த மக்கள் அந்நியர்கள் ஆழுவதை எந்தக் காலத்திலும் ஏற்றது கிடையாது.  

E0CB80B4-1512-41F1-9776-76C86E23DFE4.jpe

அன்று சோவியத் படையை எதிர்க்க ஆயுதமேந்திய ‘அஹமது ஷா மசூத் இந்த நிலத்தை சொந்தமாகக் கொண்டவர். பின்னர் ஆப்கானின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். தலிபான்களை வீரத்தோடு எதிர்த்த வடக்கு கூட்டணிப் படையின் தலைவராக இருந்தார். பின்னர் அவரிடம் பேட்டி எடுக்க செல்வதுபோல பத்திரிகையாளர் வேடத்தில் சென்ற தலிபான் கூட்டாளிகள் அவரை 2001ல் கொன்றனர். அவரை ஆப்கான் மக்கள் ‘பஞ்சசீர் சிங்கம்’ (பஞ்சசீர் என்றாலும் 5 சிங்கம்தானாம்)  என்று பெருமிதத்தோடு அழைப்பார்கள்.  

இன்று பஞ்சசீர் தலிபான்களிடம் அடிபணியாமல் தலிபான்களோடு போருக்குத் தயாரென நிமிர்ந்து நிற்கிறது. அதை அறிவித்து நிற்பது யாருமல்ல பஞ்சசீர் சிங்கத்தின் மகன்‘ அஹமது மசூத்’.   

EFFB9471-4B2D-48B8-84AF-FA4C841BA896.jpe

ஹசாரா இனம் ஆப்கானின் மூத்த குடிகளில் ஒன்று. ஆனால் தலிபான்கள் அவர்களை வேரில்லாமல் அழிக்க நினைக்கிறார்கள். ஹசாரா என்பது செங்கிஸ்கானின் ஆயிரம் பேர் கொண்ட படைப்பிரிவின் பெயர் என்றும் பொருள் உண்டு. ஹசாரா மக்களுக்கும், செங்கிஸ்கானுக்கும் தொடர்பிருப்பதாக வரலாறு கிசுகிசுக்கிறது. செங்கிஸ்கான் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.   

முடி திருத்தி முடித்தும் நாம் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த முடிதிருத்த நிலைய முதலாளி என்று ஊகிக்கக்கூடியவர் அருகே வந்து என்னிடம், ‘என்ன தம்பி ஆப்கானிஸ்தான் காரனை சொந்தமாக்கிப் போட்டியல் போல? நிறைய கதைக்கிறியள். நிறைய பேர் முடி வெட்டக் காத்திருக்கினம்’ என்றார்.  

நான் மௌனம் மூடிய சிரிப்போடு 10€ எடுத்து அவரிடம் கொடுத்தேன். மனைவி பொருட்கள் வேண்டி வரத் தந்த 20€ இருந்தது நினைவுக்கு வந்தது. வாசல்வரை வந்து கைலாகு தந்து ‘நண்பா நீண்ட நாட்களின் பின்னர் என் கதையை உங்களிடம் பேசி உள்ளேன்’ என்றார் மசூத்.  

‘உங்கள் சேவைக்கும், பகிர்தலுக்கும் நன்றி. உங்கள் வலிகளை நானும் சேர்ந்து ஏற்கிறேன்’ என்று கூறி அவர் கரங்களில் 20€ ஐ வைத்தேன். 

மசூத் திடுக்கிட்டவாறு அதை மறுத்துவிட்டு, ‘இல்லை நண்பா நம்மை இது இணைக்கக்கூடாது, இதனைவிட நெருக்கமான உறவு இருக்கிறது. ‘நாம் அகதிகள்’ என்றார். 

நான் காரில் ஏறும்போது திரும்பி பார்த்தேன். மசூத் என்னை பார்த்தவாறே சலூன் வாசலில் நின்று கை காட்டினான்.      

அவனின் கண்களில் கதைகளும், கனவுகளும், ஏக்கங்களும் கொட்டிக் கிடந்தன. 

நேரம் இருக்கும்போது இனி அவன் அவற்றை எனக்குச் சொல்லலாம், நினைவிருக்கும் வரை நானும் அதனைக் காவிச்செல்வேன்.  

 

https://arangamnews.com/?p=6240

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.