Jump to content

`முதலிரவுக்குப் பிறகும் இருக்கு ஆயிரம் இரவுகள்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

என் தலைவியின் மேனி வெண்காந்தள், முல்லை, குவளை ஆகிய பூக்களால் தொடுத்த கதம்ப மாலை போன்ற மணம் கொண்டது; அத்துடன் மாந்தளிர் போன்ற மென்மையும் கொண்டது. அவளைத் தழுவுதல் அவ்வளவு இன்பமானது என்று உருகுகிறான் குறுந்தொகையின் தலைவன் ஒருவன்.

இன்னொரு தலைவனைப் பற்றிச் சொல்கிறபோது, `அவன் கடிவாளமில்லா குதிரை போல தலைவியிடம் பாய்ந்து வருகிறான். யானையால் உண்பதற்காக வளைக்கப்பட்ட மூங்கில், யானை விட்ட பிறகு வானை நோக்கி உயர்வதுபோல கட்டுப்பாடில்லாமல் தலைவியை நோக்கி வருகிறான்' என்கிறது.

முன்னவன் பூவாய் உணர்கிறான்; பின்னவன் கடிவாளமில்லாமல் பாய்கிறான். காமம் இப்படித்தான் நபருக்கு நபர் மாறுபடும். குறுந்தொகையிலிருந்து அப்படியே நம் தமிழ்ப் படங்களின் முதலிரவுக் காட்சிகளுக்கு வருவோம்.

`பால் வண்ணம் பருவம் கண்டு' என்று எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் நாடியைப் பிடித்துக் கொஞ்சுவார்.

`பாலக்காட்டு பக்கத்துல ஒரு அப்பாவி ராஜா' என பத்மினியைப் பார்த்துப் பம்முவார் சிவாஜி.

ரஜினி `விடிய விடிய' மேன்லியாகச் சொல்லித்தருவார்.

கமல் `நிலாக்காயுது' என்று நாயகிக்கு கண்கள் சொக்க அழைப்பு விடுப்பார்.

அப்புறம் மாதவனின் ஃப்ரெண்ட்லியான `காதல் சடுகுடு' முதலிரவு சீன்.

அதற்கும் அப்புறம் `3' படத்தில் ஸ்ருதிஹாசனை `த்தூ வா' என்று மடியில் உட்கார வைத்து ரொமான்ஸ் செய்வார் தனுஷ்.

சமீபத்தில் வந்த `சார்பட்டா பரம்பரை'யில் குத்து டான்ஸோடு ஆர்யா, துஷாராவின் முதலிரவு களைகட்டியது.

ஆக, இவற்றின் மூலம் நமக்குத் தெரிய வருவது முதலிரவிலேயே தாம்பத்திய உறவு நடந்துவிடும் என்பதுதான். `நிஜத்தில் எப்படி' என்றோம் பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம்.

``ஒரு திருமண வாழ்க்கை இதமா ஆரம்பிக்கணும்னா, முதலிரவுலேயே எல்லாம் நடந்திடணும்னு எதிர்பார்க்கக் கூடாது. பெரும்பாலும் அப்படி நடக்கவும் நடக்காது. அப்படியே எல்லாம் நடந்திடுச்சுன்னு நீங்க நம்பிட்டிருந்தாலும், உங்க லைஃப் பார்ட்னரும் அதையே நினைச்சாதான் அது உண்மையா இருக்க முடியும். அதனாலதான், காமசூத்திரம் `முதல் இரவிலேயே தாம்பத்திய உறவு வைச்சுக்க வேண்டாம்'னு அறிவுறுத்துது. திருமணமான முதல் மூணு நாள்கள் தம்பதியர் தனித்தனியாகத்தான் படுக்கணும். அதன் பிறகு, ஏழு நாள்கள் வரைக்கும் ரெண்டு பேரும் நிறைய பேசணும். பிறகு, பக்கத்துல உட்கார்றது, ஒருத்தர் மேல ஒருத்தர் லேசா பட்டுக்கிறது, கைகளைத் தொடுறது, விரல்களைப் பிடிக்கிறது, தோள்பட்டை மேல மோவாயை வைக்கிறதுன்னு இருக்கணும். நம்ம கலாசாரத்துல ஆண்தான் மொதல்ல இயங்கணும்னு பதிய வைச்சிருக்கிறதால, இந்தச் செயல்களைச் செய்யுறதுல பெண்ணைவிட ஆணுக்குத்தான் பொறுப்பு அதிகம் இருக்கணும். முதலிரவுக்கு அப்புறம் ஆயிரக்கணக்கான இரவுகள் ஒண்ணாதான் இருக்கப் போறாங்க. அப்புறம் எதுக்கு அவசரம்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி
 

