Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவிங்கிப் புலிகள்: இந்தியக் காடுகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாய்ந்து வரப்போகின்றனவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிவிங்கிப் புலிகள்: இந்தியக் காடுகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாய்ந்து வரப்போகின்றனவா?

  • க.சுபகுணம்
  • பிபிசி தமிழ்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சிவிங்கிப் புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிவிங்கிப் புலி

உலகில் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டியான சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகம் செய்யும் திட்டம் ஒன்று உள்ளது. பல்லுயிர்ப் பெருக்க ஆர்வலர்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியைத்தானே தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே குரலில் வரவேற்கவில்லை. ஏன் தெரியுமா?

2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவின் காடுகளுக்குக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தும் திட்டத்தின் சாதக பாதகங்களை மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது.

அதைத் தொடர்ந்து, இந்திய காட்டுயிர் அறக்கட்டளை மற்றும் இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து அதற்கான முயற்சிகளை எடுத்தன. மத்தியப் பிரதேசத்தின் வனத்துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது, "இரண்டு கட்ட பயணத்தின் மூலமாக 10 ஆண் மற்றும் 10 பெண் சிவிங்கிப் புலிகள் நவம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டு, குனோ-பால்பூர் காட்டுயிர் சரணாலயத்தில் அறிமுகப்படுத்தப்படும்," என்று கூறியிருந்தார்.

ஆனால், ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்தத் திட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரியிடம் பிபிசி தமிழுக்காகப் பேசியபோது, "ஒமிக்ரான் பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், இப்போதைக்கு இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை," என்று கூறினார்.

உலகிலேயே வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி உயிரினமாக சிவிங்கிப் புலிகள் (Cheetah) அறியப்படுகின்றன. இந்தியா முதல் ஈரான் வரை பரவி வாழ்ந்த ஆசிய சிவிங்கிப் புலிகள் தற்போது ஈரானில் மட்டும் மிகச் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றன.

இந்தியத் துணைக்கண்டம் முழுக்கப் பரவி வாழ்ந்த இந்த உயிரினம், இப்பகுதியில் முற்றிலுமாக அழிந்து சுமார் 70 ஆண்டுகள் ஆகின்றன.

இந்நிலையில், ஏற்கெனவே இங்கு வாழ்ந்த உயிரினத்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கத்தோடு, இந்திய அரசு பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் அழிந்துபோன வரலாறு

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேய கர்னலாக இருந்தவர் ஈ.ஏ.ஹார்டி. அவர் 1878-ம் ஆண்டு எழுதிய, "அவர் ஹார்சஸ் (Our Horses)" என்ற நூலில் சிவிங்கிப் புலிகளின் வேகம் குறித்தும் அவற்றை வேட்டையாடச் சென்றபோது ஏற்பட்ட தன்னுடைய அனுபவத்தையும் பற்றிப் பேசும்போது, சிவிங்கிப் புலிகள் உலகின் அதிவேகமான பாலூட்டிகள் என்று குறிப்பிட்டிருப்பார்.

இந்த நூல் வெளியாகி ஒரு நூற்றாண்டு கடந்து பார்க்கையில், இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து அத்தகைய அதிவேகமான வேட்டையாடி முற்றிலுமாகத் துடைத்து அழிக்கப்பட்டிருந்தது.

 

சிவிங்கிப் புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிவிங்கிப் புலியை பயன்படுத்தி மான் வேட்டையில் ஈடுபடுவதைக் குறிக்கும் 19-ம் நூற்றாண்டின் ஓவியம்

ஓர் உயிரினத்தின் அழிவுக்கு, வேட்டையாடுதல், வாழ்விட அழிவு ஆகியவை முதன்மைக் காரணங்களாகப் பெரும்பாலும் இருந்துவருகின்றன. இவற்றோடு சேர்த்து இந்தியாவில் இந்தப் பாலூட்டி உயிரினம் அழிவதற்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அவை, வளர்ப்பு உயிரினங்களாக வளர்க்கப்பட்டதுதான் அந்தக் காரணம்.

டபுள்யூ.டி.பிளான்ஃபோர்ட் என்ற ஆங்கிலேய இயற்கையியலாளரின் அனுபவப் பதிவுகளின்படி, ஒரு சிவிங்கிப் புலியை முழுமையாகப் பழக்கப்படுத்தி, அதைத் தம் அடிமையாக மாற்ற ஆறு மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. அப்படிப் பழக்கப்படுத்தி, அவற்றை வெளிமான் போன்ற உயிரினங்களை வேட்டையாடப் பயன்படுத்தியுள்ளார்கள்.

