Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் மேமன்கவிக்கு இலங்கையில் தேசிய கலாபூஷண விருது!

நவம்பர் 10, 2021

முருகபூபதி

 

spacer.png

இலங்கை அரசின் புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்துவ மத அலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனைத்தும் ஒன்றிணைந்து வழங்கும் தேசிய கலாபூஷணம் விருது இம்முறை எமது இலக்கிய நண்பர் மேமன்கவிக்கும் கிடைத்திருக்கிறது.

எம்முடன் நீண்ட நெடுங்காலமாக இணைந்து பயணித்துவரும் இலக்கிய நண்பர் மேமன்கவியை வாழ்த்தியவாறு இந்தப்பதிவைத் தொடருகின்றேன்.

தாம்பேசும் தாய்மொழிக்கு எழுத்தில் வரிவடிவம் இல்லாத இலட்சசோப இலட்சம் மக்கள் போன்று, இவர் பேசும் மேமன் மொழிக்கும் வரிவடிவம் இல்லை.

இவரை நான் முதல் முதலில் சந்தித்த காலப்பகுதியை மறக்கவே இயலாது. 1972 காலப்பகுதியில் கொழும்பில் நடக்கும் இலக்கியக்கூட்டங்களுக்கு இவர் வருவார். அப்பொழுது இவருக்கு 15 வயதுதானிருக்கும். பால்வடியும் முகம். ஆனால், இன்று அவரது முகம் தாடி மலர்ந்த முகமாகிவிட்டது.

எழுத்தாளர்களுடன் அன்போடு பழகுவார். கூட்டங்களில் நிகழ்த்தப்படும் உரைகளை ஆர்வமுடன் ரசிப்பார். கொழும்பில் வெள்ளவத்தை விஜயலக்‌ஷ்மி புத்தகசாலை, ரகுநாதன் பதிப்பகம், மலேவீதி ரட்ணா ஸ்ரோஸ், ஆதிருப்பள்ளித்தெரு ஜெயா புத்தக நிலையம், ரெயின்போ அச்சகத்தின் அரசுவெளியீடு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக அமைந்திருந்த ராஜேஸ்வரி பவான், லக்‌ஷமி பவான், ஆனந்த பவான் முதலானவற்றிலும் இவரை அப்போது அடிக்கடி காணலாம்.

அங்கெல்லாம் புதிதாக தமிழகத்திலிருந்து வரும் நூல்களையும் ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும், இதழ்களையும் பணம்கொடுத்து வாங்குவார். எப்பொழுதும் இவர் கரத்தில் ஏதும் நூல்கள், இதழ்கள் இருக்கும். அவர் அவற்றோடுதான் வாழ்கிறாரோ… என்றும் ஒரு சந்தேகம் எனது மனதில் துளிர்க்கும்.

இவ்வாறுதான் மேமன்கவி, ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு மட்டுமல்ல, ஏனைய கொழும்பு வாழ் இலக்கியவாதிகளுக்கும் அறிமுகமானார்.

அதனால்தான் இவரை இனம்கண்டுகொண்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா தமது இதழில் இளம் தளிர் என்று அறிமுகப்படுத்திவிட்டு 1976 மார்ச் மாதம் வெளியான மல்லிகை இதழில் மல்லிகைப்பந்தலின் கொடிக்கால்கள் என்ற அவரது பத்தியில் இவர் பற்றி மேலும் சிறப்பான அறிமுகத்தை பதிவுசெய்திருந்தார்.

தமிழரல்லாத தமிழர் என்ற அடைமொழியுடன் எம்மால் ஆழ்ந்து நேசிக்கப்படும் மேமன் கவியின் இயற்பெயர் அப்துல் கரீம் அப்துல் ரஸாக். நாம் அவரை மேமன் என்றே செல்லமாக அழைப்போம்.
ஒருநாள் இவர் வசித்த மட்டக்குளி இல்லத்திற்குச்சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, இவரை விசாரித்தபோது ” மேமன் இருக்கிறாரா…?” என்று கேட்டேன்.

