Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேன் போரின் பாதிப்புக்கள் – பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

on March 18, 2022

Russia_Ukraine_War_Children_Photo_Galler

Photo: wtopnews

இன்றைய கால கட்டத்தில் உலக அரசியலில் எழுச்சி கண்டு வரும் ஒரு போக்கு ரஷ்யா ஒரு பக்கத்திலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன மற்றொரு பக்கத்திலும் நின்றும் உலகை இராணுவ அடிப்படையிலும், அரசியல் அடிப்படையிலும் மீண்டும் ஒரு முறை பிரித்து வைத்திருப்பதாகும். இது இரண்டாவது உலகப் போரின் பின்னர் தொடர்ச்சியாக நிலவி வந்த ஒரு பிளவாக இருப்பதுடன் காலத்திற்கு காலம் உச்ச நிலையை எட்டியுள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்தியதன் விளைவாக இந்தப் பிளவு மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இந்த விடயத்தில் சீனா ஒரு பக்கத்தை எடுக்கவேண்டி நேரிட்டால், பெருமளவுக்கு அது ரஷ்யாவின் பக்கத்தையே எடுக்க முடியும். இந்தப் பின்னணியில், உலகு மேற்கு – கிழக்கு என்ற அடிப்படையில் இராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் கடுமையான இரு முகாம்களாக மீண்டும்  பிளவடைவது, அந்த இரு முகாம்களுக்கிடையிலும் இதுவரை காலம் உருவாகி வந்த யுத்தம் மீண்டும் தீவிரமடையவும் முடியும்.

அவ்விதம் நடக்கும் பொழுது அதன் ஓரு துணை விளைவாக உலக நாடுகளின் தற்போதைய அரசியல் முறைமைகளின் எதிர்காலம் தொடர்பாகவும் அதன் மூலம் நிர்ணயகரமான புதிய நிலைமைகள் உருவாக்கப்பட முடியும். 1945 தொடக்கம் 1970 களின் இறுதிப்பாகம் வரையில் நிலவிய அமெரிக்க – ரஷ்ய முதலாவது கெடுபிடி யுத்த காலப்பிரிவின் போது நிலவிய ஒரு அரசியல் பண்பு, அது முதலாளித்துவம் மற்றும் சோசலிசம் என்பவற்றுக்கிடையிலான போராட்டமாக இருந்து வந்ததாகும். அத்தகைய ஒரு போராட்டமாக கருத்தியல் ரீதியாகவும் அது முன்வைக்கப்பட்டு வந்தது. 1980 இல் சோசலிச முறை வீழ்ச்சியடைந்ததன் பின்னரும், சீனா சோசலிச பொருளாதார முறையை கைவிட்டதன் பின்னரும் மேற்குக்கும், கிழக்குக்கும் இடையிலிருந்த பிளவை இனிமேலும் முதலாளித்துவத்திற்கும், சோசலித்துவத்திற்குமிடையிலான ஒரு பிளவாக இருக்கின்றது என விளக்கப்பட வில்லை. இந்தப் பின்னணியிலேயே ‘மேலைத்தேய மற்றும் மேலைத்தேயம் அல்லாத’ என்ற எண்ணக்கரு சார்ந்த நெகிழ்ச்சியான பதம் ஒரு சில புத்திஜீவிகள், அரசியல் கண்ணோட்டங்களை உள்வாங்குபவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு மத்தியில் பிரபல்யமடைந்தது. இலங்கையின் தேசிய சிந்தனை சித்தாந்தப் பள்ளியினரும் இந்தக் கண்ணோட்டத்தின் சிங்கள – பௌத்த பிரதியையே வளர்த்தெடுத்தார்கள். ‘மேற்குக்கு எதிராக மேற்கு அல்லாத’  என்ற இந்தப் பிளவு தொடர்பான கண்ணோட்டம் ஒரு புதிய வீச்சை பெற்றுக்கொள்வதற்கான ஒரு புதிய வெளி அநேகமாக திறந்துவிடப்பட முடியும்.