நன்கு பழக்கப்படுத்தப்பட்ட சிவிங்கிப் புலி, 19-ம் நூற்றாண்டிலேயே 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளார், அப்போது படைத்தளபதியாக இருந்தவரும் வேட்டைக்காரருமான மேஜர் ஹென்றி.

சிவிங்கிப் புலிகள் அடைப்பிடத்தில் மற்ற உயிரினங்களைப் போல் இனப்பெருக்கம் செய்யாது. அடைப்பிடத்தில் இனப்பெருக்கம் செய்ய வைப்பது சிவிங்கிப் புலிகளைப் பொறுத்தவரை மிகவும் கடினம். அவற்றுடைய வாழ்விடங்களான கரடுகள், புல்வெளிக் காடுகள் அழிக்கப்பட்டது மட்டுமின்றி, அளவுக்கு அதிகமாக அவற்றை வளர்ப்பு உயிரினமாக மாற்றியதும் இந்தியத் துணைக்கண்டத்தில் அவற்றின் அழிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்று இதுவரையிலான ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த உயிரினம் குறித்து இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் கடைசியாக சிவிங்கிப் புலிகள் 1948-ம் ஆண்டு பார்க்கப்பட்டன. அந்த கடைசி மூன்று சிவிங்கிப் புலிகளும் சத்தீஸ்கரில் அமைந்திருக்கும் கொரியா மாவட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டன. அதிகாரபூர்வமாக 1952-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இந்த இனம் இந்திய நிலப்பரப்பில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கவர்ந்திழுக்கும் உயிரினம்

இந்தியாவிலுள்ள புல்வெளி நிலங்கள், வேளாண்மை, கட்டுமானம் என்று பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவற்றைப் பாதுகாப்பதில், அந்த நிலப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டிருக்கும் சிவிங்கிப் புலிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் என்று சொல்லப்படுகிறது.

 

ஆசிய சிவிங்கிப் புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஈரானில் காணப்படும் ஆசிய சிவிங்கிப் புலி

இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ரமேஷிடம் பேசியபோது, "காட்டுயிர் பாதுகாப்பு என்பதைப் பொறுத்தவரை, அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பும் முக்கியம்தான். ஆனால், ஒரு குறிப்பிட்ட உயிரினத்தைப் பாதுகாக்க எடுக்கும் முயற்சி வேறோர் உயிரினத்தின் பாதுகாப்பு முயற்சிகளைப் பாதிக்குமா என்பதும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.

காட்டுயிர் பாதுகாப்பு அடிப்படையில் பார்க்கும்போது, புலி, யானை, சிவிங்கிப் புலி போன்ற உயிரினங்கள் அதிக ஈர்ப்பையும் கவனத்தையும் பெறுகின்றன. ஆகவே சிவிங்கிப் புலிகளை பாதுகாப்பது, அவற்றின் வாழ்விடங்களான புல்வெளிகளைப் பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

இப்போது சிவிங்கிப் புலிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், புல்வெளிக் காடுகள் பாதுகாப்பில் அதிகக் கவனம் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இதேபோல், சத்தியமங்கலத்தில் இருப்பது போன்ற மற்ற புல்வெளி நிலங்களையும் பாதுகாப்பது மிகவும் அவசியம்," என்று கூறினார்.

ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரும் முயற்சி

இந்தியாவில் வாழ்ந்த சிவிங்கிப் புலியோடு பெரிதும் ஒத்துப்போகக் கூடிய துணை இனமாக ஈரானில் இப்போது வாழ்பவை தான் சொல்லப்படுகின்றன.

ஆனால், அங்கும்கூட 50 ஆசிய சிவிங்கிப் புலிகளே வாழ்கின்றன என்பதால், இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) அதை சிவப்புப் பட்டியலில் வைத்துள்ளது.

அதன் தரவுகளின்படி, ஆப்பிரிக்காவில் சுமார் 7,100 சிவிங்கிப் புலிகள் வாழ்கின்றன. ஆகவேதான், அங்கிருந்து இந்தியாவிற்கு அவற்றைக் கொண்டுவருவதற்காக, 2009-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனம் தொடர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்ததன் விளைவாக, முதல்கட்டமாக நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதோடு, அவை வாழ்வதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்யவும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து, இந்திய காட்டுயிர் பாதுகாப்பு நிறுவனத்தோடு இணைந்து ஆய்வு செய்தது. இறுதியில், மத்தியப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் குனோ-பால்பூர் காட்டுயிர் சரணாலயத்தில் அவற்றை அறிமுகப்படுத்தலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

"அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பும் முக்கியம்"

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான கருத்துகள் ஆய்வுச் சமூகத்தில் நிலவி வருகிறது. இந்தியாவிலேயே பல்வேறு உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அளவுக்கு, அழியும் நிலையில் இருக்கும்போது, சிவிங்கிப் புலிகளுக்காகச் செலவு செய்யவேண்டியது அவசியமா என்ற கேள்வியை ஒரு தரப்பினர் எழுப்புகிறார்கள்.

