Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகளையும் மீறிய தாமதிக்கும் நீதி

லக்ஸ்மன்

இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற சம அந்தஸ்தான வாழ்க்கை என்பது, எட்டாக்கனி என்பது நிரந்தரமானதன் பின்னும், ஏன் தமிழ் மக்கள் கிடைக்காத ஒன்றுக்காகப் பிரயத்தனப்படுகிறார்கள் என்றே, நம் போராட்ட வரலாறு தெரிந்தோர் கேள்வி எழுப்புவர். 

ஐக்கிய நாடுகளின் அமர்வுகள் வருகையில், காலங்காலமாக இலங்கையின் வடக்கு- கிழக்கு தமிழர்கள் அனுபவித்து வருகின்ற இன்னல்கள் முடிவுக்கு வந்தவிடும் என்றே ஒவ்வொரு வருடத்திலும்  தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், யுத்தம் நடைபெற்ற காலங்களைவிடவும் அதிக கைதுகள், அதிக  நெருக்குதல்கள் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்தப் பிரயோசனமும் இல்லை.  

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு ஜனாதிபதி கோட்டபாய உரையாற்றவிருக்கிறார் என்றவுடன், ஏதோ பெரிதாக நடைபெறவிருக்கிறது என்று மகிழ்ந்தவர்களைவிடவும் ஒன்றையும் எதிர்பார்க்கத் தேவையில்லை என்று மனம்நொந்தவர்களே அதிகம்.  

image_10dad0b43b.jpgஅவருடைய பேச்சு, இலங்கையில் சிறுபான்மைச் சமூகம் என்றொன்று இல்லை. அதற்குப் பிரத்தியேகமான பிரச்சினைகள் ஏதுமில்லை என்பது போலவே இருந்துவிட்டது. அந்தவகையில், ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் சபை உரையானது, உரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டியதாக அமைந்திருக்கின்றது. 

அவருடைய பேச்சில், ‘சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இருந்தே, இலங்கையானது சர்வஜன வாக்குரிமையைப் பெற்றிருந்தது. ஜனநாயகக் கலாசாரம் என்பது, எமது வாழ்வியலில் மிக முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது’ என்ற கருத்தானது, இலங்கையில் இப்போது மேம்பட்ட முழுமையான ஜனநாயகம் இருக்கிறது என்பதாக அமைந்திருந்தாலும் அது உண்மையா என்பது தமிழ் மக்களுக்கே புரிந்த விடயம். 

அதேபோன்று, “2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது. பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது. கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் ,எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என்ற கருத்தானது 2019 ஏப்ரல் தாக்குதலும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையும் ஒன்றாக்கப்பட்டு வெறும்  பயங்கரவாதப் பிரச்சினையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது என்பது புலனாகின்றது. 

இலங்கையின் பெரும்பான்மை மக்களால், இலங்கையில் வாழும் வடக்கு - கிழக்கு மக்களின்,  நாடு  சுதந்திரம் பெற்றது முதலே நடைபெற்றுவரும் பிரச்சினைகளெல்லாம் வெற்றுப்பிரச்சினைகள் என்பதாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையே நிரூபித்திருக்கிறது.  அத்தோடு நாட்டுக்குள் நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி, அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற கருத்தை அது பொய்ப்பிக்கின்றது.  

கொரோனா தொற்று, அதிலிருந்து மீளல், பொருளாதார அபிவிருத்தி, விவசாயத்துறை மேம்பாடு குறித்துக் கவனமெடுக்கும் இலங்கை அரசாங்கம், இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினையில் அக்கறையைச் சரியான முறையில் காண்பிக்கவில்லை. அத்தோடு சர்வதேசத்தினையும் மனிதாபிமான நீதி மற்றும் சமவாயங்களையும் கவனத்தலெடுக்கவில்லை  என்பதற்கு நல்ல பல உதாரணங்கள் அண்மைய நாள்களிலேயே காணப்படுகின்றன. 

நீதியான நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த விதத்திலும் அருகதையற்ற செயற்பாடுகளாகவே அவை பார்க்கவும்பட வேண்டும். மற்றொரு வகையில் இது ஒரு தெட்டத் தெளிவாக  சர்வதேசத்தினை ஏமாற்றும் செயற்பாடே ஆகும்.  

இத்தாலியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்ற இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் காணொளித் தொழில்நுட்பம் மூலமாகப் பேசுகிறார். அதேபோன்று மனித உரிமை ஆணையாளருடைய வாய்மொழிமூல அறிக்கை வெளிவந்தவுடன் மறுதலித்து  உள்ளகப் பொறிமுறையைத் தவிர ஒன்றுமில்லை எனத் தெளிவாக உரைக்கிறார். 

அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரெஸ்சை சந்தித்த ஜனாதிபதி கோட்டபாய, காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டுமென்றும் அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்குத் தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இக்கருத்துகள், இலங்கையின் பொது நிலைப்பாடென்றாலும் பெரும்பான்மை அரசாங்கத்தின் நிலைப்பாடே. தொடர்ச்சியாக பலதடவைகளிலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேசம் தழுவியதான இலங்கையில் தமிழர்களுக்கான  நீதி நிலைநாட்டப்படுவதற்கான முயற்சிகள், முறியடிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஆயுத ரீதியான யுத்தமும் அரசியல் ரீதியான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திற்கும், இப்போதைய வெறும் அரசியல் ரீதியான முயற்சிகளுக்கும் வேறுபாடு இருந்தாலும்  முயற்சி தொடர்கின்றது. ஆனால், இம் முயற்சிகள்  பலனற்றதாகிப்போகின்ற நிலைமையே கவலைக்குரியது. 

காலங்கடந்த ஞானம் எவ்வளவுக்கு வீணோ அவ்வாறே காலங்கடந்த நீதியும் நியாயமும் அமைந்திருக்கும் என்பதற்கு இலங்கையின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அந்தவகையில் 2009ஆம் ஆண்டு ஆயுத ரீதியான யுத்தம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் சபையில்  கொண்டுவரப்படும் தீர்மானங்கள், இலங்கையை அடிபணியவைப்பதும் அச்சுறுத்துவதுமாக இருந்து வருகிறதேயன்றி, தமிழர்களுக்கான  நல்ல தீர்வாக அமைந்திருக்கவில்லை.  

இலங்கை தமிழர்கள் தனித்துவமான இனம். வரலாற்று ரீதியாக வடக்கு - கிழக்கு தாயகப் பகுதியில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அங்கிகாரம் வழங்குவதிலேயே விருப்பமற்றிருக்கும் இலங்கை அரசாங்கத்திடம்,  தமிழ் மக்களுக்கு நிதியை எதிர்பார்ப்பது எந்த வகையில் பொருத்தம்? 

சர்வதேச நிலைப்பட்டதான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை போன்றன இலங்கையை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று, அதன் ஊடாக தங்களின் பூகோள ரீதியான அரசியலை நகர்த்துவதற்காக, தமிழ் மக்களின் பிரச்சினையை கையாண்டு வருகின்றது என்பதே வெளிப்படையானது.   தாமதித்த நீதி பயனற்றதாகிப்போகும் என்ற வகையில், இந்த முயற்சிகள் என்ன பலனுக்கானது. 

அதேபோன்று, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றின்  அமர்வுகள் ஆரம்பிக்கின்ற காலங்களில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி விசாரணை வேண்டும். போரின் பின்னர் சரணடைந்த கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர், போராளிகளின் மறுவாழ்வு, நீதி விசாரணைகள் தொடர்பில் கருத்து வெளிவிடுவதும் அதற்காக போராடுவதும் பயனற்றதே.

இப்போதைய நிலையில் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து விடுபடுவதற்காக அரசாங்கமானது வாய்ப்பேச்சில் வீரரடி நிலைப்பாட்டில் இருக்கிறதாகவே கொண்டாலும், அதிலும் கவனமாகத்தான் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.   

தற்போதைய சூழலில், ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளரை ஐனாதிபதி கோட்டபாய சந்தித்ததும் அங்கு அவர் வெளியிட்ட உள்ளகப் பொறிமுறை குறித்த கருத்துகளும், வெளிவிவகார அமைச்சர் முன்வைத்த, வெளியிட்ட கருத்துகளும் படும் பாடு பெரும்பாடாக இருக்கின்றது.

இலங்கையில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்  தமிழ் மக்கள், போர்க் குற்றங்கள், மனிதப் படுகொலைகளுக்கான இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு உள்ளகப் பொறிமுறையை கையாள முடியாது. அத்துடன் உள்ளகப் பொறிமுறை மூலம், தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதாலேயே  சர்வதேச பொறிமுறை ஊடான நீதியான விசாரணை வேண்டுமேன கோரிக்கை முன் வைத்துள்ளனர். 

அந்தவகையில் நாட்டில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் நடைபெற்ற யுத்தக் குற்றங்களின் உண்மைகளை கண்டறிந்து நீதிக்கான பொறிமுறையினை உருவாக்குவது முக்கியமானதாகும். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதும் நீதி நிலைநாட்டப்படவதும் முக்கியமாகும். 

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் என்றும் ஒப்பந்தங்கள் என்றும் அரங்கேற்றப்பட்ட இலங்கையின் ஆளும் அரசாங்கங்களின் மற்றுமொரு  காலத்தை இழுத்தடிக்கும் போலி நாடக முயற்சியாக, இம்முறை நடைபெறும் ஐக்கிய நாடுகளின் அமர்வும் காணாமல் போகும் என்பதில் மறை கருத்தில்லை.  இதனை தமிழர்கள் நம்பத் தயாரில்லையானாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதுவே உண்மை.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/எதிர்பார்ப்புகளையும்-மீறிய-தாமதிக்கும்-நீதி/91-281764

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.