Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

Srilankan Food shortage

மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 240 ரூபாய்க்கு கிடைத்த கேரட் தற்போது 560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பச்சை மிளகாயின் தப்போதைய விலை 1000 ரூபாய். இதற்கு முன்னர் 250 ரூபாய்க்கு ஒரு கிலோ பச்சை மிளகாய் விற்கப்பட்டதாகக் கூறுகிறார் - கிழக்கு மாகாணம் அட்டாளைச்சேனையில் காய்கறி கடையினை நடத்தி வருகின்ற ஜவ்பர்.

இந்த விலையேற்றத்தினால் தனது வியாபாரம் மிக மோசமாகப் பாதிப்படைந்து விட்டது என்றும் ஜவ்பர் கூறுகிறார். முன்னர் சாதாரணமாக நாளொன்றுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரையில் தனது கடையில் வியாபாரம் நடந்ததாகத் கூறும் அவர், தற்போது ஒரு லட்சம் ரூபாவுக்கு வியாபாரம் நடப்பதே பெரிய விடயமாக உள்ளது என்கிறார்.

அரிசிக்கான விலையும் இப்படித்தான் அதிகரித்து விட்டது. இலங்கையில் அரசிக்கு கட்டுப்பாட்டு விலைகள் இருந்தன. அரசு நிர்ணயிக்கும் விலைகளிலேயே அரிசியை விற்பனை செய்யவேண்டியிருந்தது. ஆனால், இப்போது அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசு நீக்கி விட்டது. இதனால் எவரும் எந்த விலைக்கும் அரிசியை விற்க முடியும் எனும் நிலை ஏற்பட்டு விட்டது.

இதன் காரணமாக, சிறிது காலத்துக்கு முன்னர் சந்தையில் ஒரு கிலோ 98 ரூபாய்க்கு கிடைத்த சாதாரண (நாட்டு வகை) அரிசியானது, தற்போது 115 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், ஒரு கிலோ 125 ரூபாய்க்கு விற்கப்பட்ட கீரிச்சம்பா அரிசி, தற்போது 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றின் உரிமையாளர் ஏ.எல். அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரிசிக்கான விலை இன்னும் அதிகரிக்கும் என்கிறார் அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நெற்காணி உரிமையாளரும் நெல் வியாபாரியுமான எஸ்.ஏ. றமீஸ்.

நெல் விளைச்சல் வீழ்ச்சி

இலங்கையில் அதிகளவு நெல் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களில் அம்பாறையும் ஒன்றாகும். நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதியளவான நெல் - இங்குதான் உற்பத்தியாகிறது. தற்போது பெரும்போகத்தில் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரம் ஹெக்டேர் காணிகளில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.

 

Srilankan Food shortage 1

இந்த நிலையில் அரசாங்கத்தின் அவசரத்தனமான இயற்கை விவசாயத் திட்டம், அதனால் உள்நாட்டு நெல் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளமை, டாலர் பற்றாக்குறை, அதன் காரணமாக - அரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளமை போன்ற காரணங்களால் அரிசிக்கான விலை அதிகரிப்பு - தவிர்க்க முடியாததாகி விடும் என்றும், மார்ச் மாதமளவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் எனவும் றமீஸ் கூறுகின்றார்.

இலங்கையில் இயற்கை வேளாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் கடந்த வருடம் திடீரென அறிவித்ததோடு, ரசாயனப் பசளை, ரசாயன பூச்சி நாசினிகள் மற்றும் ரசாயன களை கொல்லிகள் ஆகியவற்றின் இறக்குமதிகளைத் தடை செய்வதற்கும் 2021 ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

இதன் காரணமாக பெருமளவான விவசாயிகளுக்கு ரசாயனப் பசளைகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதேவேளை, உரிய வகையில் சேதனைப் பசளைகளும் கிடைக்கவில்லை. இதனால், நெல் உள்ளிட்ட அனைத்து விவசாய நடவடிக்கைகளிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன.

"பசளைகள் இன்மையால் நெற்பயிர்களின் வளர்ச்சி குன்றியது. இதனால், சில விவசாயிகள் - கடந்த காலத்தில் 1500 ரூபாய் மானிய விலையில் கிடைத்து வந்த யூரியா பசளையினை, கறுப்புச் சந்தையில் 33 ஆயிரம் ரூபாய்க்குப் பெற்று, தமது பயிர்களுக்கு இட்டனர்" என்கிறார் நெற்காணி உரிமையாளர் றமீஸ்.