 

சிவிங்கிப் புலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

சிவிங்கிப் புலி, நமீபியா

உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கார்த்திகேயன் வாசுதேவன் அதுகுறித்து பிபிசி தமிழுக்குப் பேசியபோது, "இப்போது நமீபியாவில் காணப்படும் சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் வாழ்ந்தவற்றோடு தொடர்புடையவை அல்ல. இங்கு வாழ்ந்தவற்றோடு குறிப்பிட்ட அளவுக்குத் தொடர்புடையவை ஈரானில் இப்போது வாழ்கின்றன.

தற்போதுள்ள அறிவியபூர்வ ஆதாரங்களின்படி பார்த்தால், இந்தியாவுக்கு சிவிங்கிப் புலிகளை ஈரானில் இருந்து கொண்டுவரலாம். அதேநேரம், உயிரினப் பாதுகாப்பு அடிப்படையில்தான் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. அனைத்து உயிரினங்களையுமே பாதுகாக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வோர் உயிரினத்தின் பாதுகாப்பு முயற்சிகளிலும் வெவ்வேறு விதமான சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இப்போது சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவதால், அந்தத் திட்டம் வெற்றியடைந்துவிட்டதாக ஆகாது. அதற்கு 10 ஆண்டுகள்கூட ஆகலாம்.

அதனால், அதை இங்குக் கொண்டுவந்தவுடன் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று பார்த்து நம்மால் எடை போட முடியாது. மேலும், புலிகள் பாதுகாப்பில் உலகளவில் நாம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால், சிவிங்கிப் புலிகள் பாதுகாப்பில் சரியாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றவரிடம் இதுபோல் ஓர் உயிரினம் அறிமுகப்படுத்தும்போது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை குறித்துக் கேட்டோம்.

அதற்கு அவர், "இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது முதல் கட்டமாகக் கொண்டுவரப்படும் சிவிங்கிப் புலிகள். அவற்றுடைய உடல் ஆரோக்கியம், மரபணுத் தன்மை, அவற்றுக்கு இதற்கு முன் ஏதேனும் நோய்த் தாக்குதல் நடந்துள்ளதா, அதற்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளதா போன்றவற்றோடு, இங்கு அவை வரும்போது இங்கிருக்கும் நோய்த் தாக்குதல்கள் அவற்றை எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதையும் மதிப்பாய்வு செய்யவேண்டும்.

இவை எல்லாவற்றிலும் அவற்றைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகள் வரும்வரை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதற்கு இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இதில் ஆபத்துகள் இருக்கின்றன. அந்த அபாயங்களை முறையாக மதிப்பாய்வு செய்துகொண்டு தயாராக இருக்கவேண்டும். அதோடு, தொடர் கண்காணிப்பும் இதற்கு அவசியம்," என்று கூறினார்.

புல்வெளிகளைக் காக்க சிவிங்கிப் புலிகள் மட்டுமே போதாது

காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம், "முதலில் கேட்கவேண்டிய கேள்வியே, ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் மீது நாம் ஏன் இவ்வளவு செலவு செய்யவேண்டும்?

அதற்கு, இந்தியாவின் புல்வெளிக் காடுகளைப் பாதுகாக்க அவற்றை அறிமுகப்படுத்துவதாகக் கூறினார்கள். புல்வெளிக் காடுகளில் வாழக்கூடிய கவர்ந்திழுக்கும் உயிரினமாக அவை இருக்கின்றன என்றார்கள்.

 

கான மயில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கான மயில் (Great Indian Bustard)

இந்தியாவில், காரகல் என்ற வகைக் காட்டுப்பூனை (Caracal)மோசமான நிலையில் இருக்கிறது. புல்வெளிக் காடுகளைக் காக்க அவற்றை ஏன் கவர்ந்திழுக்கும் உயிரினமாக முன்னிறுத்தக் கூடாது. அதுபோக, இந்திய ஓநாய், வெளிமான், சிங்காரா, கான மயில் என்று புல்வெளிகளைப் பாதுகாக்க, கவனிக்கப்பட வேண்டிய பல உயிரினங்கள் இந்தியாவிலேயே இருக்கின்றன.

