Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய அன்றாட பிரச்சினைகளும் எதிர்கொள்ளலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அன்றாட பிரச்சினைகளும் எதிர்கொள்ளலும்

 

எந்த அரசியல் கட்சியாலும்  இன்னும் 10 வருடங்களுக்கு  நாட்டின் ஆட்சியை அசைக்கமுடியாது. இந்த நாட்டை கொண்டு நடத்தக்கூடிய சக்தி, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்திற்கே உள்ளது என்றுதான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு  அடுத்த தேர்தலின் போதுதான் மக்கள் பதிலை கொடுப்பார்கள்.

இது நாடு சார்ந்த பொதுப்பிரச்சினைதான் என்றாலும், இலங்கையின் பொதுவான பிரச்சினைகள் பற்றி நாம் கலந்துரையாடவேண்டிய தருணங்கள் பல இலங்கையின் வரலாற்றில் உருவாகியிருந்தாலும், இந்தத் தருணமும் அதற்காகத்தான் உருவாகியிருக்கிறது என்பதனை எல்லோரும் சிந்திக்கவேண்டும்.

அன்றாடம் வாழ்வாதாரம் முதல் கல்வி என நாட்டின் அனைத்துத் துறைகளிலும் மக்களுக்குப் பிரச்சினைகள் உருவாகிவிட்டன. உருவாகிய பிரச்சினைகளைச் சமாளிப்பதா நாட்டின் சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்ற பொதுப்பிரச்சினைகளுக்குள் மூக்கை நுழைப்பதா என்பது மக்களுக்கே தெரியாத நிலை தோன்றிவிட்டது. 

நீண்டகாலமாக, நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமான துறையான அரசியல், மிகவும் மோசமானதாக இருக்கிறது. ஒரு நிரந்தரமான அரசியலமைப்பு இல்லாத நாடாக இலங்கை இருக்கிறதே என்று கவலை கொள்ளவே முடிகிறது. சிறந்த பொருளாதாரக் கொள்கை, சிறப்பான வெளியுறவுக் கொள்கை, கல்விக் கொள்கை என எதையும் வைத்திருக்காத நாடாகத்தான் இலங்கை இருக்கிறது. இதற்கு முதலில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கியாக வேண்டும்.

ஆனால், இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர், சிங்கள அதிகார வர்க்க ஆட்சியாளர்கள், 1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரஜா உரிமைச் சட்டத்தின் மூலமாக 10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தார்கள். 1949 இல் வாக்குரிமைச் சட்டம் மூலமாக மலையகத் தமிழர்களின் அரசியல் அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1964 சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலமாக மலையகத் தமிழர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நிலை உருவாக்கப்பட்டது. 1956 தனிச்சிங்கள அரச கரும மொழிச்சட்டம், 1957 இனப்பிரச்சினைக்குத் தீர்வாக பாண்டா- செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது.

1958 இல் தமிழ் மக்களுக்கு எதிராக  இனவழிப்புகள், சொத்தழிப்புகள், கொள்ளையடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லோயா, அல்லை- கந்தளாய், சேருவில, மணலாறு போன்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்பட்டன.  1972 இல் சிங்களத்தினை மாத்திரம் அரச கரும மொழியாகவும், பௌத்தத்தை அரச மதமாகவும் கொண்ட முதலாம் குடியரசு யாப்பு கொண்டு வரப்படுகிறது.

எத்தனையோ வரைபுகள் முயற்சிக்கப்பட்டன. ஆரம்பத்தில், தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட தமிழ் தேசிய மொழி, வடக்கு கிழக்கில் நிர்வாக மொழி தமிழ், நீதி பரிபாலன மொழி தமிழ், பல்கலைக்கழக அனுமதியில் தரப்புபடுத்தலை நிறுத்தல், வடக்கு -கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினைத் தவிர்த்தல், இனவிகிதாசார அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் நிராகரிக்கப்பட்டன.  இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1948 இல் இருந்து 30 ஆண்டுகளின் பின்னரும் நிராகரித்தது தான் வரலாறு. 