இவரது சகோதரி, ” இங்கே எல்லோரும் மேமன் இனத்தவர்தான். நீங்கள் யாரைக்கேட்கிறீர்கள்…? ” என்றார்.

spacer.png

உடனே நான் “மேமன் கவி. கவிதையெல்லாம் எழுதுவாரே….!!! ” என்றேன். “யாரு… பாபுவா…? அவனுக்கு மேமன்கவி என்றும் ஒரு பெயர் இருக்கா…? ” என்று ஆச்சரியப்பட்டார் அந்தச்சகோதரி. எனவே, இலக்கிய உலகில் இவர் மேமன்கவி, வீட்டில் பாபு. பிறப்புச்சான்றிதழில் அப்துல் கரீம் அப்துல் ரஸாக்.

இவ்வாறு எமக்கெல்லாம் அறிமுகமாகியருக்கும் மேமன் கவி அவர்கள் எந்த மேடையில் தோன்றினாலும் முதலில் ” குத்தியானா ஜூனாகட் பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் – மேமன் புத்திரன் நான். சத்யமாய் பண்டிதன் அல்ல வித்துவமாய் எண்ணியதை கவி சித்திரங்களாக்கிவிட புறப்பட்டுள்ளேன் மனிதர்களைத்தேடி-” எனப்பாடிவிட்டே உரையாற்றுவார்.

இவர் புதுக்கவிதை எழுதத் தொடங்கிய அக்காலத்திலேயே நிறைய வாசிக்கவும் ஆர்வம் காண்பித்தார். அவரது அந்த தீவிர ஆர்வத்தை அவரது வீட்டுக்கு வந்து குவியும் நூல்களிலிருந்து அறிந்துகொள்ளமுடியும்.

இவரது தந்தையார் புடவைக்கைத்தொழில் சார்ந்த சிறிய நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தவர். அவர், இவருக்கு தரும் பொக்கட் மணி, இப்படித்தான் புத்தகங்கள் – இதழ்கள் வாங்குவதற்கு விரையமாகிக்கொண்டிருந்தன,

இவரது வார்த்தைகளிலேயே குறிப்பிட்ட மேமன் இனம் பற்றிய தகவலை இங்கே பதிவுசெய்கின்றேன்.

“மேமன் இனம் என்பது வட இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து சுமார் ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தில் வாழும் இனம். சுன்னி முஸ்லிம்கள். அதில் பெரும்பாலானவர்கள் ஹனபி மதஹப்பை பின்பற்றுபவர்கள். அச்சமூகம் பேசுகின்ற மொழி மேமன் மொழி என அழைக்கப்படுகிறது. வரி வடிவம் அதற்கு இல்லை. அது சிந்தி மொழியும் குஜராத்தியும் கலந்து பிறந்த மொழி. இந்தியாவில் இருந்த பொழுது முற்றும் முழுதுமாக வர்த்தகச் சமூகமாக இருந்தது. அங்கு இருந்த பொழுது குஜராத்தியை அவர்கள் பாடசாலை மொழியாக கற்றார்கள். பின் வந்த நாட்களில் இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது ஏற்பட்ட இந்து – முஸ்லிம் கலவரத்தின் காரணமாக மேமன் இனம் வாழ்ந்து வந்த குஜராத் பிரதேசத்தில் இருந்த குத்தியானா, ஜூனாகட் பாட்வா போன்ற கிராமங்களிலிருந்து அவர்கள் விரட்டப்படுகிறார்கள். பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியாவின் சில பகுதிக்கும் அவர்கள் புலம் பெயர்கிறார்கள். இதில் இலங்கையை அவர்கள் தேர்வு செய்வதற்கு ஏலவே மேமன்கள் பெரும் வர்த்தகர்களாக தம்மை ஸ்தாபித்து வைத்திருந்தார்கள். இப்படித்தான் ஈழத்தில் மேமன் சமூகம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது.

இன்றைய இந்தியாவில் அவர்கள் உருது மொழி பேசும் முஸ்லிம்களுடன் அடையாளப்படுத்தப் படுகிறார்கள் உலகம் பூராவும் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா இலங்கை என்று சுமார் 10-15 லட்சம் இருப்பார்கள். மேமன் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் இங்கு குடியேறிய பொழுது முழுக்க முழுக்க வர்த்தக சமூகமாகவே குடியேறியது.

