Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனித் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புனித் ராஜ்குமார் மறைவு: தலைவர்கள், நடிகர்கள் இரங்கல்!

spacer.png
 

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதிலேயே அகால மரணமடைந்தது இந்தியத் திரையுலகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

புனித் ராஜ்குமார் கன்னட நடிகர் என்றாலும் அவரது அப்பா மறைந்த ராஜ்குமார் காலத்திலிருந்தே பல மொழி திரைக்கலைஞர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

அதனால், புனித்தின் திடீர் மறைவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் இருந்து, கன்னடத் திரையுலகத்தை மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தித் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலரும் புனித் மறைவுக்கு அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் நடிகர்கள் சரத்குமார், விஷால், ஆர்யா, தனுஷ், நாசர், சித்தார்த், விக்ரம் பிரபு, ஆதி, கௌதம் கார்த்திக், சாந்தனு,

மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், நிவின்பாலி, வினீத் சீனிவாசன், டொவினோ தாமஸ், சுரேஷ் கோபி,

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ரவி தேஜா, அல்லரி நரேஷ், ஜெகபதி பாபு, மனோஜ் மஞ்சு, நாக சௌரியா, ராம் பொத்தினேனி, சாய்குமார்,

ஹிந்தி நடிகர்கள் அபிஷேக் பச்சன், அஜய் தேவகன், சோனு சூட், அர்மான் மாலிக், சுனில் ஷெட்டி,

நடிகைகள் ராதிகா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு, ரகூல் ப்ரீத் சிங், நிக்கி கல்ரானி, ராஷி கண்ணா, ஆத்மிகா, அதிதி ராவ் ஹைதரி,

கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லட்சுமண், இன்னும் பல அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில்,

மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எங்கள் இருவரது குடும்பங்களும் பல்லாண்டுகளாக நல்ல உறவைப் பேணி வந்துள்ளோம். அந்த வகையில், தனிப்பட்ட முறையிலும் இது எனக்கு இழப்பு ஆகும். பெரும்புகழ் கொண்ட நட்சத்திரமாக விளங்கியபோதும் எளிமையான மனிதராகவே புனித் ராஜ்குமார் இருந்தார்.

தலைவர் கருணாநிதியின் மறைவுக்குத் தமது குடும்பத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிக்க எங்கள் கோபாலபுரம் இல்லம் தேடி அவர் வந்தது இன்னும் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகிறது. புனித் ராஜ்குமாரின் மறைவால் கன்னடத் திரையுலகம் தன் மிகச் சிறந்த சமகால அடையாளங்களுள் ஒருவரை இழந்துள்ளது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கும் கர்நாடக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில், அன்புத் தம்பி புனித் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித் - ஷாலினி தம்பதியர் சார்பில் அவர்களது மக்கள் தொடர்பாளர் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், புனித் ராஜ்குமாரின் துரதிர்ஷ்டமான மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் இந்த துயரத்தில் இருந்து மீள வலிமை கிடைக்க வேண்டுகிறோம்'' என தெரிவித்துள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிவிட்டர் மூலம் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது என்னை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் காட்டியவர். அந்த வகையில் அவர்களின் குடும்பத்தினர் அனைவருடன் எனது நட்பு தற்போதும் தொடர்ந்து வருகிறது. புனித் ராஜ்குமார் மரணம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, கன்னட திரையுலகினருக்கு, ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்

தமிழ் திரையுலகில் பலர் புனித்திற்கு நெருக்கமானவர்கள். அவர்களுள் முக்கியமானவர் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி. இவர் இயக்கிய 'போராளி' படத்தின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார்தான் கதாநாயகன். இவருடன் இருந்த நினைவுகள் குறித்து சமுத்திரக்கனி கூறியிருப்பதாவது, ரொம்ப அற்புதமான மனிதர். அத்தனை பள்ளிக்கூடங்கள், ஆதரவற்றவர்களுக்கான ஆசிரமங்கள்னு அவர் செஞ்சதெல்லாம் அளவேயில்லை. 'போராளி' கன்னட ரீமேக் 'யாரே கூகடளி' படத்துல அவர்கூட வேலை பார்த்தது எப்பவும் நீங்கா நினைவுகளா எனக்குள்ள இருக்கும். அவருடைய இறப்பு செய்தி எப்படி எடுத்துக்கிறதுனு தெரியலை. ஷூட்டிங்காக ரொம்ப தூரத்துல இருக்கேன். அப்படியே அவர்கூட இருந்த நேரத்தை நினைச்சு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கேன்.போராளி ஷூட்டிங் போய்க்கிட்டிருந்தது. தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் வந்து இங்க படம் எடுத்துக்கிட்டு இருக்கான்னு 100 பேர் கிளம்பி ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துட்டாங்க. அவங்களை பார்த்து, கை நீட்டி நிற்க சொன்னார், நின்னாங்க. என் தோள் மேல கை போட்டு என் ப்ரதர் எல்லோரும் திரும்பி போங்கனு சொன்னதும் அத்தனை பேரும் மறுவார்த்தை பேசாமல் திரும்பி போய்ட்டாங்க. அவர் மேல அவ்வளவு மரியாதையும் பாசமும் வெச்சிருக்காங்க.