``அந்தக் காலத்துல பல நாள் கல்யாணம் வெச்சதோட முக்கியமான நோக்கமே, கல்யாணத்துக்கு முன்னாடி அண்ணலும் நோக்கி, அவளும் நோக்குறதுக்குத்தான். அப்புறம், கல்யாணத்துக்கு வந்த சொந்தக்காரங்க எல்லாம் பையன், பொண்ணைப்பத்தி நல்லபடியா பேசுறது பரஸ்பரம் காதுல விழுந்து லேசா காதல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும். கல்யாணமும் நடக்கும். அதுக்குப்பிறகு நடக்கிற சம்பிரதாயங்கள் எல்லாமே பொண்ணும் மாப்பிள்ளையும் ஒருத்தரையொருத்தர் தொடற மாதிரியே இருக்கும். இதன் மூலமா தாம்பத்திய உறவுக்கு அவங்களை மனசுரீதியா தயாராக்குவாங்க. அப்படியும் கல்யாணமான அன்னிக்கே முதலிரவு நடத்த மாட்டாங்க. அதுக்கும் நாள், கிழமைன்னு பார்த்துதான் நடத்துவாங்க. மணமக்கள் அந்த நாளை எண்ணி எண்ணி ஏங்கிட்டு இருக்க, கடைசியில எல்லாமே சுபம்.

இப்போ காலையில கல்யாணம், சாயங்காலம் ரிசப்ஷன், அன்னிக்கு நைட்டே முதலிரவுன்னா, மணமக்களுக்கு பதற்றம்தான் மிஞ்சும். அதனாலதான் என்கிட்ட கவுன்சலிங்குக்கு வர்ற பலபேர், `ரூமுக்குள்ள போற வரைக்கும் நார்மலாத்தான் இருந்தேன் டாக்டர். அதுக்கப்புறம்தான் பதற்றமாயிட்டேன்'னு சொல்றாங்க. இது லவ் மேரேஜ் செஞ்சுகிட்ட தம்பதிகளுக்கும் பொருந்தும். கல்யாணத்துக்கு முன்னாடி மணிக்கணக்கா போன்ல பேசுன ஜோடிகளுக்கும் பொருந்தும்.

 

காதல் கல்யாணமே ஆனாலும், முதலிரவு அன்னிக்கே முழுமையான தாம்பத்திய உறவு கிடைக்கணும்னு அவசியமில்லை. `அந்தப் பொண்ணுக்கிட்ட உடல்ரீதியா இணையுற விருப்பம் தெரியுற வரைக்கும் தொடாதே'ன்னுதான் காமசூத்திரம் சொல்லுது. உங்க மனசே உங்க உடம்பை தாம்பத்திய உறவுக்கு ரெடியாக்கும். அதை யாரும் யாருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தானா நிகழும்.

 

முதலிரவைப் பொறுத்தவரைக்கும், `அன்னிக்கு நடக்கலைன்னா தனக்கு ஆண்மையில்லையோ'ன்னு பயந்துடுறான் ஆண். பெண்ணோ, `அச்சச்சோ வலிக்குமே'ன்னு பயப்படுறா. அவங்க நண்பர்களோட அரைகுறை செக்ஸ் ஞானம்தான் இதுக்கு காரணம். திருமணமான ஒரு தம்பதியின் மனங்கள் உறவு வைச்சுக்கணும்னு ஆசைப்படற அந்த நொடிதான் முதலிரவுக்கான மிகச் சரியான தருணம். அந்த நேரத்துல வலியிருக்காது; ஆனந்தம் மட்டுமே இருக்கும்'' என்ற டாக்டர் நாராயண ரெட்டி, இளம் தம்பதிகளுக்கு சில சஜஷன்களும் தருகிறார்.

``பாலுறுப்புகள் இணையுறதுதான் செக்ஸ்னு நினைச்சுக்க வேணாம். திருமணத்தன்னிக்கு நாள்பூரா நடந்த சடங்குகளால் ஏற்பட்ட அசதியில் நாலு முத்தத்தோட உங்க முதலிரவு முடிஞ்சாலும் ஓகேதான். ஒருவேளை முயற்சி செஞ்சு முழுசா நடக்கலைன்னாலும் அதுவும் நார்மல்தான். `தோத்துட்டோமோ', `ஆண்மையில்லையோ'ன்னு மனசைப்போட்டு குழப்பிக்க வேணாம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி முதலிரவுக்குப் பிறகும் ஆயிரம் இரவுகள் வரத்தான் போகுது'' என்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.