ஆனால், கால அளவில் இங்கு குடியேறிய மேமன்கள் தம் இன மொழிக்கு எழுத்து வடிவம் கொண்டிருராத நிலையில், இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் கல்வி பயின்ற குஜராத்தி மொழியினைதான் இங்கு குடியேறிய அச்சமூகத்தினரின் முதல் தலைமுறையினர் தம் எழுத்து மொழியாக கையாண்டார்கள்.

spacer.png

அச்சமூகத்தின் இரண்டாம் தலைமுறையினருக்கு குஜராத்தியினை பயிற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அது சாத்தியமாகவில்லை. மேமன் சமூகத்தினரால் 1930 களில் கொழும்பு புறக்கோட்டையில் மேமன் பள்ளி அமைக்கப்பெற்றது. ( மேமன் வர்த்தகர்களால் அது அமைக்கப்பட்டதன் காரணமாக அது மேமன் பள்ளி என அழைக்ப்பட்டதே தவிர மற்றபடி அது சுன்னிக்கான பள்ளிவாசல் என அழைக்கப்படுகிறதே தவிர அது சுன்னி முஸ்லிகளுக்கான ஹனபி மதஹபு முறைகள் பின்பற்றப்படும் ஒரு பள்ளிவாசல் )

அச்சமூகத்தின் அடுத்த தலைமுறையினர் பாடசாலையில் இணைந்து இங்கிருந்த ஏதோ ஒரு மொழிமூலம் தம் கல்வியைத் தொடர வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு அவர்தம் வசதி வாய்ப்புக்களுக்கு ஏற்ப சிங்களம் ஆங்கிலம் தமிழ் ஏதோ ஒரு மொழியில் தம் கல்வியைத் தொடர வேண்டி இருந்தது. ஆனாலும் ஆரம்ப காலத்தில் பாடசாலைக் கல்வி கற்கச் சென்ற முதல் தலைமுறையினர் ஆரம்ப கல்வியோடு தம் பாடசாலை கல்வியை நிறுத்தி, வர்த்தகத்துறையில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். ஆனால், பிற்காலத்தில் உயர் கல்வி கற்று பட்டதாரிகளும் பல்வேறு துறைச் சார்ந்த நிபுணர்களும் அச்சமூகத்தில் தோன்றினார்கள். ஆனால் தமிழ் இலக்கியவாதிகள் தோன்றவில்லை. “

இந்தப்பின்னணியிலிருந்து எம்மத்தியில் தோன்றிய ஒரே ஒரு கவிஞர் இந்த மேமன்கவி.
அதனால், இவரை நாம் தமிழரல்லாத தமிழர் என்போம். இவரை முதல்முதலில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்றபோது, இவர் எழுதிய முதல் நூல் யுகராகங்கள் கவிதைத் தொகுதியுடன்தான் வந்தார்.

அதற்கு பேராசிரியர் நுஃமான் முன்னுரை எழுதினார். எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் – எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம் வெளியிட்டது.

spacer.png

குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதனிடம் இவர் தனது அந்த முதல் நூலை வழங்கியபோது, அவர் இவரது தலையில் ஒரு அழகிய செவ்வரத்தம்பூவை வைத்து ஆசிர்வதித்து வாழ்த்தினார். இதுபற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கின்றேன்.

அன்று மல்லிகை ஜீவா அவர்களினாலும் கனக. செந்திநாதனாலும் வாழ்த்தப்பட்ட மேமன்கவி, அதன்பின்னர் நிறைய எழுதிவிட்டார். கவிதையில் ஆரம்பித்து விமர்சன இலக்கியத்திற்குள்ளும் வந்து சில நூல்களை வரவாக்கிவிட்டார். மேமன்கவி எழுதிய நூல்கள் பின்வருமாறு:

யுகராகங்கள் – ஹிரோசிமாவின் ஹீரோக்கள் – இயந்திர சூரியன் – நாளைய நோக்கிய இன்றில் – மீண்டும் வசிப்பதற்காக – உனக்கு எதிரான வன்முறை – ஒரு வாசகனின் பிரதிகள் – மொழி வேலி கடந்து – பிரதிகள் பற்றிய பிரதிகள்.