கன்னட சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் பண்ணாத வொர்க் அவுட்டே கிடையாது. அவ்வளவு ஃபிட்டா இருப்பார். அவர் ஊர்ல அவர் ராஜா. 'நாடோடிகள்' கன்னட ரீமேக்கை இயக்க சொல்லி கேட்டாங்க. நான் அப்போ தெலுங்கு நாடோடிகள் ஷூட்டிங்ல இருந்ததனால என்னால பண்ண முடியலை. வேறொரு இயக்குநர் இயக்கினார். அப்புறம், போராளி ரீமேக் பண்ணணும். இந்த முறை நீங்கதான் டைரக்ட் பண்ணணும்னு கூப்பிட்டார். நான் போய் வொர்க் பண்ணினேன். அந்த 75 நாள்கள் பொக்கிஷம். புனித் எங்கேயோ ஒரு இடத்துல இருக்கார்னுதான் தோணுது. இந்த மாதிரியான இழப்புகள் பல விஷயங்களை நமக்கு கத்துக்கொடுக்குது.

விநோதய சித்தம் பார்த்துட்டு அவருடைய மேனேஜர் குமார் பேசினார். சார்படம் பார்க்கணும்னு சொன்னார்னு சொன்னாங்க. நான் அவர்கிட்ட பேசி ஆறு மாசம் இருக்கும். நான் நடிச்ச ஒரு தெலுங்கு படத்தை பார்த்துட்டு எனக்கு கூப்பிட்டு, நல்லாயிருக்கு சார் உங்களுடைய இந்த முகத்தை எதிர்பார்க்கலை'னு சொன்னார். அடுத்து ஒரு படம் பண்ணுவோம்னு சொன்னேன். நிச்சயமா பண்ணலாம் எப்போனு சொல்லுங்கனு சொன்னார். இனி அது நடக்காது. எப்போ என்னவேணாலும் எதுவும் நடக்கும்னு இயற்கை நமக்கு சொல்லிக்கிட்டே இருக்கு. அவரது குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் "என்று தெரிவித்துள்ளார்.

 

https://minnambalam.com/entertainment/2021/10/30/9/puneeth-passes-away-leaders-condolence

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

புனித் ராஜ்குமார் வாழ்வும் வழியனுப்புதலும்!

 
spacer.png

இந்திய சினிமாவில் ஒரு நடிகரின் மரணத்திற்கு மொழி கடந்து, இனம் கடந்து திரையுலகினர் மட்டுமல்லாது அரசியல் அரங்கிலும் அதிர்ச்சி, சோகம், வருத்தத்தை ஏற்படுத்தியது, கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் மரணம் அடைந்தது. இதற்கு காரணம் பிரபலமான நடிகர் என்பதற்காக இல்லை, கர்நாடக மாநிலத்தை தாண்டி புனித் ராஜ்குமார் நடித்த படங்கள் வெற்றிபெற்றதும் இல்லை. கன்னட மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவர் நடித்தபடங்கள் திரையிடப்படுவது உண்டு, கன்னட சூப்பர் ஸ்டார் என கன்னட மக்களால் கொண்டாடப்பட்ட ராஜ்குமார் மகனாக சினிமா நடிகராக அறிமுகமாகி வெற்றிபெற்று பிரபலமானவர் என்பதற்காக அவர் கொண்டாடப்படவில்லை. அவரது திடீர் மரணத்துக்காக கலங்கவில்லை.

