Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் — ஜஸ்ரின் —

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் 

 

பேராசிரியர் ஜரட் டையமண்ட் (Jared Diamond) உயிரியலாளராகப் பயிற்சிபெற்றுப் பின்னர் தனது உயிரியல் விஞ்ஞான ஆய்வுமுறைகளையும் சிந்தனை முறைகளையும் சமூகவியலில் பிரயோகித்து அதன் பலனாகப் பல நூல்களை எழுதிய ஒரு அமெரிக்கப் பேராசிரியர். ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும் உலகநாடுகள், சமூகக் குழுக்களின் மாற்றங்களை, உன்னிப்பாகக் கவனித்து, வாசகர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் தரவுகளாக வடித்து இவர் எழுதிய நூல் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் வரை ஓடும் -ஆனால், வாசகரைத் தூக்கத்திலாழ்த்தாத சுவாரசியத் தகவல்களோடிருக்கும்.  

 இறுதியாக இவர் எழுதிய நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்ளும் போது அவை காட்டும் துலங்கல்கள் பற்றிய நூலில் (Upheaval: Turning Points for Nations in Crisis), 7 உலகநாடுகள் பேரிடர்களை எதிர்கொண்ட வேளையில் எப்படி நடந்து கொண்டன என ஆராய்ந்திருக்கிறார். அந்த நூலின் முடிவுரையில், பேரிடரில் இருந்து நாடுகள் வெற்றிகரமாக மீள அல்லது சிக்கி அமிழ்ந்து போகக் காரணமாக இருக்கக் கூடிய 12 காரணிகளைப் பட்டியலிட்டிருக்கிறார். இந்த 12 காரணிகளுள் குறைந்தது 5 காரணிகள் இலங்கையின் தற்போதைய நிலையோடு பொருந்தி வருவதால் இங்கே இதனை ஒரு தழுவல் கட்டுரையாகத் தருகிறேன்.  

 இதை தமிழில் தருவதன் நோக்கம்: இக்காரணிகள் எங்கள் தமிழ்ச் சமூகத்தினருக்கும், அவர்களது அரசியல் தீர்வு, எதிர்கால நகர்வுகள் நோக்கிய பார்வைக்கும் கூடப் பொருந்தி வருகின்றன. வாசகர் தெளிவாகப் பிரித்தறிவதற்காக, நூலாசிரியர் டயமண்டின் கருத்தை சரிவெழுத்துகளிலும், என்னுடைய அபிப்பிராயங்களை சாதாரண எழுத்துகளிலும் தந்திருக்கிறேன்.   

1இடர் நிலையை ஏற்றுக்கொள்ளுதல், பொறுப்பேற்றல், நேர்மையோடு சீர் தூக்கிப்பார்த்தல்:  

தனிமனித இடர்களில் நிகழ்வது போலவே, நாடுகள் இடர் நிலையை எதிர்கொள்ளும் போதும் அதை யதார்த்தமாக ஏற்றுக் கொள்ளமறுக்கும் நிலை ஏற்படுகிறது. தனி மனிதனில் இந்த யதார்த்த மறுப்பு மன ஆரோக்கியத்தைக் குறுகிய நோக்கில் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு உத்தி – ஆனால் யதார்த்த மறுப்பு நீடிக்கும் போது இடரில் இருந்து மீள முடியாத நீண்ட துன்பத்திற்கும் மனநோய்க்கும் காரணமாகிறது. நாடுகளுள், இத்தகைய நீடித்த யதார்த்த மறுப்பை உடனடி உத்தியாகக் கையாண்ட நாடுகளில், ஒரு வெளிக்காரணியின் தாக்கத்தினால் இடர், பேரிடராகமாற்றம் பெறுகிறது. இந்த வெளிக்காரணி ஒரு வெளிநாட்டுடனான போராகவோ, இயற்கை அனர்த்தமாகவோ அல்லது உள்ளகப் பிரச்சினையாகவோ இருக்கலாம். ஆனால், இத்தகைய பேரிடர் நிலை, நாடுகளை, அவற்றின் யதார்த்த மறுப்புக் கனவில் இருந்து தட்டியெழுப்பும் காரணிகளாக இருக்கும்.    