அதிகார சமநிலையை மாற்றியமைத்தல்

உக்ரேனை தனது அரசியல் பிடிக்குள் கொண்டு வருவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புட்டின் முன்னெடுத்திருக்கும் போரிலிருந்து தெரிய வரும் விடயம், ஐரோப்பாவின் அதிகாரச் சமநிலையை மாற்றியமைப்பது அவருடைய உடனடி நோக்கமாக இருக்கின்றது என்பதாகும். நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்வதற்கு உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி அரசாங்கம் எடுத்த முடிவு காரணமாக ஜனாதிபதி புட்டின் கடும் சினமடைந்துள்ளார். சோவியத் யூனியனுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் சொந்தமாக இருந்த ரஷ்யாவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் அமைந்திருந்த பல அரசுகள் அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மேற்கு ஐரோப்பாவுடன் கூட்டணிகளை அமைத்துக் கொண்டமை, ரஷ்யாவை பூகோள அரசியல் ரீதியில் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்துவதற்கு அமெரிக்காவும், ஐரோப்பாவும் முன்னெடுத்து வரும் ஒரு திட்டத்தின் ஒரு பாகமாக இருந்து வருகின்றது என்பதே புட்டினின் புரிதலாகும். அது ஒரு தவறான புரிதல் என்றும் கூற முடியாது. நேட்டோ இராணுவ முகாமை பலப்படுத்தி, விரிவாக்குவதனை தடுத்து நிறுத்தும் புட்டினின் நோக்கத்தின் முதலாவது பணி உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு தொடுப்பது என்பது தெரிகிறது. உக்ரேனை நேரடியாக ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதா அல்லது அங்கு ரஷ்ய சார்பு அரசாங்கம் ஒன்றை அமைத்து ரஷ்யாவின் ஆதிக்கத்தை ஸ்தாபித்துக் கொள்வதா என்ற இரு தெரிவுகளில் எது முன்னெடுக்கப்படும் என்ற விடயம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இதற்கிடையில் ரஷ்ய அதிகாரத்தை ஐரோப்பா பக்கம் விரிவுபடுத்தி ரஷ்யாவை ஐரோப்பாவின் முதன்மையான இராணுவ சக்தியாகவும், அரசியல் சக்தியாகவும் மாற்றியமைக்கும் குறிக்கோளை நோக்கி ஜனாதிபதி காலடி எடுத்து வைக்க முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பாவின் எதிர்வினை 

ஜனாதிபதி புட்டின் அத்தகைய ஒரு நோக்கத்துடன் தனது திட்டத்தை அமுல் செய்வதற்கு ஆரம்பித்திருந்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பன அதற்கு எத்தகைய எதிர்வினையை ஆற்ற முடியும்? தற்பொழுது தென்படும் விதத்தில் அது ஒரு இராணுவ ரீதியான எதிர்வினையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. அதற்கான காரணம் அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும் ரஷ்யாவுடன் ஒரு யுத்தத்தில் இறங்கினால் அது ஐரோப்பாவில் ஓர் அணு ஆயுதப் போர் தோன்றுவதற்கு வழிகோலக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது என்தனை எல்லாத் தரப்புக்களும் அறிந்திருக்கின்றன. அது வெற்றியாளர் எவரும் இல்லாத பரஸ்பரம், அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு பேராகவும், அதேபோல ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்தையும் இருளில் தள்ளிவிடும் ஒரு போராகவும் இருக்கும் என்பதனை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார மற்றும் ராஜதந்திர தடைகளை விதிப்பது என்ற தெரிவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன.

பொருளாதார மற்றும் ராஜதந்திர தடைகளின் மூலம் ஜனாதிபதி புட்டினையும், ரஷ்யாவையும் அடக்கி ஒடுக்கக்கூடிய ஆற்றல் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் கிடைக்குமா? அந்தத் தடைகள் மூலம் ரஷ்ய பொருளாதாரத்திற்கும், ரஷ்யாவின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்பட்டாலும், ரஷ்யாவின் இராணுவ ரீதியான உத்திகளின் கணிப்பில் அதன் மூலம் ஒரு பாரிய தாக்கம் ஏற்படும் என்று கருத முடியாது. எனவே, உக்ரேன் மீது ஆக்கிரமிப்புத் தொடுக்க வேண்டுமென்ற தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் விடயத்தில் ரஷ்யா கொண்டிருக்கும் திடசங்கற்பத்திற்கு அது ஒரு தடையாக  இருக்கட்டாது. பொருளாதாரத் தடைகள் காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் வர்த்தக இழப்புக்கள் ஏற்படும் பொழுது, அந்தத் தடைகள் குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்படும். எனவே, உக்ரேனை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வரும் ரஷ்யாவின் அபிலாசை குறுங்காலத்தில் பெருமளவுக்கு பூர்த்தியடைவதற்கான வாய்ப்புக்களே இருக்கின்றன. அதனுடன் இணைந்த விதத்தில் கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ரஷ்யாவின் அபிலாசையை ஒத்திவைக்க வேண்டிய நிலையும் அநேகமாக ஏற்பட முடியும். நேட்டோ அமைப்புடன் ஒரு இராணுவ மோதலுக்கு வழிகோலக்கூடிய அளவுக்கு தற்போதைய மோதலை தீவிரமடைவதற்கு இடமளிக்காமல் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு தொடக்கத்திலிருந்தே புட்டின் திட்டங்களை தீட்டியிருக்க முடியுமென எம்மால் அனுமானிக்க முடியும்.