அதன் பின்னரும்,  வட்ட மேசை மாநாடு, சர்வ கட்சி மாநாடு, மாவட்ட சபை முறை, திம்புப் பேச்சுவார்த்தை, மங்கள முனசிங்க ஆணைக்குழு, தீர்வுப்பொதி என எல்லாமே வெறும் முயற்சிகளாகவே இருக்கின்றன. நல்லாட்சி காலத்தில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடரமுடியாததாக ஆகிப்போனது.  1979 இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்கக் கோரி இப்போதும் கையெழுத்துப் போராட்டத்தினை நடத்தவேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். அதனை நீக்குவதற்கு இன்னமும்தான் அரசாங்கங்களுக்கு மனமில்லை.

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தின் மூலமாகத் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை இன அழிப்பாக மாறியது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்; சொத்துகள் கொள்ளையிடப்பட்டன; அழிக்கப்பட்டன. தமிழர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டனர்.  வெலிக்கடை சிறைச்சாலையில் 52 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பு விலக்கப்பட்ட நிலையில் சிங்களக் கைகதிகளால் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர்.

இதுவரையில் 20 திருத்தங்களைக் கண்டது நமது நாட்டின் அரசியலமைப்பு. இப்போதும் அரசியலமைப்பு மாற்றத்தினை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிலும் கூட பூரணம் எனும் முழுமை கிடைக்குமோ என்பது சந்தேகம்தான்.

இவ்வாறான நிலையிலும், இந்த நாட்டில் எந்தவிதமான இனப்பிரச்சினையும் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கின்ற ஜனாதிபதியைக் கொண்டவர்கள் தான் நாம். இப்படியிருக்கையில், நாம் நமது நாடு குறித்து எவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. அதற்கு மக்கள் எழுச்சி ஒன்றே தீர்வாக இருக்கும்.

ஒரு பிரச்சினையை மறைப்பதற்கு இன்னுமொரு பிரச்சினை, அதையும் மறைப்பதற்குப் பல பிரச்சினைகள் என்பது போன்று, நமது நாட்டு மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு ‘அல்லோலகல்லோலம்’ படும் நிலை உருவாகிவிட்டது.

அப்பாவித் தமிழர்களை  சித்திரவதை செய்து துன்புறுத்தி அல்லல்படுத்திய காலம் போய், இப்போது யுத்தம் நிறைவு பெற்றிருந்தாலும் நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழல் இல்லாமல் செய்யப்பட்டு இருக்கிறது.
நாட்டில் இதுவரை உருவான அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிடவேண்டும் என்ற இதய சுத்தியான மனதுடன் முயற்சித்திருந்தால், அவர்களுடைய பிரச்சினை தீர்ந்து, நாடு எப்போதோ மலர்ச்சி பெற்றதாக இருந்திருக்கும். பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து அதில் குளிர்காய்கின்றவர்களின் கைகளுக்குள் நாடு சிக்கித் தவிக்கின்ற நிலையே இப்போது ஏற்பட்டிருக்கிறது.
தமிழரின் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தது யார் என்பது, இதுவரையில் தெரியாதவர்களாக நாட்டு மக்களை வைத்துக் கொண்டிருக்கின்ற அரசுக்கு கடிவாளம் கட்டுவது யார் என்பதுதான் தெரியவில்லை. 

ஈழத்தமிழர் தரப்பினர் இடையிலான திம்புப் பேச்சுவார்த்தை, அரசின் விட்டுக் கொடுப்பு இல்லாததால் தோல்வியடைந்தது.  பின்னர் பல பேச்சுகள் நடைபெற்று தீர்வு எட்டாத நிலையில், தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் நடைபெற்றன. இப்போதும் தீர்வை வழங்காது, எத்தனையோ தலைமுறைகளை அழித்துவிட்ட இலங்கை நாட்டின் அரசு இன்னும் வருங்காலத்திலும் பல தலைமுறைகளின் எதிர்காலத்தினையும் சூனியமாக்குவதற்கு முயல்வதுதான் கவலையானது.