இலங்கையின் இடர்: பல தசாப்தங்களாக சாதாரண மயப்படுத்தப் பட்ட அல்லது நிறுவனமயப் படுத்தப்பட்ட ஊழல், பொருளாதார துஷ்பிரயோகம், சமூக நீதியை சிறுபான்மையினருக்கு வழங்காத நிலையினால் வன்முறை கலந்த பேரினவாதம்- இவையெல்லாம் இலங்கையின் ஆட்சியாளர்களாலும் மக்களில் பெரும்பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளப்படாத யதார்த்தம். வெளிக்காரணியாக வந்தவை கொரனா பெருந்தொற்றின் வழி வந்த பொருளாதாரச் சரிவும் சமூகக் கொந்தளிப்பும். இதனால் இப்போது இலங்கை அடைந்திருப்பது ஒரு பேரிடர்நிலை. இந்தப் பல தசாப்தகாலக் காரணிகளை இப்போதாவது ஏற்றுக்கொள்ளும் நிலை இலங்கையின் தலைமையைத் தீர்மானிக்கும் சிங்கள மக்களிடம் ஏற்படுமா என்பது சந்தேகம். தாம் பேரிடரில் இருக்கிறோம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டாலும், அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்வதிலும் இதயசுத்தியோடு நிலையை ஆராய்ந்து பார்ப்பதிலும் இலங்கையின் தலைவர்கள் இன்னும் முன்னேறவில்லை. 

தமிழர்களின் இடர்: இந்தப் பொருளாதாரச் சரிவின்பின் விளைவுகளோடு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கம் பிரத்தியேகமான ஒரு துன்பநிலை இருக்கிறது: அதுஅவர்களுக்கான இனம்/மதம்சார்ந்த உரிமைகளை பெறவேண்டிய நிலை. இதற்கான செயல்பாடுகளில் இரு சமூகங்களும் பல தவறுகளை விட்டிருக்கின்றன. இந்தக் கடந்த காலத் தவறுகளை குறிப்பிட்ட குழுக்கள்/கட்சிகள் விட்ட தவறுகள் என்று தேர்வுசெய்து விமர்சிப்பது வழமையாகக் காணப்படுகிறது. இந்த விமர்சனங்களை தமிழ் முஸ்லிம் தரப்புகளில் செயல்பட்ட சகல தரப்புகள் மீதும் முன்வைக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு எங்கள் சமூகத்தில் இல்லை. போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ் முஸ்லிம் மக்களிடையே சிறுபான்மைக் குழுக்களிடையே இருக்கவேண்டிய ஒற்றுமையோ, ஒருங்கிணைப்போ இல்லாமைக்கு இந்த யதார்த்த மறுப்பு ஒரு முக்கிய காரணி. 

 2. தேசிய அடையாளம், தேசியப் பெறுமானங்கள், நாட்டின் வரலாற்றுத் திருப்புமுனைகள்:  

ஒவ்வொரு நாடும் தனக்கான தேசிய அடையாளத்தை மொழி, மதம் அல்லது இவையல்லாத ஒரு பொதுக் காரணியைச் சுற்றிக் கட்டியெழுப்புகின்றன. உதாரணமாக, இஸ்ரேல் யூத மதத்தினால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தை பயன்பாட்டு மொழியாகக்கொண்ட அமெரிக்காவில்,மொழியோ, மதமோ அல்லாத காரணிகளான பொருளாதார மேலாண்மை, இராணுவ வல்லரசுத் தன்மை, தனிமனித உரிமைகள் என்பன அமெரிக்கர்களை இணைக்கும் தேசிய அடையாளமாக இருக்கின்றன. இந்தத் தேசிய அடையாளம், சில தேசியப் பெறுமானங்களை அந்த நாட்டு மக்களிடையே உருவாக்குகிறது. தேசிய அடையாளங்களை வலுப்படுத்த , நாடுகள் வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகளை குடிமக்களிடையே மீள மீள நினைவூட்டி வைத்திருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அடிமை நீக்கம் கோரிய உள்நாட்டு யுத்தம் அமெரிக்காவின் தாராளவாத அடையாளத்தைச் சுட்டிக் காட்ட நினைவூட்டப்படும். ஆனால், அமெரிக்காவின் நல்ல பக்கத்தைச் சுட்டிக் காட்டாத வியட்நாம், ஈராக் யுத்தங்கள் முதன்மையாகப் பேசப்படாது.      