அரசியல் நிலைப்பாடு

ஐரோப்பாவில் இப்பொழுது எரிந்து கொண்டிருக்கும் போர் நெருப்பு உக்ரேனுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக இருக்கின்றது. ஆனால், அதன் மூலம் உருவாக்கப்படும் அரசியல் சிக்கல், உலக அரசியலை நிர்ணயகரமான ஒரு கட்டத்திற்கு இட்டுச் செல்வதனை தவிர்க்க முடியாதிருக்கும். உலகின் பல நாடுகள் கொவிட் பெருந்தொற்றின் மூலம் உருவாகியிருக்கும் பெரும் பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு வருவதற்கு 2022ஆம் ஆண்டிலாவது வாய்ப்புக் கிடைக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டின் அடுத்த ஒரு சில மாதங்களில் அந்த எதிர்பார்ப்பு சீர்குலைந்துவிடும் ஒரு நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவின் மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையை தளர்த்துவதற்கு இந்நிலைமை மறைமுகமாக செல்வாக்குச் செலுத்தும் என அனுமானிக்க முடியும். எனினும், ரஷ்யா மற்றும் மேலைய நாடுகள் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகள் தற்பொழுது பெருமளவுக்கு நிச்சயமற்ற, பதற்றமான ஒரு நிலைமையில் இருக்கின்றது. இந்த நிலையில் இரண்டு முகாம்களுக்கிடையில் நிலவும் பொருளாதார தொடர்புகளுக்கு என்ன நிலைமை ஏற்பட முடியும் என்பது நிச்சயமற்றதாகவே இருக்கின்றது.

சீனாவின் நிலைப்பாடு

இதற்கிடையில், ஒரு புறத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பனவும், மறுபுறத்தில் ரஷ்யாவும் சிக்குண்டிருக்கும் மோதல் கட்டுப்படுத்த முடியாத விதத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டால், மூன்றாவது உலக வல்லரசான சீனா அதற்கு எத்தகைய விதத்தில் எதிர்வினையாற்ற முடியும்? தற்போது சீனா, உக்ரேன் போரை உன்னிப்பாக அவதானித்து வரும் காரியத்தையே வழமை போல செய்து வருகின்றது. உலகப் பிரச்சினைகளின் போது சீனா பொதுவாகச் செய்யும் காரியம் அதிகார முகாம்களுடன் தன்னை அடையாளப்படுத்தாதிருப்பதும், உடனடியாக எதிர்வினை தெரிவிக்காதிருப்பதுமாகும். ரஷ்யாவுடன் சீன அரசாங்கம் நட்புறவை பராமரித்து வருகின்றது. ஆனால், மாவோ சேத்துங் யுகத்தில் நிலவி வந்த நெருக்கமான நட்பு இப்பொழுது இல்லை. ரஷ்யா ஒரு சோசலிச நாடாக இருந்து வரவில்லை. அதேவேளையில், சீனா அரச முதலாளித்துவ பொருளாதார முறை ஒன்றையும், ஸ்டாலின்வாத அரசியல் முறை ஒன்றையும் கொண்டிருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அரசாகும். அது பொருளாதார ரீதியில் ரஷ்யாவை விடவும் பெருமளவுக்கு பலம் வாய்ந்ததாக இருக்கின்றது. ஆனால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா என்பவற்றுடனேயே சீனாவின் பொருளாதார, நிதி மற்றும் வர்த்தகத் தொடர்புகள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, அந்நாடுகளுடன் சீனா பராமரித்து வரும் தொடர்பும், ரஷ்யாவுடன் பராமரித்து வரும் தொடர்பும் வித்தியாசமானவையாகும். ஒப்பீட்டு  ரீதியில் ரஷ்யா ஒரு சுயாதீன அரசாக இருக்கின்றது.