இவ்வாறான பின்னணயில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், ஏக்கரொன்றுக்கு 15 முதல் 20 மூட்டைகள் வரை விளைச்சலாகக் கிடைத்து வருவதாகவும் றமீஸ் கூறுகின்றார். ஆனால் கடந்த காலத்தில் சாதாரணமாக ஏக்கரொன்றுக்கு 35 வரை 40 மூட்டைகள் வரை விளைச்சலாகக் கிடைத்ததாக, அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

விலையேற்றம்

கோவிட் பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள் ஒரு பக்கம் கடுமையாக உயர, இப்போது டாலர் பற்றாக்குறை, பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமை, பண வீக்கம் உள்ளிட்ட வேறுபல காரணங்களால் மீண்டும் பொருட்கள் சேவைகளுக்கான விலைகள் அதிகரித்துள்ளன.

 

Srilankan Food shortage 2

இலங்கையின் மத்திய மாகாணத்தில்தான் கேரட், பீன்ஸ், லீக்ஸ் போன்ற காய்கறிகள் அதிகமாக விளைகின்றன. அந்த காய்கறிகளை 250 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வந்து, விற்கும் போது, அவற்றின் விலை இன்னும் அதிகமாகிறது.

பசளை கிடைக்காமையினால் விளைச்சல் குறைந்தமை, எரிபொருளுக்கான விலை அதிகரிப்பு போன்றவை - காய்கறி விலையேற்றத்துக்கான முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி பெட்ரோலின் விலை 20 ரூபாவினாலும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான விலைகள் தலா 10 ரூபாவினாலும் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. ஜுன் மாதத்திலும் பெட்ரோலுக்கு 20 ரூபாவும், டீசலுக்கு 7 ரூபாவும் விலை ஏறியிருந்தது.

இதனால், மத்திய மாகாணத்தில் விளையும் காய்கறிகளை தமது பகுதிகளுக்குக் கொண்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவும் சடுதியாக அதிகரித்துள்ளதாக, கிழக்கு மாகாண காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதேபோன்று இறைச்சி வகைளுக்கான விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாட்டிறைச்சி, கொரோனா உச்சத்திலிருந்த காலத்தில் 1000 ரூபாயாக அதிகரித்தது. கடந்த ஒரு வாரத்தினுள் மாட்டிறைச்சி ஒரு கிலோவுக்கான விலை 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோன்று ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயாக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கோழித் தீவனங்களுக்கான விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே, கோழி இறைச்சி விலையேற்றத்துக்துகான முக்கிய காரணம் என, கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டிறைச்சியின் விலையும் 2000 ரூபாயாக உள்ளது.

கோதுமை மா, சமையல் எரிவாயு, சீனி, இனிப் பூட்டப்பட்ட பால் மற்றும் பால்மா ஆகியவற்றுக்கான தொடர் விலையேற்றம் காரணமாக, பேக்கரிப் பொருட்கள், ஹோட்டல்களில் கிடைக்கும் சிற்றுண்டிகள் மற்றும் பால்தேநீர் உள்ளிட்டவற்றுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன. பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்கள் முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அண்மையில் அவற்றினை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

ஹோட்டல்களில் சாதாரணமாக 50 ரூபாவுக்கு விற்கப்பட்ட பால்தேநீர், தற்போது 70 ரூபாவுக்கு வழங்கப்படுகிறது. இந்த விலை இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர். 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிளாஸ் பசுப்பாலின் விலை, தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

Srilankan Food shortage 3

பால்மா மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் அவற்றுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இன்னொருபுறம் சந்தையில் விநியோகிக்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டு அடுப்புகள் தீப்பற்றி வெடித்த பல்வேறு சம்பவங்களும் தொடர்ச்சியாகப் பதிவாகியிருந்தன.

இதேவேளை நாளாந்தம் பயன்படுத்தும் உப உணவுப் பொருட்களுக்கான விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன. ஜனாதிபதியின் மூத்த சகோதரரும் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, கடந்த நவம்பர் மாதம் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், மக்களை மரவள்ளிக்கிழங்கு மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை உண்ணுமாறு கூறியிருந்தார். ஆனால், தற்போது பாசிப்பயறின் விலையும் அதிகரித்துள்ளது. முன்னர் ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்கப்பட்ட பாசிப்பயறின் விலை, தற்போது 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பலசரக்கு கடையினை நடத்தி வரும் எம்.எஸ்.எஸ். ஹமீட் கூறுகின்றார்.