 பேரிடரில் இருந்து மீண்ட அனேக நாடுகள், ஒரு உறுதியான தேசிய அடையாளத்தையும், அது சார்ந்த தேசியப் பெறுமானங்களையும் கொண்டிருந்திருக்கின்றன. அவ்வாறு பொது அடையாளமொன்று இல்லாத நாடுகளின் நிலை, நீண்ட காலப் பேரிடராகத் தொடரும் வாய்ப்புகள் அதிகம்.    

இலங்கையின் தேசிய அடையாளம்: இலங்கையின் இருபது மில்லியனுக்கு மேற்பட்ட மக்களை ஒரு திரட்சியாக மாற்றும் தேசிய அடையாளம் எதுவும் இல்லை. சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆரம்பித்து, இன்று வரை தொடரும் பெரும்பான்மை அரசியல் தலைமைகளின் செயல்பாடுகளால், இலங்கையர் என்ற தேசிய அடையாளம் வலுவிழந்து, தற்போது “இலங்கையர்” என்ற பதம் ஒரு தீண்டத்தகாத அடையாளமாக சிறுபான்மைச் சமூகங்களிடையே திகழ்கிறது. தற்போதைய பேரிடர் நிலை, ஓரிரவில் இந்த அடையாளத்தை உருவாக்கப்போவதில்லை. தேசிய அடையாளத்தை வலுப்படுத்தும் வரலாற்றுத் திருப்புமுனைகளாக இலங்கையில் முன்னிலைப்படுத்தப்படும் நிகழ்வுகள் கூட (உதாரணம்: மே மாதப் போர் வெற்றி விழா) சிறுபான்மையினரினை மேலும் இலங்கையர் என்ற தேசிய அடையாளத்திலிருந்து விலகிப்போகத் தூண்டும் கைங்கரியத்தையே செய்கின்றன.           

தமிழர்களதும், முஸ்லிம்களதும் அடையாளம்: இது ஒரு பத்தியில் விபரிக்கக் கூடிய எளிமையான விடயமல்ல. ஆனால் சுருக்கமாக, இலங்கை போன்ற ஒரு நாட்டில், சிறுபான்மையினராக இருக்கும் இவ்விரு சமூகங்களும், தங்கள் மொழி, மத அடையாளங்களைத் தாண்டி, தமக்கிடையேயான ஒரு பொது அடையாளத்தின் அடிப்படையில் ஒருங்கிணைவதன் மூலம் சில நன்மைகள் நிகழலாம். இந்தப் பொது அடையாளமாக ஏற்கனவே மொழி இருக்கிறது. இரு சமூகங்களுமே பேரினவாத வன்முறையின் இலக்காக இருந்து பெற்றவடுக்களும் இந்தப் பொதுஅடையாளத்தின் ஒரு கூறாகப்பார்க்கப்படலாம்.   

3. பிற நாடுகளிடமிருந்து உதவி கோரல், பிற நாடுகளின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளல்:  

தனி மனிதர்கள் போல, தேசங்களும் பேரிடர் காலத்தில் பிற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மீட்சிக்கு அவசியமான ஒரு காரணி. இந்த உதவி உள்கட்டுமானத்திற்கு உதவும் வள உதவியாகவோ அல்லது பிற நாடுகளின் இடர் கால அனுபவங்களை ஆலோசனை ரீதியில் பெற்றுக்கொள்வதாகவோ இருக்கலாம். உதாரணமாக, ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவினால் பேரழிவினை எதிர்கொண்ட பின்னர், தனது சகல கட்டமைப்புகளையும் மீளமைக்கும் முயற்சிக்கு அமெரிக்கா உட்பட்ட சில மேற்கு நாடுகளின் உதவியை வேண்டிப்பெற்றுக் கொண்டதைக்குறிப்பிடலாம். 