இதே வேளையில், புட்டின் ஆரம்பித்து வைத்திருக்கும் உக்ரேனியப் போர் ரஷ்யாவுக்கு அனுகூலமான விதத்தில் முடிவுக்கு வருவதாக இருந்தால், அதன் எதிர்பாராத விளைவுகளில் ஒன்று, உலக வல்லரசுகளுக்கு இடையிலான தொடர்பை தனக்கு அனுகூலமான விதத்தில் மீண்டும் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு சீனா மெதுமெதுவாக செயற்படுத்திய வேலைத்திட்டம் ஒரு பின்னடைவை எதிர்கொள்வதாகும். ஏனென்றால், மீண்டும் ஒரு முறை அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உலக இணையான இரு வல்லரசுகளாக எழுச்சியடைய முடியும். உண்மையில் உலக வல்லரசுகள் எவை என்ற விடயம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா என்பன ஐரோப்பாவின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும். சீனாவுக்கு அந்தச் சிறப்புரிமை இருந்து வரவில்லை. கிழக்காசியாவின் ஒரு பாகத்தில் மட்டுமே சீனா அதன் இராணுவ மற்றும் உபாய ரீதியான ஆதிக்கத்தை மேற்கொள்ள முடியும். உக்ரேனை தனது ஆதிக்க வளையத்திற்குள் கொண்டுவருவதன் மூலம் புட்டினுக்கு கிடைக்கும் மறைமுகமான பெறுபேறுகளில் ஒன்று, உலக வல்லரசாக வரும் விடயத்தில் சீனா கொண்டிருக்கும் அபிலாசையை கட்டுப்படுத்துவதற்கான ஓர் வாய்ப்புக் கிடைப்பதாகும்.

இலங்கை எதிர்கொள்ளும் பாதிப்பு

உக்ரேன் நெருக்கடி காரணமாக இலங்கையில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்பட முடியும்? கடந்த இரண்டு வருடங்களின் போது உலக பொருளாதாரம் எதிர்கொண்ட சரிவிலிருந்து சகஜ நிலைமையை நோக்கிய பயணத்தின் மீது அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விடயத்திலேயே இது தங்கியுள்ளது. ஐரோப்பா மற்றும் ரஷ்யா என்பவற்றுக்கிடையில் புதிதாகத் தோன்றும் பொருளாதார மோதலின் உடனடி விளைவு எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாகும். இலங்கையின் தேயிலை ஏற்றுமதிச் சந்தையிலும் அது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். ரஷ்யா மீது விதித்திருக்கும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பன மேலும் இறுக்கமாக்கினால், ரஷ்யாவுடனும், உக்ரேனுடனும் நெருக்கமான வர்த்தகத் தொடர்புகளை மேற்கொண்டு வரும் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டிருக்கும் வர்த்தக வர்க்கத்தினர் மீது அது ஒரு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனினும், அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கண்டறிந்து கொள்வது அவர்களைப் பொறுத்தவரையில் கடினமான ஒரு காரியமாக இருக்க மாட்டாது.

இந்தப் போர் தொடர்பாக உலகின் இடதுசாரி மற்றும் முற்போக்கு மக்கள் பிரிவினரின் எதிர்வினை எவ்வாறு அமைய வேண்டும்? மற்றும் அவர்கள் இது தொடர்பாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன? நான் நினைக்கும் விதத்தில் எந்தவொரு வல்லரசு முகாமுக்கும் பக்கச்சார்பாக இருக்காமல் அவர்கள் செய்ய வேண்டிய காரியம், உக்ரேன் நாட்டினதும், அதன் மக்களினதும், போரினால் துன்பப்பட்டு, பாதிப்படைந்திருக்கும் சிவில் பிரஜைகளினதும் தரப்பில் நின்று கொள்வதாகும். அதே போல போரினால் மரணமடையும், காயமடையும் ரஷ்யப் போர் வீரர்களைப் போலவே, உக்ரேன் போர் வீரர்களுக்கும் நேரும் நிலைமை குறித்து பரிவுணர்ச்சியுடன் பார்ப்பதாகும். வல்லரசு முகாம்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், எந்தக் காரணத்தின் அடிப்படையில் அவை நியாயப்படுத்தினாலும் அது முற்றிலும் கண்டனம்  செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதேபோல, போரின் விளைவாக தமது வீடுவாசல்களையும், உயிரையும், குடும்பங்களையும் இழந்திருக்கும் மற்றும் அகதிகளாகியிருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்கள் சார்பில் முற்போக்கு சக்திகள் குரல் எழுப்ப வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு என்பவற்றை வழங்க வேண்டுமென ரஷ்யா மற்றும் ஐரோப்பிய, அமெரிக்கா அரசாங்கங்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிடமும், இந்தப் போரை மேலும் தீவிரப்படுத்தி, அது பரவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டாமென அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அராங்கங்களிடமும் வலியுறுத்த வேண்டுமென அந்த நாடுகளின் மக்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Uyangoda.jpg?resize=110%2C137&ssl=1ஜயதேவ உயன்கொட

යුක්රේන යුද්ධයේ පලවිපාක என்ற தலைப்பில் ‘அனித்தா’ பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.
 

 

https://maatram.org/?p=9960

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.