அதேபோன்று கிலோ 120 ரூபாய்க்கு கிடைத்த பருப்பு 260 ரூபாயாகவும், கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மாசி 1500 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளதாகவும் ஹமீட் தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் 50 ரூபாய்க்கு விற்பனையான தேங்காயொன்று தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காயெண்ணையின் விலை 650 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் ஹமீட் குறிப்பிட்டார்.

"எனது கடையில் சாதாரணமாக நாளொன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வரையில் வியாபாரமாகும். ஆனால் இப்போது ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில்தான் வியாபாரம் நடக்கின்றது. மக்கள் பொருட்களை வாங்கும் அளவு குறைந்து விட்டது. முன்னர் ஒரு பொருளை ஒரு கிலோ எனும் நிறையில் வாங்கியவர்கள் இப்போது அதேபொருளை அரைக்கிலோ, கால் கிலோ அளவில்தான் வாங்குகின்றனர்" என்றும் ஹமீட் தெரிவித்தார்.

இதேவேளை கடற்கரையை அண்டியுள்ள கிழக்கு மாகாண பகுதிகளில் மீன்களுக்கான விலைகளும் அதிகரித்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசத்தில் கணிசமானோர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்தப் பகுதிகளில் கூட - மீன்களுக்கான விலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாரை, அருக்குளா, சுறா போன்ற பெரிய மீன்கள் சில்லறையாக ஒரு கிலோ 1800 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சாதாரணமாக 1000 ரூபாய்க்கு மேல் இந்த வகை மீன்கள் கடந்த காலத்தில் விற்பனையானதில்லை.

இதேவேளை உணவுப் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து பஸ்களில் அறவிடப்படும் ஆரம்பக் கட்டணம் 14 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக ஜனவரி 05ஆம் தேதி தொடக்கம் அதிகரிக்கப்படும் என்று, போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது (01ஆம் தேதி) சீமெந்தின் விலையும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கிணங்க 50 கிலோவைக் கொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 1375 ரூபாவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 970 ரூபாவுக்கு சீமெந்து விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருந்தபோதிலும் சீமெந்துக்கு தொடர்ச்சியான தட்டுப்பாடு நிலவிவருகின்ற அதேவேளை, உரிய விலையிலும் பல நூறு ரூபாய் அதிகமாக, கறுப்புச் சந்தையில் சீமெந்று விற்பனை செய்யப்படுவதையும் காண முடிகின்றது.

"அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும்"

இவ்வாறான சூழ்நிலைகளில் நாட்டில் நிலவும் டாலர் தட்டுப்பாட்டுக்கு உடனடியாகத் தீர்வுகள் எட்டப்படாவிட்டால், எதிர்வரும் மாதங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைப் பேராசிரியர் ரி. பவன் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

"இலங்கை - இறக்குமதிப் பொருளாதாரத்தை நம்பியுள்ள நாடு. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டாலரில்தான் கொடுப்பனவு செய்யவேண்டும். ஆனால், தற்போது நாட்டில் டாலர் கையிருப்பில் பிரச்னை உள்ளது.

 

Srilankan Food shortage 4

இதேவேளை, இயற்கை விவசாய முறைமை நாட்டில் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் அது வெற்றியளிக்கவில்லை. இதன் காரணமாக உள்நாட்டு உணவு உற்பத்தி குறைவடைந்துள்ளது. அதேநேரம் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்வதிலும் பிரச்னை உள்ளது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

பொருட்கள், சேவைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கான நிரம்பல் குறைவாக இருக்குமாயின் பணவீக்கம் ஏற்படும். அந்த நிலைமை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் பணவீக்கத்தின் சதவீத அளவு - ஒற்றை எண்ணில்தான் காணப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதம் பணவீக்கம் 12.1 சதவீதமாகியுள்ளது.

எனவே, இதற்கான தீர்வுகள் எட்டப்படாது விட்டால், அடுத்தடுத்த மாதங்களில் அத்தியவசிய உணவுகளுக்கான பற்றாக்குறை ஏற்படும்.