இலங்கை பெறும் உதவிகள்: துரதிர்ஷ்ட வசமாக இலங்கையின் ஆட்சியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் உதவிகள் குறுகிய நோக்கம் கொண்ட, மூழ்கும் கப்பலின் துவாரத்திற்கு சுவிங்கத்தினால் ஒட்டுப் போடும் உதவிகளாகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் உதவ முன்வந்தால், இந்த நிலை மாறி நீண்ட கால ஸ்திரத் தன்மை சார்ந்த உதவிகளை அரசு பெற ஆரம்பிக்கலாம். இவ்வாறு நீண்டகால விளைவுகளைத் தரும் உதவிகளைப் பெற்றுக் கொள்ள இந்தப் பேரிடர் காலம் அரிய வாய்ப்பாக அமைய முடியும். ஏனெனில், இலங்கையினதும், இலங்கை மக்களினதும் சாதகமான பண்புகளை அறிந்த உலக நாடுகள் இந்தப் பேரிடர் காலத்தில் உதவ முன்வரும் வாய்ப்புகள் அதிகம். 

சிறுபான்மைத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு யார் உதவுவர்?சம உரிமையை இலங்கையில் உறுதி செய்து கொள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் கூட வெளிநாடுகளின் உதவிகளைப் பெறுவது அவசியமானதும், சாத்தியமானதுமாகும். சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் உதவித் திட்டங்களோடு சிறுபான்மையினருக்கான சமூக நீதியை சாதுரியமாக இணைத்துவிட வேண்டியது சகல சிறுபான்மை அரசியல் செயல்பாட்டாளர்களினதும் இலக்காக இருக்கவேண்டும். ஆனால், மேலே குறிப்பிட்டதுபோல, ஒரு பொதுவான சிறுபான்மை அடையாளத்துடன் இதைச் செயல்படுத்தாவிட்டால், எந்த வெளிநாடும் இருதரப்பினரையும் கண்டுகொள்ளாமல் கடந்து போகும் வாய்ப்பே இருக்கிறது.   

  4. தேர்வு செய்தமாற்றங்களும்நெகிழ்வுத்தன்மையும்:   

பேரிடர்களை எதிர்கொண்ட நாடுகளின் மீட்சிக்குப் பங்களிப்புச் செய்த பிரதான உள்ளகக் காரணியாக இந்த தேர்வு செய்த மாற்றங்கள் இருக்கின்றன. அது என்ன தேர்வு செய்த மாற்றங்கள்?பேரிடருக்குத் துலங்கலாக ஒரு நாடு ஒட்டு மொத்தமாகத் தன்னை மாற்றிக் கொள்வது சாத்தியமில்லை, எனவே தேர்வுசெய்த சில மாற்றங்களை மட்டும் செய்து கொள்ள முடியும். உதாரணமாக, யுத்தப் பேரழிவின் பின்னர் ஜப்பான் மேற்கு நாட்டு ஜனநாயகப் போக்கினைப் பல மட்டங்களில் உள்வாங்கினாலும், ஜப்பானிய சக்கரவர்த்தியின் ஆளுகையை நீக்கவில்லை. இது ஜப்பானின் வரலாற்றுப் பாரம்பரியம் பேணலைக் கருத்தில் கொண்ட ஒரு தேர்வுசெய்த மாற்றம். இந்த தேர்வுசெய்த மாற்றங்கள் நிகழ அவசியமான நெகிழ்வுத் தன்மை குடிமக்களிடமும், தலைவர்களிடமும் இருக்கவேண்டும். அனேகமான சந்தர்ப்பங்களில், தலைவர்களிடமிருந்து குடிமக்களுக்கு இந்த நெகிழ்வுத்தன்மை கடத்தப்படுவதைக் காணலாம்.   

இலங்கை மாறுவதற்கான சாத்தியங்கள்: இலங்கையின் பெரும்பான்மை சமூகமும், அவர்களால் தேர்தல் மூலம் தெரிவாகும் அரச தலைவர்களும் நெகிழ்வுப் போக்கில் மிகவும் பற்றாக்குறையான நிலையில் இருக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளில், இலங்கையின் முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினயைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பிரதான தடையாக இருந்தது இலங்கையின் “கல்லில் எழுதப்பட்ட” பாணியிலான அரசியலமைப்பு. இந்த அவதானிப்பு, தற்போதைய பேரிடர் காலத்திலாவது இலங்கையின் சக்தி வாய்ந்த தரப்புகள் சிறு மாற்றங்களுக்குள்ளாகுமா என்ற கேள்விக்கு ஓரளவு பதில் தருகிறது. 