இங்கு இருக்கும் உயிரினங்களை விட்டுவிட்டு, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படுகின்றன . புல்வெளிகள் என்று பார்த்தாலும், நாட்டின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் ஒவ்வொரு வகையான புல்வெளிக் காடுகள் இருக்கின்றன.

இமயமலை, மேற்குத்தொடர்ச்சி மலை, கடலோரம் என்று ஒவ்வொரு வகை நிலவியல் அமைப்பிலும் ஒவ்வொரு வகை புல்வெளிக் காடு இருக்கிறது. இதில் அனைத்து புல்வெளிக் காடுகளிலும் சிவிங்கிப் புலிகள் வாழப் போவதில்லை. இந்த ஒவ்வொரு வகை புல்வெளிக் காட்டிற்கும் அங்கேயே வாழக்கூடிய உயிரினங்கள் இருக்கின்றன.

இந்தியாவில், கவர்ந்திழுக்கும் உயிரினமாகப் பலவும் இருக்கும்போது, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்படும் ஒரேயோர் உயிரினம் மொத்த புல்வெளிகளுக்கும் பிரதிநிதியாகச் செயல்பட முடியாது," என்று கூறினார்.

குனோ-பால்பூர்: சிங்கங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதி

இப்போது சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவருவதற்காக உறுதி செய்யப்பட்டிருக்கும் குனோ-பால்பூர் காட்டுயிர் சரணாலயம், 1990-களின்போது குஜராத்தில் இருந்து சில சிங்கங்களை இடம் மாற்றுவதற்காக ஒதுக்கப்பட்டது.

உலக அளவில் ஆசிய சிங்கம் காட்டில் வாழ்வது, குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டும்தான். இந்நிலையில் அவை பெரிய அளவில் தொற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்து வருவதால், அவற்றில் சில சிங்கங்களை இடம் மாற்றி வைக்கவேண்டும் என்று காட்டுயிர் ஆய்வாளர்கள் பரிந்துரைத்தார்கள்.

அந்த வகையில், ஒருவேளை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அனைத்துமே அழிந்துபோகாமல் தடுக்கமுடியும் என்று சொல்லப்பட்டது. 1995-ம் ஆண்டு சிங்கங்களை இடம் மாற்றத் தகுந்த இடமாக குனோ-பால்பூர் சரணாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

ஆசிய சிங்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

குஜராத் கிர் காட்டில் வாழும் ஆசிய சிங்கம்

ஆனால், 26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதே பகுதி சிவிங்கிப் புலிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும்கூட, குஜராத் மாநிலம் சிங்கங்களைக் கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

2012-ம் ஆண்டு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசாங்கத்திடம் ஏன் சிங்கங்களை இன்னும் குனோவிற்கு இடம் மாற்றவில்லை என்று கேட்கப்பட்டபோது, "அங்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவரும் திட்டம் இருக்கிறது. சிவிங்கிப் புலிகள் சிங்கங்களை விட பலம் குறைந்த பாலூட்டி என்பதால், அவை அந்த இடத்தில் வாழப் பழகும் வரை, சிங்கங்களை இடம் மாற்றுவதைத் தள்ளிப்போடுகிறோம்," என்று பதில் அளிக்கப்பட்டது.

அதற்கு, "காட்டுயிர் பாதுகாப்பு செயல்திட்டத்தில் கூட அது இல்லை. இப்போது அது ஏன் முதன்மைத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. குனோவிற்கு சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை," என்று கூறியதோடு, 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கிர் காட்டிலிருந்து சில சிங்கங்களை குனோவிற்கு இடம் மாற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அதே இடம் இந்தத் திட்டத்தின் கீழ் சிவிங்கிப் புலிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய முனைவர்.ரவி செல்லம், "உச்சநீதிமன்ற உத்தரவே இருந்தும்கூட இதுவரைக்கும் சிங்கங்களை குனோவிற்கு குஜராத் அனுப்பவில்லை. சிவிங்கிப் புலி, சிங்கம் இவையிரண்டில் இப்போது எதன் மீது அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? எதன் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் தேவைப்படுகிறது?

கிர் காட்டில் வாழும் ஆசிய சிங்கங்களா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்படும் ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகளா?" என்று கேள்வியெழுப்புகிறார்.

https://www.bbc.com/tamil/global-59759910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.