சிக்கல்களும் பிரச்சினைகளும் குழப்பங்களும் வாழ்க்கையில் சாதாரணமானவைகள்தான். என்றாலும், நிரந்தரமாகத் தொடரும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயலாத, அதனை மூடி மறைப்பதற்கு முயல்வதுதான் மோசமானதோர் ஒடுக்குமுறையும் அழிப்புமாகும் என்ற உண்மை எல்லோருக்கும் விளங்கியாக வேண்டும்.

இவற்றையெல்லாம் விடுத்து, தேர்தல் வாக்கெடுப்பு நேரங்களில் கொக்கரிப்பதும் மக்களைச் சூடேற்றி, அவர்களின் வாக்குகளை ஏமாற்றிப் பெற்றுக் கொள்வதும் நடைபெறுகின்றமையானது வெறும் அபத்தமானதாகும்.

கொடுமைகளையும் படுகொலைகளையும் துன்புறுத்தல்ளையும் சிறைவாசங்களையும் உறவுகளின் அழிவுகளையும் சொத்தழிப்புகளையும் கண்டு அனுபவித்த தமிழ்ச் சமூகத்தின் நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதற்கு விருப்பங்கொள்ளும் போதே, நமது நாட்டின் அமைதிக்கு ஆராதனை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

வரி அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு என நாட்டு மக்களைச் சுமையுடன் வைத்துக் கொண்டு, வீதிகளை நிர்மாணிப்பதும் எதிர்கால நோக்கென்ற பெயரில் திட்டங்களை வெளியிடுவதிலும் நாட்டில் சுபீட்சத்துக்கு வழி பிறக்குமா என்பதே மக்களின் இப்போதைய கேள்வியாக இருக்கிறது. நாட்டின் நலன் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மக்களதும் நலனாகும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது.

தேர்தல்களில் வெற்றி பெற்றதும் நாட்டு மக்களிடமிருந்து முழுவதையும் சுரண்டும் வகையில் விதிக்கப்படுகின்ற விலை அதிகரிப்பென்ற கொள்ளை, மற்றைய தேர்தல் வருகின்ற வேளைகளில் நிவாரணங்களாக அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற விலைக்குறைப்பானது, மக்களை ஏமாற்றும் ஒரு வித்தைதான். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களும், ஜனாதிபதியும் முன்னையவர்கள் மீது குற்றம் சுமத்துவதும் பழிகளை அவர்கள் மீது போடுவதும் ஒரு சிறப்பான நாட்டுக்கான குணாதிசயமாக இருக்க முடியாது.

அந்த வகையில்தான் நாட்டிலிருக்கின்ற மக்களின்  நலன்கள் சார்ந்து, அரசாங்கம் சிந்திக்காத நிலையில் அவை பற்றிச் சிச்திப்பதையே ஒரு கலந்துரையாடலாக ஆரம்பித்து, ஒருமிக்கின்ற பெரும் எடுப்பான எழுச்சிகள் தேவைப்படுகின்றன.

அந்தவகையில்தான் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பதற்கான ஒருமிப்பினை   நேர்மையுடனும், ஒற்றுமையுடனும் அனைத்து அரசியல் தரப்புகளும் மேற்கொள்ளவேண்டும் என்று கோசம் எழத் தொடங்கியிருக்கிறது. இது தேசியவாதம் என்பதும், இனவாதம் என்பதும் ஒருமிக்கின்ற நிலையை அல்லது, புள்ளியை நோக்கிய பயணத்தின் மூலமாக நாட்டினை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற நிலைக்கு அப்பால் சென்று, ஒரு சிறப்பான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இன்றைய-அன்றாட-பிரச்சினைகளும்-எதிர்கொள்ளலும்/91-291528

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.