இலங்கைக்கு ஏனைய நாடுகளிடமிருந்து கிடைக்கும் சிறியளவிலான நிதி உதவிகள் மூலமாக அரிசி, பருப்பு, சீனி மற்றும் பெற்றோலியம் போன்ற முக்கியமான பொருட்களை அரசு இறக்குமதி செய்யும். ஆனாலும், நீண்ட காலத்துக்கு இவ்வாறு சமாளித்துக் கொண்டிருக்க முடியாது.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுவதோடு, அதற்கான விலையும் அதிகரிக்கும். எனவே, ஒரிரு மாதங்களுக்குள் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முடிகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்" என்கிறார் பேராசிரியர் பவன்.

என்ன வகையான முடிவு?

"வெளிநாட்டு உதவிகளை வழங்குகின்றவர்களில் பாரம்பரிய உதவியாளர்கள் (traditional donors) பாரம்பரியமற்ற உதவியாளர்கள் (nontraditional donors) என உள்ளனர். இதில் பாரம்பரியமாக உதவி செய்கின்ற அமைப்புகளாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றைக் குறிப்பிடலாம். சீனா, இந்தியா உள்ளிட்ட தனியான நாடுகளை பாரம்பரியமற்ற உதவியாளர்களாக கூறலாம்.

 

Professor Pavan

 

படக்குறிப்பு,

பேராசிரியர் பவன்

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அரசாங்கம் சென்று தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், அந்த நிதியத்தினர் சில நிபந்தனைகளை விதிக்கும். உதாரணமாக நாணய மாற்று விகிதத்தை மிதக்க விடுமாடு கூறுவார்கள், சில துறைகளை தனியார் மயப்படுத்துமாறு சொல்வார்கள், அரசின் மேலதிக செலவுகளை நிறுத்துமாறு வேண்டுவார்கள், அரசியல் ரீதியான சில உதவிகளை அரசாங்கம் செய்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறான நிபந்தனைகளுக்கெல்லாம் இணங்கினால்தான் சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யும். அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் செய்வதற்கு அரசாங்கம் பின்னடித்து வருகின்றது" எனவும் பேராசிரியர் பவன் கூறினார்.

சீன சார்புப் போக்கும் பொருளாதார நெருக்கடியும்

இலங்கையின் வெளிநாட்டு ராஜியக் கொள்கையும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பேராசிரியர் பவன் குறிப்பிட்டார்.

"தற்போதைய அரசாங்கத்தின் சீன சார்புப் போக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். சீனாவுடனான நெருங்கிய உறவு காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகள் இலங்கைக்கு இல்லாமல் போயுள்ளன.

இலங்கையின் பிரதானமான ஏற்றுமதிச் சந்தை - ஐரோப்பிய நாடுகளாக உள்ளன. ஆனால், சீனாவிடமிருந்துதான் நாம் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். ஐரோப்பாவுடன் பகைத்துக் கொண்டால், இலங்கையின் ஏற்றுமதிச் சந்தை இல்லாமல் போய்விடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது".

"சீனாவுக்கு நாம் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது. எமது உற்பத்திச் செலவை விடவும் சீனாவின் உற்பத்திச் செலவு குறைவானது. எனவே சீனாவில் எமது சந்தையைப் பிடிக்க முடியாது. ஆசிய நாடுகளுக்குள் இலங்கையின் சந்தை இல்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகள்தான் ஆசிய சந்தையைப் பிடித்து வைத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளிடம்தான் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தை தங்கியுள்ளது. எனவே, ராஜிய ரீதியாக ஐரோப்பிய நாடுகளுடன் உறவை நாம் வைத்துக் கொள்ளாது விட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற சலுகைகளும் இலங்கைக்கு இல்லாமல் போய்விடலாம்.

இன்னொரு புறமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையிலிருந்து ஆடைகளையே அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றோம். ஆனால் ஆடைகளுக்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இலங்கை இறக்குமதி செய்கின்றது. இந்த நிலையில் டொலருக்கான தட்டுப்பாடு நீடிக்குமானால், ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாது போகும். அதன்போது இலங்கையின் ஆடை ஏற்றுமதியும் அதனால் கிடைக்கும் வருமானமும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகும்" எனவும் பேராசிரியர் பவன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59850289

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.