தமிழர்களும் , முஸ்லிம்களும் தேர்வு செய்த மாற்றங்களும்: இந்த இரு சிறுபான்மைச் சமூகங்களிடமும் சில தேர்வுசெய்த மாற்றங்கள் நிகழவேண்டிய தேவை இருக்கிறது, ஆனால் அதற்கு அவசியமான நெகிழ்வுத் தன்மை இங்கேயும் பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இருதரப்பிலும் ஆயுத வன்முறைகள் நிலவிய காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்வதிலும், வியாக்கியானம் செய்வதிலும் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. வரலாறு என்பது நடந்து விட்ட சம்பவங்களால் ஆனது – அதை திருத்தமாகப் பதிவுசெய்து பாடம் கற்றுக்கொண்டு முன்னே நகராமல், அதன் வியாக்கியானங்களையும், நியாயப்படுத்தல்களையும் மட்டுமே பேசு பொருளாக நாம் வரித்துக் கொண்டிருப்பதால் இந்த தேர்வு செய்த மாற்றங்கள் சாத்தியமில்லாமல் போகின்றன.        

5. பூகோள- அரசியல் சக்திகளின் செல்வாக்கு:  

நெகிழ்வுத் தன்மையும், தேர்வு செய்த மாற்றங்களும் ஒரு பேரிடர் கால நாட்டின் விதியைத் தீர்மானிக்கும் பிரதான உள்ளகக் காரணிகள். அதே போல, இன்று அனேகமான நாடுகளைப் பொறுத்த வரை பூகோள அரசியல் சக்திகளின் செல்வாக்கு பிரதான புறக்காரணியாக இருக்கிறது. வல்லரசுகளாக இருக்கும் மிகச் சில நாடுகள் தவிர, ஏனைய சிறிய நாடுகள் மீது பூகோள அரசியல் செல்வாக்கு பேரிடர்கால மீட்சியிலும், வீழ்ச்சியிலும் பங்களிப்புச் செலுத்துகிறது. அதுவும், இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான  உலகில், அயலில் இருக்கும் வல்லரசின் செல்வாக்கு மட்டுமன்றி, புவியியல் ரீதியாக தொலைவில் இருக்கும் வல்லரசுகளின் பாதிப்பும் சிறிய நாடுகளால் உணரப்படுவது சாதாரண நிலையாகிவிட்டது. 

இலங்கை மீதான பூகோள- அரசியல் சக்திகளின் செல்வாக்கு: இதைப் பற்றி நீண்ட ஆய்வுகள் பல எழுதப்பட்டுவிட்டன. ஆனால், தற்போதைய பேரிடர் தொடர்பில், இலங்கை இன்னும் பூகோள அரசியல் சக்திகளின் பங்கையோ அல்லது எந்தப் பக்கம் சாய்வது சேதம் குறைந்த முடிவு என்பதையோ புரிந்துகொள்ளவில்லையென்றே தெரிகிறது. கட்டுரையில் மேலே குறிப்பிடப் பட்ட முதல் காரணியோடு தொடர்பான -யதார்த்த மறுப்பு, பொறுப்பெடுக்க, சீர்தூக்கிப்பார்க்க மறுத்தல் என்பன- பூகோள அரசியலின் எந்த அணியின் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு இத்தகைய முடிவுகளை எடுக்காமல் நீண்ட காலம் ஒரு பேரிடரைச் சமாளிக்க முடியாது. 

சிறுபான்மையினரும் பூகோள-அரசியல் செல்வாக்கும்: இதுவும் தமிழ் அரசியல் ஆய்வாளர்களால் அதிகம் அலசப்பட்ட ஒரு விடயம். தற்போதைய இலங்கையின் பேரிடர் சார்ந்து, சிறுபான்மையினரின் பிரச்சினைகளை இலங்கைக்குக கிடைக்கும் நிவாரண நடவடிக்கைகளோடு இணைக்க, பூகோள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை பகுதியளவிலாவது புரிந்துகொள்ளும் பூகோள அரசியல் அணிகள் எவை என்பதில் பெரும்பாலான சிறுபான்மை அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில இலங்கை அரசைவிட அதிக தெளிவு இருக்கின்றது.   

  1. Upheaval: Turning points for Nations in Crisis (2019). Jared Diamond (Black Bay Book, NY).    

 

https://arangamnews.com/?p=7487

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.