மேமன்கவியின் நூல்களை எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம், தமிழ்நாடு நர்மதா , இலங்கையில் துரைவி பதிப்பகம், மல்லிகைப்பந்தல், கொடகே பதிப்பகம் என்பன வெளியிட்டுள்ளன.

இவர் இலக்கியப்பிரவேசம்செய்த 1970 காலப்பகுதியிலேயே கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழின் துணை ஆசிரியராகவும் இயங்கி, அவருக்கும் வலதுகரமாகத்திகழ்ந்தவர்.

கொழும்பில் மல்லிகை ஜீவா வாழ்ந்த காலத்தில் அவருக்கு வலது கரமாகவே திகழ்ந்தவர். நாம் இவரை ஜீவாவுடைய பொதுசன தொடர்பு அதிகாரி ( Public Relation Officer ) என்றும் அழைப்போம்.

சமகால மெய்நிகர் கலாசாரத்திலும் மேமன்கவியின் பங்களிப்பு விதந்து போற்றுதலுக்குரியது. மறைந்த பல இலக்கிய ஆளுமைகளை நினைவு கூர்ந்து நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்து வருபவர்.
இவர் குறித்து எழுதுவதற்கு நிறையவுண்டு.

தனக்கும் இம்முறை இலங்கையில் தேசிய கலாபூஷணம் விருது கிடைத்திருக்கும் செய்தியை எம்முடன் பகிர்ந்துகொண்டதும், இந்தப்பதிவை அவரை வாழ்த்தும் நோக்கத்துடன் இங்கே எழுதுகின்றேன்.

spacer.png

அவர் எனக்கு எழுதிய மடலிலிருந்து சில வரிகள்:

“இலங்கையில் கலைத்துறைக்கு உன்னத சேவையாற்றிய கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக வழங்கப்படும் கலாபூஷணம் விருதின் 36 ஆவது வருடாந்த கலாபூஷண விருது வழங்கும் விழா , இம் மாதம் 03 ஆம் தேதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் இலங்கை கலை இலக்கியத் துறைக்கு சேவையாற்றிய நூற்றுக்கணக்கான சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த கலைஞர்கள் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

அவர்களில் அடியேனும் ஒருவன்.

இந்த விருது விழா பெரும் மகிழ்ச்சி அளித்தது. இந்த நாட்டின் கலை இலக்கியத்துறைக்கு சேவையாற்றிய, அர்ப்பணித்த மூத்த, முக்கிய கலைஞர்களுடன் இணைந்து இவ்விருதினை பெற்று கொண்டமை எனக்கு பெருமையாக இருந்தது.

இந்த விருது கிடைத்தமைக்காக நம்மை பாராட்டும் முகமாக புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 06 ஆம் திகதி கொழும்பு 13 ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் என்னோடு விருது பெற்ற பிரபல பாடகர் என். ரகுநாதனும் பாராட்டப்பட்டார்.

இதில் சிறப்பு அதிதியாக புரவலர் ஹாஸிம் உமர் கலந்து கொண்டார். அதற்காக புதிய அலை கலை வட்டத்தினருக்கும், புரவலர் ஹாஸிம் உமர் அவர்களுக்கும் நன்றிகள்.

எனக்கு இவ்விருது கிடைத்தமைக்காக பலரும் முகநூலில் தனி பதிவுகள் இட்டு என்னை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.

நமக்கு ஏதேனும் சிறப்பு நடக்கும் பொழுது, அதற்காக நண்பர்கள் பெரியவர்கள் தெரிவிக்கும் மனமார்ந்த நேசபூர்வமான வாழ்த்துகள், பாராட்டுகள், நமக்கு நடக்கும் சிறப்பை விட, உயர்வானவை மதிக்கதக்கவை என்பதே எனது தாழ்மையான கருத்து.”

எனது அருமை நண்பா, என்னிடம் முகநூல் கணக்கு இல்லை, அதனால் இப்படி ஒரு பதிவை எழுதி உம்மை வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்.

-அக்குனிக்குஞ்சு
2021.11.09

 

https://chakkaram.com/2021/11/10/கவிஞர்-மேமன்கவிக்கு-இலங்/

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.