சினிமா நடிகராக கோடிகளை குவித்தாலும் அதன்மூலம் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கூடங்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோர் மகிழ்வுடன் வாழ்வை கழிக்க ஏற்படுத்திய முதியோர் இல்லங்கள், மருத்துவ வசதிகள் என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது. என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா என திரைப்படங்களில் பாடலுக்கு வாயசைத்ததுடன் தன் வேலை முடிந்தது என வணிக நோக்கில் மட்டும் செயல்படும் நடிகர்கள் இருக்கும் இந்திய சினிமாவில் இப்படி எதையும் பாடாமல், பஞ்ச் அரசியல் வசனங்கள் பேசி பரபரப்பை ஏற்படுத்தாமல் சினிமா மூலம் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மாநிலத்தில் 45 கட்டணமில்லா இலவச பள்ளிகள், 36 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், வருடந்தோறும் 1800க்கும் மேலான குழந்தைகளின் கல்வி செலவு என தன் சினிமா வருமானத்தை பயன்படுத்தியவர். அதனால்தான் இந்திய பிரதமர் தொடங்கி கர்நாடகத்தின் கடைகோடி எளிய மனிதனையும் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் கலங்க வைத்திருக்கிறது.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் முதல் அந்தந்த மாநில மொழி திரை நட்சத்திரங்கள் புனித் ராஜ்குமார் அகால மரணத்திற்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமும் புகழ் அஞ்சலி செலுத்த செய்தது. புனித் ராஜ்குமார் போன்று சமூகநல திட்டங்களை தமிழ் நடிகர்களில் விஜயகாந்த் தற்போது சிவகுமார் நட்சத்திர குடும்பம், மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி இந்தியில் நானா படேகர், சோனு, அமீர்கான், அக்க்ஷய்குமார்ஆகியோர் செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் சிறிய மாநிலம், குறிப்பிட்ட எல்லையை தாண்டாத கன்னட சினிமாவில் ஒரு நடிகன் 46 வயதில் செய்தது இமாலய சாதனையாக போற்றப்பட்டதால்தான் கர்நாடக மக்கள் கலங்கி பெங்களூரில் கடும் குளிரும், மழையும் இருந்தபோதும் அலை கடல் என மக்கள் குவிந்து புனித் ராஜ்குமாருக்கு கடந்த இரண்டு நாட்களாக இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர். இதனை கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல என்பதை உணர்ந்த மாநில அரசு ஏற்கனவே திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே புனித் ராஜ்குமார் நல்லடக்கத்தை அதிகாலையில் அரசு மரியாதையுடன் நடத்தி முடித்துள்ளது.

புனித் ராஜ்குமார் மரணம் அடைந்ததாக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு புனித் ராஜ்குமாரின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். சுமார் 4 மணி நேரம் அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் இரவு 7 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உடல் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கன்டீரவா மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்பட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட வரிசையில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும் ரசிகர்களும், பொதுமக்களும் பெங்களூருவை நோக்கி சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்த கன்டீரவா மைதானம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முண்டியடித்துக்கொண்டு மைதானத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்த அவ்வப்போது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இருப்பினும் பெங்களூரின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் மூலைமுடுக்குகளில் இருந்து வந்த சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் விடிய விடிய வரிசையில் நின்று புனித் ராஜ்குமார் உடலுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு குவிந்திருந்தவர்கள் அப்பு…. அண்ணா… என்று கண்ணீர்விட்டு கதறினர். பலர் புனித் ராஜ்குமாரின் உருவப்படங்களை கைகளில் ஏந்தியபடி வந்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூரு மட்டுமின்றி சாம்ராஜ்நகர் முதல் பீதர் வரை மாநிலம் முழுவதும் ரசிகர்கள் வாகனங்களில் பெங்களூரு கன்டீரவா மைதானத்தை நோக்கி வந்தனர். இதனால் கன்டீரவா மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் வாகனங்களை நிறுத்த செயிண்ட் ஜான்ஸ் கல்லூரி வளாகத்தில் காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

ரசிகர்கள் அங்கு தங்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு நடைப்பயணமாக மைதானத்திற்கு வந்தனர். ரசிகர்கள் வரிசையில் வந்தபடியே இருந்தனர். கூட்டம் குறையவே இல்லை. நேற்று காலையும் மக்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அவ்வப்போது லேசான மழையும் பெய்தபடி இருந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று அவர்கள், புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 19 துணை ஆணையர்கள், 50-க்கும் மேற்பட்ட உதவி ஆணையர்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் இந்த பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.

அமெரிக்காவில் இருந்து அவரது மகள் துருதி, விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து தனி விமானத்தில் பெங்களூரு வந்து சேர்ந்தார். .

கண்டீவரா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த

தனது தந்தையின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதார். இது அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சி நேரலையில் பார்த்து கொண்டிருந்தவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 அளவில் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முழுஅரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அதிகாலை ஐந்து மணிக்கே அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டே இருப்பதால் பத்தரை மணி வரை காத்திருக்கவேண்டாம் என முடிவு செய்து அதிகாலையில் அடக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

https://minnambalam.com/entertainment/2021/10/31/17/puneeth-rajkumar-life-and-send-off

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

சினிமா நடிகராக கோடிகளை குவித்தாலும் அதன்மூலம் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கூடங்கள், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் முதியோர் மகிழ்வுடன் வாழ்வை கழிக்க ஏற்படுத்திய முதியோர் இல்லங்கள், மருத்துவ வசதிகள் என பல்வேறு சமூக நலத்திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தியதுதான் முதன்மை காரணமாக இருக்கிறது.

அவரின் வாழ்வு உணர்த்தும் பாடம் இது தான் என நான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.